எனது பல்கலைக்கழக நாட்களில் வில்லியம் ப்ளேக் (William Blake) கால ஆங்கிலக்கவிதைகளுடன் எனக்கு ஓரளவு பரிச்சயம் ஏற்பட்டிருந்தது. எங்கள் பல்கலைக்கழ நூலக இராக்கைகளில் நேர்த்தியாக அடுக்கப்பட்டு யாராலும் தீண்டப்படாமல் அடுக்கில் நிலைக்குத்தாக நிற்கும் புத்தகங்களின் பக்கமாக சஞ்சரிப்பதும் இயலுமானளவு அவற்றை நுகர்வதுமே அப்போதைய என் வாழ்க்கைப் பணியாக இருந்தது. நானும் கவிதை எழுதிக்கொண்டிருந்த நாட்கள் அவை. என் கவிதையின் மொழியும், அதன் உள்ளடக்கமும், தத்துவமும் ஆழம்பெற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அதிகமாக இருந்தது. அதற்கான பயிற்சியாக இந்த ஆங்கிலக் கவிதைகளை புரிந்தும் புரியாமலும் படித்துக்கொண்டிருந்தேன். ஃப்ரொஸ்ட்டும், வில்லியம் ப்ளேக்குமே என்னில் அழியாத சித்திரமாக என்றும் எஞ்சிவிட்டனர். இப்போது நினைத்தாலும் அவர்களின் கவிதைகள் அதன்அசைவுகள் என்னுள் ஆழமாக உள்ளோடி இருப்பதை உணர்கிறேன்.

ஃப்ரொஸ்ட் மனித வாழ்க்கையை இயற்கை நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தி வாழ்வு பற்றிய தத்துவார்த்த நோக்குககளை தன் கவிதைகளில் வெளிப்படுத்தியவர். அவரது கவிதைகளில் விரியும் இயற்கைச் சூழல் இலங்கை வாசகருக்கு அந்நியமாக இருந்தாலும் அது கிளர்த்தும் பரவசம், இயற்கையின் இயங்கியலையும் மனித வாழ்வின் சாரத்தையும் கவிதைகளில் அவர் தத்துவார்த்தமாக இணைக்கும் புள்ளி, வாழ்வின் தரிசனங்களை கண்முன் காட்சிப்படுத்தும் அற்புதமான விவரண மொழியும் அவரது கவியுலகை விரிந்த தளத்துக்குக் கொண்டுசெல்கின்றன. எல்லோருக்கும் தெரிந்துகொள்ள அல்லது (பின்நவீன மொழியில்) உணர்ந்துகொள்ள அவரது கவிதைகளில் ஏதோ இருப்பதாக இன்றும் உறுதியாக நம்புகிறேன். அதனால்தான் அவரது கவியுலகம் காலத்தையும், இடத்தையும் கடந்துவிட்ட ஒரு நித்திய தத்துவத்தின் தரிசனம் என்று எனக்கு தோன்றுகிறது.

அவரது stopping by Woods on a Snowy Evening இப்போது உடனடியாக என் நினைவுக்கு வரும் கவிதை. பனி விசிறும் அந்தியில் காட்டின் வழியே தனது சிறிய குதிரையுடன் நடந்து செல்லும் ஒருவன் அந்த இயற்கையின் காட்சிகளை இரசிப்பதும் அதனூடே மனித வாழ்வின் நித்தியமான இலட்சியத்தை நோக்கி அவனைச் செல்லத் தூண்டுவதுமான இலட்சியம் சார்ந்த ஒரு கவிதை அது. ஆனால் அதன் அழகியல் வெறும் இலட்சியக் குரலாக, அறிவுரைத் தன்மையுள்ள ஓர் அறப்பாடலாக மட்டுமே சுருங்கிவிடுவதிலிருந்தும் கவிதையை விலக்கி வேறு தரிசனங்களை நோக்கி கொண்டுசெல்கிறது. பொதுவாக ஃப்ரொஸ்ட் போன்ற கவிஞர்களிடம் கவிதையின் அர்த்தத்தளத்தில் நிகழும் தவறுகள் பெரும்பாலும் காணக்கிடைப்பதில்லை. இந்தக் கவிதை உட்பட ஃப்ரொஸ்ட்டின் பல கவிதைகளை இலங்கையின் சில பல்கலைக்கழகங்கள் தங்கள் பாடத்திட்டத்தில் கொண்டிருக்கின்றன. கவிதையின் அறம், இலட்சியக் கருத்துக்களைத் தாண்டி ஃப்ரொஸ்ட்டின் கவிதையில் எப்போதும் சித்தரிக்கப்படும் இயற்கையின் விதிகள் எப்படி மனித வாழ்வின் விதிகளோடு பொருந்துகிறது என்ற கன்னியை அவர் அவிழ்க்கும் அற்புதமும் அழகியலும், கவிதையின் புனைவுச்செப்பமும்தான் உலகெங்கிலும் அவரது கவிதைகளுக்கான மிகப் பெரிய ஏற்பை அளித்துள்ளன என்று நம்புகிறேன்.

இவை யாருடைய மரங்கள் என்று

எனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.

அவனது வீடு கிராமத்தில் இருந்தாலும்;

அவனது காடு பனியால் நிரம்புவதைப் பார்க்க

நான் இங்கே நிற்பதை அவன் பார்க்க மாட்டான்

 

என் குட்டி குதிரை விநோதமாக நினைத்திருக்க வேண்டும்

ஆண்டின் மிக இருண்ட மாலைப் பொழுதில்

மரங்களுக்கும் உறைந்த ஏரிக்கும் இடையில்

அருகில் பண்ணை வீடு இல்லாமல் நிறுத்தியதை.

அது தனது சேணம் மணிகளை அசைக்கிறது

ஏதாவது தவறு நிகழ்ந்துவிட்டதா என்று கேட்க.

அதைத் தவிர மெலிதாய்ப் படர்ந்திருக்கும் பனித்துளிகளை

அள்ளிச் செல்லும் எளிதான காற்றின் ஓசை மட்டுமே அங்குள்ளது.

 

காடு அழகானது ஆழமும் அடர்த்தியுமானது,

ஆனால் நான் வாக்குறுதிகளை

நிறைவேற்றவே விரும்புகிறேன்,

நான் தூங்குவதற்கு முன் பல மைல்கள் செல்ல வேண்டும்,

நான் தூங்குவதற்கு முன் பல மைல்கள் செல்ல வேண்டும்.

 

(The woods are lovely, dark and deep,   

But I have promises to keep,   

And miles to go before I sleep,   

And miles to go before I sleep.)

ஃப்ரொஸ்ட்டின் இந்தக் கவிதை கூட மனித வாழ்வின் இலட்சிய நோக்குகளையும், அதன்அர்த்தங்களையும், விதிகளையும் இயற்கையுடன் இணைத்து முன்வைக்கிறது. மனிதவாழ்வின் முன்னுள்ள பணிகளையும், வாழ்க்கையின் நெறிகளையும், இலட்சியத்தையும், அறத்தையும் நோக்கிய நெடு வாழ்வின் பயணத்தில் குறுக்கீடு செய்யும் சின்ன விசயங்களைஎளிதாகக் கடந்து செல்வதற்கான மனத் தயாரிப்பை நமக்குத் தருகிறது. கவிதையில் வரும்கடைசி வரிகள் தான் இங்கு மிக முக்கியமானதாக கவிதையின் மைய ஆன்மாவாகவெளிப்படுகிறது. இது போன்ற கவிதைகள் இன்றைய ஆங்கில இலக்கிய சூழலில் (தமிழ்ப்பின்நவீன சூழலில் அல்ல) கேலிக்கோ, நிராகரிப்புக்கோ உட்படுத்தப்படுகிறதா என்றால்இல்லை. ஆங்கிலக் கவிதைஉலகம் கடந்து வந்த பாதையாகஒரு காலகட்டஇயங்கியலாக அவை பார்க்கப்படுகின்றன. உரையாடப்படுகின்றன. இன்று எழுதும் ஒருஆங்கிலக் கவிஞன் தன்னை ஷேக்ஸ்பியரின், ஈட்ஸின், ஃப்ரொஸ்ட்டின், ப்ளேக்கின்தொடர்ச்சியாக, அடுத்தடுத்த தலமுறையாக கருதுகிறான். இந்தத் தொடர்வரிசைக்கிடையில் எந்தத் திரையையும் அவர்கள் போட்டுக் கொண்டதில்லை.

ஃப்ரொஸ்ட் இந்தக் கவிதையை 1922 ஆண்டு எழுதினார். ஆனால் இந்தக் கவிதையைஅந்தக் காகட்டத்துக்கு மட்டுமே உரியதாகவோ அல்லது அந்த சூழலுக்கு மட்டுமேஉரியதாகவோ பார்க்க முடியவில்லை. இன்றும் படிக்கவும், உரையாடவும்தகுதியானதாகவே அது இருக்கிறது.

 

ஃப்ரொஸ்ட் அளவுக்கு நான் வாசித்த மற்றொரு கவிஞர் வில்லியம் ப்ளேக்தான். ப்ரொஸ்ட்டை விட காலத்தால் முந்தியவர் வில்லியம் ப்ளேக். 1757-1827 காலப்பகுதியைச்சேர்ந்தவர் ப்ளேக். ஆனால் ப்ளேக் கலகத்தன்மை வாய்ந்தவர். பெரும்பாலும் அவரதுகவிதைகளில் ஓர் கூர்மையான சமூக விமர்சனத்தை முன்வைத்தார். அதிகமும் மதஅதிகாரத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். இந்தத் தளத்தில்அவரது அன்பின் தோட்டம் என்கிற கவிதை முக்கியமானது. மேற்கில் அப்போது நிலவியகத்தோலிக்க மத அதிகாரத்தின் முகவர்களான போப்கள் மீது அவரது கோபத்தின்கனிகளை இந்தக் கவிதைக்குள் காண முடிந்தது. மத அதிகாரத்தின் மீதான வெறும்சீற்றமாக மட்டும் சுருங்கியதல்ல அவரது கவிதை. ஆழமான விமர்சனங்களையும், மாற்றுப்பார்வைகளையும், நுண் விசாரணைகளையும் தீர்க்கமாக முன்வைக்கிறது. The Garden of Love கவிதை மதத்தின் பேரால் அப்போது அவரது சமூக சூழலில் நிலவியஏற்றத்தாழ்வுகளையும், புறக்கணிப்புகளையும், ஒடுக்குமுறையையும் பேசுகிறது. அவர் சிறுவயதில் விளையாடிக் களிப்புற்றிருந்த பூங்கா ஒரு மதத்தலமாகஆலயமாக மாறிவிட்டதன்அவலத்தைச் சொல்கிறார்.

 

 

The Garden of Love

 

I went to the Garden of Love,
And saw what I never had seen:
A Chapel was built in the midst,
Where I used to play on the green.

And the gates of this Chapel were shut,
And Thou shalt not writ over the door;
So I turn’d to the Garden of Love,
That so many sweet flowers bore.

And I saw it was filled with graves,
And tomb-stones where flowers should be:
And Priests in black gowns, were walking their rounds,
And binding with briars, my joys & desires.

 

நான் அன்பின் தோட்டத்துக்குச் சென்றேன்

நான் அங்கு ஒருபோதும் பார்த்திராதவற்றை

பார்த்தேன் என்கிறார். நான் மகிழ்ந்து விளையாடிய பூங்காவில் இப்போது ஒரு ஆலயம்கட்டப்பட்டுவிட்டது என்கிறார். அது அவர் போன்றவர்களுக்குத் திறக்கப்படாமல்மூடப்பட்டிருந்ததை துக்கத்துடன் சொல்கிறார். ஆனால் அவர் இளமையில் அங்கு கண்டஅன்பின் தோட்டமோ பூக்களால் நிரம்பி இருந்தது என்கிறார். ஆனால் இப்போது அதுகல்லறைகளால் நிரப்பப்பட்டுவிட்டதையும், பூக்களுக்கு பதிலாக கல்லறைக் கற்கள்சூழ்ந்திருப்பதையும் ப்ளேக் துக்கத்துடனும், கோபத்துடனும் பதிவுசெய்கிறார். அப்போதைய கத்தோலிக்க ஒழுக்க அறம் உச்சத்திலிருந்த அவரது சமூக சூழலில் இதுஒரு புரட்சிகரமான குரல்தான்.

 

மேற்கின் ஆங்கிலக் கவிதை இயக்கத்தக்கு வெளியேயும் அந்நாட்களில் என் வாசிப்புலகம்விரிந்திருக்கிறது. குறிப்பாக இந்திய, இலங்கை ஆங்கிலப் படைப்புகள் மீதுபல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த போதே எனக்குள் ஒருவிதகிறுக்குத்தனமான ஈடுபாடு ஏற்பட்டு விட்டது. நான் எனது பட்டத்துக்கான விஷேடபாடமாக சமூகவியலை தேர்வு செய்திருந்தாலும் எனக்குள் இருந்த இலக்கிய ஈடுபாடும், பல்கலைக்கழக அறிவுச் சூழலும் ஆங்கில இலக்கியத்தின் பக்கம் என்னை நகர்த்தியதாகநினைக்கிறேன். இப்போது நினைத்துப் பார்க்கையில் உண்மையில் நான் ஆங்கிலஇலக்கியத்தையோ அல்லது தமிழ் இலக்கியத்தையோதான் விஷேட துறையாகக்கற்றிருக்க வேண்டியவன். அப்போது நான் ஒரு முதிரா இலட்சியவாதியாக (immatureidealist) அலைந்து கொண்டிருந்தேன். அந்த இலட்சியம் அரசியல், சமூகம், பண்பாடு, புரட்சி போன்ற விஷயங்களில் மையமிட்டிருந்தது. அந்த வேட்கைதான்பல்கலைக்கழகப்பாடத் தெரிவிலும் என்னைப் பாதித்தது. ஆனால் உண்மையில் நான்எப்போதும் இலக்கியத்துக்குரியவனாகவே இருந்து வந்திருக்கிறேன். கற்பனையும், உள்ளுணர்வும், விமர்சனமும், படைப்புச் செயன்முறையும் கொண்ட அழகியல்மூளைகொண்டவனாகவே என்னை நான் கருதிக்கொள்கிறேன். பல்கலைக்கழகத்தில்உண்மையாக என்னை அடையாளம் கண்டு என் பாதையில் என்னைச் செலுத்த யாரும்அங்கு இல்லாமல் போனது என் துரதிஸ்டம் என எண்ணி நான் எப்போதும் வருந்துவதுண்டு.

இந்நாட்களில்தான் கமலாதாஸ் சுரைய்யா, ரிச்சர்ட் டி சொய்ஸா, ரஜீவ விஜேசிங்க, சல்மான் ருஷ்டி, புன்னியகாந்தி விஜயநாயக, அம்ரிதா ப்ரீதம் ஷ்யாம் செல்வதுரை எனஇந்தியஇலங்கைப் படைப்பாளிகள் பலர் எனக்கு அறிமுகமாகினர். அம்ரிதா ப்ரீதம்முதன்முதலாக தமிழில் தான் எனக்கு அறிமுகமானார். அவர் பஞ்சாப் மற்றும் ஹிந்தி ஆகியமொழிகளிலேயே எழுதியவர். ஆனாலும் அவரது படைப்புகள் பெரும்பாலானவைஆங்கிலத்தில் கிடைத்தன. இதனால் நான் அவரை இந்திய ஆங்கிலப் படைப்பாளியாகவேஎண்ணிக்கொண்டேன். இந்தியப் பிரிவினை இலக்கியத்தில் ஒரு முக்கியபடைப்பாளியாகவே அவர் கருதப்பட்டார். ஆனால் அவரது பெண்ணிய முகம் என்பது மிகமுக்கியமானது என்பதை நான் போகப் போகப் புரிந்துகொண்டேன்.

இலங்கையிலிருந்து எம். பௌசர் அவர்களினால் வெளியிடப்பட்ட மிக முக்கியமானஇலக்கியச் சிற்றிதழான மூன்றாவது மனிதன் இதழ் ஏழில் அட்டைப்படக் கவிதையாகஅம்ரிதா ப்ரீதத்தின் கவிதை ஒன்றின் தமிழ் மொழிபெயர்ப்பு வெளிவந்தது. ஒரு பெண்ணின்துயரார்ந்த வாழ்வை மிக ஆழமாக வெளிப்படுத்தும் கவிதை அது. அந்தக் கவிதையைப்படிக்கும் போது ஒரு பதினாறு வயதுப் பையனாக  இருந்தேன். பால்நிலை சார்ந்து ஒருபெண் எப்படி நம் கண்களுக்குப் புலனாகாமல் சுரண்டப்படுகிறாள் என்பதை எவ்வளவுஅற்புதமாகவும், எளிமையாகவும் இந்தக் கவிதை சொல்கிறது என உள்ளூர எனக்குள்சில்லிட்ட ஆச்சரியம் இன்றும் என்னில் படிந்திருக்கிறது. அது என் மிக இளமைக்காலமாகஇருந்ததால் அந்தக் கவிதை எனக்கு மனப்பாடமாகவே ஆகிவிட்டது.

அந்தக் கவிதையை என்னால் இப்போதும் என் நினைவிலிருந்து சொல்ல முடியும்.

எனது மனைவி வேலைக்குச் செல்வதில்லை

அப்படியாயின் உலகம் ஓயாமல்

சுழல்வதற்காய் உழைப்பவர் யார்?

சமையல் செய்வதும்

துணிகளைத் தோய்ப்பதும் தண்ணீர் சுமப்பதும் யார்?

குழந்தைப் பராமரிப்பும்

நோயாளர் கவனிப்பும் எவரது வேலை?

ஆண் மகன் ஒருவன் வேலைசெய்யவும்

ஊதியம் பெறவும் உதவும் சக்தியை அளிப்பது

எவரது வேலை?

எவரது உழைப்பு கண்ணில் படாதது?

எவரது உழைப்பு காதில் விழாதது?

சம்பளம் குறைந்ததும்

சம்பளம் அற்றதும் எவரது உழைப்பு?

எவரது உழைப்பு கணக்கெடுக்கப்படாதது?”

அம்ரிதா ப்ரீதத்தின் இந்தக் கவிதையைப் படிக்கும் போது நான் மிக இளவயதில்இருந்தாலும் இலக்கியத்தில் பெண்ணிய இலக்கியம் என ஒரு வெளி இருப்பதையும் என்வாசிப்பனுபவத்தில் அறிந்திருந்தேன். அப்போதைய நிலையில் நான் வாசித்த மிகச் சிறந்தபெண்ணியக் கவிதையாக இதனையே கருதினேன். இது எனக்குள் பெரியஅதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டது. பெண்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை இவ்வளவுநுணுக்கமாக, இயல்பாக, மிக அழகியலாகக் கவிதையில் சித்தரிக்க முடியும் என்பதுஎனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. இந்தக் கவிதை மூலம் அம்ரிதா ப்ரீதம் மிகத் தாக்கம்மிக்க ஒரு பெண்கவிஞராக என் மனதில் சித்திரமானார்.

பல்கலைக்கழகம் சென்றுவிட்ட பிறகு பல்கழைக்கழக நூலகத்திலும் வெளியிலும்கிடைக்கும் ஆங்கிலக்கவிதைகளை மிக விருப்புடன் வாசிப்பேன். என் தமிழ் வாசிப்பில்ஏற்கனவே அறிந்திருந்த ஆங்கிலக் கவிஞர்களின் கவிதைகளைத் தேர்வுசெய்து புரிந்தும்புரியாமலும் அப்போது வாசித்துக் கொண்டிருப்பேன். W.B. Yeats இன் Song of the old mother கவிதையை வாசித்த போது எனக்கு அம்ரிதா ப்ரீதத்தின் இந்தக் கவிதைநினைவுக்கு வந்தது. இரண்டு கவிதைகளினதும் மையக்குரல் ஒன்றுதான். பெண்கள் மீதானதிறந்த மற்றும் மூடிய நிலைகளிலான அடக்குமுறைகளையும், சுரண்டலையும் ஈட்ஸூம்வெளிப்படுத்தும் போது இந்த பால்நிலை சார்ந்த பாரபட்சம் இந்தியப் பண்பாட்டுக்குமட்டும் உரியதல்ல என்பதைப் புரிந்துகொண்டேன். ஒரு காலத்தில் மேற்கும் இந்தசூழலில்தான் சிக்கி இருந்திருக்கிறது.

I RISE in the dawn, and I kneel and blow
Till the seed of the fire flicker and glow.
And then I must scrub, and bake, and sweep,
Till stars are beginning to blink and peep;
But the young lie long and dream in their bed
Of the matching of ribbons, the blue and the red,
And their day goes over in idleness,
And they sigh if the wind but lift up a tress.
While I must work, because I am old
And the seed of the fire gets feeble and cold.

ஈட்ஸின் இந்தக் கவிதைக்கும் அம்ரிதாவின் கவிதைக்குமிடையில் அவ்வளவு பெரியஇடைவெளிகள் இல்லை. இரண்டும் எனக்குள் ஒரேவிதமான அதிர்வுகளையே ஏற்படுத்தின. ஆனால் இரண்டு கவிதைகளிலும் ஒரு முக்கியமான வித்தியாசத்தைக் கண்டேன். அது, ஈட்ஸ் எப்போதும் கவிதையின் கவித்துவத்தின் மீது அக்கறை எடுத்துக்கொள்கிறார். ஈட்ஸ்உடன் ஒப்பிடும்போது அம்ரிதா ப்ரீதம் தன் கவிதைகளில் அவ்வளவு கவித்துவச்செறிவுக்கும் கற்பனை ஆழத்துக்கும் பெரிதளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லைஎன்பதுதான். பெண்களின் அவல வாழ்வை, இந்தியப் பண்பாடு எப்படி பெண்களைபாதிக்கப்பட்டவர்களாக (victims) மாற்றுகிறது என்பதை மிக எளிய சொற்களில்சித்திரமாக்குகிறார். ஈட்ஸ் தன் அனைத்து விதமான கவிதைகளிலும் அதீத கற்பனைக்கும், மொழி அழகியலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர். அம்ரிதாவின் கவிதைகளைநான் அவரது மூல மொழியிலிருந்து ஆங்கில மொழிபெயர்ப்பினூாடகவே படித்ததனால்எனக்கு அப்படித் தோன்றுகிறதோ என்கிற சந்தேகமும் எழுவதுண்டு.

அவரது கவிதைகளைப் போலவே புனைவுகளும் மிக எளிமையானவை. ஆனால்ஆழமானவை. வாசிப்பு இரசனையும், அவலச் சுவையும் கொண்டவை. இந்தியப்பண்பாட்டில் பால்நிலைசார்ந்து உருவாகி வந்த ஏற்றத்தாழ்வான சமூகஅமைப்பை நிணமும் சதையுமாக தன் கதைகளில் அவர் எழுதி இருந்தார். அவரது கதைகள்நேரடியான கதைகள். மிகச் சிறு அளவில் மட்டுமே குறியீட்டு அர்த்தங்கள் கொண்டவை.

***

 

-ஜிஃப்ரி ஹாசன்

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *