1

யாராவது நம்மை

ஒதுக்கினால்

 

ஒதுக்கினால்

ஒதுக்கட்டுமென்று

கொஞ்சநாளாவது

வீம்போடு வாழ

ஒரு காரணம் கிடைத்துவிடுகிறது.

2.

வித்தை தெரியாத

வாழ்வு

வசதியாக இருக்கிறது.

 

இல்லையில்லை

 

வசதியாக உள்ளதா

வசதியாக இல்லையா

என்ற வித்தை தெரியாத

வாழ்வு

வசதியாக இருக்கிறது.

 

3.

அந்த இளம்பெண்ணும்

அவள் அம்மாவும்

இந்த வீதியில்

நடக்கிறார்கள்.

 

அவள் அழகாக இருக்கிறாள்

அவள் அம்மாவோ

பேரழகாக இருக்கிறாள்

எதிரில் வந்த

நான் மட்டும்தானா

இப்படி

நினைத்துக்கொண்டு

போயிருப்பேன்.

 

4

அவள் அம்மா

விலகாத சேலையை

லேசாக

இழுத்துவிடுகிறாள்.

 

அந்திக்கும்

இரவிற்கும்

இடையில் இருந்த

இளந்தளிரை

குளிர்காற்று

லேசாக அசைக்கிறது.

இரண்டையும்

நான் பார்த்துவிடுகிறேன்.

 

5

சாப்பாட்டிற்கு

பணம் போதுமா

போதாதா

என்ற பயணம் தான்

எப்போதும்.

 

மனைவியும் மகள்களும்

திரும்பிப் பார்க்கும்

போதெல்லாம்

கபடமற்றுப்

புன்னகைக்கிறார்கள்.

 

6

உதவி கேட்டால்

மறுத்துவிடுவார்தான்

ஆனாலும் உதவி கேட்காமலா

இருக்க முடிகிறது.

 

7.

நரசிங்க பெருமாள்

நல்ல மனிதர்

சீக்கிரம் வந்துவிட்டது

நாராயண பலி

பத்திரிக்கை

 

8

அந்த வழியாகச்

செல்லும்போது

அவர்கள் கூட்டமாக

இருந்தார்கள்

எனக்கு பயமாக இருந்தது

நான் என்னுடைய

கூட்டத்தோடு வந்து சேர்ந்தேன்.

இன்னும் பயமாகத்தான் இருக்கிறது.

 

9.

பசிக்குத் தெரிகிறது

நண்பகலுக்கும்

நள்ளிரவிற்குமான

வித்தியாசம்

 

10

ஊரின் பெயர்

வாழைப்பந்தல் என்றார்கள்.

திருமணத்திற்கு

வந்து திரும்பும்

தாவணிப் பெண்களின்

ஒப்பனை கலைந்த முகங்கள்

வந்துபோயின எனக்கு.

 

11

ஆமாத்தூர்

வந்தால்

முத்தாம்பிகையை

பார்க்கலாம்.

 

மடவளாகத்தில்

ஞானாம்பிகை

 

சாமி கும்பிடுபவர்கள்

சாமி கும்பிடலாம்

 

அம்பிகையைப் பார்ப்பவர்கள்

அம்பிகையைப் பார்க்கலாம்

 

அம்பிகைக்கொரு

சந்நிதி

ஆளுக்கொரு சித்தம்.

 

12

சொந்த ஊர்

திருவாமாத்தூர்

ஒரே வீடு

எதிரெதிர் சந்நிதி.

 

ஒரே வீடென்றாலே

எதிரெதிர் சந்நிதிதான் போல.

 

13

அம்மனுக்கு அலங்காரமே

தனி அழகு என்றவன்தான்

அலங்காரம் இல்லாத

அம்மனைப் போல

இருப்பதாகச் சொன்னான்

அன்றிரவு.

 

14.

முப்பது வருட நட்பு

போகுமிடமெல்லாம்

புறஞ்சொல்லியே மாய்கிறானாம்.

 

நம்பாதவர்கள் சொன்னார்கள்

 

என்னை

 

நம்பாதவர்கள்

சொல்லவில்லை.

 

இருவரையும் தெரிந்த ஒருவன்

 

இப்படிக் கூட்டி விழுங்காமல்

காறி உமிழக் கூடாதா என்றான்.

 

ஒரே மாதிரி இருந்தாலும்

 

ஆறு வித்தியாசங்களாவது

இல்லாமலா போகும் என்றேன்.

 

15

குலம் கோத்திரம்

பார்ப்பதில்லை என்றவன்

பலத்த சிக்கலில்

தன்னுடைய

கூட்டத்தோடு கூட்டமாக

பதுங்கிப்போனதை

பார்த்துவிட்டேன்.

 

16

மானம் போய்விடும்

யாரிடமும் சொல்ல

வேண்டாமெனக்

கேட்டுக் கொண்டான்.

 

போகட்டும் போங்கள்

 

ஆற்றில் குளிக்கும்போது

கௌபீனத்தை உருவி

முதுகு தேய்ப்பதில்லையா?

 

17

பார்த்தாலே பரவசம்

தருகிற பெண்

எதிரில் போகிறாள்.

காலம் போன போக்கில்

பார்த்துக்கொண்டிருக்கும்

போதே

பரவசமும் போய்விடுகிறது.

 

18

நல்ல குடியில்

கூத்தியாளைப்

புணர்வது பற்றி

நாலு வார்த்தை பேசியவன்

 

நேற்று நான் ஏதாவது

சொன்னேனா என்றான்.

 

மங்களகரமானப் பெண்

 

ஒரு காலை அந்தரத்திலும்

மறுகாலைத் தரையிலும்

பாவும்படி வைப்பாளென்றால்

 

அவள் மேனி

அந்தகாரத்தில்

பாயும் நதிதான்

 

அதை நான்

சேவிக்கிறேன்

 

இல்லை நீ எதுவும்

சொல்லவில்லை என்றேன்.

 

19

அந்தரங்கத்தில்

ஒரு கரும்பொட்டு

அந்தச் சிட்டுக்கு.

 

நேற்று அவன் சொன்னது.

 

சிருஷ்டிக்கு இதுவொரு

கண்திருஷ்டி.

 

20.

தரித்திரத்திற்கு

ஒரு தங்கத் தாம்பாளம்

 

தங்கத் தாம்பாளத்திற்கு

ஒரு தரித்திரம்தானா சம்போ

 

ஆமாம் ஆமாம் சம்போ.

 

வாழ்வும் அதுதான்

வாழ்வின் தத்துவமும்

 

அதுதான் ஹரஹர.

 

21.

உத்தி ஒன்றுதான்.

 

கைநிறைய சம்பளம் வாங்கும்

இருவரில் ஒருவன்

 

யாரிடமும் கையேந்தாமல்

கட்டையைச் சாய்த்தால் போதும்

என்கிறான் அடிக்கடி.

 

கைநிறைய சம்பளம்

வாங்கினாலும்

மாதக்கடைசியில்

கையேந்தாமல்

வாழ முடிவதில்லை

என்கிறான்

மற்றொருவன்.

இருவருக்கும்

 

உத்தி ஒன்றுதான்

 

கடன் கிடையாது.

 

22

அன்றாடங்காய்ச்சி

விபத்தில் அடிபட்டு

சாகப் பிழைக்க கிடக்கும்போது

எட்டிப்பார்க்காத அன்பைப்

பொழிந்தவனுக்கும்

 

வெறுங்கையோடு

பார்க்க

வந்தவனுக்கும்

 

புத்தி ஒன்றுதான்

 

அன்பு கிடையாது.

 

23

திருவண்ணாமலைக்கு

போகும் வழிதான்

கண்டிப்பாக வரவேண்டும்

என்றார் பயபக்தியோடு

 

கைலாயத்திற்கு

போகும் வழியில்

நின்று

அழைத்ததுபோல

கிடுகிடுக்கிறதெனக்கு.

 

24

அடுத்தடுத்த

ஏழு கிராமம்

மேலூர் கீழுர் எல்லாம்

வானம் பார்த்த பூமி

என்றாலும்

வாழைக் குருத்துபோல

ஊருக்கு ஒரு பெண்ணாவது

மந்தாரமாக இருந்துவிடுகிறாள்

ஊரோடு இருந்துவிட

ஒரு காரணம் வேண்டாமா?

 

25

தாத்தா பாட்டி

அப்பா அம்மா

அண்ணன் தங்கை

மாமா அத்தை

உற்றார் உறவினர்

சொந்த பந்தம்

மனைவி மக்கள்

தீபாவளி பொங்கல்

என்றெல்லாம்

சொல்லும் போதே

சொர்க்கம் தான்

 

எவனுக்குத் தெரிகிறது

 

ஊரைவிட்டுப் போனவனின்

பொண்டாட்டி

போன பொங்கலுக்கு நாங்கள்

புஸ்வாணம் விட்டோம்

என்கிறாள் நாகரிகமாக

தளுக்காக

சிரித்துக்கொண்டோம் நாங்கள்.

 

26

அவனுக்கு என்னைப் பிடிக்காது

எனக்கும் அவனைப் பிடிக்காது

இதற்கெல்லாம் ஒரு காரணம் வேணுமா?

 

27

மனம்போன போக்கில் இரு.

 

என்றொரு பிறந்தநாள் வாழ்த்து

 

ஒழுக்கமாக இரு

என்று வாழ்த்தினால் என்ன

 

உன்னைப்போல

ஊருக்கு

ஒரு பேமானி போதாதா.

 

28

முப்பது வருடங்கள்

ஆட்சி இருந்தாலும்

இல்லாவிட்டாலும்

மாவட்டத்தில்

அண்ணன் தான்

எங்கள் மந்திரி

 

எப்போதாவது

உதவி என்று

போனால் மட்டும்

இதற்குத்தான்

வந்தீர்களா எனச்

சுள்ளென

எரிந்து விழுவார்.

 

தவறுதலாக

நாங்களே எங்கள்

குதத்தில்

கொள்ளிக்கட்டையை

செருகிக்கொண்டதுபோல

சிரித்துக்கொண்டே

ஊர் திரும்புவோம்.

 

29

கட்சி முக்கியம்லா….

என்பார் கட்சி முக்கியஸ்தர்

 

30

இந்த நெடிய வாழ்வில் நீங்கள்

பெற்ற பாடம் என்ன என்றதற்கு

நம்மால் பலனடைந்தவர்கள்

நன்றியோடு இருப்பார்களென

எதிர்பார்க்க முடியாதென்பதே

நான் பெற்ற

பெரும்பாடம் என்றார் கலைஞர்

 

பெருவாழ்வுதான்.

 

எனக்கு ஒருவன் நினைவிற்கு வருவான்

உங்களுக்கொருவன் நினைவிற்கு வருவான்

வாங்க கோக் குடிக்கலாம்.

 

***

கண்டராதித்தன்.

         (கள்ளிப்பாடி கே.ஸ்டாலினுக்கு)

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *