எப்போதுமே எனக்கு கவிஞர் குறிஞ்சி தென்னவன் மீது தீராத அன்பும் மரியாதையும் இருக்கிறது. அதற்கான காரணங்களில் முதன்மையானது மலைநாட்டில் இருக்கும் பெரும்பாலான எழுத்தாளுமையை போலல்ல அவர். திரு தென்னவன் தனது பதினோரு வயதில் இருந்து ஐம்பது  வயதுவரை சராசரியான தோட்ட தொழிலாளராய் வாழ்ந்து அதன் ஊடே அவர் கண்ட, கேட்ட உணர்ந்த அனுபவங்களை மொழிக்குள் கவிதைக்குள் கொண்டுவந்த பெருமைக்கும் மதிப்புக்குமுரியவர். ஒரு இனத்தின் அல்லது ஒரு மக்கள் பிரிவினரை பற்றிய இலக்கியங்களில் அந்த மக்களில் மக்களாக வாழ்ந்து அவர்களின் வலி, வேதனைகளையும் அவர்களின் இன்ப துன்பங்களை  பகிர்ந்து கொள்வது மட்டும் அல்லாது அவை அனைத்தையும் தானும் அனுபவித்து உணர்ந்து அது சார்ந்து எழுதும் எழுத்துக்கு இலக்கிய உலகின் தனித்துவ மதிப்புண்டு அதுவே மக்கள் இலக்கியத்தின் மூலம். அப்படி மலையக இலக்கிய கலாசாரத்திற்கு உயிர்ப்பு மிக்க கவிதைகளால் மலையக கவிதை உலகிற்கு குருதி பாய்ச்சியவர்களில் முதன்மையானவர்களில் கவிஞர் குறிஞ்சி தென்னவனும் ஒருவர்.

பேராசிரியர் அருணாசலம் “மலையகக் கவிதை உலகிற் சி.வி. வேலுப்பிள்ளைக்கு அடுத்த நிலையில் விளங்குபவர்” கவிஞர் குறிஞ்சி தென்னவன் என்கிறார். அவருடைய கருத்து நிலையில் மாற்றுக் கருத்து கொண்டவனல்ல. இவரின் இலக்கிய முயற்சியின் சாதனையானது சாதாரண தொழிலாளராய் கவிதை எழுத ஆரம்பித்தவர் முதிர்ச்சி கட்டத்தில் இவர் கண்ட வெற்றி அந்த காலத்திலேயே அவுஸ்திரேலியா, நியுசிலாந்து, சிங்கப்பூர் ஜப்பான் வரைக்கும்  இலக்கிய பயணங்கள் மேற்கொண்டமையாகும். இப்படியான பயணங்கள் ஒட்டுமொத்த மலையகத்திற்கும் தனித்துவமானதாக கொள்ளலாம். எவ்வளவு பெருமை நிறைந்த சம்பவத் திரட்டு, ஒரு தோட்ட தொழிலாளி உலக அரங்கில் தங்களை நிலைநிறுத்தல் என்பது. அப்படி திறமை மிக்க ஒருவரை பற்றி இன்றைய காலசூழலிலும் வனம் போன்ற இதழ்களில் அறிமுகப்படுத்த கிடைத்தமை மிக கௌரவமான பாக்கியமாக கருதுகிறேன்.

பொதுவாகவே இப்போதும் முகப்புத்தகத்தில் எழுதி கொண்டிருக்கும் நிறைய நண்பர்களின், கவிஞர்களின் கவிதைகளை வாசிக்கும் போது பெரும்பாலும் நம்மவர்களின் எல்லோருமே 1960 களில் எழுதப்பட்ட முறைகளிலே அல்லது அதே அச்சில் விழுந்த ஒரே மாதிரியான கவிதைகளை ஒத்த பாணியில் எழுதுகிறார்கள் என்று அங்கலாய்த்திருக்கிறேன். விமர்சனங்களும் செய்திருக்கிறேன். அதிலும் குறிப்பாக அவர்களுக்கு குறிஞ்சி தென்னவனின் கவிதைகளை உதாரணம் காட்டிருந்ததுண்டு. உண்மையிலேயே அது எவ்வளவு பெரிய தவறென்று இந்த கட்டுரைக்காக சேர்க்கப்பட்ட தகவலின் வாசிப்புக்கு பின் புரிந்துக் கொண்டேன். குறிஞ்சி தென்னவன் தொடர்பான வாசிப்பு தேடலுக்கு பின் மேற்சொன்ன என் மனநிலையை இப்படி மாற்றிக்கொள்கிறேன் அதாவது ‘குறிஞ்சி தென்னவன் இன்று உலகளாவிய ரீதியில் தமிழ் கவிதைகள் எடுக்கும் முயற்சிகளை அப்போதே செய்திருக்கிறார். மேலும் அவர் இ்ப்போதுள்ள அதாவது 2022 ஆண்டு கால ஓட்டத்திற்கான கவிதைகளை எழுதியிருக்கிறார் ஆனால் இப்போது உள்ள கவிஞர்கள் குறிப்பாக முகப்புத்தகத்தில் முன்னணியில் இருக்கும் சில கவிஞர்களின் கவிதைகளை வாசிக்கும் போது (இந்த சில என்ற சொல் எதற்கு பயன்படுத்துகிறேன் என்றால் ஒட்டு மொத்தமும் என்றால் புரட்சியாளர்கள் கோபப்பட கூடும் மேலும் அவர்களின் கோபம் சாபமாக மாறிவிடக்கூடும் மலையக கவிதை உலகிற்கு) அவர்கள் தான் 1960 பிற்பட்ட கால கவிதைகளை எழுதி கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணத்தோன்றுகிறது.

மலையகத்தின் மிக முக்கியமான முதல் தர கவிஞர்களென்று என்னுள் வரிசைப்படுத்தினால் என்றும் என் நினைவுக்கு வருபவர்கள் இரண்டு கவிஞர்கள் ஒருவர் மலைத்தம்பி மற்றையவர் குறிஞ்சி தென்னவன். மலைத்தம்பி தொடர்பாக நிறைய தேடிவிட்டாயிற்று. வனம் இதழின் மலைநாட்டு எழுத்தாளுமைகள் தொடருக்கு அவரை அறிமுகப்படுத்த, ஆனால் அவர் சார்ந்த கருத்துக்கள் வாயளவில் உலாவி திரிகிறதே தவிர தகவலாக, ஆவணங்களாக எங்கும் கிடைப்பதரிதாகவே உள்ளது. அந்த எண்ணத்தின் தொடர்ச்சியாகத்தான் குறிஞ்சி தென்னவனை அறிமுகப்படுத்துகிறேன். குறிஞ்சி தென்னவன் தொடர்பாக அறிந்திருந்தாலும் அவர் சார்ந்த தேடல்களில் ஈடுபட்டதில்லை. இந்த கட்டுரைக்காக அவர் வாழ்ந்த நுவரெலிய, லபுக்கல தோட்டத்திற்கு செல்லவேண்டி இருந்தது அதன் போது கவிஞர் தொடர்பாக நிறைய தகவல்கள் அவர் வாழ்ந்த வாழ்க்கை முறைகள் என்பவை உயிரோட்டமாக பேசவும் தகவலாக திரட்டவும் வாய்ப்பு ஏற்பட்டது.

தென்னிந்தியாவை பிறப்பிடமாக கொண்ட சுப்பையா முருகம்மாளின் நான்கு பிள்ளைகளின் ஒருவராக 1934 மார்ச் 12ஆம் திகதி பிறந்தவர்தான்  வீ.எஸ்.வேலு என்கிற தென்னவன். ஹட்டன் நோரூட் தென்மதுரையில் பிறந்து, இரண்டு வயதுவரை அங்கிருந்து பின் கொட்டகலை ஸ்டோனிகல் என்று சொல்லப்படுகிற கல்மதுரைக்கு இடம்பெயர்ந்தார். பின் அங்கிருந்து தென்னவனுக்கு ஐந்து வயதிருக்கும் போது நுவரெலியா லபுக்கல தோட்டத்திற்கு இடம்பெயர்ந்து நிரந்தரமாகி விட்டார்கள். தனது ஆரம்பக்கல்வியை தரம் ஐந்து வரை லபுக்கலை தோட்டப்பாடசாலை ஒன்றிலே கற்றவர்  பதினோராம் வயதில் தோட்ட தொழிலாளியாக கால்பதிக்கிறார்.

பதினோரு வயதில் என்பது இப்போது ஆச்சரியமாக இருக்கலாம் , ஆனால் அன்று தோட்டப்புற வாழ்வியலில் அது மிகவும் சாதாரணமான நிகழ்வு. தென்னவன் ஒரு நேர்காணலில் “உழுதுண்டு வாழ வழியில்லை தொழுதுண்டு பின் செல்லவும் மனமில்லை தோட்டத் தொழிலாளியானேன்” என்கிறார் அவரின் பசியும் சூழ்நிலைமையுமே தொடர்ந்து கற்கவிடாமல் வேலைக்கு செல்ல வேண்டிய காரணங்களில் முதன்மையானது. அதையும் அவர்

“பாலும் பழமுமா உண்டு வளர்ந்தேன்?

பஞ்ச ணையிலா உறங்கி எழுந்தேன்?

கூழும் இன்றி பசியில் துடித்தேன்!

கிழிந்த படங்கில் உறங்கி வளர்ந்தேன்” என்று பதிவு பண்ணுகிறார்.

குறிஞ்சி தென்னவனின் கவிதை எழுதும் ஆற்றலுக்கு அவர் மட்டுமே ஆசானும் ஆதரவாளனும் ஆவர். ஆரம்ப காலங்களில் அவரே அவரை வளர்ந்துக்கொண்டார். அப்போதைய தோட்ட லயக்காம்பராக்களில் எந்த வித வாசிப்பு பின்புலமும் இல்லாத பெற்றோரும் அவர் சார்ந்த சுற்றமும் அவர் நண்பர்களும் பின்புலத்தில் ஆசிரியர்களும் இல்லாமல் தன்னை தானே வாசிப்பு பழக்கத்திற்கு அடிமையாக்கி கொண்டதன் ஊடாக இன்று மலையகம் மதிக்கும் தேசிய கவிஞராக போற்றப்படுகிறார். அவர் எப்படி வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார் என்பதற்கு சுவாரஸ்யமான ஒரு கதை இருக்கிறது. அதாவது இவர் கவிதைகளையும் வரலாற்று கதைகளையும் ஒரு வகை ராகமாக வாசித்து காட்டுவாராம். இந்த வாசிப்பை கேட்க ஆர்வம் கொண்ட தோட்டமக்களுக்கு இவரே பொழுதுபோக்கு சாதனமானார். தொலைத்தொடர்பு சாதனங்கள் வசதியற்ற அக்காலத்தில் இவர் பாடும் கவிதைக்கும்  கதைக்கும் பலர் அடிமை. அதற்காகவே தாமறிந்த கதை புத்தகங்களை இவருக்கு வாங்கி கொடுத்து வாசிக்கச் செய்து பொழுதை போக்கி கொள்வார்களாம். இதுவே இவர் புத்தக வாசிப்பு தீவிரமடைய முதல் காரணம்.

தோட்டப்புறங்களில் கவிதை தன்மையுடன் புத்தகங்கள் குறிப்பாக மகாபாரதம், இராமாயணம் போன்ற இலக்கியங்களை வாசித்துக் காட்டும் தென்னவன், லபுக்கலை தோட்டத்தின் ஒரு தொலைக்காட்சி நேரலை இன்றும் சொல்வதை கேட்கலாம். தோட்ட தொழிலாளியான இவருக்கு இதனூடே புத்தகம் எடுத்து வாசித்து கொள்வதற்கு சிரமம் ஏற்படவில்லை. மேலும் மொழி வளமும் தேடி வாசிக்க வேண்டும் என்ற ஆர்வமும் அதிகரித்தது. இந்த அதிகரிப்பே இன்று நாம் பேசும் கவிஞராக இருக்கக் காண்கிறோம்.

இப்படியாக வாசிப்பு பழக்கத்திற்கு அடிமையானவர் மெல்ல மெல்ல எழுத ஆரம்பித்திருக்கிறார். தனது பதினெட்டாம் வயதில் ‘காசுக்கு கவிதை சொன்னேன் ‘ என்ன தனது முதல் கவிதையின் ஊடாக இலக்கிய உலகிற்கு பிரவேசிக்கிறார். அன்று தொட்ட அவர் பேனையை அறுபதில் அவரின் மரணமே முட்டிட்டது. குறிஞ்சித்தென்னவன். வி.சி.வேலு என்ற தன் சொந்தப் பெயரிலும், தென்னவன் என்ற புனைப்பெயரிலும் எழுத ஆரம்பித்த இவர், தமிழகத்திலிருந்து கவிதை எழுதுகிற தென்னவன் என்பவரிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டுவதற்காக குறிஞ்சித்தென்னவன் என்ற பெயரிலும் 1967லிருந்து எழுதத்தொடங்கினார். குறிஞ்சி தென்னவனுக்கு பத்திரிகைகளே தனித்துவக் களம் அமைத்துக் கொடுத்தது. மாணவர் முரசு, காங்கிரஸ், நம் நாடு, தேயிலை, மாவலி, செய்தி, கொந்தளிப்பு, தடாகம், பெண்ணின் குரல், விழிப்பு, குன்றின் குரல், கொழுந்து, கலையமுதம், இந்து கலாசாரம், அகிலம், இந்துமதி, கண்டி இலக்கியச் செய்திமடல், தினகரன், வீரகேசரி, சிந்தாமணி, அஞ்சலி, மக்கள் மறுவாழ்வு, தேசிய முரசொலி குறிஞ்சிப்பூ செய்தி சிந்தாமணி, வீரகேசரி, தினகரன், தினபதி, ஆத்மஜோதி , கலைமலர், மாணவர் மலர், தமிழன், சுதந்திரன், கதம்பம் என பல இதழ்களிலும் பத்திரிகைகளிலும் எண்ணிலடங்காத கவிதைகளை எழுதியுள்ளார். இவரின் கவிதைகள் தொகுப்பாக வெளிவந்ததை காட்டிலும் இதழ்களில் வெளிவந்தவைகளே அதிகம். இவரின் படைப்புக்கள் குறித்து தேடுவதற்கு சஞ்சிகைகளே மிக முக்கிய உசாத்துணை.

குறிஞ்சி தென்னவனின் கவிதைகள் அனைத்துமே அவ்வப்போது அவர் பார்த்த காட்சிகளில் பிறப்பது. தொழிலாளர் படும் அன்றாட துயரங்கள், அடக்கு முறைகள், விழாக்கள் கொண்டாட்டங்கள், சடங்கு சம்பிரதாயங்கள், இயற்கை, தொழிற்சங்க சுரண்டல்கள் என அவரின் கவிதைகளின் தலைப்பு விஸ்திரமானவை. மேலும் அவை கம்பீரமும் நக்கலும் நையாண்டித்தனமும் அங்கதச் சுவைமிக்கன. இவர்கள் கொட்டிய கண்ணீரும் செந்நீரும் வேதனைக் குமுறல்களும் விட்டிடும் ஏக்கப் பெருமூச்சுகளும் எதிர்காலக் கனவுத் தரிசனங்களுக்காக நிகழ்கால வாழ்வின் சுகங்களை எவரெவருக்கோ அர்ப்பணித்து விட்டு, வெறுமையை அரவணைத்து ஏங்கும் நெஞ்சங்களும் எனது கவிதையின் ஜீவத்துடிப்புக்கள்.” என்கிறார். இந்த ஜீவ துடிப்பு அவருடைய எல்லா கவிதைகளிலும் காணக்கிடைப்பதே ஆச்சரியம் எந்த கவிதைகளையுமே மேலோட்டமாக எழுத முயற்சிக்கவில்லை. ஒவ்வொன்றும் தனித்துவமானவை.

 

இதற்கு முன் நான் வனத்தில் மலையக எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் போது அவர்களின் படைப்புக்கள் ஊடே ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்ய முயற்சி செய்திருக்கிறேன் குறிஞ்சி தென்னவனை பொறுத்தமட்டில் அனைத்து இலக்கிய வடிவங்களும் கவிதைகளாகவே இருப்பதால் பொத்தம் பொதுவாக அவரின் கவிதைகளின் உள்ளடக்கம் குறித்து உரையாடலாம் என்றிருக்கிறேன். மேலும் குறிஞ்சி தென்னவனின் கவிதைகளை கிறிஸ்தவ தொழிலாளர் ஒத்துழைப்பு ஒன்றியம் என்ற பேரில் அட்டன் நகரில் இயங்கிய ஜெவ்ரி அபயசேகர அவர்கள் இவரின் கவிதைகள் சிலவற்றை உள்ளடக்கிய நூலொன்றை வெளியிட்டிருந்தார். இதுவே அவர் கவிதைகள் உள்ளவாங்கப்பட்ட முதல் நூல் என்று சொல்லப்படுகிறது. அதனை தொடர்ந்து அவரின் நண்பர்களில் ஒத்துழைப்பில் இவரது கவிதைகளுள் சிலவற்றைச் சேகரித்து ‘குறிஞ்சி தென்னவன் கவிதைகள்’ என்ற பெயரில் 1987ம் ஆண்டு மலையக வெளியீட்டகம்  வெளியிட்டிருந்தது. இந்த மலையக வெளியீட்டகத்தின் ஆசிரிய குழுமத்தில் திரு சாரல் நாடன், சு.முரளிதரன் மற்றும் அந்தனி ஜீவா ஆகிய மூவரும் இருந்தமை குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து தென்னவனின் கவிதைகளை தொகுத்து வெளியிடும் முயற்சியில் பெரும் பங்காற்றியவர் திரு எழுத்தாளர் சாரல் நாடனாவார். இவருடைய தொகுப்பு முயற்சிகள் பின் அவற்றுக்கு கிடைக்கப்பெற்ற விருது பணம் தொடர்பாக பல உட்பூசல்கள் இருந்த போதும் சாரல் நாடன் தொடர்ந்து முயற்சித்தமை மலையக கவிதை உலகுக்கு அளப்பரிய சேவை. அவ்வாறு அவர் தொகுத்து வெளியிட்ட ‘குறிஞ்சித்தென்னவன் கவிச்சரம்’  மிக முக்கிய கவிதைகள் அடங்கிய தொகுப்பாகும் ‘இணைப்போம் கரங்கள்’ என்ற பெயரில் இலங்கையில் சிங்கள தமிழ் படைப்பாளுமைகளின் கவிதைகளை தொகுத்து  ரோஹண லக்ஸ்மன் பியதாச தொகுத்து வெளியிட்ட தொகுப்பிலும் இவரின் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.  இவை மாத்திரமே புத்தகங்களாக வெளிவந்தவை. மற்றையவை யாவும் சஞ்சிகைகளிலும் அவரின் கவிதை நோட்டு புத்தகங்களில் உறங்கிக்கிடக்கின்றன. மேற்சொன்ன தொகுப்புக்கள் மற்றும் சஞ்சிகைகள் அவரின் குறிப்பட்டைகளில் வாசிக்கக்கிடைத்த கவிதைகள் வழியே அவரை அணுக முற்பட்டிருக்கிறேன். தென்னவனின் மொத்த கவிதைகளிலும் முதன்மை மிக்கது மலைநாட்டு பெண்களின் உரிமைகளும் விழித்தெழும் அவசியமும், அவர்கள் அன்றாடம் படும் துன்பதுயரங்களுமாகும்.

 

‘நாட்டிடை பொருள் வளமே மலை

நங்கையர் விரல்தருமே

வீட்டினில் துயர்நிலையே நெஞ்சில்

வேதனை நினைவுகளே!’

 

இன்னொரு கவிதையொன்றில் பெண்களின் துயரங்களை ஒவ்வொரு கவிதை அடிகளாக சொல்லி அவை நீங்க பாடுங்கடி என்பதன் ஊடே மலைநாட்டில் பெண்களில் மாடாய் உழைக்கும் பாடு அழகாக சொல்லப்படிருக்கிறது.

நந்தமிழ்ப் பெண்கள் உழைப்பினிலே

இந்த நாடு உணர்ந்திடும் போதினிலே- இளஞ்

செந்தளிர் கிள்ளும் வளைக்கரத்தின் – உயர்

சிறப்பை போற்றியே பாடுங்கடி!

வீட்டினி லும்வெளி வேலையிலு

மெங்கள் மேனி யுழைப்பே அதிகமடி! – இந்த

நாட்டினிலே மலைப் பெண்கள் நமக்கின்னும்

நாடுஞ் சுதந்திரம் உண்டோடி!

 

மேடை யதிர்ந்திட பெண்ணுரி மையென

வீணில் அழுது நடிச்சாங்க!

எங்கள் பீடை தொலைந்திட வில்லை,

யிவர் வெட்டிப் பேச்சினை தள்ளி மிதித்திடடி!” என்று பெண்களையும் தங்கள் உயர்வின் விடியலுக்காக முன்வர அழைக்கிறார் மேலும்

‘புதுமைப் பெண்ணாய் மாறிடுவோம்’ கவிதையில் அன்றாடம் அவர் பாடுகள் சொல்லப்பட்டிருக்கும்

‘காலையி லேபனி காயுமுன் னே

குளிர் காற்றைக் கிழித்துமே ஓடுகின்றோம்! –

தொழிற் சாலையி லேசங்கு

ஊதுமுன் னேபசுந் தங்கத் தளிரினை கிள்ளிடுவோம்!

வெண்டை விரல்கள் விறைத்திடி னும்

எங்கள் மேனி குளிரில் நடுங்கீடினும்,

இரு கெண்டை விழிகள் பளபளக்கும்,

தளிர கிள்ளவோ கைகள் பரபரக்கும்!’

நீங்கள் மலைநாட்டின் எந்த திக்குச்சென்றாலும் இதுதான் காலை சட்டகம் எங்கள் மலைநாட்டு பெண்களின் வீடுகளில்

 

இன்னொரு சமயம் எங்கள் மலைநாட்டு பெண்களை தெய்வங்கள் என்று விழிக்கிறார் அப்படி பாடப்பட்ட கவிதை ஒன்றில்

 

பெண் தெய்வம்

 

கூடையை முதுகில் தாங்கி

கோணலாய் உடல் வளைத்து

சாடையில் விழிகள் நோக்கும்

தன்னிலை பிறழ்ந்து சென்ற ஆடையை கரங்கள் நீண்டு

அள்ளியே மார்பை மூடும்!

வாடையில் மேனி யாடவரையிடைக் கால்கள் ஓடும்

சிலீர்’ என மோதுங் காற்றும்

சில்லிடும் பனியும் சேர்ந்து

குளிரினில் உடல் நடுங்க

கோதையின் சுரங்கள் நீண்டு

தளிரினைப் பறிக்கும்

நேர்த்தித் கதைகளோ அனந்தம் கோடி

 

தவிப்பினில் அழகு ஆடும்! ‘கலீர்’

எவளைகள் சொல்லும் மரகதப் பாய் விரித்து

மயக்கிடும் பசுமைக் காட்சி!

மரங்களோ நெடிதுயர்ந்து வா!

வென அழைக்கும் காற்றில்!

வரிசையாய் நிரையில் தின்று

வனைக்கரம் நீட்டி; நீட்டி!

விருந்துகொள் வனப்பு பெண்கள்

இளந்தளிர் பறிக்கும் காட்சி!

 

மேலும் உலகில் யாருமே செய்து பார்க்க முடியாத வேலைகளை தேயிலை தோட்டப் பெண்கள் அன்றாடம் செய்ய வேண்டிய நிலமைக்கு முகம்கொடுக்கின்றார்கள். அடர் மழை கொட்டே கொட்டென பெய்தாலும் வெய்யில் சுட்டெரித்தாலும் கடும் குளிரென்றாலும் அவர் பாடு அதே பாடுதான் அவர்கள் அன்றாடம் அப்படியே இந்த சூழ்நிலைமைகளை முழுவதுமாக இவரின் கவிதைகளில் காணலாம்.

 

வேகம் விளைத்தெழுவாய்!

 

விண்ணுயிர் மலையிடையே

தொழில் விதைத்திடும் மலைமகளே

உன் நிலை நினைக்கையிலே உளம்

உருகிடும் மெழுகெனவே

நாட்டிடை பொருள் வளமே மலை

நங்கையர் விரல்தருமே

வீட்டினில் துயர்நிலையே நெஞ்சில்.

இப்படி அவரின் கவிதைகள் மலைநாட்டு மக்களின் ஒட்டுமொத்த குறுக்கு வெட்டு முகத்தை காட்ட முயன்றிருப்பார்.

 

குறிஞ்சி தென்னவன் கவிதைகள் முழுவதுமே மலைநாட்டு மக்களின் அவலங்களையும் துயரங்களையும் பாடுவதோடு புரட்சி மிக்கவர்களாய் மக்களை தூண்டும் உணர்வு மிக்கவை. அவை என்றும் மக்கள் மனங்களில் நிலைத்து நிற்கக்கூடியவை.

 

‘வறுமை என்னும் சேற்றில் புதைந்து

வாழ்வதற் கேதும் மார்க்க மின்றியே

சிறுமை யுற்றுடல் தேய்ந்து நலிந்து

தேயிலைக் காக யாவு மிழந்து அருமை

உயிரையும் அர்ப்பணிக் கின்ற, அந்தோ!

என்னரும் மலையகத் தோழா!

உரமும் திறமும் உள்ளவ னாய்நீ

உரிமைகள் யாவும் பெறுவதெந் நாளோ?”

அன்று பாடிய அதே கேள்விகள்தான் இன்றும் கேட்கவேண்டிருக்கிறது மலையகம் எங்கும்”.

 

புரட்சி மலர்கள் பூக்கட்டும் என்ற இன்னுமொரு கவிதையில்

 

பொய்த்தலைமை பூண்டறுத்து

பொடிப்பொடியாய் போமாறு

புரட்சியெனும் வேள்விசெய்து

மெய்த்தலைமை தொழிலாளர் வர்க்கத்துள்ளே

வேண்டுமெனும் உணர்வோடு விரைந்தெழுவோம்!

செயற்றிறமை, மதிநுட்பம்,

தெளிந்தஞானம் தொழிலாளர்

தங்களுக்கும் உண்டு என்றும்

கைத்திறமை ஒன்றினிலே மட்டுமல்ல

கருத்தினிலே புரட்சிமலர் பூக்க வேண்டும்!

 

இவ்வாறே இன்னுமொரு கவிதையில் குறிஞ்சி தென்னவன் புரட்சி மனநிலையை இப்படி விதைக்கிறார்

வதைத்துத்தான் எளியவரை பொருள்குவிப்போர்

வாழத்தான் மற்றவர்கள் வாடத்தானோ?

பதுக்கித்தான் நிலவறையுள் மறைவாகதான்

பணத்தைத் தான் வைத்திருக்கும் வஞ்சர்தம்மை

உதைக்கத்தான் வேண்டுமிந்த உலுத்தர்கூட்டம்

ஒடுங்கத்தான் வேண்டும் தனியுடைமைக் கொள்கை

புதைக்கத்தான் படவேண்டும், உங்கள்நெஞ்சில்

புரட்சித் தீ கொழுந்துவிட்டு எரியவேண்டும்!

 

குறிஞ்சி தென்னவனின் கவிதைகளில் புரட்சி மனநிலையில் மக்களை அணுகுவதும் தோட்டமக்களை தன் கவிதை தாங்கி நிற்கும் உணர்வுகளோடு ஒத்துப்போக தூண்டுவது அவரின் கவிதைகளில் மற்றுமொரு சிறப்பு.

 

மேலும் கவிஞர் தன் கவிதைகளில் காதல் உணர்வுகளையும் தோட்டப் பெண்களின் மச்சான் மாமன் உறவுகளையும் மிக நேர்த்தியாக பதிவு பண்ணியிருப்பார். எவ்வளவு துன்ப துயரங்களை அன்றாடம் அனுபவித்தாலும் சக மனிதர்களாய் வாழ முயன்றிருக்கின்றனர். வெறுமனே காதல் உணர்வுகளுக்காக மட்டும் அல்லாது அந்த ஒவ்வொரு கவிதைகளிலும் சமூகத்துக்கான சிந்தனைகளும் நிறைந்திருக்கும்

 

‘சாதிப் பிரிவுகள் வைத்துக்கொண்டே

தர்மசாத்திரப் பெருமை பேசுறிங்க!

நீங்க ஓதுகின்ற நீதி நியாயமெல் லாமிங்கு

ஒருத்தருக் கில்லை பொதுவாம் மச்சான்!

 

எந்த இனங்குல மாயிருந் தாலென்ன

எல்லோரும் மனித வர்க்கம் மச்சான்! – நாம்

சொந்தச கோதர் போலவே வாழ்ந்திடில்

சொர்க்மிந் நாடு கேளுமச்சான்!’

 

இன்னுமொரு கவிதை சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தில் விரட்டி அடிக்கப்பட்ட இரண்டு காதல் ஜோடிகளின் கண்ணீர் கதை கவிதயாக்கம் செய்திருக்கிறார்

 

ஆசை மச்சானுக்கு!

 

ஆசை மச்சான் உங்கள் கால்களுக்கு

ஆயிரங்கோடி நமஸ்காரம் – செய்து

ஆசைமனைவி காமாச்சி எழுதிடும்

அன்புக் கடுதாசி என்னவென்றால், பல

ஆண்டவன் கிருபை யாலும்

உங்கள் ஆசிர் வா தத்தாலும் நாங்கள் சுகம்!

தாண்டி இருக்கிற உங்க சுகத்துக்குத் தான்

கடவுளை வேண்டுகின்றேன்! கடல்

கட்டிய மனைவி நானிருக்க

செங் கரும்பாக ரெண்டு பிள்ளையிருக்க -எம்மை

விட்டுப்போன பதினைஞ்சி வருசமா

நான் வேதனைப் பட்டதை யாரறிவார்?

 

‘காசு பணத்தோடு வந்துவிடு – இங்கு

காணி பூமி வாங்கி வாழ்ந்திடலாம்!” – என்ற

ஆசை நெறஞ்சஉம் காயிதம் கண்டு

நான் அழுவதா? சிரிப்பதா? தெரியவில்லை.

இலங்கை நெலமை தெரியாமல் நீங்க

எழுதியிருப்பதை பார்த்துவிட்டு

உமக்கு வெளங்கப் படுத்தயிந் தக்கடுதாசியில்

வெவரமா சொல்லுறேன் கேளுமச்சான்!

இப்படியாக தொடரும் இந்த கவிதை இன்னும் துயரம் தொடர்கிறது. தொடர்ந்து இந்த கவிதையை வாசிக்க வேண்டும் என்றும் பதிவிட வேண்டும் என்றாலும் கட்டுரை நீட்சிக்காக தவிர்க்கிறேன் மேலும் அவற்றின் தொடர்ச்சி துயர் மிகுந்தவை நிச்சயம் தேடி வாசிக்க வேண்டியவை.

 

இப்படியாக ஒரு சில இடங்களில் கவிதைகளில் காதல் ரசம் சொட்டப்பாடினாலும் அவைகளிலும் சமூக சீர்திருத்தம் செய்ய முயன்றிருக்கிறார்.

குறிஞ்சி தென்னவன் கவிதைகளில் இன்னுமொரு சிறப்பு வடிவம் அவர் பாடும் குறும்பாக்களாகும். அவரின் தொகுப்புக்களில் அவற்றுக்கு தனி இடம் உண்டு மேலும் அவரின் கவிதை குறிப்பு புத்தகங்களிலும்

 

‘தொழிற் சங்கத் தலைவர் தண்ட பாணி!

தொழிலாளர் இவருக்கு ஒரு

ஏணி!

விழிசிவக்க, முகஞ்சிவக்க மேடைகளில் பேசிடுவார்..

தலைவர் இவர் இன்றுகங்காணி”

இவரின் குறும்பாக்களில் நக்கலும் அங்கதமும் இழையோடிக் காணப்படும்.

‘முள்ளெடுத்து தோள்மீது வைத்தான்!

முத்து, வள்ளி பார்வையினால் தைத்தாள்!

செல்ல சில வாரங்கள்

தேயமலை யோரங்கள் வள்ளி

வயிற் தள்ளிடவே கைத்தான்;!’

தோட்டப்புறங்களில் பிள்ளைகளை பிள்ளை மடுவங்களில் போட்டுவிட்டு வேலைக்கு செல்வது வழக்கம் அப்படியான சந்தர்ப்பங்களில் ஆயம்மாக்களில் நிலைமையை பின்வரும் குறும்பா நக்கல் செய்கிறது.

‘ஆயம்மா வாகவரும் பெண்கள்

அவர்களுக்கோ நாவலிலே

கண்கள்!

தாயம்மா மீனாச்சி

சரசுவதி பிள்ளைகளின்

வாயினிலே நிறைந்திருக்கும்

மண் கல்!”

இப்படியாக அவரின் குறும்பாக்கள் பேசும் அரசியலும் நடைமுறைகளும் வித்தியாசமானது இவை எல்லாவற்றிலுமே காலத்தின் பிரதிபலிப்பே இலக்கியம் என்ற என்ற இலக்கண உண்மை பார்க்கலாம்.

 

நான் மேலே சொன்னது போல் ஒரு தொழிலாளிக்கே அவர் படும் பாடும் அவர் சார்ந்தோர் படும் பாடும் மிகத்தெளிவாக தெரியும் அனுபவிப்புமாக இருக்கும். அவ்வாறு பாடுபடும் தொழிலாளனின் கவிதை மலைநாட்டின் உள்ளடக்கத்தை காண அவைதான் மக்கள் மொழி உணர்வு.

எந்த ஒரு தந்தைக்கும் நேர்ந்து விட கூடாத துயரம் மூன்று குழந்தைகளின் தந்தை திரு குறிஞ்சி தென்னவனுக்கு ஏற்பட்டு விடுகிறது. தன் மகள்களில் ஒருவர் 18 வயதில் அகால மரணமாகிறார்.  இந்த துயரத்தில் நிலைகுலைந்து போன தென்னவன் சில காலம் கவிதைகள் எழுதாமல் இருந்தாலும் பின் ஒரு எழுத்தாளனுக்கே இருந்த மிடுக்குடன் மீண்டும் வருகிறார் மலைநாட்டின் துயரங்களை மீட்டுவதற்காக.

அவரின் அஞ்சலி கவிதை ஒன்று வாசகனை ஒவ்வொருவரையும் அழ செய்யும். ஒரு தந்தை என்றால் குழந்தைகள் தொலைதூரம் இருப்பவர்களாக இருந்தால் தொலைபேசியில் அழைத்து பேசிவிடவோ பக்கத்தில் இருந்தால் இறுக்கி அணைத்து கொள்ளவோ தோன்றும் பதற்றமும் பயமும் அழுகையும் தரும் கவிதை. நீள் கவிதையின் ஒரு பகுதி

‘கண்ணை இழந்தாலும் கருத்தை இழக்காத பொன்னே!

புதுமலரே! பொங்கிவரும் முழுநிலவே!

என்னைப் பைத்தியமாய் இங்கிருக்க வைத்துட்டு

விண்ணை விரும்பிவிட்ட என்மகளே

உன்னை எண்ணி கண்ணீரில் கவியெழுதி காணிக்கை வைக்கின்றேன்!

மண்ணுலக மக்கள் வாழ்வுக்கு கவிபாடும்

தென்னவனாம் என்னை தேனார் பசுங்கிளியே!

மண்ணுக்குள் உன்னை வைத்து மகளே,

அஞ்சலிக்கவிதை பண்ணும் நிலவரவோ

பாவிநெஞ்சம் தாங்களில்லை எண்ணி…எண்ணி நெஞ்சம்,

எகிநெருப்பாய் கொதிக்கிறதே!’

பொதுவாக மலைநாட்டு கவிதைத் தொகுப்புக்களில் மிக முக்கிய இடம்பிடித்து கொள்வது சம்பள வாசல் சம்பவங்கள் எந்த கவி சொல்லியாலும் தவிர்க்கவே முடியாத இடம். சம்பளம் பெற்ற கையோடு எதிர் நோக்கி வரும் பிரச்சினைகளும் சம்பவங்களும்   அந்த சம்பளப் பணத்தை தாண்டி நிற்கும் தேவைளும் என அதிகரித்து நிற்கும் உணர்வு பெருந்தவிர்ப்பை காணலாம். இதை ஒரு முறை குறிஞ்சி தென்னவனின் வரிகளில் வாசிப்பது அங்கதசுவை மிக்கவை கவிதை இப்படிதான் ஆரம்பிக்கும்

 

‘பத்தாந் திகதியில் சம்பளமாம்,

சின்னப் பையனுக் கோ, பெருங் கொண்டாட்டம்!

‘மொத்தமாக சம்பளம் வாங்கி டுவா, அம்மா

முழுசா ஒருருவா தந்திடுவா”! என

சித்தம் நிரம்பிய ஆசையிலே.

தன் தோழர் பலருக்கும் சொல்லி வைத்தான்!

முத்தம்மா சம்பளம் வாங்கி வந்தாள்-

அவன் முதுகுல நாலு கொடுத்து வச்சான்” என்று ஆரம்பிக்கும் கவிதைவரிகளில் இன்னுமொரு இடம் குறிப்பிடத்தக்க இடம் அதாவது”காமாச்சிக்கு எம்பத் தஞ்சி ரூவா அவ கையில் வாங்கிட்டா பாத்தியாடி? சுத்த சோமாறி வேலைக்குப் போகமாட்டா, போனா சொத்தவேலை, துப்புப் பட்டிடுவா!

ஏமாளி கந்தன் அவபுருசன்-அவ இழுத்த இழுப்புக்கு வளையுறானே!” என ரோமஞ் சிலிர்க்க வசைபாடும் சின்ன ருக்கு மணீக்கோ, வயித்தெரிச்சல்! என்று சில பெண்களின் தோட்டப்புறங்களில் வேலைக்காடுகளின் நடத்தை சீர்கேடுகளையும் சொல்லிவிட்டே நகர்கிறார். இவரை தவிர வேறொருவர் பாடியிருந்தால் கோடரி மண்வெட்டிதான் பதில் சொல்லியிருக்கும் அல்லது இன்றைய புரட்சியாளர்களிடம் தலை தெறிக்க ஓடியிருக்கக்கூடும். மேலும் அந்த கவிதையில் ஒவ்வொரு பாத்திரங்களாக சொல்லிச் சென்று அந்த ஒவ்வொரு பாத்திரங்களின் குடும்பங்களில் நடக்கும் பிரச்சினைகள் வேறுவேறு பட்டதாய் காட்டி ஒட்டு மொத்த சம்பள நாளின் மலைநாட்டு மக்களின் நிலவரங்களை காட்டியிருப்பார். உச்சக்கட்டமாக கவிதையை இப்படி முடித்திருப்பார்

சம்பள நாளிது வீட்டி லிருக்கிற

சந்தோச மெல்லாம் பறந்திடும் நாள்!

வம்பும் தும்புகளும் பேசிடும் நாள்!

இவர் மண்டை யுடைந்திடும் நாளிதடா!

கம்புத் தடிகளை தூக்கிடும் நாள்

பொலிஸ், கச்சேரி, கோர்ட்டுக்கு போயிடும் நாள்!

வெம்பியழுதிடும் பெண்களின் குரல்கள் வீடுகளில் கேட்கும் நாளிதடா!

சம்பளநாள் தோட்டமக்களின் துயர் நிறைந்த நாட்களின் முதன்மையான நாள். இந்த கவிதையின் ஊடே முழு மலையகத்தையும் காட்ட முயன்றிருக்கிறார் மிக அற்புதமாக. கவிதையின் முழுமையும் மலையகம் எங்கும் சம்பள நாள் நிலமையும் சமன்.

சிங்கள பௌத்தம் தேசிய அரசியலிலும் துவேஷம் மிக்க அவர்களின் செயற்பாடுகளிலும் குறிஞ்சி தென்னவனுக்கு மிக பெரும் அதிருப்தி இருந்தது. அந்த அதிருப்தியினை ஆதங்கத்தினை தனது கவிதை மொழியில் காட்ட முற்பட்டிருக்கிறார். மேலும் தோட்டப்புறங்களில் சிங்கள காடையர்கள் செய்த அட்டூழியங்களையும் லயன்கள் எரித்தும் பல சொத்துக்களை களவாடியும் பெண்களை மானபங்கம் பண்ணியதையும் வரலாறு சொல்லும் அதை மிக நிதானமாக தன் கவிதைக்குள் கொண்டு வந்திருக்கிறார். ‘புத்தனுக்கோர் விண்ணப்பம்’  என்ற இவரின் மேற்சொன்ன விஷயங்கள் விரவிவர காணலாம்

 

‘போதிமரத் தூயவநின் பொன்னடிக்கோர் விண்ணப்பம் யாதுயிர்க்கும் தீதிழைக்கா நின் கருணை மனத்துதித்த தீதறு நற் கொள்கையெலாம் செகத்தோரின் உளங்களிலே சோதிமணி விளக்கெனவே சுடர் விட்டு ஒளிவீச’ என்று ஆரம்பித்து நகரும் கவிதையில்

 

‘நீ கண்ட கனவெல்லாம்

நிச்சயமாய் இந்நாட்டில் தான் தோற்றுவிட்டதையா

நாணின்றி நின்பெயரை நாளெல்லாம் கூவிவிட்டு

தர்மத்தின் உறைவிடமே!

தீ நின்ற நெஞ்சினராய் தீங்குபுரி வோர்மிகுந்தார்!” என்கிறார். மேலும் இதனை ஒத்த இன்னுமொரு கவிதையில் ‘சித்தார்த்தன் செப்புகிறான” என்ற கவிதையிலும் சிங்கள பௌத்த இனவாதம் மீதான அவரின் ஆதங்கத்தை காணலாம். மலையக மண்ணின் மூத்தக் கவிஞன் என்பதை விட புரட்சிக் கவிஞன் என் சொல்வதே மேல் என்று எண்ணம் தோன்றுகிறது. அவரின் கவிதைகளும் அவற்றுக்காக அவர் கையாண்டுள்ள மொழியும் அதினிலும் மேலாக கவிதை தலைப்புக்களும் ‘இசைத்திடு விடுதலைச் சிந்து”, ‘ஊருக்குழைச்சது போதும் மச்சான்”,’எழுச்சித் திருநாள்”, ‘கொட்டு முரசே”, ‘ கொதித்தெழுவோம்” ,’விழித்திறவாய்”, ‘நாணலைப் போல் தலை சாயாதே” இப்படியாக நிறைய கவிதைகளை சுட்டிக்காட்டலாம். மேற்சொன்ன கவிதைகள் அத்தனையும் உத்வேகம் மிக்கவை ஈட்டியின் கூர்மை மிக்கவை மேலும் இவைகள் எக்காலத்திற்கும் பொருந்தி போகும் திறன் பெற்றவை.

குறிஞ்சி தென்னவனின் கவிதைகளுக்கு பரவலான அங்கிகாரம் கிடைத்தன. அவைகள் விருதுகளாகவும் வெளிநாட்டு பயணங்களாகவும் அமைந்திருந்தன. இவருக்கு கிடைத்த விருதுகளில் 1986 ஆண்டு கிடைத்த ஒரு தோட்ட தொழிலாளிக்கு கிடைத்த கலாபூசண விருதாகும். மேலும் மத்திய மாகாண சாகித்திய விருதுகள் நான்கு முறைகள் கிடைத்திருக்கிறது. மலைநாடு எங்கும் இவருக்கான அங்கீகாரம் மரணித்து போகாதது. மேலும் இன்று இவரின் கவிதைகளை தேடிவாசிக்கும் புதிய வாசகர்கள் குறைவு என்பதோடு அவரின் பல நூறு கவிதைகள் தொகுக்கப்படாமல் கிடப்பில் அவரின் நோட்டு அட்டைகளில் கிடக்கிறது. அவற்றை தொகுக்கப்படுவதோடு இன்றைய சமூகத்தினருக்கு அவை சென்றடைய செய்வது மாத்திரமே ஒரு கவிஞனுக்கு செய்யும் காலத்தின் நிலைக்கும் நன்றிக்கடன். இவரின் கவிதைகள் தொகுக்கப்படுவதோடு மிக விரிவான ஆய்வுகளுக்கு இந்த கவிதைகள் உள்ளாக்கப்பட வேண்டும் என்பது இவரின் கவிதையின் கனதியால் வந்த என் மன வெளிப்பாடு. பரவலான தேடலும் வாசிப்பும் தொகுப்பும் ஆய்வுகளும் இம்மூத்தக்கவிஞனின் படைப்புக்களுக்கு மிக மிக அவசியம்.

 

***

– V.M.ரமேஷ்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *