மொழிப் போக்கிலிருந்து மாறிவிடக்கூடிய அற்பமாகவும், சிந்தனைக் காரணியாகவும், குறுகலான பாதைகளிலிருந்து மேல் நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கின்றன கவிதைகள். நொறுங்கிய கூறுகளும், அர்த்தங்களும் இழிநிலையிலிருந்து மீட்சி பெறக்கூடியதான வார்ப்புக்களை கவிதைச் செயற்பாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் மீது புகுத்தி விட்டுத்தான் வேறொரு பருவம் நோக்கி நகர்கிறது. சகபாடிகளுக்கும், பண்பாட்டிற்கும் இடையிலான சேர்ப்பினை துல்லியமாக அளவிடக்கூடிய வாய்ப்பிலிருந்து நகர்ந்துவிடுவதும், மொழி விளையாட்டுக்களில் சிக்கிக் கொண்ட கவிப் போக்குகள் சிதறப்பட்டும், உந்தப்பட்டும் எழுத்து வெளியில் பரவலாய் கிடப்பதுமாக காலத்தினை நேர்த்தியாக கட்டமைத்துக் கொண்டன கவிதைகள். விண்ணிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்ட எழுத்துக்களின் கூட்டிணைவாக கவிதைகளின் கோணங்கள் படிமமாக்கப்படுகின்றசூழலில்; தொழிற்பாடுகள் பற்றி பேசியவர்களும், தீவிரமான எழுத்துச் சூழலில் ஈடுபட்டவர்களும் கவிதைகளின் படைப்பாக்க முயற்சியில் தோல்வியினைத்தான் மிக அதிகமாகச் சந்தித்தார்கள்.

காலத்தின் அர்ப்பணங்களுக்கு ஏற்ப இலக்கியங்களில் ஒதுக்கீடுகளும் மாற்றங்ளும், தீவிரமடையத் தொடங்கின. அவயவிக் கொள்கை, அறவியற் கொள்கை, உணர்ச்சிக் கொள்கை, அழகியற் கொள்கை, சமுதாயக் கொள்கை எனும்படியாக பிரிக்கப்பட்ட காலப் பகுப்பாய்வில் கவிதைகளுக்கான மூலகங்களும், தொடர்ச்சியும் படிமுறைப் பண்பாடுகளின் ஊடாக நகரத் தொடங்கின.பாடுவோர் – கேட்போர், பொருள் – வடிவம், அறிவு – உணர்ச்சி, அழகு – பயன்பாடு, இலட்சியம் – நடைமுறை, உண்மை – கற்பனை எல்லாவற்றுக்குமான முரண்பாடுகளை ஓரங்கட்டி இன்பச்சாயலில் எழுத்துருவாக்கம் பெற்றன செய்யுள்கள். போதனை வடிவத்திலும், கடவுள்களின் பரவச நிலையிலும், அழகியலும்; உணர்ச்சியுமாய் எழுத்துக்களின் போக்கு காலத்தின் பிரிப்புகளுக்கான காரணிகளாகின. செய்யுள்களின் தோற்ற வடிவமும், கவிதைகளுக்கான உருவாக்க முகமும் ஒத்த கருவிலிருந்து பிறப்பெடுத்த இருவேறு இனங்களாக கொள்ளப்பட்டுவதே சற்று பொருத்தமான நிலைப்பாடு.

 

நவீனத்துவத்தின் கூறுகளாக கொள்ளப்பட்ட Impressionism – 1880, Expressionism -1900, Cubism -1914, Dadaism – 1916, Surrealism – 1919, Existentialism -1940 கொள்கைகள் யாவும் பின்நவீனத்துவ தொடர்ச்சிகளின் முன்னோட்டுக்களாக எழுத்துப் பரம்பலையும், கவிதைப் போக்கினையும் சமரச வட்டத்திற்குள் லாவகமாய் உட்தள்ளியது. பின்நவீனத்துவ எழுத்துக்கள் கொண்டியங்கிய structuralism, Post structuralism, De-Construction கவிதைகளின் சொல் உடைவிலும், கருத்துச் சுருக்கத்திலும், புதிர் சிந்தனைகளிலும் புதிய போக்கினை பாய்ச்சிக் கொண்டிருந்தன. “ஒரு மனநோயாளி எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது என்றெல்லாம் ஒரு மனநல மருத்துவர் தீர்மானிப்பதால் அம் மருத்துவர் அம் மனநோயாளிக்கு உதவுபவர் மட்டுமல்ல; அவரொரு உளவியல் பொலிஸ்காரராகவும் செயல்படுகிறார்” என்றார் ஃபூக்கோ. இதுவே கவிதைகள் குறித்து பேசுபவர்களின் மனநிலையாகவும் கொள்ளப்பட்டது.

இன்றைய கவிதைப் போக்கின் உரையாடல் சூழலினை உருவாக்கியிருக்கிறார் தில்லை. உதிரியான கவிதைப் பரப்பிலிருந்து தில்லையின் கவிதைகளை வாசிப்பதற்கான சந்தர்ப்பங்கள் கிட்டியிருக்கவில்லையாயினும் விடாய் தொகுப்பின் வழியே ஒட்டுமொத்தமான தில்லையின் கவிதைப் பரம்பலை புரிந்து கொள்ள முடியுமான சூழல் உருவாகியிருக்கிறது. காலத்தின் எல்லாக் கோணங்களிலும் சிதறிவிடப்பட்ட கவிதைகளின் வரலாற்றுப் போக்குகளும், சொற்களின் மாய வித்தைகளாக மாறிவிட்ட எழுத்துக்களின் விளையாட்டு நிகழ்வுகளும் கவிதைச் செயற்பாடுகளில் மாற்றங்களை உருவாக்கியிருப்பதாக நம்பிக் கொண்டிருப்பது அபத்தமானது. இவ்வகையான நம்பிக்கைகளில் அகப்பட்டுக் கொண்ட படைப்பாக தில்லையின் விடாய்  புதிய வரவாக அடையாளம் காணப்பட்டிருக்கிறது.
உணர்வுகளின் வெளிப்பாட்டு மொழியினை எழுத்தில் கொண்டுவருவதற்கான பெரும் பங்கினை கவிதைகள் செயற்படுத்தின. கவிதைகளுக்குள்ளான வாழ்வும், கவிதைகள் வசப்படுத்தியிருந்த அர்த்தங்களையும் சொற்களின் உடைவுகள் நேர்த்தியற்றவையாக்கின. வார்த்தைகளை பிரட்டிப் போடுவதன் ஊடாகவும், சிறுகச் சிறுகச் சொற்களினை பயன்டுத்தியும் கவிதைகளை எழுதத் தொடங்கியவர்கள் இவற்றிற்கு வரட்சியான தலைப்புக்களை சூட்டிக் கொண்டனர். ஏற்றல் – நிராகரித்தல் என்பதற்கு அப்பால் கண்டு கொள்ளாமல் செல்லுதல் எனும் வரட்டு நிலைக்கு அர்த்தங்களற்ற கவிதைகளின் உருவாக்கங்களே காரணிகளாகின.
விடாயினை வாசிப்பிற்கு உட்படுத்துகையில் அங்கு நிகழ்த்தப்பட்டிருக்கின்ற மொழி விளையாட்டானது பிரிதிக்குள் முற்றாகச் செல்வதற்கான வாசலினை அடைத்து விடுகிறது. சலிப்புத்தட்டுகின்ற வாசிப்பு மனத்தினை உருவாக்கி போதாமைகளின் பிரதிகளுக்கான எல்லாப் பண்புகளையும் விடாய் கொண்டிருப்பதாகவே நுகர முடிகிறது.  கவிதைகள் செய்யப்படுபவையாக அல்லாமல், சூழலுக்கான அடையாளத்தினை பிரதிபலிக்கக் கூடியவை என்பதும், தனிமனித உணர்ச்சிகளின் மீது அதீத கவனத்தினை செலுத்தக் கூடியதாகவும் தனது விஸ்திரப் பரப்பினை அகலத் திறந்திருப்பது குறித்து, இங்கிருக்கும் கவிதைப் பாகுபாடுகள் புரிந்து கொள்ளவில்லை என்பதே துரதிஷ்டவசமானது.
பெண் எழுத்தாளர்கள் எல்லோரும் பெரும்பாண்மையாகக் கையாண்ட, அச்சுப் பிசகா கவிதை வடிவினைத்தான் விடாயும் கொண்டிருக்கிறது. ஆணாதிக்க எதிர்ப்பு, பெண்ணுடல் பாடுதல், வேட்கை, வீறு கொண்டெழுதல், பிரச்சாரப் பாங்கு என கவிதைக்கான போர்வையில் கிறுக்கி விடப்பட்டவைகள் விடாயிலும் அரங்கேறியிருப்பது சஞ்சலத்தினை ஏற்படுத்தியிருக்கிறது. புதிதாக பேசப்படும் பொருளும் மறுக்கப்பட்டு, பழமை பேசுவதிலும் உதிர்ப்பினைத்தந்து விடாத விடாயிலிருந்து புதுமையாக பொறுக்கி எடுப்பதற்கு ஏதுமில்லை.
பெண்ணுடல் பாடுதல் எனும் போர்வையில் இங்கு எழுப்பப்பட்ட குரல்களுக்கு நேர்த்தியான இலக்கிய வடிவங்கள்; அமைந்திருக்கவில்லை. ஆணாதிக்கத்தினை வெறுப்பதாக அடையாளம் காட்ட முனைவதில் கொள்ளப்பட்ட அக்கறை பெண்ணுடல் பேசுவதில் பிரச்சாரப் பாங்காகி விட்டது. கவிதைகளில் வெளிப்பட்டிருக்கும் பிரச்சார போக்குகள் நயத்திலும், வடிவத்திலும், பொருளிலும் முடக்கு நிலையினையே சந்தித்திருக்கின்றன. விடாயில் பெரும்பாலான கவிதைகள் வெளிப்படுத்தும் பிரச்சார போக்குகள் நேர்த்தியற்ற கவிதைகளின் வாசிப்புகளுக்கு மாத்திரமே உகந்ததாக இருக்கின்றன. கவிதைக்கான பண்பிலிருந்து விலக்குப் பெற்று பிரச்சாரத்திற்கான வெளிப்பாட்டு மொழியில் விடாய் முழுவதுமாக இயங்கியிருக்கிறது எனலாம்.
பெண்ணுடல் பேசுவதாக வெளிப்பட்ட கவிதைகளில், தொற்றிக் கொண்டுள்ள இயலாமையானது பழக்கப்பட்டுப்போன எழுத்து வடிவங்களாவே பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றன. பெண் அடையாளத்துடன் கவிதைகளுக்கான வெளியினை அடையும் போது, அங்கு பேசப்படுவதற்காக உருவாக்கப்பட்டவைகள் அனைத்தும் ஒரே சக்கரத்தினை மீண்டும் மீண்டும் சுழற்றுவதற்கான தொழிற்பாட்டினை மாத்திரமே செய்து கொண்டிருந்தன. விடாயும் அத்தகைய வரலாற்றின் தொடர்ச்சி போல இம்மாதிரியான போக்கினையே கவிதைகளின் அடையாளமாகக் கொண்டிருக்கிறது. பெண்ணுடல் பேசுவதில் பழமைவாதப் போக்கினைக் கொண்டிருந்தாலும் அவற்றினது உணர்ச்சியின் மேம்பட்ட போக்கினை அடைந்து கொள்வதற்கான கவிதை பண்பாடுகள் இங்கு உருவாகியிருக்கவில்லை. விடாய் குறிப்பிட்ட நிகழ்வுகளிலிருந்து விடுபட்டு மொழி விளையாட்டுக்கான பயிற்சித் தொகுப்பாக இயங்கியிருக்கிறது என்பதே பொருத்தமானது.

ஒரு துயரத்தின் நீள் கோடு

எனது சில
கவிதைகளைப் போலும்
கனவுகளைப் போலும்
வக்கிரம் நிறைந்த
ஆண் குறிகள்.
என் அவயக்
குரல்களுக்கு அடிபணியாது
இரகசிய அறைகளில்
வெற்றுப்பாய்களிலிருந்து
முளைக்கிறது பெண்ணுடல்.
எனது சில
கவிதைகளைப் போலும்
கனவுகளைப் போலும்
யோனிகளுக்கு
கோரைப்பற்கள்
முளைத்திருக்கின்றன.

பெண்ணுடலை கொண்டாடும் நிலைக்கு இயங்கிக் கொண்டிருந்த கவிதை வடிவத்தினை எதிர் நோக்காக அனுகியிருக்கிறார் தில்லை. பெண்ணுடலை வெறுத்தல், யோனிகளுக்குள் முளைத்திருக்கும் கோரைப்பற்களில் மகிழ்வுருதல், வெற்றுப்பாய்களிலிருந்து முளைத்திருக்கும் பெண்ணுடலை இயலாமையின் வெளியாக காட்ட முனைதல் என்பன இக்கவிதையின் நிலைப்பாடாகவுள்ளது. வக்கிரம் நிறைந்த ஆண்குறிகளுக்கு கோரைப்பற்கள் கொண்ட யோனிகள்தான் பொருத்தமாக அமையும் என எண்ணிக் கொண்டாரோ தில்லை? அவரது கவிதைகளைப் போலவும், கனவுகளைப் போலவும் வக்கிரம் நிறைந்ததாக ஆண்குறிகளை குறிப்பிடுகிறார். தில்லையின் கவிதைகளும், கனவுகளும் வக்கிரம் நிறைந்த ஆண்குறிகளுக்கு ஒப்பானவையாகவே இருக்கின்றன என்கிறார். மீண்டும் தனது கவிதைகளைப் போலவும், கனவுகளைப் போலவும் கோரைப்பற்கள் கொண்ட யோனிகளைக் குறிப்பிடுகிறார். ஒரே நேரத்தில் வக்கிரம் நிறைந்த ஆண்குறிகளாகவும், கோரைப்பற்கள் கொண்ட யோனிகளாகவும் தில்லையால் இருக்க முடிந்திருக்கிறது என்பதே இக்கவிதையின் அர்த்தங்களற்ற மொழி விளையாட்டினை வெளிப்படுத்தி நிற்கிறது. ஆணாதிக்க எதிர்க்கதையாடலை நிகழ்த்துவதற்கான அடிப்படை வாசிப்பினைக் கூட நுகர்ந்து விடாத கவிதைகளாக விடாய் அமைந்திருக்கிறது. இங்கு ஆணியல் எதிர்ப்பு, பெண்ணியல் மேன்மை என்பன அர்த்தங்களின் ஊடாக நிகழ்த்தப்படாமலும், எவ்வித தேடல்களின்றியும் வெறுமையான சொற்களின் அடுக்குகளாக கோர்க்கப்பட்டு கவிதைகள் என்ற பெயரில் வெளிப்பட்டடிருக்கின்றன.
பெண்கள் எழுத்துச் செயற்பாட்டிற்குள் வருவதாக இருந்தால் அவசிய நிபந்தனையாக ஆண் எதிர்ப்பு, பெண்ணுடல் கொண்டாட்டம், அர்த்தங்களற்ற சொற்களின் கோர்வை, வசை பாடுதல் முதலானவைகளே முக்கிய பண்புகளாக காணப்படல் வேண்டுமென வழிநடாத்தப்படுகிறார்கள் போலும். தில்லையும் இதனையே பின்பற்றி மரபுவழி படைப்பாக விடாயினை கொண்டுவந்திருக்கிறார் என்றே என்னத் தோன்றுகிறது.

நியாயப்படுத்த முடியாதவளாக

இழந்துவிட்டவைகள்
அனைத்தும்
தவிர்க்க முடியாதவை.
பறிக்கப்பட்டவைகளாகவும்,
நீண்டகாலமாய்
திணிக்கப்பட்டவைகளாகவும்,
என்னுடைய தருணங்களில்
இழந்து இழந்து
நிறையவே நம்பியிருக்கிறேன்.
ஆயினும் நான்
துன்பங்களை
ஏற்றுக்கொள்ள
முடியாதவளாகவும்,
சந்தோசங்களை
அனுபவிக்க
முடியாதவளாகவும்,
உண்மைகளை
நினைந்தழுகிறேன்
நியாயப்படுத்த
முடியாதவளாக.

கவிதைக்கான எந்த அடையாளங்களுமற்று புலம்பலாக மாறியிருக்கும் இக்கவிதையினை சொற்களின் அர்த்தமற்ற உடைவுக்கு சாட்சியமாகப் பார்க்கலாம். உரைநடையினை கவிதைகளாக்குவதற்காக வலிந்து எடுக்கப்பட்ட முயற்சியில், சொற்களை துண்டு துண்டுகளாக்கி புலம்பலை பொருளாய் கொண்டிருப்பதை தவிர பேசும் படியாக இதில் வேறொன்றுமில்லை. பெண்ணுடலை கொண்டாடுகின்ற போதும், ஆணாதிக்க மையத்தினை எதிர்க்கின்ற போதும் ஆக்ரோஷத்தின் உச்சியில் நின்று செயற்படும் தில்லை, எதையுமே நியாயப்படுத்த முடியாதவளாக தன் இயலாமையின் வெளிப்பாட்டினை இக்கவிதையில் கொட்டியிருப்பது முரணாகவேயிருக்கிறது.
இங்குதான் ஒரு பிரதி எதனைப் பேசுவது? தனக்கான அடையாளப் பரப்பாக எதனை முன்வைப்பது என்பதில் தடுமாற்றத்தினை எதிர்கொள்கிறது. விடாயும் இம்மாதிரியான தடுமாற்றத்தில் சிக்கித் தவிக்கின்ற பிரதியாக அடையாளப்படுத்தலாம். லீனா மணிமேகலை, சல்மா, குட்டி ரேவதி, அனார் போன்றவர்களின் பாதிப்பினால் உருவாகியிருக்கும் தில்லை தனக்கான கவிதை மொழியினை உருவாக்குவதில் தடுமாறியிருக்கிறார். விடாயில் வெளிப்பட்டிருக்கும் அநேகமான கவிதைகளில் மேற்சொன்ன படைப்பாளிகளின் சாயல்கள் பரவிக்கிடக்கின்றன. ஒரே வாய்ப்பாட்டினை திரும்பத் திரும்ப பாடுவதாக தில்லையின் எழுத்துக்கள் சலிப்பினை ஏற்படுத்துகின்றன. காத்திரமாக பேசுவதற்கு முற்படும் கவிதைகள் குட்டி ரேவதியின் கவிதைச் சாயலை ஒத்ததாகவும், தில்லையின் மனப் போக்குகள் உரைநடையிலிருந்து வெட்டியெடுக்கப்பட்டு கவிதைக்காக வலிந்து செய்யப்பட்ட கோர்வைகளாகவும் ஒருமித்த பாடுபொருளை கலவையாக்கிய பிரதியாக விடாய் நலிந்து விடப்பட்டிருக்கிறது.
“தில்லையின் கவிதைகள் எப்பொழுதும் தன்னை தான் வந்த நிலத்தின் அரசியலுடனும், தன் பெண்ணியச் சிந்தனையுடனும் தீவிரமாகப் பிணைத்துக் கொண்டு உருவாகின்றன. எழுச்சியும் துவளலும் ஒரே சமயத்தில் குரல் பெறுகின்றனவோ என்று தோன்றும் அளவிற்கு எடுத்துக் கொண்ட பொருளுடன் சொற்கள் வழியாகவும் தன்னைக் கோர்த்துக் கொள்பவர். குறைந்த சொற்களால் ஆழமான விஷயங்களை நேரடியாகச் சொல்கிறார். கவிதைக்கான சொற்கட்டுமானம் தளர்ந்திருந்தாலும் எடுத்துக் கொண்ட ஆழமான விஷயங்களால் அந்தத் தளர்ச்சியை வாசிப்பிக்குப் பின் மறக்கச் செய்கிறார்” என்கிறார் குட்டி ரேவதி.
குட்டி ரேவதி கவிதைகளின் போக்கு பெண்ணியச் சிந்தையின் மீதும், பெண்ணுடல் கட்டுமானத்தின் மீதும் கூடுதலான கவனத்தினை கொண்டியங்குபவை. தான் சார்ந்திருக்கின்ற நிலைப்பாட்டின் பக்கமாக பிற படைப்பாளிளையும் சாய்த்து விடுகின்ற விளையாட்டில் மாட்டிக் கொண்டிருக்கிறார் தில்லை. ஆயினும் கவிதைக்கான குறைபாட்டில் சொற்கட்டுமானம் தளர்ந்திருப்பதாக குட்டி ரேவதி சொல்கிறார். இவையெல்லாம் வலிந்து உருவாக்கப்படும் கவிதைச் செயற்பாட்டினால் உருப்பெறுபவை என்பதை குட்டி ரேவதியால் நீட்டிச் சொல்ல முடியவில்லை. தன்நிலைப்பாடு சார்ந்த படைப்பாளிகளுக்கு முட்டுக் கொடுக்கின்ற பணி கச்சிதமாக இவ்வுரையில் செய்யப்பட்டிருக்கிறது. கவிதைகளில் மீறப்பட்டிருக்கும் சொற்கட்டுமானம் என்பது கவிதைக்கான மொழி உருவாக்கத்தில் செலுத்துக்கின்ற காத்திரமான பங்கினையும், இவைகள் அற்றுப் போகின்ற போது கவிதைகள் வலுவிழப்பதையும் குட்டி ரேவதி சொல்ல மறுத்திருக்கிறார். தில்லையின் கவிதைகளில் வெளிப்பட்டு நிற்கும் பெருத்த குறைபாடு வலிந்து உருவாக்கப்பட்ட சொற்களின் கோர்வைகளாலே நிகழ்ந்திருக்கிறது. இதுவே கவிதைகளுக்கான வடிவத்தினையும், உணர்ச்சிப் போக்கினையும் மறையச் செய்கிறன்ற வடிவமாகியிருக்கின்றன. வரட்சியான நிலையில் இயங்கக் கூடிய கவிதைப் பரப்பினை விடாய் கொண்டிருப்பதற்கு பிரதான காரணியாக வலிந்து உருவாக்கப்பட்ட கருத்துக்களும், சொற்களின் அர்த்தமற்ற உடைவுகளும், பொருளற்று அலைந்து திரியும் சொற்களும் போதுமானவையாகவும் இருக்கின்றன.
கவிதைகளுக்கான பாடுபொருளாக எடுத்துக் கொண்ட எவற்றையுமே விடாய் தெளிவாக முன்வைக்கவில்லை. சொற்களின் உடைவுகளில் செலுத்தப்பட்ட கவனம் பொருட்களின் உணர்வுகளில் உள்வாங்கப்படவில்லை. ஆண்மைய எதிர்ப்பில் எழுந்த கவிதைகள் யாவும் பெண்மைய அழகியலை பேசுவதற்குத் துணியவில்லை. உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும், கவிதைப் பிரதி ஒன்றிற்கான அவசரத் தேவையிலும் வலிந்து உருவாக்கப்பட்ட தொகுப்பாக விடாய் வெளிவந்திருக்கிறது. அடையாளப்படுத்தலுடன் கொண்டாடப்படுகின்ற பொய்மைத் திட்டங்களை விடாய் கொண்டிருந்தாலும், நேர்த்தியான கவிதைப் பிரதிக்கான அடையாளங்களற்று எழுத்துக்களின் கோர்வையாகவும், பேசவந்த பொருளை நெருடலாக்கியும், சொற்கட்டுமானங்களின் சிதைவாகவும், பிற பெண் எழுத்தாளர்கள் கையாண்ட அதே மாமூலான போக்கிளை தானும் எடுத்துக் கொண்டதால் தில்லையின் கவிதைகள் பெருத்த தாகத்தினை உண்டாக்கவுமில்லை. விடாய் அடங்கியதாயுமில்லை.

நிலம் குறித்த கவிதைகளில் தில்லை ஓரிரு இடங்களில் வெளிப்பட்டு நிற்கிறார். அவற்றின் மீதாவது கூடுதல் கவனத்தினை செலுத்தியிருந்தால் அடையாளப்பரப்புடனான பிரதியாக விடாய் அமைந்திருக்கக் கூடும். கலவையின் தொகுப்பாக அமைந்து விட்டதால் எவ்விடத்தில் கவிதையினை வாசிப்பது? எந்த தருணத்தில் புரிந்து கொள்வது? மொழியின் கூத்தினை எப்பாகுபாட்டில் வரையறுத்துக் கொள்வது? கவிதைகளுக்கான பாங்கினை எங்கு கண்டுபிடிப்பது? இவையெல்லாம் கவிதைகள் தானா? இவற்றினைத்தான் கவிதைகள் என பேசிக் கொள்கிறார்களா? போன்ற ஏராளமான கேள்விகள் எம்மை காலங் காலமாகத் தொடர்கின்றன.
இரா. மீனாட்சி, இளம்பிறை, செல்வி, சிவரமணி, சுகந்தி சுப்பிரமணியன், க்ருஷாங்கினி, பெருந்தேவி, ஆழியாள், உமா மகேஸ்வரி, சுல்பிகா, சல்மா, மாலதி மைத்ரி, சுகிர்தராணி, அனார், தமிழ்நதி, பஹீமா ஜஹான், பானுபாரதி, சிவகாமி போன்ற பெண்சிந்தனை வெளியில் செயற்பட்ட பெண் எழுத்தாளர்களான் பட்டியலில் தில்லையினையும் குட்டி ரேவதி இணைத்துக் கொண்டார். அதுவரைக்கும் நிலம் சார்ந்த, புலம் பெயர் அவலங்கள் குறித்த கவிதைகளை எழுதிக் கொண்டிருந்த தில்லையின் பக்கம் தீவிர ஆணாதிக்க நிலைப்பாடும், பெண்ணுடல் கொண்டாட்டமும் வலிந்து உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதன் விளைவாகவே வெளிப்பட்டிருக்கும் விடாயும் கவிதைகளுக்கான முகத்தினைக் கொண்டிராமல் மொழி விளையாட்டில் சிதைவுண்டிருக்கிறது.

கறுப்புச் சரித்திரம்

வாழ்தலின் மையம் தொலைத்த
இரு பலஸ்தீன
யுவதிகளைக் கண்டேன்.
என் கண்களைப் போன்று
அவர்கள் கண்களும்
பூமிக்குள்ளே
தாழ்ந்திருந்தன.
ஒட்ட ஒட்ட வெட்டப்பட்ட
அவர்களுடைய
புன்னகை போன்றே
என்னுடைய
புன்னகையும் இருந்தது.
ஒரு தேசத்துக்காக கடலைத் தந்த
எனது கண்களைப் போன்று
அவர்கள் கண்களும்
பூமிக்கே தாழ்ந்திருந்தது.

என்னைப் போல்
அகதிகள் தேசத்தில்
மொழிதெரியாத இருமுகங்களும்
என்னை அணிந்திருந்தனர்.
வாழ்விலும் மரணத்திலும்
அவர்களைப் போலவே
நானும் இருந்தேன்.
இரு தேசங்களின்
கறுப்பு சரித்திரமாக…

புலம் பெயர்தலின் வலிகளையும், பிற தேசத்து அகதிகளுடன் தன்னை இணைத்தும் கவிதைகளுக்கான மொழியினை உருவாக்கிக் கொண்டிருந்த தில்லையின் எழுத்துக்களில் வலிந்து விடப்பட்ட சொற்களின் சேர்க்கை பெருந் தோல்விக்கான அடையாளத்தினை விடாயில் முன்நிறுத்தியிருக்கின்றன. கறுப்பு சரித்திரம் தில்லைக்கான மொழியினை அடையாளப்படுத்தியிக்கிறது. தில்லையின் உணர்வுகள் வெளிப்ப்பட்டு நிற்கின்ற விரிந்த தளமாக பார்க்கப்படும் சூழலினை உருவாக்கியிருக்கிறது.

‘என்னைப்போல்
அகதிகள் தேசத்தில்
மொழிதெரியாத இருமுகங்களும்
என்னை அணிந்திருந்தனர்.’

மிக லாவகமாச் சொல்லப்பட்ட கவிதைகளின் மொழி அமைப்பிற்குள் மெலிதாகக் கொண்டுவரப்பட்ட அற்புதமான வார்ப்புக்களிவை. யதார்த்தமாக சொல்லப்பட்ட கவிதைகளின் வழியே தில்லையினை அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய கவிதைகளில் இதுவுமொன்று. குட்டி ரேவதியின் கட்டுரையில் மெதுவாக தொட்டுச் சொல்லப்பட்ட இருட்டடிப்பின் வெளிப்பாடு.
கறுப்பு சரித்திரம் தில்லையின் அடையாளக் கவிதைளிலொன்று. வலிந்து சொல்லப்படாமலும், நிலைகொண்ட அனுபவத்தின் தன்மையாகவும் சொற்களின் விளையாட்டுக்களிலிருந்து நீங்கி கவிதையின் நேர்த்தி வடிவத்தினைக் கொண்டிருக்கிறது. இதுவே தில்லைக்கான மொழியாக பார்க்கப்பட்ட சூழலில் விடாய் வலிந்து கொண்டுவரப்பட்டிருக்கும் அவசரத்தின் பிரதியாகவே முன்நிற்கிறது.
உணர்வுகள், பாலினக்கேள்வி, உடல்கூறுகள், ஆணாதிக்கம், குடும்பதிகாரம், கட்டுடைப்பு என ஒரே வகையான பரப்பினில் நின்று வெளிப்படக்கூடிய கவிதைகளே, பெண்வெளி கவிதைகளின் செயற்பாடுகளாக இருப்பது துரதிஷ்டவசமானது. பாலின இருப்புச் சார்ந்து கொட்டித் தீர்க்கின்ற கவிதைகளில் பொதுநிலைப் போக்கு வாதங்கள், வெளியரசியல், இருப்பியல் அடையாளம், பெண்ணரசியல், பெண்ணியம் என்பன மறைந்தாகிவிட்டது. பாலின விடுதலைப்பரப்பினைத் தாண்டி வெளிவரும் கவிதைகள் மீதான அசமந்தப் போக்கு அல்லது இயலாமை பெண் வெளி எழுத்துக்களின் வாசிப்பு தேக்கத்தினை அடையாளப்படுத்துகின்றது. இது ஒரு வகையான அசட்டுப் போக்கன்றி வேறில்லை.

ஆச்சரியங்களுக்காக காத்திருத்தல்

இருள் அடர்ந்த பகலாய்
அடங்கிக்கிடக்கிறது மனம்.
நவீன கவிதை ஒன்றை
நக்கிக் குடிக்கிறது நாக்கு.
பெண்ணுடலின் விடுதலையை
அள்ளி அளைவதற்காய்
விரிகிறது யோனி.
மூடுண்ட
உணர்வுகள் பிரவகித்து
ஊறிஊறி
பிரபஞ்சத்தை நனைக்கிறது.
முக்கி முனகி அதிசயத்து
முலைகளை அழுத்திக்
குப்புறக்கிடக்கிறது
துளிர்விடும் ஓர் கவிதை.
கால்களை உயர்த்தியும்
பணித்தும்
என்னமாய்
உற்சாகப்படுகின்றேன்
ஒரு கவிதையாய்.

பெண் உணர்ச்சிகளின் வெளிப்பாட்டினையும், பெண்ணுடலையும், ஆணுறவினையும் கொண்டாடும் கவிதையாக ஆச்சரியங்களுக்காக காத்திருத்தல் விரிவடைகிறது. பெண் பெற்றுக் கொள்ள முனையும் ஆச்சரியங்களிள் தேவைப்பாடாகவும், அவளை உற்சாகப்படுத்தும் கவிதையாகவும் தோற்றம் பெறுகிறது. விடாயில் வந்துள்ள ஏனைய கவிதைகளுக்கும் இக்கவிதைக்கும் இடையே நேரடி முரண்பாடுகள் உள்ளன. இக்கவிதை தில்லையால் முன்பு எழுதப்பட்ட கவிதையாகவும், பிற்பட்ட காலங்களில் தீவிர பெண்ணுடல் வாதிகளின் ஈர்ப்பினால் பெறப்பட்டவைகள் பிற கவிதைகளாகவும் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன. ஆண் இன்பத்தினை கொண்டாடும் கவிதையாகவும், பெண் உணர்வுகளை மதிக்கக் கூடியவனாகவும் பார்க்கப்பட்டவன் பிற்பட்ட காலங்களில் கொடூரமான ஆண் குறிகளைக் கொண்டவனாக பார்க்கப்படுகிறான். கவிதைகளுக்கான அங்கீகாரம் குறித்து எழுந்த புரியாமையின் விளைவினை தில்லையின் அநேகமான கவிதைகளில் பார்க்க முடியுமாயுள்ளது.
வலிந்து எழுதப்பட்ட கவிதைகளின் விளைவாகவும், பேசப்படுகின்ற கவிஞர்களின் பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொள்வதற்கான ஆர்வத்தின் விளைவாகவுமே விடாயின் இயலாமை வெளிப்பட்டு நிற்கிறது.
இலக்கண முரண்பாடுகளும் கவிதைகளின் போக்கில் கண்டு கொள்ளப்படாமல் விடப்பட்டிருக்கின்றன.

‘இழந்துவிட்டவைகள்
அனைத்தும்
தவிர்க்க முடியாதவை’

பன்மையில் வெளிப்படக்கூடிய வார்த்தைகளின் முடிவு ஒருமையில் வந்து சேர்ந்திருக்கிறது. அனைத்தும் எனும் படியாக எல்லாவற்றையும் குறிப்பிடும் போது ‘முடியாதவைகள்’ எனும் பன்மையே இலக்கணத்தின் நேர்த்தியாக அமையும்.

‘தகப்பன்
கணவன்
மகன்கள் என
தலைமுறைகளின்
ஆதிக்கம்.
இறுகியும் இறுக்கியும்
பொட்டைமுடிச்சாய்’

இங்கு ‘முடிச்சுக்களாய்’ என்பதே கவிதையின் இலக்கண நேர்கோட்டிற்கு வாசிப்பழகியலை தரக்கூடியது. தகப்பன், கணவன், மகன்கள், தலைமுறைகள் என்பன முடிச்சாய் முடிவுறுவதற்கு வாய்ப்புக்களில்லை. முடிச்சுக்கள் எனும் போதே அவற்றின் இலக்கண முறை நேர்படுகிறது.

‘மதிய உறக்கத்தை,
என் கண்கள் கண்டு எத்தனை
வருடமோ தெரியல்ல’

இங்கு ‘தெரியவில்லை’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தால் பெரிதான வழு நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. ‘வருடம், வருடங்கள்’ என்பதில் இலக்கண நேர்த்தியை கண்டு கொள்ளாமல் விட்டாலும் வாய் மொழிச் சொல்லாடலாக ‘தெரியல்ல’ என்பதும் அதற்கு முந்திய வாக்கியங்கள் எழுத்து முறைப்படி நிகழ்ந்திருப்பதும் கவிதையில் அந்நியமான உணர்வினை ஏற்படுத்துகிறது.
இலக்கண நேர்த்தி கவிதைகளின் அமைப்பியலில் முக்கிய பங்குகளை கொண்டிருக்கக் கூடியவை. சொற்களின் வீரியத்திலும், வழுவிலும் வழுவமைதியிலும் கூடுதல் அவதானிப்பை செலுத்தி படைப்புக்களின் தரங்கள் மீது அதீத கவனயீர்ப்பினை அடையாளப்படுத்த வேண்டியுள்ளவைகளாகும். கவிதைகளுக்காக வலிந்து சேர்க்கப்பட்ட சொற்களின் விளைவாகவும், பொருத்தமற்ற சொற்களை சேர்த்துக் கொள்வதற்கான தேடலாகவும் கவிதைகள் உறுப்பெற முனைவதினால் ஏற்படும் இலக்கணப் பிழைகளே இவைகள். எழுத்துப் பிழைகளை தவிர்க்க முடியாத காரணமாக பிரதிகளில் முன்வைக்க முடியுமாயிருந்தாலும் இலக்கணப் பிழைகளின் போக்குகள் அவதானிக்கப்பட வேண்டியவைகளாக இருக்கின்றன. கதை, கட்டுரைகளில் ஏற்படும் இலக்கணப்பிழைகளை விடவும் கவிதைகளில் ஏற்படும் இலக்கண மாற்றங்கள் பொருள் மாற்றத்திற்கான இடர்பாடுகளை தோற்றுவிக்கின்றன என்பதே பெருவுண்மை.

கவிதைகள் பண்பாட்டுத் தளங்களின் மீது இயங்கக் கூடிய சொற்களின் கூட்டுக்களைக் கொண்டவை. எல்லாவற்றுக்குமான பண்பாட்டு இசங்களை ஆதரிப்பதாகவும், எதிர்க்கதையாடலை உருவாக்கக்கூடிய தன்மை வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகின்றது. இவற்றிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புக்களையோ, அல்லது எந்தப் பண்பாட்டிற்குள்ளும் அகப்பட்டு விடாமல் தனித்து நிற்பதற்கான சூழலையோ கவிதைகளால் உருவாக்க முடிவதில்லை. அப்படியான எவ்வகை போக்கின் ஊசலாட்டத்திற்கும் உட்படாமல் கவிதைகள் இயங்கியிருப்பதாக சொல்லப்படுமெனில் அங்கு போதாமை நிகழ்ந்திருக்கிறது என்பதினை ஏற்றுக் கொள்ள வேண்டியதாகிறது.

தில்லையின் விடாயினைப் பொறுத்தவரை முதல் பிரதியொன்றிற்கு ஏற்படுகின்ற அனைத்துவிதமான போதாமைகளும் நிகழ்ந்திருக்கின்றன. கவிதைகளுக்கான குறித்த பார்வைகளின் தெளிவும், நேர்த்தியான சொற்கட்டுமானங்களும் நிகழ்த்தப்பட்டிருக்கவில்லை. கவிதைகளின் பாடு பொருளாக கொள்ள வேண்டிய இயங்கியலில் வலிந்து சேர்க்கப்பட்ட சொற்களின் கூட்டுக்களால் பொருட் சிதைவுகள் ஏராளமாக ஏற்பட்டிருக்கின்றன.

விடாய் எல்லாமுமான கவிதைகளின் பிரதியாக வெளிவந்திருக்கவில்லை. அங்கு தேடி ஆராயும் நுணுக்க வகையிலான எவ்வித அரசியல் நிலைப்பாடுகளும் இருக்கவில்லை. மேலோட்டமாக ஆய்ந்து செல்லும் உணர்வுகளுக்கான தடயங்களும் மறைக்கப்பட்டிருக்கின்றன. கவிதைகளை உருவாக்குவதற்கான அல்லது உறுப்பெறுவதற்கான தேடலில் ஈடுபட்டுவிடாமல் கவிதைகளுக்கான வலிந்த உற்பத்தியாக விடாய் வெளிவந்திருப்பது அபத்தமானது.

கவிதைகளின் தனித்துவப் போக்கில் உருவகமாகும் வினைத்திறனானது பெருங்கதையாடலுக்கு உட்பட வேண்டியதாயிருக்கிறது. காலத்தின் எல்லாப் பக்கங்களிலும் எழுதிச் செல்கின்ற உயிர்த்தெழும் சக்தியின் மீள் வடிவத்தினைக் கொண்டது. இவைகளைத் தவிர்த்து சொற்களின் அடுக்குகளாலும், கதையற்ற மொழிகளின் வார்ப்பினாலும் உருவாக்கப்படுபவைகள் கவிதைக்கான தளத்தினுள் அடங்கிவிடுவதில்லை. விடாய் மொழி விளையாட்டுக்கான பரப்பினையும் சொற்களின் சேர்க்கையினையும் கொண்ட பொருளற்ற தாகமாக நீண்டு செல்கிறது.

கவிதைகளுக்குள் சொல்லப்படும் கதைகள் மிக முக்கியமானவை. அதுவே கவிதைகளின் நீட்சிப் போக்கினை அடையாளப்படுத்தி அவ்வாறு கதை சொல்லப்பட்டிருக்கும் கவிதைகளின் உள்ளே நிகழ்கின்ற வடிவங்கள் குறித்த உரையாடலை தொடங்கி வைக்கின்றன. கவிதைகளுக்குள் நிகழும் கதைகள் உணர்ச்சிகளின் தூளத்தில் ஓங்கி உறைக்கும் அறை கூவலாக வெளிப்பட்டு நிற்பதை உணர்த்தும் செயலூக்கங்களாகின்றன.

விடாய் கதை சொல்வதற்கான கவிதைப் போக்கினை இழந்திருக்கிறது. சொல்ல வந்த கதைகளும் வலிந்து கொண்டுவரப்பட்டிருக்கின்ற சொற்களின் கோர்வையினால் ஒழுங்கற்று கவிதைக்கான சாயலை மிக நீண்ட தூரத்திற்கு நகர்த்தியிருக்கிறது. கொண்டாட்ட மனநிலை ஏதுமின்றி சாதாரணமாகக் கடந்து செல்லக் கூடிய பிரதிகளில் ஒன்றாக விடாயினை மதிப்பிடலாமே தவிர ஆழ்ந்து செல்வதற்கான வழிகளேதுமில்லை.

பெண்ணிய படைப்பாளிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்களின் பாதிப்பிலிருந்தும், அவர்களின் கவிதை மொழியிலிருந்தும் தில்லை வெளியிறங்க வேண்டும். தனக்கானதும், தனது கவிதைகளுக்குமான மொழியினை கண்டடைதல் வேண்டும். விடாய் பிற படைப்பாளிகளின் ஈர்ப்பினாலும் அவர்களுக்கு உரித்தான மொழியில் பிரதிசெய்யப்பட்டிருப்பதாலும் தனித்துவ அடையாளத்தினை இழந்து விடுகிறது. அதுவே விடாயின் கவிதைகள் குறித்த தோல்விக்கும் அடிப்படையான செயலாக மாறியிருக்கிறது. விடாய் கவிதைகளையும் தில்லையின் மொழியினையும் சுமக்காமல் சுய அடையாளத்தினை இழந்து நிற்பதே துரதிஷ்டமானது.

 

***

-சாஜித்

 

 

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *