பொதுவாக மலையக இலக்கிய வரன்முறைகளின் கால அளவை அல்லது அதன் வளர்ச்சி படிநிலைகளை மூன்று கால கட்டங்களாக பிரிப்பவர்கள் உண்டு. கோ.நடேசையர் காலம் முதல் கால கட்டம் எனவும்  சி.வி. யின் காலத்தை இரண்டாம் கால கட்டம் எனவும் சாரல் நாடன் தொட்டு இதுவரையான காலத்தை  மூன்றாம் காலக்கட்டம் என்றும் பிரிப்பவர் உண்டு. உண்மையில் இவை அங்கீகரிக்கப்பட்ட அல்லது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட, அறியப்பட்ட கால வரையறையாக இல்லாவிட்டாலும் இந்த ஒவ்வொரு இலக்கிய ஆளுமைகளை முன்னிறுத்தி மலையக இலக்கிய வளர்ச்சிப் பரிணாமத்தை நிச்சயம் வகைப்படுத்துதலே ஆரோக்கியமானதாகவும் நியாயமானதாகவும் இருக்கும். இப்படியான வகைப்படுத்தல்கள் உலக இலக்கிய கலாசாரத்துக்குள்ளும் இயல்பாக இருக்கும் ஒரு போக்குடைமை என்பது யாவரும் அறிந்தது. மேலும் மேற்சொன்ன காலவரையறையும் அதற்குள் உழைத்திருக்கும் அவர்கள் ஒவ்வொருவரின் உழைப்பும் மிகவும் அபரிமிதமாக இருந்து வந்திருப்பது காலம் தந்த அறிவு. அந்த அடிப்படையில் மலையக இலக்கிய செல்நெறிகளில் கோ. நடேசய்யர், சி.வி யை விட மலையக இலக்கிய கலாசாரத்துக்குள் பலதரப்பட்ட இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டவர்களில் முதன்மையானவராக  திரு சாரல் நாடனை சொல்வேன். எஸ் நல்லையா என்ற இயற்பெயர் கொண்ட சாரல் நாடன் அரசியலில் மேற்சொன்ன இருவரை விட  ஈடுபாடு குறைவென்ற போதிலும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் முன்னின்று செயற்பட்டவராக இருந்திருக்கிறார்.

1944 ஆம் ஆண்டு மே மாதம் ஒன்பதாம் திகதி மஸ்கெலியா சாமிமலை சிங்காரவத்தை தோட்டத்தை பிறப்பிடமாக கொண்ட சாரல் நாடனின் குடும்பத்தில்  மொத்தம் ஐவரில் இவர் கடைக்குட்டி. அப்பா சிங்காரவத்தையில் பெரிய கணக்குப்பிள்ளையாக இருந்த அதே நேரம் பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளுக்கு வசதிகளையும் வாய்ப்புக்களையும் ஏற்படுத்தி கொடுப்பதில் முன்னின்று உழைத்தார். சாரல் நாடன் தன் ஆரம்பக்கல்வியை சிங்காரவத்தை மின்னா பாடசாலையில் கற்றபின் தொடர்ந்து ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் உயர்தரம் வரை கற்றார்.  சாமிமலை என்ற மிகவும் பின்தள்ளப்பட்ட போக்குவரத்து வசதிகளை குறைந்த  சூழமைவுகளை  கொண்ட பகுதியில் இருந்து ஹட்டனின் பிரபலமான  பாடசாலையில் கற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்ததில் தன் தந்தையோடு கொட்டியாகல தோட்டத்தில் கணக்குப்பிள்ளையாக இருந்த சாரல் நாடனின் மனைவியின் தந்தையும் ஒத்துழைத்தமை குறிப்பிடத்தக்க அதே நேரம் சாரல் நாடனின் அத்தையை தான், சாரல் நாடனின்  மனைவியின் தந்தை திருமணம் முடித்து கொண்டதோடு சாரல் நாடனும்  அத்தையின் மகளான தன் முறை பெண்ணையே மணம் செய்து கொண்டார் அவரின் குடும்ப பின்னணி. சின்னதில் இருந்தே இருவருக்கும் வீட்டாரால்  நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பதோடு இருவரின் திருமணமும் காதல் திருமணமாகவும் மலர்ந்திருந்தது. இந்த காதல் தான் தன் கணவனின் முழுமையான இலக்கிய முயற்சிக்கு அளப்பரிய பங்காற்றியது. அந்த பங்களிப்புதான் தன் கணவனின் ஆய்வு நடவடிக்கைக்காக தென்னிந்தியாவிற்கு சென்றெல்லாம் தன் அன்பானவனுக்கு தகவல்களை சேகரித்து ஆதாரங்களை திரட்டியும் வந்து சேர்க்கத்தூண்டியது. இப்போது சாரல் நாடனின் துணைவியாரிடம் பேசினாலும் சாரல் நாடனிடம் உரையாடலும் அனுபவத்தை தரக்கூடிய ஆதாரங்களையும் அவர் சார்ந்த தகவல்களையும் அதன் உள்ளடக்கங்களையும் தாராளமாக தரக்கூடிய அன்பை கொண்டவர். ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் மிகவும் சிரமமாகவும் ஆர்வமற்ற நிலையில் கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்த சாரல் நாடன் தொடர்ந்து வந்த வகுப்புக்களில் ஆர்வமுடன் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டதோடு வகுப்பில் முதல் மாணவனாக வந்து கொண்டிருந்தார்.  பாடசாலை காலத்திலேயே வகுப்பு மட்டும் பாடசாலை மட்டங்களில் நடைபெற்ற கையெழுத்து சஞ்சிகைகளில் அதிக ஆர்வத்தோடு எழுத ஆரம்பித்ததோடு அவற்றுக்கான தேடலையும் தன் வாசிப்பின் விஸ்தரிப்பில் ஏற்படுத்தி கொண்டார். ஆரம்பத்தில் இவரின் கையேட்டு பிரதிகளிலும் பாடசாலை சஞ்சிகைகளிலும் அதிக கவிதைகளில் ஆரம்பித்திருந்த போதும் நாவல்கள்,சிறுகதைகள்,ஆய்வு கட்டுரைகள் என பல்துறை சார்ந்த இலக்கியங்களையும் கொடுத்திருக்கிறார்.

பாடசாலை கல்வியை முழுமையாக முடித்து கொண்டிருந்த போதும் தொடர்ந்து கற்றல் நடவடிக்கையை தொடரமுடியவில்லை. இவர் பாடசாலை கல்வியை முடிப்பதற்கும் அவருடைய தந்தை ரிடயர்ட் ஆனதும் சமகாலம் என்பதால் தொடர்ந்து அவரால் கற்றலை தொடர்ந்து மேற்கொள்ள முடியாத சூழ்நிலையில் வீட்டு பொறுப்புக்களை ஏற்கிறார். தன் தந்தைக்கு பொறுப்பு மிக்க பிள்ளையாக மனைவிக்கு அன்பான கணவனாக பிள்ளைகளுக்கு எப்போதுமே ஈரோவாக தன்னை நிலைநிறுத்தி கொண்டவர் சாரல் நாடன்.

ஆனாலும் இவருடைய பள்ளி காலத்தில் கோடிட்டு காட்டக்கூடிய சிலர் இவருடைய இலக்கிய பயணத்துக்கான தூண்டுதலுக்கும் துல்லியமான முளையமிடலுக்கும் காரணமாக இருந்திருக்கின்றனர். அவர்களுள் சாரல் நாடனின் குருவாகவும் அவரின் ஆழ்மன இலக்கிய ஆர்வத்துக்கான  முன்னோடியும் இரா.சிவலிங்கத்தை குறிப்பிடுவார். அதனால் தான் என்னவோ சாரல் நாடன் தன் குருவுக்கு சமர்ப்பணமாக  2010 ஆண்டு கொழும்பு  தமிழ்ச் சங்கத்தின் வெளியீடாக ‘இளைஞர் தளபதி இரா.சிவலிங்கம்’ என்ற நூலில் தன் ஆசிரியரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருந்ததோடு ஆசிரியர் பணியில், கலை இலக்கிய பணியில்,இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தில், தாயகம் திரும்பிய தமிழர்களின் மத்தியில்,கனவு காணும் சமூகம், மீண்டும் மலையகத்தில் என்ற தலைப்பின் கீழ் மேலும் நூலுக்குள் விபரிப்பாக  அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறார். அவ்வாறு அவர் எழுதியிருக்கும் ஒவ்வொரு அத்தியாயங்களிலும் தன் குருநாதர் மீதான ஈர்ப்பும் அவரின் சேவை மனப்பான்மையும் நிறைந்து வழிய அவைகளை ஒழுங்கமைத்திருப்பார். ஒவ்வொரு அத்தியாயங்களும் ஒரு  வகையில் பிரச்சார போக்குடையதாகவும் தீவிர புகழாரத் தொனியில் அவருடைய வாழ்க்கை வரலாற்றை சொல்லும் மொழிநடையும் அதன் தொகுப்பும் உள்ளடங்கி இருந்தாலும் அவை மிகவும் அவசியமாக தேவைப்படும் மனநிலையை வாசிக்கும் ஆரம்பத்திலேயே ஏற்படுத்தி விடுகிறது.

இரா.சிவலிங்கம் பற்றி பேராசிரியர் மு.நித்தியானந்தன் கூறுகையில் “ஆண்டாண்டு காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மனசாட்சியின் குரல் சிவலிங்கத்தின் குரலாகும். பரிகசிக்கப்பட்டு இழிந்துரைக்கப்பட்ட தன் சமூகத்தின்
மேன்மையைப் பாடுவேன் உறுதிபூண்ட குரல் அவருடைய குரல் அடிப்படை உரிமைகள் அனைத்துமே மறுதலிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் கைவிலங்கு ஒடிக்க முனைந்த வீராவேச குரல் அவருடைய குரல்” இப்படியான ஒரு புரட்சி வீரனுடைய செதுக்களில் ஒளியாக்கப்பட்ட விருட்சம் தான் சாரல் நாடன்  குருநாதர் போன்றே  வீச்சும் அவரை போன்ற ஆற்றலும் சமூக நோக்கும் சிந்தனையும் நிறைவாக அருளப்பெற்றவராக  அவருடைய எழுத்துக்கள் காணப்பட்டது.

இரா.சிவலிங்கத்தை தவிரவும் வாமதேவன், திருச்செந்தூர் போன்றோரும் இவரின் கல்வி மற்றும்  இலக்கியம் சார் பயணத்திற்கு பெரும் பங்காற்றியவர்களாக குறிப்பிட்டு சொல்லத்தக்கவர்கள்.தொடர்ந்து பாடசாலை கல்வியை முடித்து பெறுபேறு வரும் வரை சாரல் நாடன் கண்டி அசோகா தனியார் பாடசாலையில் ஆசிரியராக சிறிது காலம் சேவையாற்றினார். அசோகா வித்தியாலயத்தின் நிறுவனர் ராஜன் அறிமுகமும் தன் குரு நாதரின் வழிகாட்டலுடனான பரிந்துரையால் ஏற்பட்டிருந்தது. இதன் போது கண்டி சேனாநாயக நூலகம் மற்றும் இதர நூலகங்களில் நூல்களின் அனுபவத்தோடு தீவிரமான வாசிப்புக்கு பழகிக்கொண்டார். இந்த கால சூழலில் எண்ணிலடங்காத நூல்களை வாசிப்பனுபவமாக பெற்று  சாரல் நாடனின் இலக்கிய பயணத்துக்கு மிக முக்கியமான களமாக தடமாக கண்டி அசோகாவில் ஆசிரியராக வேலை செய்த காலம் அமைத்துகொண்டார். ஆர்வத்துடன் தன் கற்பித்தல் நடவடிக்கையை மேற்கொண்டாலும் தன் தந்தையின் ஓய்வுக்கு பின் தனது சொந்த ஊரிலேயே தொழில் செய்யும் கடப்பாட்டுக்கு உள்ளாகினார். பொதுவாகவே தோட்ட காரியாலயங்களில்  வேலைசெய்யும் அதிகாரிகளுக்கு தோட்டத்தால் தங்கி வாழ்வதற்காக கொடுக்கப்படும் விடுதிகள் நிரந்தரமற்றவைகள். அவர்கள் அங்கு வேலை செய்யும் வரை விடுதியில் வாழக்கூடியதாக இருந்தாலும் அதற்கு பின் அங்கிருந்து வெளியேற வேண்டிய தேவை ஏற்பட்டு விடுகிறது. அதே நிலைதான் சாரல் நாடனுக்கும் ஏற்பட அதுவே அவருக்கு பெரும் சுமையாகவும் அதே விடுதியில் தன் குடும்பத்தினரை வதியவைத்து  கொள்வதற்கான அவசியம் ஏற்பட்ட போதே அவர் தன் கல்வி தகைமைக்கும் குறைவான தகுதியை கொண்ட தோட்டத்து தொழிற்சாலையில் டீமேக்கராக தொழில் பயிற்சி பெறுகிறார். அதன் பெறுபேறாக சுமார் 32 வருடம் டீமேக்கராக தொழில் செய்ததோடு அதில் சுமார் 28 வருடங்கள் பூண்டுலோயா டன்சின் தோட்ட தொழிற்சாலையில் டீமேக்கராக அதன் உயர் பதவிகளை வகித்தார்.

அவர் தொழில் நிலையில் மிகுந்த கரிசனை காட்டியிருந்தாலும் தன் வாசிப்பிலும் தேடலிலும் எந்த இடத்திலும் தங்குதடை ஏற்பட்டதில்லை. அவை நதி போல ஓடிக்கொண்டே இருந்தது. 1963 இல் வேலைக்கு அமர்ந்த சாரல் நாடன் 2000 ம் ஆண்டு வரை தொழில் புரிந்த பின்  2000 ற்கு பிறகு முழு மூச்சுடன் இலக்கிய செயற்பாடுகளுக்கு தன்னை ஆட்படுத்தி கொண்டார். மேலும் இந்த காலப்பகுதியில் தொழில் சங்க நடவடிக்கைகளிலும் இவர் ஈடுபட்டிருந்தமையும் தன் தொழில் புரிந்த அமைப்பினரின் இஸ்டாப் யூனியன் தலைவராகவும் இருந்தமை கவனிக்கத்தக்கது.

இந்த ஈடுபாட்டின் மற்றும் செயற்பாடுகளின் விளைவே மலையக தொழிற் சங்க முன்னோடிகள் என அடையாளப்படுத்தப்படுகிற கோ. நடேசய்யர், சி.வி வேலுப்பிள்ளை தொடர்பான ஆய்வுகளையும் அவர் சார்ந்த சிந்தனை வெளிப்பாடுகளையும் அச்சிட்டு வெளியிட்டமைக்கு காரணமாக அமைந்திருக்கக்கூடும்.  சாரல் நாடன் எழுத்தாக்க முயற்சிகளில்  “பத்திரிகையாளர் கோ. நடேசய்யர்”  மலையக நிர்மாணச் சிற்பி கோ. நடேசய்யர்” இந்த புத்தகம் சிங்களத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளமை அடையாளப்படுத்தக்கூடியது. இவற்றோடு “தேசபக்தன் கோ.நடேசய்யர்” என்பன மிகவும் முக்கியமான நூல்கள் என்பதோடு  மலையக ஆய்வு முயற்சியிலும் சுயவாழ்வியல் பதிவிலும் அவதானத்துக்குரிய வெளியீடாக மதிக்கப்படுகின்றது. கோ.நடேசய்யர் பற்றிய இந்த மூன்று நூல்கள்தான் மலையக எழுத்தாளர்கள் கோ. நடேசய்யர் பற்றி எழுத அகரம் அமைத்து கொடுத்திருந்தது. 1988 இல் மலையக வெளியீட்டகத்தின் ஊடாக வெளிவந்த “தேசபக்தன் கோ.நடேசய்யர்” என்ற வாழ்க்கை வரலாறு புத்தகம் இரண்டாம் பதிப்பாக  குமரன் வெளியீடாக வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  கோ நடேசய்யர் மீது இவருக்கிருந்த ஆர்வமும் ஈடுபாட்டையும் இந்த வெளியீடுகளில் காணக்கிடைந்ததோடு கோ.நடேசய்யரை ‘தேசபக்தன்’ என்ற அடையில் விழிக்கவும் காரணமாக அமைந்திருந்தது. அந்த விழிப்பே இன்றுவரை நீடித்து நிலைத்திருக்கிறது. அவரையே மலையகம் தேசபக்தன் என்று முடி சூட்டிக்கொள்கிறது. இந்த இரண்டு வெளியீடுகளுக்கும் தேசிய சாகித்திய மண்டல பரிசுபெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இவருடைய சி.வி வேலுப்பிள்ளை பற்றிய 1986 இல் வெளிவந்த  ‘சி.வி சில சிந்தனைகள்’ என்ற நூலே சி.வி பற்றி மலையகத்தில் எழுதப்பட்ட முதல் அச்சுவடிவ முயற்சி என்பதோடு சாரல் நாடனின் முதல் வெளியி என்பது குறிப்பிடத்தக்கது. சாரல் நாடனின் இலக்கிய பயணத்திற்கு பின்னின்று  ஒத்துழைப்பு வழங்கியவர்களுள் சாரல் நாடனின் துணைவியார் திருமதி புஸ்பம் அம்மையாருக்கு பெரும் பங்குள்ளது. வாசிப்பு பழக்கமும் இலக்கிய ஆர்வமும் உள்ள அம்மையார் அவருடைய முதல் படைப்பு அச்சுரு பெறவும் சி.வி குறித்தான தகவலை சேகரிக்கவும் தென்னிந்தியா சென்றுவந்திருந்தமை இவ்விடத்தில் நினைவுக்கொள்ளத்தக்கது. மேலும் ‘சி.வி சில சிந்தனைகள்’ சி.வி பற்றியதான முழு விஸ்தரிப்பிலான பார்வை இல்லை என்பதோடு சில இடங்களில் சி.வி. குறித்தான தகவல்கள் புதுப்பித்தலும் இருத்தலின் தேவையும் வாசிக்கும் போது எற்படுவதுண்டு முழுமையான சி.வி பற்றிய தேடலுக்கான தூண்டுதலை இந்த படைப்பு ஏற்படுத்தும் அதே நேரம் மக்கள் “கவிமணி சி.வி வேலுப்பிள்ளை” என்ற பிரதி சி.வி குறித்தான மேற்சொன்ன போதாமையை நிறைப்பதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

சாரல் நாடனின் தேடல் முயற்சிகளில் “குறிஞ்சி தென்னவன் கவிசரங்கள்” என்ன மலையகத்தின் மூத்தக்கவி குறிஞ்சி தென்னவனின் கவிதைகளை தெரிந்து தொகுத்திருக்கின்றமை கணதியானது இந்த தொகுப்பு முயற்சியில் குறிஞ்சி தென்னவனின் கை எழுத்து பிரதிகளான கவிதைகள் சேகரித்து தொகுக்கப்பட்டுள்ளது இந்த தொகுப்பு முயற்சிக்காக சாகித்திய மண்டலபரிசு பெற்றுக்கொண்டமை நினைவில் கொள்ளத்தக்கது. சாரல் நாடனின் தொகுப்பு முயற்சிகளின் உச்சமானது இந்த முயற்சி.

மலையக இலக்கியங்கள் குறித்தான தெளிவான விளக்கமும் அறிவும் அதுசார்ந்த ஆய்வியல் ரீதியான ஆர்வமும் கொண்டிருந்த சாரல் நாடன் மலைநாட்டு மக்கள் பற்றியதான தேடலும் பன்நிலை ஆய்வறிவும் கொண்ட தரமான நிறைவான இலக்கிய படைப்புக்களை கொடுத்திருக்கிறார். அவற்றுள் மலையக மக்களின் வரலாற்று குறிப்பாக அமைந்த ‘மலையகத் தமிழர்கள்’, ‘மலையகத் தமிழர் வரலாறு’ போன்ற கட்டுரை நூல்கள் முக்கியமானதென்பதோடு ‘மலையகத் தமிழர் வரலாறு’ அதன் உள்ளடக்க உழைப்புக்காக தேசிய சாகித்திய மண்டலப்பரிசு பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ‘மலையகம் வளர்த்த தமிழ்’, ‘மலையக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும்’, ‘புதிய இலக்கிய உலகம்’ மற்றும் ‘மலையக வாய்மொழி இலக்கியம்’ என்பன மலையக இலக்கியம் சார்ந்த பிரவேசங்களை கொண்டது. இதில் வாய்மொழி இலக்கியங்கள் மேலோட்டமான, மிகவும் குறுகிய வாய்மொழி பாடல்களை கொண்டிருந்த போதும் அதற்கு பின் வந்த மலைநாட்டு மக்களின் வாய்மொழி இலக்கிய ஆய்வுக்கு முன்மாதிரியாக இருந்திருக்கும் என்பது திண்ணம்.இவற்றுள் ‘புதிய இலக்கிய உலகம்’ என்ற நூல் மலையகத்தில் இதுவரை காலம் மேற்கொள்ளப்பட்ட இலக்கிய முயற்சிகள் தொடர்பான அறிமுகத்தை தருகிறது. இவை அனைத்துமே மலையக மக்கள் மீதும் அவர்களின் இலக்கிய வெளிகள் மீதும் சாரல் நாடனுக்கு இருந்த ஈடுபாட்டைக் குறிக்கின்றது. மேற்சொன்ன நூல்கள் ஆய்வுகளாகவும் அனுபவ கட்டுரைகளாகவும் தொகுப்பு முயற்சிகளாகவும் அமைந்தவை.

சாரல் நாடன் கவிதைகள் தொகுப்பாக வெளிவராவிட்டாலும் அவரின் கவிதைகள் அனைத்துமே தேர்ந்த கவிஞனுக்கான கவிதை மொழி. அவை சொல்லி நிற்கும் உள்ளர்த்தங்களும் கனதியானது. ஆனால் அவை நூல் உருவம் பெறவில்லை என்பது துரதிஷ்ட வசமே அவரின் கவிதைகளில் சில துண்டங்கள்

‘நினைவெனும் மணற்பரப்பில்
நிகழ்வென்று அடியெடுத்தேன்
பனித்துளி கதிரைப் போல
பண்புடன் தொடர்பு கொண்டு
இனித்திடப் பேசி நின்றார்
இடர்தா புரிந்த தெல்லாம்
கனியினுள் விஷத்தை போல
கால்தபி சுவடா யிற்று’

இன்னொரு கவிதை ஒன்றில்

‘வானமெனும் கூரைமுட்ட
வளர்ந்து நிற்கும் மலைகளில்
மோனமுனி போல முற்றும்
துறந்து நிற்கும் மனிதனே

வாழ் வமைக்கும் மொழிவளத்தின்
வகையெதுவு மறித்திலை
தாழ்வகற்றும் கல்வி பேணும்
தகுந்த  வழி கண்டிலை’

போன்ற வரிகள் அவரின் கவி சொல்லும் ஆற்றலை எமக்கு காட்டியும் ஊட்டியும் விடுகிறது.

மேலும் சாரல் நாடன் புனைவிலக்கியத்திலும் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட இலக்கிய முன்னோடி என்பது குறிப்பிடத்தக்கது. ‘மலைக் கொழுத்தி’ என்ற சிறுகதை தொகுப்பையும் ‘பிணந்தின்னும் சாத்திரங்கள்’ என்ற குறுநாவல்கள் தொகுப்பையும் வெகுவிரைவில் வெளிவர காத்திருக்கும் நாவலையும் எழுதியிருப்பதில் இருந்து புலனாகும் மேற்சொன்ன சிறுகதை தொகுப்பிலும் குறுநாவல்களிலும் தரமான மற்றும் ஆரோக்கியமான கதை சொல்லியாக தன்னை நிலைநிறுத்தியிருக்கிறார். அவருடைய குறுநாவல்களின் தொகுப்பில் மொத்தம் நான்கு நாவல்கள் இடம்பெற்றுள்ளன அந்த நான்கு குறுநாவல்களுமே அவரின் டீமேக்கர் அனுபவமும் அதில் சாயம்பூசியிருக்கும் தொழிற்சங்க ஆதரவும் அவை தன் தொழில் துறைக்கு துணைவந்த விதம் குறித்தும் பேசியிருக்கிறது. இந்த குறுநாவல்கள் தனித் தனி கதைகள் அல்லது ஒவ்வொன்றுக்குமான இடைத்தொடர்பை கொண்டிருக்கிறது. அப்படி அவை இடைத்தொடர்பு கொண்டிருந்த போதும் கதைகள் ஒவ்வொன்றும் தனித் தனி கருவும் களமும் சூழமைவும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் மற்றைய படைப்புக்களான ‘சிந்தை அல்லும் சிவனொளிபாதமலை’ மற்றும் ‘லோறி முத்துகிருஷ்ணாவின்’ போன்ற இரண்டு நூல்களும் குறிப்பிடத்தக்கது இந்த இரண்டு புத்தகங்களில் முதல் நூல் சிவனொளி பாத மலைத்தொடர்பான ஒரு ஆய்வு நூலாகும். தல நூல் என்று சொல்லலாம் இந்நூலின் தமிழருக்கும் சிவனொளிபாத மலைக்கும் இடையிலான ஆதி தொன்மை பற்றியும் அங்கு தமிழர்களின் இருப்பின் நிலைப்பு பற்றியும் பேசியிருப்பார்.

இவ்வாறாக மலையகத்தின் மூன்றாம் கால கட்ட இலக்கிய ஆளுமைகளின் முன்னோடியாகவும் முதுபெரும் தூணாகவும் இதுவரை மலையக இலக்கிய கலாசாரத்தின் முக்கியத்துவம் மிக்கவரும் பல் மட்ட இலக்கிய அறிவும் ஆற்றலும்  ஆய்வு திறன் மிக்க சாரல் நாடன் மலையக இலக்கிய நிலைப்பில் மட்டும் அல்ல ஈழத்து இலக்கிய போக்கிலும் தவிர்க்க முடியாத ஆளுமை. மேலும் இந்த அறிமுகத்தின் நோக்கம் சாரல் நாடனின் அறிமுகத்தையும் அவரின் படைப்புக்களின் அறிமுகத்தையும் மிகவும் மேலோட்டமாக  செய்திருப்பதோடு இன்றைய தலைமுறையினருக்கும் அவரின் இலக்கிய செயற்பாடுகளின் முக்கியத்துவத்தை அறிமுகப்படுத்தலே நோக்கமாகும். சாரல் நாடனின் ஒட்டுமொத்த படைப்புக்களும் இன்னும் தீவிரமாக ஆய்வுக்கோ அறிமுகத்துக்கோ தேடலுக்கோ உட்படுத்தப்பட வேண்டும் என்பதே இந்த கட்டுரையின் மூலம்.

***

-ரமேஷ்

Please follow and like us:

1 thought on “மலையக இலக்கிய கலாச்சாரத்தின் பல்துறை ஆளுமை – சாரல் நாடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *