“படைப்பு ஒரு இசைக்கோவைப் போல எனக்குள் நிகழ்கிறது.”

-இராசேந்திரசோழன்.

அன்டர்வேர் மீது சுற்றிக் கட்டப்பட்ட சற்றே பெரிய ஈரிழைத்துண்டு. அதில் துவட்டித் துடைத்த ஈரம் இன்னும் காய்ந்திருக்காது. நெற்றி முழுக்க விபதிப்பூச்சுடன் கிழக்கு நோக்கி கைக்கூப்பிக் கண் மூடி நின்றிருக்கும் அப்பாவின் உதடு மட்டும் சிறுவினாடி கூட இடைவெளியின்றி வேண்டுதல்களை முணுமுணுத்துக் கொண்டிருக்கும். அவருக்குப் பின்னால் அப்போது தான் சட்டியிலிருந்து கஞ்சி வடித்து இறக்கி ஆற வைக்கப்பட்டிருக்கும் சோற்றின் ஆவி எழும். அது மெதுவாக அவரது புறங்கால்களில் சென்று படியும். வாரந்தோறும் திங்கள்கிழமை காலைகளில் நடக்கும் இக்காட்சி அச்சிறிய வயதிலேயே தாங்க முடியாத வியப்பை அளித்திருக்கிறது. ஏனெனில் டீச்சரிடம் சொல்லிக் கொடுத்தக் காரணத்திற்காகச் சிவசங்கரைக் கோவித்துக் கொண்டு நான்கைந்து நாள்கள் பேசாமலிருந்து விட்டு, அவனாக வந்து மன்னிப்பு கேட்டும்வரை வேறிடத்தில் அமர்ந்து அவனுக்குப் பாடம் புகட்டிச் சில நாள்கள் தான் ஆகியிருக்கும். ஆனால் அத்தனை கடுஞ்சொற்களுக்குப் பின்னும் இப்படி அம்மா நடந்து கொள்வாறென்றால் எப்படி அதைச் சுலபமாக எடுத்துக் கொள்ள முடியும்?

படுக்கை, உடை மாற்றல், சமையல், படிப்பது என அனைத்தும் அந்த ஒற்றைச் சிறிய வீட்டில் தான் என்பதால் கண்ணிலிருந்து எதுவும் தப்பாது. ஏனெனில் அதற்கு முந்தைய நாளான ஞாயிறு இரவில் தான் பெரும் ரகளையும் சச்சரவும் வசவும் சண்டையும் நடந்திருக்கும். மறுநாள் பள்ளிக்கு படிக்கவும் எழுதவும் வேண்டுமென்பது திடீரென ஞாபகத்துக்கு வந்து தூர்தர்ஷன் படம் முடிந்து சற்று முன் தான் ஓடிவந்து அமர்ந்திருப்பேன். அத்தனை வாக்குவாதங்கள், தூற்றல்கள், அடிகளுக்கு நடுவே கொஞ்சமாக எழுதிய பின் , படிக்க முடியாமல் அச்சத்துடன் இருவரையும் மாறி மாறி பார்த்தபடி உட்கார்ந்திருப்பதே வழக்கம். வாரச் சம்பளத்திலிருந்து வீட்டிற்கு வழங்கும் பிரத்யேகக் காட்சியின் அரங்கேற்றம். சட்டையின் உள்பாக்கெட்டிலிருந்து 150 ரூபாயை வீட்டின் பாதியை அடைத்துக் கிடக்கும் கட்டிலின் மேல் வைப்பார் அப்பா. அடுத்த வாரச் செலவுக்காம். அம்மா அதை எடுத்து அப்பாவின் கையிலேயே திரும்பிக் கொடுத்து விடுவார். எரியும் முகத்துடன் அப்பா முறைப்பார். செலவுகளின் பட்டியல் புலம்பல்களுக்கு நடுவே அம்மாவால் வாசிக்கப்படும். மனமுவந்து 20 ரூபாய் சேர்த்துக் கொடுப்பார். பொறுமைத் தாண்டிய பின் மேலும் 10 சேர்த்து தூக்கி எறிவார். அம்மாவின் கணக்குப்படி மேலும் இருநூறு தேவைப்படுகிறது. ஆனால் லாட்டரிச் சீட்டுகள் விழுங்கிய பிறகு எஞ்சியது தான் இதுவென அம்மா அறிவார். பழைய காலங்களின் மனக்காயங்களைச் சொல்லும் போது அம்மாவின் குரல் உடைந்து தழுதழுக்கும். ஆனால் அவரது கேள்விகள் ஒவ்வொன்றும் சாட்டை விளாசல் போல சுளீரென்று இருக்கும். பேச்சு முற்றிய பிறகு அடி விழத் தொடங்கும். அப்போதும் அம்மா பின் வாங்கவே மாட்டார். ஓயாத சண்டைகள் நடக்கும். அடுத்த ஒரு மணி நேரத்தில் காலியான மைதானம் போல வீடு அமைதி அடையும். எத்தனை கடினமான நாள்களிலும் கூட பயத்தில் மறுத்தாலும் சாப்பிட்ட பிறகே பாய் விரிக்க அம்மா அனுமதிப்பார். நடுச்சாமத்தில் பாத்திரம் உருட்டும் சத்தம் கேட்டால்(அப்பா) எது எங்கே இருக்கிறது என யாருக்கோ சொல்வது போல போர்வைக்குள்ளிலிருந்து அம்மா குரல் கொடுப்பார். அழுகை, சாபம், பயம் எனக் கழிந்த இரவுக்குள்ளிலிருந்து விடியலைக் கண்ட அம்மா அதற்குக் காரணமானவருக்கு ஓடியோடி வேலை செய்வதையும் அவர் எதுவுமே நடவாதது போல கிளம்பிச் செல்வதையும் மூடாத வாயுடன் பார்த்தபடியிருப்பேன். வட்டில் கழுவும் போது அம்மா கண்களால் ஜாடை செய்வார். டோபியை நோக்கி ஓடிவேன். அங்குத் தேய்த்து வைக்கப்பட்டிருக்கும் வேட்டி, சட்டையை, பிறந்த நாளில் புத்தாடையால் மலர்ந்த சிறுவன் கேக்கைத் தூக்கிக்கொண்டு வருவது போல தெருவில் ஏந்தி வருவேன். இப்போது இருவரும் இலகுவாகி கொஞ்சமாக பேசத் தொடங்கியிருப்பார்கள். முழங்கைவரைச் சட்டையைச் சுருட்டி விட்டு கிளம்புகையில் மறக்காமல் கட்டில் தலையணைக்கடியில் 50 ரூபாயை வைத்து விட்டு போவார் அப்பா. அதை அம்மா பார்த்தது போலவுமிருக்கும். பார்க்காதது போலவுமிருக்கும்.

தாம்பத்தியம் என்பதன் பொருள் என்ன? ஈருயிர் ஓருடலா..! ஒருவர் மனதில் நினைக்க அதை மற்றவர் ஈடேற்றுவதா? பசுமை மேவிய அன்றாடங்களை, வானவில் வீதிகளில் செலவழிப்பதா? மகிழ்ச்சியின் கூடாரமா? அல்லது அதற்கும் மேலானதொரு வாழ்வா? அப்படியென்றால் இச்சிறப்புகளை அடியொன்றி வாழும் தம்பதிகளை இதுவரைக் காணும் பேறு பெறாத துரதிஷ்டசாலி நான். அத்தனைக் கோளாறுகளுடனும் சச்சரவுகளுடனும் மனஸ்தாபங்களுடன் உள்ளூர ஒருவரையொருவர் விட்டுத் தராமல், அன்பு என்கிற தகர டப்பாவை தேவைக்கதிகமாக உரசிச் சத்தமெழுப்பாமல் , அது எங்கே இருக்கிறது எனப் பரஸ்பரம் புரியாமலேயே ஆனால் உணர்ந்து கொண்டு இருவரும் ஒரு கூரையினடியில் காலத்தைக் கழிப்பதையே தாம்பத்தியம் எனக் கண்டு வந்திருக்கும் பல குடும்பங்களை பார்த்திருக்கும் இப்பாவியை மன்னியுங்கள் லட்சியத் தம்பதிகளே..! ஆன்றோர்களே..! அன்பின் செல்லக் குழந்தைகளே..! பொய்யின் அரசர்களே..!

தனபாக்கியம் அத்தகையதொரு பெண் (தனபாக்கியத்தின் ரவ நேரம்) பாத்திரம். அது போன்ற சூழலில் புழங்கும் பெண்களுக்கேயுரிய எதிர் நின்று வாயாடும் இயல்புள்ளவள். இன்னொரு காது அறியாது மொணுமொணுவெனப் பேசும் சுபாவங்கள் அறவே அற்றவர்கள் இராஜேந்திர சோழனின் பெண் பாத்திரங்கள். அதற்கான பரிசுகள் தாமதமின்றி ஆண்களால் அவர்களுக்கு வழங்கப்படும் என நன்கு தெரிந்தே பம்மி பதுங்குபவர்களோ ஓடி ஒளிபவர்களோ அல்ல.

பிரச்சினை எதனாலென்று கதையில் சொல்லப்படுவதில்லை. தொடங்குவதே தனபாக்கியத்தின் அழுகையிலிருந்தும், அடியின் வலி தாளாமல் புருஷனை தூற்றுவதிலிருந்துமே. சூடு பறக்கும் அவளது ஒப்பாரி போன்ற புலம்பல்களுக்குத் தகுந்த ‘பதில்கள்’ அவனிடமிருந்து கிடைக்கின்றன. ஒரு கட்டத்தில் கோவித்துக் கொண்டு வெளியேறி போய் அமர்ந்து கொள்கிறாள். குழந்தையின் அழுகை கேட்கிறது. காட்டில் வேலை செய்பவர்களுக்கு கூழ் கரைத்து வாங்கிச் செல்ல வேலையாள் வேறு வந்து விடுகிறான். எந்தச் சத்ததிற்கும் உள்ளேயிருந்து பேச்சேயில்லை. ஓயாத வேலைகள் நிறைந்திருக்கும் அந்த வீட்டை நிர்வகிக்கும் பாட்டாளி அவள். மெதுவாக அந்த வீட்டிற்குள் நுழைய அங்கு தன்னை அடித்த ஆம்பளை தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறாள். இப்படி பிழைக்க ஆயிற்றே என்கிற பராதிகளைக் கடை விரித்தபடியே குழந்தையைச் சமாதானம் செய்து உறங்கச் செய்த பிறகு காத்திருக்கும் ஆளுக்குத் தேவையானதைக் கொடுத்து அனுப்புகிறாள். பிறகு இருவருக்குள்ளும் மிக இயல்பாக அதற்கான சிறிய கோபத்துடன் பேச்சு அரும்புகிறது. மலர்கிறது. கொஞ்ச நேரத்திற்கு முந்தி இருந்த நிலைமை சட்டென்று தலைகீழாக மாறி விடுகிறது. இந்த மாற்றத்திற்கு பின்னுள்ளது தான் தாம்பத்தியமா? வாழ்க்கையில் அப்படித்தானே பலதும் இருக்கும் என்கிற முதிர்ச்சியா? அல்லது இத்தகைய பெரிய சொற்களைப் போட்டு புரிந்து கொள்வதற்கு அவசியமில்லாத சாதாரண வெளிப்பாடுகளுள் ஒன்றா..?!

இக்கதையில் மட்டுமல்ல அவரது படைப்புலகின் பிரதான அம்சங்களில் ஒன்றாகத் துலங்குவது, குடும்பத்தின் அச்சாணியும் நிர்வாகியும் அதை முன்கை எடுத்து நிறுத்துபவளும் பெண் மட்டுமே என்கிற மதிப்பீடு ஆகும். குழந்தைகளை வைத்திருக்கவே துப்பற்றவர்களாவே ஆண்கள் இருக்கிறார்கள். இது பல கதைகளில் நுட்பமாக உணர்த்தப்படுகிறது. தனபாக்கியம் சீராடிக் கொண்டு போய் அமர்ந்திருக்கும் போது அழும் குழந்தையை எப்படி சமாளிப்பது என்றே கொஞ்ச நேரத்திற்கு முன் வீரத்தைக் காட்டிய ஆளுக்குத் தெரியவில்லை. கண்ணில் பட்டு கைகளில் சிக்கும் எதுவும் தன்னுடையது என நினைக்கும் ’முதலாளித்துவப் பார்வை’ கொண்டவை குழந்தைகள். எனவே அவற்றை வாங்கித் தர அடம்பிடிக்கும், சிக்கியதை விழுங்க ஆசை கொள்ளும், கையில் கிடைத்ததை சோதனை என்ற பெயரில் உடைத்துச் சிரிக்கும். அதற்கு அனைத்து உரிமைகளும் உண்டு.

தனபாக்கியம் இவரது கதையுலகில் இடம்பெற்று ஏழாண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்ட கதையொன்றில் கூட (இழை) கைக்குழந்தையோடு அல்லாடும் பெண் வருகிறாள். இவள் தனத்தைக் காட்டிலும் சற்று நாகரீகமானவள். எனவே பேச்சு சுருக்கென்று காரமாக இருக்குமேயன்றி தெருவிற்குக் கேட்கும்படி உரத்து ஒலிக்காது. ஊரிலுள்ள பல்லாயிரம் கணவன்களைப் போலவே அவனும் இரவில் வீட்டை எட்டுவது உணவுண்ணும் வேளையில் தான். ருசியில் குற்றங்குறைகளைச் சொல்லும் போது, அவள் அதற்குக் காரணமாகக் குழந்தையைக் காட்டுகிறாள். அவனது எந்தச் சொல்லுக்கும் பதில் அம்புகள் அவளிடம் தயாராக இருக்கின்றன. ஆனால் அவனைப் போன்றவர்கள் குழந்தையை சில நிமிடங்கள் கூட சமாளிக்க முடியாது என்பது கதையோட்டத்தில் மறைபொருளாக உணர்த்தப்படுகிறது. அவனைப் போன்ற இன்னொருவனான சீனு அலுவலகம் முடிந்து வந்த மாலைவேளையில் என்றுமில்லாத திருநாளாக குழந்தையை தோளில் போட்டு தெருமுனைக்குச் செல்கிறான்(மடை). அங்கு நண்பர்களுடன் கட்சி அரசியல், பொருளாதாரம், நாட்டு நடப்புகள் தூள்பறக்கின்றன. இடையே குழந்தை ‘கம்மர்கட்’ கேட்டு அடம்பிடிக்கிறது. கொஞ்சல்கள், சமாதானங்கள் எதுவும் பயனற்றுப் போகின்றன. எரிச்சலையும் கோபத்தையும் அடக்கிக் கொள்கிறான். சோட்டாளியின் கைங்கரியத்தில் குழந்தை வேண்டியது கிடைக்கிறது. பொல்லாத வேளையாக அது புழுதியில் விழுந்து விடுகிறது. அப்போதும் அது விடுவதாகயில்லை. பிறகு அவனது ஒட்டுமொத்த சினமும் அடிகளாக இறங்குகின்றன.

விடுமுறைநாளில் தூங்கலாம் என நினைப்பவனுக்கு இடைஞ்சல்கள் தன் பள்ளிச் செல்லும் குழந்தைகளிடமிருந்து வருகின்றன. அதற்கு, வீட்டு வேலைகளுக்குள் ஓயாமல் உழலும் மனைவியின் சிபாரிசு வேறு. அவர் அவர்களின் பாடங்களுக்கு உதவப்போக உறக்கம் கெடுகிறது. ஒருவழியாக ஓய்ந்து தலை சாய்க்கலாம் எனும் போது கைக்குழந்தையை அவரிடம் தந்துவிட்டு மீண்டும் வேலைகளுக்குள் மூழ்குகிறாள் மனைவி. அவரால் குழந்தையைச் சரிக்கட்ட முடிவதேயில்லை. இந்த ஆண்களின் வீறாப்பும் விரைப்பும் சில மணி நேரங்கள் குடும்ப அங்கத்தினர்களாக கட்டினவளின் வேலையைப் பகிரும் போது பல்லிளித்து விடுவதைக் காணலாம் (பகல் தூக்கம்).

குடும்ப அலகில் ஆணின் பாத்திரம் எத்தகைய பங்கை ஆற்றுகிறது என யோசித்தால், அன்றாடக் கடன்களை நிறைவேற்றிக் கொள்ளவும், வருமானத்தை ஈட்டி குடும்ப உறுப்பினர்களைப் பழுதடையாது காபந்து செய்வதுமே எனக் கருதிக் கொள்பவர்களே அநேகம். பிள்ளைகளின் குணவிசேஷங்களை நெருங்கி அறியும் தந்தைகள் அபூர்வம். அதை மிக நுணுக்கமாகச் சொல்லும் கதை ‘வினை’. கட்சி ஒருங்கிணைக்கும் பெண்கள் மாநாட்டுக்கு மனைவியை அனுப்பி விட்டு வீட்டில் மனைவியின் இடத்தில் ஒருநாள் தற்காலிகமாக வாழ்ந்து பார்க்கிறார். வீட்டைப் பற்றி, பிள்ளைகளின் சுபாவங்கள் குறித்தெல்லாம் மேலோட்டமாகவே அறிந்து வைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. வீட்டில் மனைவி எப்படிப்பட்ட பாத்திரத்தை வகித்தாள் என்பதெல்லாம் கதையின் போக்கில் உணர்த்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. மீட்டிங்கிலும் நற்பெயரை எடுத்தே திரும்புகிறாள். ஆசிரியரால் வெவ்வேறு கதைகளில் கட்சிச் செயல்பாடுகள் (இடதுசாரி) மீது தொடர்ந்து வைக்கப்படும் விமர்சனங்கள் இக்கதையினுள் கூர்மையாகவே வெளிப்படுகின்றது. இக்குடும்பமே படைப்பாளியினுடையது தானோ என யூகிக்க பெரிய மெனக்கெடல்கள் ஏதும் அவசியப்படவில்லை. எழுத்தாளனின் சொந்த வாழ்க்கையின் ஒரு கூறு என்பதால் கதையின் மேல் கூடுதல் நெருக்கமும் உருவாகி விடுகிறது.

மிகச்சிலருக்கே தன் ஆரம்பகால முதல் சிலக்கதைகளிலேயே தான் மேற்கொள்ளவிருக்கும் படைப்புத்தொழிலில் கையாளவிருக்கும் மனிதர்களை, அதனூடாக தன் இலக்கியப் பயணத்தை கோடிக்காட்ட முடிந்திருக்கிறது. அவர்களில் ஒருவர் இராசேந்திரசோழன் (எ) அஸ்வகோஷ். பள்ளிப்பருவத்திலேயே இயல்பாக உருவாகி விட்டத் தனிமைக்கு நூல்களே அவருக்குத் துணையாக இருந்திருக்கின்றன. அதன் ஆசிரியர்களான மு.வ, கல்கி, ஜெகசிற்பியன் போன்றோர் அவரை ஒன்றுமே செய்யவில்லை. மாறாக அவற்றில் நிஜமான வாழ்க்கையில்லை என்கிற ஆதங்கமும் அவை போலியானவை என்ற அபிப்ராயமுமே இருந்ததால் உள்ளதை உள்ளபடி எழுத வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்துள்ளது. மார்க்சிம் கார்க்கியின் ‘மூன்று தலைமுறைகள்’(அர்த்தமோனவர்கள்) அவரைக் கவர்ந்ததிலும் அந்த பாதையே தன் வழி எனத் தேர்ந்து கொண்டதிலும் வியப்பொன்றுமில்லை. அவரது கதையுலகில் எளிய மனிதர்களே நிரம்பி இருக்கின்றனர். அவரது இயல்பான சுபாவமே அந்த மக்களை எழுத வேண்டும் எனத் தோன்றியிருக்கக்கூடும். ஏனெனில் தன் பெயர் எளிமையாக இல்லை எனக் குறைப்பட்டு கொள்பவராக, ஒரு மன்னனின் பெயரை வைத்து விட்டார்களே என அங்கலாயிப்பவராகத் தான் இருக்கிறார். அரசாங்க உத்தியோகத்தில் ஆசிரியராகப் பணியாற்றியதால் சொந்தப் பெயரில் எழுதுவதிலுள்ள சிக்கல்களால் அஸ்வகோஷ் என பின்னால் பெயரை மாற்றிக் கொண்டார். இக்கட்டுரையில் இவ்விரு பெயர்களும் மாறி மாறி கையாளப்பட்டிருக்கின்றன.

முதற்கதையான ‘மனக்கணக்கு’ அவரது ஆதர்ஷங்களில் ஒருவரான புதுமைப்பித்தன் மாறுவேடம் பூண்டு எழுதினாரோ என ஐயமுறுமளவிற்கு நேரடியான பாதிப்பைக் கொண்டிருக்கிறது. பு.பி-யின் உச்சக் கதைகளுள் ஒன்றான ‘செல்லம்மாளி’ன் துயராந்த பூஞ்சை நிமிடங்களை இங்கும் சந்திக்க நேர்வதால் அதே உணர்ச்சிக்குள் இட்டுச் செல்கிறது. வெகுசீக்கிரம் அந்தப் பாதிப்பிலிருந்து வெளியேறி தன் கதைவெளிப்பாட்டு வடிவத்தையும் அதற்குரிய மொழியையும் கண்டடைந்திருக்கிறார் இராசேந்திரசோழன். இவரது மூன்றாவது கதையிலேயே அதைக் காணலாம். ஆனந்த விகடன் நடத்திய மாவட்டச் சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்டு அக்கதை முதல் பரிசை பெற்றிருக்கிறது. தெரிவு செய்தவர் ஜெயகாந்தன். கதையின் தலைப்பு ‘எங்கள் தெருவில்’.

இக்கதை அவரது படைப்புலகில் பங்கேற்கவிருக்கும் வலுவான பெண் பாத்திரங்களுக்குக் கட்டியம் கூறுவது போல அமைந்திருந்தது சாதாரணமல்ல. பவுனம்பா, அவ்வீட்டின் பல வித குணாதியங்களைக் கொண்டவர்களுடன் வாய் வளர்த்தியபடியே சீராக ஒவ்வொன்றையும் செய்து முடிப்பதை அவ்வயதைத் தாண்டிய (அவரது வயது 25) முதிர்ச்சியுடன் கையாண்டிருப்பதற்கு அப்பரிசு தகுதியானவொன்றே. 1945ல் மயிலத்தில் பிறந்த இராஜேந்திர சோழனின் தீவிரமான படைப்பாக்க ஆண்டுகள் என 1970-73 வரை எனச் சொல்லலாம். அதிலும் குறிப்பாக 71ல். அவரது மொத்தப் படைப்புலகில் 80ஐத் தொடும் கதைகள் உள்ளன என்றால் அவற்றில் இந்நான்காண்டுகளுக்குள் எழுதியவை மட்டும் 60-ஐ எட்டுகின்றன. அதாவது 80 சதவீதக்கதைகளை முப்பது வயதிற்குள்ளாகவே எழுதி விட்டிருக்கிறார் இராஜேந்திர சோழன். அதில் முக்கால்பங்கு கதைகள் ’செம்மலரி’லேயே வெளிவந்திருக்கின்றன. அவரே பல இடங்களில் சொன்னது போல ஜார்ஜ் புலிட்சரின் ‘ மார்க்சிய மெய்ஞானம் ஓர் அரிச்சுவடி’ நூல் அவரது பார்வையை முழுதாக மாற்றி விட்டிருக்கிறது.

மார்க்ஸியமே மனித விடுதலைக்கான ஞானம் அடங்கியுள்ள தத்துவம் என்பதைக் கண்டுணர்கிறார், கூடவே தான் இடதுசாரி என்பதையும். பிறகு இயக்கவேலைகள், களப்போராட்டங்கள், வீதி நாடகங்கள் என தன் விருப்பத்தின்படி செயலாற்றிய இராசேந்திரசோழன் சில குறுநாவல்களையும் அதே காலப்பகுதியில் எழுதியிருக்கிறார். கட்சிப் பணி அவரது இலக்கியத்தை தின்று விட்டிருக்கிறது. இடதுசாரியாக இருந்து கொண்டே கட்சியின் இலக்கியப் பார்வைகளை மனமாச்சர்யமின்றி விமர்சித்துக் கொண்டு சமரசமின்றி தன் கருத்துக்களை முன் வைத்த இராசேந்திரசோழன் நவீன தமிழின் சிறந்த கலைஞர்களுள் ஒருவர். குறிப்பிட்டக் காலப் பகுதியில் அவர் வெளியிட்ட தொகுதிகள் அன்றைய தீவிர இலக்கியக்காரர்களின் கவனத்திற்கும் பேசுபொருளுக்கும் உரியதாக விளங்கின. இத்தனைக் கட்சிப் பணிகள், போராட்டங்கள், பல முன்னெடுப்புகளை நடத்தியும் கூட சமூகத்தில் போதிய மாற்றமேதும் ஏற்படாமல், பழைய நிலையே தொடர்வது தன் அப்பாவுக்கு மனக்குறையாகவே எஞ்சி நிற்கிறது என அவரது மகன் ஓரிடத்தில் சொல்லி இருக்கிறார். ஆனால் அரைநூற்றாண்டுக்கும் முன் அவர் எழுதிய கதைகள் இன்றளவும் ஒளி குன்றாது புதிய தலைமுறை வாசகர்களைச் சென்றடைகின்றன, அவர்கள் முன் அவரைக் கலைஞராக நிலைநிறுத்துகின்றன என்பதைக் காணலாம்.

இராசேந்திர சோழனைப் புனைவெழுத்தாளராக மட்டுமின்றி பல்வேறு துறைகள் சார்ந்த 30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். பாதல் சர்க்காரிடம் பெற்ற பயிற்சிக்குப் பிறகு அவர் நாடக ஆசிரியராகவும் பரிணமித்திருக்கிறார்.

சுயம்பு என இங்கு ஒருவருமில்லை. ஒன்றின் விளைவே மற்றொன்று. அந்த மற்றொன்று, முன்னோடிகளின் ஆரம்பகட்ட பாதிப்புகளையடுத்து, தனித்த வழியை அமைத்துக் கொள்கிறது. ஏனெனில் ஓர் ஆக்கத்தின் கச்சாப்பொருள் அதை எழுதியவரின் வாழ்க்கைக்குள்ளிலிருந்து அல்லது தன்னுடைய வாழ்க்கையாக மடைமாற்றிக் கொண்டவற்றிலிருந்து தோன்றுவதால் இயல்பிலேயே புதிய ஒன்றாகவே இருக்கும். இராசேந்திரசோழன், தன் எழுத்தைப் பாதித்தவர்கள் என புதுமைப்பித்தனையும் தி.ஜானகிராமனையுமே குறிப்பிட்டிருக்கிறார். இரண்டிற்குமே உதாரணங்கள் அவர் படைப்புலகில் காணக்கிடைக்கின்றன. மிகக்குறிப்பாக பாத்திரகளின் தோற்றத்தைத் தீட்டிக் காட்டும் இடங்கள் தோறும் தி.ஜா-வின் நிழல் அங்கு விழுந்து கிடக்கிறது. ஏனெனில் அந்த வர்ணனைகளில் தி.ஜா போன்றே அழகியலுடன், அவர்களைச் சில வரிகளில் கண்முன் நிறுத்தும் ரசவாதத்தைக் காண முடிகிறது. உதாரணமாக,

‘பெண் அழகு, சின்ன கச்சிதமான உருவம், அதிகம் விதரணை படியாத முகம், கொஞ்சம் மலங்க விழிக்கும் கண்கள்; உடம்பை ஒட்டின உடுப்பு ; தோள், மார்பு, இடுப்பு, அதற்கும் கீழே எல்லாம் அளவாய் திட்டமாய்…கணக்காய் செய்து வைத்த மாதிரி….’ (கழுதையின் வாயில்)

‘நல்ல உடம்பு, நல்ல வாளிப்பு, கட்சோளி தைத்துப் போட்டால் கணக்காக இருக்கும். போட் நெக்கு வைத்தால் இன்னும் பிரமாதம், மொழுமொழுவென்ற மூக்கு, கறுகறுவென்று காதோரம் இறங்கிய மயிர், மழுப்பாலான நெற்றி, அடர்த்தியான புருவம், அகல விரிந்த கண்கள்,அதில் திகைப்பும் குழப்பமும்..’ (டெய்லர் கந்தசாமி)

‘வெறும் உடம்பில் லுங்கி மட்டும் கட்டியிருந்தது புள்ளாண்டான். விசாலமான படர்ந்த மார்பு, வெங்கலத்தில் கடைந்தா மாதிரி. நெஞ்சில் பிஞ்சாய் வளர்ந்து பரவியிருந்த ரோமம், கருகருவென்று சிலுப்புக் கொண்டிருந்தது, நடுவில் கோடாட்டம் மார்பிலிருந்தது. வயிற்று வழியே லுங்கிக்கட்டு வரைக்கும் இறங்கியிருந்தது. வாகான கைகள். முழங்கைக்குக்கீழே எப்போதும் வெளியில் தெரியும் கை கன்றிச் சிவப்பேறிப் போயிருந்தது’ (நாட்டம்)

கனவின் புனைவுவடிவாக அமைந்திருக்கும் கதைகளில் மெளனி சிறிதளவு எட்டிப் பார்க்கிறார் என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும். ஆனால் இராசேந்திரசோழனின் கதையுலகு மிகுதியும் தென் ஆற்காடு பகுதியிலேயே அம்மக்களின் வாழ்க்கைக்குள்ளேயே கால் கொண்டிருப்பதால் அதுவரை நவீன தமிழ் இலக்கியத்திற்குள் இடம்பெறாத அம்மண்ணின் மனிதர்களும் அவர்களது நானாவித குணங்களும் மன ஊசல்களும் முதன்முறை அச்சேறின எனச் சொல்லலாம். அவ்வகையில் ஒப்பற்றவர். அக்கதைகளின் கலைத்தரமே அவரைச் சிறந்தக் கலைஞர்களில் ஒருவராக முன்நிறுத்துகிறது.

ஆனால் இவரது உலகிற்கு சம்பந்தமுள்ள அதாவது எளிய, விளிம்புநிலை மனிதர்களைத் தங்கள் படைப்புலகிற்குள் கொண்டு வந்த ஜெயகாந்தனும் ஜி. நாகராஜனும் அவரைக் கவரவில்லை. மாறாக அவரால் விமர்சனத்திற்குள்ளாகப்படுகிறார்கள்.

****

நல்லுணர்ச்சி மனிதப்பண்புகளில் தலையாயது தானா? சுயநலனே மனிதனின் ஆதார உணர்ச்சியா? போன்ற வினாக்களை எளிய மனிதர்கள் முதற்கொண்டு பெரிய கலைஞர்கள் வரை எழுப்பி இருக்கின்றனர். மரணவீட்டில் வாழ்க்கை குறித்து சாதாரணர்கள் எழுப்பும் பலமான கேள்விகளெல்லாம் அவர்கள் இல்லம் திரும்பி தலைநீராடியவுடன் அந்த நீருடன் அடித்துச் செல்லப்பட்டுவிடும். ஆனால் கலைஞர்கள் அதை அறியவும் பின் தொடரவும் அந்த ஓட்டை உடைத்து உட்செல்லவும் போராடுவார்கள். இதை தன் வாழ்க்கை நிகழ்ச்சி ஒன்றுடனோ அல்லது தான் வளர்ந்த சூழலில் சாத்தியமில்லாத எனவே புதிய வாழ்க்கையாகவோ காணும் வாசகருக்கு தன் குறுகிய எல்லைகளைக் களையவும் ஒற்றை வழித்தடங்களிலான தன் பாதைகளை உதறவும் அவை பேரளவு துணைநிற்கின்றன எனச் சொல்ல முடியும்.

அன்றாட பத்திரிகைச் செய்திகளில் நகைமுரண் போல அருகருகே அமையப்பெற்ற இருவேறு செய்திகளை அவ்வப்போது பலருமே கண்டிருக்கலாம். சில வாரத்திற்கு முன் அவ்வாறான இரு வேறு செய்திகள் கண்ணில் பட்டன. தெருப் பெருக்கும் தூய்மைப் பணியாளர் ஒருவருக்கு சாலையில் கைப்பை அகப்படுகிறது. அதைப் பிரித்துப் பார்க்கும் போது உள்ளே ரூபாய் தாள்கள். பார்த்ததுமே முதலில் அச்சமேற்பட்டிருக்கலாம். எவருமே அருகிலில்லை எனும் போது அதை தனதாக்கி கொள்ள ஆசையும் தோன்றியிருக்கலாம். அது தவறுமில்லை. மனிதர்கள் தானே? ஆனால் அந்த அம்மாள் காவல்நிலையம் சென்று அதைக் கொடுத்திருக்கிறார். உள்ளே ஐம்பதாயிரத்தை நெருங்கும் ரொக்கம் இருந்திருக்கிறது. அதற்கு மேலே இன்னொரு செய்தி. பட்டா வழங்குவதற்கு 5000ரூபாய் லஞ்சம் பெற்ற அரசு அதிகாரி கைது. ஏழைகள் நல்லவர்கள். பணம் இருப்பவர்கள் தீயவர்கள் என்கிற கருப்பு வெள்ளை சட்டகத்திற்குள் இதைக் காண வேண்டாம். ஆனால் ஒருவர் பொருளீட்ட படும் அல்லல்களை, வசதி படைத்தோரை விடவும் அதே வரிசையில் அல்லது அதற்கும் கீழே உள்ளவர்கள் மிக நன்றாக உணர்ந்திருப்பார்கள். ஏனெனில் ‘வெள்ளத்தனைய மலர் நீட்டம்.’ இலக்கியம் இரண்டையுமே வெவ்வேறு களன்களில் சந்தித்திருக்கிறது. அசாத்திய வலிமையுடன் அணுகியுமிருக்கிறது. பேரளவு சாதனைகளைப் புரிந்துமிருக்கிறது.

இயல்பாகவோ சூழலின் பொருட்டோ நல்லுணர்ச்சிக் கதைகள் ஏகதேசமாக எளியவர்களை மையமிட்டே எழுதப்பட்டிருக்கின்றன. ‘பாம்பின் கால் பாம்பறியும்’ என்பதலா..! ஆனால் அதிலும் ஆ.மாதவன் போன்றவர்கள் தன் வறுமைநிலை காரணமாக பெற்ற தாயையே உணவில் நஞ்சூட்டிக் கொல்லும் கதையை (தூக்கம் வரவில்லை) எழுதியிருக்கிறார்கள். அதில் மேற்படி பாத்திரத்திற்கு எந்தக் குற்றவுணர்ச்சியும் இருப்பதில்லை. மாறாக அமைந்த வண்ணநிலவனின் கதைகளின் வரிசை கண்முன் ஓடுகிறது. மனிதனுக்கும் நல்லெண்ணத்துக்கும் என்ன சம்பந்தம் எனக் கேட்கும் இடத்தில் வெற்றிலைச் செல்லத்தோடு புதுமைப்பித்தன் அமர்ந்திருக்கிறார். கீழ்மைகளை எழுதிக்காட்டிய ஜானகிராமனின் எழுத்துக்களில் நல்லியல்புகளின் வற்றாத சிற்றாறு அமைதியாக ஓடுகிறது. இவர்களில் இராசேந்திரன்சோழன் கதையுலகில் விலைமாதர்கள் இடம்பெறும் கதைகளை மட்டும் வைத்துக் கொண்டு அந்த நல்லுணர்ச்சியை அணுக முயற்சிக்கலாம். ஜி. நாகராஜனின் உலகிலுள்ள விபச்சாரிகளுக்கும் இவர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. போலவே ஜெயகாந்தன் கதைகளில் வருகிற எளிய மனிதர்களும் இராசேந்திரசோழனின் வருகிற சாதரணர்களுக்கும் ஒரே மாதிரியானவர்கள் அல்லர்.

1972ல் அதாவது சரியாக அரைநூற்றாண்டுக்கு முன் லாட்ஜ் வாடகை மூன்று ரூபாய் இருக்கும் காலகட்டத்தில் இராசேந்திரசோழனால் ஒரே ஆண்டில் எழுதப்பட்ட மூன்று கதைகளில் குடும்ப அங்கத்தினர்களாகத் திகழும் பெண்கள் ’கிராக்கி’ கிடைக்குமா என்கிற நப்பாசையில், தங்கள் அன்றாட ஜீவிதத்திற்காக அலையும் கதைகள் ‘பாசிகள், ‘சில சந்தர்ப்பஙகள். அதே பெண்கள் கிடைக்கிற கிராக்கியுடன் எவ்வாறெல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்பதை நேரடியாகக் காட்டியபடியே அதனடியில் காற்புள்ளிகளையும் அரைப்புள்ளிகளையும் வைத்தவாறு நகரும் கதை ’வானம் வெளிவாங்கி’. இன்னொரு கதையும்(அவரோட லோகம்) இருக்கிறது. அதை இங்கு சொல்வது பொருந்தாது என்பதால் தவிர்த்து விட்டேன். காயாத வயிறுகளுக்காக ‘கிராக்கி’ தேடித் திரிபவை முதலிரண்டு கதைகள்.

மொத்தத் தொகுதியில் டாக்ஸிகள் இடம்பெறும் கதைகளே ஐந்தாறு இருக்கும். ’பாசிகள்’அதிலொன்று. ஊரிலிருந்து வரும் நண்பனை தனக்கருகில் அமர்த்திக் கொண்டு சவாரி போவது அவன் வழக்கம். அன்று வாடிக்கை ஏதும் அமையவில்லை. அப்படியே ரவுண்ட் அடிக்கும் போது இருவர் தட்டுப்படுகின்றனர். கண்டதுமே டாக்ஸிக்காரன் சொல்லி விடுகிறான் ‘சாமான்’. நண்பனுக்கு ஒப்புக் கொள்ள மனமில்லை. அங்கு நிற்கும் இரு பெண்கள் தடித்த உருளை மாதிரியும் ஒல்லியாகவும் இருக்கிறார்கள். அம்மாவும் பெண்ணும். ஏறியதும் கேட்டு விடுகிறான் ‘எதுனா கிடைச்சுதா?’. அருலிருப்பனுக்கோ அச்சம். ஆனால் டாக்ஸிக்காரனின் கேள்விகள் அடுத்தடுத்து விழ விழ அவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். குழந்தைகளை ஆறு வயதில் விட்டுவிட்டு கணவன் போனதும் அம்மா இந்த மாதிரி கிடந்து அலைந்து தான் குடும்பத்தையே ஒப்பேற்றி இருக்கிறாள். பையன்களுக்கும் மணம் முடித்து வைக்கிறாள். அவர்களுக்கு குடும்பம் ஆன பின் தன் அம்மாவையோ தங்கையையோ காண மறுக்கிறார்கள். எனவே ’தொழிலு’க்கு வந்தாகிவிட்டது. ஆனாலும் ஆட்டோக்காரன் சுறுக்கென்று பேசுவதில் வல்லவன் (உ-தா : ’இதுல ருசி கண்டவங்க விட மாட்டாங்க).

இன்னொரு கதையான ‘சில சந்தர்பங்களி’லும் இதே போல தான். சவாரியே கிடைக்காமல் லோல் படுகிறான் டாக்ஸிக்காரன் ஒருவன். அகஸ்மாத்தமாக முன்னர் பனிரெண்டு ரூபா பாக்கி சொல்லி போனவள் அகப்படுகிறாள். உடன் வேறு ஒருவன். அது கஸ்டமர் என இவனுக்குப் புரிந்து விடுகிறது. விரட்டிச் செல்வதற்குள் அவனோடு பேருந்து ஏறி விடுகிறாள். ஏமாற்றமும் கோபமும் கனலத் திரும்பும் போது அந்த பனிரெண்டு ரூபாயின் கதை வாசகருக்குச் சொல்லப்படுகிறது. அவன் யாருமில்லாமல் அலைந்த இரவொன்றில் இவள் ஏறி பீச்சுக்கு விடச் சொல்கிறாள். அங்குமட்டுமல்ல கிட்டத்தட்ட அந்தப் பகுதி முழுக்கவுமே ஆட்டோவில் சுற்றுகிறாள். அவள் கிராக்கி பிடிக்கத் தான் இந்த பாடுபடுகிறாள் என அவனுக்குத் தெரிகிறது. கூச்சமும் அவமானமும் அடைந்தாலும் அவளுக்காக மனமிரங்கி கூடவே அலைகிறான். சொகுசு ஓட்டலுக்கருகே கிடைத்த வெளிநாட்டுக்காரனுடன் வண்டிக்குள்ளேயே சில்மிஷங்கள் நடக்கின்றன. முதலில் துட்டு என இவள் காட்டிய கறார்த்தனத்தால் அவன் பத்து ரூபாயை எறிந்து விட்டு பாதியிலேயே விட்டுவிட்டு சென்று விடுகிறான். அவளுக்கு அன்று துரதிஷ்ட நாள். டாக்ஸிக்காரனை அண்ணா என அழைத்து தன் நிலையை எடுத்துக் கூறி பாக்கி சொல்லிப் போகிறாள்.

மேற்சொன்ன இரு கதைகளிலுமே டாக்ஸிக்காரன் அந்த பெண்களிடம் அட்ரஸ் கேட்கிறான். இருவருமே வேண்டாம் என மறுக்கிறார்கள். ஆனால் பாக்கி சொன்னவள் (சில சந்தர்ப்பங்கள்) மிகத் தயங்கி முகவரி தந்து விட்டு போகிறாள். அதை வைத்துக் கொண்டு அந்த வீட்டைக் கண்டுபிடிக்கிறான். 12 ரூபாய் பாக்கி சொன்னவள் பெயர் விமலா. வறுமையின் கூரையின் கீழ் நைந்து போன அவள் அம்மா அந்த ஒண்டுக்குடித்தனத்திற்குள் அமர்ந்திருக்க, பள்ளி விட்டு மூன்று வாடிய குழந்தைகள் நுழைகின்றன. அவளுடன் பிறந்தவர்கள். அவர்களின் முகங்களே எப்படிப்பட்ட வாழ்க்கை அங்கு கழிகிறது என அறிய போதுமானதாக இருக்கிறது. அந்த அம்மாவிடம் சாதாரண விசாரிப்புடன் திரும்பி வந்து மீட்டரைத் திருப்பும் போது விமலா சாலையிலிருந்து ஓடி வந்து அவனிடம் மன்னிப்புக் கேட்டு விட்டு பணத்தை நீட்டுகிறாள்.

முதல் கதையில் அந்த அம்மா 70 பைசாவுக்கு ஒரு ரூபாயாகத் தருகிறது. பாக்கித் தேடும் போது ‘பரவாயில்லை என்கிறது. ‘உன் காசு எதுக்கு? என்கிறான் வெடுக்கென்று. அக்கேள்வி அவமானப்படுத்தல் என அந்த அம்மாவும் அவன் நண்பனும் முகம் சுண்டிப்போகிறார்கள். ஆனால் அது சிறுமைப்படுத்தல் அல்ல.

‘பாவம் அவளே வருமானம் இல்லாம போறா..அவகிட்ட போய் அந்த காசை ஏன் வாங்கணும்னு தான்.’

இரண்டாவது கதையில் விமலா பதினைந்து ரூபாயாக அவனிடம் தருகிறாள்.

‘இந்தாங்கண்ணா..’

அவள் அவனிடம் நீட்டினாள்.

ஈரப்பசையோடு பளபளக்கும் அவள் கண்களையும் முகத்தையும் காண ஏதோ குற்ற உணர்வுக்கு ஆட்பட்டவன் போல தலையைத் திரும்பி தெருவை நோக்கினான்.

எதிலிருந்தோ விடுபட முனைபவனைப் போல தலையை உலுப்பி உதறிக் கொண்டு பதினைந்து ரூபாயோடு நீளும் அவளது சிவந்து மெலிந்த கையை ஒதுக்கி விட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

இவ்விரண்டிலுமே கறாராகவேக் காணப்படும் அந்த டாக்ஸிகாரர்கள் அப்பெண்களுக்கு தங்கள் சூழ்நிலையின் பொருட்டு ஏற்பட்ட பற்றாக்குறையான, விடிவு எப்போதென்று தெரியாத துக்கத்தின் முன், சில நிமிடங்கள் அபூர்வமனிதர்களாக ஒளிர்ந்து விலகிச் செல்கிறார்கள்

——————-

இவ்விரண்டிலிருந்து வேறுபட்டது ‘வானம் வெளிவாங்கி..’ வண்ணதாசனின் முதல் தொகுப்பின் முதல் கதையான ‘மிச்சத்தி’ல் லாட்ஜும் பெண்ணும் உதிரி மனிதர்களும் வருகிறார்கள் என்றாலும் இது அதற்கும் முன்பே எழுதப்பட்டது. முற்றிலும் வேறானது.

நண்பர்களுடன் அறையெடுத்து தங்கி ’உல்லாசம்’ புரிந்து விட்டு செல்லும் ஆசையுடன் லாட்ஜில் அறையெடுக்கிறான். அவர்கள் மாலை வரக்கூடும். அதற்குள் அறை போட்டாகிவிட்டது. ரூமுக்கு போகும் வழியிலேயே கிராக்கி உட்கார்ந்திருக்கிறது. நுழைந்ததும் இருவர் வருகின்றனர். இவன் சிவந்தவளைத் தேர்ந்தெடுக்கிறான். பேரம் நடக்கிறது. அரைமணிக்கு இவ்வளவு, ஒருமணிக்கு இவ்வளவு, அவளை எங்கெங்கெல்லாம் தொடலாம். கூடாது என்பது போல. இருவருக்குமாக மது வாங்க ஆளை அனுப்பிய பின்பும் பேரம் நடக்கிறது. ரேட் படிகிறது. அவளுடன் காதலி போல சில சம்பாஷணைகள். பிறகு அவளுடனான ’சோலி’ முடிந்து விடுகிறது. களைப்பு. சொன்ன நேரத்திற்கும் குறைவாகவே அவள் அனுமதித்திருக்கிறாள். ஏமாற்று நடக்கிறது என அவனுக்குப் புரிகிறது. அவள் சென்றதுமே மூன்று நான்கு பேர் நுழைகிறார்கள்.

‘ஏதாவது வேணுமா..’ என்றாள் மூவரில் ஒருத்தி.

‘வேண்டாம். இப்பத் தானே போட்டேன்’ என்றான்.

‘போட்டா என்ன திரும்ப போடக் கூடாதா’ என்றாள்.

இவன் ‘வேணா’ என்றான்.

வற்புறுத்தல் தொடர்கிறது. அவன் மறுக்கிறான். ’ஒருமணி நேரத்துக்கு புக் பண்ணுங்க’ என்கிறாள் அவர்களில் ஒருத்தி. ’உங்களைப் போல உள்ளவங்க அஞ்சு ஆறு எடுக்கறாங்க. இதுக்கே டயர்ட் ஆகிட்டீங்க’ என்கிற தூண்டுதல். ‘சின்னவளைப் பாருங்களேன்’என்ற தூண்டில்.

பலவிதமாகப் பேசிப் பார்க்கிறார்கள். பிறகு, ‘எப்படியிருந்தாலும் அவுட் ஆகிறவரைக்கும் இருக்கணுமில்ல. நீங்க கூட கொஞ்ச நேரம் வோணும்னா கூடம் எடுத்துக்குங்க..’ என்ற இறைஞ்சுதல்.

இரவு பார்த்துக்கொள்ளலாம் என்கிறான் தப்பிக்கும் பொருட்டு. நைட்டு எதுவும் இல்லாம வீட்டுக்குப் போகணும் என்பதே அவர்களின் பதில். அங்கு இந்த வருமானத்தை நம்பி எத்தனை பேர் அமர்ந்திருக்கிறார்களோ..! எனவே அவர்கள் மீண்டும் அதே கேள்வியுடன் பார்க்கிறார்கள்.

அவன் பிடிவாதமாக வெளியேறுவிடுகிறான். இதில் பெண்களின் சாமர்த்தியத்தையும் அவர்கள் இத்’தொழிலு’க்குள் எத்தனைக் காலம் உழன்று கொண்டிருக்கிறார்கள். என்ன பேசினாலும் குலவினாலும் காசு மேல் அத்தனை கண்ணாக இருப்பதெல்லாம் உள்ளோட்டமாக வரிகளுக்கிடையே உணர்த்தப்படுகிறது. இத்தனைக்கும் நடுவே அந்தப் பெண்ணுடன் அவன் இயங்கியதை ஜன்னல் சந்து வழியாகப் பார்க்கும் லாட்ஜ் பையன்களின் சிரிப்புச் சத்தம் வேறு காட்டப்படுகிறது (’இவனுகளுக்கு இது தான் வேலையா..’என்றான். ’சின்னப்பசங்க தானா..’ என்றாள்).

அவர்களிடமிருந்து விடுவித்துக் கொண்டு வெளியே வந்து வேர்க்கடலை வாங்கிக்கொரிக்கும் போது சில்லறையை ரூமிலேயே வைத்து விட்டது நினைவுக்கு வருகிறது. அவள்களில் ஒருத்தியும் அதை எடுத்து தரவில்லை என்பதைக் காணுங்கள். அந்தச் சூழல், அவர்கள் தந்த நெருக்கடி, இக்கட்டு, விடுதலை, ஏமாற்றம் எல்லாம் சேர்ந்து கத்த வேண்டும் போல அவனுக்கிருக்கிறது.

அதற்காக வெளி வாங்கிய வானம் நோக்கி நடக்கத் தொடங்கும் அவனுக்கு இணையாகவே வாசகரும் சேர்ந்து கொள்வர். இவ்வகைப்பட்ட கதைகள் ஓர் புறம் என்றால் ஆண்-பெண் உறவுகளில் புலப்படாத இழைகளால் நெயப்பட்ட ஆக்கங்களின் வரிசை மற்றொரு புறம். ஆண்-பெண் உறவு குறித்து ஆழமாகவும் செறிவாகவும் மட்டுமல்ல, உரையாடலிலும் வட்டாரப் பேச்சு வழக்கிலும் ஓர் உயரத்தை எட்டியவை அக்கதைகளே. அவை தன் கலை ஆற்றலால் இன்றும் ஒளியோடு திகழ்கின்றன.

திருமணம் முடிந்ததும் காமாட்சி, மலேயாவுக்கு பெரியானுடன் பிழைக்க ஓடிப்போகிறாள். வேடிக்கை என்னவெனில் சில தினங்களுக்கு முன் அவளுக்கு மணமானது பெரியானின் அண்ணனுடன். சுற்றங்களையும் சொந்தங்களையும் அஞ்சி உடன்போகியவள் அங்கு சலவைத்தொழில் செய்து வாழ்கிறாள். அவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் பிறந்து வளர்கின்றன. மலேயாவில் ஜப்பானியர் படையெடுப்பு நடந்ததும் குடும்பம் சிதைகிறது. காமாட்சி வேறொரு ஆணுடன் வாழ்க்கை நடத்தி மேலும் இரு குழந்தைகளைப் பெறுகிறாள். மீண்டும் ஆங்கிலேயர்கள் கைப்பற்றியபிறகு அவள் பெரியானுடன் வந்து சேர்ந்து கொள்கிறாள். இப்போது அங்கு நான்கு குழந்தைகளும் ஒரே கூரையினடியில் வளர்கின்றன. பெரியானுக்கு அவளுடன் இதன் பொருட்டு எவ்வித கேள்விகளோ பூசல்களோ எழுவதில்லை. கால ஓட்டத்தில் பிள்ளைகளுக்கு மணமாகிறது. பிறகொரு நாள் பெரியான் இறந்து போகிறார். காமாட்சி கொங்குப்பகுதியைச் சேர்ந்தவராதலால் தாலி வாங்கும் சடங்கு நடக்கவிருக்கிறது. ஆனால் தாலிக் கட்டின புருஷன் பெரியானின் அண்ணன்) உயிருடன் இருக்கையில் அச்சடங்குக்கு ஒத்துக் கொள்ள மறுக்கிறாள் காமாட்சி.

மேற்கூறியவை ஏதோ ஓர் புனைவிலக்கியத்திலிருந்து எடுக்கப்பட்டதல்ல. ஒரு முத்தம்மாள் பழனிசாமியின் தன்வரலாறான நாடு விட்டு நாடு நூலில் சொல்லப்படுபவை. அதுவும் இந்நிகழ்ச்சி நடந்ததும் சமீபத்திலல்ல. 1955 ஆண்டுகளில். ஓர் படைப்பில் இத்தகைய சம்பவங்களைக் கண்டு அவற்றைப் புரிந்து கொள்வதற்கும் அதையே சுயவரலாற்று நூலில் சந்திப்பதற்கும் வேறுபாடுகள் உள்ளன. சில சமயங்கள் புனைவை விடவும் பலமடங்கு நம்பமுடியதாதகவும் வியப்பிற்குரியதாகவும் யதார்த்தம் இருப்பதைப் பலருமே உணர்ந்திருக்கக் கூடும். காமட்சியை எந்த அர்த்தத்தில் வகைப்படுத்துவது? பெரியானின் விசாலமான மனது வாசிப்பவருடன் வினையாற்றுவது புனைவிலக்கியத்தருணத்திற்கு நிகராக உள்ளது. இராஜேந்திரசோழனின் படைப்புகளில் இவ்வுறவுகளின் ஆட்டத்தைக் காணும் போது இதே போன்ற வியப்பும் புதிரும் ஒருங்கே எழுகிறது.

வத்ஸ்லாவுக்கு எண்ணி எட்டாம் நாள் கல்யாணம் (தற்செயல்). அவள் அது பற்றிய கனவுகளில் சஞ்சரித்து மேலும் ஆசையை வளர்த்துக் கொள்கிறாள். ஆனால் அதற்கு முன்பே அவளது தோட்டத்தில் வேலை செய்யும் செல்வராஜுவுடன் உடல் பழக்கம் ஏற்பட்டு விடுகிறது. இருக்கட்டுமே, அதனால் என்ன? ஆனால் தன்னைப் பெண் பார்த்துப் போனவனை யாருடன் ஒப்பிட்டு மகிழ்கிறாள் என்கிறீர்கள்? அதே செல்வராசுவுடன் தான். அத்திருமணச் செய்தியை எவ்வித குழப்பமும் தயக்கமுன்றி அவளால் அவனிடம் சொல்ல முடிகிறது. அதுவும் கொட்டாயில் அவனுடன் சல்லாபித்துக் கிடக்கும் பொழுதில் தான் கூறுகிறாள். இதுமட்டுமா? மறுவினாடியே ‘கல்யாணத்துக்கு வந்திரு. வண்டி சார்ஜ் தர்றேன்’ என அடுத்தக் கட்டத்திற்குப் போகிறாள். யாரை எங்கே வைக்கிறாள், யாருக்கு என்ன மாதிரியான இடம் என்பதெல்லாம் சூசகமாக உணர்த்தப்படுகின்றன. துரதிஷ்டவசமாக அத்திருமணம் தடைபடுகிறது. இப்போது செல்வராசைக் காணும் போது அவளுக்குள் ஏற்படுவது அவனை மீண்டும் சேர்த்துக் கொள்ளும் முனைப்பு அல்ல. மாறாக, கடுமையான எரிச்சலும் விலகலுமே. காமாட்சியைப் புரிந்து கொள்பவர்களுக்கு வத்ஸ்லாவை அறிவது ஒன்றும் கடினமானதல்ல.

புறக்கணிக்கப்பட்ட அழைப்புக்கு ஆவேசம் அதிகம். அதற்குரிய பதிலடிகள் உடனடியாகவோ காலம் தாழ்த்தியோ சம்பந்தப்பட்டவர்களுக்குப் போய் சேர்ந்து விடும், அதிலும் மிகக் குறிப்பாக பெண்ணின் காமத்தில். மாஞ்செவுலு நிறத்திலுள்ள இளவயசுக்காரியான செகதாலவுக்கு (நாட்டம்) எதிர்வீட்டில் குடியிருக்கு, யூனியன் ஆபிஸ்காரனான புள்ளாண்டான் மீது ’ஒரு இது’ தோன்றிவிடுகிறது. தி.ஜாவின் சித்தரிப்புக்களை நினைவூட்டும் அவனது தோற்றத்தில் அவள் அடையும் மையலை ஒவ்வொரு அடியாகச் சொல்லி செல்கிறார் அஸ்வகோஷ். அவனை அவள் கண்களால் பருகிறாள். அப்பக்கமிருந்து சாதகமான எதிர்வினையேதும் கிடைப்பதில்லை. சில சமிஞ்சைகள், சாடைகளுக்குப் பிறகு ஒருகட்டத்தில் அவனை வெட்கத்தை விட்டு அழைக்கிறாள். விருப்பம் நிராகரிக்கப்படுகிறது. ஆற்றாமையும் கோபமும் அவளது சொற்களில் வெடிக்கின்றன. வேண்டும் பொருள் கிடைக்காத போது அதன் மீது ஏற்படும் இயலாமை கலந்த பழியுணர்வுக்குச் செகதலா மட்டும் தப்ப முடியுமா என்ன? அது கிட்டவே கிட்டாது என்றால் இருப்பதில் நிறைவு காண்பதன்றி வேறென்ன செய்ய? கதையை சில வரிகள் கூறச் சொன்னால் கிளர்ச்சியைத் தூண்டும் சரக்காக தோன்றிவிடக்கூடும். ஆனால் அதற்குள் பெண் மனதின் வழிகள் பின்னப்பட்டிருக்கும் நுட்பத்தால் இக்கதை கலை அந்தஸ்தை அடைந்து விடுகிறது.

செகதலாவின் காமத்திற்குச் சற்றும் குறைந்ததல்ல வனமயிலினுடையது (புற்றில் உறையும் பாம்புகள்). ஆனால் சமூகம் தான் உண்டாக்கிய ஒழுக்கத்தின் திரைச்சீலைக்குப் பின்னால் அவளை நிற்க வைத்திருப்பதால் சொற்களால் ஒழுக்கத்தின் வெவ்வேறு வேடங்களைப் புனைந்து கொள்ள அவளால் முடிகிறது. சொல்லப்போனால் வனமயிலிடையது மூடி வைக்கப்பட்டது. பாவனைகளின் முலாம் பூசப்பட்டது. எனவே புள்ளாண்டன் மீது வனமயிலு அடுத்தடுத்து அடுக்கிச் செல்லும் குறைகளும் புகார்களும் கூடுதல் பரிணாமத்தையும் ஆற்றலையும் பெற்று விடுகிறது. முழுக்கவும் பெண் வழியே அவள் மனநாடகத்தை அரங்கேற்றும் அஸ்வகோஷ் அவளது கணவனை வேலைசெய்யும் ஓர் எந்திரமாகவும் அவளுக்குத் தேவைப்படும் முன்னிலையாகவுமே பயன்படுத்தியிருக்கிறார். அவரது பெயரைச் சொன்னவுடனே தீவிர வாசகர் எவருமே உச்சரிக்கும் கதை மட்டுமல்ல சொல்லப்போனால் அவரது அடையாளமாகவே கூட ஆகிவிட்ட புகழ்பெற்ற கதையாகும் இது. எவ்வாறு அது பழைமையடையாமல் குன்றா இளமையுடன் துலங்குகிறது என்கிற வியப்பிற்கருகில் வனமயிலின் பேச்சை வைத்தால் அதற்கான காரணம் எளிதில் புரிந்து விடும்.

ஆனால் தனிப்பட்ட தேர்வாக மட்டுமல்லாது, மேற்சொன்னவைகளைக் காட்டிலும் வீர்யம் மிக்கதும் சமகாலப் பொருத்தப்பாடு உடையதும் அவரது கலை உச்சம் வெளிப்பட்ட கதைகளுள் பிரதானமான ஒன்றாகவும் விளங்குவது ‘கோணல் வடிவங்கள்’ சிறுகதையே.

கற்பின் மீதும் தன்னுடைமை மீதும் ஆணுக்குள்ள அதிகாரத்தை இந்தளவிற்கு சொன்ன கதை தமிழில் அபூர்வமாகவே இருக்கக்கூடும். அவ்வுரிமை கூட கட்டிய மனைவியின் மீதல்ல. இவன் தொடுப்பு வைத்திருப்பவளிடமே அந்த ஆதிக்கம். அந்த வீட்டிற்கு வேறொருவன் முந்தைய இரவில் வந்து சென்றான் என்கிற தகவலால் -அவன் நினைக்கும்படி அப்போது ஏதும் நடக்கவேயில்லை – கிளம்புகிற சீற்றத்தை வேகம் குன்றாமல் வாசிப்பவருக்கு மடைமாற்றிய கதை இது. ’ம்ன்சாமி வந்து விட்டுப் போனானா?’ என்கிற ஒரே கேள்வியை வட்டாரவழக்கின் வெவ்வேறு குறுக்குச்சந்துகள் வழியாகச் சுற்றிச் சுற்றி வந்து அவளை வதைக்கும் கிஷ்டனின் ஆவேசத்தையும் அவளது அவலத்தையும் கண்டு சிரிக்கவும் திகைக்கவும் பரிதாபம் கொள்ளவும் வைத்து விடுகிற படைப்பு. இன்றைய சமூக ஊடக காலங்களில் கூட ‘மின்சாமி’களை ஒற்றறிருந்து எத்தனை கிஷ்டன்கள் தங்கள் அந்தரங்க உறவுக்காரிகளைக் கேள்விகளால் துளைக்கிறார்கள் என்பது நினைவுக்கு வர உள்ளூரச் சிரிக்கத் தான் தோன்றியது.

இக்கதையின் வேறொரு எதிரொலி போல அமைந்திருப்பது ‘நாய் வேஷம்’. சீட்டாடிக் கொண்டிருக்கும் இருசப்பனை, அங்கு வேடிக்கைப் பார்க்க வந்த மணியின் நச்சரிப்பு தொந்தரவூட்டுகிறது. ஆனால் அது அப்படிப் பகிரங்கமாகக் கூற வேண்டிய விஷயமே அல்ல. இருசப்பனின் வீட்டில் அவன் மனைவி வேறொருவனோடு கிடக்கிறான் என்பதை பல விதங்களில் அத்தனை ஆட்களுக்கிடையில் பந்தி விளம்புகிறான். கிண்டலும் கேலியுமாகப் பிறர் சீண்டினாலும் அவன் ஆட்டத்தை விட்டு எழுவதேயில்லை. கிஷ்டன் தன் தொடுப்பிடம் கொண்டிருந்த உரிமையுணர்வின் உக்கிரம் இருசப்பனிடம் துளியளவு கூட இல்லை. விட்ட ஆட்டத்தைப் பிடிக்கும் முனைப்பில் சீட்டாடக் கடன் கேட்கிறான். அக்கும்பலின் சொற்களைத் தாங்க முடியாமல் வீட்டுக்குக் கிளம்புகிறான். அவனுக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்று அங்கு அரங்கேறிக் கொண்டிருக்கிறது. மனைவியை சிறிதளவேனும் கண்டிக்கத் துப்பற்ற இருசப்பன் அவள் மடியில் புதைந்து அழுகிறான். அவன் வீடு நோக்கிச் செல்கையில் இருசப்பனின் பால்யவயதில் பள்ளியில் நடந்த சம்பவத்தில் அவன் நடந்து கொண்ட முறை விவரிக்கப்படுகிறது. இக்காட்சி இல்லாமலிருந்திருந்தால் கதை மேலதிக முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கும். இருசப்பனின் நடவடிக்கைக்கும் இயலாமைக்கும் காரணம் கூறுவது போல அமைந்திருப்பது கதையின் தரத்தைச் சற்றே கீழிறக்குகிறது.

கிஷ்டனை எழுதிய அதே ஆசிரியரே தான் இருசப்பனையும் படைத்தார் என்பதைக் காணுங்கள். இத்தோடு நின்றதா சங்கதி? இருசப்பனின் இன்னொரு கோணம் போல எழுதப்பட்டுள்ளது ‘ஊனம்’. சாந்தா அசாதாரணமான அழகு நிரம்பியவள். ஆண்களுடன் எவ்வித சங்கோஜமுமின்றி மிக சகஜமாக பேசுகிறவள். வேற்று ஆள் ஒருவனைப் பார்த்து ‘படியேறி வந்துட்டுப் போங்க.’ எனவும் பக்கத்து வீட்டு ஆணிடம் ‘ நேத்து ஒங்களப் பத்தி கனவு கண்டேன்’ என்றும் இன்னொருவனிடம் மற்றொரு சந்தர்ப்பத்தில் ‘ஏன் ராத்திரி வரச் சொன்னனே..வரல..’ என உரிமையோடு ரசமாக பேசக் கூடியவள் சந்தா. அந்த ஆண்கள் மிரண்டு பின்வாங்குவதை ரசிக்கிறவள். இது அவனது கணவனுக்கு அவமானமாகவும் மானப்பிரச்சினையாகவும் உள்ளது. எடுத்துச் சொல்லியும் கெஞ்சிப்பார்த்தும் பூசலிட்டும் கூட அவள் கேட்பதாகயில்லை. வரம்பு மீறும் பேச்சுகள் பிறரைத் திடுக்கிட வைக்கின்றன. எச்சரித்தும் பலனேதுமில்லை. பொறுத்துப் பார்த்து கயிற்றில் தொங்கி விடுகிறான். இத்தனைக்கும் அவள் பற்றிய எவ்வித ‘ஒழுக்கக்கேடான’ சம்பவமும் கதைக்குள் இல்லை. இது போன்ற விஷயங்களில் ‘பெரும்போக்கான’, ‘சீற்றம் மிகுந்த’ ஆண்களுக்கிடையே மானப்பிரச்சினையில் உயிரை விடுபவனைக் – அதற்குப் பிறகு அவள் வீட்டில் வெறித்து அமர்ந்திருக்கும் காட்சி தான் வருகிறது- காணவும் முடிகிறது.

—————

பொங்கலுக்கு நான்கு நாட்களுக்கு முன்னரே படம் வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்தது. மாபெரும் வெற்றிப் படத்திற்குப் பிறகு வரவிருக்கும் உச்சநட்சத்திரத்தின் திரைப்படம் என்பதால் எங்கெங்கு காணினும் ஏக எதிர்ப்பார்ப்பு. குதிரைக்கொம்பாக டிக்கெட். ஆனால் தெருவிலிருக்கும் அண்ணனுக்கு மன்றத்தின் மூலம் இரண்டு டோக்கன்கள் கிடைத்தன. அழைத்தார். பதினொன்று படித்துக் கொண்டிருந்தேன். அல்லாடல்களின் காலம். வெற்றுப் பாக்கெட்டைப் பிதுக்கிக் காட்டினேன். செலவுகள் அனைத்தும் தன்னுடையது என்றார். பிறகென்ன? பேருந்து ஏறினோம். கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தின் பின்புறம் அன்றிருந்த அம்பிகா, அம்பாலயாவில் நிற்கும் போது மணி காலை 9.30. காட்சி நேரம் 12.30 என்றிருந்தது. நகரின் இரண்டு பெரிய அரங்குகளில் ஓடி முடித்த பின்பே ரீல் பெட்டி இங்கு வரும் என்பதால் மேலும் தாமதமாகும் எனத் தெரியும். வெயில் காயும் நீண்ட வரிசை. அன்று இருக்கைக்கு எண் கிடையாது என்பதால் வரிசை உயிர் போன்றது. சிறிது நகர்ந்தாலும் திரும்ப வந்து சேரவே முடியாது. வெறி ஏறிய பக்தர்கள். அங்கு சினிமாவின் தகவல் களஞ்சியங்கள் சாதாரண உடையில் பீடி புகைத்து நிற்பதைக் கண்டேன். சினிமாக்காரர்களின் சம்பளம், திரைத்துறையினரின் கிசுகிசுக்கள், நடிகைகளின் அந்தரங்கப் பக்கங்கள், எந்தெந்த சினிமா எங்கெங்கு எத்தனை நாட்கள் ஓடியது, யார் யாரை வைத்திருக்கிறார்கள், அதற்கு முன் அவர் யாருடன் இருந்தார், வாய்ப்புக்காக அங்கே என்னவெல்லாம் நடக்கின்றன போன்ற பல்சுவை விருந்து அங்கு நின்றிருந்தவர்களால் பரிமாறப்பட்டுக் கொண்டே இருந்தது. அன்று கோலோச்சிய வண்ணத்திரையையும் சினிமா எக்ஸ்பிரஸ்சையும் கரைத்துக் குடித்து, அவர்களுக்கே சவால் விடும் செய்திகளால் அந்த உலகம் பூரித்துக் கிடந்தது.

ஒரே சமயத்தில் மூன்று நான்கு பேர் பேசினால் எங்கு போய் நின்று எதை கேட்பது என்பதில் எனக்குக் குழப்பமும் திகைப்பும். தினத்தந்தியின் வெள்ளித்திரை கிசுகிசுவைத் தாண்டாத கத்துக்குட்டிக்கு நடிகர்களின் ஓட்டுனர்கள் கூறியதாக அவிழ்த்து விடப்பட்டவை வாய் பிளக்க வைத்தன. சுட்டெரிக்கும் வெயிலில் பிறரது படுக்கைகளை நடுரோட்டில் போட்டு அலசிக்கொண்டிருந்தது அவர்களுக்கு பெரிய ஆசுவாசத்தையும் கிளர்ச்சியையும் அளித்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. எப்போதுமே பிறரது அந்தரங்கங்கள் மற்றவர்களுக்கு அல்வாதுண்டு தானே..! சொன்ன நேரத்திற்கு ஐந்து மணி நேரம் கழித்தே காட்சி தொடங்கியது. கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் நின்றே சலித்திருக்கிறோம். அதுவரை அங்கு எத்தனை வினோதமான காட்சிகள்..! மனித நடவடிக்கைகள்..! பண்டங்கள் விற்கவும் மிரட்டவும் வசூல் செய்யவுமாக பார்த்துத் தீராத முகங்கள். இவை 90களின் இறுதியில் நடந்தன. ஆனால் இக்காட்சி தமிழகத்தின் 1970-களிலிலேயே அட்சரம் பிசாமல் நடந்தேறி வந்திருப்பதை எந்த வரலாற்று நூலும் தெரிவிக்கவில்லை. ஒரு இலக்கியப் பிரதி தான் அவற்றை கண் முன் நிறுத்தியது.

இவையனைத்தும் எழுபதுகளிலே(1971,72) ஒருவரால் கதையாக எழுதப்பட்டிருக்கின்றன என்றால் இன்றளவும் மாறாத அந்த உலகத்தின் பிரதிநிதிகளை எண்ணிப் பூரித்துக் கொள்வதா அல்லது பெருமூச்சொறிவதா..!?

இப்புற உலகின் காட்சிகள் நிதானமாகவும் துல்லியமாகவும் சில கதைகளில் இடம் பெற்றிருக்கிறது. சினிமா வெகுமக்களின் குருதியுடன் எந்தளவு கலந்திருக்கிறது என்பதன் நேரடிச் சாட்சியங்களாக இக்கதைகள் உள்ளன. சு.ரா-வின் ‘பள்ளம்’ போன்ற கதைகள் அதன் தாக்கத்தைக் கூறுவது ஒரு புறமென்றால் வெறும் புறவுலகை கடைவிரிப்பதன் வழியாக (ஒரு படைப்பாளி ஏன் அவற்றில் சிலவற்றை தன் ஆக்கத்திற்குள் கொண்டு வருகிறார், மற்றதை வெளியே நிறுத்துகிறார் போன்றவையெல்லாம் அவராலேயே துல்லியமாகக் கூற முடியுமென்று தோன்றவில்லை) எத்தகைய கேள்விகளை ஒரு படைப்பாளி எழுப்பிக் காட்டி விட்டு நகர்ந்து விடுகிறார் என்பது முக்கியத்துவமுடையதாகும். அவை அரசியல் கேள்விகளா? அல்லது சமூக பொருளாதார கேள்விகளா? இல்லை தனிமனித வீழ்ச்சி குறித்த ஆதங்கங்களா..! என்றால் இவையனைத்தும் கலந்துபட்ட ஒன்றாகவே தோன்றுகிறது. இராசேந்திரசோழனின் ’பக்க வாத்தியம்’, ’சாம்பல் குவியலில்’, ’வெளிப்பாடுகள்’ போன்றவை அத்தகைய கதைகளே.

கடைசி இரு கதைகளும் திரையரங்க வாயிலில் குடியிருக்கின்றன. ஒன்றில் பலதரப்பட்ட ஆட்களால் ஆன டிக்கெட் க்யூவை நம்பி கையேந்தியும் கரணம் அடித்தும் பிழைக்கும் மனிதர்களின் தரித்திர நிமிடங்கள் கண் முன் காட்டப்படுகின்றன. சாலையும் பங்கு வகிக்கிறது என்றாலும் கூட கதை அரங்க வாயிலேயே கால்கொண்டுள்ளது. இவர்கள் இப்படி வாழ்கிறார்கள் என்பது போல விவரிக்கப்படுகிறது. மற்றொன்றில் (வெளிப்பாடுகள்) நிற்கும் வரிசைக்குள்ளாகக் கதை நுழைந்து விடுகிறது. அங்கிருந்து டிக்கெட் பெற்றுக் கொண்டு திரையரங்கத்திற்குள்ளும் சென்று விடுகிறது. படம் போடுவதற்குள் ஆட்கள் உடல்மொழிகள், கூக்குரல்கள். பிறகு திரையில் ஓடும் படத்தின் காட்சிகள் சொல்லப்படுகின்றன. பன்னெடுங்காலமாக மாறாத கதைகள் கொண்ட அரதப்பழசான அதே திரைமொழி. அவை சாதாரணமாகச் சொல்லப்பட்டாலும் அதற்குள் கிண்டலும் கேலியும் பொதிந்திருக்கின்றன. இன்றும் அவற்றில் மாற்றமேதும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. கதையின் முடிப்பில் முத்தாய்ப்பாக இச்சமூக முரணைச் சுட்டும் காட்சி காட்டப்படுகிறது. இது இல்லாமலேயே கதை அதன் தேவையைப் பூர்த்தி செய்து கொண்டுவிட்டது. அது ஆசிரியரின் விமர்சனமாக மட்டுமே எஞ்சி நிற்கிறது.

இவ்விரண்டுக்கும் அப்பால் நேரடியான அப்பட்ட யதார்த்தச் சித்தரிப்பால் ஆன கதை ‘பக்க வாத்தியம்’. மாலை வேளையில் ஒரு கடைவீதியின் வியாபாரங்கள், கொடுக்கல் வாங்கல்கள், பாரபட்சங்கள் காட்டப்படுகின்றன. அவ்வளவு தான். அதிகாரத்தின் ஈகோ சீண்டபட்டால் அது எப்படி தன்னை காட்டும் என்பது இடம்பெறுகிறது. மற்றபடி எந்தத் தலையீடும் இல்லை.

ஆனால் இம்மூன்றிலும் பங்கேற்கும் மனிதர்கள் மிகச்சாதாரணர்கள். கதையில் எதிரிடையாக வைக்கப்படுகிறவர்களால் ஆற்றல் உறிஞ்சப்பட்டு தங்கள் சக்தியை இழக்கிறவர்கள். 70-களின் தொடக்கத்தில் எழுதப்பட்ட கதைகள் இவை. அதற்குப் பின் தனிமனித வழிபாடு மூர்க்கமாக மாறிவிட்டது. சினிமாவின் வீச்சும் அதில் வீழும் ஈசல்களின் பெருக்கமும் பலமடங்கு அதிகரித்து விட்டன. ஆராதனையாளர்களில் படித்தவன், தற்குறி என்கிற பேதமே அங்கில்லை. பலம் பொருந்தியவனின் முன் சாமான்யன் ஓர் அனாதை என்பதற்கு பல உதாரணங்கள் நாளிதழ்களிலேயே காணக் கிடைக்கின்றன.

பிறகு எதற்காகத் தான் இந்தக் கதைகள், இலக்கியம் அனைத்தும் எழுதப்படுகின்றன? மாற்றத்திற்கு பதிலாக கேடுகளே பெருகியிருக்கும் போது இக்கேள்வி எழுவது இயல்பானதே. பிறகு ஒரு படைப்பாளி தான் வாழும் காலத்தில் வேறெப்படி எதிர்வினையாற்ற முடியும்? அவை மெதுவாக மாறுகின்றன அல்லது சிறிதளவு முன்னகர்கின்றன இல்லையென்றால் முன்னிலும் வேகமாக சீரழிகின்றன என்றே இருக்கட்டும். இத்தனைக்கும் இடையில் ஒரு எழுத்தாளனாகத் தன்னைக் கருதிக் கொள்பவன்/ள் மெளனமாகவோ இது இப்படித்தான் எனத் தப்பிப்பவனாகவோ அல்லது அதற்கு சாமரம் வீசுகிற கயவனாகவோ இல்லாமல் ஒரு காலத்தின் அவலத்தை அல்லது யதார்தத்தை தன் படைப்புகளின் வாயிலாக நேர்கொண்டான்/ள் என்கிற திருப்தியாவது அவனு/ளு க்கு எஞ்சட்டும்.

அப்போது எதுவுமே செயலாற்றாது மெளனியாக வேடிக்கைப் பார்ப்பவனி/ளின் குற்றவுணர்ச்சியிலிருந்தேனும் அவனு/ளுக்கு விடுதலை கிடைக்குமல்லவா..!?

*****

உடல் சார்ந்த மாற்றங்கள் நிகழத்தொடங்கும் பதின்பருவத்தில் எதிர்பாலினம் மீது உருவாகும் ஈர்ப்பையும் கிளர்ச்சியையும் பகற்கனவுகளால் நிறைப்பவர்களே அதிகமாக இருக்கக்கூடும். மிகக்குறிப்பாக அவ்வயதில் மூத்த வயது பெண்களிடம் பையன்களுக்கு ஏற்படும் ஈடுபாடு. அம் மோகமயக்கங்களில் திளைப்பவர்களுக்கு கிடைக்கும் அப்பெண்களாலான ஒவ்வொரு காட்சியும் அவர்களின் ரகசியப்பெட்டகங்களில் பொக்கிஷமாக சேகரமாகும். தனிமையின் ஏகாந்தத்தில் அந்த ரத்தினங்களைச் சூடிக்கொண்டு உள்ளம் பேருவகை அடையும். ஏனெனில் கற்பனைகளுக்கு நிஜங்களைக் காட்டிலும் வீரியம் அதிகமல்லவா..! அவ்வாறு பையன்களை வைத்து அஸ்வகோஷ் எழுதிய சில கதைகள் அந்த உறவுகளின் வெவ்வேறு நிறங்களைக் காட்டுகின்றன. அவ்வுறவுகள் அந்தந்தக் கதைகளின் பொருட்டு வெளுத்துப் போனவையாக ஒன்று கலந்தவையாக ஒட்டாதவையாக ஒவ்வொன்றிலும் மாறுபடுகின்றன. சற்று பிசகினாலும் மஞ்சள் பத்திரிகைக் கதைகளாக மாறி விட்டிருக்கக் கூடிய ஆபத்து கூட ஏற்பட்டிருக்கலாம்.

தாயிடமிருந்து விலகல் ஏற்படும் அப்பருவத்தில் அவருக்கு நிகரான அல்லது அவளைப் பதிலீடு செய்வதாக ஒரு பெண்ணின் மீதான விழைவை குறிப்பாக மூத்த பெண்கள் மேல் ஏற்படும் ஈர்ப்பைக் குறிப்பிடலாம்.

ஏற்கனவே மணமான, சிவந்த பெண்கள் பக்கத்து வீட்டிலும் எதிர் வீட்டிலும் குடியிருப்பவர்கள். அவர்களைப் பார்க்கவும் பழக்கம் வைத்துக் கொள்ளவும் பையன்கள் ஏங்கித் தவிக்கிறார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக அப்பெண்களுக்கு இவர்கள் உலகில் காணும் பல நபர்களில் ஒருவர் மட்டுமே. அவர்களது உடல் மீதான் வேட்கையில் அவ்வீடுகளுக்குள் நுழைந்து விட வேண்டும் என்பதே ஒரே கவலை (எதிர்பார்ப்புகள்). குழந்தை அதற்கு ஒரு சாக்கு. கண்கள் தறிகெட்டு மேய்வதெல்லாம் அவள் மீது தான். அவளுக்கு அவன் துருத்தல் மட்டுமே. அது புரிவதுமில்லை. அந்த வீட்டுக்குள் ஒட்டி விட வேண்டும். பழம் நழுவி மடியில் விழும் என்கிற நப்பாசை. அங்கு சுவாதீனமாக வளைய வரும் போது உறங்குபவளின் மேனி வனப்பில் லயித்து நிற்கையில் பிடிபட்டு விடுகிறான். அற்பப் புழு போல பார்வையை வீசிவிட்டு முகம் எரியச் சென்று விடுகிறாள். எட்டாதக் கனிக்கு ஏன் தவம் கிடைக்க வேண்டும்? இனி குழந்தை எக்கேடு கெட்டாலும் அவனுக்கென்ன? அவளை ஈர்க்க போட்ட வேடங்கள் வெளிறிய பின் அங்கென்ன வேலை..?!

இவனுக்கு நேர்மாற்றி கல்லூரி முடித்த சிவராமு அமைதியான அடக்கமான பையன் என்கிறாள் கதையை சொல்பவள் (சூழல்). மொத்தக் கதையும் அவள் பார்வையின் வழியாகவே கூறப்படுகிறது. எப்படி அவனை அவள் தனக்குள் இழுத்தாள் என்பது ஒரு அப்பாவியின் வாக்குமூலம் போல முன்வைக்கப்படுகிறது. அனைத்துமே சந்தர்ப்பங்களின் முடிச்சுகளால் வந்த வினை என்பதே அதன் பொருள். அச்சம்பவங்கள் சற்றே சரோஜாதேவி கதைகளிலுள்ள சூழ்நிலைகளை ஒத்திருகின்றன. ஆனால் அவனை நோக்கி அவன் வர அவள் வைக்கும் புள்ளிகள், அவளிடம் அவன் உண்டாக்கியிருக்கும் ஒரு வித மறைக்கப்பட்ட விழைவு போன்றவை நுட்பமாகப் பொதிந்திருக்கின்றன. அவள் கணவனுக்கு வேறூருக்கு மாற்றம் ஆகும் வரைக்கும் அவ்வுறவு தொடர்கிறது. சிறு ஐயம் கூட எழுவதில்லை. சாவகாசமாகத் தொடங்கித் தேவைக்கதிகமாக இழுத்து நீட்டப்பட்ட கதை இது.

’சிதைவுகளி’ல் அது வெளுத்துப் போன ஒன்றாக வெளிப்படுகிறது. ‘மேனி முழுதும் தடவிப் பார்க்க வேண்டும்’ எனத் தோன்ற வைக்கிற எதிர்வீட்டுக்காரி, பி.யூ.சி தோற்றுப் போனவனது வெறுமையான அன்றாடங்களுக்கு தன் அழகால் நீர் பாய்ச்சுகிறவள். அவனது தேவகன்னி அவள். வெளிமுற்றத்தில் அவள் காணக் கிடைக்காத பொழுதுகள் நெஞ்சை அரிக்கும் நிமிடங்களாகும். ஆனால் அவளுக்கு பொருட்டேயில்லை. அவனது தேவகணங்கள் சரியும்படியாக பிள்ளைபேற்றிற்குப் பிறகான அவளது நடவடிக்கைகள் இருக்கின்றன. அழகு வசீகரிக்கும் வஸ்து என்பதற்கப்பால் அவள் மிகச் சாதாரணமான பல்லாயிரம் பெண்களில் ஏன் இன்னும் சொன்னப்போனால் அவர்களை விடவும் தாழ்ந்த ஒருத்தியே என்ற கசந்த உண்மையின் முன் மெளனமாக நிற்கவே அவனால் முடிகிறது. அச்சிதைவை அவ்வயது ஏற்கத் தயங்கும். ஆனால் குறைந்த கால அளவிலேயே அவற்றிலிருந்து மீண்டு விடவும் முடியும். ஏனெனில் இளமையின் பசுமை படர்ந்த புல்வெளி பட்சிகளின் கூவல்களுடன் கண் முன் விரிந்திருக்கிறதே..!

இராசேந்திர சோழனின் கதையுலகில் துலங்கிவரும் மற்றுமொரு பிரத்யேக அம்சம் ஒரு குரம் மட்டும் ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருப்பது. பிறர் வெறும் காதுகளாக, முன்னிலைகளாக, கதையை நடத்திச் செல்ல காரணிகளாக மட்டுமே இடம்பெறுவது. இவருக்குப் பின் எழுத வந்தவர்களில் அதே மண்ணைச் சேர்ந்த படைப்பாளியான இமையத்தின் கதைகளிலலும் இதே கூறு பயின்று வருவதைக் கண்டிருக்க முடியும். அவரை முன்னோடிகள் சிலரேனும் பாதிக்கக்கூடுமென்றாலும் ஊடுருவிச் சென்றவரென இராசேந்திரசோழனையே கூற வேண்டும்.

இராசேந்திரசோழனின் ஆரம்பக்காலக் கதையான ‘எங்கள் தெருவே’ அத்தகையது தான். ஒரு கதையின் பிரதிபலிப்பு போல மற்றொரு கதையும் அமைந்திருப்பது அவரது படைப்புலகில் தவிர்க்க முடியாத நியதியாக உள்ளது. இரவெல்லாம் இராக்கோழி போல அலைந்து விட்டு பகலில் உறங்க முயற்சிப்பவனை சுவருக்கு அந்த பக்கமிருக்கும் அம்மாளின் கூப்பாடு விடுவதாகயில்லை. அவளது மகனிடம் அடுக்கடுக்காக வேலையைச் சொல்லிக் கொண்டே தன் விதியை நொந்தபடி ஓயாது வாயாடும் போதும் அவன் படுக்கையிலிருந்து எழுவதேயில்லை. அங்கு அவனுக்கு வார்த்தைகளால் கிடைக்கும் பூசைகள் பலவும் இவனுக்கும் பொருந்திப் போகிறது. வினோதம் போல இவனது ஒவ்வொரு அசைவுக்கும் அப்பக்கமிருந்து ஏச்சுகள் விழுந்து கொண்டே இருக்கின்றன (விவஸ்தை). அதே போல நண்பனின் வீட்டுக்கு கோழி அடித்து ருசிக்க வந்த இடத்தில் பக்கத்து வீட்டில் தன் பிள்ளைகளை மேய்க்கிறேன் என்ற கோதாவில் அவர்களை அதட்டியபடியே வீட்டையே இரண்டாக்குகிறாள். அவளது பேச்சுக்களுக்கு மத்தியில் கோழிக்குழம்பிற்குச் சப்புக்கொட்டியபடியே அதற்கான வேலைகளில் இப்பக்கமிருந்து இவர்கள் முனைகிறார்கள். எங்கையோ சீட்டாடிக் குந்தியிருக்கும் வீட்டாம்பளைக்கு இங்கிருந்தே சில எரியம்புகள் விடுகிறாள். அகஸ்மாத்தமாக அவன் வந்து விடுகிறான். உடனேயே அவள் குரலில் குழைவு ஏறுகிறது. சற்று முன்பிருந்த காரம் இருந்த இடம் தெரியவில்லை. சிறு அளவில் சரசமே நடக்கிறது. அவளிடம் கிஞ்சித்தும் எதிர்ப்பில்லை. பகல்வேளையையும் குழந்தைகளையும் காரணம் காட்டி தான் தட்டி விடுகிறாள் அதுவும் கொஞ்சலான குரலில். சல்லாபத்தில் சில்லறைச் சச்சரவுகளுக்கு என்ன சோலி? (ருசிப்பு). ஆம், வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்தே எதிர்வாதம் புரிந்தபடி புகார்களை அடுக்கும் மனைவியைச் சமாதானப்படுத்தப் படுக்கையில் கட்டினவன் கையைப் போடும் போது அவள் விலகவோ மறுப்பதோ இல்லை. மாறாக ‘இருங்க, இந்த கொக்கி வேற எங்கையோ மாட்டிக்கிச்சு’ என இடம் செய்து தருபவளாகவே இருக்கிறாள்(இணை). இல்லையென்றால் புள்ளாண்டான் இனி இல்லை எனத் தெரிந்ததும் செகதலா உள்ளே பொருமி வெடித்துக் கொண்டிருக்கயில் அவன் பேச்சை எடுக்கும் கணவனை தடுத்து நிறுத்திவிட்டு ‘எந்தக் கழுதை எப்படியோ போகட்டும் வுடு’ என்றுவிட்டு கணவனின் கழுத்தில் கையைப் போட்டு இழுத்து நெருக்குவாளா? நிறைவேறாக எதிர்ப்பார்ப்புகளையும் ஆற்றாமைகளையும் கலவியிலோ சிற்றினன்பத்திலோ தற்காலிகமாகவாவது சமன் செய்து கொள்ள முடியுமோ என்னவோ..!

நவீன தமிழ் புனைவுலகம் களங்கமின்மையின் வாரிசுதாரர்களாகவே குழந்தைகளையும் சிறார்களையும் பெரும்பாலும் சித்தரித்து வந்திருக்கிறது. கு. அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’ , சுந்தர ராமசாமியின் ‘ஸ்டாம்பு ஆல்பம்’, தி.ஜானகிராமனின் ‘முள்முடி’, வண்ணநிலவனின் ‘இரண்டு உலகங்கள்’, வண்ணதாசனின் ‘ஓர் உல்லாசப் பயணம்’ , கி.ரா-வின் ‘பிஞ்சுகள்’ (குறுநாவல்) என தேர்ந்த ஆக்கங்களின் வரிசையொன்று உடனடியாக நினைவுக்கு வருகிறது. ஆற ஆமர யோசித்தால் இவ்வெண்ணிக்கை கூடவே வாய்ப்பிருக்கிறது. இராசேந்திரசோழனின் சிறார்கள் எத்தனை விளையாட்டுத்தனங்கள் கொண்டவர்களோ அத்தனைக்கும் கள்ளத்தனமும் பிறரைச் சீண்டித் துன்புறுத்தி இன்பமும் காண்பவர்கள். இந்த நடைமுறை யதார்த்தத்தை எழுத இவருக்கு எந்த தயக்கமும் இருக்கவில்லை. கேட்க ஆளற்று தனியாகக் குளக்கரையில் புலம்பும் கிழவியைத் துன்புறுத்தும் சிறுவர்கள் அவளைக் கற்கள் எறிந்து விரட்டுகிறார்கள்.

வீட்டை விட்டு விரட்டிய ஆதங்கத்தில் குளக்கரையில் துணிமூட்டையோடு அமர்ந்தபடி தொலைவிலிருக்கும் வீட்டாருக்கு இங்கிருந்தே சாபம் இடுகிறாள், அவளது ஆவேசமான கேள்விகளோ காற்றில் கரைக்கின்றன. அவை எவர் செவியையும் எட்டாது என நினைத்தால் அங்கிருக்கும் வாண்டுகள் அவற்றைப் பிடித்துக் கொண்டு அவளுக்குப் பெயரிடுகின்றன, ’பையித்தியம்’. சிறார்களின் அழிச்சாட்டியத்திலிருந்து தப்பிக்க இடம்பெயர்ந்தாலும் அங்கும் கற்கள் எறியப்படுகின்றன. குளத்தையே குழப்பியடிக்கிறார்கள். அதிலொன்று தண்ணீரோடு போகிறது. கூப்பாடு கேட்டு இவளே குதித்துக் காப்பாற்றிக் கரை சேர்க்கிறாள். செய்தி கேட்டு ஓடிவருகிற அம்மாவிடம் எவ்வித பயமோ தயக்கமோயின்றி தள்ளிவிட்டவளே அந்தக்கிழவி தான் என்கிறான் பையன். தாய்க்காரி பொழியும் அர்ச்சனைகள் அவளை ஒன்றுமே செய்வதில்லை. விரட்டப்பட்டதன் வேதனைகள், புலம்பல்கள், கண்ணீர் அனைத்திற்கும் பதிலாக கதையின் முடிவு அமைந்திருக்கிறது. ஏனெனில் அவளுக்கு குழந்தையில்லை. இப்போது மீண்டுமொரு முறை வாசித்தால் கதை வேறொன்றாகத் துலங்கி வருகிறது. பையன்கள் வீசிய கற்கள் அவளைக் காயமேற்படுத்தியிருந்த போதும் இறங்கிக் காப்பாற்றுவதற்குப் பின்னால் மனிதத்தன்மையைக் காணலாம் என்றாலும் அவளிடம் இல்லாத ஒன்றை பிறருக்கும் இல்லாமல் போக விடுவாளா? குழந்தைப் பேறின்மையின் பரிதவிப்பும் இயலாமையும் ஒருவித அனாதைத்தனத்தோடு வெளிப்படும் போது அத்துயர் வலுவாக பாதிக்கிறது.

இவரது படைப்புலகிலேயே மனதை உருக்கும் கதைகள் மிகவும் சொற்பம் என்றாலும் அவற்றில் சிறுவர்களை பிரத்யேகப் பாத்திரங்களாகக் கொண்டெழுதிய ‘அவுட்பாஸ்’, ‘சுழல்காற்றும் சருகுகளும்’ ஆகிய இரு கதைகளும் முதன்மையானவை.

பலசரக்குக் கடைகளில் அரக்கப்பறக்க முதுகொடிய வேலை செய்யும் பையன்களை பலருமே கண்டிருக்கலாம். வேண்டும் பொருள் வரத் தாமதமானால் சலித்துக் கொள்வதோ கடிந்து பேசுவதோ தான் இயல்பு. ஆனால் அதே பையனை ஒரு புனைகதையில் அவனது பின்னணியுடன் நேர்கொள்கையில் அக்கண்ணீரைப் பகிர்ந்து கொள்பவர்களாக வெட்கமின்றி மாறிப்போவதன் முரணை என்னவென்று சொல்வது? சரி, பிறகு இலக்கியம் வேறு எதற்காகத் தான் படைக்கப்படுகிறது..! ஆசிரியர் தன் இயல்பிற்கும் மாறாக மிக அதிகமாக உருகிவிட்ட கதையாக ‘சுழற்காற்றும் சருகுகளும்’ உள்ளது. அன்பின் கரங்கள் அவனைப்போன்ற சிறார்களைக் காக்கட்டும் என மனதார விரும்பும் போதே, அவனுக்கு என்ன மாதிரியான உலகம் திறந்து கிடக்கிறது என்ற உண்மை நெஞ்சை அறைகிறது.

காதலுக்கும் காமத்துக்கும் பெரிய வித்தியாசமில்லை என்று கூறும் அஸ்வகோஷின் உலகில் விடலைத்தனமான(மயக்கம்) முரட்டுத்தனமான (இடம்) முதிர்ச்சியான (பற்று) காதல் கதைகள் உள்ளன. சில குறிப்பிட்ட சம்பவங்களுக்குப் பிறகு இருவரிடமும் உருவாகும் மெளனத்தை அவ்வாறு பொருள் கொள்ளமுடிமென்றாலும் சொற்களால் வெளிப்படுத்தத் தேவையில்லாத அன்பென்ற வஸ்து இக்கதையினுள் மற்றொரு இழையாகப் பின்னபட்டிருப்பதே இக்கதையை எடுத்து பேசத் தூண்டுகிறது.

ஒர்க்‌ஷாபில் வேலை செய்யும் சாராங்கபாணிக்கு வீட்டு ஓனரம்மா மகளும் கல்லூரியில் பயில்பவளுமானக் கஸ்தூரியைச் சீண்டி எரிச்சலூட்டுவதில் ஒரு வித இன்பம். இவன் தன்னிடமிருந்து அகன்று சென்றாலே நிம்மதியென நினைப்பவள் அவள். கஸ்தூரியை இங்கிதமின்றி கையாளான்கிறவனே தான் நோயாளிச்சீவனும் இரண்டாம் பிள்ளைப்பேற்றிற்கு ஆயத்தமாகியிருப்பவளுமான பக்கத்து வீட்டு சாந்தா மீது கருணையும் பரிவும் கொண்டிருக்கிறான். இவ்விருவருக்குமான உறவு ஈரம் மிக்கதாக மலர்ந்திருக்கிறது. ஒத்தாசை மட்டுமின்றி குடும்ப உறுப்பினன் போல உரிமையையும் எடுத்துக் கொள்ளும் சாரங்கபாணியை சாந்தாவின் கணவரான சுந்தரமூர்த்தி மேலதிகமாகப் புரிந்து கொண்டிருப்பது அலாதியான உணர்வை அளிக்கிறது. கஸ்தூரிக்கும் அவனுக்கும் இடையிலிருப்பது என்னவென்பதற்கு இருவரிடமும் பதிலேயில்லை. அவன் துவைத்துக் காயப்போட்ட துணிகளில் ஒன்றாக அது அந்தரத்தில் அசைகிறது.

தன் ஆஸ்தி அந்தஸ்துகளைகப் பெருமையுடன் காட்டி ஊருடன் தனக்குள்ளப் பிணைப்பைச் சொல்லி பூரித்துப் போகிறவராக விளங்கும் கதைசொல்லி(பற்று) தன் காதல் கதையைச் சொல்லி நிறுத்துமிடத்தில் முதிர்ந்து கனிந்தவராக திகழ்கிறார். அவள் வேறொருவனுக்கு மனைவியாகிக் குழந்தையுடன் கைம்பெண்ணாக நிற்கையில் தன் வீட்டுடனேயே வைத்துக் கொள்கிறார். அவர் அதுவரை கிட்டத்தட்ட தற்பெருமை போல விளம்பின அத்தனை செல்வங்களும் தன் உதிரத்தில் பிறக்காத மகனுக்கு என்பதை உணர்ந்தால் எந்த ஒன்றை விடவும் அவளது அண்மை விலைமதிக்க முடியாத பொக்கிஷமாக அவருக்கிருக்கிறது தெரிய வரும். இம்மனநிலையை வியக்குந்தோறும் அவர் நாளிதழ் கூட வாசிக்கும் கல்வி இல்லாதவர் என்பதை ஓர் உபதகவலாகச் சொல்லத் தோன்றுகிறது. முன்னர் குறிப்பிட்ட மலேயாவின் பெரியானை இக்கதையில் நினைத்துக் கொண்டேன். இவரது ஒற்றைக்குரலை கதைநெடுகிலும் நிறைந்து ஒலிக்கிறது என்ற போதும் அது பாதகமாக இருக்கவில்லை.

————

வீட்டிற்கருகே இரு தரப்பினருக்கு வாகனம் நிறுத்துவதில் பிரச்சினை ஏற்பட்டது. அருகருகான குடித்தனக்காரர்கள் என்பதால் இருவருமே அவ்விடத்தின் உரிமையை விட்டுத்தரத் தயாராகயில்லை. குழுமும் ஆட்களின் எண்ணிக்கைக் கூடக்கூட அது கெளரவப்பிரச்சினையாகி பேச்சில் காரம் ஏறிவிட்டது. வசவுகள், தூற்றல்களையடுத்து கைகலப்பாக மாறும் சமயத்தில், இதற்கென்ற அவதரித்த கும்பல் ‘மணம் பிடித்து’ நுழைந்தது. பைசம் என்னும் பெயரில் அந்தப்பிரச்சினை மூன்று நான்கு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் தீர்க்கப்பட்டது. இதற்குள் அவ்விரு வீடுகளுக்கும் ராசி ஆகும் மனநிலையை வரவழைத்துவிட்டது அக்கும்பல். செலவுகள் அப்படி. இரு பக்கமும் தோதாகக் கறந்தது போக சாலையில் எங்கு கண்டாலும் தேனீரும் சிற்றுண்டியும் செலவுக்கு ரூபாயும் தண்டம் அழும்படிக்கு பொறுக்கித்தனம் செய்தது. இவர்களின் நச்சரிப்புத்தாளாமல் ஒரு குடும்பம் வீட்டையே காலி செய்து ஓடிவிட்டது. இச்சம்பவத்தை ‘விபத்து’ ,’கொஞ்சம் இருட்டுக்கு வந்து பாருங்கள்’ போன்ற கதைகள் நினைவூட்டின. கும்பல்களின் அடாவடித்தனம் பூஞ்சை மனிதர்களை பணிய வைப்பது தானே..!

’தோது’ , முற்போக்குக் கதையின் சாயலும் உள்ள ‘நீதி’ போன்றவை ‘இல்லாதோருக்கு இவ்வுலகம் காட்டுவது இல்’ என்பதன் சான்றுகளாக உள்ளன.

***********

நவீன தமிழிலக்கியத்தில் குறுநாவல் வகைமையில் சாதனை புரிந்தவர் அசோகமித்திரன். வெவ்வேறு வடிவங்களில் பின்புலத்தில் எழுதப்பட்ட ஆக்கங்கள் அவருடையவை. பிற எழுத்தாளர்களின் வரிசையை அடுக்கி விட முடியுமென்றாலும் அஸ்வகோஷ் கதைகள் பிரசுரமான நாட்களிலேயே குறுநாவல்களை எழுதியிருக்கிறார். அவற்றில் சிறகுகள் முளைத்து, விதிகள் விதிகள் (கதைத் தொகுப்பிலும் சேர்க்கப்பட்டுள்ளது, சீட்டாட்டக் கலைஞன் ஆகிய மூன்றும் அவற்றின் தரம் சார்ந்து முக்கியமானதாக, குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

ஒழுக்க மதிப்பீடுகளுக்கு அப்பால் வாழ்க்கை எவ்வாறு உள்ளது? அதை எவ்விதம் பொருள் (Meaning) கொள்வது? போன்ற வினாக்களுக்குத் தகுந்த நேரடியான பதில் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ‘அந்தந்த நேரத்து நியாயங்கள்(ஜெயகாந்தன்) போன்ற வியாக்கனங்களை சற்றே ஒத்தி வைப்போம். ஆன போதும் சமூகத்தின் கண்களுக்கு அஞ்சி அது வகுத்த, நெறிமுறைகள் பிசகாது வாழத்தலைபடுபவர்களே அல்லது அவ்வாறு காட்டிக் கொள்பவர்களே அதிகமும். அப்படியானால் பொருளாதாரச் சுதந்திரம் இத்தளைகளை நீக்கி விடுமா? மிகக்குறிப்பாக பெண்களுக்கு.

பொருளாதார விடுதலை, பாலியல் சுதந்திரத்தின் கதவுகளைத் திறந்து வைக்கும் என பேதைகள் கூட நம்ப மாட்டார்கள். எனினும் எளிய விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள அது தாராளமாக அனுமதிக்கக்கூடும். ஆனால் புலப்படாத அரண்களை உருவாக்கி, விதிகளை நிர்ணயித்து ஒடுக்கவே செய்யும். அடித்தள மக்களிடம் தன்னிச்சையான தேர்வாக உள்ள பாலியல் விருப்பங்களும் தேர்வுகளும் மேல்நிலைச் சமூகத்தில் மூன்றாவது கண் அறியாமல் அந்தரங்க உடன்படிக்கையாக இருளின் பிரகாசத்தில் நிகழ்வது குறித்து இவ்வொழுக்கங்களை வரையறுத்து இறுகிய தடைகளைச் சமைத்த அதே சமூகத்திற்கு தெரியாத என்ன? தெரிந்தும் தெரியாதது போல கடந்து போவது பலருக்கும் முரண்நகையாகத் தோன்றலாம். அந்த பாவனையையும் தேர்ந்த நடிப்பையும் போலியான ஒழுக்க வழிபாட்டுணர்வையும் கற்பிப்பதில் ஏட்டுக் கல்விக்கு, அந்தக் கல்வியை போதிக்கும் நிறுவனங்களுக்கு, அந்த நிறுவன இயந்திரம் செயலாற்ற உதவும் பல பாகங்களுக்கு, ஏன் சிறு துரும்பிற்கு கூட பெரும்பான்மை பங்கிருக்கிறது என்பதை உணர்ந்தால் அந்த முரண்நகையைப் புரிந்து கொள்ள முடியும்.

உடல் உழைப்பிலிருந்து மூளை உழைப்பு வரைக்கும் ஏற்றத்தாழ்வுகள் நிலவினாலும் எத்தனையோ வாழ்க்கை முறைகளில் மனிதர்களின் ஆயுள் கழிகிறது. விபச்சாரமும் பெண்ணின் பாலியல் சுதந்தரமும் அத்தகைய வாழ்க்கைமுறைகளில் ஒன்றே எனவும் மனிதர்களின் அபிலாஷைகளும் உணர்வுகளுமே வாழ்க்கைக்கு அடிப்படையாக இருக்க முடியுமே அல்லாமல் வேறெதற்கும் அவ்வளவு முக்கியத்துவமில்லை என்பதுவுமே இராஜேந்திர சோழனின் குறுநாவலான ‘சிறகுகள் முளைத்து’.

ஜி.நாகராஜனின் தங்கம் (குறத்தி முடுக்கு) போன்றோ மீனா (நாளை மற்றுமொரு நாளே-1966) மாதிரியானவர்கள் அல்ல ரஞ்சிதம், தேவானை, மல்லிகா போன்றோர். போலவே கந்தனையோ டெர்லின் சட்டை அணிந்த மனிதரையோ ரஞ்சிதத்தின் கூரையைச் சுற்றி வசிக்கும் ஆண்களாகக் கருத முடியாது. வாழ்க்கைக்கு வெளியிலிருந்து அல்ல அதற்குள்ளிலிருந்து வெளிப்படுகிறவர்களாகவே இக்குறுநாவலின் மாந்தர்கள் அமைந்திருக்கிறார்கள். ஜி.என் ஆக்கங்களின் வெளிவந்த காலப்பகுதியிலேயே எழுதப்பட்ட குறுநாவல் இது. பிரசுரப் பத்தாம் பசிலித்தனங்களால் 15 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டு 1988ல் வெளிவந்தது.

தொழிற்கல்வி (டர்னர்) முடித்து, தங்கியிருக்கும் அக்கா வீட்டிலிருந்து ஊர் திரும்ப முடிவெடுக்கும் பாஸ்கரன் அதுவரை அம்மாவின் அண்மையை உணர்ந்தது மிகக்குறைந்த சந்தர்ப்பங்களிலேயே. ஹாஸ்டலுக்கு அவள் வந்து பார்த்துச் செல்லும் இரண்டு மூன்று மணி நேரங்களுக்குள் மட்டுமே. அக்காவின் தகாத உறவைக் கண்டு மனங்கசந்து அங்கிருந்து கிளம்பி விடுபவன், அம்மாவைக் காணும் ஆவலில் அது சார்ந்த எண்ணங்களில் திளைத்தபடியே வந்திருங்குகிறான். இறங்கி நடக்கும் போதே அவ்விடத்தின் காட்சிகள் அளிக்கும் அசூசை உணர்வும் விலகல்தன்மையும் நாட்கள் செல்லச் செல்ல வளர்கிறதேயன்றி குறைந்தபாடில்லை. அதற்கு மாறாக அங்கிருப்பவர்கள் அவன் மீது அன்பைப் பொழிபவர்களாக மதிப்பவர்களாகவே உள்ளனர். அவன் நம்பி வந்த உலகிறகு வெகு தொலைவில் இருக்கிறார்கள் என்ற நினைப்பால் எங்கும் ஒட்டாமல் சுற்றுவதிலேயே தினங்கள் கழிகின்றன. அம்மாவின் வேண்டுதல்களோ அவளது சிநேகிதி தேவானையின் முறையிடல்களோ அப்பகுதிக்கே நாலுந்தெரிந்தவரான சதாசிவ வாத்தியாரின் ஆறுதல்களோ பாஸ்கரனுக்குள் சிறிதளவு கூட இறங்குவதில்லை. படிப்பறவு தந்த உலகியல் ஞானத்திற்கு ஏற்ற இடமோ மனிதர்களோ இங்கில்லை என்ற நெருடல் முள்ளாக குத்துகிறது. அவனது மொத்த நியதிகள், ஒழுக்க வரையறைகள் மீது சம்மடியாக இறங்குகிறது அம்மா ‘தொழில்’ செய்பவள் என்பது. பிராத்தல் கேஸில் பிடித்துச் செல்லப்பட்டு வாத்யாரால் வெளியே வருகிறாள். அவருடனே கூட அவளுக்கு அன்னியோன்ய பந்தம் உள்ளது. அவனையே உயிரென நம்புபவளை ‘சீ..’ என்றதும் கயிற்றில் தொங்கி விடுகிறாள். பாஸ்கரனைப் புரிந்து கொள்வது சுலபம். ஏனெனில் அவன் நம்மில் ஒருவன். நம்மை போன்றவன். வாத்யாரையோ தேவானையோ நெருங்குவது தான் மிகக்கடினம். அம்மாவின் மரணத்திற்கு பிறகு அவனிடம் மாற்றங்கள் மெதுவாக நிகழ்கின்றன.

வாத்யாருடன் வசிக்கும் மல்லிகாவுக்கும் அவனுக்குமே கூட நெருக்கம் உருவாகிறது. ஒரு சூழலில், செல்வதற்கு எங்குமே பாதை இல்லாது தவிப்பவர்கள் இவ்வுலகம் தவறென்றும் அகெளரவமென்றும் கற்பித்து வைத்திருப்பவைகளைத் துச்சமாகவே கருதுவார்கள். இவ்விடத்தை மனரீதியாக வந்தடைய வாத்தியாரும் தேவானையும் சங்கரலிங்கமும் உதவுகிறார்கள் என்று தோன்றுகிறது. பாஸ்கரனை நிலைகுலைய வைக்கும் மல்லிகாவின் வன்மம், காயப்படுத்தப்பட்ட அவளது அளப்பரிய ப்ரியத்தின் மற்றொரு முனையே என்பதைக் கூட புரிந்து கொள்ள அவனுக்கு நாட்கள் தேவைப்படுகின்றன.

கட்சியுடனானத் தொடர்பு அவனிடம் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உண்டாக்குகிறது என்றாலும் அது எந்தளவுக்கு அப்பாத்திரத்தின் விருப்பமோ அதே அளவிற்கு ஆசிரியரின் விருப்பமாகவும்(ஆழமான பொருளில்) உள்ளதோ என்ற ஐயம் எழமாலில்லை. இதை விடவும் கைம்பெண்ணை தனக்கு சரிக்கட்டித் தரச் சொல்லி சுற்றும் முத்துசாமி (நாளை மற்றுமொரு நாளே) சோசலிசம், சமூக கொடுமைகள், லட்சியம், சுரண்டல் பற்றியெல்லாம் கந்தனிடம் தீவிரமாகப் பேசுவதும் அதற்கு கந்தனின் நறுக்குத்தெறித்தாற் போன்ற பதில்களும் அச்சூழலுக்கு மிக இயல்பாக அமைந்திருப்பதைக் காணலாம்.

*******

கழுத்தில் விதவிதமாகக் கயிறு கட்டியிருப்பவை, உடம்பில் எண் போடப்பட்டவை, பெயிண்ட் ஒழுக பெயர்களைக் கிறுக்கியிருப்பவை, அடையாளக்குறிகளை இட்டிருப்பவை, நிறங்களாலேயே சுட்டப்படுபவை என நீளும் குடங்களை வரிசையில் பார்த்த அனுபவம் உண்டா? வாரத்திற்கு குறிப்பிட்டக் கிழமைகளில், சொல்லுகிற நேரத்தில் மட்டும் தான் குடிநீர் வரும். இரண்டு குடங்களுக்கே போராட வேண்டியிருக்கும். யோகம் உள்ளோருக்கு நான்கு குடங்கள். அங்கு பெண்களின் அடாவடிகளை, அள்ளிச் சொருகியபடி களமிறங்கும் வீர சாகசங்களை, ’புழுத்த நாய் குறுக்கே போகாத’வசவுகளைச் சாதாரணமாகக் காணலாம். சில சமயங்களில் குடங்கள் திருடு போவதுமுண்டு. கற்பூரத்தைக் கையில் கொளுத்தியபடியே ஒற்றைக் குடத்திற்காக ஓராயிரம் சாபம் இட்டு குதிக்கும் பெண்களைக் கண்டு அம்மாவிற்கு பின்னால் பதுங்கியிருக்கிறேன். அந்த உக்கிரத்திற்கு பலன் இருந்திருக்கிறது. காலை கதவு நீக்கினால் அந்தக் குடம் வீட்டுவாசலில் மல்லாக்கக் கிடப்பதையே காண்பார்கள். தெய்வங்கள் நின்று கேட்கும் என நம்பிய காலம்.

வரிசையில் விநோதமான வஸ்துகள் தென்படும். குடத்தின் கழுத்து மட்டுமாக அறுபட்ட துண்டு, முண்டம் மட்டுமாக ‘பே..’வென வாய்பிளந்து கிடப்பவை, வீட்டில் உதவாது மூலையில் போட்டு வைத்தவைகளைக் கொண்டு வந்து வைப்பதுமுண்டு. கற்களைக் கொண்டு வந்து போட்டால் ஆபத்து. எளிதாக மாற்றி வைத்து விடலாம். அதனால் தூக்க முடியாத பெருங்கல்லை வீட்டிலிருக்கும் ஆம்பளை ஆளைக் கொண்டு வந்து போடச் சொல்லி வரிசை பிடித்தோரும் உண்டு. இந்த வரிசை களேபரங்களை ரேஷன் கடையில் மண்ணெணெய் வாங்க நாள் முழுக்க நின்ற போதும் பார்த்ததுண்டு.

இரட்டைக் குடம் வரிசை போட்டால் ஒரு குடம் முன்னாலும் இன்னொரு குடம் பத்தாவது வரிசையிலுமாகக் கலைந்து கிடக்கும். எங்கிருப்பது சரியான இடம் என்கிற வாக்குவாதத்தில் தலைமுறைகளில் ஒழுக்கங்கள் சந்தி சிரிக்க ஆரம்பித்துவிடும். எனவே குடத்தின் கழுத்தை இணைத்து கட்டி விடுவார்கள். வசவுகளில் பெரும்பாலானவை ஏன் பெரும்பாலும் பெண்களின் ஒழுக்கத்தையே சுற்றி வருகின்றன?அப்படி அந்த இடத்தில் நீக்கமற காற்றில் நிறைந்திருந்த வசவுச் சொல், ‘தேவிடியா முண்ட’. ‘அவுசாரி’. பிறகு பிறப்புறுப்புகளின் கோலாகலமான வர்ணனைகளுடன் கூடிய, கற்பனைகளாலும் வெல்லமுடியாத சில நேரங்களில் திகைக்கவும் சில நேரங்களில் நகைக்கவும் வைக்கிற வசவுகள் சாதாரணமாகப் பவனி வந்து கொண்டே இருக்கும்.

வசவு யாரை நோக்கி கூவப்படுகிறதோ அங்கிருந்து இன்னும் சூடாக, மேலும் பச்சையாகத் திரும்பி வரும். ஒருத்திக்கு ஒரு பெண்குழு சப்போர்ட்டுக்கு வந்தால் இந்த பக்கம் இருப்பவளுக்கு தனியாக ஆதரவுக்குரல்கள் கிளம்பும். அத்தனைக் கெட்ட வார்த்தைகளைக் கேட்டு அந்தக் குழாயடிக்கு ஒரு சுவருக்குப் பின்னால் வீற்றிருக்கும் அம்மன் எவ்வளவு அவதாரம் எடுத்து சூலாயுதம் ஏந்தி வந்திருந்தாலும் அவளையே தவிடு பொடியாக்கும் வாய்கள் அங்கு இருந்தன. ஆண்களுக்குச் சிரிப்பை அடக்க முடியாது, அம்மா என் காதை பொத்துவார், இல்லையென்றால் ’வீட்டுக்குப் போயிட்டு அப்பறமா வா’ என அனுப்பி வைப்பார். கைக்கலப்பு ஏற்படுவதுண்டு. உடனே பஞ்சாயத்து ஆபிஸில் புகார் போய் தண்ணீரை நிறுத்தி வைத்து விடுவார்கள். மண்டை உடைந்து போலீஸ் வந்து காவலிருந்த கூத்துக்கள் கூட நடந்திருக்கின்றன, உயிருக்கும் மேலான மானம் போய்க் கொண்டிருக்கும் போது கூட வரிசையில் தன் குடம் சரியாக நகர்கிறதா என்பதில் மிகக் கவனமாக இருப்பார்கள். சிறுவனான என்னை எளிதில் ஏமாற்றி விடுவார்கள். அப்படி ஒருமுறை நடந்து அம்மாவைக் கூட்டிச் சென்றபோது குடத்தையே உடைத்து விட்டிருக்கிறார்கள். அது ஓர் உலகம். எழுதிக் கொண்டே இருக்கலாம்.

சரி, இந்த கதைகளெல்லாம் எதற்கு எனத் தோன்றலாம். இத்தகைய காட்சிகளைக் கொண்ட புனைகதையொன்றை வாசிக்க நேர்ந்தது. இராஜேந்திர சோழனின் நெடுங்கதையான ‘விதிகள்..விதிகள்..’ நீர் பிடிப்பதில் நேரடியாகக் கண்டது அதற்குள் ஒருவனாக நின்றது போன்ற என் அனுபவம் வேறு என்ற போதும் இக்குறுநாவல் அவற்றைக் கிளறி விட்டதும் அந்த தினுசுதினுசான சுபாவம் உள்ள மனிதர்களின் முகங்களை இத்தனை வருடத்திற்குப் பிறகு நினைவில் கொண்டு வந்து நிறுத்தியதையுமே காரணமாகச் சொல்லலாம்.

மழை வராது பொய்த்து போய் விட, சம்பந்தப்பட்ட ஊரில் குடிநீருக்குப் பஞ்சம் ஏற்படுகிறது. குடங்களைத் தூக்கிக் கொண்டு எங்கெங்கோ அலைகிறார்கள். ஊரிலேயே மூன்று பைப்புகள் இருந்தாலுமே கூட பள்ளத்தெருவில் உள்ள குழாயில் (அடிபம்பு) தான் குடிக்கும் ருசியுடன் இருக்கிறது நீர். படை திரண்டு சென்றால் விளைவு என்ன? போர் தானே..! அது தான் நடக்கிறது. போட்டிகள், பொறாமைகள், ஆற்றாமைகள், மனஸ்தாபங்கள்.

திடீரென்று கையொன்று குறுக்காக நுழைந்து குடத்தை வைக்கும். தமிழகமெங்கும் எந்தக் காலகட்டத்திலும் ஒரே பொய் தான் புழங்கும் போலிருக்கிறது. ’குழந்தையை தொட்டில்ல போட்டுட்டு ஓடி வந்திருக்கேன்’, ‘அடுப்புல ஒல கொதிக்கிது’. அதில் எது நாடகம், எது உண்மை என்பதையெல்லாம் அலசிக்கொண்டிருக்க பெண்களுக்கு மனதும் நேரமும் இருப்பதில்லை. அவர்கள் சில மணி நேரங்கள் காத்திருந்த பின்பே நீரைப் பார்க்கிறார்கள். எனவே விடவே மாட்டார்கள். எங்கும் செல்லுபடியாகும் ஒற்றை வாக்கியமே தான் இங்கும்

’வாய்யுள்ள புள்ள பொழைக்கும்’. அப்படித்தான் பர்மாக்காரியின் குடும்பம் பலரையும் ஏய்த்து வீட்டிலிருக்கும் 23 பேருக்கும் நீரைப் பிடிக்கிறது. அடக்காத, காது வரை நீளும் வாய் கொண்ட பெண்களின் குடும்பம் அது. அந்த வாய் என்பது வசவுகளின் உச்சாடனம். மட்டுமல்ல கூச்சநாச்சமில்லாது சகலரையும் அங்கேயே கூறு போட்டுக் கிழிக்கும் சாமர்த்தியம். அது இல்லாத பெண்கள் ஒதுங்கி நிற்க, பஞ்சாயத்துக்கு ஊர் மதிக்கும் வாத்தியரிடம் போகிறது. பைசல் நடக்கிறது. ஆன போதும் பொழுதுக்கொரு சச்சரவு கொண்டு வரப்படுகிறது. ஊரில் எவ்வளவு விதமான மனிதர்கள் ஒரே விஷயத்தை எத்தனை விதமாகப் பார்க்கிறார்கள் என்பதற்கு கோனார் நோட்ஸ் இல்லாது உள்ளது உள்ளபடி உரைத்துச் செல்கிறது கதை.

எத்தனை தூரத்திற்கு அது விடாப்பிடியாக அடங்காமல் வம்புகளாக உருமாறி வருகிறதோ அத்தனைக்கும் ஈடுகொடுத்து நிற்கிறார் வாத்தியார். பிரச்சினைகளை பேசிப் பேசியே வழிக்கு கொண்டு வருகிறார். அப்படியே விட்டால் பக்குவமில்லாத ஆட்களால் அது பூதாகரமாகும் என்பது அவருக்குத் தெரிந்திருப்பது தான் விஷயம். பைப்பிற்குப் பூட்டுப் போடுகிறார்கள். வேறொரு ரூபத்தில் முளைக்கிறது சண்டை. மீளவும் கூட்டம் போட்டு தண்ணீர் பிடிப்பதில் எப்படியெல்லாம் சிக்கல்கள் வரும், அதை களையும் வழி பற்றி பேசப்படுகிறது. இக்கதையை ஒருவேளை நான் எழுதியிருக்கக் கூடுமென்றால் இராஜேந்திரசோழனைப் போல கதையின் முடிவை நம்பிக்கையின் விதையை வைத்து மூடி முடித்திருக்க மாட்டேன்.

இக்குறுநாவலில் இடம்பெறும் மனிதர்களும் வஸ்துகளும் பிரச்சனைகளும் ஆலோசனைகளும் தண்ணீருக்காக மட்டுமே என வாசிப்பது ஒருவகை. இந்த மொத்தக் கதையுலகையும் சாக்காக வைத்து தன் வாழ்க்கையோடு எங்கேனும் அதற்கு தொடர்புண்டா என ஆராய்ந்து அதனூடாக ஒரு வாசிப்பை மேற்கொள்வது இரண்டாவது வகை. இரண்டாம் வகையிலுள்ள வாசகரே போற்றுதலுக்குரியவர். மெச்சத்தக்கவர். இந்த வாத்தியார் வேறு யாருமல்ல, படைப்பாசிரியரே தான் என்பதற்கு அநேக வாய்ப்புகள் இப்படைப்பிற்குள்ளேயே இருக்கின்றன.

*’மொடக்கடி’என்பது கொங்கு வட்டாரத்தில் புழங்கும் சொல். பிடிவாதம் எனப் பொருள். அதே சொல் தென் ஆற்காடு நிலப்பகுதியின் கதையொன்றில் அதே பொருளில் இடம் பெற்றிருக்கிறது. ஆச்சரியம் தான்.

*******

“இலட்சிய சீட்டாட்டம் என்பது ஆகாயத்திலேயிருந்து குதித்து வந்துவிட முடியாது. அல்லது அது ஆண்டவனால் அருளப்படுவதும் அல்ல. அது நமக்கு முந்தைய தலைமுறையினரின் ஆட்டங்களிலிருந்து மட்டுமே பிறக்கமுடியும். எனவே நமக்கு முந்தைய தலைமுறையினரின் ஆட்டமுறைகளை அதாவது பண்டைய ஆட்ட முறைகளிலேயிருந்து சமகால ஆட்டமுறைகள் வரையான சீட்டாட்டங்களில் ஏற்பட்டிருக்கும் சகல மாற்றங்களையும் நாம் சுவீகரித்துக் கொண்டு அதிலிருந்து புதியது படைக்க முயல வேண்டும். இப்படி முயல்பவர்களால் தான் சீட்டாட்டங்களில் புதிய மாற்றங்களைக் கொண்டு வர முடியும். ஆகவே தான் நாம் நிறையக் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டியதாகிறது. இதில் கூச்சத்துக்கோ தயக்கத்துக்கோ தன் முனைப்புக்கோ எதற்கும் இடமில்லை.’

’……….கற்றுக் கொள்வது என்றால் அவர்கள் எப்படி ஆடுகிறார்களோ அதைப் பார்த்து அதே மாதிரி ஆட, காப்பியடிப்பதை அல்ல. அவர்களது ஆட்டமுறைகளை உள்வாங்கி நாம் நமக்கான முறைகளோடு நமக்கான தனித்துவத்தோடு ஆட வேண்டும். புதிய ஆட்டமுறைகளை உருவாக்க வேண்டும். புதிய முறையில் ஆட வேண்டும். அதுதான் படைப்பு. அப்படி அல்லாமல் ஆடிய முறைகளிலேயே ஆடுவது அல்லது ஒரே மாதிரியாகவே திரும்பத் திரும்ப ஆடுவது இதுவெல்லாம் யந்திர கதியாக அலுப்பூட்டக் கூடியதாகவே அமையுமே தவிர படைப்பாகாது. ஆக முடியாது.”

-’சீட்டாட்டக் கலைஞன்’ குறுநாவலில்.

மொத்த கதைகளின் எண்ணிக்கை எண்பதை நெருங்குகிறது என்றால் அவற்றில் குறைந்தபட்சம் பத்து கதைகளிலேனும் ஆட்கள் சீட்டாடுகிறார்கள். பொழுதுகளை விழுங்க அவர்களுக்கு வேறுவழியில்லை போலும். இந்த ஆட்டத்தை முன்னிருத்தி ‘சீட்டாட்டக் கலைஞன்’ என்ற குறுநாவலையே எழுதியிருக்கிறார் இராஜேந்திரசோழன். இங்கு ஒரு சிறிய கதை அவசியமாகிறது.

எழுதத்தொடங்கிய குறுகிய காலத்திலேயே சண்முகம் என்ற நண்பருடன் சேர்ந்து ‘பிரச்னை’ எனும் பெயரில் ஒரு பத்திரிகை நடத்தியிருக்கிறார் இராசேந்திரசோழன். அப்பெயரைப் பதிவதிலிருந்த சட்டச்சிக்கலால் ‘உதயம்’ என பெயர் மாற்றம் பெற்றது. இதழுக்கு வரவேற்பும் நன்றாகவே இருந்திருக்கிறது. கட்சி பத்திரிகையான ‘செம்மலரி’ன் ஒரு சாரார் உதயத்திற்கு தாவி விட்டிருக்கின்றனர். இதை கட்சி ஏற்கவில்லை. ஏற்கனவே பொருளாதார இழப்புகளைச் சந்தித்து வந்த ‘உதயம்’ கட்சியின் கட்டளைக்கு பணிய வேண்டிய நிர்பந்தம். இதைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட குறுநாவல் இதுவென தோன்றுகிறது.

கட்சி, முற்போக்கு, புரட்சி கோதாவில் இலக்கியம் எனக் கருதும் தரமற்றவைகளுக்கும் உண்மையில் இலக்கியம் என்பது என்ன என்ற வினாவுக்கும் இடையே நிகழ்ந்த விவாதங்களை விலாவாரியாக, சீட்டாட்டத்தை அடிப்படையாகக் கொண்டு செ என்ற ஆட்டக்காரனின் பார்வையில் படைப்பு, படைப்பாக்கம், படைப்பின் விதைகள், அவை எங்கிருந்து வேர்விடுகின்றன, அதன் கலைத்தரம், அவற்றின் தரத்திற்கு ஒரு ஆட்டக்காரன் எவ்வாறெல்லாம் செயலாற்றவும் தேடல் கொண்டவனாகவும் இருக்க வேண்டும், ஒரு அமைப்பு தன்னியல்பாக கலைஞனாக மிளரும் ஆற்றல் கொண்டவனைத் தங்கள் கட்டுப்பாடுகள் மூலம் எப்படி காயடித்து சீர்குலைக்கிறது போன்ற அனைத்தையும் அக்குவேறாக பேசும் குறுநாவல் இது. சீட்டாட்டத்தை சாக்காக வைத்து இராஜேந்திர சோழன் ஆடியிருப்பது வேறொரு ஆட்டம். 40, 50 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டு சென்ற ஆண்டு தான் நூலாக்கம் பெற்றிருக்கிறது இப்படைப்பு. ஒருவேளை எழுதப்பட்டச் சூட்டுடன் வெளிவந்திருந்தால் அன்றைய காலத்தில் ‘’சிறகுகள் முளைத்து’ க்கு இணையாக காரசார உரையாடல்களையும் ஆட்சேபங்களையும் பகையையும் சம்பாதித்து தந்திருக்கக் கூடும். ஒரு ஆட்டத்தில்

(படைப்பில்) கலைத்தன்மைக்கு பின்னரே மற்றவையனைத்தும் என்கிற குரலை அங்கீகரிக்கும் ஆட்கள் எப்போதுமே மிகக்குறுகிய வட்டத்திற்குள்ளாக மட்டுமே இருக்கும். ஆனால் அது தான் மீதமுள்ள மிகப்பெரிய வட்டத்தை என்றும் பாதிக்கிற சக்தியையும் பெற்றிருக்கும்.

இம்மூன்று தவிர்த்த பிற குறுநாவல்கள் மிகச் சாதாரணமானவையாக (மகாலட்சுமி, உறவு பந்தம் பாசம், வேட்கை போன்றவை) இவரது இலக்கியத்தகுதியை கீழிறக்குபவையாகவே உள்ளன.

———–

”கலைகள் அனைத்துமே சமூக மாற்றத்துக்கு உதவுவதாக இருக்க வேண்டும் என்றாலும் அது கலைத்தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் எனவும், கலைத்தன்மையற்ற ஆட்டங்கள் சும்மா வெறுமனே சமூகப்பயன் என்கிற போர்வையின் பின்னால் ஒளிந்து கொண்டு தன் இயலாமையை மறைக்கக்கூடாது. அல்லாததை உள்ளது போல் பாவலா காட்டக்கூடாது. அது நிலைக்காது. எனவே எந்தக் கலையும் அதன் சொந்த வலுவில் நிற்க நாம் கலைத்தன்மைக்கு முக்கியத்துவம் தரவேண்டும்…” (’சீட்டாட்டக் கலைஞன்’ குறுநாவலில்)

எழுதத் தொடங்கிய குறுகிய காலத்திற்குள்ளாகவே கட்சியின் இலக்கிய பார்வை, உறுப்பினர்களின் யந்திரத்தனமான செயல்பாடுகள் போன்றவற்றின் மீது பகையை பலனாகக் கிடைக்கும் எனத் தெரிந்திருந்தும் எவ்விதத் தயக்கமுமின்றி விமர்சனங்களை வைத்தவர் இராசேந்திரசோழன். ஒரு அமைப்பிற்குள் செயலாற்றியபடியே அதற்கெதிராக கொடியுயர்த்தி அதில் உறுதியாக நின்றவர். ‘வைபவம்’ போன்ற ஆரம்பக் காலக் கதைகளிலும் ‘வினை’ போன்ற இடைக்காலத்திய கதைகளிலுமே கூட அதைக் காணலாம். கதைக்குள் எங்கெங்கு சந்தர்ப்பங்கள் வாய்க்கிறதோ அங்கெல்லாம் அக்கதை ஓட்டத்திற்கு ஊறு நேராதவாறு கடவுள் சார்ந்த ஐயங்களை, கட்சியின் பரிசீலனையற்ற ஒன்றேபோன்ற தீர்மானங்களில் தனக்குள்ள ஒவ்வாமைகளை பேசி விடுகிறவராக இருக்கிறார். எனவே அங்கு தனிமையே அவருக்கு பரிசாகக் கிடைத்திருக்கிறது. கட்சியின் கொள்கை விளக்க ஏடாக, புரட்சியின் சூத்திரத்தை பறைசாற்றும் முழக்கமாக வறட்டுத்தனமாக இலக்கியத்தை அணுகும் தலைமையின் நோக்கங்களுக்கு மாற்றாக அழகியல், கலைத்தரம், சுயபடைப்பும் வாழ்க்கையும், மொழி என பலவற்றிலும் தெளிந்தப் பார்வையுடன் இருந்தவருக்கு அவர்களுடன் முரண்பாடு ஏற்படாது இருந்திருந்தால் தான் வியப்பு தோன்றியிருக்கும். அவை பாலியல் தூண்டல் கதைகளன் என்றும் சமூகப் புரட்சிக்கு வித்திடாத படைப்பு எனவும் அவர்களால் மதிப்பிடப்பட்டிருக்கிறது. உதாரணமாக ‘சிறகுகள் முளைத்து’ 71-ல் எழுதப்பட்டு செம்மலர் இதழுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. பாட்டாளி வர்க்கத்திற்கு பிரயோசனமில்லை எனச் சொல்லி கிடப்பில் போடப்பட்டு விட்டது. 15ஆண்டுகளுக்கு பின்னர் 1988ல் தான் நண்பரால் பதிப்பிக்கப்படுகிறது. அந்த காகிதப் போராளிகளுக்கு எதிராக ‘முக்காட்டு முகங்கள்’ என்ற தலைப்பில் மிக நீண்ட பின்னுரையொன்றை எழுதியிருக்கிறார். கட்சி, கமிட்டி உறுப்பினர்கள் என அதில் மிகக் கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. அவை ‘மட்டையடியாக’ இல்லாமல் நெடுநாள் உள்ளே புகைந்து கொண்டிருந்தவைகளை காரண காரிய விளக்கங்களோடு ஏறக்குறைய அவர் எழுதிய அபுனைவு நூல்களில் அவர் கையாளும் அதே தர்க்க ஒழுங்கோடு அடுக்கடுக்காகக் கேள்விகளை எழுப்பி அவற்றிற்கு உரிய பதில்களை தந்து களமாடியிருக்கிறார் அஸ்வகோஷ்.

ஆனால் முரணாகவும் துரதிஷ்டமாகவும் அமைந்தது என்னவென்றால் அதே கட்சி சார்ந்த பணிகள், களப் போராட்டங்கள், வீதி நாடகங்களால் படைப்பூக்கத்தை இழந்தார். அவை அவரது எழுத்தாற்றாலை தின்று விட்டது என அவரே சொல்கிறார். திரும்ப எழுந்த வந்த போது அவை மிகப் பலவீனமாகவையாகவும் அவரா இவர் என்கிற அங்கலாயிப்பை ஏற்படுத்துபவையாகவுமாக சாதாரணக் கதைகளாகவே இருக்கின்றன. இக்காலகட்டத்தில் (2000க்கு பிறகு) எழுதிய கதைகளிலேயே ‘சவாரி(2008) மட்டுமே மிகவும் குறிப்பிட்டுச் சொல்லும் தரத்துடன் வந்திருக்கிறது. எள்ளலும் பகடியும் குமிழியிடும் இக்கதையில் புதுமைப்பித்தனின் சில காலடிகளைக் காண முடிகிறது என்றாலும் குதிரையை வைத்துக் கொண்டு இராசேந்திர சோழன் நிகழ்த்தியிருப்பது தீவிரத் தொனியால் அமைந்த கிண்டலும் விமர்சனமுமான பொய்க்கால் குதிரை ஆட்டமே. மற்ற கதைகளைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை.

உள்ளதை உள்ளபடிக் காட்டும் கதைகள், யதார்த்தக் கதைகள், ’கசடபதற’ குழுவின் நட்பிற்குப் பிறகு செறிவும் அடர்த்தியும் கூடி எழுதிய நவீத்துவக் கதைகள் எனக் காலகட்டத்தின் மாற்றங்களை அவரது படைப்புலகில் காணமுடிகிறது. என்றாலும் இவரது உலகிற்கு முற்றிலும் புதியனவாக அமைந்துள்ள சில மிகுயதார்த்தக் கதைகள், கற்பனையால் புனையப்பட்டவையாகத் தோன்றினாலும் அவை இப்படைப்பாளி தன் கனவுகளை அடியொற்றி அவற்றைப் பெயர்த்தெடுத்து எழுதியவை என அறியும் போது அதன் சாத்தியம் குறித்த வினோதமான எண்ணங்கள் தோன்றின. நிலச்சரிவு, பரிணாமச் சுவடுகள், இச்சை இம்மூன்றிலுமே ஒரே குணவியல்பு கொண்டவன் எங்கோ சென்று கொண்டே இருக்கிறான். எதை நோக்கி என்பதன்றி கால்கள் நகருமிடந்தோறும் புதிய அனுபவங்கள் திகைக்க வைக்கின்றன. விசித்திரமான ஒன்றுக்கொன்று தொடர்பற்ற கண்ணிகளால் புனையப்பட்ட, நேர்மாற்றி அமைந்த காலத்தில் நிகழ்வனவாக உள்ளன இக்கதைகள். இக்கதைகளில் சில படிமங்கள் வலுவாக வெளிப்பட்டிருக்கின்றன.

எங்கேனும் தங்கியபடி அலைந்தபடி விட்டேற்றியாக யாருடனும் எதனுடனும் ஒட்டாமல் சுற்றும் இளைஞன் ஒருவன் இவரது உலகில் அவ்வப்போது தட்டுப்பட்டுக் கொண்டே இருக்கிறான். ‘இணக்கம்’ போன்ற கதைகள் முழுமையாகவே எழுதுகிறவனின் சுய அத்தியாயம் போல இருக்கிறது என்ற யூகத்தை -முழு படைப்புலகத்தையும் இடவலம் வந்துள்ளதால்- எளிதாகவே அடைந்து விட முடிகிறது.

ஏதோ மருள் வந்து அமர்ந்து எழுதியவை எனச் சொல்லிக் கொண்டாலும் கூட அவை அச்சுக்கும் செல்லும் வரை தொடர்ந்துத் திருத்தங்கள் செய்து கொண்டிருப்பது அவரது வழக்கம். அவ்வாறு இருந்தும் சாவகாசமாகத் தொடங்கி மிக அதிகமாக நீட்டி எழுதப்பட்டவையாக, சிலவற்றில் கதைகளுக்குள் நுழைவதற்கே ஒன்றிரண்டுப் பக்கங்களை எடுத்துக் கொள்பவராகவே காணப்படுகிறார். ஒரு குறிப்பிட்ட உலகத்தின் கோணல்களையும் அந்த மனிதர்களின் சிக்கல்களையுமே பெருவாரியாக மீண்டும் மீண்டும் எழுதியவராகவே இராசேந்திரசோழனைக் கருத வேண்டியிருக்கிறது. போலவே பாலியல் சார்ந்த உறவுச் சிக்கல்களை கையாண்டார் என ஒரு குறிப்பிட்டச் சட்டகத்திற்குள் அவரை அடைப்பதும் மிகப் பிழையான அணுகுமுறையே. தன் உலகத்தின் மனிதர்களை அவரே கூறுவது போல உண்மையாக உலவவும் மண்ணின் வீச்சத்தோடு பேசவும் வைத்தவர் அவர். மனிதனைக் குலைக்கும் அடிப்படை இச்சைகளை அவ்வட்டார மொழியின் அத்தனை செழுமைகளையும் உள்வாங்கிய படைப்பு மொழியால் எழுதிக் காட்டியவர். எனினும் தெரியாத உலகத்தை எழுதுவதன் வழியாக அறிந்து கொள்ளும் முனைப்பு அவரிடம் ஒருபோதும் இல்லை. எழுதி உடைத்துச் சென்று அப்படி தெரிந்து கொள்ள முடியும். அதை செய்தவரல்ல இராசேந்திரசோழன். இடையில் அவரது ஈடுபாடுகள் மடைமாற்றம் செய்யப்படாது இருந்திருப்பின் அத்தகைய படைப்புகள் கூட வெளிவந்திருக்கக் கூடும். கவித்துவமோ தத்துவார்த்த வினாக்களோ அவரிடமில்லை. அது அம்மண்ணின் இயல்பு போலும். அவருக்குப் பின் அங்கிருந்து வந்த புனைகதையாளர்களான இமையம், கண்மணி குணசேகரன் போன்றோரிடம் அவற்றைக் காண இயலாது.

முழுத் தொகுப்பிற்கு எழுதிய பின்னுரையில் முழுதாகத் தன்னைத் திறந்து வைப்பராக, தன் படைப்புலகை அலசி ஆராய்ந்து மதிப்பிட்டபடியே ஒரு முழுச்சுற்று வந்து அவர் அளிப்பது ஒருவகையில் ஒப்புதல் வாக்குமூலமே. சுயமதிப்பீட்டை பாரபட்சமற்ற மனதுடன் நிகழ்த்தும் இராசேந்திரசோழன், ஒரு படைப்பாளி செய்யத் தயங்குகிற விஷயமான, தன் கதைகளில் எவை ஆகச்சிறந்தவை, எவை எதற்கான மாதிரி போன்ற பட்டியலை இட்டிருக்கிறார். அப்பின்னுரைக்குப் பின் ஆரம்பநிலை வாசகர் அதே வழித்தடத்தையொட்டியே தன் மதிப்பீட்டையும் உருவாக்கிக் கொள்ளக் கூடும். கண்பட்டைகளை எழுதுகிறவரே வாசிப்பவருக்கு இவ்வாறு அணிவிப்பது சரியானதல்ல. இவரது முக்கியமான கதைகளுள் ஒன்றான ‘சாவி’யையே உதாரணமாகக் கூற முடியும். பெட்டியின் சாவியை உள்ளே வைத்து மனைவி விடுகிறார். கேள்விப்பட்டக் கணவன் உற்சாகமாகத் தன் முந்தைய சாகசங்களை எண்ணியபடியே பலவிதங்களில் திறக்க முயன்றும் முடிவதேயில்லை. அதைத் திறக்க முயற்சிக்குந்தோறும் ஒருவித சவால் மனநிலை உருவாகிறது. சிறிய கம்பி இருந்தால் கூட போதும். ஆனாலும் முடியவில்லை. இப்போது அந்தச் சாவியை மனைவியே கொண்டு வந்து கொடுத்து திறக்கச் செய்துவிட்டால் இந்த முயற்சிகள், பிரயத்தனங்கள் அதன்பிறகு கிட்டும் வெற்றிப்புன்னகை எதுவுமே நிகழாமல் போகக்கூடும். வாசிப்பின் வழியாக அடைய வேண்டியதை, அந்தச் ’சாவி’யை, எழுதுகிறவரே இந்தப் பட்டியலை அளித்ததன் மூலம் விடுகிறார் என்பதே சோகமானது.

பெருந்தொகுப்பாக ஒரு படைப்பாளியின் மொத்தக் கதைகளையும் கொண்டு வரும் போது இரு பாகங்களாக வெளியிடுவதே சிறந்ததாகும். பல வித சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதுவும் இரண்டிற்கும் மேற்பட்ட தடவைகள் அதற்குள் கிடக்க நேர்ந்தால் பலவீனமானவர்களின் எலும்புகளுக்கும் தசைகளுக்கும் வைத்தியச் செலவு வரக்கூடும்.

அவருடைய பழைய ஆனால் சாயம் போகாத இன்றளவும் எடுத்தாளத் தகுதி கொண்ட வரிகளோடு இக்கட்டுரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்.

’இலக்கியம் என்பது வாழ்க்கையிலிருந்து தோன்றியது. வாழ்க்கையைக் கண்டறிந்து சொல்வது, மனித ஆளுமையையும் வாழ்க்கையையும் மேம்படுத்திக் கொள்ள உதவுவது’. இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ‘இலக்கியமென்பது மனித அகங்களில் ஊடாடி அதைப் பாதிப்பது’. இத்தகைய தீர்க்கமான பார்வை கொண்ட… என எழுதிக் கொண்டிருக்கும் போதே, அவரது படைப்புலகிலிருந்து எழுந்து வந்து ஒரு பெண் பாத்திரமொன்று, ’என்னா டேய்…எப்பத் தான்டா முடிப்ப..சும்மா வளத்திக்கினே போறியே இப்ப தான்..ரவ வுடுறானானு பாரு..வூட்ல ஒன்ன தேடமாட்டாங்கோ..!’ என வெடுக்கென்று கேட்கிறது. அதைக் கண்டு கொள்ளாதே என கண்ஜாடையில் உணர்த்தும் அவளது கணவனோ ‘ரவ வந்துனு போ..’ என சீட்டாட இடம் தந்து என்னை அழைக்கிறார். இருங்கள், ஒரு கை பார்த்துவிட்டு வருகிறேன்.

உதவியவை :

1. இராசேந்திரசோழன் கதைகள் – இராசேந்திரசோழன் – தமிழினி வெளியீடு’

2. இராசேந்திர சோழன் நேர்காணல் – காலச்சுவடு இதழ்40 (மார்ச்-ஏப்ரல் 2002)

3. இராசேந்திர சோழன் நேர்காணல் – விகடன் தடம் இதழ் ஆகஸ்ட் 2019.

4. நாடு விட்டு நாடு – முத்தம்மாள் பழனிச்சாமி- தன்வரலாறு – தமிழினி வெளியீடு.

5. சிறகுகள் முறியும் – இராஜேந்திர சோழன் – குறுநாவல் – முதல் பதிப்பு 1988. , சரவண பாலு, விழுப்புரம்.

6. மகாலட்சுமி – இராஜேந்திர சோழன் – குறுநாவல்களின் தொகுப்பு – தமிழினி வெளியீடு.

7. சீட்டாட்டக் கலைஞன் – குறுநாவல்களின் தொகுப்பு – தமிழினி வெளியீடு.

 

***

~கே.என்.செந்தில்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Please follow and like us:

1 thought on “இச்சையின் வடிவங்கள் – கே.என். செந்தில்

  1. பிரமாதமான கட்டுரை. கட்டுரைக்கான வாசிப்பு பிரம்மிக்க வைக்கின்றது. ஒரு முனைவர் பட்ட ஆய்வேடாகும் அளவிற்கான உழைப்பு. very sincere attepmt. இப்படித்தானே ஆசிரியர்களுக்கு மரியாதை செய்ய இயலும்?!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *