ஏராளமான பூ மரங்களும் செடி கொடிகளுமாகப் பேரெழிலுடன் இருந்த  ஜார்டின் பூங்கா! பொன்னிறத் தூவலில் வெண்ணிற வைன் தெறித்தது போன்ற ஒளித் திட்டுகளுடன் வானம் காணப்பட்டபோதும்  குளிருக்காக அணியும் கம்பளி அங்கியைத் தன்னுடன் எடுத்து வந்திருப்பதை நினைத்து மிஸ் ப்ரில் மகிழ்ந்தாள். காற்றில் சிறு அசைவும் இல்லாதிருந்தது. ஆனால் பனிக் கட்டிகள் மிதக்கும் குளிர்ந்த நீரை ஒரு மிடறு பருகுவதற்கு முந்தைய நொடியில் நமக்கு ஏற்படும் ஜில்லிடுதல் போன்ற மெல்லிய குளிரை வாயைத் திறந்த அடுத்த நொடியே நம்மால் உணர முடியும். ஒன்றிரண்டு இலைகள் எங்கோ வானத்தில் இருந்து வருவது போல்  அவ்வப்போது பறந்துவந்தன. என் இனிய சின்னஞ் சிறு இலையே! இதை மறுபடி உணர்வது இதமாய் இருக்கிறது. மிஸ் ப்ரில் தன் கம்பளி அங்கியைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள். அன்று மதியம் பெட்டியில் இருந்து அதனை வெளியே எடுத்து, அதன் மேல் படிந்திருந்த அந்துப்பூச்சிகளை உதறி, பிறகு அதைக் கைகளால் நன்றாகத் தேய்த்து, மங்கலாகக் காட்சியளித்த அதிலிருந்த சிறிய கண்களுக்கு மீண்டும் உயிரூட்டினாள். அந்தச் சிறிய கண்கள்,”எனக்கு என்ன நடக்கிறது?” என்று சோகமாகக் கேட்டன. சிவப்புக் கடல் வாத்தின் உடலில் இருந்த அந்தக் கண்கள் கோபமாக  மீண்டும் அவளைப் பார்ப்பது எவ்வளவு இனிமையாக இருக்கிறது. ஆனால் ஒருவிதமான கறுப்பு குழைத்த வண்ணத்தில் இருந்த மூக்கு கொஞ்சமும் உறுதியாக இல்லை. ஒருவேளை அது எங்காவது இடித்துக் கொண்டிருக்கக் கூடும். அதனால் எந்தப் பிரச்சனையும் இல்லை. அதற்கான நேரம் வரும்போது, செய்தே தீரவேண்டும் என்கிற தேவை ஏற்படும்போது சிறிதளவு மரப்பிசினால் ஒற்றியெடுத்தால் போதும். குட்டிப் போக்கிரி! உண்மையில் அவளுக்கு அதைப் பற்றி அப்படித்தான் தோன்றியது. அவளுடைய இடது காதருகே தன்னுடைய வாலைக் கடித்தபடி இருக்கும் சிறிய போக்கிரி! அவள் அதைத் தன் மடி மீது வைத்து வருடிக் கொடுத்தாள். கைகளில் ஒரு கூச்ச உணர்வு ஏற்பட்டது. ஆனால் அது அவள் நடந்துவந்ததால் இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள். அவள் சுவாசித்தபோது ஏதோவொன்று இலேசாகவும் சோகமாகவும் – இல்லை, அது சோகம் இல்லை, சரியாகச் சொல்லவேண்டும் என்றால் –  தன் மார்பில் ஏதோ மென்மையாக அசைவதைப் போலத் தெரிந்தது.
சென்ற ஞாயிற்றுக்கிழமையைவிட அன்று மதியம் மிக அதிகமான அளவில் ஆட்கள் அங்கு காணப்பட்டனர்.  சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடங்கிவிட்டதால் இசைக் குழு மிக சத்தமாக வாசித்தது. வருடம் முழுக்க எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் இசைத்தாலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமில்லாத காலத்தில் அது எப்போதுமே இவ்வளவு சத்தமாக  இருந்ததில்லை. தம் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இசையைக் கேட்க அமர்ந்திருந்தால் ஒருவர் எப்படி இசைப்பாரோ அது போல அவர்கள் வாசிப்பார்கள். தமக்கு அறிமுகமற்ற நபர்கள் யாருமே அங்கு இல்லை என்றால் நாம் எப்படி வாசிப்போம் என்பதைப் பற்றி அவர்கள் அதுவரை கவலைப்பட்டதே இல்லை. இசைக் குழுவின் தலைவர்கூட ஒரு புத்தம் புதிய அங்கி அணிந்திருந்திருக்கிறாரே! அது  புதியது என்று அவளுக்கு நிச்சயமாகத் தெரியும். தன் பாதங்களை உரசித் தேய்த்தபடி ஒரு சேவல் கூவுவதற்குத் தயாராவது போலத் தன் கைகளை அவர் இருபக்கங்களிலும் கொண்டுபோய் படபடவென அடித்துக் கொண்டார். பச்சை வண்ணப் பூச்சுடனிருந்த விதானத்தில் அமர்ந்திருந்த இசைக் குழுவினர் தங்கள் கன்னங்களுள் காற்றைத் தேக்கி வெளியேற்றியபோது, அங்கு இசை ஒளிர்ந்தது. இப்போது ஒரு சிறிய குழலோசை, மீச் சிறு ஒளித் துணுக்குகளின் தோரணமாகப் பொலிந்தது. அது மீண்டும் இசைக்கப்படும் என்று அவளுக்கு உறுதியாகத் தெரியும். அவ்வாறே நடந்தது; அவள் தன் தலையை உயர்த்திப் புன்னகைத்தாள்.
வெல்வெட் அங்கியுடன் ஒரு முதியவரும், தடிமனான உடலுடன் ஒரு பெண்ணும் அவளுக்குப் பிடித்த இருக்கையில் அமர்ந்திருந்தனர். அந்த முதியவர் வேலைப்பாடுகளுடனான ஒரு பெரிய கைத் தடியின் மீது தன் கைகளை அழுந்தப் பற்றிக் கொண்டிருந்தார். அந்தப் பெண் பூ வேலைப்பாடுகளுடன் கூடிய ஏப்ரனுடன் நிமிர்ந்து அமர்ந்திருந்தாள்.  அவர்கள் இருவரும் தங்களுக்குள் எதுவும் பேசிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தது மிஸ் ப்ரில்லுக்கு ஏமாற்றத்தை அளித்தது. ஏனெனில் அவள் எப்போதுமே மற்றவர்கள் பேசுவதைக் கேட்க ஆர்வமாக இருப்பாள். தன்னைச் சுற்றி இருப்பவர்கள் பேசுவதை அவர்களுக்குக் கொஞ்சமும் தெரியாதபடி கள்ளத்தனமாகக் கவனிப்பதில், அவர்களுடைய வாழ்வின் அந்த ஒரு நொடியில் தானும் வீற்றிருப்பதில் தான் நிபுணத்துவம் அடைந்துவிட்டதாக அவள் நினைத்தாள்.
அங்கிருந்த முதிய தம்பதியரை பக்கவாட்டில் ஏறிட்டுப் பார்த்தாள்.  ஒருவேளை அவர்கள் அங்கிருந்து விரைவிலேயே போய்விடக்கூடும். சென்ற ஞாயிற்றுக்கிழமையும் வழக்கம் போல சுவாரசியமற்ற ஒன்றாகவே இருந்தது. ஒரு ஆங்கிலேயனும் அவனுடைய மனைவியும் வந்திருந்தனர். அவன் பனையோலையால் செய்த அகன்ற வடிவமுடைய மோசமான பனாமா தொப்பியுடனிருந்தான். அவள் பொத்தான்கள் இணைத்த காலணிகளை அணிந்திருந்தாள். அங்கிருந்த மொத்த நேரமும் தான் கட்டாயமாக கண்ணாடி அணிந்தாக வேண்டியிருப்பதையும், அது தனக்கு அவசியமான ஒன்றாக இருந்தாலும் அவற்றால் எந்த நன்மையும் விளையப் போவதில்லை என்றும், அது எப்படியும் நிச்சயமாக உடைந்துவிடும் என்றும் அவள் கண்ணாடியைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தாள்.
அவன் பொறுமையாக இருந்தான்.  பொன்னிற விளிம்புடைய கண்ணாடிகள், மூக்கின் மீது பொருந்தும் கம்பி மூக்கை உறுத்தாதபடி உட்புறம் சிறிய பட்டைகளைக் கொண்ட கண்ணாடிகள் என அனைத்து வகைகளையும் அவன் பரிந்துரை செய்தான். இல்லை.   அவளுக்கு அவை எதிலும் விருப்பமில்லை. “அவை எப்போதும் என் மூக்கின் கீழே சரிந்தபடி இருக்கும் !” என்றாள். மிஸ் ப்ரில்லுக்கு அப்படியே அவளைப் பிடித்து உலுக்கவேண்டும் போலிருந்தது.
முதிய தம்பதியர் சிலைபோல அசையாமல் இன்னும் அந்த இருக்கையில் அமர்ந்திருந்தனர். பரவாயில்லை. அவள் வேடிக்கை பார்ப்பதற்கென்று எப்போதும் ஒரு கும்பல் இருக்கும். தம்பதிகளும் சிறு குழுக்களும் நடக்கத் தொடங்கினர், பேசிக்கொண்டும் ஒருவருக்கொருவர் முகமன் கூறிக்கொண்டும், அங்கிருந்த   கைப்பிடிகளின் மீது தட்டுகளைப்  பொருத்தி பூக்களை விற்பனை செய்துகொண்டிருந்த முதிய பிச்சைக்காரனிடம் கை கொள்ளுமளவு பூக்கள் வாங்கிக்கொண்டும், மலர்களால் ஆன படுக்கைக்கு முன்னும் இசைக்குழு விதானத்தின் பின்னுமாக ஆங்காங்கே சிலர் நின்றுகொண்டிருந்தனர். பட்டுத் துகிலால் ஆன பெரிய துணி முடிச்சுகளைக் கழுத்தருகே அணிந்த சிறுவர்களும், வெல்வெட் துணியில் பூக்கள் தையலிட்ட இழைகளுடன்  பொம்மைகள் போலிருந்த ஃபிரெஞ்சு சிறுமிகளும் அவர்களுக்கு இடையே பாய்ந்து சிரித்துக்கொண்டே ஓடினர்.  மரங்களின் அருகிருந்து கும்பலைப் பிளந்துகொண்டு திடீரென தோன்றும் ஒரு சிறு நடிகர் அனைவரையும் வெறித்துப் பார்த்தபடியே வந்து தரையில் “தொம்” என்று சிற்சமயங்களில் உட்கார்வதுண்டு. உடனே விரைந்து வரும் அவனுடைய தாய்  திட்டிக் கொண்டே ஒரு இளங் கோழியைப் போல அவனைக் காப்பாற்றும் விதமாகப் பாய்வதும் நடக்கும். நீளமான இருக்கைகளிலும் பச்சை வண்ண நாற்காலிகளிலும் ஆட்கள் அமர்ந்திருக்கும் அந்தக் காட்சி எல்லா ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஏறத்தாழ ஒரே மாதிரிதான் இருக்கும். அவர்கள் அனைவரைப் பற்றியும் ஏதோ ஒரு விஷயம் அவளுக்கு சிரிப்பு வரவழைத்தது. விநோதமாக, அமைதியாக, பெரும்பாலும் முதியவர்களாக இருந்த அவர்களின் வெறித்த பார்வை, சிறு இருட்டு அறைகளில் இருந்து, இல்லை இருட்டறை கூட இல்லை, அலமாரிகளில் இருந்து அப்போதுதான் அவர்கள் வெளியே வந்ததைப் போலிருக்கும்.
இசைக் கலைஞர்கள் அமர்ந்திருந்த விதானத்தின் பின்புறம் மஞ்சள் இலைகளை உதிர்த்துக் கொண்டிருந்த   செறிவற்ற மரங்கள், அவற்றின் இடையே ஒரு  மெல்லிய கோடு போல் கடல், அதன் பிறகு நீல வானைக் கடந்ததும் பொன்னிறம் பூசிய மேகங்கள் எனக் காட்சி விரிந்தது.
டம்-டம்-டம் டிடுல்-டம் ! டம் டிடுல்-டம் டம் டா! அதிரடித்துக் கொண்டிருந்தது இசைக் குழு!
அப்போது அங்கு வந்த சிவப்பு உடையணிந்த இரண்டு சிறுமிகளை நீல உடையுடன் இருந்த இரண்டு இளம் ராணுவ வீரர்கள் சந்தித்தனர். பிறகு அவர்கள் ஜோடியாகக் கைகளைக் கோர்த்துக்கொண்டு அங்கிருந்து சென்றனர். பார்த்ததும் சிரிப்பை வரவழைக்கும் வைக்கோற் தொப்பியுடன் இருந்த இரண்டு உழத்திகள் புகை நிறத்தில் இருந்த அழகிய கழுதைகளை ஓட்டிக் கொண்டு அந்த இடத்தைக் கடந்தனர்.  உணர்ச்சிகளற்ற வெளுத்த முகத்துடன் ஒரு கன்னியாஸ்திரி விரைந்து சென்றார். அங்கு வந்த அழகிய பெண்ணொருத்தி தன் கைகளில் பற்றியிருந்த செங்கருநீல மலர்க் கொத்தை நழுவவிட்டாள். அதைக் கண்ட சிறுவன் ஒருவன் அதை அவளிடம் சேர்ப்பதற்காக அவள் பின்னாலேயே ஓடினான். அதனை வாங்கியதும் அவை ஏதோ  விஷமூட்டப்பட்டவை போல அவள் அதைத் தரையில் வீசி எறிந்தாள். அச்சச்சோ! மிஸ் ப்ரில்லுக்கு அது பாராட்டப்பட வேண்டிய ஒன்றா என்று புரியவில்லை. கீரிப்பிள்ளையின் ரோமங்களோடு பட்டிழைகள் பிணைத்து உருவாக்கப்பட்ட தொப்பியணிந்த ஒரு பெண்ணும், பழமைவாதியாகத் தோற்றமளித்த ஒரு கனவானும் அப்போது, அந்த நொடியில், அவள் கண்ணெதிரே முதன் முறையாக சந்தித்துக் கொண்டனர். அவன் உயரமாகவும், இறுக்கமான முகத்துடனும், கண்ணியமாகவும் இருந்தான். தலைமுடி மஞ்சளாக இருந்த காலத்தில் அவள் வாங்கியிருந்த பட்டிழைகளால் ஆன தொப்பியை இப்போது அவள் அணிந்திருந்தாள். அவளுடைய தலைமுடி, முகம், கண்கள் என அனைத்துமே நைந்து போன நிலையில் இருந்த அந்த கீரிப்பிள்ளைத் தொப்பியின் நிறத்தில் மாறிவிட்டிருந்தன.  தூய்மையான கையுறையால் அவள் தன் உதடுகளை ஒற்றியபோது விலங்கின் சின்னஞ்சிறு கால் நகம் ஒன்று மஞ்சள் நிறத்தில் வெளித்தெரிந்தது. அடடா! அவனைப் பார்த்ததும் அவளுக்குத் தான் எவ்வளவு மகிழ்ச்சி! பேரானந்தம்! அன்று மதியம் அவர்கள் இருவரும் மீண்டும் சந்திக்கப் போகிறார்கள் என்று மிஸ் ப்ரில் நினைத்தாள். அவள் எங்கெல்லாம் போனாள், என்றெல்லாம் ஏதேதோ அவனிடம் கூறிக் கொண்டே இங்குமங்குமாக உலவி கடற்புறம் வரை சென்றுவிட்டாள். அன்றைய தினம் அவ்வளவு அழகானதாக இருந்தது – அவன் அதனை ஏற்கவில்லையா? ஒரு வேளை ஏற்கவில்லைதான் போல? இல்லை என்று தலையாட்டியவன் ஒரு வெண்சுருட்டைப் பற்றவைத்து அவளுடைய முகத்தின் மீது அடர்த்தியான புகையை மெல்ல ஊதினான்.  அவள் அவனிடம் ஏதோ பேசிச் சிரித்துக் கொண்டிருக்கும்போதே  தீக்குச்சியை வீசியெறிந்துவிட்டு அவன் அங்கிருந்து கிளம்பிவிட்டான். தனியாக இருந்த கீரிப் பட்டுத் தொப்பி முன்னெப்போதையும்விட ஒளிபொருந்திய வகையில் புன்னகைத்தாள். இசைக்குழுவுக்கும் அவளுடைய உணர்வுகள் புரிந்தது போல அவர்கள் மென்மையாக மிருதுவாக “தி புரூட்! தி புரூட்! எனும் பாடலை மீண்டும் மீண்டும் இசைத்தனர்.  அவள் என்ன செய்வாள்? இப்போது என்ன நடக்கப் போகிறது? மிஸ் பிரில் நினைத்தது போலவே திரும்பிப் பார்த்த கீரிப் பட்டிழைத் தொப்பியாள் இன்னும் அழகாக இருந்த வேறு யாரையோ பார்த்துவிட்டதைப்போல தன் கைகளை உயர்த்தி, மின்னற் பொழுதில் மறைந்துவிட்டாள். இப்போது இசைக்குழு வாசித்த இசையில் முன்பைவிட வேகமும், அதிக மகிழ்ச்சியும் ததும்பி வழிந்தது. மிஸ் ப்ரில்லின் இருக்கையில் அமர்ந்திருந்த முதிய தம்பதியர் எழுந்து சென்றனர். நீண்ட மீசையுடன் பார்வைக்கு மிகுந்த வேடிக்கையாகக் காட்சியளித்த வயதான ஆள் ஒருவன் தடுமாறியபடி நடந்து சென்றது, ஒலிக்கும் இசைக்கேற்ப ஒசிந்து நடப்பது போலிருந்தது. அதே நேரத்தில் தோளோடு தோள்சேர அங்கு நடந்துபோய்க் கொண்டிருந்த நான்கு பெண்களை அவன் இடித்ததில் அவர்கள் அவனைக் கிட்டத்தட்ட கீழே தள்ளிவிட்டிருப்பார்கள்.
ஆகா! அது அவளை எவ்வளவு ஈர்த்தது! அவளுக்கு அது எவ்வளவு மகிழ்ச்சியளித்தது! அங்கு அமர்ந்து இதையெல்லாம் பார்ப்பது அவளுக்கு எவ்வளவு பிடித்திருக்கிறது!  இது ஒரு நாடகம் போலிருந்தது. நாடகம் போலவேதான் இருந்தது. இங்கு தெரியும் இந்தக் கீழ்வானத்தில் வண்ணம் பூசப்பட்டிருக்கவில்லை என்றால் யாரால் நம்பமுடியும்? ஒரு சிறிய பழுப்பு நாய் அந்த தீவிரத்தன்மை மிகுந்த காட்சியின் இடையில் எங்கிருந்தோ திடீரெனத் துள்ளித் தோன்றியவரையில் அது நீடித்தது. அதன் பிறகு நாடகக் காட்சிகளில் தோன்றுகிறாற்போலவும், மயக்க மருந்து செலுத்தப்பட்டது போலவும் மெல்லத் தவ்வியபடி அந்த நாய் அங்கிருந்து மறைந்ததுதான் தன் மனம் இவ்வளவு கிளர்ச்சி அடைந்ததற்குக் காரணம் என்று மிஸ் ப்ரில் கண்டுபிடித்தாள். அவர்கள் அனைவரும் மேடை மீது இருந்தனர். அவர்கள் பார்வையாளர்கள் மட்டுமில்லை. அவர்கள் அனைவரும் நடித்துக் கொண்டும் இருந்தனர். அவளுக்கும் அதில் ஒரு கதாபாத்திரம் இருந்தது. அவளுடைய முறை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வந்தது. அவள் அங்கு இல்லையென்றால் அவளுடைய இன்மையை நிச்சயமாக யாராவது கவனித்திருப்பார்கள். அவள் அந்த நிகழ்கலையின் ஒரு பகுதி ஆயிற்றே! இதைக் குறித்து அவள் இதுநாள்வரை இவ்வாறாக யோசித்தது இல்லை என்பது எவ்வளவு விநோதமாக இருக்கிறது! ஆனால் ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட அதே நேரத்தில் அவள் தன்னுடைய வீட்டில் இருந்து கிளம்பியதற்குக் காரணம் இதுதான். நாடகத்தில் பங்கேற்பதற்குத் தாமதமாகப் போகக்கூடாது என்பதுதான். தன்னிடம் ஆங்கிலம் பயின்ற மாணவர்களிடம் ஞாயிற்றுக்கிழமை மதிய நேரங்களை அவள் எவ்வாறு கழித்தாள் என்று சொல்வதற்கு அவள் ஏன் வழக்கத்திற்கு மாறாகக் கூச்சமாக  உணர்ந்தாள் என்பதற்கும் இதுவே காரணம். ஆச்சரியமே இல்லை! மிஸ் ப்ரில் சத்தமாகச் சிரித்தேவிட்டாள். அவள் மேடை மீது இருந்தாள். தோட்டத்தில் உறங்கிக் கொண்டிருந்த நோய்வாய்ப்பட்டிருந்த ஒரு முதியவருக்கு வாரத்தின் நான்கு நாட்கள் அவள் செய்தித் தாள் வாசித்துக் காட்டியதை நினைத்துப் பார்த்தாள். பஞ்சுத் தலையணை மீது சாய்ந்திருந்த பலவீனமான தலை, குழி விழுந்த கண்கள், சற்றே திறந்து கிடந்த வாய், கோணல் மூக்கு என அந்தத் தோற்றத்துக்கு அவள் வெகுவாகப் பழகிப்போய்விட்டாள். அவன் இறந்துபோயிருந்தாலும் அதைப் பல வாரங்களுக்கு அவள் கவனித்தே இருக்கமாட்டாள். அவளுக்கு அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. ஆனால் அவன் ஒரு நடிகையைத் தனக்காகச் செய்தித்தாள் வாசிக்க வைத்தான் என்பது திடீரென இப்போது அவளுக்குத் தோன்றியது. “ஒரு நடிகை!” வயது முதிர்ந்த அந்த முகம் நிமிர்ந்து பார்த்தது. அந்த கிழட்டுக் கண்களில் இரண்டு ஒளிக் கீற்றுகள் தோன்றின “நீ நடிகையா?” மிஸ் ப்ரில் அவளுக்கான வசனங்களைக் கொண்ட கையேட்டுப் பிரதியைப் போல செய்தித்தாளை மெனமையாகத் தடவியபடி மிருதுவான குரலில், ” ஆமாம்! நான் நெடுங்காலமாக நடித்துக் கொண்டிருக்கிறேன்” என்றாள்.
ஓய்வெடுத்துக் கொண்டிருந்த இசைக்குழு மறுபடி இசைக்கத் தொடங்கியது. அவர்கள் இப்போது வாசித்த இசையில் நேசமும் உயிர்ப்பும் பொங்குவதாக இருந்தாலும் மனதிற்கு ஒவ்வாத ஒரு மெல்லிய  உணர்வும் அதில் கலந்திருந்தது. அது என்ன? சோகமா? இல்லை. சோகம் இல்லை. கேட்பர் அனைவரையும் தன்னுடன் பாடவைக்கக் கூடிய ஏதோ ஒன்று. இசையின் சுருதி மேலெழுந்து திசையெங்கும் பரவியது. அந்த இடமே ஒளியோடு பாய்வது போலிருந்தது. ஒரு நொடியில் அங்கிருந்த அனைவரும் மிஸ் ப்ரில் உட்பட பாடப் போவதாக அவளுக்குத் தோன்றியது. சிரித்தபடி நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் முதலில் தொடங்குவர். அதன் பிறகு மிகுந்த மனவுறுதியும் வீரமும் கொண்ட ஆண்களின் குரல்கள் அவர்களோடு இணையும். அதன் பிறகு அவளும், அவளுமே பாடத் தொடங்குவாள். நீளமான இருக்கைகளில் அமர்ந்திருக்கும் மற்றவர்கள் இணைந்து கொள்வர். இசை கீழ் சுருதிக்குச் சென்றது. அதன் பிறகு ஏற்றமோ இறக்கமோ அற்ற ஏதோ ஒன்று .. பேரெழிலான ஏதோ ஒன்று.. மனதின் துன்ப உணர்வுகளை மீட்டியது. மிஸ் ப்ரில்லின் கண்களில் நீர் நிறைந்தது. அங்கிருந்த அனைவரையும் பார்த்துப் புன்னகைத்தாள். அதிலிருந்து அவர்கள் என்ன புரிந்து கொண்டார்கள் என்று அவளுக்குத் தெரியவில்லை. ஆனாலும் புரிகிறது, எங்களுக்குப் புரிகிறது என்று அவர்கள் சொல்வதாக நினைத்துக்கொண்டாள்.
அதே தருணத்தில் முன்பு முதிய தம்பதியர் உட்கார்ந்திருந்த இடத்தில் ஒரு இளம் ஜோடி வந்து அமர்ந்தது. அவர்கள் மிக அழகான உடைகளை அணிந்திருந்தனர். நிச்சயமாக இவர்கள்தான் கதாநாயகன் கதாநாயகி. அந்த இளைஞன் தன் தந்தையின் உல்லாசப் படகில் இருந்து அப்போதுதான் கிளம்பி வந்திருக்கிறான். இப்போதும் ஓசையின்றி பாடியபடியே, நடுங்கும் புன்னகையுடன் மிஸ் ப்ரில் அவர்கள் பேசப் போவதைக் கேட்கத் தயாரானாள்.
“இல்லை. இப்போது வேண்டாம். இந்த இடத்திலா…? என்னால் முடியாது”
“ஏன்? மூலையில் இருக்கும் இந்த முட்டாள் கிழவிதான் காரணமா? அவள் எதற்காகத் தான் இங்கு வருகிறாள்? அவளுக்கு இங்கு யார் இருக்கிறார்கள்? இந்த அருவருப்பான முகத்தை வீட்டிலேயே வைத்துக்கொள்ளாமல் இங்கு ஏன் வந்தாள்?”
“அவளுடைய கம்பளி ஆடை தான் சிரிப்பூட்டுவதாக இருக்கிறது” என்று இளித்த அந்தப் பெண், “அது பொறித்த பண்ணா மீனைப் போலவே இருக்கிறது” என்றாள்.
மிஸ் ப்ரில்லின் திசையில் பார்த்து,
“சே! போய்த் தொலை!” என்று கோபத்துடன் கிசுகிசுத்தவன் ” பேசு, செல்லம்மா…”
“இல்லை. இங்கு வேண்டாம். இப்போதைக்கு வேண்டாம்” என்றாள் அவள்.
*******
வழக்கமாக வீட்டுக்குத் திரும்பிச் செல்லும் வழியில் அடுமனையில் இருந்து தேனால் செய்த ஒரு துண்டு கேக் வாங்கிச் செல்வாள். அது அவளுடைய ஞாயிற்றுக்கிழமைக்கான சிறப்பு விருந்து. சில சமயங்களில் அந்த துண்டுகளில் ஒரு பாதாம் இருக்கும். அவ்வாறு இருந்தால் அது ஒரு சிறிய பரிசை வீட்டுக்குக் கொண்டுபோவது போன்றது. இல்லாமல் இருக்க வாய்ப்புள்ள ஒன்று, அங்கிருப்பது குறித்த ஒரு வியப்பைத் தருவது. தன்னுடைய பாதாம் ஞாயிறுகளை எதிர்நோக்கி அவள் விரைவாள். நீரைக் கொதிக்க வைக்கும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து தீக் குச்சியை வேகமாக உரசுவாள்.
ஆனால் இன்று அடுமனையைக் கடந்து, படியேறி மாடிக்குச் சென்று,  இருட்டாக இருந்த சிறிய அறையை, அலமாரி போன்ற தன் சிறிய அறையை அடைந்து, சிவப்பு கடல் வாத்தின் மீது அமர்ந்தாள். வெகுநேரம் அப்படியே அமர்ந்திருந்தாள். கம்பளி ஆடை வைத்திருந்த பெட்டி கட்டிலின் மீது கிடந்தது. அவள் வேகமாக கழுத்தணியை அவிழ்த்தாள். கண்ணெடுத்தும் பாராமல் அதைப் பெட்டியின் உள்ளே வைத்தாள். பெட்டியை மூடியபோது அழுகுரல் ஒன்று ஒலித்ததாக அவளுக்குத் தோன்றியது.
***
கேத்தரீன் மேன்ஸ்ஃபீல்ட்
நியூசிலாந்தைச் சேர்ந்த கேத்தரீன் பியோசாம்ப் எழுத்தாளர், கட்டுரையாளர் இவற்றுடன் பத்திரிகையாளர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர். கவிதைகள், கடிதங்கள், விமர்சனங்கள் என் அனைத்து வகை இலக்கியங்களிலும் தன் பங்கைச் செலுத்தியவர். தன் சிறுகதைகளையும் கவிதைகளையும் கேத்தரீன் மேன்ஸ்ஃபீல்ட் எனும் பெயரில் எழுதினார். இவருடைய எழுத்துக்கள் எதிர்காலம் குறித்த அச்ச உணர்வு, இருத்தலியல், பாலியல், ஆகியவற்றைப் பேசின. 
நவீன இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்பாளியாக உலகெங்கும் கொண்டாடப்படும் இவருடைய படைப்புகள் 25 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. 34 வயதில் காசநோயால் முடிவுக்கு வந்தது இவருடைய வாழ்வு.
தமிழில்:- கயல்
Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *