முக்கோணம்
இதுவரை கட்டப்பட்டிராத என் வீட்டின் தகரக் கூரை
முக்கோண வடிவங் கொண்டது.
அதன் முகடு
சித்தூரில் இருக்கிறது.
களைப்படைந்த ஒவ்வொரு இரவிலும் நான் அதன் கதவைத் தட்டச்சு செய்கிறேன்.
பாலக்காட்டின் அருகிலுள்ள ஒரு
நதிக்குள்ளிருந்து ஒரு கரம் விரிகிறது.
நான் என் இதயத்தை நீட்டி
இளைப்பாறுகிறேன்.
சித்தூர் நதியில்
என் நிழல் மினுங்குகிறது
சின்னஞ்சிறு இளம்பிறை
அந்த பிம்பத்தை முத்தமிடுகிறது.
நான் யாக்கரா நதிக்குள்
உருகிப் போகும் முன்,
இரண்டு கரங்கள்
ஒரு வீட்டின்
கதகதப்பை, வண்ணத்தை,
மணத்தை மீட்டுத் தர
வாழ்வுக்குள்ளோ நீருக்குள்ளோ
முங்குகின்றன.
ஒரு நேர்க் கோட்டின்
இரண்டு முனைகளில் துடிதுடிக்கும்
இரு இதயங்களும்
அவற்றுக்கு
மேலே பேருருக் கொண்ட ஒரு மரமும்.
நாம் சிரிக்கிறோம்,
புன்னகைக்கிறோம்,
அழுகிறோம்.
விடியல்.
நாம் நம்மூடைய வீடுகளுக்குத் திரும்புகிறோம்.
பனியில் நடுங்கத் துவங்குகிறோம்.
****
-மௌமிதா ஆலம்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கவிஞர் மௌமிதா ஆலம் அவர்களின் கவிதை இது. “The musings of the dark” எனும் தன் முதல் கவிதைத் தொகுப்பை இந்த வருடம் வெளியிட்டுள்ளார்.
தமிழில் -கயல்
மிகவும் அருமையான கவிதை மொழி பெயர்ப்பு