என்னுடன் ஒரே பாடசாலையில் கல்வி கற்ற அரவிந்த பியசேன அதிகளவு கூச்ச சுபாவத்தையும், பயத்தையும் ஒருங்கே கொண்டவனாகவும், அகாலத்தில் உத்வேகமளிக்கக் கூடிய நினைவாற்றலால் உந்தப்படும் சிந்தனாசக்தி கொண்டவனாகவும் இருந்தான். நாங்கள்
அவனை “பக்தன்” எனும் பட்டப்பெயரால் அழைத்து வந்ததற்குக் காரணமும் அதுதான். பதினாறு வயதில் எம்மை விட்டுப் பிரிந்து கொழும்புக்கு வியாபார நிலையமொன்றில் எழுதுவினைஞராக பணி புரியச் சென்ற அவனை, திருமண பந்தத்தில் அவன் இணைந்து கொண்ட நாளில்தான் மீண்டும் சந்தித்தேன். பிறகு நானும் கொழும்புக்கு இடம்பெயர்ந்த நாளிலிருந்து, அவனுடன்
மீண்டும் பழகத் தொடங்கினேன். அவன் இறப்பதற்கு ஒரு வருடத்துக்கு முன்னர் அவன் என்னிடம் தெரிவித்திருந்த அவனது அனுபவங்களில் ஒன்றுதான் கீழே தரப்பட்டிருக்கிறது. அளவுக்கதிகமான கூச்சம், பயம் ஆகியவற்றுக்கும் தன்னடக்கம் எனும் கடிவாளமற்ற
காட்டுக் குதிரையை ஒத்த சிந்தனாசக்திக்கும் இடையில் சிக்கிக் கொண்டதால் அனாதரவான உள்ளமொன்று நெருக்கடி நிலைமைகளில் செயற்படும் விதத்தைச் சித்தரிப்பதே இக் கதையாகும்.

இரவில், புகையிரத நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த எனக்கு வழியில் எனது மிக நெருங்கிய  நண்பனொருவனை சந்திக்க நேர்ந்தது. அவன் என்னை மிகவும் வற்புருத்தி அருகிலிருந்த உணவு விடுதியொன்றுக்கு அழைத்துச் சென்றான். அங்கு தாழ்வாரத்தில் போடப்பட்டிருந்த பிரம்பு நாற்காலியில் அமர்ந்திருந்து அவனுடன் இரண்டு குவளைகள் விஸ்கி மதுபானத்தை அருந்திய நான் அவனிடமிருந்து பாடுபட்டு விடைபெற்று மீண்டும் புகையிரத நிலையத்தை நோக்கிச் சென்றேன். மதுவெறியிலல்லாது மகிழ்ச்சியில் பூரித்திருந்த மனநிலையிலே அவ்வேளையில் நான் இருந்தேன்.

கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் வாகனங்கள் மூன்றினதும் விளக்குகளிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த வெளிச்சத்தினால், நடைபாதையிலிருந்த பெண்களினதும், ஆண்களினதும் முகங்கள் தூரத்திலிருந்தே அடையாளம் காண முடியுமான அளவுக்கு தெளிவாகத் தெரிந்தன. பயணச் சீட்டு வழங்கும் கூடத்தினருகே நான்கைந்து பேர் காத்துக் கொண்டிருந்தார்கள். ஓராயிரம் பேர் ஒரே தடவையில் கதைக்கும் போது எழும் இரைச்சல் போன்ற ஓசையைக் கேட்டதுமே தலைமன்னார் நோக்கிச் செல்லும் புகையிரதத்தைச் சூழ்ந்து கொண்ட பயணிகளும், தமிழர்களும் எனது கற்பனையில் தோன்றினார்கள். வாயிலருகே பயணச் சீட்டுக்களை பரிசோதிப்பவர்கள், தினந்தோறும் புகையிரதத்தில் பயணிக்கும் என்னை அறிந்திருந்த போதிலும், அவர்களை நெருங்கியதும் கேட்டுப் பழகிப் போயிருந்ததால் “டிக்கட் ப்ளீஸ்” என்றார்கள்.

“அதோ புகையிரதம் வந்து விட்டது. விரைவாகச் செல்லுங்கள்” என அவர்களிலொருவர் என்னைப் பார்த்து புன்னகையோடு கூறினார். நான் வேக வேகமாக படிக்கட்டுகளிலேறி
மேம்பாலத்தில் ஓடிச் சென்று ஒரு வழியாக புகையிரதத்தில் ஏறிக் கொண்டேன். அந்தப் புகையிரதக் கூடத்தில் என்னைத் தவிர வேறெவரும் இருக்கவில்லை. புகையிரதம் கொம்பனித் தெருவைக் கடந்ததுமே கடல்காற்று ஆசுவாசமளித்ததில் எனது மகிழ்ச்சி அதிகரித்தது. காரிருள் சூழ்ந்திருந்ததால் கடல் தென்படாத போதும் கூட, அலைகள் எழுந்து ஆர்ப்பரித்து சிதறி விழும் ஓசை கேட்டது. நட்சத்திரங்களற்ற ஆகாயம் காரிருள் மலையை ஒத்திருந்தது. மழை மேகங்கள் சூழ அந்தகாரக் காரிருளைக் காண நேர்ந்ததால் எனது மகிழ்ச்சி குறைந்தது.
புகையிரதத்திலிருந்து இறங்கி வீட்டுக்குச் செல்ல முன்பு மழை பெய்தால் நன்றாக நனைய வேண்டி வரும். புகையிரத நிலையத்துக்கருகிலும், நான் செல்லும் வழியிலும் ரிக்ஷாக்கள் இருக்காது. மாட்டு வண்டியோ, குதிரை வண்டியோ கூட இருக்காது. வழியில் இருக்கும் இரண்டு, மூன்று வீடுகளும் ஆங்காங்கே தள்ளியிருப்பதனால் இடைவழியில் மழையில்
அகப்பட்டால் தண்ணீர் நிரம்பி வழியும் சப்பாத்துக்களோடும், மழையில் நனைந்து ஈரமான
ஆடையோடும்தான் நான் வீட்டை அடைய வேண்டியிருக்கும். பதற்றம் அதிகரித்ததனால் நான் சுருட்டொன்றைப் பற்ற வைத்து புகைபிடித்தேன். வழியில் புகையிரத நிலையமொன்றில் வைத்து புகையிரதம் நின்ற வேளையில், எனது கூடத்தை நெருங்கி எட்டிப் பார்த்த ஒரு முகம் சட்டென்று வேறுபுறமாகத் தலையைத் திருப்பிக் கொண்டது. காக்கைக் கூட்டைப் போன்ற
சிகையலங்காரத்தைக் கொண்டிருந்த அவனது முகம் – இருளில் என்னை உற்று நோக்கிய போது மின்னிய பூனைக் கண்களை ஒத்த இரு விழிகளைக் கொண்ட அந்த முகம் – எனக்கு இலேசாகத் தென்பட்டது. சாரமும், பனியனும் மாத்திரம் அணிந்திருந்த அவன் இரண்டாம் வகுப்புக் கூடத்தை எட்டிப்பார்த்தது எதற்காக? அவனுக்கு இது இரண்டாம் வகுப்பைச் சேர்ந்த கூடம் என்பது தெரிய வந்ததும் மூன்றாம் வகுப்பைத் தேடிச் சென்று விட்டானோ? நான் இருக்கையிலிருந்து எழுந்து நின்று ஜன்னல் வழியே வெளியே தலையை நீட்டி எட்டிப் பார்த்தேன்.
பாலைவனத்தைப் போல பாழடைந்து போயிருந்த புகையிரத நிலைய மேடையைக் கண்ட நான், இரவில் பாழடைந்து இருண்டு போயிருக்கும் வீடொன்றுக்குள் நுழைபவனுக்குள் உண்டாகக் கூடிய உணர்வைப் போன்ற பீதி உணர்வால் கலங்கிய இதயத்தோடு மீண்டும்
ஆசனத்தில் அமர்ந்து கொண்டேன். புகையிரத நிலையத்திலிருந்து இருநூறு யார் அளவு
தூரத்தில் தெருவோரத்தில் மதில் சுவரால் சூழப்பட்ட பாழடைந்த வீடொன்று இருக்கிறது. இலைகளும், கிளைகளும், அடர்ந்த புதர்ச் செடிகளும், தென்னை மரங்களும் சூழ்ந்திருந்ததாலும், வீட்டுக்கு முன்னால் காடு மண்டிப் போயிருந்ததாலும் அந்த வீடு அமைந்திருந்த இடம்
பௌர்ணமி நிலவொளி வீசும் இரவிலும் கூட இருளாகவே காணப்படும். அந்த வீட்டை நெருங்கும்போது தீக்குச்சியொன்றைப் பற்ற வைத்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தோடு தீப்பெட்டியை எடுக்க பைக்குள் கையை விட்டேன்.
சடுதியாக சப்பாத்து வழுக்கும் ஓசையும், அதனைத் தொடர்ந்து பலத்த ஓசையெழுப்பியவாறு யாரோ விழும் ஓசையும் எனக்குக் கேட்டது. நான் அந்த வீட்டின் முன் பகுதியை நெருங்கியதுமே தீக்குச்சியொன்றை எரியச் செய்தேன். காற்றின் காரணமாக தீக்குச்சி அணைந்து விட்ட போதிலும், முற்றத்தின் நுழைவாயிலருகே வீழ்ந்து கிடந்த ஒருவன் எனது பார்வைக்கு மெலிதாகத்தென்பட்டான்.

நான் அந்த இடத்தை நெருங்கி மீண்டும் தீக்குச்சியொன்றை எரியச் செய்தேன். காற்சட்டை
அணிந்திருந்த அவன் பொலிவிழந்த வதனத்தைக் கொண்டிருந்தான். அவனுக்கு உயிரிருக்கிறதா எனப் பார்க்க, நான் ஒரு கையால் அவனது இடது கையின் விரல்களைத் தொட்டேன். எனது விரல்கள் விறைத்துப் போகுமளவு குளிரை உணர்ந்தது எனக்குள் எழுந்த அச்சத்தினதும், சந்தேகத்தினதும் காரணத்தினாலா என்பதை நானறியேன். அது அங்கு கொண்டு வந்து போடப்பட்ட சடலமொன்று. அல்லாது விட்டால் விரல்கள் இந்தளவு குளிரடைய வாய்ப்பேயில்லை.
திடீரென்று மேலும் இருவர் அங்கு தோன்றினார்கள். அவர்களில் ஒருவன் புகையிரதக் கூடத்தை எட்டிப் பார்த்த, அடர்த்தியான சிகையலங்காரத்தைக் கொண்டிருந்தவனின்
உருவத்தை ஒத்தவன். அவனது கண்களிரண்டும் மாத்திரம் கூடத்தை எட்டிப் பார்த்தவனின் கண்களைப் போல பிரகாசமானவையாக இருக்கவில்லை. அடுத்த புகையிரத நிலையத்தில் இறங்கியவன் நான் மாத்திரம்தான். மேலும் தாமதிக்காத நான் உடனடியாக புகையிரத நிலையத்திலிருந்து வெளியேறி, இருளில் பாதையைக் கண்டடைந்ததால் அல்லாது பழக்கப்பட்ட பாதை என்பதனால் வீட்டை நோக்கி நடக்கத்
தொடங்கினேன்.
அவர்களிலொருவன் குனிந்து “இன்னுமொரு தீக்குச்சியைப் பற்ற வையுங்கள்” என என்னிடம் கூறினான். அவன் வீழ்ந்து கிடந்தவனை தீக்குச்சி வெளிச்சத்தில் உற்றுப் பார்த்து விட்டு எழுந்து நின்று சுற்றி வரப் பார்த்தான்.
“ஆள் போயிட்டார் போல!”

“செத்துப் போயிட்டாரா?” என நான் கவலையோடு கேட்டேன்.

“அப்படித்தான் தெரியுது. இனி இங்கிருப்பது நல்லதில்ல.” அவன் மற்றவனோடு சேர்ந்து கொண்டு அந்த இடத்தை விட்டும் விலகி நடந்தான்.
“சந்தியில போலிஸ்காரரொருத்தர் இருந்தா அவர்கிட்ட இந்தத் தகவலை சொல்லிடுங்க.”
“நாங்க போலிஸ்காரரை அனுப்பி வைக்கிறோம், ஐயா. அவர் வரும்வரைக்கும் நீங்க இங்கேயே இருங்க.”
அவர்களது இந்த வார்த்தைகளைக் கேட்ட பின்னர்தான், எனது மூளை விழித்துக் கொண்டது . “ஐயா போலிஸ்காரர் வரும்வரைக்கும் இங்கேயே இருங்கள்” என அவர்கள் கூறியது எதற்காக? இந்த நபரை முன்பே கொலை செய்து விட்டு சடலத்தை இங்கு கொண்டு வந்து போட்டது இவர்கள்தானா? போலிஸ்காரர் வரும் வேளையில், நான் இங்கேயிருந்தால் நான் இந்தக் கொலைப் பழியில் சிக்கிக் கொள்ள வேண்டிவரும், அல்லவா? ஒருவனின் சடலமருகே இந்த இரவில் அகால வேளையில் நான் ஏன் இருக்க வேண்டும்? உடனடியாக இந்த இடத்திலிருந்தும் தப்பிச் செல்லாது விட்டால் நான் இந்தக் கொலை வழக்கில் சிக்கிக் கொள்வது நிச்சயம்.
நான் சடலத்தை விட்டும் சற்று விலகிச் சென்று, சுற்றி வரப் பார்த்தேன். கொல்லப்பட்ட இந்த நபரை, நான் பார்த்ததை நாளை போலிஸ் அறிந்து கொண்டால்? புகையிரதத்திலிருந்து இறங்கி அகால வேளையில் நடந்து  சென்றது நான்தான் என புகையிரத சேவகன் கூறுவான்.
அந்த இறுதிப் புகையிரதத்தில் வந்து இறங்கியவன் நான் மாத்திரமே. இப்போது போன இவர்கள் இருவரும் கூட நான் இங்கிருந்ததாகக் கூறுவார்கள். நான் பற்ற வைத்த
தீக்குச்சிகள் இரண்டினதும் எரியாத துண்டுகளும் கூட சடலத்தின் அருகிலேயே கிடக்கும். அந்தத் தீக்குச்சித்துண்டுகளையும், தீப்பெட்டியையும் குற்றப் புலனாய்வுத்
திணைக்களத்துக்கு அனுப்பி வைப்பார்கள். ‘என்ன நடந்தாலும் போலிஸ்காரர் வரும் வரைக்கும்
இங்கேயே இருக்க வேண்டும்’ என எனக்குள் கூறிக் கொண்ட நான் சிறிது நேரம் காத்துக் கொண்டிருந்தேன். பீதியும், கழிவிரக்கமும் மீண்டும் எனது சிந்தனையை
ஆட்கொண்டன. அவர்கள் இருவரும்தான் இந்த நபரைக் கொன்றிருந்தால்? அவர்கள் சத்தம் போடாமல் இப்போது தப்பிச் சென்றிருப்பார்கள். நான் இங்கு காத்திருப்பது
எனக்கு ஆபத்தையே வரவழைக்கும். காரிருள் இரவில் பாழடந்த வீடொன்றினருகே சடலமொன்றுக்குக் காவலிருப்பவன் பைத்தியக்காரன் அல்லது கொலைகாரன்.
நான் வேக வேகமாக நடந்து வீட்டை நெருங்கினேன். எனது முகத்தையும், தேகத்தையும் கண்ட மனைவி வியப்போடு என்னை மீண்டும் உற்று நோக்கினாள்.
‘ஏன் உடம்பு சரியில்லையா? உடம்பு இப்படிப் பதறுது? ஓடி வந்ததாலா? இல்லேன்னா யாரோடாவது சண்டை போட்டீங்களா?’
‘இல்ல’ எனக் கூறிய நான் கதிரையொன்றில் அமர்ந்து அணிந்திருந்த ஆடையைக் கழற்றி விட்டு சாரமொன்றை அணிந்தவாறே சடலம் பற்றிய தகவலைக் கூறினேன்.
‘நீங்க சொல்றது ஜெயசேனவோட பாழடைஞ்ச வீட்டைத்தானே?’என்று மனைவி கேட்டாள்.

‘ஆமா. அந்த வீடுதான்.’
‘அதற்கு இந்தளவு பயப்படத் தேவையில்ல. தெருவில் போற பிச்சைக்காரன் எவனாவது பசி மயக்கத்தில விழுந்திருப்பான்’
‘பிச்சைக்காரனில்ல. வெள்ளைக்காரன் போல காற்சட்டை உடுத்திருந்த ஒருத்தன்.’
‘காற்சட்டைக்காரனா? அந்த மனுஷன் செத்தாலும், கொன்னாலும் அதற்கு சம்பந்தமில்லாத யாரையாவது பிடிப்பாங்களா? எங்களுக்கென்ன? போலிஸ் அதைத் தேடிக் கண்டுபிடிப்பாங்க.’
பீதியினாலும், வெட்கத்தினாலும் குழம்பியிருந்த மூளையைக் கொண்டிருந்த எனக்கு அவளது வாதம் பிடிக்கவில்லை. ‘பெண்களுக்கு புத்தி மட்டு’ என்ற சொல்வழக்கு உண்மைதான். கொலைக்காக நான் கைது செய்யப்படாவிட்டாலும் கூட, என்னை போலிஸுக்குக்
கொண்டு போய் விசாரணை செய்வது நிச்சயம். புகையிரத  நிலைய ஆட்கள் நான் இரவில் புகையிரதத்திலிருந்து இறங்கிச் சென்றதைக் கூறுவார்கள். யாரென்றறியாத அந்த
நபர்கள் இருவரும் கூட நான் அந்தச் சடலத்துக்கருகில்
நின்று கொண்டிருந்ததைப் பற்றித் தெரிவிப்பார்கள். எனது சிந்தனை கட்டற்று ஓடிக் கொண்டிருப்பதை உணர்ந்த மனைவி எனது மருமகனையும், சேவகனையும்
ஜெயசேனவின் பாழடைந்த வீட்டைப் பார்த்து வரச் சொல்லி அனுப்பி வைத்தாள்.
‘கடும் இருட்டாயிருக்கு! டோர்ச்சை எடுத்துட்டுப் போங்கோ’ என்றாள்.

அவர்கள் போய்ப் பார்த்து விட்டு வந்து அந்த வீட்டின் முன்னால் சடலமொன்றையோ, வேறெவரையுமோ காணவில்லை என்று கூறினார்கள். எனது யோசனை ஆகாயத்தில் பறக்குமொரு பறவை போல அங்குமிங்குமாக சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தது.

சிகையலங்காரத்தைக் கொண்டவனும், மற்றவனும் நான் அவ்விடத்திலிருந்து நீங்கும் வரைக்கும் ஒளிந்திருந்து பார்த்து விட்டு, சடலத்தைத் தூக்கிச் சென்று கடலில் இடுவது போல எனது யோசனைக்குப் பட்டது. இந்தக் குற்றத்தை போலிஸுக்குத் தெரிவிக்காது விட்டால் நானும்
சந்தேகத்தின் பேரில் பிடித்துச் செல்லப்படுவது நிச்சயம். சடலத்தையும், அந்த நபர்கள் இருவரையும் நேரில் கண்ட நான், சடலம் இடைநடுவில் காணாமல் போனது தெரிந்தும் அமைதியாக இருந்தது ஏனென போலிஸார் கேட்பார்கள். என்ன பதில் கூறினாலும் என்னைக் குற்றவாளியாகத்தான் பார்ப்பார்கள். போலிஸார் என்னைப் பிடித்துக் கொண்டு போய்
சிறையிலடைத்து விட்டு சிகையலங்காரத்தைக் கொண்டவனையும், மற்றவனையும் தேடுவார்கள். அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் வரைக்கும் என்னைப்
பிணையில் விட முடியாதென்று போலிஸார் கூறுவார்கள். எனது மனைவி அழுதவாறு எனது உறவினர்களையும், தெரிந்தவர்களையும் அழைத்து வந்து நான் நிரபராதி எனக் கூறியவாறு எனக்கு விடுதலை பெற்றுத் தருமாறு அவர்களிடம் மன்றாடுவாள். சட்டத்தரணிகளைத் தேடிச்
சென்று அவர்களுக்கு பணம் கொடுப்பாள். எனது உதடுகளும், வாயும் வரண்டு போயிருந்த காரணத்தால் என்னால் சோற்றுக் கவளத்தை விழுங்க முடியவில்லை. எச்சில் கலக்காத சோற்றுக் கவளம்,  தவிட்டை போலச்சுவையற்றுப் போய் தொண்டைக்குக்கீழாக இறங்கவேயில்லை. நான் கதிரையிலிருந்து எழுந்து சென்று இரண்டாவது சோற்றுக் கவளத்தை முற்றத்தில் கொட்டினேன். சடலம் காணாமல் போன தகவலைக் கேட்ட கணத்திலிருந்து எனது மனைவியும் கூட சற்றுப் பயந்து போயிருந்தாள்.
‘அப்படீன்னா, போலிஸுக்குப் போய் சொல்லுவோம்’ என அவள் தனது கருத்தைத் தெரிவித்தாள்.
நான் எனது மருமகனோடு போலிஸுக்குச் செல்லத் தயாரான போது எனது மனைவியும் எம்முடன் கூட வரத்தயாரானாள்.
‘வராட்டாலும் பரவாயில்ல’ என நான் கூறினேன்.
‘இல்ல. நானும் கூட வருவேன்’ என்றாள்.
பீதியினதும், சந்தேகத்தினதும் காரணத்தால் எனதுள்ளம் பலதரப்பட்ட எண்ணங்களால் ஆளப்பட்டுக் குழம்பிப் போயிருப்பதை அவள் அனுமானித்திருந்ததால் எம்முடன்
வர அவளும் தீர்மானித்திருந்தாள். நான் கூறியதைக் கேட்ட இன்ஸ்பெக்டர் கொட்டாவி
விட்டவாறே கூறினார்.
‘யாராவது பிச்சைக்காரனாக இருக்கலாம்.’
‘இல்ல, காற்சட்டைக்காரனொருதன்.’
‘காற்சட்டைக்காரங்களும் இப்பல்லாம் பிச்சையெடுக்குறாங்க.’

‘நானும் பிறகு போய்ப் பார்த்தேன். யாரும் இருக்கல’ என எனது மருமகன் கூறினான்.
‘அவன் எழும்பிப் போயிருப்பான்.’
நான் சிகையலங்காரக்காரனைப் பற்றியும், மற்றவனைப் பற்றியும் தகவல்களைத் தெரிவித்தேன். அத்தோடு ‘விழுந்து கிடந்தவன் வெள்ளைக்காரன் ஒருத்தன் போல இருந்தான்’
என்றும் கூறினேன்.
‘வெள்ளைக்காரனா?’ எனக் கேட்டவாறு சட்டென்று எழுந்து நின்ற இன்ஸ்பெக்டர் எம்மையும் அவரது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு அந்தப் பாழ்வீட்டை நோக்கிச் சென்றார். நுழைவாயிலருகே வாகனத்தை நிறுத்தி இறங்கிய இன்ஸ்பெக்டர், முற்றத்தின் அனைத்து இடங்களுக்கும் ஒளியைப் பாய்ச்சுமாறு மின்சூளைச் சுழற்றினார். பின்னர்
அவர் பாழ்வீட்டின் படிக்கட்டுகளிலேறி மின்சூளை எரியச் செய்தார். தொடர்ந்து வரவேற்பறையின் மறுமூலைக்கும் மின்சூளைத் திருப்பினார்.
“யாரது?’
அவர் சுவர் மூலையில் கிடந்த ஒரு பொதியருகே சென்று
‘ஏய் யாரது?’ என மீண்டும் கேட்டவாறு சப்பாத்தால் குத்தி எழுப்பினார்.
‘எழுந்திரு!’
‘ஐயோ… என்னால் எழும்ப முடியல!’ என அந்தப் பொதி அல்லது சடலம் முனகியது.

‘ஏன் முடியாது? உனக்கு யாராவது அடிச்சாங்களா?’
‘இல்ல. நான்கு வேளையா நான் எதுவுமே சாப்பிடல.’
‘எழும்பி வா. சாப்பாடு தாறேன்.’ அவன் நெஞ்சை உயர்த்தி இன்ஸ்பெக்டரைப்
பார்த்தான்.
‘இவனா அந்த ஆள்? ட்ரெக்ஸ் என்று கூப்பிடப்படுற பறங்கியன் இவன்’ என எம்மை நோக்கித் திரும்பியவாறே கூறிய இன்ஸ்பெக்டர் தொடர்ந்தார்.
‘இவன் பிச்சையெடுக்கப் போய் சில தடவைகள் தெருவில் மயங்கி விழுவான். பட்டினி என்று சொன்னா எவரும் இருபத்தைந்து சதத்தையாவது இவனுக்குக் கொடுத்துட்டுப் போவாங்க. இவன் இன்னிக்கு உண்மையாகவே மயங்கி விழுந்திருக்கிறான். இவனுக்கு
சாப்பிட ஏதாவது கொடுக்கணுமே.’

‘நாங்கஅனுப்பி வைக்கிறோம்’ ன்று எனது மனைவிகூறினாள்.

***

 

 

 

 

எழுத்தாளர் பற்றிய குறிப்பு – மார்ட்டின் விக்கிரமசிங்க

ஒரு தத்துவவியலாளராக, கலைஞராக, சமூகவியல் ஆய்வாளராக, எழுத்தாளராக என பல தளங்களில் கால் பதித்துள்ள, சிங்கள இலக்கியத்தின் யுக புருஷராக வர்ணிக்கப்பட்ட மார்ட்டின் விக்கிரமசிங்க 1890, மே 29 இல் இலங்கையின் தென் மாகாணத்தில் கொக்கலை எனும்
கிராமத்தில் பிறந்தவர். சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கல்வி கற்ற இவர் பிற்காலத்தில் கொழும்பில் தினமின, சிலுமின, லக்மின ஆகிய சிங்களப்பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தார். இவரின் சிறுகதைத் தொகுப்புகளில் அதிகமானவை இன்றும் காலத்தால் அழியாத தன்மையுடையனவாக இருக்கின்றன. தமிழ், ஆங்கிலம், ரஷ்ய, பிரெஞ்சு, சீன, ரூமேனிய, பல்கேரிய உள்ளிட்ட பல்வேறு உலக மொழிகளில் இவரது நூல்கள் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.
இவரது மிகவும் முக்கியமானதும், இறுதியானதுமான நூல் “ஸ்ரீபவத்தரன”ஆகும். புத்தரின் வாழ்க்கை வரலாற்றை ஒரு புதிய கண்ணோட்டத்தில் இவர் அந்த நூலில் எழுதியுள்ளார். சித்தார்த்த குமாரன், புத்தராகும் வரையிலான வரலாற்றுக் காலத்தை குறிப்பிட்ட போது,
புத்தரைச் சித்தார்த்த குமாரரின் கோலத்தில் நிறுத்திப் பக்திபூர்வமாக அல்லாமல், மதிப்புக் குறைவாக எழுதிவிட்டார் என்றும், புத்தரை இழிவுபடுத்தி விட்டார் என்றும் பலரும் நாடெங்கும் சர்ச்சையான விமர்சனங்களை எழுதினார்கள். இந்த நூலைச் சட்டவிரோதமாக்கக் கோரி
கூட்டங்கள் நடத்தினார்கள். அத்தனை எதிர்ப்புக்களையும் இவர் சமாளித்ததோடு, தன் கைப்பட எழுதிய ஒவ்வோர் எழுத்துக்கும் பூரண பொறுப்பேற்று விளக்கமும் அளித்தார்.
1976, ஜூலை 23 அன்று காலமான இவரது மாத்தறை பிரதேசத்தில் கொக்கலையில் அமைந்துள்ள பிறந்த இல்லம் கிராமிய கலை அரும்பொருட் காட்சி நிலையமாக அமைக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு. திறந்துவிடப்பட்டுள்ளது மறைந்த எழுத்தாளர் மார்ட்டின் விக்ரமசிங்கவின் 45 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இந்த சிறுகதை
பிரசுரமாகிறது.

– மார்டின் விக்கிரமசிங்க

 

 

 

 

தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

Please follow and like us:

1 thought on “முனகிய சடலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *