“ஏண்டி, கௌசி.”
“என்னம்மா?”
“இனிமேயானும் உங்க பெரிய மாமியார் அவ பொண்ணோட போவளா, இல்ல இங்கியேதான் இருக்கப் போறாளா?” பெரியப்பாவின் வருஷாப்திகத்திற்கு வந்திருந்த என் மாமியார் குரல் கிசுகிசுக்கிறது.
“ஐயோ அம்மா, சும்மாரு. யார் காதிலயாவது விழப் போறது” என்றாள் கௌசல்யா.
“வருஷாப்திகம்தான் முடிஞ்சாச்சே. இன்னும் என்ன? அவளுக்குனு யாரும் இல்லாட்டா சரி. அதான் பொண்ணு இருக்காளே?”
“அம்மா” கௌசல்யா குரல் சற்று ஓங்கியது. “நோக்கு பெரியம்மாவ பத்தி ஒண்ணும் தெரியாது.”
வாஸ்தவம்தான். பெரியம்மாவை பற்றி யாருக்கும் தெரியாது. எனக்கே வயது ஏறஏறத்தானே புரிந்தது!
எனக்கு ஐந்து வயதிருக்குமா? தெருவில் விளையாடிக் கொண்டிருந்தவனை சாந்தி அக்கா வந்து அழைத்தாள். “கண்ணா, ஒன்ன ஆத்துல கூப்டறா.”
வாசல்ல என்ன கூட்டம்? அப்பா ஏன் இப்படி ரேழில படுத்திண்டிருக்கா?
“சே, இந்த வயசுல இந்த பிள்ளைக்கு இப்படி விதிச்சுட்டானே!”
“இன்னும் பூணல் கூட போடலையே, யார் காரியம் பண்ணப் போறா?”
“அவன் பிள்ளை கிட்டேர்ந்து புல்ல வாங்கி பாஷ்யம்தான் பண்ணணும். வேற யார் இருக்கா?”
என்ன பேசறா? உள்ள யார் அழறா?
என்னை கண்டதும் அழுகை குரல் வலுத்தது. அம்மா ஒரு மூலையில் அமர்ந்திருந்தாள். நான் அருகே சென்றதும் என்னை கட்டிக்கொண்டு கதறினாள்.
யார் யாரோ வந்துகொண்டே இருந்தார்கள். ஊரிலிருந்து மாமாவும் மாமியும் வந்தார்கள்.
மாமி பொதுவாக “என்னாச்சு?” என்றாள்.
“குளிச்சுட்டு வந்தவன் மார் வலிக்கறது தீர்த்தம் குடுன்னு கேட்டிருக்கான். கொண்டு வர்றதுக்குள்ள ப்ராணன் போயிடுத்து” யாரோ பதில் சொன்னார்கள்.
அதன் பின் காரியங்கள் வெகு வேகமாக நடந்தன. என்னை குளிக்க வைத்தார்கள். ஈரத் துண்டுடன் நிற்பது குளிர் எடுத்தது. பெரியப்பாவும் ஈர வேஷ்டியுடன் வந்தார். வாத்தியார் மாமா சொல்லச் சொல்ல கூடவே அவரும் மந்திரங்கள் சொன்னார். உள்ளே புதிதாக ஒருவர் வரும்போதெல்லாம் அழுகை எழுவதும் தணிவதுமாக இருந்தது.
“பொம்மனாட்டிகள் எல்லாம் வாங்கோ.” வாத்தியார் மாமா குரல் கொடுத்தார். எல்லோர் கையிலும் அரிசி கொடுத்தார். அவர்கள் அப்பாவின் வாயில் அரிசியை போட்டுவிட்டு சுற்றி வந்து சேவித்தார்கள்.
அம்மா சேவித்தபோது அப்படியே மயங்கி சரிந்துவிட்டாள். அத்தையும் பெரியம்மாவும் தாங்கிப் பிடித்துக் கொண்டார்கள். பெரியம்மா அம்மா அருகிலேயே இருந்தாள்.
மறுநாள் வீட்டு வாசலில் ஒரு ஓலைக் கொட்டகை போட்டார்கள். தினமும் அங்கே காலையிலும் மாலையிலும் ஏதேதோ செய்தார்கள்.
ஒருநாள் எனக்கு புதுத்துணிகள் போட்டுவிட்டார்கள். ஏனென்று தெரியவில்லை. அக்காவிடம் கேட்டதற்கு “இன்னிக்கு சுபசுவீகாரம்” என்றாள்.
“அப்படினா?”
பதில் சொல்லும் முன் யாரோ அழைக்க அவள் நகர்ந்து போனாள்.
அன்று சாப்பிட்டு முடிந்தவுடன் மாமாவும் மாமியும் கிளம்பினார்கள்.
அம்மா “அண்ணா” என்று அழைத்தவுடன் மாமி “உன் பிள்ளை மொகத்த பார்த்துதான் இந்தாத்துல எல்லாரும் துக்கத்த ஆத்திக்கணும். நாங்க கூப்டாலும் உன்ன விடவா போறா? இது உன் அகமில்லயா. என்ன இருந்தாலும் நாங்க வேத்து மனுஷாதானே?” என்றாள். மாமா ஒன்றும் கூறாமல் மாமியின் பின் சென்றார்.
மாலையில் பெரியம்மா அத்தையிடம் “அக்கா, உங்களண்ட ஒரு விஷயம் சொல்லணும்…” என்றாள்.
“என்னடி?”
“அன்னிக்கு ஜானகம் மயங்கி விழுந்தாளே, ஞாபகமிருக்கா?”
“ஆமா.”
“அது… அது துக்கத்துனால மட்டுமில்ல.”
“என்னடி சொல்ற?”
“ஆமாங்க்கா, அவளுக்கு நாள் தள்ளிப் போயிருக்கு.”
“பெருமாளே! ஏன் இப்பிடி சோதிக்கற? இந்த ரெண்டுமே அனாதயா நிக்கறது” என்றவள் குரல் தாழ்த்தி “அவ என்ன சொல்றா? எள்ள இடிச்சு குடுத்துடலாமா?” என்றாள்.
“ஐயோ, அக்கா!” பெரியம்மா அலறிவிட்டாள். “சிசுஹத்தி மஹா பாவமில்லையா! குடுத்த பகவான் அதுக்கும் வழி பண்ணுவான்.”
“அதுக்கில்லைடி, பாஷ்யம்…”
“இல்லக்கா, வாண்டாம்” என்று பெரியம்மா முற்றுப்புள்ளி வைத்துவிட்டாள்.
வரவர பெரியப்பா ரொம்ப கோச்சுக்கறா. இல்ல நேக்குத்தான் அப்படி படறதா?
அவருடைய திருமண் பெட்டியை தொட்டுவிட்டேன் என்று ஒருநாள் அடி. விளையாட்டில் சட்டை கிழிந்துவிட்டது என்று இன்னொரு நாள். அம்மா ஏதும் பேசமாட்டாள். கண்ணீர் வழிந்துகொண்டே இருக்கும். அவர் வெளியில் கிளம்பும்போது ஒரு நாள் அம்மா எதிர்ப்பட்டுவிட்டாள்.
“அறிவுகெட்ட முண்ட, மூலைல கிடந்து ஒழிய வேண்டியதுதானே! உம்மூஞ்சில முழிச்சா போற காரியம் உருப்படுமா?”
“ஏன்னா இப்பிடி பேசறேள்? வாண்டாம்னா, வயத்துப்பிள்ளக்காரி.”
“வாய மூடு, நாயே. நீ குடுக்கற எடந்தாண்டி அந்த தொடகாலிக்கு. ஆம்படையான் போனப்பறம் அவளுக்கு இங்க என்ன இருக்கு? பொறந்தாத்துக்கு போக வேண்டியதுதானே?”
ஒரு நாள் பெரியம்மா பக்கத்து ஊருக்கு தன் பிறந்த வீட்டிற்கு கிளம்பினாள்.
“ஜானகம், ஒரே நாள் போயிட்டு வந்திடறேன். நான் வர்றதேயில்லன்னு அப்பா ரொம்ப வருத்தப்பட்டு கடுதாசி போட்டிருக்கார்.”
அம்மா தலையை மட்டும் அசைத்தாள்.
இரவில் எதோ பேச்சுக் குரல் கேட்டு விழித்துக்கொண்டேன்.
அம்மா எங்க? பெரியப்பாவா அது? அம்மா கிட்ட சிரிச்சு பேசறாரே! சிரிச்சா பெரியப்பா ரொம்ப அழகு! ஆனா இப்போல்லாம் என்னையும் அம்மாவையும் பாத்தாலே அவர் கோவப்படறார்! அம்மா ஏன் சொவரோட சொவரா நகந்து போறா? மேலேர்ந்து என்ன எடுக்கறா? அருவாமணை! இப்போ அது எதுக்கு? பெரியப்பா என்ன கத்தறா? ஏன் விருட்டுன்னு திண்ணைக்கு போறா? ஐயோ! அம்மா அருவாமணையோட என் கிட்ட வர்றா! ஏன் அழுதுண்டிருக்கா?
“அம்மா! அம்மா!”
“அம்மா, பேசுமா. எனக்கு பயமாயிருக்குமா!”
மௌனமாக என்னை மடியிலிட்டு தட்டிக்கொடுக்கிறாள். அம்மாவை இறுக்கியபடி தூங்கிவிட்டேன்.
கண் விழித்தபோது அம்மாவை காணவில்லை. குளிக்கப் போயிருப்பாள்.
வாசலில் ஏதோ சத்தம் கேட்கிறது. நாலைந்து பேர் பெரியப்பாவிடம் ஏதோ சொல்கிறார்கள். பெரியப்பா அப்படியே திண்ணையில் அமர்ந்துவிட்டார். அவர்கள் மேலும் ஏதோ சொல்ல அவர்களோடு போய்விட்டார்.
“அம்மா!”
அம்மா எங்க? கொல்லைலயும் திருமாப்படிலயும் இல்ல. எங்க போய்ட்டா?
“அம்மா!”
வாசலுக்கு நான் செல்லும் முன் யாரோ உள்ளே வந்தார்கள். அத்தை!
“அத்தை, அம்மாவ பாத்தியா? உள்ள காணுமே?”
ஒன்றும் கூறாமல் அத்தை என்னை சேர்த்து அணைத்துக்கொண்டு விம்மினாள். அண்டை வீடுகளில் உள்ளவர்களெல்லாம் வர ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் யாரையோ தூக்கிக்கொண்டு வந்தார்கள். அன்று அப்பா படுத்திருந்தது போலவே படுக்க வைத்தார்கள்.
யாரு? அம்மா! ஆனா அம்மா மொகம் ஒடம்பெல்லாம் ஏன் உப்பிப் போயிருக்கு?
“அம்மாக்கு என்னாச்சு, அத்தை?”
அத்தை வாய் பொத்தி அழுதாள்.
“ஏன் எல்லாரும் அழறா? அம்மா ஏன் இப்படி ரேழில தூங்கறா?”
“அத்தை, ஏன் ஒண்ணும் சொல்லமாட்டேங்கற? அம்மாவையும் அன்னிக்கி அப்பாவ கொண்டுபோன மாதிரி கொண்டு போயிடுவாளா?”
அத்தையிடம் பெரும் கேவல்தான் பதிலாகக் கிடைத்தது.
பெரியம்மா வந்துவிட்டாள். அத்தையின் அருகே அமர்ந்து சிலை போல இருந்தாள். மாமாவும் மாமியும் கூட வந்துவிட்டார்கள். மாமா வாயில் துண்டு புதைத்து குலுங்கிக் கொண்டிருந்தார்.
மீண்டும் குளியல், ஈரத் துண்டு, வாத்தியார் மாமா, மந்திரம். அம்மாவையும் கொண்டுபோய் எரித்தாயிற்று.
வீட்டிற்குத் திரும்பிய பின் மாமா பெரியப்பாவிடம் ஏதோ கேட்டார்.
“ஏன்? அன்னிக்கே உன் கூடவே அழைச்சிண்டு போறதுக்கென்ன? பாவம் பாத்து வெச்சு சோறு போட்டதுக்கு நேக்கு நன்னா வேணும். இந்தோ, அந்தத் தொடகாலி பெத்த துக்கிரிய நீயே கூட்டிண்டு போயிடு. நேக்கு பொல்லாப்பு வாண்டாம்” என்று பெரியப்பா இரைந்தார்.
மாமாவை முந்திக்கொண்டு மாமி “நன்னாருக்கே நியாயம்! எங்காத்து பொண்ணே போயிட்டா. எப்படி போனான்னு நாலு பேர் நாலு விதமா சொல்றா. இவருக்கு வேற தங்கைன்னா உசிரு. நான் ஊர்ல போயி இவர தேத்துவேனா இல்ல இந்தப் பிள்ளைய பாப்பேனா? அதோட உங்காத்து வாரிச நாங்க ஏன் கூட்டிண்டு போகணும்?” என்றாள்.
பெரியம்மா “அவன எங்கியும் அனுப்பல. எங்கூடத்தான் இருக்கப்போறான்” என்றாள்.
மாமி “வாங்கோன்னா, நமக்கு இனி இங்க என்ன வெச்சிருக்கு?” என்று பேசியவாறே நடக்க மாமா என் தலையில் கைவைத்து இறுக அணைத்து ஒன்றும் பேசாமல் கிளம்பிப் போனார்.
வாத்தியார் மாமா “ஸ்வாமி, நாள கார்த்தால” என்று தொடங்கியவுடன் பெரியப்பா “ஓய்! அதெல்லாம் ஒண்ணும் வாண்டாம். வந்தவா போனவாளுக்கெல்லாம் காரியம் பண்ண இங்க ஒண்ணும் கொட்டிக் கெடக்கல” என்றார். சட்டென்று ஒரு அமைதி. அத்தை “பாஷ்யம்” என்று எதோ கூற முயல “யாரும் எதுவும் பேச வாண்டாம். அவ புள்ள நாள பின்ன முடிஞ்சா பண்ணட்டும். என்னால முடியாது” என்று கூறிவிட்டார்.
அத்தை மட்டும் அவ்வப்போது வந்து கொண்டிருந்தாள். “அவனண்ட கேட்டியாடி? ஏதானும் சொன்னானா?” என்று ஒருநாள் பெரியம்மாவிடம் கேட்டாள். “கேட்டாக்க எரிஞ்சு விழறார். எதோ உத்தண்டமா சொல்லிருப்பார்ன்னு தோணறது” என்றாள் பெரியம்மா. “என்ன பாவத்த தேடி வெச்சிருக்காரோ தெரியல.”
கேட்டுக்கொண்டே வந்த பெரியப்பா “ஆமாண்டி, நான் பாவம் தேடி வெச்சிருக்கேன். நீதான் இந்த துக்கிரிய கட்டிண்டு அழறியே, பாபவிமோசனம் கெடச்சிடும்” என்று என்னை ஓங்கி அறைந்தார்.
“ஐயோ, அம்மா!” என்று வலியில் அலறினேன். மீண்டும் ஓங்கிய கையுடன் பெரியப்பா என்னருகே வர எங்கிருந்தோ அக்கா ஓடி வந்தாள்.
“டேய்!”
“சாந்தி!” பெரியம்மா தன் மகளை அழைக்க அவள் காதில் வாங்காமல் பெரியப்பாவின் குடுமியைப் பிடித்து சுவரோடு மோதினாள்.
அக்காவுக்கு எப்படி இத்தன பலம்! குரல் வேற மாதிரி இருக்கே!
“டேய்! எங்கொழந்தைய தொட்ட கொன்னுடுவேன்! நீ சொன்னத நான் கேக்கல்லேனா என்ன செய்வேன்னு சொன்ன? தைரியம் இருந்தா இப்போ சொல்லேன் இவா எதிர்ல!”
பெரியப்பா வெகுவாக வியர்த்துக் கொண்டிருந்தார்.
“ஜானகம்!” அத்தை மெல்லிய குரலில் கூப்பிட்டாள்.
ஏன் அம்மா பேர் சொல்லி கூப்படறா?
“ஆமா, ஜானகம்தான். அக்கா, உன் ஆத்து வாசல்ல நித்யம் ராத்திரி ஒரு சொம்பு தீர்த்தம் வை! நேக்கு ஒரே தாகமா இருக்கு.”
“வெக்கறேண்டி. சாந்தி சின்ன கொழந்த. அத விட்டுடுடி.”
“எங்கொழந்தைய ஒண்ணும் பண்ணக்கூடாதுன்னு அவனண்ட சொல்லு!”
“நான் சொல்றேன். அவன் இனிமே ஒண்ணும் பண்ணமாட்டான்.”
அக்கா அப்படியே மயங்கி விழுந்தாள். அத்தைதான் அவளுக்கு தண்ணீர் தெளித்து விசிறியால் வீசி மயக்கம் தெளிவித்தாள். பெரியம்மா உறைந்துபோய் அமர்ந்திருந்தாள்.
அதன் பின்னே பெரியப்பா என் பக்கம் அதிகம் வராமலானார். மீறி வந்தால் அக்கா எங்கிருந்தோ வந்துவிடுவாள். அப்படி வரும்போதெல்லாம் அவள் அத்தையின் வார்த்தைக்கு மட்டுமே கட்டுப்படுவாள். அத்தை தினமும் வாசலில் தண்ணீர் வைப்பதும் அது இரவுகளில் காலியாவதும் தொடர்ந்தது.
பெரியம்மா என்னை தன் கண்ணுக்குள்ளேயே வைத்திருந்தாள். நான் ஐந்தாம் வகுப்பு முடித்தவுடன் படிப்பை நிறுத்திவிட பெரியப்பா முயன்றபோது பெரியம்மா சம்மதிக்கவில்லை. பெரியம்மா அவரிடம் பேசுவதே கிடையாது. ஆனால் என் விஷயத்தில் அவர் தலையிட்டால் அவள் பார்க்கும் ஒரு பார்வையில் வாயடைத்துப் போவார். இப்பொழுதும் அதுதான் நடந்தது.
ஆனால் அவர் என்னை தனியே பிடித்து “தோ பாருடா, நீ மேல படிக்கணும்னா நம்ம கிராமத்துல வசதியில்ல. டவுனுக்குப் போகணும். அதுக்கெல்லாம் நெறைய செலவாகும். உங்கப்பனா சம்பாதிச்சு வெச்சிருக்கான்? என்னால முடியாது. அதனால நீயே உன் பெரியம்மாகிட்ட ஒனக்கு மேல படிக்க இஷ்டமில்லன்னு சொல்லிடு. புரியறதா? இல்லன்னா அறைஞ்சே கொன்னுடுவேன். போ, போய் சொல்லு” என்று பிடரியில் கைவைத்து தள்ளினார்.
நான் பெரியம்மாவை நோக்கி செல்லும்போதே என் பின்னால் கலவரமான சத்தம் கேட்டது. பெரியம்மாவும் ஓடோடி வந்தாள். அக்கா கொத்தாக பெரியப்பாவை தூக்கி பிடித்திருந்தாள். நான் வழக்கம்போல அத்தையை அழைத்துவர ஓடினேன்.
நானும் அத்தையும் உள்ளே வரும்போது அக்கா பெரியப்பாவை இழுத்துக்கொண்டு வாசலை நோக்கி வந்துகொண்டிருந்தாள்.
“ஜானகம், என்னடி பண்ற?”
“எந்த கெணத்து பக்கமே வராம இவன் ஊர சுத்திண்டு சுத்திண்டு போறானோ அதே கெணத்துல இவன கொண்டு அமுக்கப் போறேன்.”
“வேண்டாம். சொன்னா கேளு! என்ன விஷயம் சொல்லு. நான் நடத்தி தரேன். என் மேல நம்பிக்கை இல்லியா நோக்கு?”
“நான் கேக்க மாட்டேன். இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு பாத்திடறேன்.”
எதிர்பாராமல் பெரியம்மா பேசினாள். “அக்கா, விடுங்கோ அவள.”
“போடி, கொண்டு போ இந்த மனுஷன. உன் பழிய தீத்துக்கோ. ஒனக்காக நான் அவருக்கு குடுத்திருக்க தண்டனை காணாதுதான். நீயே சரியானபடி குடுத்துடு. நீ நின்ன அதே நெலமைல நானும் நிக்கறேன். உன்ன மாதிரியே நானும் போய் கெணத்துல குதிக்கறேன். ஆனா ஒண்ணு, இந்தக் கொழந்தைகள் ரெண்டையும் அனாதையா விட்டுட்டு போமாட்டேன். என்னோட சேத்து கொண்டு போயிடுவேன்.”
அக்கா அசையாமல் நின்றாள். அவள் பிடி தளர்ந்தது. பெரியம்மாவையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். பின்னர் தளர்ந்து மயங்கி விழுந்தாள்.
நான் டவுனுக்கு படிக்கச் சென்றேன். அங்கே பெரியம்மா தன் சித்தப்பா வீட்டில் என்னை தங்க வைத்தாள். “கண்ணா, படிப்பு ஒண்ணுதான் ஒனக்கு கவனம் இருக்கணும். நீ கலெக்டர் ஆகணும். கேட்டியா?” என்னை அங்கே விட்டுவிட்டு கிளம்பும்போது பெரியம்மா சொன்ன இந்த வார்த்தைகளும் அவள் கண்களில் அப்போது தோன்றிய உணர்வுகளும் என் மனதில் ஆழப் பதிந்தன.
நான் நன்றாகப் படித்தேன். என் தகுதியால் தொடர்ந்து எனக்கு ஸ்காலர்ஷிப்பும் கிடைத்தது. பெரியம்மா சொன்னபடியே சிவில் சர்வீஸுக்கு தேர்வானேன்.
முதல் சம்பளத்தை கையில் கொடுத்து நான் சேவித்த பொழுது சிரிப்பும் அழுகையுமாக என்னை கட்டிக்கொண்டாள். நடுவில் அக்காவின் திருமணமும் முடிந்திருந்தது. டவுனில் இருந்த தன் சித்தப்பாவின் பிள்ளைக்குதான் அக்காவை மணம் முடித்திருந்தாள்.
“பெரீம்மா, நான் வேல பாக்கற எடத்துல தங்கறதுக்கு நேக்கு பெரிய பங்களா குடுத்திருக்கா. அக்கா கல்யாணமும்தான் முடிஞ்சாச்சே, நீ என்னோட வந்துடு.”
“வேண்டாண்டா கொழந்தே, நீ சொன்னதே போறும். நீ க்ஷேமமா, ஆயுசோட இரு. இவர விட்டுட்டு நான் எப்படி வர முடியும்?”
“யாரு விட்டுட்டு வரச்சொன்னா? கூட்டிண்டே போவோம்.”
“கண்ணா, கழுத்த நீட்டின பாவத்துக்கு நான் இவரோட இருக்கணும். நீ…”
“பெரீம்மா, ஒனக்காக எது வேணா செய்யலாம். இவர கூட வெச்சுக்க முடியாதா?”
பெரியம்மா முகத்தில் பெருமிதம், வியப்பு, துக்கம் எல்லாம் கலந்து தோன்றின. இன்று வரை பெரியம்மா எங்களுடன்தான் இருக்கிறாள். அக்காவிற்கு அதில் கொஞ்சம் வருத்தம் உண்டு.
“ஒரு நாலு நாள் வந்து எங்களோட இருக்கப்பிடாதா? அவந்தான் அப்பிடின்னா நீ ஜாடிக்கேத்த மூடி!” என்று கௌசல்யாவிடம் செல்லமாக கோபிப்பாள். புன்சிரிப்பே அவளுக்கான பதில்.
“கௌசி”
இதோ, பெரியம்மா அழைக்கிறாள். அவள் குரல் ஓயும் முன்னே “என்ன, பெரீம்மா?” என்று கௌசல்யா அவள் முன் நின்றிருந்தாள்.
***
-சுதா ஶ்ரீநிவாசன்
சுதாம்மா… கலங்க வைத்து விட்டீர்கள்… அருமையான கதை
நல்ல கதை சுதாம்மா. வாழ்த்துகள்
பெண்களின் வாழ்க்கை துயரங்கள் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்க பட்டுள்ளது.
Great smt. Suthasrinvasan
ஜெயமோகன் குறிப்பீட்டால் இந்த கதையை படித்தேன். மனதை தொட்டது. மீண்டும் நிறைய எழுதுங்கள். நன்றி.