மூரையும் பொன்னும்

ஊளையிட்டவாறு சுழன்றடித்தன அலைகள். கூடவே சேர்ந்து கொண்டது பலத்த காற்று. தொலைதூர கட்டுமரங்கள் இன்னும் கரை திரும்பியிருக்க வாய்ப்பில்லை. சில சரியான திசையில் வந்துகொண்டிருக்கலாம். சில எதிர் திசையிலோ, திசையறியாமலோ சென்று கொண்டிருக்கலாம். எல்லாவற்றிலும் உயிரோடு வாழ்வைப் பிடித்து வைத்துக்கொள்ள சில கரங்கள் வியர்வையில் அங்குமிங்கும் பிடி தேடி அலைந்திருக்கும். கரையில் பலத்தடித்த மழை சற்று ஓய்ந்ததைப் போலிருந்தது. ஒரத்துத் தென்னை மரங்கள் நிலையற்று ஆடின. தென்னம்பாளைகளும் முதிரா இளங்காய்களும் வலுவற்று விழுந்தன. தொழிலுக்குப் போன கணவனையோ, மகனையோ, அண்ணனையோ, தந்தையையோ தேடி, அழுது புலம்பி, மார்பிலடித்து அரற்றிக் கொண்டிருந்த பெண்களும் சிறுமிகளும் கடலையும் வானையும் பின் தங்கள் இல்லங்களிருந்த நிலத்தையும் மாறி மாறிப் பார்த்திருந்தனர். அவர்களை சமாதானப்படுத்தி கடலுக்குள் சென்று விடாமல் தள்ளி விட்டு கத்திக் கொண்டிருந்தனர் நாயர் படை குதிரை வீரர்கள் சிலர்.

ஒரு குதிரைவீரன் பெண்ணொருத்தியை தன் நீண்ட கழியால் தள்ளி விட, அவளது மகன் திமிறிக்கொண்டு முன் வந்து நின்றான்.

“பொம்பள மேல கைய வைக்கிறீரா ஓய்? போன தகப்பன ஒம்மாள கொண்டார முடியுமா? நாதியத்த எங்க மேல தான ஒங்க கையும் காலும் நீளும்?”  என்று கேட்டு தளுதளுத்தான்.

குதிரை வீரன், “ஒன்னு பொறத்து போடா கொச்சே, நினக்கும் வேணோ?” என்று உறுமியவாறு தன் கழியை ஓங்கினான்.

சட்டென நான்கு கைகள் பத்தும் இருபதுமாக, தொலைவில் நின்ற மற்ற குதிரை வீரர்களும் விரைந்து வந்து சேர்ந்துகொள்ள, கடலலையின் ஊளையை மீறி எழுந்தது மக்களின் கூக்குரல். சற்று நேரத்தில் அலறலும் ஓட்டமுமாக அந்தப் பகுதி வெறிச்சோட இடம் வலமாக நிலத்தைப் பிரித்து அளந்து கொண்டிருந்தன அந்த ஏதுமறியா குதிரைகள்.

ஈரத்தில் உறைந்திருந்த கருமணலில் குதிரைக் குளம்படிகள் ஒரு பெரிய கலவர ஓவியத்தை வரைந்திருந்தன. ஒரு குதிரையின் குளம்படி பட்டு சிதறித் தெறித்தன கரையொதுங்கியிருந்த மூரையொன்றின் குச்சிகள். சிறியதும் பெரியதுமான நண்டுகள் வெளியே எட்டிப் பார்ப்பதும் உள்ளே ஒளிந்துகொள்வதுமாக விளையாடியிருந்தன. சற்று நேரத்தில் அந்த மொத்த கிராமமும் ஓருருக் கொண்டதைப் போல ஒருவரோடு ஒருவர் கைகோர்த்துக் கொண்டு கடலை நோக்கி வந்தது. குதிரைகள் அருகணைந்து நிற்க ஓங்கிய கழிகள் ஓங்கியவையாகவே நின்றன.

காவி வேட்டியும் வெற்று மேலுடம்புமாக கடற்கரை மணல் முடிந்து தென்னந்தோப்பு துவங்கும் புல் படர்ந்த வரப்பின் மீது மென்காலடி எடுத்து வைத்து நடந்தான் நாராயணன். ஆங்காங்கே நின்று எதையோ கூர்ந்து தேடுவதைப் போல பார்த்தான். ஓரிடத்தில் முகம் மலர உட்கார்ந்து எதையோ எடுத்து முகத்தருகே கொண்டு போய் உற்றுப் பார்த்தான். அடிவயிற்றை எக்கி பலமாக அதன் மீது ஊதினான். பின் அதை தன் வேட்டியில் மெல்ல கவனமாக துடைத்து இடுப்பில் சுற்றியிருந்த மற்றொரு துண்டில் பொதிந்து வைத்தான்.

ஏதோ சத்தம் கேட்டு, சற்று தொலைவில் மழைச்சாரலின் ஊடே கலங்கிய காட்சியாகத் தெரிந்ததை உற்று நோக்கினான். திடுக்கிட்டு எழுந்து என்ன நடக்கிறதென கூர்ந்து பார்த்தவாறே அந்த இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தவன், சில கணங்களில் நடப்பதை உணர்ந்து வேகமாக ஓடினான்.

மக்கள் கூட்டத்தை விலக்கி உள்ளே பாய்ந்தவன் குதிரை வீரர்களில் சிவப்புத் தலைப்பாகை அணிந்திருந்த ஒருவனின் முன் சென்று நின்று தன் இடுப்புத் துண்டு மடிப்பிலிருந்து எதையோ எடுத்து நீட்டினான். அதை கவனிக்காது எட்டி மிதிக்க காலை ஓங்கிய அக்குதிரை வீரனை விலக்கி ஓரடி பின்னகர்ந்து நின்று மீண்டும் அதைத் தூக்கி மேலாகக் காட்டினான்.

திருவிதாங்கூர் மகாராஜாவின் நட்புக்கு அடையாளமான வெண்கலச் சின்னம்! அதை பார்த்ததும் வியப்பில் அக்குதிரை வீரனின் கைகள் ஒரு நொடி நடுங்க, தன் கழியைத் தாழ்த்தி கைகூப்பி நாராயணனைப் பார்த்து வணங்கியவாறே, ஒரு விசேஷ சமிக்கையோடு ஊளையிட்டான். ஒரு நொடியில் அத்தனை குதிரை வீரர்களும் சிலையாகியதைப் போல நின்று திரும்பி குரல் வந்த திசை நோக்கி, விசயம் புரிந்ததும் விரைந்தனர். சிவப்புத் தலைப்பாகை அணிந்தவன் குதிரையிலிருந்து கீழிறங்கி நாராயணனை வணங்க, மொத்த மக்கள் கூட்டமும் சலசலத்தவாறு தணிந்தது.

*

அந்த தென்னந்தோப்பிலிருந்து பார்க்கும்போது கடலும் வானும் பிரிக்கமுடியாமல் ஒற்றைத் திரை போலத் தெரிந்தது. சிறு கூட்டமாக இருந்த குடிசைகளின் மத்தியில் ஒரு வெட்டை வெளியில் குத்தவைத்து மௌனம் காத்திருந்தனர் மொத்த மக்களும். பெருங்குடிசை வாசலின் அருகே ஒரு கயிற்றுக் கட்டிலில் நாராயணன் கண் மூடி உட்கார்ந்திருக்க அருகே நின்ற பெரியவர் ஒருவர் என்ன செய்வதெனத் தெரியாமல் மக்களையும் அவனையும் மாறி மாறிப் பார்த்து நின்றார். சிறுமியொருத்தி மெல்ல வந்து ஒரு மண்கலத்தை நீட்டினாள். புன்னகைத்தவாறு கண்திறந்து அதை வாங்கி முகர்ந்து பார்த்தான் நாராயணன். மக்கள் கூட்டத்தில் மெல்லிய சிரிப்பொலி எழுந்தது. பெரியவர் அவர்களை அமைதிப்படுத்தும் விதமாக சைகை செய்ய கூட்டத்தின் சலசலப்பு தேய்ந்தது. இருப்பினும், ஊடாக ஒரு வெண்கல மணி ஒலித்ததைப் போல விட்டு விட்டுக் கேட்டது ஒரு சிரிப்பொலி. பெரியவர் இடப்புற குடிசையை உற்று நோக்கி ஏதோ சொன்னார். அந்த சிரிப்பு நின்றபாடில்லை.

நாராயணனைப் பார்த்து வணங்கியவாறு அந்தக் குடிசையை நோக்கி ஓடினார் பெரியவர். சிணுங்குவதைப்  போல மாறிய அச்சிரிப்பொலி சட்டென நின்றது.

நாராயணன் அந்த மண்கலத்தை மீண்டும் முகர்ந்து பார்த்தான். கண் மூடியவாறு அதிலிருந்த திரவத்தை ஊதிக் குடிக்க ஆரம்பித்தான். மக்கள் கூட்டத்தில் மீண்டும் சிரிப்பொலி.

அந்த இரவு அங்கிருந்த ஒரு குடிசையில் அவனுக்காக கட்டிலிட்டு ஒரு கலம் நிறைய தென்னங்கள்ளும் சுட்ட மீனும் மரவள்ளிக் கிழங்கும் என விருந்திட்டனர். நன்றாக உண்டு முடித்து நினைவு மங்கி ஆழ்ந்து உறங்கினான் நாராயணன். அவனது தலைமாட்டில் இருந்த துண்டில் ஓரடி நீள குச்சியொன்றும், சில கடல் மூரைக் குச்சிகளும், ஒரு காக்காய்ப் பொன்னும் இருந்தன.

அதிகாலை மழை ஓய்ந்து மெல்லிய காற்றடித்தது. தென்னை மரங்கள் நடனம் முடிந்து வணங்கி நிற்பதாய் தோன்றியது. குடிசையிலிருந்து நெட்டி முறித்தவாறு வெளியே வந்த நாராயணன் தூரத்து கடலையும் வானையும் நோக்கி கரம் கூப்பி வணங்கினான். குடிசையின் அருகே ஒரு கல்தொட்டியிலிருந்த மழை நீரை அள்ளி முகம் கழுவினான். திரும்பி வந்து குடிசை வாசலில் கிடந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து ஒரு காலை மடக்கி மற்றொன்றை தரையில் பதித்து நிமிர்ந்து உட்கார்ந்தான். வாய்க்குள்ளாக மெல்ல ஏதோ மந்திரங்களை முனக ஆரம்பித்தான். கண்கள் மேலேறி செருகிக் கொள்ள முகம் மலர புன்னகைத்தவாறு தொடர்ந்து உச்சாடனம் செய்தான்.

மெல்ல காலடி எடுத்து வந்து அவனது பின்னால் தயங்கி நின்ற ஓர் உருவம் பெருமூச்செறிந்தது. சில கணங்கள் என்ன செய்வதென்று குழம்பியதாய் நின்றது. ஓரிரு முறை அதன் வாய் திறந்து ஏதோ சொன்னது, அது அவனுக்கோ அந்த உருவத்திற்கோ கேட்கவுமில்லை. சில கணங்களில் அப்படியே குனிந்து பாம்பு சீறுவதைப் போல ஒலியெழுப்பியவன் இரு கைகளையும் தலைமேல் குவித்து வைத்து, “ஓம், சாந்தி, சாந்தி, சாந்திஹி,” என்றான். அவன் சீறியதில் பயந்து குடிசை வாசலில் விழப்போய் தடுமாறி நின்றது அவ்வுருவம்.

“அந்த சிரிப்பொலி நல்லாருந்து. உம் பேரென்ன?” என்று கடலைப் பார்த்தவாறு கேட்டான் நாராயணன்.

பின்னிருந்து தன் விரல் நகத்தைக் கடித்துத் துப்பியவள், ஓரடி பின்னகர்ந்து நின்றாள்.

“என்ன, உந் தைரியமெல்லாம் காணாமப் போச்சோ?” என்று இலேசாகத் திரும்பிப் பார்த்தவாறு கேட்டான்.

“அதெல்லாம் இல்லயாக்கும்.”

“ஓ, அப்படியானால் உனக்கு வச்ச பேரென்ன சொல்லு.”

“அது ஊர்மிளாவாக்கும். பின்ன, செவப்பின்னும் செலப்பம் விழிக்கும்.”

“அது செரி, நல்ல பேராக்கும். ஊர்மிளைக்கு என்ன ஆகணும் இப்போ?”

சற்று முன்னகர்ந்து வந்தவள், “ஒண்ணுமில்ல, சுக்குத் தண்ணி கொண்டு வந்ததா.” என்றாள்.

அவன் திரும்பி அவளை நோக்கி கை நீட்டினான். அவள் தன் கையிலிருந்த குவளையை அவன் முன் நீட்ட, அவள் கரம் தொட்டு அதை வாங்கி முகத்தருகே கொண்டு சென்றான்.

“வெசமெல்லாம் இல்ல, வாசம் புடிக்காமக் குடிக்கலாம்,” என்று சொல்லி மெல்லச் சிரித்தாள்.

அவனும் புன்னகைத்தவாறு, “வாசமும் நிறைவு தான், இல்லையா செவப்பி? பின்ன, இதாக்கும் பழக்கம்,” என்றான்.

அவள் வெட்கத்தோடு ஆடி நின்றாள். அவன் சுக்கு நீரை ருசித்துக் குடித்தான். வானம் மெல்ல மெல்ல வெளிற மங்கிய ஒளி நிறைந்து அந்தப் பகுதி முழுதும் விழித்துக் கொண்டது.

*

நாராயணன் அனுப்பிய செய்திக்கு மறுமொழியுடன் நான்கைந்து வண்டிகளில் மூடை  மூடையாக தானியங்களும் காய்கறிகளும் வந்திறங்கின. மொத்த கிராமமும் உற்சாகத்தில் கூக்குரலிட்டு நாராயணனை வாழ்த்தியது. ஊர்ப் பெரியவர்கள் வந்து அவன் கரம் பிடித்து முத்தமிட்டனர். கடலில் சொந்தங்களை இழந்தவர்களுக்கு ஆதரவுப்பத்திரம் வழங்கப்படும் எனவும் சாத்தியமுள்ள வகைகளில் அக்குடும்பத்து ஆண்களுக்கோ பெண்களுக்கோ பணி வழங்கப்படும் எனவும் அரண்மனை செய்தி அறிவித்தது. நாராயணன் வசதிப்படும் சமயம் அரண்மனை விருந்திற்கு வரவேண்டுமெனவும் தனிக்குறிப்பு அனுப்பியிருந்தார் திவான்.

சித்திரைத் திருநாள் பாலராம வர்மா அரண்மனை யானையாகிய நங்கையின் மீது வெற்றி வீரனாக ஏறி நிற்கும் ஓவியமும் அதையொட்டி நிகழ்ந்த மாயாஜாலமும் நாடெங்கும் பரவியிருந்தது. யாருக்கும் அடங்காத யானை நாராயணனின் தூரிகை அசைவில் குழந்தையாய் கொஞ்சி நின்றிருக்கிறது. அதை அடக்கி வரைந்து முடித்தவன் சித்து வேலைகள் அறிந்தவன் எனவும் நினைத்த பொழுதில் நினைத்த இடத்தில் இருக்கக் கூடியவன் எனவும் அக்கடற்கரை கிராமம் வரை செய்தி எட்டியிருந்தது. பக்கத்து நாட்டுத் தூதர்கள் வழி அந்த ஓவியனை சந்திக்க பலமுறை செய்தியனுப்பினர் பல பகுதிகளை ஆண்ட மன்னர்கள்.

நாராயணன் தனது இருப்பிடத்தையோ குடும்பப் பின்னணியையோ யாரிடமும் சொல்வதில்லை. தனித்து சுற்றித் திரிந்து தோன்றும் இடங்களில் வரைவதும் பல்வேறு மாந்த்ரீகர்களிடம் சென்று சூட்சும சடங்கு முறைகளையும் மந்திரங்களையும் கற்றுக் கொள்வதுமாக பெரும்பாலும் ஒரு நாடோடியாகத்தான் வாழ்ந்தான். சில சமயம் புனலூருக்குச் சென்று தன் பெரும் பாரம்பரிய கொட்டாரத்தில் தாய் தந்தையுடன் இருப்பான். அவன் அங்கிருக்கும் நேரங்களில் முழுக் குடும்பமும் வந்து சேர்ந்து விருந்தும் கொண்டாட்டமுமாக ஊரே களைகட்டும்.

அப்பா ஊரின் முதல் சம்சாரி. ஏராளமான காடு கழனி தவிர நுண்கலைகளும் சொத்தாக, பரம்பரை பரம்பரையாக தானம் செய்வதும் ஊர் மக்களுக்கு அறிவூட்டி வழி நடத்துவதுமாய் வாழ்ந்து பேரெடுத்த குடும்பம். அவர் சொல்லின்றி ஊரில் ஒரு சிறு நாணலும் அசையாது. அவர் சொல் மீறி அனங்குவதே குற்றமாக நினைத்த மக்கள். நாராயணன் பதின் வயதெட்டிய முதலே இந்த ஊர் சுற்றலும் மாந்த்ரீகமும் துவங்கிவிட்டிருந்தது. ஓவியம் இயல்பாகவே வந்து சேர்ந்திருந்தது. அதிலும் புதுமை தேடி பயணிக்க ஆரம்பித்தான். இயற்கையை தன் வண்ணங்களில் இசையச் செய்ததுடன் புதுப்புது வடிவங்களில், பொருட்களில், காணும் எல்லாவற்றிலும் ஓவியத்தை ஏற்றிக் கலை படைத்தான். புனலூர்க் கொட்டாரத்து அறைகளில் அவன் வரைந்து  வைத்த ஓவியங்களில் உள்ள உருவங்கள் இரவுகளில் உயிர் பெற்று நடமாடுவதாகவும் ஊர் வீதிகளில் சென்று மக்களுக்குக் குறி சொல்லிக் காப்பதாகவும் ஊர் முழுக்கப் பேச்சிருந்தது.

“ஏது, விட்டா மகாராசாவே ஒங்கள பாக்க ஓடோடி வந்துருவார் போலருக்கே!” கடற்கரையில் சோவிகளை சேகரித்துக் கொண்டிருந்த நாராயணனை நோக்கிச்  சிரித்தவாறு கேட்டாள்  ஊர்மிளா.

“ஓ, பின்ன இல்லாம! அவருக்கும் நமக்கும் வல்லியதொரு பந்தமாக்கும். செவப்பிக்கு தெரியல, என்னா?” என்று எழுந்தான். கையிலிருந்த சோவிகளை இடுப்புத் துண்டில் முடிந்து வைத்தான்.

“ம்ம்..நேத்தைக்கி தான் அப்பா சொல்லக் கேட்டது. பெரிய ஆளுதான் பின்ன. பொறவு ஏன் இப்பிடி கண்டதும் பொறக்கித் திரியணும்?” கேட்டதும் நாக்கைச் சுருட்டிக் கடித்து தவறோ என அவனைக் கூர்ந்து பார்த்தாள்.

ஒரு நிமிடம் பதிலளிக்காமல் நின்றவன் மெல்ல புன்னகைத்து, “உத்தியோகம் புருஷ லட்சணம் இல்லையா? கேட்டுட்டுண்டோ ஊர்மிளே?” என்று கேட்டான்.

“அது செரி. வல்லிய சோலியொக்க கைவசம் உண்டானோ பின்ன? எந்தெந்து செய்யும்?”

“அது ஒருபாடு உண்டும். பிரதானம் இதானு.” என்றவாறு தன் இடுப்பில் சொருகியிருந்த குச்சியை எடுத்து நீட்டினான். அதை இடமும் வலமுமாக அசைக்க அது ஓர் ஓவியத் தூரிகையாக மாறியது.

வியந்து வாயைப் பொத்திய ஊர்மிளா, “என்ற அம்மே! இதெந்தா சூனியக்காரனானோ ஈயாளு?” என்று சொல்லி ஓரடி பின்னகர்ந்தாள்.

“செவப்பிக்கு பயம் வேண்டா, இது கொறச்சு மாந்திரீகமா, பின்ன தெய்வ காரியமாக்கும். எல்லாம் நல்ல வழிக்கு மாத்ரமே  செய்யும்.” என்றான்.

“அது செரி. பின்ன, மூரையும் காக்காப்பொன்னும் எதுக்கு?”

“ம், மூரை ஒன்னும் லேசுப்பட்டதில்ல கேட்டியா? ஒத்தப் பிடிக்கி வந்தாலும் வரும், இல்லேன்னா நெனச்ச எடத்துல கல்லு மாதிரி ஒட்டிக் கொள்ளும் தெரியுமா? பின்ன, மருந்து என்றால் மருந்து, கவசம் என்றால் கவசம். பெருமாள் மாதிரின்னு நெனச்சுக்கோயேன்.”

“ஒன்னும் மனசிலாவல.”

“அத விடு, பின்ன, இந்தக் குச்சி கொண்டு கல்லிலே எழுதிப் பார்த்தது இல்லையா செவப்பி?”

ஆமெனத் தலையாட்டியவள், “ஓ, அப்படின்னா காக்காப்பொன்னு?” என்றாள்.

அவன் மெல்லப் புன்னகைத்து, “அது பெருமாளோட சுதர்சன சக்கரமுன்னு வச்சுக்கோ,” என்றான்.

குழம்பியபடி அவள் யோசித்து நிற்க, அவன் மீண்டும் சோவிகளையும் சிப்பிகளையும் தேடியெடுக்க ஆரம்பித்தான். இடையிடையே திரும்பி அசையாது நிற்கும் அவளையும் பார்த்துக் கொண்டான்.

*

புனலூர்க் கொட்டாரத்தில் திருக்கோலமும், தீப ஒளியுமாக ஒரே பரபரப்பு. செந்துளுவங் குலைவாழை கட்டிய நெடு வாசல் தொடங்கி கொட்டாரத்து முற்றம் வரை இருபுறமும் தோரணங்களும் தென்னங்கிளிகளுமாக ஆடியாடி விழவை அறிவித்திருந்தன. புது வண்ணம் கொண்ட கற்சுவர் கட்டிடம் ஓங்கி நிமிர்ந்து கம்பீரமாக நின்றது. கொட்டாரத்தைச் சுற்றிலும் வளைந்து செல்லும் பாதை பின்னிருக்கும் தோட்டத்தைக் கடந்து தென்னந்தோப்பைத் தாண்டி நீண்டு சென்று ஒரு பெரிய ஆலமரத்து மூட்டில் முடியும். கொட்டாரத்தைப் போல மும்மடங்கு பெரிய அகன்று விரிந்த அம்மரம் தன்னளவில் ஓர் தனி உலகமாக, அதன் மூட்டில் நின்று நடப்பதையெல்லாம் கூர்ந்து பார்த்து நின்றது அந்த ஒற்றை மாடன்கட்டு. ஆளுயரத்தையும் தாண்டி நிமிர்ந்து நிற்கும் அகன்ற மேனியாக சுண்ணாம்புக் கட்டு, அதன் மேல் மாடனின் தலையாக மாறிநின்ற குமிழ் போன்ற ஒற்றைக் கல். மேனி வெள்ளை வண்ணத்திலும் காவியும் களபமும் வழிந்தும் நின்றது. முகமாக வெள்ளித் தகடு பதித்திருக்க கண்கள் மூடியிருந்தன. உச்சிகால பூசையின்போது பூசாரி வந்து கண் திறந்து வைக்கும் வரை இருளில் நீதி சேர்த்து கணக்கெழுதி நிற்பான் மாடன்.

பெரும் பூப்படையலும், கொதிக்கும் மஞ்சள் நீரும், வெண்பொங்கலும், தலைவாழை இலை மீது பரப்பிய அத்தனை வகைக் காய்கறிக் குவியலும், சந்தனமும் திருநீறும் சாம்பிராணி வாசமுமாக எந்த நேரமும் சன்னதம் வந்து ஆடிவிடத் தயாராக நின்றான் அந்த ஆலமரத்து மாடன். நாராயணனின் குல தெய்வம். மாடனின் அருகே தன் பங்குப் படையலையெல்லாம் சரி பார்த்தவாறு சிவப்புச் சேலையுடுத்தி நின்றாள் பேச்சி. பிரதான மாடத்தைச் சுற்றிலும் சிறு சிறு கற்களாக நின்ற நூற்றி எட்டு வாதைகள். புலைமாடன், பன்னி மாடன், செங்கிடாய்க்காரன், கருங்கிடாய்க்காரன், மேகலிங்கன், இடைமலையான், தென்கரை மாடன், வடகரை மாடன், பின் இவர்களது சொக்காரன்மார், அவர்களது பெண்கள் என எல்லாக் குறு தெய்வங்களும் பெரியவர் சுடலை மாடன் அனுமதிக்காக வாய்கட்டி நின்றன. எல்லா கற்களிலும் அவரவர்க்கான உருவத்தை வரைந்து வைத்திருந்தான் நாராயணன்.

ஓரத்தில் இருந்த திடல் மீதிருந்து சுருதி கூட்டி தாளம் கோர்த்து வில்லிசைக்க ஆரம்பித்தது கல்குளம் வில்லிசைக் குழு. சிறுவர் சிறுமியர் ஆல விழுதுகளில் ஆடியும், சுற்றியோடியும் களித்திருக்க, பெண்கள் பயபக்தியோடு வில்லிசை திடலின் முன்னமர்ந்து மாடன்கதை கேட்டிருக்க, தென்னந்தோப்பில் ஆங்காங்கே கள்குடித்து நாடன் பாட்டுப் பாடியும் ஆடியும் ஆண்கள் மயங்கியிருக்க, பெரியவரும் அவரது மனைவியும் குடும்பம் புடைசூழ கொட்டாரத்திலிருந்து கோவில் நோக்கி புறப்பட்டனர்.

“ஏடி, எதாம் தகவல் உண்டுமா ஒம் புள்ளாண்டான் எங்க ஏதுன்னு? போன கொடைக்கும் வரல்ல,” என்று தன் மனைவியிடம் கேட்டார் பெரியவர்.

“எனக்கென்ன தெரியும்! அப்பனப் போலதான புள்ளையும் இருக்கும். நீங்க அலையாத்த ஊருமுண்டா என்ன?” என்று சிரித்தாள் பெரிய வீட்டம்மை.

“அதும் செரிதான், பின்ன, பேரம்பேத்தி பாக்கக் காலம் வந்தாச்சுல்லா? ஒன்னு அவன வரச்சொல்லி தாக்கல் அனுப்பனும் பாத்துக்கோ.”

“தாக்கல் எங்கன்னு அனுப்பதுக்கு? ஓரிடத்தில நெலையா இருந்தால்லா தாக்கல் அனுப்ப முடியும்! இவன் எந்த ஊருல என்ன செஞ்சிட்டு இருக்கானோ? பேச்சியம்மைக்கி தான் வெளிச்சம்.”

“ம்ம். நம்ம ஆளுகட்ட சொல்லி வெசாரிக்கச் சொல்லு, என்னா? இங்க ஆளாளுக்கு பொண்ணு கொண்டு வரதுக்குல்லா நிக்கானுகோ! எத்தன பொண்ணுதான் எடுக்க முடியும்?”

“ஆமா, யாரு வந்தாலுஞ் செரி. எந் தம்பி மக தான் எம் மருமவ, சொல்லிட்டேன் பாத்துக்கோங்கோ, பொறவு வந்து சூத்த சொள்ளன்னு சொல்லப்படாது.”

“ஏட்டி, ஒன்னு மொதல்ல மனசிலாக்கு நீ, நம்ம நெனப்பெல்லாம் சரிதான். ஒம் மவன் என்ன நெனைக்கான்னு தெரியாண்டாமா? அதுக்கு தான் சொல்லுகேன். அவன மொதல்ல பிடிப்போம், பொறவு மெல்ல பாப்பம், என்னா?”

“ம்ம். எம் புள்ள நாஞ் சொல்லத தட்ட மாட்டாம் பாருங்கோ.”

“அது செரி, பாப்பம், பாப்பம். சொடல என்ன நெனச்சிருக்காருன்னு தெரியல, பாப்பம்.”

பூசாரி வந்து பெரியவருக்கு வணக்கம் சொல்லி வரவேற்றார். மொத்த குடும்பமும் சூழ்ந்து நிற்க, சாம்பிராணி புகையில் ஆலமரம் முழுதும் மூழ்க ஆரம்பித்தது.

*

சேதி கொண்டு வந்தவன் நாராயணனைப் பார்த்ததும் முகம் மலர வணங்கினான். நாராயணனும் வணங்கி அவனை தன்னுடன் பிடித்து இருத்தினான்.

“என்ன அண்ணாச்சி, தேடி வருமளவுக்கு என்னாச்சு? ஒன்னும் கெட்ட சேதி இல்லையில்லையா?” என்று குழப்பமாகப்  பார்த்தான்.

“அங்ஙன ஒண்ணுமில்ல ஏமானே, வல்லியச்சனும் வல்லியம்மையும் ஏமானக் கண்டு ஒருவாடு சமயம் காணுமே. அதாக்கும் சேதி. பின்ன, ஏமானுக்கு பொண்ணுக வரும்பாடும் உண்டும். அம்மைக்கி ஒரு தீர்வாக்கணும்னு நெனைப்பு,” என்று சிரித்தான்.

நாராயணன் நீண்ட ஒரு மூச்சிழுத்து விட்டவாறு சுற்றிலும் பார்த்தான். ஊர்மிளாவும் அவளது அப்பாவும் குடிசை வாசலில் அமர்ந்து இவர்களை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்படியே கண்களை நகர்த்தி ஒவ்வொரு குடிசையாய் பார்த்தான். ஒவ்வொன்றிலுமிருந்து மறைந்தும் வெளிப்படையுமாக பல கண்கள் அவர்களையே உற்று கூர்ந்திருந்தன.

“வேறேதும் சேதி உண்டா அண்ணாச்சி?”

“அத்தரையே உள்ளு ஏமானே. பின்ன, கல்குளத்திலேந்து மகாராஜா ஆளுக நெறையவேரு கொட்டாரத்துக்கு அப்பப்போ வரும். செலப்பம் ஒளவு வேலையாய்க்  காணும், செலப்பம் ஒருவாடு வாழையும், தெங்கும், பலதும் வந்து எறங்கும். அரண்மனைக்கு ரெண்டு மூணு படங்களும் கொண்டு போயதா.”

“படமா? ஆரு வரச்சதா?”

“அச்சனோடயதும் ஏமானோடயதும்.”

“அது செரி. இனி, எல்லாம் மண்ணுக்குள்ள பதுக்கி வைக்கணும், என்ன அண்ணாச்சி?”

சற்று நேரம் பேசியிருந்து விட்டு தூதன் கிளம்பினான். அடுத்த வாரத்திற்குள் வந்து விடுவதாக சொல்லியனுப்பினான் நாராயணன்.

அக்கடற்புறத்து மூரைக் குச்சிகளையும், இன்னும் கொஞ்சம் காக்காய்ப் பொன்னும் சேகரித்து ஓர் ஓலைக்கூடை நிறைந்துவிட்டிருந்தது. ஊர்மிளா அவ்வப்போது வந்து அந்தக் கூடையை உற்றுப் பார்த்து செல்வாள்.

புறப்படுவதற்கு முந்தைய நாள் மாலை, நிலவும் அவனுமாக கடற்கரையோரம் நடந்து கொண்டிருந்தான் நாராயணன். வழக்கத்தை மீறி அவனது முகம் வாடியிருந்தது. ஏதேதோ எண்ணங்கள் வந்து அவன் மனதைக் கலக்கமடையச் செய்தன. இடையிடையே மார்பில் கைவைத்து கண்மூடி ஏதோ வேண்டுவது போலச் செய்தான்.

“ஓ….ஓ…..ஓ..”

சத்தம் கேட்டதும் அவனையறியாமல் முகத்தில் புன்னகை தோன்றியது. திரும்பிப் பாராமல் தொடர்ந்து நடந்தான்.

கூர்ந்த காதுகளில் இனிமையாய் வந்திறங்கியது அந்தக் காலடிகளின் சத்தம்.

அவனருகே நெருங்கி வந்து நின்று, “காதும் கேக்காம ஆயிருச்சோ ஏமானே?” என்று கேட்டுக்  குனிந்து நின்று மூச்செறிந்தாள் ஊர்மிளா.

“ஓ, நீயா? நா ஏதோ கடல் காக்கான்னு நெனச்சேன்,” என்று முகத்தைத் திருப்பி நடக்க ஆரம்பித்தான்.

“ஓ, எங்களப் பாத்தா காக்கா மாதி தெரியுதோ? எம் பேரு செவப்பியாக்கும்,” என்று சிணுங்கியவாறு முறைத்தாள்.

“அது கொள்ளாம். எங்க கொட்டாரத்து பணிப்பெண்ணுக மொகத்த நீ பாக்கணுமே ஊர்மிளே. அதாக்கும் செவப்பு. பின்ன, நீயும் செவப்பு தான்…” என்று சொல்லி அவளைப் பார்த்துக் கண்ணடித்தான்.

அவள் சட்டென நின்று திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

“ஓ…ஓ…ஓ…” என்றவாறு அவளது பின்னே ஓடி அவள் முன் சென்று கை நீட்டி மறித்தான். அவள் கண்டுகொள்ளாததைப் போல விலகி நடக்க, கைநீட்டி அவள் மேலாடையைப் பிடித்து இழுத்தான்.

அவள் திமிறிக்கொண்டு செல்லப் பார்க்க, மேலாடையின் மெல்லிய இழையொன்று கிழிந்து அவன் கையோடு வந்தது.

தலைகுனிந்து கை மடக்கி உடல் மறைத்து அவள் அப்படியே முழங்காலிட்டு விழுந்தாள். சற்று தடுமாறியவனாக அங்குமிங்கும் பார்த்த நாராயணன் சில கணங்கள் பேச்சற்று நின்றான். அவளது ஏறி இறங்கும் மூச்சின் ஒலி அவனுள்ளே ஊடுவிச் சென்று அவனை நிலை குலையச் செய்தது. சட்டென அந்தக் காட்சி அவன் கண்முன்னே ஒரு பெரிய ஓவியமாய் விரிவதைக் கண்டான். அதில் அவனது கைவிரல் பிடித்து பூமாலையும் புன்சிரிப்புமாக வெட்கி நின்றாள் ஊர்மிளை.

மெல்லக் குனிந்து அவளது தோள்தொட்டுத்  தூக்கினான்.

*

அந்த நீண்ட நெடும் நடைபயணம் முழுதும் அவள் தவித்துக் கொண்டேயிருந்தாள். அப்பாவின் ஆசி உடனிருந்தாலும், மொத்த சனமும் வாழ்த்தி அனுப்பியிருந்தாலும், தெய்வங்கள் எல்லாம் நடையோடு உடன் வந்தாலும் அவளது மனதின் படபடப்பு அடங்கவேயில்லை. மனதில் கண்ட புனலூரும் அதன் கொட்டாரமும் நாராயணன் சொன்ன கதைகளின் வழி தெரிந்த பெரியவர்களும் என ஒன்றிலிருந்து ஒன்றாக காட்சிகள் வந்து வந்து போய்க் கொண்டிருந்தன. நாராயணன் விரலை இறுக்கிப் பிடித்து நடந்தாள் ஊர்மிளா. அவளது மனக் கலக்கத்தை உணர்ந்த அவன் எதுவும் தெரிந்தது போல காட்டிக்கொள்ளாமல் நடந்தான்.

ஓரிரவு எங்கோ உண்டு எங்கோ தங்கி அடுத்த பகல் நடந்து மாலை நெருங்கும் நேரம் புனலூர்க் கொட்டாரத்தை வந்து சேர்ந்தனர்.

அவள் கண்கள் நீர் நிரம்பி நிற்பதைக் கண்டு ஒரு கணம் நின்றவன், “ஊர்மிளே, எது நடந்தாலும் நான் உண்டு நினக்கு, மனசிலாயோ?” என்று கேட்டான்.

அவள் மெல்ல தலையாட்ட, அவள் கைபிடித்து இழுத்துக்கொண்டு கொட்டார நெடுவாசலுள் நுழைந்தான் நாராயணன். பணியாட்கள் ஆங்காங்கே நின்று அவனை வணங்கினர். அவன் கடந்து சென்றதும் ஒருவரையொருவர் பார்த்து கண்களாலும் சமிக்கைகளிலும் பேசினர். சேதி வந்து சேர்ந்திருக்க வேண்டும் என்பது கொட்டாரத்தின் ஒவ்வொரு மூலையிலும் தெரிந்தது. கொட்டாரத்து வாசலை அடைந்தவன் அம்மை வந்து அழைப்பாள் என காத்து நின்றான். சிவப்பி தலைகுனிந்து நடுங்கியவாறு நின்றாள்.

கொட்டாரத்தின் உள்புறமிருந்து எந்த அனக்கமும் இல்லை. அவன் பொறுமையாக பதற்றம் தவிர்த்து நிலையாக நின்றான். பணியாட்கள் தங்கள் இடங்களில் உறைந்து நின்றனர். சிறிது நேரம் கழித்து கொட்டாரத்தின் உள்ளிருந்து அம்மையின் அழுகுரல் கேட்டது. தொடர்ந்து வசைகளாய் யார் யாரையெல்லாமோ பழித்துப் பாடி அழுதாள். அதைக் கேட்ட ஊர்மிளா கதறியழ ஆரம்பித்தாள். நாராயணன் அவளைத் தேற்றி நின்றான். பெரியவர் ஓரிருமுறை இருமியதைப் போலக் கேட்டது.

இன்னும் ஒரு மணி நேரம் இருவரும் அப்படியே நிற்க, பணியாட்கள் முகம் வாட நின்றனர். உள்ளிருந்து பெரியவரோ அம்மையோ வரப் போவதில்லை என்பது நிச்சயமானது. ஏதோ முடிவிற்கு வந்தவனாய் திரும்பியவன் ஒரு நொடி நின்று தன் அப்பாவின் முகத்தையும் அம்மாவின் முகத்தையும் ஒரு முறை நினைத்துப் பார்த்தான். அப்படியே குனிந்து கொட்டாரத்து முற்றத்து மண் தொட்டெடுத்து தன் நெற்றியில் பூசினான். சிறிது மண்ணை தன் இடுப்புத் துண்டில் முடிந்து கொண்டான். பின், ஊர்மிளாவின் கைபிடித்து விறுவிறுவென கொட்டாரத்தைச் சுற்றி தென்னந்தோப்புகளின் ஊடாக ஆலமரக் கோவிலை நோக்கி நடந்தான். அத்தனை சிறுதெய்வ ஓவியங்களும் உயிர்பெற்று அவனை உற்றுநோக்கி நின்றன. மாடனும் பேச்சியும் சாட்சியாக நின்று ஆசீர்வதிக்க பேச்சியின் கையில் கட்டியிருந்த ஓர் மஞ்சள் கயிற்றை அவிழ்த்து ஊர்மிளாவின் கழுத்தில் கட்டினான். ஆலமர மூட்டின் நடுவிலிருந்து ஒரு சிறிய தீபம் அவர்களைப் பார்த்து ஆடியபடியிருந்தது.

கொட்டாரத்து மேலறை சன்னலிலிருந்து விசும்பலோடு உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த தன் அம்மாவை ஒரு கணம் திரும்பி நோக்கினான். அவளருகே நின்றிருந்த பணிப்பெண் மயில் தோகையால் விசிறிக் கொண்டிருந்தாள். சன்னல் சட்டங்களோடு சாய்ந்து அம்மா மெல்ல மயங்கிச் சரிய, உள்ளிருந்து நீண்ட முரட்டுக் கரங்கள் சன்னல் கதவை இழுத்துப் பூட்டின. ஊர்மிளா ஓலமிட்டு அழ ஆரம்பித்தாள்.

“எனிக்கி இது வேண்டா ஏமானே, அச்சன் அம்மையிண்ட ஆசியானு தெய்வத்திண்ட ஆசி. எனிக்கி பழியொன்னும் வேண்டா. நாம் போறேன்,” என்றவாறு திரும்பி நடக்க எத்தனித்தாள். அவளது கைகளைப் பிடித்து இழுத்து தன்னருகே இணைத்து  நிறுத்தினான் நாராயணன். அவனோடு சாய்ந்து விசும்பி நின்றாள் ஊர்மிளா.

கொட்டாரத்திலிருந்து ஓட்டமும் நடையுமாக வந்து மூச்செறிந்து நின்றார் கணக்குப் பிள்ளை. நாராயணனின் முன் வந்து தலை பணிந்து தன் கையிலிருந்த சிறு பெட்டியை நீட்டினார். பனையோலைப் பெட்டி. அதன் உள்ளர்த்தம் புரிந்த நாராயணன் ஒரு கணம் திடுக்கிட்டதைப் போலிருந்தது. உறவை வெட்டித் தள்ளும் சின்னம் அது. குழப்பமாகப் பார்த்த ஊர்மிளா தன்னையறியாமல் கதறி அழ ஆரம்பித்தாள். தரையில் விழுந்து புரண்டு ஓலமிட்டாள். தலை முடியை விரித்து சுற்றியாடி தன் மார்பில் ஓங்கியடித்து அழுது மயங்கிச் சரிந்தாள். கணக்குப் பிள்ளை எதையும் கண்டுகொள்ளாமல் திரும்பி நடந்தார்.

இருள் கவிந்து கொட்டாரம் அமைதிக்குள் உறைந்தது. மாடன் ஆலமரத்து ரீங்காரம் மட்டுமே எஞ்சியிருந்தது. ஊர்மிளா ஓர் ஓரமாக விழுந்து கிடக்க, மாடன் மாடத்தின் முன் முழங்காலிட்டு நின்று கண் மூடி மந்திர உச்சாடனம் செய்தான் நாராயணன். பின், தன் காலடியில் ஒரு சிறு பள்ளம் தோண்டி அதிலிருந்து எடுத்த மண்ணை இரு உருண்டைகளாக உருட்டினான். மாடன் மாடத்தின் அடியில் அவ்விரு உருண்டைகளையும் வைத்து தன் இடுப்புப் பொதியிலிருந்த மூரைக் குச்சியில் ஒன்றை எடுத்து இடப்புற உருண்டையில் மேல் குத்தி வைத்தான். ஒரு சிறிய காக்காய்ப் பொன்னை எடுத்து வலப்புற உருண்டையின் மீது வைத்தான். இடுப்பிலிருந்த குச்சியை உருவி இடம் வலமாக மூன்று முறை சுற்ற, அது தூரிகையாக மாறியது.

..

“என்ன இப்பிடி அடிச்சுப் போட்ட மாதிரி ஒடம்பு வலிக்கே?” என்றவாறு வந்து நின்றாள் பெரிய வீட்டம்மை.

“ஒனக்கு வேற வேலையும் சோலியும் இல்ல, ஒரு கசாயம் போட்டுக் குடி,செரியாவும். ஆமா, எங்கயாக்கும் இருந்த, ராவு ஒன்னக் காணலயே?” என்று கேட்டவாறு தன் வெற்றிலைப் பெட்டியைத் திறந்தார் பெரியவர்.

“அதாக்கும் நானும் யோசிக்கது. ஒன்னும் ஓர்மயில்ல, ஒரு மாதிரி கொழப்பம். எங்க போனேன், என்ன செஞ்சேன், எப்படி ஒறங்கினேன், ஒன்னும் மனசுலாவல.”

“ஏமானே, ஏமானே, ஒன்னு வரணும் ஏமானே.” என்று பதறியபடி ஓடி வந்தார் கணக்குப் பிள்ளை.

“என்ன ஓய்? இடி கிடி விழுந்துட்டா? ஒம்ம பரத்தம் ஒரு நாளும் நிக்காது போல?” என்றவாறு எழுந்தார் பெரியவர்.

“என் கூட வாங்க, வந்து பாருங்க,” என்றவாறு கொட்டாரத்தின் பின்புறம் ஓடினார் கணக்குப் பிள்ளை. பெரியவர் ஆர்வத்துடன் பின் செல்ல, பெரிய வீட்டம்மை குழம்பியபடி ஏதோ முனகியவாறு பின் தொடர்ந்தாள்.

ஆலமரத்தைச் சுற்றிலும் ஏராளமான கிளிகள் கூச்சலிட்டபடி பறந்து கொண்டிருந்தன. ஏதோ ஒற்றை மந்திரத்தை மீண்டும் மீண்டும் உரைத்தபடியிருந்தது அவற்றின் கூச்சல். அருகே நெருங்கி வந்த பெரியவரும் அம்மையும் ஒரு கணம் திகைத்து நின்றனர். அம்மையின் கைகள் தானாகவே எழுந்து வணங்கின. ஆலமர நிழல் முழுவதும் ஆங்காங்கே மூரைக் குச்சிகளும் காக்காய்ப் பொன்னும் சிதறிக் கிடந்தன. மாடன் மாடத்தின் காலடியில் புதிதாய் முளைத்திருந்த இரு சிறு நடுகற்களுக்கு களபமும், சந்தனமும் குங்குமமும் சாற்றப் பட்டிருந்தது. ஒன்றிற்கு அரளிச் சரமும் மற்றதற்கு பிச்சிச் சரமும் சூடப் பட்டிருந்தது. அவற்றின் முன் ஒரு மூங்கில் குழாய் மூடி வைக்கப்பட்டிருந்தது. பெரியவர் வணங்கியபடி அதை எடுத்துத் தன் கைகளில் தட்ட உள்ளிருந்து ஒரு குச்சியில் சுற்றப்பட்ட துணிச்சுருள் வெளிவந்தது. ஓரக் கண்ணிட்டு கணக்குப் பிள்ளையைக் கவனித்தவாறே அத்துணியை மீண்டும் அக்குழாய்க்குள் வைத்து தன் கையிடுக்கில் வைத்துக் கொண்டார்.

அம்மை கண்மூடி வாய்விட்டு ஏதேதோ மந்திரங்களை உச்சரித்துக் கண்ணீர் வழிய நிற்க, கொட்டாரத்துப் பணியாட்கள் எல்லோரும் வியந்து முனுமுனுத்து நிற்க, கணக்குப் பிள்ளை ஏதோ புரிந்தவராய் பெரியவரின் அருகே சென்று பேச வாயெடுத்தார்.

அவரை மறித்துப்  பெரியவர், “ஆமா, நாராயணனை வரச் சொல்லி தூது அனுப்பினீரே, பதில் ஒன்னும் வரக் காணுமே? ஒன்னு என்னான்னு பாரும். பின்ன, இங்க தானா வந்த தெய்வங்கள் நல்லதாக்கும். ஆருக்கும் ஒன்னும் பயம் வேண்டாம், கேட்டோ,” என்றார்.

ஏதோ கனவிலிருந்து விழித்தவரைப் போல கணக்குப்பிள்ளை, “மன்னிக்கணும் ஏமானே, சேதி வந்துட்டுண்டு. கொச்சேமான் அஞ்சாறு நாள் கழிஞ்சு வரும். சொல்ல மறந்து போயதானு,” என்றார்.

எல்லோரும் புதிய தெய்வங்களை வணங்கித் திரும்ப, அம்மை மட்டும் அசையாது ஏதோ யோசித்து நின்றாள். நீண்ட நேரம் தனித்துக் கண் மூடி நின்றவள்  சட்டெனக் கண் திறந்தாள். தன் காலடியில் கிடந்த காக்காய்ப் பொன்னைத் தூக்கியெறிந்து அதனடியில் இருந்த மூரைக் குச்சியொன்றை எடுத்துக் கொண்டு விறுவிறுவென கொட்டாரத்திற்கு நடந்தாள்.

பெரியவர் தன் அறைக்குச் சென்று அந்தத் துணிச்சுருளை எடுத்து விரித்தார். அதில் வரையப்பட்டிருந்த வள்ளித் திருமணக் காட்சியைப் பார்த்து பெருமூச்சு விட்டார்.

***

– சுஷில் குமார்

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *