1.வலியைச் சுமந்து கொண்டிருக்கும் பிரதேசங்கள்
உன்னிலிருந்து நகர்ந்து
குழந்தைகளுக்குள்
தொலைந்து விட்டேனா?
கால் விரல்களும் கை விரல்களும்
களித்துக் காத்திருக்கின்றன
தொட்டு சுகிக்கும் நெடுங்கனவில்
உறங்கும் போதும் அணைப்பை விடாத
சின்னஞ்சிறு குழந்தைகள்
ஒன்பதாண்டு காலத்தை
வெளியாக்கி
விரித்துப் பரவியிருக்கிறார்கள்
பிரியும் துதும்பும்
நெற்றி மையத்தை விடுத்து
உச்சந்தலையில் கை வைத்து
விஷேசமாகப் பிரார்த்திப்பதெல்லாம்
ஆழ்துயிலில் மிதக்கும் முத்தங்களை
மேலெழுப்புவதன்றி வேறென்ன ?
வலியைச் சுமந்து கொண்டிருக்கும் பிரதேசங்கள்
மரத்துப் போவதற்காக பசப்புகின்றன
தெய்வத்தின் அக்கறையுடன்
குழந்தைகள்
நம் கன்னங்களைப்
பிடித்துக் கொள்ளும் போது
இந்த உடல்களை
வெளியாக்குவதை விடுத்து
வேறு வழிகள் ஏதுமில்லை
நாம்
இப்போது
பூரணத்துக்குத் திரும்பிவிடலாம்தானே !
2.எஞ்சும் நிழல் இருதயம்
வாரி அணைத்துக் கொள்கிறான் திருடன்
முதுகிலிருந்து பிடிநழுவும்
கைகளைக் கண்டு
கதறுகிறது குழந்தை
காயத்தின் ஆழத்தில்
சுழல்கிறது விலகல் விசை
பிஞ்சுப்பாறையில்
தோன்றிய பெருவெடிப்பில்
கருகிக் கொண்டிருக்கின்றன
இதுவரை வளர்ந்து கொண்டிருந்த
செல்லத் தாவரங்களனைத்தும்
அடித்த கையின் விரல்கள்தான்
பிடியைத் தளர்த்தும்
துரோகத்தை நிகழ்த்துகின்றன
குழந்தையின் இருதயத்தைக்
கட்டிக் கொண்டு கதறுகிறேன்
அகலாதிருக்கும்படி இறைஞ்சுகிறேன்
திருடனுக்கு ஒரே கொண்டாட்டம்
இன்றொரு குழந்தை
புதிதாகச் சேர்ந்து கொண்டிருக்கிறது
விலகலின் உலகத்தில்
3.அகாலத்துக்குள் பாயும் ரயில்
முதல் சக்கரம் திடுக்கிடவில்லை
அடுத்த சக்கரத்துக்காக
அமர்ந்திருக்கிறது மரணம்
நின்றுவிட்ட ரயிலுக்கு
எல்லாமும் புரிந்துவிட்டது
“யார் இருக்கிறார்
உள்ளே இருளில் ?”
அறிவிப்பு
ஒலித்துக் கொண்டே இருக்கிறது
இருதயத்தில் புறப்பட்ட
குருதிக்குதிரைகள்
ஓஓஓவெனக் கூவி
மலையுச்சியில் நிற்கின்றன
கடைசிக் காலை ஊன்றியபடி
தட்டிவிடும் கணமும்
மஞ்சள் சிக்னல் ஒளிர்வதும்
வேறு வேறல்ல
கடைசிச் சக்கரம்
கண்ணை மூடிக்கொண்டு பாய்கிறது அகாலத்துக்குள்.
4.கூதிர்காலத்தின் மின்விசிறி
மடியிலிருந்து
நழுவிக் கொண்டிருப்பவனை
பலம் திரட்டி இழுக்கிறது வாதை
கரங்களால்
அணைகட்டுகிறாள்
நெற்றியில் அலைபாய்ந்து
கண்களை மூடிக்கொண்டேயிருக்கும்
கூந்தல் வரிகளை
நிறுத்தவே முடியவில்லை
மேலிருந்து
அலைக்கழிக்கும்
மின்விசிறியை
கூதிர்காலத்தில் இயக்கிவிட்டவனை
இரண்டு முறை பார்த்துவிட்டு
குனிந்து கொள்கிறாள்
உடையத் தொடங்குகிறது
அணைக்கட்டு
ஆரம்பித்த
அலைக்கழிப்பை
முடித்து வைப்பதற்காக
துடிதுடிக்கும் சுட்டுவிரல்
நின்று கொண்டிருக்கிறது
தூரத்தில்
இன்னும்
வெகுதூரத்தில்…
5.கனவில் விழாது தாங்கும் குரல்
நீர்ப்பானையின் சில்லுகள்
சிதறியிருக்கும் மரத்தடியில்
குரல்வளையை இறுக்குகின்றன
முடிவற்று நீளும் விழுதுகள்
அவிழ்க்க முடியாமல் கதறுகிறேன்
பாதங்களைத் தாங்குகிறாய்
கனவுக்கொள்ளியின் தீயா
இப்படி குளிர்கிறது அம்மா ?
நடுக்கத்தில் துள்ளும் உடலை
பிடித்துத் திண்ணக் காத்திருக்கிறது
ஆதிகாலத்திலிருந்து
துரத்தும் மாவிலங்கு
முதற்கடியில் எடுத்துச் செல்கிறது
முகத்தின் கனிந்த சதையை
கொட்டும் குருதியில்
அம்மா !
அம்மா !
அம்மா !
திசைவெளியில் உதிக்கிறது ஒரே குரல்
அழுகின்ற மாவிலங்கின் தலையில்
எரிந்து விழுகின்றன
பொல்லா விழுதுகளனைத்தும்
முகத்தைப் பொருத்தி
முத்தமிடுகிறாய்
பூமியின் ஆழத்தில்
புன்னகையுடன் ஒளிகிறது
கனவில் விழாது தாங்கும் குரல்.
6.தும்பிகளின் வெளி
அதிகரிக்கிறது
பறவைகள் குறித்த பதற்றம்
உயரத்து நூலின் இறுக்கம்
அச்சுறுத்துகிறது
ஆனாலும்
பறக்க பறக்க
அழகாக இருக்கிறது
பட்டம்
வசீகரத்துடன்
சதாகாலமும்
வானத்துக்கு அழைக்கிறது
வீழ்தலின் அபாயத்துடன்
தினமும் நடுங்கும் அடிநூலை
உரசிப் பறக்கின்றன
வெளியில் திளைக்கும்
எடையற்ற தும்பிகள்.
***

சிந்தனை ஊட்டும் கவிதை வரிகள்
வாழ்த்துக்கள்
வாழ்க வளர்க தமிழ் கவி
சிறப்பு