காதலின் தவிப்பு தமிழ் இலக்கியத்தற்கு சேய்மை அல்ல. ஆனால் நவீன இலக்கியத்திற்கும் அதற்கும் பாத தூரமுண்டு. ‘தூண்டிற் புழுவினைப்போல் – வெளியே
சுடர் விளக்கினைப் போல்’ எனத்துவங்கி ‘தாயினைக் கண்டாலும் சகியே சலிப்பு வந்ததடி’ என்று கலங்கி ‘நாலு வயித்தியரும் – இனிமேல் நம்புதற் கில்லை யென்றார்; பாலத்துச் சோசியனும் – கிரகம் படுத்து மென்று விட்டான்’ என்று வீழும் காதலி கண்ணனைப் பார்த்து மீளும் பாரதி கவிதை உண்டு. ஆனால் அது பதைபதைக்க வைப்பதில்லை. சிருங்கார ரஸம் என்று அனுபவிக்கப் படுகிறது. நயந்து பாடப்படுகறது. நாலு வைத்தியரும் பாலத்துச் சோதிடனும் கைவிட்ட ஒருவன் காதலில் பித்தனாகி வீழ்ந்து அவன் பிரக்ஞையழிந்து விலங்கிடப்பட்டுக் காலத்தைக் கழிக்கும் போது அந்தப் பித்தன் மனதில் ஓடுவதும் அவன் தர்க்கங்களும் என்னவாகத்தான் இருக்கும் என்று எழுத அந்தக் காதலுக்கேத் தன்னை முற்றளித்த ஒருவன்தான் வரவேண்டும். அவன் படைப்பை வாசித்தாக வேண்டும். காதலின் சிக்கலை உடல் எல்லைகளைக் கடந்து சென்று உணர்வுத்தளத்தில் வைத்து உரைத்த நாவல்கள் உண்டு. எழுத்தாளரும் கவிஞருமான யுமாவாசுகி அவர்களின் மஞ்சள் வெயில் நாவலை சட்டென்று சொல்லலாம். கன்னி நாவல் உணர்வுத் தளத்தில் நிகழ்ந்து அதை ஆன்மீக தளத்திற்கும் எடுத்துச் செல்கிறது.
பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவல் காதலின் ஒரு பித்துநிலையை கவித்துவத்துடன் முன் வைக்கிறது. சமூகம் மட்டுமல்ல அவனே கூட இறுதிவரை ஏற்றுக்கொள்ளவே போகாத ஒரு காதல், அதன் பல கற்பனைகள், அதைச் சுற்றி மின்னிப் போகும் அவனுடைய பிற ஈர்ப்புகள், அது அவனுக்குள் உருவாக்கும் குற்ற உணர்ச்சி, தவிப்பு என பாண்டியினுடைய மனநிலை அவனுடைய கற்பனைக்கும் யதார்தத்துக்குமான சீசாவாக ஆடி இறுதியில் அவனை மரத்தடியில் கட்டி வைக்கிறது. சந்தனபாண்டியின் அந்தக் காற்றடித்த பலூன் மனமும் வாலில்லாத அதன் அலைபாய்தலும் வாசகருக்குப் பதட்டத்தை உண்டாக்குவன. காதலின் மீதான பாண்டியின் அந்த சரணாகதியே நாவலின் மற்றொரு நாயகியான சாரா உண்மையில் வேறு ஒரு சாராதானா அல்லது அவள் அதே அமலாவிற்குப் பாண்டி கொடுத்த புனைவு உருவமா என்கிற ஐயத்தை உருவாக்குகிறது. அவன் தனக்கு வைத்துக்கொண்ட முதல் புனைப்பெயர் அமலதாசன். ஆனால் அந்தப்பெயரை அமலாவே கூட விரும்பவில்லை. ஆகவே அவன் சாராவை சிருஷ்டித்துக் கொண்டிருக்கலாம். அவ்வாறு தன் தமக்கையின் மீதான அன்பு எனக்கூற விரும்பாத பாண்டி தனக்கு வசதியாக சிருஷ்டித்தவள்தான் சாராவா. அல்லது சாராவை அவன் அமலாவாகவே கண்டிருந்தானா.. எந்த இடத்திலும் எதிர் தரப்பின் மாண்பை குறைக்காத, இறுதிவரை தன் அக உரையாடலில் கூட நீங்கள் என்றே விளிக்கும் பாண்டி வேறு எப்படித்தான் செய்வான் என்றும் தோன்றுகிறது. நாவலில் பிரான்சிஸ்கிருபா அந்த ஒரு பார்வைக்கான இடத்தையும் அப்படியே விட்டு வைத்திருக்கிறார்.
பாண்டியும் அமலாவும் தன்னியல்பாகவே வேறானவர்கள். அதில் பாண்டி முற்றிலும் தன் அறிவை விலக்கியே வைக்கிறான். உணர்வில் கட்டுண்டு கிடக்கிறான். ஆனால் அமலா உணர்ச்சியைப் புரிந்து கொண்டாலும் தெளிவு கொண்டவள். “மனுஷன் ஆதி மனுஷன்தான். உணர்வுகளும் ஆதி உணர்வுகள்தான். அறிவு ரொம்ப லேட்டாகத்தான் வந்தது. மனசுக்குள்ள அறிவை விட உணர்ச்சிகள்தான் ஆதிக்கம் பண்ணுது. ஆனாலும் அறிவைத்தான் நீ நம்பனும். இல்லாட்டி ஆதிவாசி ஆகிருவோம்டா.” நாவலில் அமலாவின் தடுமாற்றமும் அதைக் கடந்த யதார்த்த புரிதலும் பாண்டியின் மீதான அக்கறையும் சிறப்பாக வெளிப்படும் இடம் இது. நாவலில் அதன்பிறகு அவர்கள் சந்தித்து உரையாடும் தருணங்கள் இல்லை. ஆனால் உணர்வுத்தளத்தில் இயங்கும் பாண்டிக்கு அவளது அறிவுரை பொருட்டில்லாமல் போகிறது.
இங்கிருந்து இலக்கின்றி பித்தனாய் அலையும் பாண்டிக்கு முன்பாக, மீண்டும் ஒரு கொம்பு முளைத்த மானாய் அவன் ஆழ்மனம் கொள்ளும் உரையாடல் நிகழ்கிறது. அந்த மானின் வழி அவனது மீட்சி நிகழ்கிறது. உடலைத்துறந்த பிறகு நாங்கள் இணைவோம் என்று தன் காதல் குறித்து உரையாடும் மான் அவனுக்கு நற்கதியும் உரைக்கிறது. அதன்பின் தன் முதல் காதலில் இருந்து மெல்ல பாண்டி விடுபடுவதாக வரும் தருணத்தில் அவன் ஒரு பாம்பை துரத்திச் செல்கிறான். பொதுவாகவே அனைவரும் காணும் கனவில் பாம்பு தன்னை துரத்துவதே நிகழும். ஆனால் பித்தன் பாண்டி, மாறாக பாம்பை துரத்துகிறான். ஒரு கவிஞனுக்கு பாம்பு என்பது இச்சையின் வடிவம். அதிலும் கிறிஸ்தவ பக்திப்பாடல் எழுதிய பாண்டி துரத்தி ஓடியதும் ஓட்டி அடித்ததும் சாத்தானையாகவும் இருக்கலாம்.
நாம் வாசித்த இயேசு கதைகளில் அவர் அழகான தச்சராக வருகறார். இந்த கன்னி நாவலில் கூட ஒரு ஆசாரி வருகிறார். கொல்லர். சின்னப்பையன் பாண்டி ஆக்ரோஷமாக அந்த ஆசாரி முன் வந்து நின்று தன் பம்பரத்திற்கு பெரிய பூண் அடித்து தரச் சொல்லி வேண்டுகிறான். கதையில் அவனது வைராக்கியத்திற்கான காரணம் பின்னால் வருகிறது. படிப்பில் தன்னை முந்திய பாண்டியை பம்பரத்தில் குறிவைத்து தாக்கும் சக மாணவனின் வன்மம் மீதான வைராக்யமாகவும் அது இருக்கலாம். கோபமும் வைராக்யமும் ஏறும் அனைவரும் உச்சத்திற்கு மாத்திரம் போவதில்லை. அனைவரையும் அந்த தச்சன், அவர்களே சாட்டையால் சுற்றி விளையாடிக் கொள்ளட்டும் என்று விடுவதில்லை. தன் ஆடலுக்காக சிலரின் சாட்டைகளை தான் எடுத்துக்கொள்கிறான். சிறுவன் பாண்டி “பெருசா இன்னும் பெருசா.. ” என ஆசாரி முன் இரைய, அவன் அடித்ததில் அதை இரண்டாக பிளந்து விடுகிறான். வேறு ஒண்ணு வாங்கிக்கப்பா என்று சொல்லும் ஆசாரியைப் பார்த்துவிட்டு மெல்ல நகரும் பாண்டி குலுங்கி அழுவதை அவர் பார்க்கிறார். வேறு ஒன்றைத் தேடும் பாண்டியா அவன்? பின்னர் பல ஆண்டுகள் கழித்து அவரே அவனுக்குப் பொருத்தமான விலங்கையும் போட்டு விடுகிறார். பிளவாளுமை கொண்டவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் புற உலகுப் பிரக்ஞையற்று தனக்குள் உரையாடத் துவங்குகின்றார்கள். அந்த உரையாடலில் வரும் கிழவன், ‘எல்லாம் அலுத்துப் போச்சு; அலுத்துப்போகாத விஷயமே இந்த உலகத்துல இல்லை என்று ஆகிவிட்டது. உணவு தண்ணீர் உறக்கம் கனவு காற்று இந்தக் கடல்.. எல்லாமே அலுப்பாயிருக்கு..எவ்வளவு சூரியோதயம் சந்திரோதயம் பார்திருக்கேன் தெரியுமா? இந்த வெளிச்சம், இருட்டு,மழை,வெயில்,குளிர் இதெல்லாம் கண்டா எரிச்சலா இருக்கு. நாளதுநாளா இந்த உடம்புக்குள்ள மாட்டிகிட்டு உயிரோட திணறிக்கிட்டு இருக்கேன்….” என்கிறார் பாண்டியிடம்
பாண்டி கானும் கனவுகள் அல்லது பித்தனாக இருந்த போது எழுந்த அவன் கற்பனைகள் நாவலுக்குள் கதைகளாக வருகின்றன. பாண்டியின் நிலையையும் அவன் மனநிலை மாற்றங்களையும் அவையே ஒருவித சீரற்ற முறையில் முன்னும் பின்னுமாக கதையின் வடிவத்தை நகர்த்தியபடி சொல்லிச் செல்கின்றன. அதில் குறிப்பிடத்தக்கது செத்த மீனின் வயிற்றில் வளரும் கிளிஞ்சல். விருப்பத்துடன் தேவதையின் காலால் மிதிபட்டு புதைந்து விட எண்ணும் மீனின் வயிற்றைக் கிழித்து மண்ணில் புதைந்து பூமியின் அந்தப் பக்கமாக வெளிவரத் துடிக்கும் கிளிஞ்சல், அந்த மீனைப் பற்றிக்கொண்டு இருக்கும் பாண்டியையும் சேர்த்தே புதைக்கிறது
துவக்கம் முதலே அலைக்கழிக்கப்படுபவன்தான் பாண்டி. அவன் துவக்கத்தில் தன் அத்தை மகளைக் காணும் இடத்திலும் ஒரு பார்வையால் ஆவியாகிறவாகத்தான் சித்தரிக்கப் படுகிறான். அனைவரும் அவன் கண்களுக்கு யாராக தெரிகிறார்கள் என்பது வாசகர் உய்த்துணர இயலாதது அல்ல. கல்யாண வீட்டில் தொடையைக் கிள்ளி தனிமையில் கட்டிப் பிடிக்கும் ஒருத்தி, அவன் பார்க்க மார்பு ஏற்றிக் கட்டிய கிளர்ச்சியூட்டும் உடையில் குளிக்கும் ஜூலி ஆகியவை அவனுக்கான நேரடி அழைப்புகள். தன் பள்ளித்தோழி, கல்லூரியில் விஜிலா, மற்றும் பாண்டிக்கு முதலில் வீட்டாரால் சம்பந்தம் பார்க்கப்பட்டுப் பின் வேறொருவருக்குத் திருமாணமான பெண் என அனைவரும் பாண்டி மீது அன்பு செலுத்தியும் தன் பிரியத்தைக் காட்டியபடியும் இருக்கிறார்கள். பாண்டியின் பார்வையில் அவை சொல்லப்படுகின்றன. அதிலும் பாண்டியின் கிளர்ச்சி தவிப்பு அவனது தயக்கம் ஆகியவற்றோடு அவனது விருப்பக் கற்பனைகளும் கலந்து சொல்லப்படுகிறது.
பாண்டியின் மனப்பதிவுகளைத் தாண்டி, நாவலின் கவித்துவத்தைத் தாண்டியும் கதையோட்டம் நிகழும் இடங்கள், அங்கு கிறிஸ்தவ மதம் எழுந்து வந்தது முதல் கிறிஸ்தவ சமூகத்தில் நிகழும் அனைத்து சடங்குகளையும் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றமாக காட்டி விடுகிறது. நாவலில் வரும் பாவம் மற்றும் மன்னிப்பு ஆகிய விஷயங்களையும் புரிந்து கொள்ள அந்தப் பின்புலக்கதை ஏதுவானது. குறிப்பாக அவன் எழுதும் பக்திப் பாடல்கள் அவனுக்கு வெளியே பாராட்டுகள் பெற்றுத் தருகின்றன என்ற குறிப்பு நாவலில் இரு இடங்களில் வருகிறது. ஆனால் அது அவனுக்குள் அகரீதியாக ஏற்படுத்திய பாதிப்புகள் பறவைகள் விலங்குகளுடனான உரையாடல்கள் வழி வருகின்றன. அவன் வாசிக்கும் ‘தமிழ் எம்.ஏ’ அதற்கான வேலை கிடைக்காது அவன் மும்பை வரை வேறு வேலை தேடிச் செல்வது என அவனது அயல்வாழ்க்கை சோதனைகள் ஒரு புறம் அவனை அலைக்கழிக்கின்றன. அவை மட்டுமே தமிழில் ஒரு யதார்த்த நாவல் எழுதவும் தகுதி கொண்டவை. பசியில் தொண்டை வறண்டு விழுந்து கிடந்து ஒரு பாதிரியார் வழி அவன் உணவு பெற்று தேறி வரும் போது ‘சாரோன்’ ஆக ஆகிவிடுகிறான்.
கவிஞனின் உரைநடை அளிக்கும் வாசிப்பனுபவம் அலாதியானது. ஒரு கணத்தில் கண்முன் தோன்றும் காட்சியை கவிதையாக்குபவன் பாண்டி. பித்தத்தில் பாண்டி கண்ட ஒன்றின் நினைவுப்பதிவு ஒன்று உண்டு. பனைமரம் ஓலைகளால் தன் கழுத்தை அறுத்துக் கொண்டு வீழ அந்த ஓலைகள் சொற்களைத் தாங்கியிருக்கும். அந்த சொற்களை வாசிக்க முயலுவான். “வாழ்க்கை ஒரு முடிவற்ற முத்தம் என்று உணர்ந்த கணம்…” தன் நினைவுகளை சொற்களால் அறுத்துப் பார்த்தக் கவிஞனாய் நிற்கிறான் பாண்டி. அக்கவிதைகள் நிரம்பிய நாவலின் சில வரிகள் தமிழினி பதிப்பகம் தொகுத்த கொங்குதேர் வாழ்க்கை -2 ல் பிண்ணினைப்பாகவும் உள்ளன. மிகவும் ஆர்வமுடன் வாசித்த கவிஞரின் படைப்பும், தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்றானதுமான கன்னி நாவல் குறித்த கட்டுரையை அதே ஆசிரியரின் அஞ்சலி குறிப்பாக எழுத நேர்ந்தது மிகவும் பாரமானது. புத்தக கண்காட்சிகளில் தமிழினி அரங்கில் அமர்ந்திருக்கும் தருணங்களில் வாசகர் பலரும் கேட்கும் நாவலாக கன்னி விளங்கும். அது நடுவில் இரு வருடங்களாக அச்சில் இல்லாமலும் இருந்தது. அப்போது ஒரு நண்பர் அவருக்கு நாவல் கிடைக்காதால் என்னிடமிருந்து இரவல் வாங்கிப்போய் வாசித்து திரும்பத் தந்தார். பக்கத்துக்கு பக்கம் அவருக்குப் பிடித்த கவித்துவ வரிகளில் பென்சிலால் கோடு கிழித்து வைத்திருந்தார். அந்த வழக்கம் இல்லாத நான் சற்று எரிச்சலுடன் அந்த பென்சில் கோடுகளை அழித்து வைத்தேன். அவ்வாறு செய்திருக்கத் தேவையில்லை என்று பிறகு தோன்றியது. ஒரு புனைவு அந்த எழுத்தாளரின் மொத்த வாழ்க்கையையே அழகாக்கி விடுகிறது. அவரது அலைச்சல்களையும் வேதனைகளையும் வழக்குகளையும் புறந்தள்ளிவிட்டு இறுதியாக அந்த படைப்பே மகுடமாக அமர்ந்திருப்பதே பெருங்கவிஞர்களுக்கு என்றும் வாய்க்கிறது. அதன்பின்னர் கவிஞர்கள் அமரத்துவம் கொண்ட அந்த வார்த்தைகளாகவே வாசகர்களுடன் வாழ்கிறார்கள். பிறகு கவிஞர் இறந்த பிறகு நண்பருடன் உரையாடிய போது அந்த நண்பர் இட்ட அடிக்கோடுகளை அழி்க்காமல் இருந்திருந்தால் அவருக்கு அந்நாவலை அனுப்பி வைத்திருக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன். பிரான்ஸிஸ் கிருபா அவர்களுடன் பேசிய இரு தருணங்களிலும் கன்னி நாவலின் ஒரு வரியையே குறிப்பிட்டே உரையாடல் சென்றது.
“மஞ்சள் மலைமுடியில் முளைத்து
உடல் சிலிர்த்து
நிற்கும் சிலுவையே,
இக்கணத்தில் நீயுணர்வது மீட்பரின் இறப்பையா? உயிர்ப்பையா?” என்கிற வரி அது… இந்நாவல்தான் எதைச் சொல்கிறது? ஒரு பித்தனின் மீட்சியை சொல்கிறதா அல்லது கவிஞனின் பித்தத்தை சொல்கிறதா? இதை நான் அவரிடம் கேட்கவில்லை. என்னளவில் நான் இதை வாசிக்கும் வாசகனுக்குமான ஒரு மீட்சியாகவே கருதுகிறேன்.
***
-காளிப்ரஸாத்
மிகவும் அருமை