அண்மையில் வல்லினம் ஆசிரியர் நவீனின் பேய்ச்சி நாவலை பேராசான்  நுஃமான் அவர்களிடம் சேர்ப்பிப்பதற்காக அவரின் இல்லம் சென்றிருந்த போது பேராசானோடு சிறிது நேரம்  உரையாட  கிடைத்த சந்தர்ப்பம் என்பது எனக்கு மிகவும் பயனுடையதாக அமைந்திருந்தது. அவரோடு உரையாடிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பமொன்றில் பேராசானிடம் மலையக இலக்கிய கலாசாரத்தில் மிகவும் அவதானத்துக்குரிய அல்லது மிகவும் அவசியமாக, வாசகன் ஒருவன் தெரிந்தெடுத்து வாசிக்கக்கூடிய படைப்பாளர் யாரென்று கேட்கக் கிடைத்த வினாவிற்கு அவர் மலையகத்தில் ஒரு சில முன்மாதிரியான எழுத்தாளர்களை சுட்டிக்காட்டி பேசியிருந்தாலும் குறிப்பாக, அவர் அடிக்கோடிட்டு பேசியவர் மலையக சிறுகதைகளின் முன்னோடி என்று சொல்லப்படும் என்.எஸ்.எம் இராமையா பற்றியாகும். அவர் குறித்தான தேடலும் வாசிப்பும் அவர் படைப்புலகம் குறித்தான அறிமுகமும் காலத்தின் அவசியம் என்று குறிப்பிட்டிருந்தார். சாதாரணமாக அமைந்த அந்த உரையாடலுக்கு பின் என்.எஸ்.எம் இராமையா தொடர்பான தேடலை மிகத் தீவிரமாக்கிக் கொண்டேன்.

உண்மையிலுமே மலையக ஆளுமைகள் ஒரு சிலரின் தேடலும் அவர்களின் படைப்புக்கள் குறித்தான பதிவுகளும் மிக மிக குறைவானதாக இருக்கும் அதே வேலை சில படைப்பாளுமைகள் தொடர்பாக தொடர்ந்தும் பேசப்பட்டு வருவதோடு அவர்களின் படைப்புக்களின் அறிமுகம் ஒரு வகையான விளம்பர போக்குடையதான பரப்புரைகள் மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இவை நாடறிந்த சில முன்னின்று இயங்கும்  இலக்கிய ஆளுமைகளால் என்பதும் வருந்தத்தக்கது.

மேலும் என்.எஸ்.எம் போன்றே இன்னும் பல படைப்பாளர்கள் பேசப்படாமல் இளம் சந்திதியினருக்கு அறிமுகப்படுத்துவதில் பிற்போக்குடமை காணப்படுவதோடு இன்றும் சில மலையக ஆளுமைகள் மேற்சொன்ன விளம்பரத் தரகர்களால் மறைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிட்டு சொல்லத்தக்கது. எனவே அப்படியான ஆளுமைகளை தெரிவு செய்வதும் அவர்களை அறிமுகப்படுத்தும் முயற்சியின் வெளிப்பாடே இந்த தொடர் கட்டுரைக்கான முயற்சி. இந்த கட்டுரை தொடரை மிகவும் ஆர்வமாகவும் அவசியமான தேடல்களுடனும் கனதியாக அறிமுகப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தை முன்னிறுத்தி நகர்த்த முடிந்தாலும் இந்த கொரோனா காலம் அதற்கான தேடலுக்கான தடைகளாக அமைந்து விடுமோ என்ற பதற்றத்துடனே தொடரை ஆரம்பிக்கின்றேன். இந்த மலையக ஆளுமைகளின் அறிமுகத்தொடரை அவர்களின் படைப்புக்களில் இருந்து மலையகத்தையும் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களையும்  அவர்களின் வாழ்வியலையும் ஆளுமைகள் காணமுயன்ற உள்ளக்கிடக்கைகளில் இருந்து அவர்களை அறிமுகப்படுத்த விரும்புகிறேன். உண்மையில் இப்படியான முயற்சிக்கான அடிப்படை ஒரு படைப்பாளனை அறிமுகப்படுத்துவதன் ஊடாக அவர்களின் படைப்புக்களைப்பற்றி பேசுவதாகவும் அவைகளை வாசக பரப்புக்கு அறிமுகப்படுத்துவதாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையோடு..

மலையக இலக்கிய கலாசாரத்தில் அதன் ஈர்ப்பின் ஈரத்தை இலக்கிய வெளிக்குள் கொண்டுவரும் முயற்சியில் பதுளை மண்ணின் மைந்தர்கள் பெரும் பங்காற்றியிருக்கின்றனர் என்பது மறக்கவோ மறுதலிக்கவோ முடியாத விடயமாக இருந்து வருகிறது. அங்கிருந்து உருவானவர்களையும் அவர்கள் பேசிய இலக்கியத்தினூடான மக்களின் ஊடாட்டங்களும் பரவலாக எல்லா பகுதிகளுக்கும் சென்றடைந்திருக்கிறது. அப்படியானவர்களில் குறிப்பிட்டு சொல்லத்தக்கவர்களின் முதன்மையானவர்  என்.எஸ்.எம் இராமையா. இவர் பதுளை மாவட்டத்தில் அதே மாநகராட்சிக்கு உட்பட ரொக்கில்(Rock hill) தோட்டத்தைப்  பிறப்பிடமாக கொண்ட மெய்யப்பன் ராமாயி தம்பதிகளுக்கு 27.01.1931 ரில் பிறந்தார்.  ராமையா தன் வீட்டில் ஐந்து ஆண் குழந்தைகளின் கடைக்குட்டி பையன். நாராயணன் சுப்பையா மெய்யப்பன் என்ற பரம்பரையில் வந்த என்.எஸ்.எம்.இராமையாவின் தந்தை  தோட்டத்து கங்காணியாக இருந்ததோடு அவருடைய ஆண்குழந்தைகளின் சிலரை அவர் சார்ந்த தோட்டங்களில்  எக்கவுண்ட் கிளாக்காக நியனம் பெறச் செய்திருந்தார். அவர்களின் வரிசையில் என்.எஸ்.எம்மும் சில காலம் ரொக்கில் தோட்டத்தில் எக்கவுண்டன் ஸ்டாப்பாக  வேலை செய்த பின் அவருக்கு சுமார் 35 வயது இருக்கும் காலப்பகுதியில் கொழும்புக்கு வந்து சேர்ந்திருந்தார். தனது ஆரம்பக் கல்வியுடன் ரொக்கில்லில் இருந்து கொழும்புக்கு வந்த என்.எஸ்.எம் அங்கு இருக்கும் பாரம்பரியமான இரும்பு கடையொன்றில் கணக்காளராக தன் வாழ்வின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பித்தவர், அதற்கு பின் நிரந்தரமாக கொழும்பிலேயே தங்கிவிட்டார்.

ஆங்கில புலமையும் வாசிக்கும் ஈடுபாடும் அதிகம் இருந்த என்.எஸ்.எம்.இராமையாவுக்கு போதுமானதாக இருந்தது. முற்போக்கான முன்மாதிரியான இலக்கியப் படைப்புக்களை தன் மண் சார்ந்து முன்வைக்க. ‘சிவப்பு ரோஜா” சிறுகதையின் மூலம் சிறுகதைகளை எழுத ஆர்வம் காட்டிய இராமையா 1971 தொடக்கம் 1989 வரை மலைநாட்டு எழுத்தாளர் மன்றத் தலைவராக சுமார் 18 வருடங்கள் அவர் செய்த இலக்கியப்பணி அளப்பரியது.

சிறுகதை எழுதுவதை விட நாடகங்கள் எழுதி இயக்குவதில் ஆர்வம் கொண்ட என்.எஸ்.எம் பல நாடகங்களை மேடை ஏற்றியிருக்கிறார் என்பதோடு இவருடைய நாடகமொன்றில் தான் இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அறிவிப்பாளர் ராஜேஸ்வரி சண்முகம் அறிமுகமாகி கலைத்துறைக்கு பிரவேசித்தார்.  என்.எஸ்.எம்மின் ‘ஒரு மின்னல்’ நாடகம் கொழும்பில் மேடையேறிய போது பெரும் வரவேற்பை பெற்றதோடு அப்போதைய தினகரன் ஆசிரியர் கே.கைலாசபதி மலையகம் சார்ந்த சிறுகதைகளை எழுத தூண்டியதோடு அவர் எழுதி்ய கதைகளை தினகரனில் வெளியிட்டு உதவினார். அவ்வாறு சிறுகதை உலகிற்கு பிரவேசித்த என்.எஸ்.எம் முப்பது வருட காலப்பகுதிகளில் இருபது சிறுகதைகளையே எழுதியுள்ளார். குறிப்பாக இவருடைய நாடகங்கள் எதுவும் எழுத்து வடிவம் பெறவில்லை என்பதோடு அவைகள் குறித்தான பதிவுகளும் எங்கும் காணக்கிடைக்கவில்லை என்பது மிக பெரிய இழப்பு.

இந்த ஒவ்வொரு சிறுகதையும் தனித்துவமானது. அக்கதைகள் ஒவ்வொன்றும் தனித்துவமான மக்கள் வாழ்வியல் அம்சங்கள். அத்தகைய சிறப்புமிக்க சிறுகதைகளை தொகுத்து ‘ஒரு கூடைக் கொழுந்து’ என்ற பெயரில் 1980 களில் ‘வைகறை’ வெளியீடாக பேராசிரியர் நித்தியானந்தன் வெளியிட, அதன் இரண்டாம் பதிப்பை 1990 ஆம் ஆண்டு அதாவது என்.எஸ்.எம் இறந்த ஒரு வருடத்துக்குள் எச்.எச். விக்ரமசிங்க அவர்களால் வெளியீடு செய்யப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக இந்த தொகுப்புக்குள் ஆசிரியருடைய மிகுதி கதைகள் இடம்பெறவில்லை. மேலும் 1995 சிரித்திரனில் வெளிவந்த ‘நிலவைப்பிடித்து’ கதையை தவிர வேறு கதைகள் என் தேடுதலுக்கு கிடைக்கவில்லை. அவை தொகுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானதொன்றாகும்.

மிகவும் ஆர்வமாகவும் ஆற்றலுடனும் மலையக இலக்கிய கலாசாரத்துக்குள் புகுந்த என்.எஸ்.எம்மின் வாழ்க்கை குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு பெரும் சோகம் நிறைந்த காலப்பகுதியாக இருந்திருக்கிறது. இவருடைய இரண்டு பெண்குழந்தைகளும் மலேரியா தொற்றினால் இறந்து போனதோடு அந்த இரண்டு மரணங்களும் அடுத்தடுத்த நாட்களில் நிகழ்ந்திருந்தது. மிகவும் அன்போடு  எப்போதுமே அவர்களோடேதான் நேரத்தைக் கொண்டாடும் என்.எஸ். எம்.இராமையாவுக்கு இந்த இழப்பு  தாங்கிக்கொள்ள முடியாத துயரை தந்திருந்ததோடு அதற்கு பின்னர் இவரின் இலக்கிய ஆர்வமும் கதை எழுதும் அளவும் குறைந்துவிட்டது.

என்.எஸ்.எம். இராமையாவின் ‘ஒரு கூடைக் கொழுந்து’ தொகுப்பில் இருக்கக்கூடிய பதினோரு கதைகள் குறித்தான பரவலான உரையாடல்கள் இருந்தாலும் அவருடைய மிகுதி கதைகள்  பற்றி எங்கும் பேசப்படுவதாகவோ அல்லது எங்கேனும் ஆவணப்படுத்தலுக்கு உள்ளாகப்பட்டதாகவோ தெரியக்கிடைக்கவில்லை என்பதால்தான் அந்த கதைகள் இன்றளவும் எம்மிடம் இல்லாமல் இருக்கிறது. எனவே இந்த தொடரில் என்.எஸ்.எம்மின் சிறுகதைகளில் விசித்திரனில் வெளிவந்த ‘நிலவைப் பிடித்து’ சிறுகதையுடன் ‘ஒரு கூடைக் கொழுந்து’ தொகுப்பில் வெளிவந்திருக்கும் பதினொரு சிறுகதைகளின் ஊடாக என்.எஸ்.எம்மை காணலாம் என்றிருக்கிறேன். இவ்வாறே இனிவரும் எழுத்தாளர்களின் அறிமுகத்தையும் அவர்களின் படைப்புக்களின் ஊடாகவே  அறியத்தர முயற்சிக்கிறேன்.

உலகின் முதல் விண்வெளிப்பயணத்தை முன்னிறுத்தி அந்த பயணம் மலையக மக்கள் மத்தியில் ஏற்படுத்திய உணர்வலைகளை பிணைப்பித்து நகர்வதாக ‘நிலவைப் பிடித்து’ சிறுகதை அமைந்திருக்கும்.  இந்த கதையின் மூல கதாப்பாத்திரமான வேலு இறை சிந்தனை மிகுந்தவனாகவும்  கற்பனைகளுக்கு எட்டாதவைகளை தன் சிந்தனைக்கு எட்டாவுயரத்தில் வைத்துக்கொள்ளக் கூடியவனாக சித்திரிக்கப்பட்டிருப்பார். இப்படிப்பட்ட ஒரு பாத்திரம் கற்பனைக்கு எட்டாத நிலவை தொட்டிருக்கும் உலக நிலவரத்தை அதன் முன்னேற்றத்தை எப்படி உணர முற்பட்டிருப்பான்  என்பதுதான் கதையின் கரு.

விண்வெளி பயணத்தையும் அங்கு கால் பதிப்பகத்தின் சாத்தியப்பாட்டின் நிலையின்மையை எப்படி எல்லாம் மலைநாட்டில் அப்போது இருந்த  வயதானவர்கள் ஏற்றிருப்பார்கள் அல்லது கற்பனை செய்திருக்கக்கூடும் என்பதை வேலு என்ற கதாப்பாத்திரத்தின் ஊடாக காட்ட முனைந்திருப்பதன் ஊடே ஒட்டுமொத்த மலையக மக்களையும் காட்ட முனைந்திருப்பார். மேலும் அவற்றின் ஊடாக மலையக மக்களின் உலக அரசியல் அறிவையும் பொருளாதார நவீன போக்குகளையும் வெளிக்காட்ட முற்பட்டிருப்பார்.  வேலுவின் பாத்திரத்தின் ஊடே ஒட்டு மொத்த மலையக மக்களின் மனங்களையும் அவர்களின் வெள்ளாவி வெகுளித்தனத்தையும் தொட்டிருக்க முயன்றிருப்பார்.  என்.எஸ். எம்மின் நவீனத்துவத்துக்கான அறிவும் அதை தன் மண்சார்ந்த மக்களோடு ஒப்பீடுகளை செய்வது அந்த ஒப்பீடுகளை நேர்த்தியான நுட்பத்தில் நகர்த்துவதும் தனிக் கலையழகுக்குரியது. இந்த கதையின் மூலம் இனி மலையக சமூகம் எப்படியான மாறுதல்களை சந்திக்க வேண்டும் என்பதோடு இளைய சமூகத்தினரின் அறிவுவெளியை காட்டமுனைத்திருப்பார்.

 

என் எஸ்.எம்.இராமையா மலையக மக்களை காட்ட முனைந்திருக்கும் போதெல்லாம் இயல்புக்கு எட்டாத கற்பனைக்கு ஒட்டாத எதையுமே கதைகளுக்குள் கொண்டுவந்ததில்லை அந்த மனநிலைக்கு  ‘வேட்கை’ சிறுகதை  நல்லதொரு எடுத்துக்காட்டு. மின்சாரம் தோட்டப்புறங்களில் வந்து சேராத காலங்களில் விஷேட வீடுகளிலும்  மரண வீடுகளில் எரியும் கேஸ்லைட்டை மையப்படுத்திய கதை. உண்மையில் கேஸ்லைட்  எரிக்கப்படும் சந்தர்ப்பம் என்பது எந்த வயதெல்லையினருக்கும் கொண்டாட்டமான அனுபவம் தோட்டப்புறங்களில். அந்த கொண்டாட்ட மனநிலையை மையப்படுத்திய கதைதான் வேட்கை. ஒரு கிழவனின் நீண்ட நாட் கனவு எப்படியாவது தன் வீட்டில் கேஸ்லைட் வாங்க வேண்டும் என்பதும் அதற்கான வேட்கையில் அவன் செய்ய முனையும் வீட்டுத் தோட்டமும் அதனூடே உடையும் அவன் கனவும் நேர்த்தியாக காட்டியிருப்பார். ‘பகல் சரியும் பொழுதொன்றில் லயமே இருண்டிருக்கும் அந்த ஒற்றை வீட்டில் மட்டும் ஆச்சரியம் தரும் வெளிச்சம்’ இப்படிதான் அந்த கதை ஆரம்பிக்கும் அவ்வளவு அழகு அந்த கதை அதில் தோட்டப்புற மக்களின் இயலாமை அவர்களின் அபிலாஷைகளை காட்டியிருப்பார். இந்த சிறுகதை“அக்கறை இலக்கியம்” என்ற நூலிலும் மஞ்சரி என்ற
சஞ்சிகையிலும்  மறு பிரசுரம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. ‘ஒரு கூடைக் கொழுந்து’ சிறுகதையாக இருக்கட்டும் (உயர்தர பாடப்பரப்பில் இந்த சிறுகதை இடம்பெற்றிருக்கிறது)  மற்றும் ‘எங்கோ ஒரு தவறு’ இந்த சிறுகதைகளின் மலையக பெண்கள் சார்ந்தும் அவர்களுக்காக விழிப்புணர்வும் விழிப்பும் முற்போக்கு சிந்தனைகளும் எப்படி இருக்க வேண்டும் என்பதை காட்டியிருப்பார். இன்று இருக்கக் கூடிய மலையக ஆர்வலர்களும் புத்தி ஜீவிகளும் பெண்கள் எப்படி   இருக்க வேண்டும் என்பதற்கான எதிர்ப்பார்ப்பை அன்றே என்.எஸ்.எம் விதைத்திருக்கிறார். பெண்களை அவர் காட்ட முனைந்திருக்கும் எல்லா இடங்களிலுமே அவர்களை கௌரவப்படுத்துவதாகவோ அல்லது அவர்களிடம் இருந்து சமூகம் எதிர்ப்பார்க்க வேண்டியதை நிழல் படமாக காட்டுவதாகவோ அமைந்திருக்கும்.

‘கோயில்’ சிறுகதை ஒரு குகையை மையப்படுத்தியதாக இருக்கும் அந்த குகைதான் ‘லயம்’. இந்த கதை எந்த பின்புலத்தில் அல்லது என்ன மனநிலையில் என்.எஸ்.எம் எழுதினாரோ என்பதை தேடுவதை தாண்டி  ‘லயம்’ எப்போதுமே எங்கள் பாரம்பரியங்களில் ஒன்று, அவை என்றும் மதிக்கப்பட வேண்டியது. லயம் என்பது என்றுவரை இருக்கிறதோ அதுவரை அதன் இருப்பும் ஈரமும் இருந்து கொண்டே இருக்கும் என்று இன்று பேசப்படுகிற எல்லா முற்போக்குக்கும் வித்திட்டவர் என்.எஸ்.எம் தான். இந்த சிறுகதையில் இடம்பெற்றிருக்கும் குகையை காட்ட முனைந்திருக்கும் ஆசிரியர் ‘அதை குகை என்று சொல்லமுடியாது. இரண்டு கற்களுக்குமேல் மல்லாந்துபடுத்தாற்போல ஒரு பாறை. உள்ளே இரண்டு மூன்று பேர் நீட்டிப் படுக்கலாம். அல்லது முழங்காலைக் காட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கலாம் எழும்பினால் தலை ‘ணங்’ கென்று இடிபடும் உயரம்’  என்பார் இந்த வர்ணனைகள் லயத்து வாழ்க்கையோடு அச்சு அசலாக பொருந்துகிறது. அந்தக் கதையை இப்படித்தான் முடித்திருப்பார் ‘இதைக் குகை என்டு எப்படிச் சொல்வது’.

இவர் கொண்டுவர முயன்றிருக்கும் அன்றாடம் என்பது மிக சாதாரணமானது. அர்த்தமான கனவுகளையும் சிந்தனைகளையும் நிறைவாகக் கொண்டது. இவருடைய ஒவ்வொரு கதைகளும் தனித்துவமானவை. அந்த ஒவ்வொரு கதையிலும் அவரின் உழைப்பு சொல்லமுடியாத வார்த்தைகள். அந்த உழைப்புக்கான சன்மானமாக 1980 ஆண்டிற்கான சாகித்திய விருதினை முன்னாள் அமைச்சர் செல்லையா ராஜதுரை வழங்கி கௌரவித்தார். உண்மையில் மலையக சிறுகதைகளில் இவர் புரிந்த சாதனைக்கும் அதன் உழைப்புக்கும் இந்த விருது என்பது வெறும் வெறும் போதாமை மட்டும்தான். அதெல்லாம் தான் மக்கள் மீதான ஈர்ப்பும் அதன் ஊடே அவருக்கு கிடைத்த சன்மானம் எல்லாவற்றிலும் அளப்பரியது. அதுவே அவருடைய ஒரு கூடைக் கொழுந்து வெளியீடு பதுளை மண்ணில் இடம்பெற்றபோது கிடைத்தது. மிகவும் கோலாகலமாக இடம்பெற்ற அந்த நிகழ்வில் பலநூறு பேர் கலந்து கொண்டிருந்ததோடு, அன்றைய நிகழ்வு ஒரு கோலாகல திருவிழா போல அமைந்திருந்ததும், அன்றிருந்த ஒட்டுமொத்த  மலையக இலக்கிய ஆளுமைகளும் அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. முன்னாள் இந்து சமய இராஜாங்க அமைச்சர் பி.பி தேவராஜ் இவர் மீதும் இவரின் படைப்புக்கள் மீதும் தீராத அன்பும் அக்கறையும் கொண்டவர் என்பதோடு அவரின் சுகதுக்கங்களில் எப்போதுமே பங்குதாரராக இருந்திருக்கிறார்.

அண்மைய காலங்களில் மலையக இலக்கிய கலாசாரத்தில் நிகழ்நிலை கலந்துரையாடல்கள் அன்றாடம் நிகழ்ந்து வருகிறது. வரிசையாக பாரதியை பற்றி பேசவும் சி.வி பற்றியும் பேசத் தயாராக இருக்கிறோம். நாங்கள் இதுவரை எவருமே எழுத முயலாத அளவுக்கு மிகவும் காத்திரமாக புனைவுகளை தந்திருக்கும் என்.எஸ்.எம்.பற்றி பேச முயல்வதோடு அவருடைய படைப்புக்கள் குறித்தான காத்திரமான விமர்சனங்களும் ஆய்வுகளும் தேடல்களும் மிகவும் அவசியமாகப்படுகிறது.

என்.எஸ்.எம். இராமையாவின் படைப்புக்களை அறிமுகப்படுத்துவதில் முன்னின்று உழைத்தவர்களுள் பேராசான் மு.நித்தியானந்தனின் பணி அளப்பரியது. என்.எஸ்.எம்மின் சிறுகதைகளை சேகரித்தது மட்டுமின்றி அந்த கதைகளை தொகுத்து ‘ஒரு கூடைக் கொழுந்து’ என்ற சிறுகதை தொகுப்பாக இலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது. ‘ஒரு கூடைக் கொழுந்தை’ அச்சிட்டு புத்தக வடிவம் கொடுத்தப்பின் அதன் முதல் பிரதியை எடுத்து கொண்டு மு.நித்தியானந்தன் என்.எஸ்.எம் வேலை செய்து வந்த ஆமர் வீதியிலுள்ள இரும்பு கடைக்கு சென்று உங்கள் புத்தகம் வெளிவந்திருக்கிறது. இதோ என்று பார்சலை கொடுத்தாராம் பார்சலை கைக்கு எடுத்த உடனே முதலாளியிடம் இருந்து அழைப்பொன்று வந்ததாம் உடனே புத்தகத்தை மேசை லாச்சுக்குள் வைத்து விட்டு அந்த பெரிய பொருட்கள் கொண்ட பட்டியலை மொத்தமாக செட்டில் செய்துவிட்டு வந்துதான் புத்தகத்தை கையில் எடுத்தாராம். அதுவரை மு.நித்தியானந்தன் அங்கு பொறுமையாக காத்திருந்ததாகவும் அதன் பின் ‘ஒரு கூடைக் கொழுந்து’  தொகுப்பை பார்த்து என்.எஸ். எம் மகிழ்ந்து பூரித்ததையும் இன்றும் மு.நித்திதானந்தன் சொல்லி மகிழ்கிறார். புத்தகம் முழுவடிவம் பெரும் வரை என்.எஸ்.எம்முக்கு தன் புத்தகம் குறித்து எந்த தகவல்களும் தெரியாதாம் என்பதன் ஊடாக பேராசிரியர் என்.எஸ்.எம்மின் படைப்புக்களின் மீது வைத்திருந்த நம்பிக்கையும் அதன் ஊடே அவர் மலையக இலக்கியப் பரப்பிற்கும் செய்த பணி என்றென்றும் மனங்கொள்ளத்தக்கது.

என்.எஸ்.எம். இராமையாவின் மறைவுக்கு பின் ஐரோப்பாவில் அவர் பெயரில் குறிப்பிட்டளவு நிதியை சேகரித்து திருமதி இராமையாவிடம் கொடுத்துதவியதாக அறியக்கிடைக்கிறது. மேலும் என்.ஸ்.எம்மின் ‘ஒரு கூடைக் கொழுந்து’ சிறுகதை தொகுப்பை எச்.எச். விக்ரமசிங்கவின் ஒத்துழைப்புடன் குமரன் பதிப்பகத்தின் 1000 பிரதிகள் அச்சிட்டு வெளியீடு செய்ய உத்தேசித்து அச்சிக்கு வந்த போதும் இடைநடுவில் குமரன் பதிப்பகம் மூடப்பட்டதன் விளைவாக அவையும் கிடப்பில் போடப்பட்டதாக அறிய முடிகிறது.
எது எப்படியோ மலையக சிறுகதை உலகின் தனித்து ஆளுமையாகவும் அருமையான கதை சொல்லியாகவும் இருந்த என்.எஸ்.எம்மின் சிறுகதைகள் மீண்டும் பேசப்படுதல் வேண்டும் என்பதோடு அவை குறித்தான ஆய்வுகளும் மீள் தேடல்களும் ஆவனப்படுத்தல்களும் அவசியமாக்கப்பட்டுள்ளன. மேலும் என்.எஸ்.எம் ராமையாவை இன்று இலக்கிய இயக்கத்தில் இருக்கும் இளம் சந்ததியினருக்கு கொண்டு சேர்ப்பதோடு வேறு மொழிகளில் மொழிபெயர்ப்புக்கு உள்ளாக்கப்படுவதன் ஊடே மலையக இலக்கிய செல்நெறிகளின் கதை சொல்லுதலின் தரத்தையும், மக்களின் வாழ்வியலின் போக்குகளின் நிலமைகளையும் வெளிக்கொணரக்கூடியதாக இருக்கும் என்பது மனங்கொள்ளத்தக்கது.

***

-ரமேஷ்

Please follow and like us:

2 thoughts on “மலையக இலக்கியத்தில் சிறுகதை முன்னோடி என்.எஸ்.எம் ராமையா

  1. காத்திரமான தொடக்கம்
    இன்னறய இலக்கியத் தளத்திலே இவ்வாறானதொரு முன்னெடுப்பு மலையக எழுத்தாளர்கள் குறித்தான உலகப்பரவலை விரிவாக்கம் செய்யக்கூடிய ஒரு முயற்சியாக இந்த தொடர் அமையப்போகின்றது. முதல் அறிமுகப்படுத்துதல் என்றாலும் ரமேஸின் தேடலும் தெளிவுகளும் அகலமானது.தொடர்ந்து நீங்கள் பயணிக்கும் அந்தப்பாதையில் நானும் நடக்கப்போகின்றேன்.உங்களின் முன்மொழிவுகளை கடந்து செல்லும் போது ஒருவித புதினம் எனக்குள் தோன்றுகின்றதையும் மறுக்க இயலாது. வனத்திற்கும் நன்றிகள்..

  2. மலையகத்தில் எழுத்தாளர்கள் இருந்தார்களா? என்று கேட்கும் அளவுக்கு
    நிலைமை மோசமாக உள்ளது. அந்த வகையில் உங்கள் கட்டுரை தொடர் மிக முக்கியமானது ரமேஷ். தொடர்ந்து எழுதுங்கள். இந்த படைப்புகள் எங்கும் வாங்க கிடைக்கிறதா? எப்படி பெற்று கொள்வது என்றும் அறியத் தாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *