(இந்த அமெரிக்க உள்நாட்டுப்போர் கதையில்,கார்ட்டர் ட்ரூஸ் எனும் இளைஞன்,வர்ஜீனியா பகுதியின் செல்வச்செழிப்பான குடும்பத்திலிருந்து வந்தவன், அமெரிக்க ஒன்றியத்திற்காக போரிட முடிவெடுத்து ஒன்றிய படையில் இணைந்தான்.

தற்போது அவன் ஐந்து ரெஜிமெண்ட் படைவீரர்கள் பதுங்கியிருக்கும் பள்ளத்தாக்கு பகுதியை காவல் காக்கும் காவலப்பணியை மேற்கொண்டிருந்தான். கார்ட்டருக்கு, எதிரி படையின் முன்னோடி ஒற்றர்கள் யாரும் இங்கு பதுங்கியுள்ள படையை கண்டுபிடித்துவிடக்கூடாத படிக்கு கவனமாக காவல் காக்க சொல்லி ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இம்மாதிரி மேலிட ஆணையை எவ்வளவு தூரம் ஒருவர் கடைபிடிக்க முடியும்?
இக்கதை முதன் முதலில் சான் பிரான்சிஸ்கோ எக்ஸாமினர் பத்திரிக்கையில் 1889 ஏப்ரல் 14 ம் தேதி பிரசுரம் ஆனது.)
1861 வது வருடத்தில் ஒரு இலையுதிர்கால கோடை மதியத்தில், மேற்கு வர்ஜினியா பகுதியில் இருந்த ஒரு ஒதுக்குப்புறமான சாலையோர, லாரல் மரத்தடியில் ஒரு போர்வீரன் குப்புற நீட்டி படுத்திருந்தான். அவனது தலை இடது புஜத்தின் மீது சாய்ந்திருந்தது. நீண்டிருந்த அவனது வலதுகை துப்பாக்கியை பிடித்திருந்தது.அவனது அவயங்களின் தொகுத்த தோற்றமும், இடைக்கச்சையில் இருந்த துப்பாக்கி தோட்டாக்களின் சுறுக்கு பை மூச்சு காற்றால் தாழ்ந்தெழுந்தது மட்டும் காணப்படவில்லை என்றால்  இறந்து போன பிணம் எனத்தான் நினைக்கவேண்டும். அவனது காவல் பணியின் போது அவன் தூங்கிவிட்டான். இது மட்டும் கண்டுபிடிக்கப்பட்டால் கொஞ்ச நேரத்தில் மரண தண்டனையை கொடுத்து அவனை கொன்றிருப்பார்கள்.
அவனது குற்றத்திற்கான சட்டப்படியான தண்டனைக்கு நியாயமானது  அதுதான்.
 லாரல் மரத்தழைப்புக்குள் படுத்திருந்த இந்த குற்றவாளியின் பக்கமிருந்த  சாலை தெற்கு பக்கமாக செங்குத்தாக மேடேறி பின் சடாரென மேற்கு பக்கமாக திரும்பி ஒரு நூறு கஜ தூரத்திற்கு மலைச்சிகரத்திற்கு அண்மையாகவே போயிற்று. அது மறுபடியும் தெற்கு பக்கமாக திரும்பி கோணல்மானலாக  காட்டின் ஊடே புகுந்து கீழ் நோக்கி போனது. இரண்டாவது திருப்பத்தின் முனையில் ஒரு சப்பட்டையான பாறை முகப்பு வடக்கு திசையை நோக்கி அகன்று படர்ந்திருந்தது. அந்த பாறை முகப்பு முனையானது மிகவும் கீழே அடர்ந்திருந்த பள்ளத்தாக்கை பார்த்தபடி இருந்தது. அங்கிருந்துதான் பாதை மேலேறி வரும்படி அமைக்கப்பட்டிருந்தது. இந்த பாறை முனையானது உச்சாணி முடி; இங்கிருந்து கீழே போடப்படும் கல் ஆயிரம் அடிகள் வீழ்ந்து அதனடியில் உள்ள பைன் மர உச்சிகிளைகளில் வீழக்கூடும்.
போர்வீரன் படுத்திருந்த முனையும் இதே சிகரத்தின் மற்றொரு கிளைதான். அவன் மட்டும் விழித்திருந்திருந்தால்,
சாலையின் திருப்பத்தையும், பாறை முனையையும், மட்டுமல்லாமல் சிகரத்திற்கு கீழே அமைந்திருந்த கிடு கிடு பாதாளத்தையும் கண்டு தலைசுற்றல் அடைந்திருப்பான்.
அந்த பிரதேசமானது எல்லாப்புறமும் காடுகளால் சூழப்பட்டிருந்தாலும் வடக்கு பகுதியில் மட்டும் சிறுவெட்டவெளியாக திறந்திருந்தது. மேலிருந்து பார்ப்பதற்கு சிறு பரப்பாக தெரிந்தாலும் அது உண்மையில் பல ஏக்கர் பரப்புள்ளதாகும். இதில் இயற்கையாக அமைந்த நீரோடை ஒன்று ஓடிக்கொண்டிருந்தது.இதை மேலுள்ள சிகர முனையிலிருந்து பார்த்தால் தெளிவாக தெரியாது. இந்த வெட்டவெளியின் பசுமை அருகே சுற்றி சூழ்ந்திருந்த காட்டின் பச்சை நிறத்தை விட பளீர் என்றிருந்தது.இந்த பயங்கரமான பள்ளத்தாக்கை சுற்றி, நாம் நின்றிருப்பதாக சொல்லும் இடத்தை தவிர மற்ற வளைவுகளிலும் மலைச்சிகரமுடிகள்  அமைந்திருந்தன, இதனூடே இந்த பாதை எப்படியோ வளைந்து நெளிந்து உச்சியை நோக்கி வந்தது. இந்த பள்ளத்தாக்கை பார்க்கும் சாதாரண பார்வைக்கு முழுதாக மூடியிருப்பது போலவும்,இ இந்த பாதை எப்படி புகுந்து புறப்பட்டு வெளியே வருகிறது என ஆச்சரியப்பட வைக்கவும், ஆயிரம் அடிக்கும் கீழே அமைந்துள்ள இதில் நீரோடை எங்கிருந்து ஆரம்பித்து எங்கு நோக்கி செல்கிறது என யோசிக்கவும் வைக்கும்.
எவ்வளவு கடினமானதாகவும் கரடுமுரடாகவும் ஒரு பிரதேசம் இருந்தாலும், மனிதர்கள் அதை போரிட களமாக மாற்றிவிடுகிறார்கள்.
பள்ளத்தாக்கின் அடியில் உள்ள கானகத்தில் ராணுவ எலிப்பொறி போன்ற மறைவிடத்தில் ஒரு 50 பேர் போகும் வழிகளை மறித்துக்கொண்டால் ஒரு பெரிய படையையே பட்டினி போட்டு  பணியவைத்துவிட முடியும்.
இம்மாதிரியான இடத்தில்தான் ஒன்றிய காலாட் படையின் ஐந்து ரெஜிமெண்ட் வந்து பதுங்கியிருந்தது. முந்தின நாளின் பகலிலும் இரவிலும் அவர்கள் கால்நடையாக கடந்துவந்து தற்போது ஓய்வெடுக்கிறார்கள்.
இரவானதும் அவர்கள் மறுபடியும் சாலைமார்க்கமாக தற்போது தூங்கிக்கொண்டிருக்கும் அவர்களது சோம்பேறி முன்னோடி காவலாளி இருக்கும் சாலை வழியாக முன்னேறி மலையின் மறுபுறம் இறங்கி, அங்கே முகாமிட்டிருக்கும் எதிரி படையை அவர்கள் எதிர்பாரா வகையில் திடீரென நள்ளிரவில் தாக்க திட்டமிட்டிருந்தனர்.இந்த திட்டத்தில் தோல்வியடைந்தால் அவர்களது நிலை மிகுந்த கவலைக்கிடமானதாகவும் அபாயகரமானதாகவும் மாறும். அவர்களது இடத்தையும் நடவடிக்கைகளையும் எதிரிகள் எதிர்பாராத வகையிலோ மோப்பம் பிடித்தோ கண்டு கொண்டார்கள் எனில் கட்டாயம் தோற்றுப்போவார்கள்.

மரத்தழைப்புக்குள் தூங்கிக்கொண்டிருக்கும் இளைஞனான காவல்வீரனின் பெயர் கார்ட்டர் ட்ரூஸ். செல்வந்த தம்பதிகளின் ஒரே புத்திரன். உயர் குடி பிறப்பின் நறுவிசும் பெரும் போக்கான வாழ்வுமுறையையும் பேணும் மேற்கு வர்ஜினியாவின் உதாரணமாக திகழ்பவன். தற்போது அவன் படுத்துள்ள இடத்திலிருந்து சில மைல்கள் தூரத்தில்தான் அவனது இல்லம் அமைந்திருந்தது. ஒருநாள் காலையுணவின்போது உணவு மேஜையிலிருந்து எழுந்தவாறே அவன் அமைதியாகவும் தீர்க்கமாகவும் சொன்னான்.

“தந்தையே, கிராப்டன் நகரில் ஒன்றிய படையின் தொகுதி வந்துள்ளது, நான் அதில் இணையப்போகிறேன்”

அவனது தந்தை தனது சிங்கம் போன்ற தலையை உயர்த்தி அமைதியாக தன்மகனை பார்த்தபடியே சில நொடிகள் இருந்தபின் பதிலிருத்தார்.
“நல்லது, போய்க்கொள்,எது நடந்தாலும் உனக்கு கொடுத்துள்ள கடமைகளை தவறாமல் செய்வாயாக. வர்ஜினியாவிற்கு நீ ஒரு துரோகிதான், இப்பிரதேசம் உன்னை தவிர்த்து விட்டு போய்க்கொள்ள வேண்டியதுதான். இப்போருக்கு பின் நாமிருவரும் உயிரோடு மீண்டால் அதன் பின்பு இதைப்பற்றி பேசிக்கொள்ளலாம். உனது தாயின் நிலை நம் மருத்துவரின் கூற்றுப்படி கவலைக்கிடமாக இருப்பதால், அவள் இன்னும் சிலவாரங்கள்தான் நம்மோடு  இருக்கக்கூடும், இந்த காலக்கட்டம் விலைமதிக்கமுடியாதது. அதனால் அவளுக்கு இதைச்சொல்லி தொந்தரவுக்கு ஆளாக்க முடியாது”.
இதைக் கேட்டபின் கார்ட்டர் ட்ரூஸ்,த தந்தையை மரியாதையுடன் குனிந்து வணங்கினான். இதை மிகுந்த மரியாதையுடன் ஏற்றுக்கொண்ட தந்தை தனது மனம் படும் துயரை திறமையாக மறைத்துக்கொண்டார்.
அவன் தனது குழந்தைபருவத்திலிருந்து வளர்ந்த அந்த வீட்டை விட்டு வெளியேறி  ராணுவத்திற்கு போனான்.
அவனது மனசாட்சிப்படியும், தைரியத்துடனும், ஒழுக்கத்துடன் கூடிய திறமையான வேலைத்திறனை பார்த்து மற்ற உயர் அதிகாரிகளுக்கும் சகவீரர்களுக்கும் அவனை பிடித்துப்போனது. இந்த குணநலன்களும், இப்
பிரதேசத்தின் நுணுக்கமான தெளிவும் அவனுக்கு இருந்ததால்தான் இந்த ஆபத்தான இடத்தில் ஜாக்கிரதையாக காவல் காக்க வேண்டிய பணியை ஒப்படைத்திருந்தனர்.ஆனாலும் உடல் சோர்வானது மனவுறுதியை விட வலுவானதானதால் அவன் தூங்க நேர்ந்தது. இந்த தவறிலிருந்து அவனை எழுப்பியது நல்ல தேவதையா அல்லது கெட்ட தேவதையா என யாரால் சொல்ல முடியும்? சத்தமும் அசைவுமின்றி அமைதியான,அசதியான, பின் மதிய நேரத்தின் பொழுதின் போது,யாரோ ஒரு கண்ணுக்கு தெரியாத விதியின் தூதுவன் போல வந்து இவனது பிரக்ஞையை தனது பஞ்சுவிரல்களால் தொட்டெழுப்பியும்- மனித உதடுகளால் உச்சரிக்க முடியாத சூச்சுமமான சொல்லை இவனது காதில் ஓதி அவனது ஆன்மாவை எழுப்பிவிட்டது.
அவன் மெதுவாகவும் அமைதியாவும் தனது தலையை புஜத்திலிருந்து உயர்த்தி லாரல் புதரினூடே பார்த்தான், அப்போது அவனது வலக்கரம் தனது துப்பாக்கியை இயல்பாக நேராக்கி அணைத்தது.
அவனது முதல் பார்வைக்கு, கண்ட காட்சி ஒரு கலாப்பூர்வமான மகிழ்வை அளித்தது. மலைமுடியின் விளிம்பில் ஒரு பெரும் மேடை போல்-தோற்றமளித்த பட்டைப்பாறையில் பின்புறம் தோற்றமளித்த வானப்பரப்பின் முன்பாக-ஒரு குதிரைவீரன் சிலை மகத்தான கௌரவத்தோடு காட்சியளித்தது.  குதிரையில் அமர்ந்திருந்த மனிதரின் தோற்றப்பொலிவு நிமிர்வோடும் ராணுவ வீரனின் கம்பீரத்துடனும் இருந்த போதும்,ஒரு கிரேக்க கடவுளரின் சாந்தத்துடனும் அமைதியாக அமர்ந்திருந்ததை பார்க்க முடிந்தது.அவரது சாம்பல் நிற ராணுவ உடுப்பு  சுற்றுப்புற வான் நிறத்தோடு ஒன்றியிருந்தது;அவரது உலோக ஆயுதங்களும் அலங்கரிக்கப்பட்ட அவரது குதிரையும் நிழலடியால் மங்கலாக தோற்றமளித்தது;குதிரையின் தோற்பரப்பு வெண்மையற்று மங்கியிருந்தது.
குதிரையின் சேனத்தில் ஒரு கார்பைன் துப்பாக்கியின் அடிக்கட்டையை வலக்கையால் பிடித்தபடியும்,கடிவாளத்தை பிடித்திருந்த இடக்கை மறைந்துமிருந்தது.
பின்புறமாக இருந்த வானவெளிக்கு முன் நின்றிருந்த குதிரையின் வரைவடிவம் ஒரு தேர்ந்த ஓவியம் போலிருந்தது; அது விளிம்பிலிருந்து தொலைதூரத்தில் தெரிந்த மலைமுடிகளை பார்த்தபடி நின்றிருந்தது. அதை பார்த்தபடி அமர்ந்திருந்தவரின் முகம் சற்று திரும்பியிருந்ததால் அவரது நெற்றி விளிம்பும் தாடியும் மட்டுமே தெரிந்தது;அவர் கீழே தெரிந்த பள்ளத்தாக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.
நமது காவல்வீரன் எதிரியை வான்வெளியின் முன்பாக  மிக அருகில் பார்த்த ஒரு அதிர்ச்சியில் இவர்கள் இருவரும் மிக பிரமாண்டமாக அவனுக்கு தோற்றமளித்தார்கள்.

ட்ரூஸிற்கு முன் விரிந்த உயர் கலாப்பூர்வமான காட்சியை அவன் கண்டுகொண்டிருந்த அக்கணத்தில் ஒரு வினோதமான எண்ணம் அவனுக்கு தோன்றியது.இந்த போர் முழுவதும் அவன் தூங்கி கழித்தது போலவும்,விழித்து பார்க்கும் போது இந்த கம்பீரமான தோற்றம் கடந்த காலத்து வீரத்தின் பொலிவாக தெரிவதாகவும் அதில் அவனது பங்கு புகழற்றதாகவுமாக அவனுக்கு தோன்றியது. அங்கு ஏற்பட்ட சிறு அசைவினால் அவனது எண்ணஓட்டம் தடைப்பட்டது. குதிரை, தன் கால்களை நகர்த்தாமலேயே தனது உடலை மலைவிளிம்பிலிருந்து விலகி நகர்த்தியது;மேலமர்ந்த அம்மனிதர்  முன்னிருந்தது போலவே அசைவற்று வீற்றிருந்தார்.முழுதாக விழிப்புற்று தற்போதைய சூழ்நிலையால் மிக்க உயிர்ப்படைந்த ட்ரூஸ் தனது துப்பாக்கி அடிக்கட்டையை தனது தோள் பட்டைக்கும் கன்னத்திற்குமாக சேர்த்து,  குழலை புதரினூடே நீட்டி குதிரை வீரனின் நெஞ்சின் இதயப்பகுதியை குறி பார்த்து விசையை அழுத்த முற்பட்டான்.விசையை அழுத்தியிருந்தால் கார்ட்டர் ட்ரூஸின் காவல் பணி சிறப்பாக நிறைவடைந்திருக்கும். அந்த நொடியில் குதிரை வீரன் தன் தலையை இவன் ஒளிந்திருந்த புதர் பக்கமாக திருப்பி பார்த்தார்–அவனது முகத்தையும் குறிப்பாக அவனது கண்களையும் அவனது தைரியமும் பாசமும் நிறைந்த நெஞ்சத்தையும் பார்ப்பதைப்போலிருந்தது.

போரில் தனது எதிரியை கொல்வது  அவ்வளவு மோசமா என்ன–தன்னையும் தனது ராணுவ சகாக்களின் மறைவிடத்தை எதிர்பாரா விதமாக கண்டுபிடித்த ஒரு எதிரியானவன் –இந்த விஷயத்தின் முக்கியத்துவத்தால் பல நூறு எதிரிகளை விட ஆபத்தும் பலமும் வாய்ந்தவனும் அல்லவா? கார்ட்டர் ட்ரூஸ் முகம்வெளிறிப்போனான்; அவனுடல் குளிர் ஜுரம் கண்டவன் போல் நடுங்கலாயிற்று,மயக்கம் வருவதைப்போலிருந்தது,
அவனுக்கு  முன்பாக கம்பீரமாக தோற்றமளித்த இருவரும்  நெருப்பென ஜொலித்த வானவெளிச்சத்தின் பின்னணியில் உயர்ந்தும் தாழ்ந்தும் சுற்றி சுழலலானார்கள்.அவனது கரம் தனது ஆயுதத்திலிருந்து கீழ் விழுந்தது.அவனது சிரம் மெதுவாக தாழ்ந்து படுத்திருந்த புதரிலைகளில் முகம் பதிந்தது. தைரியமும் முதிர்வான ராணுவ அறிவும் பெற்றிருந்த அந்த உன்னதமான இளைஞன் தனது உணர்ச்சிகளின் கனத்த தாக்குதலால் மயக்கம் அடையும் நிலைக்கு போனான்.
இந்நிலை சற்று நேரம் மட்டுமே நீடித்தது; அதன்பின் அவனது முகம் தரையிலிருந்து மேலெழும்பி தனது துப்பாக்கியை கரத்தால் உயர்த்தி சுடுகுதிரைவிசையை ஆள்காட்டி விரலால் அழுத்த முற்படலானான்;
அவனது மதி,நெஞ்சம்,கண்கள் ஆகியவை நிர்மலமாகவும் காரண காரியத்தில் தெளிவாகவும் செயல் பட்டான். எதிரில் உள்ள எதிரியை உயிரோடு பிடிக்க முடியாது என்பதை உணர்ந்துகொண்டான்;
அவனை பயமுறுத்தி எச்சரிக்க முற்பட்டாலும் அவன் இவர்கள் பதுங்கியிருக்கும் மிக முக்கிய செய்தியோடு தனது முகாமிற்கு நாலுகால் பாய்ச்சலில் போய் சொல்லிவிடக்கூடும்.இந்த முக்கியமான நேரத்தில் ஒரு ராணுவவீரனின் கடமை தெள்ளத்தெளிவானது:ஒளிந்திருந்து எதிரியை சுட்டு வீழ்த்தவேண்டியதுதான்– எச்சரிப்பு ஏதுமின்றியும்,
அக்கணத்திற்குரிய ஆன்மீக அமைதியை கொடுக்காமலும், மௌனமாக வழிபாட்டு சொற்கள் ஏதுமின்றியும்  எதிரியை முடித்து கட்ட வேண்டியதுதான்.
ஆனால் இவையனைத்திற்கும் தேவையே இல்லாமல் கூட இருக்கலாம்– என்ற நம்பிக்கையும் உள்ளது; அவன் எந்த பதுங்கல் ரகசியத்தையும் கண்டுபிடிக்காமல் இந்த உயர்ந்த பிரதேசத்தின் கண்கவர் அழகை கண்டு ரசிக்க வந்திருக்கலாம். ஏதும் செய்யாமல் விட்டுவிட்டால்,அவன் சாவதானமாக வந்த வழியே திரும்பிக்கூட போக சாத்தியமுள்ளது.அவன் பதுங்கலை கண்டுபிடித்துவிட்டானா அல்லது இல்லையா என்பதை அவனது திரும்பலையும் அவனது  தீவிரத்தன்மையையும் வைத்தே கண்டுபிடித்துவிடலாம்–ட்ரூஸ் தனது தலையை திருப்பி கீழே தெரிந்த பசுமையான மரகதபசுமைக்கடல் போன்ற பள்ளத்தாக்கு பகுதியை பார்த்தான். அங்கு ஓடிய பசுமையான நீரோடைக்கரையில் குதிரைகளும் ராணுவ வீரர்களும் வரிசையாக சென்று கொண்டிருந்தார்கள்–ஏதோ ஒரு முட்டாள்தனமான படைத்தலைவர் ட்ரூஸின் முகாம் சகாக்களை குதிரைகளுக்கு நீரளிக்க ஒளிவுமறைவின்றி வெட்டவெளியில் தெரியும்படி அனுப்பியுள்ளார்.இதை சுற்றியுள்ள மலை முடிகளிலிருந்து பார்க்கும் எவரும் தெரிந்து கொள்ளலாம்!
ட்ரூஸ் பள்ளத்தாக்கிலிருந்து தன் பார்வையை விலக்கி வான்வெளிச்ச பின்னணியில் தெரிந்த குதிரையையும் அதன் வீரனையும் தனது துப்பாக்கியின் முனைப்புள்ளியோடு நேர்ப்படுத்தி பார்த்தான். ஆனால் இம்முறை அவனது குறி குதிரைக்கு வைக்கப்பட்டிருந்தது.
அவனது நினைவுபெட்டகத்தில், இறை கட்டளை போல பிரிவு சந்தர்ப்பத்தில் அவனது தந்தை சொன்ன சொல் ஞாபகத்திற்கு வந்தது
 ” எது நடந்தாலும், உனது கடமை என நீ நினைப்பதை செயல் படுத்து”
தற்போது அவன் நிதானமான அமைதிநிலையை அடைந்தான்.அவன் தனது பற்களை வலிமையாக இறுக்கிக்கொண்டாலும் கடினமாக வைத்துக்கொள்ளவில்லை;அவனது நரம்புநாளங்கள் தூங்கும் குழந்தையினதுபோல் சாந்தமாகின. அவனது உடல் தசைகள் எந்த அசைவுமற்று கல்லைப்போலிருந்தது; எதிரியை குறிபார்க்கும்வரை, அவனது சுவாசம் மெதுவாகவும் சாதாரணமாகவுமிருந்தது.
கடமையே வென்றது;
உடலை நோக்கி ஆன்மா சொன்னது:
“அசையாமல், அமைதியடைவாயாக”
அவன் குறி பார்த்து சுட்டான்.
3.
ஒன்றிய படையின் அதிகாரி ஒருவர் தனது சுற்றுப்புறத்தை அறிந்து கொள்ளும் ஆர்வத்தாலோ அல்லது தனது சாகச உணர்வாலோ தூண்டப்பட்டு தனது மறைவிடத்திலிருந்து வெளிப்போந்து பள்ளத்தாக்கின் வெட்டவெளியை நோக்கி மெதுவாக நடந்து வந்தார்.அவ்விடம் மேலுள்ள மலைமுடியுச்சியின் நேர்கீழேயிருந்தது.கல்லெறி தூரம் போல் தெரிந்த ஒரு கால் மைல் தூரத்தில் ஒரு பெரும் பாறை கடிதுயர்ந்து மேல் நோக்கி உயர்ந்து முடிவரை நின்றிருந்தது. அதன் கீழ் அடிவாரப்பகுதியில் பைன் மரங்கள் கூட்டமாக அடர்ந்திருந்தன. அதிகாரி தனது தலையை தூக்கி உயர்ந்திருந்த பாறை முகப்பின் உச்சியை பார்க்க முனையும்போது அதன் உயரம் தலைசுற்ற வைத்தது. பாறை முடியுச்சி நீல வானத்தின் விளிம்பாக ஒரு கோட்டோவியம் போல் தெரிந்தது. உச்சியிலிருந்து பாதி தூரம்வரை பாதாளம் நோக்கி நேராக பாறை முகம் அமைந்திருந்தது, மீதிப்பாதியில்   காட்டின்மர உச்சி கிளைகள் படர்ந்திருந்தன.தலைசுற்ற வைக்கும் மலைமுடியின் உச்சியை நோக்கி பார்வையை உயர்த்திய அதிகாரி ஒரு அதிசய காட்சியை கண்டார்–குதிரையில் அமர்ந்தபடி ஒரு மனிதன் பள்ளத்தாக்கை நோக்கி காற்றில் சவாரி செய்து வந்துகொண்டிருந்தான்!
ராணுவ மோஸ்தரில் நேராக நிமிர்ந்து அமர்ந்திருந்த அம்மனிதன் தனது சேணத்தில் கம்பீரமாக உட்கார்ந்து கடிவாளத்தை வலுவாக பிடித்தபடி தனது குதிரை தலைகுப்புற வீழாதபடிக்கு செலுத்தியபடியிருந்தார்.தொப்பியணியாததால் அவரது நீண்ட தலைக்கேசம் மேலுயர்ந்து தோகைபோல் அசைந்தாடியது.குதிரையின் பிடரி முடியும் மேகம் போல் உயர்ந்து பறந்ததால் அவரது கரங்கள் மறைந்திருந்தன.வலுவாக குளம்படி படும் தரையில் ஓடுவதைப்போலவே குதிரையின் உடல் நேராக இருந்தது.அதன் அசைவுகள்  பலமாக பாய்ந்தோடுவதைப்போல அதிகாரியின் பார்வைக்கு புலப்பட்டது.அவர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவர்கள் மறைந்து போனார்கள்,நான்கு கால் பாய்ச்சலில் மேல் நோக்கி குதித்தெழுவதைப்போல் குதிரை மறைந்தது. ஆனால் இது பறத்தலில் நிகழ்வது!
வானத்தில் பறந்த குதிரைவீரனின் உருவத்தை பார்த்ததில் பிரமிப்பும் அதிர்ச்சியும் அடைந்த அதிகாரி புதிய உலக அழிவு நாளை பார்க்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவராக தன்னை எண்ணி படபடப்பை அடைந்தார்.அவரது கால்கள் பின்னி துவண்டு கீழே விழுந்தார்.அதேநேரம் மரக்கூட்டத்தில் எதோ வீழும் சத்தத்தை கேட்டார்– அந்த சத்தம் எதிரொலியற்று வீழ்ந்தோய்ந்தது– அதன் பின் எல்லாம் அமைதியாயிருந்தது.
அதிகாரி தடுமாறியபடியே எழுந்து கொண்டார்.அடிபட்ட முட்டியின் பழக்கப்பட்ட வலியால் அவர் தனது சுயநினைவுக்கு திரும்பினார்.தன்னை சுதாரிப்புக்கு உட்படுத்திக்கொண்டு மலைபாறையின் நேர்கீழாக போகாமல் எதிர்பக்கமாக விரைவாக ஓடிப்போய் தேடிப்பார்த்தார்.அங்கே தான் தேடியது கிடைக்கும் என நினைத்து தேடி கிடைக்காமல் தோல்வியடைந்தார்.தான் பார்த்த அதிசய காட்சியின் அபாரமான குதிரை சவாரியால் கவரப்பட்டவருக்கு, இந்த குதிரை பாய்ச்சல் மலையின் அடிவாரத்திற்கு போய் பாய்ந்திருக்கும் என்பதும்,மலையின் கீழே போய் பார்த்தால்தான் இவர் தேடியது கிடைக்கும் என்பது புரிந்திருக்கவில்லை. அரை மணி நேர தேடுதலுக்கு பின் அவர் முகாமிற்கு திரும்பினார்.
இந்த அதிகாரி பட்டறிவு படைத்த அறிவாளியாதலால் தான் பார்த்த இந்த அரியநிகழ்வை யாரிடமும் சொல்லவில்லை.ஆனால் இவரது  மேலதிகாரி இவரது தேடுதல் பணி தொடர்பாக ஏதாவது உபயோகமாக தெரிந்ததா என கேட்ட போதுஅவர் இவ்வாறு பதிலளித்தார்:
” ஆம் ஐயா;
தென்புறமாக இருந்து இந்த பள்ளத்தாக்கிற்கு எந்த சாலை வழியும் இறங்கி வரவில்லை”
உண்மையை உணர்ந்திருந்த மேலதிகாரி ஏதும் சொல்லாமல் புன்னகைத்தார்.
4.
சுட்டு முடித்தபின்பு சிப்பாய் கார்ட்டர் ட்ரூஸ் தனது துப்பாக்கியில் மறுபடியும் குண்டை போட்டுகொண்டு காவல் பணியை தொடர்ந்தான்.பத்து நிமிடங்கள் கடப்பதற்குள்ளாகவே ஒன்றிய ராணுவத்தின் சார்ஜெண்ட் ஒருவன் கவனத்துடன் கைககளாலும் முட்டிகளாலும் தவழ்ந்து அருகே வந்தான்.ட்ரூஸ் தன் தலையை திருப்பாமலும் அவனை பார்க்காமலும் அசைவற்று படுத்து கிடந்தான்.
“நீ சுட்டாயா?” என. சார்ஜெண்ட் கிசுகிசுத்தான்.
” ஆம்”
” எதை சுட்டாய்?”
“ஒரு குதிரையை.அதோ அந்த பாறையருகே– தொலைவில் நின்றிருந்தது.இப்போது இல்லை பார்த்தீர்களா. அது மலைமுடி விளிம்பை தாண்டி கீழே போய் விழுந்துவிட்டது”.
அவன் முகம் வெளிறி வெளுத்திருந்தது,ஆனாலும் வேறு எந்த உணர்ச்சிகளையும் அவன் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. பதிலளித்தபின் தன் பார்வையை திருப்பிக்கொண்டவன் வேறு எதையும் சொல்லவில்லை.சார்ஜெண்ட்டுக்கு ஒன்றும் புரியவில்லை.
” இங்க பாரு ட்ரூஸ்”,
என்றவன் சற்று நேர அமைதிக்கு பிறகு
, “இதில் மர்மத்திற்கு ஏதும் இடமில்லை.நான் நடந்ததை அப்படியே சொல்ல ஆணையிடுகிறேன்.யாராவது அக்குதிரையில் இருந்தார்களா?”
” ஆம்”
“நல்லது யார்?”
” எனது தந்தையார்”.
சார்ஜெண்ட், ” அடக்கடவுளே”
என்றபடியே எழுந்து நடந்தகன்றான்..
***

குறிப்பு :

அம்ரோஸ் க்வின்னெட் பியர்ஸ் (1842 -1914.)

அமெரிக்க சிவில் போரில் பங்குகொண்டவர்,சிறுகதை படைப்பாளி,கவி,
அமெரிக்க இதழியளாளர்.

அமெரிக்க படைப்பிலக்கிய ரசிப்பு கழகத்தால் முதல் நூறு தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டவர்.பல நாவல்களையும் சிறுகதைகளையும் கவிதைகளையும் எழுதியுள்ள இவர் தனது வாழ்வின் பிந்தைய ஆண்டுகளில் இதழாளராகவும் நையாண்டி எழுத்தாளராகவும் பரிணமித்தார்.

இவரது ‘ Occurrence at Owl creek Bridge ‘( ஆந்தை ஓடை பாலத்தில் நிகழ்ந்த நிகழ்வு) என்ற சிறுகதை அமெரிக்க இலக்கியத்தில் பலமுறை வெவ்வேறு விதமாக எழுத்து நாடகம் மற்றும் சினிமாவாக எடுக்கப்பட்டு அவர்களின் வாழ்வில் மாறாத இடத்தை பிடித்த மகத்தான சிறுகதைகளில் ஒன்று.

அக்டோபர் 1913 ல் தான் போரிட்ட சிவில் போரிடங்களை பார்வையிட உலா புறப்பட்டவர், அப்போது மெக்ஸிக்கோவில் நிகழ்ந்துகொண்டிருந்த உள்நாட்டு போரை பார்வையிட எல்லையை கடந்து மெக்ஸிக்கோவுக்குள் போனார்.அதன் பின் அவரை கண்டுபிடிக்கவே முடியாமல் காணாமல் போய்விட்டார். இவரது இந்த கண்காணா மறைவு அமெரிக்க இலக்கியத்தில் மிகுந்த மர்மம் நிறைந்ததாகவும், பலவித கருத்துக்களின் பேசுபொருளாகவும் இன்றுவரை நீடிக்கிறது.

தமிழில் -விஜயராகவன்
Please follow and like us:

1 thought on “வானத்தில் ஒரு குதிரை வீரன் – அம்ரோஸ் பியர்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *