கடற்கரையில் ஒரு நாள் இரண்டு சிறுமிகள் கம்பீரமாக நடந்துபோகும் காட்சி என் கண்ணில்பட்டது.  அவர்களைச் சிறுமிகள் என்று சொல்லமுடியாது. இரு இளம்பெண்கள், அரிவையர். இரண்டு கடற்பறவைகள் சிறகு விரித்துப் பறப்பதற்குத் தயாராவது போலிருந்தது அந்தக் காட்சி. அவர்களுடைய தோற்றம், இறுமாப்பு, அவசரமற்ற நடை இவற்றை வைத்து நான் அடிக்கடி இங்கு சந்திக்க வாய்ப்பற்ற இரண்டு அயல்நாட்டில்கள் என்று அவர்களை நினைத்துவிட்டேன். யாரையும் நிமிர்ந்து பார்க்காத அவர்கள் என்னையும் கவனிக்கவில்லை. அதன் பிறகு வந்த சில நாட்களிலும் அவர்களை நான் எங்கும் பார்க்க முடியவில்லை. ஒரே விதமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு, அதே எளிய கடற்கரை விளையாட்டுகளை விளையாடுவதற்காக ஒரு நாளில் நான்கு முறை சந்தித்துக் கொண்டு, எல்லோருக்கும் எல்லோரையும் தெரிந்திருந்த எங்கள் ஊரைக் கடந்து சென்ற பயணிகள் அவர்கள் என்கிற என் யூகம் சரியே என நினைத்துக் கொண்டேன். இது நடந்து பல நாட்களுக்குப் பிறகு இதே ரீதியில்  ஐந்தாறு பெண்கள் கடற்கரை அருகே நிறுத்தப்பட்டிருந்த கவர்ச்சியான  குதிரை வண்டி ஒன்றைச் சுற்றி நின்றிருந்ததைப் பார்த்தேன். வண்டிக்குள் இருந்தவர்கள் வெளியே நின்றிருந்தவர்களைப் பார்த்துக் கையசைத்து விடைபெற்றனர்.  வெளியே நின்றிருந்தவர்கள் அருகே கட்டப்பட்டிருந்த குதிரைகளை நோக்கி வேகமாகச் சென்று அதில் ஏறிப் போய்விட்டனர்.  நான் கடற்கரையில் அன்று பார்த்த இரண்டு பெண்களில் ஒருத்தி அங்கிருந்தாள். நான் அவளை அடையாளம் கண்டுகொண்டாலும் அது நிச்சயமாக அவள் தானா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் இந்த முறை என் கவனத்தைத் கவர்ந்தவள் செந்நிறத் தலைமுடியுடன் இருந்தாள். என் மீது நிலைத்த அவளுடைய மேட்டிமையான கண்கள் வெளிர் நிறத்தில் இருந்தன. அவள், காற்றில் லேசாக நடுங்கும் நாசித் துவாரங்களுடனும், சீகல் எனும் கடற்பறவையின் விரிசிறகுகள் காற்றில் படபடப்பது போன்று அவளுடைய கற்றைக் குழலை மென்மையாகக் கலைத்துக் கொண்டிருந்த தொப்பியுடனும் காணப்பட்டாள். பிறகு அவர்கள் அங்கிருந்து போய்விட்டனர்.
அதன் பிறகு அவர்களை அடிக்கடி நான் பார்க்க நேர்ந்தது. அதில் நான் அடையாளம் கண்டுகொண்ட இருவரை நான் மீண்டும் பார்க்க விரும்பினேன். சில சமயங்களில் விநோதப் போக்குடைய அந்தக் குழுவை நான் கடக்கும்போது அந்த இருவர் அதில் இல்லாமல் இருந்தது எனக்கு துயரளித்தது. ஆனால் அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் அல்லது என்ன நேரத்திற்கு அங்கு இருப்பார்கள் என்பதையெல்லாம் என்னால் எப்போதுமே முன்கூட்டிக் கணிக்க இயலவில்லை. ஒன்று, நான் அவர்களைப் பார்ப்பதற்காக ஏங்கினேன் அல்லது அவர்கள் எதிர்பாராதவிதமாக என் கண்ணில்பட்டபோது அதற்காக மகிழ்ச்சியடைய முடியாத அளவுக்கு நான் மிகப் படபடப்பாக  இருந்தேன். வருடத்தில் பல வாரங்களை அரண்மனை போன்ற பண்ணை வீடுகளில் கழிக்கும் இயல்புடைய உள்ளூர் மேட்டுக் குடியினராகவோ, உயர்குடியினராகவோ, உயர்குடியினரோடு சொந்தக் கொண்டாடிய பெரும் செல்வந்தக் குடும்பத்தினரின் மகள்களாகவோ அல்லது உடன் பிறந்தவரின் மகள்களாகவோ அவர்கள் இருக்கலாம். கடற்கரையில் இருந்து மிகச் சில கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்த இத்தகைய அரண்மனை வீடுகளில் இருந்த அவர்களில் சிலர்,  இந்த நகரத்தில் வசிக்காவிட்டாலும் கூட இந்தப் பருவகாலத்தில் அடிக்கடி கடற்கரைக்கு வந்தனர். அதிலிருந்த அனைவரின் வாழ்க்கைச் சூழலும் அவ்வளவு நேர்த்தியானதாக இல்லாவிட்டாலும், தற்செயலாக அமைந்துவிட்ட இந்தப் பெண்கள் குழு அப் பெண்கள் அனைவரின் மீதும் ஒரு விதமான மென்னழகு, நேர்த்தி, துறுதுறுப்பு, வெறுக்கத்தக்க ஒரு பெருமிதம் ஆகியவற்றை நிச்சயமாக வழங்கியிருந்தது. இதன் காரணமாக, என்னுடைய உலகத்தைச் சேர்ந்த பெண்களில் இருந்து முழுக்க வேறுபட்ட உயிரினங்களாக அவர்களை ஆக்கியது. என்னால் வகைப்படுத்தமுடியாத  விசித்திரமான ஒரு முறையில் அவர்கள் உடை உடுத்தினர். ஒருவேளை அதற்கான மிக எளிய காரணம், அவர்கள் தம் பெரும்பான்மையான நேரத்தை குதிரையேற்றம், கோல்ஃப், டென்னிஸ் என என் நண்பர்களுக்குப் பழக்கமற்ற விளையாட்டுகளில் ஈடுபட்டதன் விளைவாக இருக்கலாம்.
குதிரையேற்றத்தின் போது அணியப்படும் ஸ்கர்ட்டுகள், அல்லது கோல்ஃப் விளையாடுகையில் அணியும் உடைகள், டென்னிஸ் சட்டைகள் ஆகியவற்றையே அப் பெண்கள் வழக்கமாக அணிந்தனர். அவர்கள் இந்த விளையாட்டுகளை கடற்கரையிலிருந்து வெகுதொலைவில் விளையாடிவிட்டு எப்போதாவது மட்டுமே கடற்கரைக்கு வந்தனர் என்று தோன்றியது. அவர்கள் அங்கு வரும் அந்த நேர அட்டவணை எனக்குத் தெரிந்திருக்கவில்லை. உதாரணத்திற்கு, அரண்மனை வீடுகளில் நடன நிகழ்ச்சியேதும் இல்லாத நாட்களில் கோல்ஃப் விளையாடிவிட்டு இங்கு வருகின்றனர் போலிருக்கிறது. அப்படி வரும்போது அங்கு சிறிது நேரம் மட்டுமே இருந்தனர். அது, தாம் கைப்பற்றிய நாட்டைப் பார்வையிடுகிற செருக்கோடு, பல காலமாக அங்கு வாழ்ந்த மக்களை இறுமாப்புடனும் அப்பட்டமான மரியாதைக் குறைவுடனும் பார்த்து, “உங்களுக்கு எங்களுடைய உலகில் இடமில்லை” என்று கூறுவது போலிருந்தது. சில சமயங்களில் அதை மறைக்கக் கூட முயலாமல் ‌தங்களுக்குள் ஒரு குறுஞ்சிரிப்பைப் பரிமாறிக் கொண்டனர். அது,
” அவர்களைப் பாரேன்” என்கிற எள்ளலாகத் தோற்றங்காட்டியது.
எங்களுடைய நீண்ட கால நண்பரான திரு.டி அந்தப் பெண்களின் மோசமான நடத்தை குறித்துத் தொடர்ந்து கடுமையாகப் பேசிக் கொண்டிருந்தார். என் அம்மாவோ இதைப் பற்றி கண்டுகொள்ளவே இல்லை. தமக்கு முன்பின் அறிமுகமற்ற ஒருவரைப் பற்றி சிந்திப்பதிலும் அவர்கள் பணிவாக நடந்துகொள்கிறார்களா என்று கேள்வியெழுப்புவதிலும் யாராவது தன் நேரத்தை விரயம் செய்வார்களா என்று பெரும்பாலான புத்திசாலிகளைப் போல அவளும் ஆச்சரியப்பட்டாள். அந்தப் பெண்களைப் பண்பற்ற நடத்தையுள்ளர்கள் என்றே அவளும் கருதினாள். ஆனால் தன்னைப் பற்றிய அவர்களுடைய கருத்து என்னவாக இருக்கும் என்பதைக் குறித்து அவள் கொஞ்சமும் கவலைப்படவில்லை. அம்மாவின் இந்த தத்துவ விசாரத்தை நான் ஏற்கவில்லை என்பதை நான் நேர்மையுடன் சொல்லியாகவேண்டும். எனக்கு அந்தப் பெண்களைத் தெரியும் என்று நான் சொல்லிக் கொள்ளக் கூட வேண்டாம், அவர்களுக்கு என்னைப் பற்றி ஒரு உயர்ந்த எண்ணம் உருவாக வேண்டும் என்று, நான் பெரிதும் விரும்பினேன். என்னுடைய மாமா கிளேர்மாண்ட் பிரபுவின் உற்ற நண்பன் என்பது மட்டும் அவர்களுக்குத் தெரிந்திருந்தால், அம்மா கடற்காற்றை விரும்பாமல் இருந்திருந்தால் நாங்கள் இந்நேரம் கிளேர்மோண்டில் இருந்திருப்போம். ஏனெனில் தன்னுடைய அரண்மனையில் வந்து தங்குமாறு பிரபு எங்களை அழைத்திருந்தார். அய்யகோ! ‘பிரபு இங்கு வருகை புரிந்து சில நாட்கள் தங்கியிருந்து என்னை அவர்களுக்கு அறிமுகப்படுத்தும் யோசனையில் இருக்கிறார் என்பதை யாராவது அவர்களுக்குச் சொல்லுங்கள்’ என்று ஒருவேளை என் முகத்தில் எழுதப்பட்டிருந்தால்! ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால் அப்படியே கிளேர்மாண்டின் பிரபுவே இங்கு வந்தாலும் கூட நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மோசமாக உடையணிந்த ஒரு வயோதிகன் என்றே அவர்கள்  கருதியிருப்பர். அவர்களுக்கு அவரைத் தெரியாது. அவருடைய பணிவை மிக எளிய மனிதன் என்பதற்கான ஒரு ஆதாரமாக நினைத்து அவர்கள் அவரை மேலும் கீழும் பார்த்திருப்பர்.   அவர்களோ தன்னை மிகப் பெரிய அறிவாளி என்று நம்பிக் கொண்டிருக்கிற, ஆனால் கிஞ்சித்தும் அவ்வாறில்லாத ஒரு உலகில் இருந்து  வருகிறார்கள். பிரபு தனக்கு அறிமுகமுள்ள மிகப் பணிவான ஒருவரை அங்கு வரவழைத்திருந்தாலும் கூட அந்த நபரால் அவர்களுடன் எப்படி எனக்குத்  தொடர்பேற்படுத்தித் தந்திருக்க முடியும் என்று எனக்குப் புரியவில்லை. அவர்களுடைய அப்பாக்கள் செல்வ  வணிகர்களாகவோ, மாகாணத்தின்   இளைய பிரபுவாகவோ, அல்லது  மிகச் சமீபத்தில் கோமகன் பட்டம் வழங்கப்பட்ட பெரு வணிகர்களாகவோ இருக்கலாம்.
திரு.டிக்கு அந்தப் பெண்கள் சிலரின் அப்பாக்களைத் தெரிந்திருந்தது. அவரைப் பொறுத்தவரை அதே பகுதியில் வசித்த அந்த அப்பாக்கள் மிகுந்த அறிவுத் திறம் பெற்றவர்கள்; அவர்கள் அனைவரும் தம் வாழ்வை ஒரே விதமாகத் துவக்கியிருந்தாலும்  இப்போது அவர்கள் அவரை விட அதிசிறப்பாக வாழ்கிறார்கள். அந்தப் பெண்களுடன் காணப்பட்ட சில ஆண்களுடன் திரு.டி நட்புடன் பேசிக் கொண்டிருப்பதை நான் இருமுறை பார்த்தேன். அந்த ஆண்கள் அவர்களுடைய உறவினராக இருக்கலாம். அவர்களுடன் என்னால் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள இயலாமல் போய்விட்டால்,  அவர்களுக்குத் தெரிந்த யாருடனாவது நான் இருப்பதையாவது அவர்கள் பார்த்தாகவேண்டும் என்ற எண்ணம் என்னுள் ஜுரம் போலப் பரவத் துவங்கியது.  (அவர்களுடைய முரட்டுத்தனமான நடத்தையைப் பற்றி திரு.டி சினத்துடன் குற்றம் கூறுவார் என்பது அப்போதுவரை எனக்குத் தெரிந்திருக்கவில்லை). திரு.டியுடன் ஒரு ஆழமான நட்புணர்வு திடீரென எனக்குள் எழுந்தது. ஏராளமான அன்பைப் பொழிந்து அவரைத் திக்குமுக்காட வைத்தேன். அவர் மிக கவனமாகப் பரிசீலனை செய்த பின்பே பணத்தைச் செலவழித்ததன் காரணமாக அவரால் இதுவரை வாங்க இயலாதிருந்த அருமையான புகைக்கும் குழாய் ஒன்றை அவருக்குப் பரிசளித்தேன். நான் எதற்குக் கேட்கிறேன் என்றே தெரியாமல் அம்மா இதற்கு அனுமதியளித்தார். ஒரு நாள் நான் அந்தப் பெண்களைக் கடற்கரையில் கண்டபோது, திரு.டியின் வீட்டுக்குச் சில அடி தூரத்தில் தான் இருந்தேன். ஆனால் நான் உடனே டி யின் வீட்டுக்குள் நுழைந்துவிடவில்லை. தலைமுடியை நேர்த்தியாக வாரிக்கொண்டு, என் அண்ணனுக்குச் சொந்தமான ஒரு வெளிர் சிவப்பு நிறக் கழுத்துப் பட்டையைக் கட்டிக் கொண்டு, என் கன்னத்தில் எழும்பிக் கொண்டிருந்த சிறு பருவின் மீது சிறிது பவுடர் பூசுவதற்காகப் பறந்துகட்டிக் கொண்டு என் வீட்டுக்குச் சென்றேன். அம்மாவிற்குச் சொந்தமான ஒரு குடையின் கைப்பிடியில் பதிக்கப்பட்டிருந்த பச்சை மாணிக்கக் கல், செல்வச் செழிப்பின் குறியீடு என்று எனக்குத் தோன்றியது.
“நாம் இருவரும் கடற்கரையில் ஒரு நடை போகலாமா, திரு.டி  அவர்களே?”
“ஏன் நண்பா?”
“எனக்கு உங்களை மிகப் பிடிக்கும். அத்துடன் கடற்கரையில் நடப்பதென்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும் விஷயம்”
“அப்படியா? சரி. உனக்கு அவ்வளவு விருப்பமெனில் நாம் போகலாம். ஆனால் நான் ஒரு கடிதத்தை எழுதி முடிக்கும்வரை காத்திரு” என்றார்.
கிளம்பும்போது என் கையிலிருந்த குடையைப் பார்த்துச் சிரித்தவர், அதை நான் வீட்டிலேயே வைத்துவிட்டுச் செல்லவேண்டும் என விரும்பினார். அவரிடமிருந்து அதை முரட்டுத்தனமாகப் பிடுங்கிய நான் வெய்யிலில் இருந்து என்னைப்  பாதுகாத்துக் கொள்வதற்காக அம்மா வற்புறுத்தி அதைக்
கொடுத்தனுப்பினாள் என்றேன். என் ஆசைக்குத் துணைபோக வேண்டி ஒரு கருணையற்ற பொய்யனாக நான் மாறிவிட்டிருந்தேன். “அடடா! நீங்கள் மட்டும் இப்போது இந்தக் கடிதத்தை எழுத வேண்டியிராமல் இருந்தால்!” என்றவன், அந்தப் பெண்கள் அதற்குள் போய்விடுவார்களே என்று மனதுக்குள் பேசிக் கொண்டேன். கடிதத்தை வேகமாக முடிக்கும்படி நான் அவரை அவசரப்படுத்தினேன்.  ஆறு இளம்பெண்கள் தங்கள் பொருட்களை ஒன்றாக சேகரிப்பதும், நாய்களை சீழ்க்கையடித்து அழைத்துக் கொண்டு கிளம்புவதற்குத் தயாராவதும் திடீரென ஜன்னல் வழியே அப்போது என் கண்ணில் பட்டது. (அவர்கள் அனைவருமே இருந்தால் அது இன்னும் நிறைவாக இருக்கும்). நான் அவரைக் கெஞ்சினேன். ஆனால்  என்னுடைய வற்புறுத்தலை அவர் புரிந்துகொள்ளவில்லை. நாங்கள் சென்றபோது கடற்கரை வெறிச்சோடியிருந்தது. என் கண்கள் கலங்கிவிட்டன. அந்த வெளிர்  சிகப்பு நிறக் கழுத்துப் பட்டை, கவனமாக வாரப்பட்ட என் தலைமுடி, சிறிதளவு பவுடர், குடை ஆகியவற்றின் அழகு இப்போது குரூரமாகவும் பயனற்றதாகவும் மாறிப் போனதாக உணர்ந்தேன்.
கடற்கரையில் இருக்கவே எனக்கு விருப்பமில்லை. தன் கடிதத்தை இடுவதற்காக அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்ற திரு.டியுடன் நானும் சென்றேன். நாங்கள் திரும்பி வரும் வழியில் எதிர்பாராத விதமாக அந்த ஆறு பெண்களையும் நேருக்கு நேர் பார்க்க நேர்ந்தது. அங்காடிகளில் பொருட்கள் வாங்குவதற்காகத் தங்கள் குதிரைகளையும் குதிரை வண்டிகளையும் அவர்கள் நிறுத்தியிருந்தனர். அவர்கள் கண்ணில் நன்றாகப்பட வேண்டும் என்பதற்காக நான் திரு.டியின் கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டதுடன் அவர்கள் என்னைக் கவனிக்க வேண்டும் என்பதற்காக உற்சாகமான குரலில் பேசத் துவங்கினேன்.  எந்தக் காரணத்தைக் கொண்டும் இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிட்டுவிடக் கூடாது என்பதற்காக திரு.டியிடம் அங்கிருந்த நவநாகரீக ஆடைகளும் பரிசுப் பொருட்களும் விற்கப்படும் அங்காடியில் நாம் எதாவது வாங்கலாமே என்றேன். அதே நேரத்தில் என் வெளிர் சிகப்பு நிறக் கழுத்துப் பட்டை அவர்கள் கண்களில் படுமாறு என்னுடைய மேலங்கியின் பொத்தான்களை கழற்றிவிட்டு, என் சுருள் சுருளான தலை முடி நன்கு வெளியே தெரியும்படி என் தொப்பியைச் சாய்வாக உயர்த்தியவன், பவுடர் கலைந்து என் முகப்பருவை வெளிக் காட்டுகிறதா என்று அங்கிருந்த ஒரு கண்ணாடியில் பரபரப்புடன் ஒரு பார்வை பார்த்துக் கொண்டேன். பச்சை மாணிக்கக் கல்லுடைய கைப்பிடி தெரியும்படி குடையின் முனையைப் பிடித்துக் கொண்டு  அதைக் காற்றில் வேகமாகச் சுழற்றினேன். திரு.டியின் கைகளைப் பிடித்து அதிலிருந்து ஏறத்தாழத் தொங்குவது போன்ற தோற்றத்துடன், என் நெருக்கத்தின் சமிக்ஞைகளால் அவரை மூழ்கடித்து இடைவிடாது ஏதேதோ உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தேன். அந்த நொடியில் அவர்கள் அனைவரும் எங்களைப் பார்த்தபோது நான் இதுவரை எதிர்பார்த்திருந்த எந்த விளைவையும் அந்தக் குடை ஏற்படுத்தவில்லை என்பதை நான் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். அவர்களுடைய குடும்பத்தினரை நன்கறிந்த ஒருவருடன் நான் மிக நெருக்கமாக இருக்கிறேன் என்று நிரூபிக்கும் ஒரு அபத்தமான காரணத்துக்காக நான் திரு.டியின் கைகளை அணைத்துத் தழுவினேன். அவர்களிடமிருந்து ஒரு மெல்லிய சிரிப்பொலி எழுந்தது போலத் தெரிந்தது. வியப்புடன் திரும்பிப் பார்த்த நான் முதன் முறையாக அவர்களைப் பார்க்கும் ஒருவர் அவர்களைக் கவனத்துடன் ஆராய்வதைப் போன்று பாவனை காட்டினேன்.
அவர்களைத் தேடி அங்காடிக்கு வந்திருந்த அந்தக் குழுவில் இருந்த இரண்டு பெண்களின் தந்தையையும், அந்தப் பெண்களையும் ஒரு சேரப் பார்த்து திரு.டி. முகமன் தெரிவித்தார். அந்தத் தந்தையும் தன் தொப்பியை சாய்த்து மிகப் பணிவுடன் பதில் வணக்கம் செலுத்தினார். ஆனால், அந்தப் பெண்களோ வணக்கம் கூறாததோடு, அவமதிக்கும் பாங்கில் அவரை  முறைத்துப் பார்த்தபடி முகத்தைத் திருப்பிக் கொண்டு தங்களுடன் நின்றிருந்த தோழியரைப் பார்த்துப் புன்னகைத்தனர். உண்மையில் அந்தத் தந்தை  திரு.டியை கண்ணியமான ஒருவராகவே நினைத்தாலும் பலவருடங்களாகத் தன்னுடைய உலகமாகத் தான் கருதுபவற்றுக்கு அன்னியமானராகவே அவர் டியைக் கருதினார். தங்கள் தந்தை வசிக்கிற  அதே உலகத்தில் தாமும் நிரந்தரமாக வாழ்வோம் என்று அந்தப் பெண்கள் கற்பித்துக் கொண்டனர். டியின் முன்னாள் வழக்கறிஞரின், பிஸ்கட் தொழில் செய்த பெருவணிகரின், மனிதரால் உருவாக்கப்படும் மலைகளைப் புனைந்தவனின், அதாவது வாசெலஸ் பிரபுவின் உலகை, பிரபஞ்சத்தின் பேரெழில் வாய்ந்த, அல்லது குறைந்தபட்சம் இறைத்தன்மைக்கு சற்றே பின்புறத்தில் தொடுவானில் காணப்படும் அசைவுறும் ஒளியாகவே அவர்கள் கண்டனர். இவை யாவும் கண நேரம் மட்டுமே அவர்கள் ஓடுகளத்தில் பார்க்க வாய்த்த கரோலிங்கிய சாம்ராஜ்ஜியத்தின் பிரபுவுக்கு அடுத்த நிலையில் உள்ள உயர்குடியான மார்குவஸ் ஒருவருக்குச் சொந்தமானது. இந்தப் பெண்கள் வாசெலசின் கோமாட்டியை ஒருமுறை சந்தித்தபோது அவள், “வணக்கம், இளம்பெண்களே” என்று முகமன் கூறியிருந்தாள். ஆகவே வைக்கோலால் செய்த அகன்ற தொப்பியும், அடர் நிறக் கழுத்துப் பட்டையும், முழங்கால் வரையிலான காற்சட்டையும் அணிந்த, குதிரைகள் சூழ வலம் வராமல் டிராம் வண்டியில் பயணித்த திரு.டியின் இயல்பைப் பார்த்து, இவர் தாங்கள் பதில் வணக்கம் செலுத்தத் தேவையற்ற ஒரு மிக எளிய மனிதர் என்று அவர்கள் கருதினர்.
திரு.டி, “குழந்தைகளை எவ்வளவு மோசமாக வளர்த்திருக்கிறார்கள். என் உதவி இல்லாமல் போயிருந்தால் அவர்களுடைய தந்தையிடம் அந்த அரண்மனையோ இந்தத் திருமண உறவோ இருந்திருக்காது என்று அவர்களுக்குத் தெரியவில்லை” என்று இரைந்தாலும் அந்தத் தந்தையை நல்ல மனிதர் என்று அவருக்கு ஆதரவாகவே திரு.டி பேசினார். முட்டாள்தனத்தில் தன் மனைவி மகள்களைச் சிறிது பிந்தினாலும் முழங்கால் வரையிலான காற்சட்டைகள் அணிவதில் பிரியமுடைய அந்தத் தந்தை வடமேற்கு ஃபிரான்ஸ் பிராந்தியத்தின் வாசெலஸ் குடும்பத்தைச் சேர்ந்த பிரபுவுடன் அந்தக் கடற்கரையில் மெல்ல நடை பயின்று கொண்டிருந்தார். அப்போது திரு.டியைப் பார்த்தவர் அவருக்குப் பணிவுடன் முகமன் தெரிவித்தார்.
இந்த முகமன் ஏற்படுத்திய விளைவு பலவீனமாக இருந்தது போன்ற  குழப்பமான ஒரு உணர்வு எனக்குத் தோன்றியது. என் அப்பா அம்மாவிடம் இருந்தது போன்றே, என்னிடமும் சற்றே மாறுபட்ட வடிவில் எப்போதுமிருந்த ஞானத்தின் காரணமாக என்னால் இது குறித்துப் புகார் கூற இயலவில்லை. அந்த இரண்டு பெண்களுடைய தந்தையின்  நண்பர் ஒருவரை நான் அறிந்திருந்தது எனக்கு அனுகூலமாக இருந்தது. அந்த நண்பருடன் நானிருப்பதை அவர்கள் பார்க்கவேண்டும் என்று நான் நினைத்தேன். அது போலவே நடந்தது. அவர்களுக்கு எது தெரிய வேண்டும் என்று நான் நினைத்தேனோ அது அவர்களுக்குத் தெரிந்துவிட்டது, அவர்களுடைய நினைவுகளில் செதுக்கிவைத்தது போல் அது நன்றாகப் பதிந்துவிட்டது. இதற்காக அவர்களுடைய மனதில் படிந்திருந்த முட்டாள்தனத்தின் கறைக்குத் தான் நான் நிச்சயமாக நன்றி கூறவேண்டும். இந்த வழியில் அவர்களை என்னால் அணுக இயலவில்லை எனில், என்னால் அவர்களை அணுக இயலவில்லை. அவ்வளவே. இதில் எனக்குப் புகார் கூற ஏதுமில்லை. அந்தப் பெண்களுக்கு என்ன தெரியவேண்டுமோ, தெரிந்துவிட்டது. இது தான் நீதி. அதை மிகச் சிறிய விஷயமாகவோ, அல்லது தங்களுக்கு அனுகூலமற்ற ஒன்றாகவோ அவர்கள் பார்த்தால் அதற்குப் பொருள் எனக்கு அனுகூலமான அந்த ஒன்று, அவர்களுக்கு அனுகூலமானதாக இல்லை என்பது தான். இதற்கு அர்த்தம் நான் அதைப் பற்றி வருத்தப்பட எதுவுமே இல்லை என்பதே. என்னால் முடிந்த அளவு என் தலைமுடியை நான் நேர்த்தியாக வாரினேன். அவர்கள் அதைப் பார்த்தனர். பச்சை நிற மாணிக்கக் கல்  வைத்த கைப்பிடியுள்ள அந்தக் குடையை என் பாட்டி என் அம்மாவுக்குத் தந்திருந்தாள். என் பாட்டிக்கு மகிழ்ச்சி தரும் என்பதற்காக மட்டுமே என் அம்மா அந்தக் குடையைப் பயன்படுத்தினாள். குடையின் அழகு தன் தோற்றத்துக்குப் பொருத்தமற்றதாகவும், எங்களுடைய பொருளாதார நிலையை ஒப்பிடுகையில் மிகுந்த படோடோபம் கொண்ட ஒன்றாகவும்  இருந்ததாக என் அம்மா நினைத்தாள். அந்த மாணிக்கக் கல் கைப்பிடிக் குடை என் கையில் இருப்பதைக் கண்ட அந்தப் பெண்களுக்கு நான் மிகப் பெரிய செல்வந்தன் என்ற எண்ணம் தோன்றியிருக்கும். கண்ணாடியில் தெரிந்த அழகிய உருவத்தைப் பார்த்தேன். என்னுடைய முகப் பருவை மறைத்திருந்த பவுடர் கலையவில்லை, வெளிர் சிகப்பு நிறக் கழுத்துப் பட்டை என்னுடைய சட்டையினுடைய கழுத்துப் பகுதியின் மீது இறுக்கிக் கட்டப்பட்டிருந்தது. ஆக, முழு சம்பவமும் எனக்கு மிகுந்த சாதகமான சூழலில் தான் நடந்தேறியுள்ளது. இதுவரை முகமறியா ஒருவனாக இருந்த நான் அவர்களால் அடையாளங்காணக் கூடிய ஒருவனாக இப்போது மாறியிருந்தேன். திரு.டியுடனான என் நட்பை  அவர்களுடைய கண்கள் உறுதிப்படுத்திக்கொள்ளவில்லை என்றாலும் கூட அவர்களைப் பொறுத்தவரை குடையுடன் காணப்பட்ட ஒரு இளைஞன் என்கிற அடையாளமாவது இப்போது எனக்கு இருக்கிறது. இத்தகைய எண்ணங்கள் எனக்கு ஏமாற்றத்தை அளித்தாலும் நான் நிறைவாகவே வீடு திரும்பினேன்.
நாங்கள் பிளேன் மர நிழல் படர்ந்த சாலைகள் ஒன்றின் வழியாக வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தோம். அந்த மரங்களுடைய இலைகளின் பின்னிருந்த கேக் கடை, கிளிஞ்சல்கள்‌ கடை, துப்பாக்கி சுடப் பழகும் பயிற்சி அரங்கம், சுழலும் விளையாட்டுக் கூடம், உடற்பயிற்சியகம் ஆகியவற்றின் ஜன்னல்கள் சூரியனைப் பார்த்துப் புன்னகைத்தன.   கடற்புரத்தில் இருந்து கிராமங்களை நோக்கிச் செல்லும் டிராம்கள் இந்த மரங்களைக் கடக்க நேரும்போது எதிர்பாராமல் தம் வழியில் தோன்றும் அவற்றைப் பார்த்து அதிர்ச்சி அடைவர். சில வாரங்களாக கரோலிங்கிய சாம்ராஜ்ஜியத்தில் தங்கியிருந்த அதன் பிரபுவை அங்கு தான் நாங்கள் திடீரென சந்திக்க நேர்ந்தது. அவர் தன் இரு மகள்களுடன் தங்கள் இருப்பிடம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அவர்கள், புகழ்பெற்ற அந்தப் பெண்களின் கும்பலைச் சேர்ந்த, அந்தக் கும்பலிலேயே மிக அழகான இரு உறுப்பினர்கள். அதில் ஒருத்தி செந்நிறத் தலைமுடி கொண்டவள். எங்களுடன் பேசுவதற்காக பிரபு  ஒரு நொடி நின்றார். இது, நான் நினைத்துப் பார்த்திருக்கவே வாய்ப்பற்ற ஒன்று. ஆனால் தற்போது என்னை எதிர்கொண்டுள்ள இந்த இன்பத்தை முழுமையாக நுகர இயலாத அளவுக்கு என் இதயம் படுவேகமாகத் துடித்தது. கரோலிங்கிய சாம்ராஜ்ஜியத்தின் பிரபு நாம் இணைந்து நடக்கலாம் என்றபோது திரு.டி என்னை அவருக்கு அறிமுகப்படுத்தினார். அவர் தன் மகளுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார். அவள் கனிவான பார்வையுடன் புன்னகைத்தபடி தன் கைகளை நீட்டி, “நான் உங்களை அவ்வப்போது கரோலிங்கிய சாம்ராஜ்ஜியத்தில் பார்த்திருக்கிறேன். உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி” என்றாள். இது எனக்கு மிகுந்த வியப்பை அளித்தது. ஏனெனில் என்னுடைய வசிப்பிடத்தைச் சேர்ந்த பெண்கள் இவ்வளவு சம்பிரதாயமாக இருப்பதில்லை. மிகச் சில நிமிடங்களுக்கு முன்பு அவள் சிரித்ததும் அகந்தையுடன் நின்ற காட்சியும் எனக்கு மிக நன்றாக நினைவிருந்தது. நாங்கள் அங்கிருந்து வெளியேறினோம். அடுத்த நாள் சாலையில் சென்று கொண்டிருந்த நான் ஒரு காருக்கு வழிவிட்டு ஓரமாக நகர்ந்தபோது காருக்குள் இருந்த கும்பலையோ, அதிலிருந்த செந்நிறத் தலை முடி கொண்ட பெண்ணையோ என்னால் அடையாளம் காண இயலவில்லை.  நாங்கள் நண்பர்கள் தான் என்றாலும், எனக்கு முகமன் கூறும் வகையில் அப் பெண் என்னை நோக்கித் தன் கைகளை அசைத்ததற்கோ புன்னகை புரிந்ததற்கோ மறுமொழியளிக்க என்னிடம் அப்போது நேரமில்லை.
***
-மார்சல் ப்ரூஸ்ட்
-தமிழில்: கயல்
Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *