தில்லை திடுக்கிட்டுப் போய் நகர்ந்து நடந்தாள். அப்போதுதான் தான் இந்த உலகத்தில் இருப்பதை உணர்ந்தவள் போல சுற்றும் முற்றும் பார்த்தாள். அவள் காதருகே ஏதோ ஒரு வாகனத்தின் ஹாரன் அல்லது கிரீச்சிடும் பிரேக் என ஏதோ ஒன்றின் சத்தம் ஒரு சில வினாடிகளுக்கு முன்பிருந்த
காலத்தில் இருந்து ஒலித்தது. சாலையில் இப்போது அந்த சத்தத்திற்கான எந்த அடையாளமும்
இல்லை. வழக்கமான பழகிய ஹார்ன் சப்தங்களோடு கிட்டத்தட்ட அமைதியாகவே இருந்தது.
அவள் தன்னைச் சுற்றிலும் பார்த்தாள். அருகிலிருந்து எந்த வாகனமும் விலகிச் செல்லவில்லை.
என்ன நடந்ததென்று தெரியாமல் குழப்பமும் பதற்றமும் கொண்டவளாய், என்ன நடந்திருக்கும்
என மீண்டும் ஒருமுறை யோசித்தபடி மேலே நடந்தாள். எல்லோரும் அவளை தீவிரமாக பார்ப்பது
போல இருந்தது. தனக்கு முன்னால் சாத்தியமுள்ள தொலைவில் அதிவிரைவாக சென்ற ஒரு
காரை வைத்து, அவள் என்ன நடந்திருக்கக் கூடும் என யூகிக்க முயற்சித்தாள். அதிவேகமாக
அவளை நெருங்கி வந்துவிட்ட கார், அபாயகரமான முறையில் அவளை மோதுவது போல
வந்துவிட்டு மயிரிழையில் விலகி, கடந்து சென்றிருக்கும். அப்போதுதான் அந்த ஹார்ன் அல்லது
பிரேக் கிரீச்சிடும் சத்தம் அவளின் மிதக்கும் நினைவுகளை துப்பாக்கி குண்டு பட்டது போல
சிதறடித்து கேட்டிருக்கக் கூடும். சாலையில் தான் எங்கிருக்கிறோம் என கவனித்தாள். சாலையின் விளிம்பிலிருந்து மிகவும் உள் நகர்ந்து நடந்து கொண்டிருப்பதை அறிந்து பதறியவளாய் ஓரமாய் வந்தாள்.
அந்த கார் தன் மீது மோதி இருந்தால் என்னவாகியிருக்கும் என கற்பனை சென்றது. சாலையில்
தான் அடிபட்டுக் கிடப்பதை, கை, கால்கள் முறிந்து கிடப்பதை, அடையாளம் தெரியாமல்
சிதைந்து கிடப்பதை அவள் மனம் அடுத்தடுத்து காட்சிப்படுத்தியது அவள் தன் நொறுங்கிய
தலையில் இருந்து வெளியேறும் ரத்தம், அதன் அவலத்தின் பித்தேறிய நிறம், அப்போது எழும்
கொடூரமான வாசனை அவளை மிரட்சியடையச் செய்தது. மோசமான கற்பனைகளில் மனம்
பாய்ந்தோடுவதை உடனடியாக நிறுத்தும் விதமாக, தலையை நிமிர்த்தி உள்காட்சிகளில் இருந்து
வெளியே கண்களைத் திருப்பினாள். வெயிலும் சாலையில் வாகனங்களின் அடர்த்தியும்
ஒன்றுக்கொன்று பொருந்தாததாய் இருந்தது. ரமணி தியேட்டரில் காலைக்காட்சி
முடிந்துவிட்டதற்கு அறிகுறியாக, கேட் விரிய திறந்துவிடப்பட்டு, ஆள்நடமாற்றமின்றி இருந்தது.

சந்துரு இருப்பானா என யோசித்தாள். அவள் வரும் போது ஒருமுறைகூட அவன் இல்லாமல்
போனதில்லை என்றாலும் இந்த பதட்டம் ஏன் வருகிறதென்று தெரியவில்லை. அவனிடம் என்ன
சொல்வது? யோசித்துக் கொண்டு டிக்கட் கொடுக்கும் கவுண்டருக்கு அருகே சென்றாள். இந்த
நேரத்தில் இங்கே தன்னை தெரிந்தவர்கள் யாரும் கவனித்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை
உணர்வுடன் சாலையை உற்றுப் பார்த்தாள். இமைக்கும் பொழுதில் மோட்டார் வண்டிகளில்
செல்பவர்களின் முகங்களைப் பார்த்து அதில் தனக்குத் தெரிந்த முகம் எதுவும் இல்லையென
அசுவாசம் அடைந்தவளாய் திரும்பிக் கொண்டாள். உடனே பின்னால் தனக்குத் தெரிந்தவர்கள்
அனைவருமே இப்போது சாலையில் சென்று கொண்டிருப்பதைப் போன்ற உள்ளுணர்வினால்
பதட்டமடைந்து மீண்டும் திரும்பிப் பார்த்தாள். சாலையில் வாகனங்கள், முகங்கள் எல்லாம் மாறி
இருந்தன. இதிலும் தெரிந்தவர்கள் யாரும் இல்லை என்றாலும் இப்படி இந்த சாலையை தன்னால்
பார்த்துக் கொண்டே இருக்க முடியாது என்பதை உணர்ந்தவளாய், தியேட்டர் பக்கம் திரும்பி
உறுதியாக நின்று கொண்டாள்.
சந்துருவை இப்படி வந்து ஒரு குற்றவாளியைப் போல பார்ப்பது சகிக்க முடியாததாய் இருந்தது.
பகல் காட்சி ஆரம்பிக்க இன்னும் நேரம் ஆகும். புதுப்படம் என்றால் இப்போதிருந்தே கூட்டம்
காத்திருக்கும். இந்தப் படம் வெளியாகி கொஞ்சநாள் ஆகிவிட்டது. கூட்டம் முற்றிலும்
குறைந்துவிட்டது. அடுத்த காட்சிக்காக காத்திருப்பவர்கள் யாரும் இல்லை. திரையரங்கின்
முன்னால் இருந்த பிரமாண்டமான போஸ்டரில் கதாநாயகன் ஆவேசமாய் கைகளை உயர்த்தி
நின்றான். அவனைச் சுற்றி நான்கைந்து பேர், விதவிதமான முடிகள் காற்றில் பறக்க, வியர்வைத்
துளிகள் தெறிக்க, பலவிதமான நிலைகளில் அச்சத்தையும், அவர்கள் வாழ்வில் அனுபவித்திராத
பயங்கர வலியையும் உணர்ந்தபடி அந்தரத்தில் உறைந்திருந்தனர். சொர்க்கத்தில் நெய்யப்பட்ட
உடையை அணிந்திருந்த கதாநாயகி முகத்தில் விழும் அழகான முடிக்கற்றைகளை கையால்
ஒதுக்கியபடி தொலைவில் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் இருந்து
விதவிதமான கனவுகள் மிதந்து வெளியேறிக் கொண்டிருந்தன. அதன் அருகிலேயே நாயகனும்
நாயகியும் வெடித்துச் சிரித்தபடி இருந்தார்கள். சிரிப்பு நடிகர் வெறுத்துப் போனவராய்
அவர்களைப் பார்த்துக் கொண்டு நின்றார். அந்தக் காட்சியை பார்க்கும் போதே அவளுக்கு சிரிப்பு
வந்தது. படம் நல்லா இருக்கும் என நினைத்துக் கொண்டாள்.
அரங்கத்தின் கனத்த கதவைத் திறந்து கொண்டு உள்ளே நிறைந்திருந்த முடிவற்ற இருளில்
இருந்து வெளியே வருபவனைப்போல சந்துரு வந்தான். அவளைப் பார்த்து, வேறு யாருக்கும்
இல்லாத ஒரு புன்னகையை செய்து, “ஏன் இங்கியே நின்னுட்ட உள்ள வர வேண்டியதுதான?”
என்றான்.
அந்தப் புன்னகை அவள் திருமண வாழ்க்கையை, அதன் துன்பத்தை எல்லாவற்றையும்
ஒன்றுமில்லை எனச் செய்துவிட்டதைப் போல இருந்தது. இப்போது அவளால் புன்னகைக்க
முடிந்தது. ஆனால் அவள் அதை வெளியிடவில்லை. அவள் முகத்துக்குள் மறைந்திருந்த அந்த
புன்னகையைப் பார்த்தபடி அவன் அவள் சொல்வதைக் கேட்கத் தயாராய் இருப்பதை உணர்த்தி
நின்றான். கூர்மையாகக் கேட்க வேண்டும் என நினைத்தவன் போல, லேசாக வலது புறம்
திரும்பி, காதை அவள் வாய்க்கு நேராக இருக்குமாறு வைத்துக் கொண்டு காத்திருந்தான்.

மௌனமாக அவனை, அவள் பேச்சின் ஒலிகளை கண்களால் காண இருப்பன் போல தோன்றிய
அவன் கூர்த்த பார்வைக்கு முன்னால் தொங்கி ஆடிக் கொண்டிருக்கும் கேள்விக்குறியை அவள்
பார்த்தாள். “அவன் என்ன எப்பப்பாத்தாலும் அடிச்சிகிட்டே இருக்கான். கொன்னுருவான் போல
இருக்கு. இதுக்கு ஏதாவது ஒரு வழி பன்னு” என்றாள்.
அவன் கண்களின் முன்னால் இருந்த அந்த மாயக் கேள்விக்குறி மறைந்துவிட்டதைப் போல
திருப்தியடைந்தவனாய் நிமிர்ந்து அவளைப் பார்த்தான். :சரி யோசிக்கலாம் போ” என்றான்.
மீண்டும் உத்தரவாதமளிக்கும் அந்தப் புன்னகையை செய்தான்.
உண்மையை அவன் உணர்ந்துகொள்ளவில்லை என்பதைப் போல, அதை அவனுக்கு
உணர்த்திவிட வேண்டும் என்பதைப் போல, கலக்கமுற்ற குரலில், “ரொம்ப நாளைக்கு
யோசிச்சிகிட்டு இருக்க முடியாது அவன் என்ன கொன்னுருவான்” என்றாள்.
பின் அவன் முகத்தைப் பார்க்க விரும்பாதவளாய், சட்டென திரும்பி நடந்தாள். அவளுக்கு என்ன
செய்வதென்று தெரியவில்லை. ஒருவேளை அவன் தன்னை கொல்லட்டும் ஒரு பிரச்னை தீர்ந்தது
என இவன் நினைக்கிறானோ என சந்தேகமாய் இருந்தது. அப்படியா எனக் கேட்டுவிடலாமா
எனப் பார்த்தாள். அப்படி அவள் கேட்டால், அவன் பயங்கரமாய் கோபப்படுவான். அறைவான்.
ஏற்கனவே அறைந்திருக்கிறான். இப்படி சந்தேகப்படுவது தன்னை மிகவும்
கேவலப்படுத்துவதாகக் கத்துவான். ஆனாலும் அது ஒரு பாசாங்கோ என்ற சந்தேகம் எழுவதை
அவளால் தவிர்க்க முடியவில்லை.
சிவாவை நினைக்கும் போதெல்லாம் அவளுக்கு ஒரு பயம் உடல் முழுவதும் பரவுகிறது. அவன்
என்றாவது ஒருநாள் தன்னைக் கொன்றுவிடக் கூடும் என்ற எண்ணம் ஒரு அகற்ற முடியாத
முன்ணுணர்வைப் போல அவள் மனதுக்குள் படிந்துகிடக்கிறது. அது நடக்கும். அவன் குணத்துக்கு
வேறு எதுவும் நடக்க வாய்ப்பில்லை. அவள் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தப்பட்டு அலறித்
துடிப்பவளாக, அரிவாளால் துண்டாக தலை வெட்டப்பட்டவளாக, உத்திரத்தில் கட்டித்
தொங்கவிடப்பட்டவளாக எப்படி மரிக்கப் போகிறாள்? அவள் தன் உடல்மீது நிகழ்த்தப்படும்
பலவித வாதைகளை கொடூரத் தாக்குதல்களை, அப்போதைய துடிப்புகளை மனக்காட்சியில்
அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சந்துருவிடம் இருந்து முடிவான பதில் எதுவும் கிடைக்கவில்லை. எப்போதும் போலவே அவன்
போ பாக்கலாம் என்றுவிட்டான். அவனைக் காதலித்த போதிருந்தே அப்படித்தான். அவன் எந்த
முடிவையும் எடுத்ததில்லை. ‘இரு பாக்கலாம்’ அல்லது ‘போ பாத்துக்கலாம்’ என்றேதான்
சொல்லிக் கொண்டிருந்தான். தானாகவே தனக்கு சாதகமாக ஏதாவது நடக்கும் என
நம்புபவனைப் போல அலட்டிக் கொள்ளாமல் இருந்தான். ஒரு மனிதன் அவ்வளவு
முட்டாள்தனமாய் எப்படி இருக்க முடியும் என அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது. ஒருவேளை
தான் கட்டாயம் வேண்டும், நான் இல்லாவிட்டால் வாழ்க்கையில் எதுவுமே இல்லை என
நினைத்திருந்தால், அவன் அப்படி இருந்திருக்க மாட்டானோ? என இப்போது சந்தேகமாய்
இருந்தது.

அவனுக்காக அவள் தன்னை உள்ளங்கையில் வைத்து தாங்கிய அப்பாவையே விரோதியாக்கிக்
கொண்டாள். அவரிடம் சாகும் அளவுக்கு அடிவாங்கியிருக்கிறாள். அப்பாவிடம் இருந்து கேட்கக்
கூடாத வசைகளை காதில் கேட்டு, சாகாமல் தாங்கிக் கொண்டாள். என்ன செய்தும் அவன்
துணிந்து வரவில்லையே அவள் என்ன செய்ய முடியும்?
சந்துரு தன் மீது படர்ந்து இயங்கும் வேகத்தை நினைத்துக் கொண்டாள். அந்த மாதிரி நேரங்களில்
அவளுக்கு இதற்காகத்தான் இவன் தன்னை காதலிப்பதாக சொன்னானோ? என எப்போதுமே
தோன்றுவதுண்டு. ஆனால் ஒவ்வொரு முறையும் அவள் அந்த எண்ணத்தை ஒதுக்குத் தள்ளினாள்.
தானும் கூடத்தான் அவனுக்கு இணங்கினேன். அப்படியென்றால் தானும் அப்படி நினைத்துதான்
அவனிடம் பழகினேனா? என அவள் பதில் சொல்ல முடியாத கேள்வியைக் கேட்டுக் கொண்டு,
தன்னையே மடக்கிவிடுவாள். இப்போது அந்த கேள்வியை நேரடியாக சந்திக்க விரும்பினாள்.
தானும் அதற்காகத்தான் இவனைக் காதலித்தேனா? அவள் மனதில் இருந்து எந்த பதிலும்
வரவில்லை. அது கைக்கெட்டும் ஒரு மறைவிடத்தில் மறைந்துகொண்டு கள்ளத்தனமாய்
இவளைப் பார்ப்பதைப் போல இருந்தது. அது அவள் எதிர்பார்த்ததுதான் என்றாலும் அதை
கவனிக்காத மாதிரி, ‘நான் அதுக்காக ஒன்னும் அவங்கூட பழகல’ என முணுமுணுத்துக்
கொண்டாள்.
அவன் என்ன சொன்னான் தான் என்ன சொல்லிவிட்டுத் திரும்பினோம் எதுவும் அவள் நினைவில்
இல்லை. சிவா வீட்டுக்குவந்திருப்பான். அவன் வரும் நேரத்தில் வீட்டில் இருக்கலாம் என்று
நினைத்தாலும் இப்படி ஆகிவிடுகிறது.
சிவாவின் கோபம் கொப்பளிக்கும் முகம் அவள் நினைவில் வந்தது. சிறுவனாய் இருந்து
வளர்ந்தவன்தான் அவன் என நம்புவதற்கு எந்த சுவடும் அந்த முகத்தில் இருக்காது. அந்த
வலுவான பெயர் தெரியாத காட்டுமரம் போன்ற உடலின் தின்மையை அவள் எப்போதும்
மறுத்ததில்லை. இந்த இரட்டை நிலைதான் அவளுக்கு அச்சமாய் இருந்தது. தான் யார்?
எப்படிப்பட்டவள்? நல்லவளைப் போலத் தெரியவில்லை, மோசமானவளாகவும் நினைத்துக்
கொள்ள முடியவில்லை. ஏதாவது ஒரு முடிவை எட்டினால்தான் அமைதியாக முடியும். இந்த
சந்துருதான் அவளை இந்த இரட்டை நிலையிலேயே வைத்திருக்கிறான். அவன் தன்னை
அழைத்துப் போய்விட்டால், தன் மீது படிந்திருக்கும் இந்த விஷக் கசப்பு மறைந்துவிடும். கோடை
வெய்யில் எரித்துவிடுவதைப் போல அடித்தது. முந்தானையை எடுத்து முகத்தில் ஒற்றித்
துடைத்துக் கொண்டு வேகமாக நடந்தாள் தில்லை.
அனீஸ் கடையைப் பார்த்ததும், காபி வாங்கிக் கொண்டு போக நினைத்தாள். இந்த நேரத்தில்
கொஞ்சம் காபி குடித்தால் தான் சரியாய் இருக்கும். இல்லாவிட்டால் மாலையில் தலைவலி
வந்துவிடும். சிவாவும் அப்படித்தான் மதியத்தில் காபி குடிப்பான். காபி வாங்கிக்
கொண்டுபோனால் அவள் இயல்பாய் வெளியே வந்ததாய் காட்டிக் கொள்ளலாம். பார்சல் காபி
வாங்கிக் கொண்டு வீட்டுக்குப்போனபோது, சிவா வந்து கட்டிலில் உட்கார்ந்துகொண்டு, “எங்க
போய் ஊர் மேஞ்சிட்டு வர்ற?” என்றான்.

இவள் “உனக்கு இதவிட்டா வேற ஒன்னும் தெரியாதா? தலவலிக்கிதுன்னு போய் காப்பி
வாங்கிட்டு வந்தன்” என கவரைப் பிரித்து டம்ளரில் காப்பியை ஊற்றி அவனுக்கு கொடுத்தாள்.
அவன் இவளைத் தீவிரமாகப் பார்த்து, “சந்துருவப் பாத்துட்டு வர்றியா?” என்றான்.
எதுவும் சொல்லாமல் டிவியைப் போட்டாள். கொதிக்கும் வெய்யில், கொதிக்கும் மனம்,
கொதிக்கும் காபி எல்லாமே ஒன்றுக்கொன்று எதிரெதிராய் இருந்தாலும் அவளுக்கு அப்போது
அந்த காபி தேவையாய்தான் இருந்தது. அவன் வேகமாக எழுந்து வந்து அவள் இடுப்பில்
உதைத்தான். அவள் ஐயோ என்று அலறிக் கொண்டு அப்படியே குப்புற விழுந்தாள். கொதிக்கும்
அந்தக் காபியை அவள் மேலே கொட்டிக் கொண்டிருந்தாள். அவள் தீனமாக அலறிக் கொண்டு,
அப்படியே கிடந்துகொண்டு அழுதாள்.
அவன் ஒன்றும் நடக்காத மாதிரி நிதானமாக காபி குடித்தான். பின் எழுந்து வெளியே போகக்
கிளம்பினான். திருகிக் கொண்டு படுத்தருந்தவளின் இடுப்பில் மீண்டும் உதைத்துவிட்டுப்
போனான். அவள் “சாப்பிடலையா” எனக் கத்தினாள்.
அவன் போனபின் எழுந்து உட்கார்ந்து அள்ளி முடிந்து கொண்டாள். அடிஎடுத்து வைக்க
முடியாதபடி இடுப்பு வழித்தது. காபிபட்ட முகம் கழுத்தில் எல்லாம் தீயைப் போல எரிந்தது.
எழுந்து போய் தண்ணீரை வாரி வாரி முகத்தில் அடித்துக் கொண்டாள்.
சந்துரு தான் செத்தால் எழவுக்கு வருவானோ மாட்டானோ? கல்யாணத்திற்கு முன்பே அவள்
அப்படிக் கதறி அழுது ஆர்ப்பாட்டம் செய்து, அவன் காலில் விழுந்து கெஞ்சினாளே அப்போது
வராதவனா இனி வந்து தன்னை கூட்டிப் போகப் போகிறான் என நினைத்தாள். எப்போதோ
இருந்த அந்த உண்மையை இப்போதுதான் அவள் உணர்ந்துகொண்டவளைப் போல,
திகைத்திருந்தாள். இனி அவனை நம்பிக்கொண்டு, அவனைக் கெஞ்சிக் கொண்டு, எதிர்பார்த்துக்
கொண்டிருப்பது வீண் வேலை என்று புரிந்தது.
தினம் தினம் அப்படித்தான் போய்க் கொண்டிருந்தது. சிவா அவளை கன்னத்தில் அறைவான்.
முடியைப்பிடித்து உலுக்குவான். எட்டி உதைப்பான் அவள் வாய்விட்டு அழ
வெட்கப்படுவதில்லை. முடிந்தவரை அதிக கூச்சலிடுகிறாள். தலைவிரிகோலமாக தெருப்பக்கம்
ஓடிவிடுகிறாள். ‘என்ன கொல்றானே யாரும் கேட்கமாட்டீங்களா?’ என
அடித்தொண்டையிலிருந்து அதிகபட்ச ஒலியை எழுப்பி அலறுகிறாள். அவனை, கோபத்தை
அப்படியே அடக்கிக் கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்கி தப்பித்துக்
கொண்டிருந்தாள். அதன் பின் அவளை அடிப்பதைப் போல முன்கையையும் புறங்கையையும்
மாறி மாறி ஓங்குவதோடும் பற்களைக் கடிப்பதோடும் கண்களை உருட்டுவதோடும் அவன்
நிறுத்திக் கொள்கிறான்.
அவன் அப்படி அடங்கியிருப்பது ஒரு சிறிய பின்னகர்வுதான். உண்மையில் எப்போது அவன்
கோபம் தலைக்கேறுகிறதோ அப்போது அவன் எதையும் பார்க்க மாட்டான். அரிவாளை
எடுத்துவந்து நடுரோட்டில் வைத்தே தன்னை பலாப்பழம் போல பிளந்து பிய்த்தெறிந்து விடுவான்
என்பதையும் அவள் அறிந்தே இருந்தாள்.

பல நாட்களாக அவள் சந்துருவைப் பார்க்கப் போகவில்லை. அவனும் வரவில்லை. அதை
எப்படியோ சிவாவும் உணர்ந்திருந்தான். அடி உதைகளை கொஞ்சம் குறைத்துக் கொண்ட மாதிரி
இருந்தது. உறுதியாகத் தெரியவில்லை. அன்று மதியம் வாசலில் நிழலாடியது. சந்துரு மாதிரி
இருந்தது. அவன்தான். அவளுக்கு திக்கென்றது. அதற்குள் அவன் உள்ளே வந்து, மூச்சு மேலே
படும்படி நெருங்கி நின்றான். இவள் அச்சத்தோடு, “போயிடு சந்துரு அவன் வந்தா
கேவலமாயிடும், என்ன கொன்னு போட்ருவான்” என்றாள். அவன் “நீ வா” என்றான். அவன்
அவ்வளவு நெருங்கி நின்றது அவளுக்கு பெரும் போதையாய் இருந்தது. எங்கே அவனை
கட்டிப்பிடித்துக் கொள்வோமோ என பயமாய் இருந்தது. அவள் “பேசாம போ” என்றாள். வெளியே
எதுவோ அரவம் கேட்டது. அவன் அவளைக் கோபமாகப் பார்த்துவிட்டு வெளியேறிவிட்டான்.
சரச நினைவுகள் மனதில் சுழித்தோடியது. இன்னும் போதை குறையாதவளாய் அவள் அதில்
திளைத்திருந்தாள். அவன் வெளியே எங்கேயாவது போகத் தான் கூப்பிட்டான் என
நினைத்திருந்தாள். ஆனால் அவன் அவளை தன்னோடு அழைத்துப் போக வந்திருக்கிறான் என
திடீரென தோன்றியது. உடனே பதட்டமும் அழுகையும் வந்தது. அவனுக்கு போன் செய்தாள்.
அவன் எடுக்கவில்லை. அவன் அதற்காகத்தான் வந்திருக்கிறான். தனக்கு ஏன் அது உடனே
புரியவில்லை என நினைத்தபோது அழுகை அதிகமானது. கைக்கு எட்டவிருந்த ஒரு கனவு
வாழ்க்கையை அவள் ஒரு நொடியில் இழந்துவிட்டமாதிரி ஏங்கி அழுதாள்.
தனக்கு புரியவில்லை என அவனுக்கு தெரிந்திருக்குமா? இல்லை. தான் கூப்பிட்டு அவள்
வரவில்லை என நினைத்திருப்பானா? அப்படித்தான் நினைத்திருப்பான். புரியவில்லை என்பதை
நினைத்திருந்தால் அவன் தனக்கு புரியும் படி மேலும் சில வார்த்தைகள் பேசி இருப்பான்.
அவள் ‘எங்க இருக்க சொல்லு இப்பவே கிளம்பி வர்றேன்’ என செய்தி அனுப்பினாள். அதை
அவன் திறந்து பார்க்கவில்லை.
திரும்ப போன் செய்தாள் அவன் எடுக்கவில்லை. இனி இது திரும்ப நடக்கப்போவதில்லை.
விடுதலைக்கான காலம் ஒரு வினாடி தன் முன்னால் தோன்றிவிட்டு, தன் கைக்கெட்டும் தூரத்தில்
நின்றுவிட்டு, அவள் முட்டாள் தனத்தால் போய்விட்டது. அதை முட்டாள்தனம் என்று எப்படிச்
சொல்ல முடியும்? அவன் ஏன் தெளிவாக சொல்லவில்லை. உண்மையில் அவனுக்கு அந்த
எண்ணம் இருந்திருந்தால் தெளிவாக சொல்லியிருப்பான்தானே? தெளிவாக சொல்லாவிட்டாலும்
சரியாக புரிந்து கொள்ள வேண்டியது தான்தானே? நான் ஏன் அதை புரிந்துகொள்ளவில்லை?
அடுத்தடுத்த நாட்களில் அவன் திரும்ப வரவில்லை. போன் செய்யவில்லை. செய்தி
அனுப்பவில்லை. முற்றாக துண்டித்துக் கொண்டான். ஒன்றிரண்டு நாட்களில் இதெல்லாம் அவன்
நாடகம் என்று தோன்றியது. தான் அவளை கைவிட்டுவிட்டதாக சந்தேகம் வந்துவிடக் கூடாது
என்பதற்காக திட்டமிட்டுச் செய்ததைப் போல இருந்தது. ஏன் அவன் நடவடிக்கைகள் தனக்கு
உடனே புரிவதில்லை என அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது.
அடுத்த வாரத்தில் ஒருநாள், அதேபோலவே திடீரென்று வந்து, தனக்கு கல்யாணம்
உறுதியாகிவிட்டதாக சந்துரு சொன்னான்.

தில்லை அவன் சட்டையைப் பிடித்து உலுக்கினாள். “நீ எங்கிட்ட என்ன சொன்ன? என்ன இந்த
நிலமைல விட்டுட்டு நீ கல்யாணம் பண்ணிக்கப் போறியா?” என வெறிகொண்டு கத்தினாள்.
அவன் “என்ன என்ன பண்ணச் சொல்ற? நா வந்து கூப்டா நீ உன் புருசனை விட்டு
வரமாட்டேங்கிற.” அவள் அவன் முகத்தில் அறைந்தாள். “இப்படிச் சொல்ல உனக்கு வெக்கமா
இல்ல?”
அவன் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு, அவளையே குரோதத்துடன் பார்த்தான். அவன்
கண்களில் குற்றவுணர்வென்று எதையும் பார்க்க முடியவில்லை.
“என்னைக் கல்யாணம் பண்ணிக்க சொல்லி எவ்வளவு கெஞ்சினேன். கல்யாணத்துக்கப்புறமும்
நாம எங்கியாவது போயிடலாம்னு நான் உன்னைக் கேட்டுகிட்டேதானே இருந்தேன்.
அப்பல்லாம் சரி சரின்னுட்டு இப்ப இப்படி பண்ணா என்ன அர்த்தம்.”
“ஆமா இதுக்கு மேல உன்ன கூட்டிகிட்டுப் போயி குடிவச்சி நா வேல தேடி இதெல்லாம் நடக்கற
கதையா சொல்லு.”
“ஓ அப்ப அடுத்தவன் பொண்டாட்டி உங்கூட படுக்கறதுமட்டும் நடக்கிற கதையா இருந்ததா?
என்னடா பேசற. போற பக்கம் உனக்கொரு கூலி வேல கெடைக்காது?”
அவன் அவளை இகழ்ச்சியாய்ப் பார்த்தான். “ஆமா போயி மூட்ட தூக்கி சம்பாரிச்சிகிட்டு வந்து
உங்கிட்ட கொடுப்பேன். நீ அப்படியே ராணி மாதிரி குடும்பத்த நடத்துவ?”
“அப்போ நீ ஏற்கனவே முடிவு பண்ணிட்ட? அப்புறம் எதுக்கு பாக்கலாம் பாக்கலாம்னுட்டு வந்து
வந்து எங்கூட படுத்த”
“வீணா எதுக்குப் பேசிகிட்டு நாம எப்பயும் போல இருப்பம்.”
“டேய் எம்புருசன் என்னைக்காவது ஒருநா கொல்லப்போறது என்னைய மட்டும் இல்ல
உன்னையுந்தான்.”
அவன் அவளை மீண்டும் இகழ்ச்சியாகப் பார்த்தான். “அதுக்கு அவன் இன்னொருக்கா பொறந்து
வரணும்.”
அவள் அவனையே தீவிரமாகப் பார்த்தாள். “நீ என் பாவத்த கொட்டிகிட்ட என் பாவத்து மேல
நின்னுதான் இன்னொருத்திக்கு தாலி கட்டப் போற. நீ நல்லா இருக்க மாட்ட.”
அவளுக்குள் சத்தியத்தின் ஆற்றல் இறங்குவதைப் போல இருந்தது. அவனை எரித்துவிடுவதைப்
போல, அவன் வாழ்க்கையை அழித்துவிடுவதைப் போலப் பார்த்தாள். அவன் வாழ்க்கை என்ற
ஒன்றே இல்லாமல் சீரழிந்து அழிந்து போய்விட்டதற்கான காட்சிகள் எதுவும் சட்டென
அவளுக்குள் உருக்கொள்ளவில்லை என்றாலும் அவள் பார்வையில் அது இருந்தது.

“என்னடி பாவம்? நீ என்னமோ கல்யாணம் ஆகாம எனக்காக காத்துகிட்டிருந்தவளாட்டம், பெரிய
பத்தினியாட்டம் பேசற. ஒழிச்சிடுவேன்” என்றுவிட்டுப் போனான்.
சிவா வந்ததும் என்றும் இல்லாமல் அவன் மடியில் படுத்துக் கொண்டு அழுதாள். அவன் அவள்
கூந்தலைப் பற்றித் தூக்கி உலுக்கி ஒரு கரப்பான் பூச்சியை எரிவதைப் போல அப்பால் எறிந்தான்.
சிவா இன்னொருத்தியை சேர்த்துக் கொண்டு அவள் வீட்டிலேயே கிடந்தான். அவன் அப்படிச்
செய்வான் என தில்லை எதிர்பார்க்கவில்லை. அவன் செய்தது நியாயமில்லை துரோகம் என
தனக்கு ஏன் தோன்றுகிறது என தில்லைக்குப் புரியவில்லை. சிவா இருக்கும் வீட்டை
தேடிக்கொண்டு போய் தெருவில் நின்று கொண்டு சத்தம் போட்டாள். அவன் அரிவாளை தூக்கிக்
கொண்டு வந்தான். அவள் துணிந்து நின்று, என்னய வெட்டிப் போட்ரு என்றாள். அப்போது
அவள் மரணத்தை நேருக்கு நேராய் சந்திக்கத் தயாராய் இருந்தாள். அவன் உள்ளே
போய்விட்டான். அந்தப் பெண் இருநூறு ரூபாயை கொண்டு வந்து அவள் கையில் வைத்து
அழுத்தி, “போக்கா அவரப் பத்தி தெரிஞ்சிகிட்டே ஏன் இப்படி எதுத்து நிக்கற? போய் ஏதாவது
வேலயப் பாரு. பணம் வேணும்னா எங்கிட்ட வந்து கேளு அந்த மனுசன கேக்காத” என்றாள்.
தில்லை அந்தப் பணத்தை அவள் முகத்தில் வீசினாள். திரும்ப அந்தப் பக்கம் போகவில்லை.
தில்லை வேலைக்குப் போக ஆரம்பித்தாள். சட்டென எதிலும் நிலைக்க முடியவில்லை. கட்டட
வேலைக்கு சித்தாளாகப் போனாள். மாட்டுத் தீவனம் வெட்டப்போனாள். அரிசி ஆலையில் நெல்
அள்ளிக் கொட்டப் போனாள். எல்லா வேலைகளும் ஒன்றுக்கொன்று கடினமாய் இருந்தது.
கொஞ்சநாள் பல்லைக் கடித்துக் கொண்டு செய்வாள். பின் முடியாது என்று அங்கிருந்து
நின்றுவிடுவாள். வேறு வேலைக்குப் போவாள். எங்காவது வீடு பராமரிப்பு வேலை, குழந்தைகள்
பராமரிப்பு வேலை என்று இருந்தால் போகலாம் என ஆசையாய் இருந்தது. செந்தாமரை அக்கா
அவளுக்குத் தெரிந்த ஒரு வீட்டில் வீட்டு வேலைக்கு கூப்பிடுவதாக சொல்லி, போனாள். அந்தப்
பெண் அவ்வளவு அழகாய் இருந்தாள். அவளைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல
இருந்தது.
அவள் இவளை ஏற இறங்கப் பார்த்தாள். இவளின் இளமையும் அழகும் அவளுக்கு பொறுக்க
முடியவில்லை என்பதை கண்களால் பட்டவர்த்தனமாக கண்களால் சொன்னாள். உலகத்தில்
அவள் மட்டுமே அழகாக இருக்க உரிமை உள்ளவள் போல முகத்தில் படர்ந்த எரிச்சலோடு
அவளிடம், இப்போதைக்கு வீட்டுவேலைக்கு யாரும் வேண்டாம் என்று சொன்னாள். தில்லை
பேசாமல் திரும்பி வந்துவிட்டாள்.
ஓட்டலில் சமையல் வேலை பார்க்கும் ரங்கம்மா, இவளை அழைத்துப் போய், காய்கறி நறுக்க,
மாவரைக்க, பாத்திரங்களைக் கழுவ என, எடுபிடி வேலைக்கு சேர்த்துதுவிட்டாள்.
ஓட்டல் சமையல் அறையில், சாப்பாட்டுப் பொருட்களின் வாசமும், ஒருவித அழுக்கு நாற்றமும்
கலந்து நிறைந்திருந்தது. ரங்கம் பார்ப்பதற்கு பொசுக்கென்று இருந்தாலும் அசுரத்தனமாக வேலை
செய்தாள். பெரிய பெரிய அண்டாக்களை வைத்து சின்ன வேலைதான் என்கிற பாவனையில்
குருமா வைத்தாள், சாம்பார், கிரேவி என வரிசையாய் வைத்துக் கொண்டே இருந்தாள். இன்னும்

இவ்வளவு வேலை செய்தாலும் அவள் கலைப்படைய மாட்டாள் என்றுதான் தோன்றியது. உடல்
என்னவோ பார்க்க பூஞ்சை மாதிரிதான் இருந்தது. எப்படி இவளுக்கு மட்டும் இது சாத்தியம் என
தில்லைக்கு தெரியவில்லை.
அவளும் அவளைப் போல இருக்க நினைத்தாள். களைப்பின் குறிப்புகளை முகத்தில்
வெளியிடுவதை நிறுத்தினாள். பெரிய பாத்திரங்களை துலக்கும்போது இடுப்பில் கையை
வைத்துக் கொண்டு அப்படியே செய்வதறியாதவளைப் போல நிற்பதைத் தவிர்த்து, அமைதியாக
சில நிமிடங்கள் நிமிர்ந்து நின்றிருந்துவிட்டு, அதே அமைதியோடு மேலே வேலைகளைத்
தொடர்ந்தாள்.
ஆண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்பதுதான் அவளுக்குப் புரியாத புதிராக இருந்தது.
அங்கே வேலை செய்யும் ஒவ்வொரு ஆணுமே அவளிடம் தனி விதமாக பேசுவதைப் போல
இருந்தது. அவளுக்கு அப்போதெல்லாம் சந்துருவின் நினைவுதான் வந்தது. அவர்கள் கெட்ட
வார்த்தைகளை தங்களுக்குள் சகஜமாக பேசிக்கொண்டனர். அவள் வேலைக்கு சேர்ந்த நாளில்
கூட, அப்படிப் பேச அவர்களுக்கு கூச்சமோ தயக்கமோ இருக்கவில்லை. முதலில் அது அவளுக்கு
ஒரு மாதிரி இருந்தது. பின் பழகிவிட்டது. சாப்பாடெல்லாம் அங்கேயே சாப்பிட்டுக் கொள்கிறாள்.
சம்பளம் திருப்தியான அளவுக்கு இருந்தது. வாழ்க்கை பூராவுமே இப்படியே இருந்துவிடலாம்தான்
ஆனால் இந்த உடல் அதற்கு விடாது போல. இரவில் அவளுக்கு சிவாவின் நினைவும், சந்துருவின்
நினைவும் மாறி மாறி வந்து கொண்டே இருந்தன. யாரையாவது ஒருவனிடம் திரும்ப தொடர்பு
கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வலிமை பெற்றுக் கொண்டே வந்தது. வேறு பல
ஆண்களையும் அவள் பரிசீலனை செய்ய ஆரம்பித்துவிட்டாள். ஆனால் அது கூடாது என்பதில்
தீர்மானமாய் இருந்தாள். சில நாட்கள் போனால் அந்த தீர்மானம் ஆட்டங்கண்டுவிடும்
என்பதையும் அவள் உணர்ந்தே இருந்தாள். அது அவளை அச்சத்தில் தள்ளியது. கத்தியை எடுத்து
உடல்முழுவதும் வெட்டிக் கொள்ள வேண்டும் போல, குறைந்தபட்சம் தன் உறுப்பிலாவது ஆழ்ந்த
காயத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் போல இருந்தது. அப்படிச் செய்து கொண்டால் அது
சரியாகும் வரை இந்த நினைவுகள் மட்டுப்பட்டுவிடும் அவளுக்கு ஒரே யோசனையாய் இருந்தது.
அவள் வேலையில் கச்சிதமாக பொருந்திக் கொண்டாள். ரங்கம் வராத நாட்களில் குழம்பு
தாளிக்கும் அளவுக்கு தயாராகிவிட்டாள். அவள் ஒரு குழம்பு மாஸ்டர் ஆகிவிட்டால் எந்தக்
கடையில் வேண்டுமானாலும் போய் வேலை கேட்கலாம். இவ்வளவு சம்பளம் வேண்டும் என
அதிகாரமாய் கேட்கலாம். ஆண்களை அவள் பார்க்கும் பார்வையும் மெல்ல மெல்ல மாறிக்
கொண்டு வந்தது.
சந்துரு மீண்டும் வீட்டுக்கு வந்தான். “நீ வேலக்குப் போறியா? ஏன் எங்கிட்ட வந்து சொல்லல?”
என்று கோபித்துக் கொண்டான். தன் மனைவி இவள் அளவுக்கு இல்லை என்றான். தான் அவளை
இழந்துவிட்டதாக சொல்லி, கண் கலங்கினான். அவள் பேசாமல் எல்லாவற்றையும் கவனித்துக்
கொண்டிருந்தாள். அப்போதே அவனை படுக்கைக்கு இழுத்துக் கொண்டு போக வேண்டும் என்ற
ஆவலை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள். அவன் அவளை அழைப்பதைப் போலப்
பார்த்தான். அவள் தனக்கொன்றும் அதில் அவ்வளவு ஆர்வம் இல்லை என்பதைப் போல
இருந்தாள். அவன் கொஞ்ச நேரம் பம்மிக் கொண்டிருந்துவிட்டுப் போய்விட்டான்.

சிவா கூட திரும்ப வந்துவிட்டான். சந்துரு சொன்னதைப் போலவே அவனும் ‘உன்னப் போல
இல்ல அவ’ என்றான். ‘நீ அந்த சந்துருகூட சுத்தனத நெனச்சிதான் எனக்கு வெறி வந்துடுச்சி’
என்றான். ‘அவனுக்கும் கல்யாணம் ஆயிடிச்சி போல. அவனையும் அவன் பொண்டாட்டியையும்
பாத்தேன். உலகத்தில பொம்பளையவே பாக்காதவனாட்டம் அவள ரோடுன்னுகூட பாக்காம
அப்படி கொஞ்சறான்’ என்றான். சொல்லிவிட்டு அவன் முகத்தைப் பார்த்தான். அவன் சொன்ன
எதையும் அவள் கண்டுகொள்ளவில்லை. அன்று அவளுக்கு விடுமுறை. சினிமாவுக்குப் போகலாம்
என்றிருந்தாள். இவன் வந்து கெடுத்து விட்டான் என்பதுதான் அப்போது அவள் நினைவாக
இருந்தது.
“உனக்கும் சேத்து சோறாக்கட்டா” என்றாள். அவன் ம் என்றான். அவள் சமையலுக்கான
எல்லாவற்றையும் எடுத்துவைத்துவிட்டு “போய் காபி வாங்கியாறேன் சாப்டுறியா” என்றாள்.
அவன் ஐம்பது ரூபாயை எடுத்துக் கொடுத்தான். “பரவால்ல வச்சிரு” என்றுவிட்டு, பையில் இருந்த
பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினாள். பெட்டியில் இருக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு
போய்விடுவானோ என சந்தேகமாய் இருந்தது. அவன் அப்படி செய்பவனில்லை பண
விஷயத்தில் மிக நேர்மையாக இருக்கக் கூடியவன். அவளுக்குத் தெரியும்.
அவள் தெருவில் இறங்கி நடந்தாள். இந்த நாள் ஏற்கனவே தான் கடந்து வந்த ஒருநாளைப்
போலவே இருந்தது. அவளுக்கு அடிக்கடி இது தோன்றுவதுதான். ஆனால் இன்றென்னவோ
அந்த எண்ணம் கூர்மையாக இருந்தது. வெயில் காலம் இல்லையென்றாலும் ஒரு பழைய நாளைப்
போல வெயில் பிரகாசமாக அடித்தது. வியர்த்தது. ஒரு பழைய நாளில் அவள்
நடந்துகொண்டிருப்பதைப் போன்ற எண்ணத்தில் இருந்து அவளால் வெளியே வர முடியவில்லை.
அவளுக்கு சந்துருவைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. இதென்ன பைத்தியக்காரத்தனம் என
ஆச்சரியப்பட்டாள். சிவா வந்திருக்கும் நேரத்தில் அவளுக்கு இந்த எண்ணம் வருவதை அவளால்
புரிந்துகொள்ள முடியவில்லை. தனக்கு சந்துருவின் காதலைவிட சிவாவுக்கு துரோகம் செய்ய
வேண்டும் என்ற எண்ணம் தான் அதிகமாக இருக்கிறது என நினைத்துக் கொண்டாள். அந்த
எண்ணம் ஒரு கண்டுபிடிப்பைப் போல இருந்தது. மேலும் மேலும் குழப்பத்திற்குள் மூழ்குவதைப்
போல இருந்தது. இந்த சமயத்தில் சந்துருவைப் பார்க்க போகவே கூடாது என நினைத்துக்
கொண்டாள்.
ஆனால் சிவா அவளை அடித்த அடிகள் இப்போது நினைவுக்கு வந்தன. அவள் உள்ளுக்குள் அந்த
அடிகளை வாங்கிக் கொண்டு தன் மீதே பரிதாபப்பட்டுக் கொண்டு நடந்தாள்.
திடுக்கிட்டுப் போய்அனிச்சையாய் நகர்ந்து நடந்தாள். அப்போதுதான் தான் இந்த உலகத்தில்
இருப்பதை உணர்ந்தவள் போல சுற்றுமுற்றும் பார்த்தாள். தன்னைச் சுற்றிலும் பார்த்தாள். தனக்கு
மிக அருகிலிருந்து வாகனம் ஒன்று விலகிச் சென்றதைப்போல இருந்தது. குழப்பமும் பதற்றமும்
கொண்டவளாய், வேகமாக நடந்தாள். சாலையில் இருசக்கர வாகனங்களை ஓட்டிக் கொண்டு
செல்பவர்கள், அதில் பின்னால் உட்கார்ந்திருக்கும் பெண்கள், கார் ஒட்டிக் கொண்டு
போகிறவர்கள், அந்தக் காரில் இளம் இருளுக்குள் பச்சையும் வெள்ளையுமான நிறத்தில் இருக்கும்

யுவதிகள், இளைஞர்கள், பஸ் ஓட்டுனர்கள், அதில் இருக்கும் பயணிகள் என, எல்லோரும்
அவளை தீவிரமாக பார்ப்பது போல இருந்தது.
ரமணி தியேட்டரில் காலைக்காட்சி முடிந்துவிட்டதற்கு அறிகுறியாக, கேட் விரிய
திறந்துவிடப்பட்டு, ஆள்நடமாற்றமின்றி இருந்தது.
சந்துரு இருப்பானா என யோசித்தாள். அவள் வரும் போது ஒருமுறைகூட அவன் இல்லாமல்
போனதில்லை என்றாலும் இந்த பதட்டம் ஏன் வருகிறதென்று தெரியவில்லை. அவனிடம் என்ன
சொல்வது? யோசித்துக் கொண்டு டிக்கட் கொடுக்கும் கவுண்டருக்கு அருகே சென்றாள். இந்த
நேரத்தில் இங்கே தன்னை தெரிந்தவர்கள் யாரும் கவனித்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை
உணர்வுடன் சாலையை உற்றுப் பார்த்துவிட்டு, திருப்தி இல்லாமலேயே திரும்பி நின்று
கொண்டாள். சந்துரு இரவுக்குள் இருந்து பகலுக்குள் வருபவனைப் போல அரங்கத்தில் இருந்து
வெளியே வந்தான். “ஏன் இங்கியே நின்னுட்ட உள்ள வர வேண்டியதுதான?” என்றான். அவன்
முகத்தில் அவளுக்கான பிரத்யேகமான புன்னகை படர்ந்திருந்தது. அது இப்போது அவளுக்குள்
எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. பசும்புற்களுக்கு அடியில் இருக்கும் வலையைப்
பார்ப்பதைப் போல அந்தப் புன்னகையை அவள் பார்த்தாள்.
அவள் அவனைப் பார்த்து சிரித்தாள். அவனின் நாடகத்தனத்தை ஊடுருவிக் கொண்டு சென்றது
அந்த சிரிப்பு. “சும்மாதான் உன்னப் பாக்கனும்போல இருந்தது. இந்தப் பக்கம் வந்தேன்” என்றாள்.
அவன் “போ வீட்டுக்கு வர்றேன்” என்றான். “இல்ல நான் போன் பண்றேன்” என்றாள். அவன்
அவளை ஆழமாக ஏக்கமாகப் பார்த்துக் கொண்டு சரி என்றான்.
அந்தப் பார்வை அவளை முற்றிலும் புரட்டிப் போட்டுவிட்டது. அவள் திரும்பி நடந்து அனீஸ்
கடைக்குப் போய், மாஸ்டரிடம் பார்சல் காபி என்றாள். இப்போது அவளுக்கு இந்த சிவா எதற்கு
திரும்ப வந்தான் என எரிச்சலாய் இருந்தது.
காபியை வாங்கிக் கொண்டுபோய் அவனுக்கு தம்ளரில் ஊற்றிக் கொடுத்தாள். அவளும் ஊற்றிக்
கொண்டாள். இருவரும் எதுவும் பேசவில்லை.
காபியை குடித்துவிட்டு அவள் பாட்டுக்கு சமையல் செய்ய ஆரம்பித்தாள். அவன் ஏதோ
யோசனையாகவே இருந்தான். அரைமணி நேரத்தில் சாப்பாடு செய்துவிட்டு சாப்பிட வா
என்றாள்.
அவன் கையைக் கழுவிக் கொண்டு வந்து உட்கார்ந்து பேசாமல் சாப்பிட்டான். அவள்
ஆட்டோல்லாம் எப்படி ஓடுது என்றாள்.
அவன் “எப்பயும் போலத்தான் ஏதோ ஓடுது” என்றான். “அவ எப்பப் பாத்தாலும் காசு காசுன்னு
புடுங்கறா அப்படி என்னதான் செலவு பண்ணுவாளோ தெரியல. நீ நாலு நாளானாலும் எங்கிட்ட
காசு கேக்க மாட்ட. கணக்கு கேக்க மாட்ட. நிறைய குடுத்தா கொஞ்சம் தாராளமா செய்வ.
கம்மியா குடுத்தா அதுக்கு தக்க செய்வ. அவ அப்பிடியில்ல. பேசாம இங்கியே வந்திரலாம்னு
பாக்கறேன்” என்றான்.

அவள் தன்னிடம் கொடுத்த 200 ரூபாய் அவள் நினைவில் வந்தது. “நீ எல்லாத்தையும் கொற
சொல்லுவ. நாளைக்கி இங்க வந்தா அவளப்பத்தி சொல்லி என்னப் போட்டு அடிப்ப. அப்புறம்
அவங்கூட போனியா இவங்கூட போனியாம்ப” என்றாள். அவள் மிக எச்சரிக்கையாய் இந்த
வார்த்தையைப் போட்டு வைத்ததை அதை சொன்னபிறகே உணர்ந்தாள். தன் சமார்த்தியத்தை
நினைத்து அவளுக்கு உள்ளுக்குள் சந்தோஷமாக இருந்தது.
“எப்பியும் அப்படியே இருக்க முடியுமா சொல்லு” என்றான். அவன் இப்போதிருந்தே இங்கேயே
இருந்துவிடுவான் போல இருந்தது. ஏனோ அது அவளுக்குப் பிடிக்கவில்லை.
“என்னவோ இப்பதான் நான் பாட்டுக்கு வேலைக்கிப் போயிகிட்டு அக்கடான்னு இருக்கேன்.
திரும்ப உங்கிட்ட அடிவாங்க என்னால ஆகாது. இன்னும் கொஞ்சநாள் இப்பிடியே இருப்பமே”
என்றாள்.
அவன் எதுவும் பேசவில்லை.
இரவு வரையும் கூட அவன் கட்டிலில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான். “போவலியா”
என்றாள். அவன் “காலையில எந்திரிச்சிப் போறேன்” என்றான். அவள் எதுவும் பேசவில்லை.
விடியலில் எழுந்து வேலைக்கு கிளம்பினாள். அவன் “எதுக்கு வேலைக்கிப் போற?” என்றான்.
“கொஞ்சநாள் பாப்பம் உன்புத்தி இப்பிடியே இருக்குதான்னு அப்புறம் பேசிக்கலாம்”
என்றுவிட்டுக் கிளம்பிவிட்டாள். இரவு அவனுடைய நெருக்கத்திற்குப் பிறகு இப்போது ஒரு இனம்
தெரியாத அமைதி மனதுக்குள் நிலவுவதை உணர்ந்தாள். இப்படியே இருந்தால் நன்றாய்
இருக்கும் என நினைத்தாள். ஆனால் அப்படியெல்லாம் இருக்காது என்பதை அவள் உணர்ந்தே
இருந்தாள்.
இரவு அவள் வந்தபோது, அவன் வீட்டில் இல்லை. வழக்கமான இடத்தில் வைத்திருந்த சாவியை
எடுத்து வீட்டைத் திறந்தாள். டேபிள் மேல் 200 ரூபாய் வைத்திருந்தான். அதையே கொஞ்ச நேரம்
பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் தன்னை ஒரு விபசாரியைப் போல நடத்தியிருப்பதாய்
அவளுக்குப் பட்டது. ஆனால் ஒரு கணவன் தன் மனைவிக்கு பணம் கொடுப்பது சகஜம் தானே
என அதை இயல்பாய் எடுத்துக்கொள்ள முயன்றாள். ஆனால் இத்தனை நாள் கண்டுகொள்ளாமல்
இருந்துவிட்டு நேற்று வந்து இரவு தங்கிவிட்டு பணம் கொடுத்துவிட்டுப் போவதை அப்படி
அவளால் எடுத்துக் கொள்ள முடியவில்லை.
சந்துருவின் நினைவுகளும் வன்மமும் பெருகின. முன்பு அவனை நினைக்கும்போது, காதலும்,
காமமும் பெருகியது. இப்போது கூடவே வன்மமும் பெருகுகிறது. அதெல்லாம் வேறு யாருடைய
மனதிலோ இருக்கும் நினைவுகள் என்பதைப் போல அவள் அவனுக்கு போன் செய்தாள்.
“நேத்து போன் செய்யறேன்ன?” என்றான். அவள் எதுவும் பேசவில்லை. “செகண்ட் ஷோ டிக்கட்
கொடுத்துட்டு வர்றேன்” என்றான்.

அவளுக்கு திடீரென்று இது ஏதோ ஒரு அருவருப்பான விவகாரம் போலத் தோன்றியது. திரும்ப
அவனுக்கு போன் செய்து வர வேண்டாம் என சொல்ல வேண்டும் போல இருந்தது. அவள்
இயல்பாக இருக்க முயன்றாள். திரும்ப அவனுக்கு போன் செய்தாள். “இன்னொரு நாளைக்கி
பாக்கலாம் சந்துரு” என்றாள். அவன் கொஞ்சம் மௌனமாய் இருந்துவிட்டு “நேர்ல வர்றேன்
பேசிக்கலாம்” என்றான்.
இரவு அவன் வந்தவுடன் எந்த முதற்கட்ட சம்பிரதாயமும் இல்லாமல் அவனை இறுக்கி
அணைத்துக் கொண்டாள்.
ஊரடங்கிய அமைதியான இரவில் எழுந்து உட்கார்ந்து கொண்டு “இப்பயே வீட்டுக்குப்
போயிர்றேன்” என்றான். அவள் எதுவும் பேசவில்லை. அவன் எழுந்து சட்டையைப் போட்டுக்
கொண்டான். அவள் எழுந்து லைட்டைப் போட்டு ஆடைகளை சரிசெய்து கொண்டாள்.
அவன் கிளம்பும்போது, சட்டையில் இருந்து, 200 ரூபாயை எடுத்து அவள் கையில் கொடுத்தான்.
அவள் அதை வாங்கி மீண்டும் அவன் சட்டைப் பையிலேயே வைத்தாள். அவன் சிரித்தான்.
அவள் டேபிளில் சிவா வைத்திருந்த 200 ரூபாயை எடுத்து அவன் கையில் திணித்தாள். “நான்தான
உன்ன கூப்பிட்டேன்” என்றாள்.
அவன் சட்டென அவளை அடிபட்டவன் போலப் பார்த்தான். கொஞ்சம் கொஞ்சமாய் கோபம்
அவன் தலைக்கேறுவதை அவளால் பார்க்க முடிந்தது. ஏன் இவனுக்கு இப்படி கோபம் வருகிறது
என்பதை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதற்குள் அவன் பளாரென அவள் முகத்தில்
அறைந்தான்.
“எதுக்குடி எனக்குப் பணம் கொடுக்கற?” என அவள் முடியைப் பிடித்து உலுக்கினான்.
“உனக்கு அவ்வளவு திமிராடி?” என்று மீண்டும் உலுக்கிவிட்டு அறைந்தான். அறுத்து
போட்ருவேன் ஜாக்கிரத என்றுவிட்டு வேகமாக வெளியேறிப் போய்விட்டான்.
அவளுக்கு அவன் ஏன் அப்படி நடந்து கொண்டான் என புரிந்தது. சந்தோஷமாய் இருந்தது.
ஒருவாரத்தில் சிவா திரும்ப அவள் வீட்டுக்கு வந்துவிட்டான். அடுத்த பத்துநாட்களுக்கு
அவளிடம் கல்யாணமான புதிதில் இருந்ததைப் போல இருந்தான்.அவளுக்கு ஏனோ இந்த
நிலையில் நம்பிக்கை வரவில்லை. இது மாறிவிடும் மாறிவிடும் என்று உள்ளுணர்த்திக் கொண்டே
இருந்தது.
அடுத்தவாரம் “நீ வேலைக்குப் போ வேணாம்” என்றான். அவள் “நா வேலைக்கிப் போறதுல
உனக்கென்ன?” என்றாள்.
அவன் “அங்க தடிமாடுங்களாட்டம் அத்தனை பேரு இருக்கறாங்க. அவனுங்க கூட நீ என்ன
அப்பிடி சிரிச்சிகிட்டு இருக்கற. அந்த வேலையும் வேண்டாம் மயிறும் வேண்டாம் வீட்லயே இரு”
என்றான்.

“உம்புத்தி உன்னவிட்டுப் போவுமா? வீட்ல இருந்தா மட்டும் நீ வேறயா சொல்லப் போற?”
என்றாள்.
அவன் அவளை இடுப்பில் உதைத்தான். “உன்ன கொன்னு போட்ருவேன்” என்றான். அவள்
நிதானமாக எழுந்து, கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு, வேலைக்குப் போய்விட்டாள்.
அன்றிரவு அவனை வீட்டில் காணவில்லை.
சாப்பிட்டுவிட்டு, கட்டிலில் படுத்துக் கொண்டு தூக்கம் வராமல் விழித்துக் கொண்டிருந்தாள்.
சந்துரு போன் செய்தான்.
அவள் போனை எடுத்துக் கொண்டு மௌனமாய் இருந்தாள்.
அவன் “நீ அன்னைக்கி அப்பிடி பண்ணது சரியா?” என்றான்.
அவள் மெளனமாய் இருந்தாள்.
அவன், “இனிமே அந்த மாதிரி பண்ணாத உனக்கு எவ்வளவு வேணும் கேளு. என்ன வேணும்
கேளு நான் தர்றேன்” என்றான்.
“அதுக்கு என் வீட்டுக்காரன் இருக்கான்” என்றாள்.
“உனக்கின்னும் கோவம் போவல போலயிருக்கு” என்றான்.
அவள் எதுவும் பேசவில்லை.
“இன்னிக்கி பாக்கலாமா?”
அவன் முகத்தில் அறைந்தது ஞாபகத்துக்கு வந்தது. அவள் “எனக்கின்னிக்கி ஒடம்பு ஒரு மாதிரி
இருக்குது” என்றாள்.
அவன் “சரி நாளைக்கிப் பாக்கலாம். நாளைக்கி நான் போன் பண்ண மாட்டேன் நேரா
வந்துருவேன்” என்றான்.
மறுநாள் அவன் வரவில்லை. அவளுக்கு ஏமாற்றமாய் இருந்தது.
அடுத்தநாள் மாலை சிவா வந்துவிட்டான். இரவு அவளின் அனுமதியை அவன்
எதிர்பார்க்கவில்லை. அவளுக்கு அவனை மறுக்க முடியவில்லை. முடிந்தபின் அவன் முகத்தைப்
பார்க்கவே பிடிக்கவில்லை. அருவருப்பாய் இருந்தது. அவனைக் கொல்ல வேண்டும் போல
இருந்தது.
அடுத்த நாள் அவளுக்கு விடுமுறை. வீட்டில் இருக்கவே அவளுக்கு வெறுப்பாய் இருந்தது.

அவன் அவளையும் ஓட்டல் கடை மாஸ்டர்களையும் சம்பந்தப்படுத்தி அசிங்க அசிங்கமாய் பேசிக்
கொண்டிருந்தான். வக்கிரமாய் சிரித்தான். ஒரு கட்டத்தில் அவளால் கோபத்தை கட்டுப்படுத்த
முடியவில்லை. “மரியாதையாய் எந்திரிச்சி வெளிய போயிடு” என்று சத்தம் போட்டாள்.
அவன் அவளை இடுப்பில் உதைத்து கீழே விழுந்தவளின் முகத்தில் திரும்பத் திரும்ப அறைந்தான்.
அவள் எழுந்து ஓடிப்போய் தெருவில் நின்று கொண்டு தலையைப் பிடித்துக் கொண்டு “ஐயோ
என்னக் கொல்றானே” என சத்தம் போட்டாள்.
அவன் உள்ளே இருந்து கொண்டே அவளை வெட்டிவிடப் போவதாக சைகை காட்டினான். பின்
உள்ளே போய் படுத்துக் கொண்டான். அவள் கொஞ்சநேரம் கத்திக் கொண்டிருந்துவிட்டு
வீட்டுக்குள் போனாள்.
படுத்துத் தூங்கி எழுந்தாள். அவன் எழுந்து உட்கார்ந்து கொண்டு இவளையே பார்த்துக்
கொண்டிருந்தான்.
அவன் சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு போய் காபி வாங்கிட்டு வா என்றான்.
அவள் எழுந்து முகம் கழுவப்போனாள். சந்துருவின் நினைவு வந்தது.
தெருவில் இறங்கி நடந்தாள்.
வெயிலும் சாலையில் வாகனங்களின் அடர்த்தியும் ஒன்றுக்கொன்று பொருந்தாததாய் இருந்தது.
சாலை வழக்கமான ஹார்ன் சப்தங்களோடு கிட்டத்தட்ட அமைதியாக இருந்தது. அவள் தன்னைச்
சுற்றிலும் பார்த்தாள். எல்லோரும் அவளையே தீவிரமாய் உற்றுப் பார்ப்பதைப் போல இருந்தது.
ரமணி தியேட்டரில் பகல்காட்சி முடிந்துவிட்டதற்கு அறிகுறியாக, கேட் விரிய திறந்துவிடப்பட்டு,
ஆள்நடமாற்றமின்றி இருந்தது.
சந்துரு இருப்பானா என யோசித்தாள். அவள் வரும் போது ஒருமுறைகூட அவன் இல்லாமல்
போனதில்லை என்றாலும் இந்த பதட்டம் ஏன் வருகிறதென்று தெரியவில்லை. அவனிடம் என்ன
சொல்வது? யோசித்துக் கொண்டு டிக்கட் கவுண்டருக்கு அருகே சென்றாள்.

***

 

 

-குமாரநந்தன்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *