– சந்தினி ப்ரார்த்தனா
தமிழில் – எம். ரிஷான் ஷெரீப்

மேடையின் மத்தியில் ஒளி வட்டத்தில் நின்றிருந்த ஜோடி
ஒருவரையொருவர் கட்டியணைத்துக் கொண்டது.
இளம்பெண், வாலிபனின் கழுத்தில் கத்தியை வைத்தாள்.
வாலிபன், இளம்பெண்ணின் காதருகே துப்பாக்கியை
வைத்தான்.
கண நேரத்துக்குப் பிறகு இருவரும் கீழே விழுந்தார்கள். ஒளி
வட்டம் அணைந்தது.
திரை மூடப்பட்டது.
பார்வையாளர்கள் கைதட்டினார்கள்.
***

நாடக அரங்கின் முன்னாலிருந்த பேரூந்துத் தரிப்பிடமானது
பயணிகளற்றுக் காணப்பட்டது. மேடையிலிருந்த அதே ஜோடிபேரூந்து நிலையத்துக்கு வந்து அங்கிருந்த சீமேந்து
இருக்கைகளிரண்டில் அமர்ந்து கொண்டார்கள்.
“செல்லமே உனக்காக வேணும்னா… என்னால
தேவதையாகவும் முடியும். இல்லேன்னா ஒரே கணத்துல
காளியாகவும் முடியும். என்ன சொல்றே? எனக்கு இப்ப உன்னோட
சம்மதம் மட்டும்தான் வேணும்…”
வாலிபன் கொட்டாவி விட்டான்.
“கிளம்புவோமா? குளிக்கணும். இந்த ஜீன்ஸை எட்டு நாளாக்
கழுவல. கொஞ்சம் தூங்கி எழும்பணும்.”
“என்னது? எட்டு நாளாக் கழுவாத உடுப்பையா
உடுத்துட்டிருக்கே?” என அந்த இளம்பெண் அறுவெறுப்போடு
கேட்டாள்.
“ஓஹ்… சவுக்காரக் கட்டியொண்ணு வாங்கணும். போறப்போ
சந்திக் கடையில பரோட்டா வாங்கிட்டுப் போகணும். இப்பன்னா
சாப்பிடக் கூட முடியாதளவுக்கு களைப்பா இருக்கு…”

“சும்மா கொஞ்சம் யோசிச்சுப் பாரேன். இப்ப நாங்க ரெண்டு
பேரும் ஒரே வீட்டுல இருந்தோம்னா, நான் உனக்கு சமைச்சுப்
போட்டிருப்பேன். உன்னோட ஜீன்ஸைக் கழுவிப்
போட்டிருப்பேன்… இல்லையா?”
வாலிபன் குழம்பிப் போய், கலைந்திருந்த தலைமுடியின் மீது
கைகளை வைத்துக் கொண்டான்.

“செலவுகள் கூட குறைவாத்தானே இருக்கும் அப்போ. இப்ப
உனக்கு பிரஸ்ல இருந்து மாசம் எவ்ளோ வருது?”
“என்னால சமாளிச்சுக்க முடியும். நாங்க கிளம்புவோமா?” என
வாலிபன் பொறுமையிழந்தவனாகக் கேட்டான்.
“சரி… சரி… சும்மா யோசிச்சுப் பாரு… இப்ப உனக்கு
எத்தனை பரோட்டா வேணும்? சரி… அஞ்சுன்னு வச்சுக்குவோம்.
ஒண்ணு இருபது ரூபான்னு வச்சுக்கிட்டா அதுக்கே நூறு ரூபா.
அஞ்சு நாளும் கடையிலதான் சாப்பிடுறேல்ல…? அப்ப
சாப்பாட்டுக்கே ஐநூறு ரூபா. கிழமைக்கு அஞ்சு நாள் மட்டுமாவது
நான் உனக்கு சமைச்சுப் போட்டேன்னா… அப்ப… ம்ம்… அரிசி
கிலோ என்ன விலை இப்ப? ம்ம்… அறுபது ரூபான்னு
வச்சுக்கிட்டாலும்…. அறுபது தானே?… அப்போ…”
“கதையை நிப்பாட்டு… இது சரிப்பட்டு வராது…” என
வாலிபன் கோபத்தில் கத்தினான்.
“ஐயையோ… கோபப்படாதே… எப்படி இதைச்
சாத்தியப்படுத்தலாம்னுதானே நான் யோசிச்சிட்டிருக்கேன்.
கொஞ்சம் யோசிச்சுப் பாரு… எப்படியும் நம்ம ரெண்டு பேராலயும்
சமாளிக்க முடியும்னுதானே சொல்லிட்டிருக்கேன்…”
தூரத்தில் வந்து கொண்டிருந்த நூற்றி இருபதாம் இலக்கப்
பேரூந்தைக் கண்ட வாலிபன் எழுந்து நின்றான்.
“காலையில நமக்கு ப்ரெட் சாப்பிடலாம்… ஒரு குழம்பு
போதும்ல அதுக்கு? அப்ப பகலைக்கு…”

வாலிபன் பேரூந்துக்கு கை காட்டினான். பேரூந்து வேகம்
குறைவதைக் கண்டான்.
“பகலைக்கு கடையில சாப்பிடலாம்… பிறகு ராத்திரிக்கு
வேலை விட்டு வந்த பிறகு…”
வாலிபன் முன்னால் அடியெடுத்து வைத்தான். பேரூந்து
அவர்கள் இருவரின் முன்பு நிறுத்தப்பட்டிருந்தது. இளம்பெண்
கலவரமடைந்து எழுந்து நின்றாள்.
“ஹேய் ஹேய்… நான்தான் பேசிட்டிருக்கேன்ல… என்ன
கிளம்பப் பார்க்குறே? ஹேய்…

“எனக்கேட்டவாறு அவனது
மேற்சட்டைக் கையைப் பிடித்திழுத்தாள்.
பேரூந்திலிருந்து யாரும் இறங்கவில்லை. ஜன்னல் வழியே
அவர்களை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த கண்களில்
பொறுமையற்ற ஆர்வம் படர்ந்திருந்தது.
“ஐயா ஏறப் போறீங்களா?”என நடத்துநர் தவினூடு

எட்டி பார்த்துக் கேட்டார்.
“இல்லல்ல… நாங்க ஏறல” என இளம்பெண் பதிலளித்தாள்.
நடத்துனர் முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்க, பேரூந்து
முன்னால் நகர்ந்தது.
என்ன பண்ணினே நீ? அதுதான் கடைசி பஸ்…”

சென்று கொண்டிருந்த பேரூந்தை நோக்கி இரண்டு, மூன்று
அடிகள் ஓடிச் சென்று விட்டு, மீண்டும் பேரூந்துத் தரிப்பிடத்துக்கே
கோபத்தோடும், தோற்றுப் போன சோர்வோடும் திரும்பி வந்தான்.
இளம்பெண் அவனது தோளைப் பற்றிப் பிடித்தாள்.
“இங்க பாரு. இப்படிக் கொஞ்சம் உட்காரு. நாங்க எங்க
விட்டோம்…? ஆஹ்… பரோட்டா பற்றி… ஒண்ணு இருபது
ரூபான்னா அஞ்சுக்கு… அப்ப நூறு ரூபாய்…”
“நூறைத் தாண்டும்… பரோட்டாவுக்கு குழம்பும் வாங்கணும்.
அதுக்கு இன்னுமொரு இருபது ரூபா கூடும்” என வாலிபன்
பொறுமையாகப் பதிலளித்தான். வேறு எதையும் செய்ய வழியற்ற
காரணத்தால் இந்த மூதேவி கூறுவதையெல்லாம் கேட்டுக்
கொண்டிருக்க மனதைத் தேற்றிக் கொண்டு அமர்ந்திருப்பது போல
காணப்பட்டான்.
“என்னது? குழம்புக்கு இருபது ரூபாயா? அடடா… விலை
கூடுதலா இல்லையா?!” என அவள் வியந்து போனாள்.
அவனது முகத்தில் புன்முறுவல் தோன்றியது. கடைசியில்
அவளுக்கு எதையோ தெளிவுபடுத்தி விட முடிந்ததைப் போன்ற
நிம்மதி அவனது முகத்தில் தோன்றியது.
“அதான் சொன்னேனே… உன்னால புரிஞ்சுக்க முடியாது…
அப்படி வாழ்றது கஷ்டம்… இது சரிப்பட்டு வராது…”
இளம்பெண் யோசனையில் ஆழ்ந்தாள்.

 

“சமைச்சுக்குறது லாபமில்லையா?”
“எங்க சமைக்குறதப்பா? வேலை முடிஞ்சு வீட்டுக்குத்
திரும்புறதே பாதிப் பொணமாத்தான். சோறு சமைக்குறத விட்டு
ஹீட்டர் போட்டு டீ ஒண்ணு போட்டுக்கவாவது உடம்புல
தெம்பிருக்காது. சீமேந்துக்கு… இங்க பாரு… பெயின்டுக்கே எப்படி
கையில தோலுரிஞ்சு போயிருக்குன்னு… வேலை விட்டு
வரும்போது கால்கள் கனத்துப் போயிருக்கும். நடக்கவே
தெம்பிருக்காது. இனி எப்படி சமைக்குறது? உடம்புல கொஞ்சம்
தண்ணியை ஊற்றிக் குளிச்சிட்டு கட்டில்லதான் விழத் தோணும்
அந்த நேரத்துல. சாப்பிடுறது கூட ஏதோ சடங்கு மாதிரிதான்
நடக்கும்…”
இளம்பெண் யோசித்துக் கொண்டிருந்தாள். தனது
தொடைகளில் முழங்கைகளை ஊன்றியிருந்த வாலிபன் கை
மணிக்கட்டுகளிரண்டையும் மென்மையாக மோத வைத்துக்
கொண்டிருந்தான். இளம்பெண் திடீரென அவனைப் பார்த்தாள்.
“சரி… என்னையும் கூடக் கூட்டிட்டுப் போ. இனிமே
ராத்திரிக்கு நான் சமைச்சு வைக்குறேன்…”
வாலிபன் “சே!” சொல்லிப் புரிய வைக்க
முடியாததால் அமைதியாக இருப்பதே சிறந்தது என்பது போலக்
காணப்பட்டான்.
“கிளம்பலாம். ஆட்டோ ஒண்ணுலயாவது போகலாம். நேரம்

இப்ப பன்னிரண்டுக்கு அஞ்சு நிமிஷம்தான் பாக்கியிருக்கு…
இன்னிக்கும் குளிக்கக் கிடைக்காது…”

இளம்பெண் விருப்பமேயில்லாமல் எழுந்து கொண்டாள்.
“என்னை பிடிச்சிருக்குதானே…? சொல்லுடா…
பிடிக்கலைன்னாலும் இப்பவே என்னை நீ கூட்டிட்டேதான்
போகணும்… சரியா? நிச்சயதார்த்தத்துக்கு இன்னும் ஒரு
கிழமைதான் பாக்கியிருக்கு…”
வாலிபன் நெற்றியைத் தடவிக் கொண்டான்.
“நாம இப்ப உன்னோட வீட்டுக்குப் போறோம். உன்னை
உன் வீட்டுக்குப் பக்கத்துல இறக்கி விட்டுட்டு நான் என்னோட
ரூமுக்குப் போயிடுவேன்…”
வாலிபன் முச்சக்கர வண்டியொன்றுக்கு கையை நீட்டினான்.
இளம்பெண் அழத் தொடங்கினாள்.
“அந்த கொரில்லாவுக்கு நான் சொந்தமாகப் போறதைப்
பார்த்துட்டிருக்க உன்னால முடியுமாடா?” என சிணுங்கியவாறே
கேட்டவள் மீண்டும் பேரூந்து தரிப்பிட வாங்கில் அமர்ந்து
கொண்டாள்.
முச்சக்கர வண்டி நின்றது. அவன் அதில் ஏறிக் கொண்டான்.
“வரப் போறியா இல்லையா?” என்று கேட்டான்.
“வர மாட்டேன்…” என்று அவள் முரண்டு பிடித்தாள்.

“நாங்க போவோம்” என்று வாலிபன் முச்சக்கர வண்டி
சாரதிக்கு கட்டளையிட்டான்.
புழுதியைக் கிளப்பியவாறு சென்று கொண்டிருந்த முச்சக்கர
வண்டியை இளம்பெண் கண்ணீரினிடையே பார்த்துக்
கொண்டேயிருந்தாள்.

***

சற்று தூரம் கடந்ததும் அவனுக்குக் கவலை தோன்றியது.
“திரும்பிப் போவோம்…” என்றான்.
பேரூந்துத் தரிப்பிடத்தில் அவளிருக்கவில்லை.
வாலிபன் பணத்தைக் கொடுத்து விட்டு வண்டியிலிருந்து
இறங்கிக் கொண்டான்.
பேரூந்துத் தரிப்பிடத்தில் அவர்கள் இருவரும் நடிக்கும்
நாடகத்தின் விளம்பரம் ஒட்டப்பட்டிருந்தது.
‘யாதும் நலமே’ என அவர்கள் இருவரும் ஒருவரையொருவர்
அரவணைத்திருக்கும் புகைப்படத்தின் கீழ் சிவப்பு எழுத்துகளில்
அச்சிடப்பட்டிருந்தது. அவன் பேரூந்து தரிப்பிடத்திலிருந்து
வெளியே வந்தான். தெரு விளக்குகளின் மஞ்சள் வெளிச்சம் சுற்றி
வரப் பரந்திருந்தது.
“யாதும் நலமே. மீண்டும் நாளை” என தனக்குத் தானே கூறிக்
கொண்டான்.

 

– எம். ரிஷான் ஷெரீப்

 

 

 

 

எழுத்தாளர் பற்றிய குறிப்பு

சந்தினி ப்ரார்த்தனா
இலங்கையில், சிங்கள மொழியில் சிறுகதைகளையும்,
கவிதைகளையும் எழுதி வரும் பெண் எழுத்தாளரான சந்தினி
ப்ரார்த்தனா ஒரு ஊடகவியலாளரும் ஆவார். இச் சிறுகதையானது,
அண்மையில் வெளிவந்துள்ள இவரது சிறுகதைத்
தொகுப்பிலிருந்து, இவரது அனுமதியோடு தமிழில்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *