(1). செயல் திட்டம்
அவனை பல மணி நேரம் விசாரித்தார்கள்.
அவன் உண்மையில் யார் ? அவன் தான்
யார் என்பதைச் சொன்னான், பின் மறுபடி விசாரித்தார்கள்,
அவன் இதில் சம்பந்தப்பட வில்லை என்று
உறுதி செய்து கொண்ட பின் அவனுடைய விரல் நகங்களை
பிடுங்கி எடுத்தார்கள்.பின்
அவனை குதிரை லாட வளைவிற்கு பக்கத்தில் உள்ள காலி
மனைக்கு கூட்டிச் சென்றார்கள்.
அவன் யார் என்பதை அவனிடம் சொன்னார்கள்.9 முறை
சுட்டார்கள்.
தொப்புள் கொடி போல, எரியும் டயர்களிலிருந்து
கரும்புகை வான் நோக்கி எழும்பியது.
அவன் நுகர்ந்த துர்நாற்றம் அவனிடமிருந்து தான் வந்தது.
உடைந்த கண்ணாடி துண்டுகள்,
முடிச்சிட்ட ஆணுறைகள்,
நைலான் காலுறையில் எலும்புகள்,
துருத்திகொண்டிருக்கும் ஒரு முகம்.
க்லாட்ஸ்டன் மதுகூடத்தில் அவனுடைய சீரான
அழகான அழுக்குபடிந்த கைகளால் , பைண்ட் பைண்டாக
மது அளந்து கொடுப்பதை நான் பார்த்ததுண்டு.
(2). கூட்டுமுயற்சி .
மழித்த தலையுடன் தெருத்தெருவாக நான்
இழுத்துச் செல்லப் படுகிறேன்.
இந்த தண்டனை பெற என்ன குற்றம் புரிந்தேன்
என்று நினைவில் இல்லை .
என்னை வேசி என்றும் ஒழுக்கமில்லாதவளென்றும்
காறி உமிழும் பெண்கள் இருமருங்கும் குற்றம் சாட்ட,
தடுமாறியபடி நடுவில் செல்கிறேன்
என்ன கதைகள் சொன்னேன், எத்தனை பொய்கள் ?
எத்தனை பேரைக் காட்டிக் கொடுத்தேன்? எத்தனை
ஆண்களுடன் கூடி இருந்தேன்? என்ன செய்தேன்?
பாரீஸ் நகரத்தின் நிலத்தடி இடுகாடுகளில் , என்
கைகளில் முட்கம்பிகளை வைத்து அழுத்துகிறார்கள்
காயங்கள் ஆறிய பின் உள்ள தழும்பு க் கோடுகளைச்
சுட்டிக் காட்டி ” மனதால் நினைவால் சிந்தனையால்
ஏற்பட்ட இவ்வரிகள் கண்டிப்பாக ஒரு துரோகியின்
உள்ளங்கையாகத் தானிருக்கும்” என்று
அறுதியிட்டு கூறுகிறார்கள்.
நீ கண்விழிக்கையில் உன்னை இறுக்கமாக பிடித்துக்
கொள்கிறேன்.இது வெறும் கனவு தான் என்கிறேன்
கனவின் மொழிக்கும் வாழ்வின் மொழிக்கும்
தொடர்பில்லை என்கிறேன் .
நீ மறுபடி கண்மூடி தூங்கிய பின் என் வார்த்தைகளால்
உனக்கு துரோகம் இழைத்ததைப் போல உணர்கிறேன்.
(3) பெல்ஃபாஸ்ட் கொண்டாட்டத்தில் பெய்த காகித மழை
(அல்லது ) நாட்டு வெடிகுண்டுகள்.
யாரும் எதிர்பாராமல், கலகத்தை அடக்க பிரத்யேக ராணுவம்
அழைக்கப்பட்டது, ஆச்சரிய குறிகள் மழையாய் பெய்தன
ஆணிகள், போல்ட்டுகள் , கார் சாவிகள், உடைந்த
எழுத்துருக்களும் சேர்ந்து பொழிந்தன
ஒரு பெருவெடிப்பு– அது வரைபடத்தில் இடப்பட்ட
ஒரு நட்சத்திர குறியல்லாது வேறொன்றுமில்லை.
இந்த சிறுக்கோட்டு வரியும் கூட ஒரு விதத்தில் தோட்டாமழை தான்.
மனதில் ஒரு வாக்கியத்தை முடிக்க முயன்றேன்
அது திக்கிக் கொண்டிருந்தது.
எல்லா பாதைகளும் , சந்துகளும்
நிருத்தக் குறிகளாலும், அரைப் புள்ளிகளாலும்
அடைக்கப்பட்டிருந்தன.
இந்தச் சிக்கலான வழிகளை நான் நன்கறிவேன்.
பல்க்லாவா, ரக்லன், இன்டர்மன்,
ஒடிஸ்ஸா தெரு….
என்னால் ஏன் தப்ப முடியவில்லை?
என் ஒவ்வொரு நகர்வும் நிருத்தக் குறிகளால்
தடுக்கப்படுகிறது.
க்ரிமியா தெரு — மறுபடி ஒரு முட்டுச் சந்து.
ஒரு இஸ்லாமியன், கம்பி வலைகளின் கண்ணி,
உறுதியான முகக் கவசங்கள், நடைபேசிகள்
எல்லாம் கடந்த பின்…
என் பெயர் என்ன?
எங்கிருந்து வருகிறேன் ?
எங்கே போகிறேன்?
குண்டு மழையைப் போல பொழியும் கேள்விக் குறிகள்.
(4). பயம்
முடிவற்ற யுகத்தின் எல்லையில்லா பரிமாணங்களைக்
கண்டு பயம் எனக்கு
நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையிலுள்ள
இடைவெளி கண்டு பயம்,
இந்தக் கொலைகாரப் பிரச்சாரம் துவங்குவதைக்
கண்டு பயம்
தேநீர் அதிகம் அருந்தியதால் உண்டாகும் பதற்றம்
எனக்கு பயமளிக்கிறது.
தற்காலிகமாக ஐரிஷ் படையில் சேர்ந்த கொள்ளைக்
காரர்கள் துப்பாக்கியை நீட்டுகையில் பயம்,
அமில மழையை புத்தகங்கள் தாங்காதென்ற பயம்,
வரை கோல், கரும்பலகை, பிரம்பைக் கண்டு பயம்,
அரத்தமற்ற வார்த்தைகளைக் கண்டு பயமெனக்கு.
நடுவரின் மோசமான தீர்ப்பைக் கண்டு பயம்,
மனப்பிறழ்வு என்று சாக்கிட்டு , குற்றத்தை
ஒப்புக்கொள்ள வைத்துவிடுவார்களோ என்ற பயம்,
வழக்கறிஞரின் கட்டணம் பயமளிக்கிறது.
என் மூளையை ஆக்கிரமித்துள்ள விபத்துகளை
உண்டாக்கும் குட்டிச்சாத்தான்களைக் கண்டு பயம்,
உத்திரவாதப் பத்திரத்தில் அச்சிடப்பட்டுள்ள சிறிய
எழுத்துருக்களைக் கண்டு பயம்,
வேறென்ன பயங்கள் எனக்கு?
மறுபடி முதலிலிருந்து தொடங்கலாம் வாருங்கள்.
(5). பிரச்சாரம்
துவக்கு வெடிக்கிறது
குதிரைகள் விழுகின்றன
காகம் கண்களை கொத்துகிறது
காலங்கள் நகர்ந்தன
விழிப்பள்ளத்திலிருந்து ஒரு
பட்டாம்பூச்சி ஊர்ந்து வெளி வருகிறது.
(6). முற்றுகை
செவாஸ்டபோலிற்கு
செல்லும் பாதை
வட்ட தோட்டாக்களால்
பாவப்பட்டிருக்கிறது.
செவாஸ்டபோலிலிருந்து
வரும் பாதை
காலில்லாத சாபாத்துகளால்
பாவப்பட்டிருக்கிறது.
(7). இது
நீங்கள் பயம் கொள்ளும் அளவு
என்றைக்குமே நேரம்
கடந்து விடவில்லை.
சின்னஞ்சிறு நேரங்கள் வளர்ந்து
முடிவிலிகளை அளக்கும்
தசாப்தங்களாகும் என்றோ
அஸ்தமனங்கள் வளர்ந்து
முதல் பறவையின் கீச்சு கீச்சாகும்
என்றோ நம்புகிறீர்கள் தானே.
(8). அடையாளச் சீட்டு
உன் மணிகட்டைச் சுற்றியிருந்த
அடையாளச் சீட்டில்
உன் பெயர்
பிறந்ததேதி இருந்தது.
இருவாரங்கள் கழித்து
14 பௌண்ட் இடை
குறைந்து நீ வீட்டிற்கு
வந்த அன்று , அதை வெட்டி
எடுக்க தேவையற்று
தானே கழன்று வீழ்ந்தது.
(9) புரட்சி
துவக்குகளின் வெடிப்பொலியில்
பார்வையற்றவனால் மட்டுமே
தன் கைத்தடியின் ஓசையை
கேட்க முடிகிறது
கலகக்காரர்கள் திரளாக நிறைந்த
இத்தெருக்களின் ஊடாக
டக் டக் டக் என்று தட்டிக்கொண்டே,
தோட்டாக்களை அச்சில் வார்க்கும்
அச்சகம் நோக்கிச் செல்கிறான்.
கியாரன் கார்ஸன் பற்றிய குறிப்பு.
கியாரன் ஜெரார்ட் கார்ஸன் மேற்கு அயர் லாண்டில் பெல்ஃபாஸ்ட்
நகரில் பிறந்த கவிஞர், நாவலாசிரியர் மற்றும் இசையமைப்பாளர் .
இவரது குடும்பம் ஐரிஷ் மொழி பேசும் சிறுபான்மை இனம்.அப்பா
தபால்காரராகவும் அம்மா மில்லிலும் வேலை பார்த்த சாதாரண பின்னணியிலிருந்து வந்தவர்.70 80 களில் அயர் லாண்டெங்கும்
மனைவியுடன் பயணம் செய்தார். பப்களிலும் சிறு கூடுகைகளிலும்
இவர் புல்லாங்குழல் வாசிக்க இவரது மனைவி வயலின் வாசிக்க
ஒரு நாடோடி வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.
இத்தொடர் பயணங்களில் தம் இன மக்கள் ஆங்கிலம் பேசும்
பெரும்பான்மை மக்களால் ஒடுக்கப்படுவதையும் அதை சார்ந்து
தொடர்ந்து நடந்து வந்த உள்நாட்டுப்போரின் தாக்கமும்
இவருடைய எழுத்தில் காணக்கிடைக்கும் . ஐரிஷ் மொழி, ஆங்கில மொழியின் ஆதிக்கத்தால்,
நலிந்துவருவதையும் தம் படைப்புகளில் முன்வைக்கிறார்.
இவர் பாரம்பரிய ஐரிஷ் கதைசொல்லல் முறையை ஆங்கிலத்தில்
அறிமுகப்படுத்தியவர். சோணட் என்ற 14 வரி கவிதைகள் கொண்ட
தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
Shamrock tree என்ற 2001 யில் வெளியான நாவல் பரவலாக
கவனிக்கப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஐரிஷ் கவிஞர்
ப்ரையன் மெரிமென் இன் கவிதைகளை ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்துள்ளார்.
1998 முதல் Seamus Heaney Centre for Poetry இன் இயக்குநராக
பணியாற்றியுள்ளார்.
இவரது கவிதைகள் போர்களத்தையும் மொழியையையும் ஒரே தளத்தில்
வைத்து ஒப்பு நோக்கும் தன்மையது …உ_த… ‘ Belfast Confetti ‘ என்ற
இவரது புகழ் பெற்ற கவிதை ..அது போராளிகள் பயன்படுத்திய நாட்டு
வெடிகுண்டின் பெயரும் கூட.
T S Elliot Prize, Eric Gregory Award, Alice Hunt Bartlett Prize,
Oxford Weidenfeld Translation Prize உட்பட பல விருதுகளைப்
பெற்றுள்ளார்.
2016 யில் பணிஓய்வு பெற்றார். 2019 அக்டோபர் மாதம் தனது 70 ஆவது
வயதில் நுரையீரல் புற்றால் மறைந்தார்.
-எழுத்தாளர் கியாரன் கார்ஸன்
அமரர் மொழி ஒடுக்கப்படுவதை தன் கவிதை வழியாக வெளிப்படுத்துவதும். போரின் வீரியத்தை கவிதையில் ஆழமாக செல்கிறார். மொழிபெயர்ப்பு இயல்பாக இருக்கிறது.
அயரிஸ் மொழி