ஒரு வசந்தகால மழைநாளின் பிற்பகலில் பார்சிலோனாவை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த மரியா லூ செர்வாண்டேவின் வாடகைக்கார் மோனக்ராஸ் பாலைவனத்தில் பழுதடைந்தது. அழகும் அறிவும் நிறைந்த இருபத்திஏழு வயது மெக்சிகப் பெண்ணாகிய அவள் சில வருடங்களுக்கு முன்பு கேளிக்கை அரங்க கலைஞராகச் சற்றுப் புகழும் பெற்றிருந்தாள். ஜரகோசாவில் சில உறவினர்களைச் சந்தித்துவிட்டு, அன்று மாலையில் அவள் தனது கணவனைச் சந்திக்க இருந்தாள். அவன் ஒரு காபரே மாயவித்தைக்காரன். புயலுக்கு நடுவே அவளைக்கடந்து சென்ற கார்களையும் ட்ரக்குகளையும் நிறுத்த ஒருமணிநேரமாக சைகைகள் காட்டி பரிதவித்துக்கொண்டிருந்தாள். இறுதியில் ஒரு பழையபேருந்தின் ஓட்டுநர் அவள்மீது இரக்கம் கொண்டான். ஆனால் தான் நெடுந்தூரம் செல்லப்போவதில்லை எனவும் அவன் எச்சரித்தான்.

“அதனால் பரவாயில்லை. ஒரு தொலைபேசியைக் கண்டடைந்தால் போதும் எனக்கு,” என்றாள் மரியா.  

அது உண்மைதான். ஏழு மணிக்கு முன்பாகத் தன்னால் வீட்டிற்கு வரமுடியாது என்பதைக் கணவனிடம் தெரிவிக்க மட்டுமே அது அவளுக்குத் தேவைப்பட்டது. அந்த ஏப்ரலில் ஒரு மாணவி போல மேலங்கியும் பீச் ஷூவும் அணிந்திருந்த அவள் சின்னாபின்னமடைந்த சிறு பறவை போல் தோற்றமளித்தாள். அந்த எதிர்பாரா இடரினால் அதீத பதட்டமடைந்திருந்த அவள் கார் சாவியைக் கையில் எடுக்க மறந்திருந்தாள். ராணுவத்தின் கண்டிப்பான பாவனையுடன் ஓட்டுநருக்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு பெண் இவளுக்கு ஒரு துண்டையும் போர்வையையும் கொடுத்து தன் இருக்கையில் இடம் அளித்தாள். சிதறியிருந்த மழைத்துளிகளைத் துடைத்து விட்டு அங்கே அமர்ந்த மரியா போர்வையைப் போர்த்திக்கொண்டு சிகரெட்டைப் பற்றவைக்க முயன்றாள். ஆனால் அவளது தீப்பெட்டி ஈரமாக இருந்தது. அருகில் அமர்ந்திருந்த அந்தப்பெண் இவளுக்கு நெருப்பை அளித்துவிட்டு இவளிடம் இன்னமும் நனையாமல் இருந்த சிகரெட்டுகளில் ஒன்றைக் கேட்டாள். புகைத்தபடியே தன் துயரத்தைக் கொட்ட எண்ணிய மரியா மழைச்சத்தத்தையும் பேருந்தின் இரைச்சலையும் மீறத் தன்குரலை உயர்த்தினாள். ஆனால் உதட்டின் மேல் ஆள்காட்டி விரலை வைத்து மரியாவை இடைமறித்தாள் அப்பெண்.

’’அவர்களெல்லாம் உறங்குகிறார்கள்’’ எனக் கிசுகிசுத்தாள். அவளது தோள்பட்டையின் பின்புறம் மரியா எட்டிப்பார்த்தபோது, அறுதியிட முடியாத வயதுகளில் பல்வேறு ஸ்திதிகளில் பேருந்து முழுக்க பல பெண்கள்அவளைப் போலவே போர்வையைப் போர்த்தியபடி உறங்குவதைக் காண முடிந்தது. அவர்களது அமைதி அவளையும் தொற்றிக்கொள்ளத் தன் இருக்கையில் சுருண்டுகொண்டு மழையின் சத்தத்தில் மூழ்கிப்போனாள் மரியா. அவள் எழுந்த போது இருட்டியிருந்தது; கடுங்குளிர்ச்சியான தூறலாக புயல் உருமாறியிருந்தது. தான் எவ்வளவு நேரம் தூங்கினோம், இவ்வுலகின் எந்த இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறோம் என்பது குறித்தெல்லாம் அவளுக்கு எதுவும் புரியவில்லை. அருகில் அமர்ந்திருந்த பெண் மிகுந்த விழிப்புடன் காணப்பட்டாள்.

நாம் எங்கு இருக்கிறோம்?’ என மரியா வினவ

வந்து விட்டோம்,’ எனப் பதிலளித்தாள் அப்பெண். மிகப்பெரிய ஓர் இருண்ட கட்டடத்தின் கல்பாவிய முற்றத்திற்குள் பேருந்து நுழைந்தது, பிரம்மாண்ட மரங்களடங்கிய ஒரு வனத்திற்குள் இருக்கும் பழைய கன்னியர்மடம் போல அக்கட்டிடம் காட்சியளித்தது. அப்பெண்கள் பேருந்தில் அசைவின்றி அமர்ந்திருப்பது முற்றத்திலிருந்த மங்கிய வெளிச்சத்தினூடாகத் தெரிந்தது. ஒரு மழலையர் பள்ளியின் குழந்தைகளுக்கான கட்டளைகள் போன்ற தொனியுடன் அந்தக் கண்டிப்பான பெண் அவர்களைப் பேருந்தில் இருந்து இறங்கும்படி பணித்தார். அவர்கள் அனைவரும் மூதாட்டிகள். சோம்பல்மிகுந்த அவர்களது அசைவுகளை அந்த முற்றத்தின் அரைவெளிச்சத்தில் காணும்போது, கனவில் வரும் உருவங்கள் போல் தோன்றினர். பேருந்திலிருந்து இறுதியாக இறங்கிய மரியா அவர்களைக் கன்னியாஸ்திரிகள் என எண்ணிக் கொண்டாள். பேருந்தின் கதவருகே வந்த சீருடை அணிந்த சில பெண்கள் அவர்களை இறக்கிபோர்வையைத் தலைமேல் ஏற்றிவிட்டு ரே வரிசையாக நிறுத்திய போது மரியாவிற்கு எதுவும் புரியவில்லை. ஒத்திசைவும் கண்டிப்புமான கைதட்டல் ஓசையினால் அவர்கள் வழிநடத்தப்பட்டனர். தன்னுடன் இருக்கையைப்பகிர்ந்து கொண்ட பெண்ணிடம் போர்வையைத் தந்துவிட்டு விடை பெற மரியா எத்தனித்த போது, முற்றத்தைக்கடக்கும்வரை அதை உபயோகப்படுத்திவிட்டு அங்கே உள்ள பொருட்கள் வைப்பு அலுவலகத்தில் அதைத் தந்து விடும்படி அவள் அறிவுறுத்தினாள்.

’’அங்கே தொலைபேசி இருக்கிறதா?’’ என மரியா வினவினாள்.

’’ஆமாம், அவர்கள் அதன் இடத்தை உனக்குக்காட்டுவார்கள்,’’ என அவள் பதிலளித்தாள்.

அவள் இன்னொரு சிகரெட் கேட்டபோது நனைந்திருந்த தன் முழுப்பெட்டியையும் மரியா அவளிடம் தந்தாள். ‘’போகிற வழியில் உலர்ந்து விடும் என்றாள். படியில் நின்றபடி, ‘நலம் பெறுக’ என உரக்கக்கத்திய அப்பெண் வேறெதையும் தொடர்ந்து பேச இயலாதபடி பேருந்து கிளம்பிச்சென்றிருந்தது.

கட்டிடத்தின் கதவைநோக்கி மரியா ஓடத்துவங்கியபோது சப்தமான கரவோசை மூலம் ஒரு தாதி அவளை நிறுத்த முயன்று பின் ‘’நில் என்று சொன்னேன்’’ எனக்கண்டிப்புடன் கத்தினாள். போர்வைக்குள்ளிருந்து நிமிர்ந்துபார்த்த போது, மிகக் கண்டிப்பான இரு விழிகளையும்,தப்பிக்கவே முடியாதபடி வரிசையை நோக்கிச் சுட்டுகிற ஒருவிரலையும் கண்டாள். அதற்கு அடிபணிந்தாள். கட்டிடத்தை அடைந்தவுடன் குழுவிலிருந்து பிரிந்த அவள் அங்கிருந்த பணியாளரிடம் தொலைபேசி எங்கே என வினவினாள். தோளில் லேசாகத் தட்டி அவளை வரிசைக்குத் திருப்பிய ஒரு தாதி இனிமையான குரலில்,

‘’இங்கே அழகி, தொலைபேசிக்கு இவ்வழியாகச் செல்லவேண்டும்’’ என்றாள்.

இருண்ட தாழ்வாரத்தினுள் மற்ற பெண்களுடன் சேர்ந்து நடந்தாள் மரியா. ஒரு பொதுப் படுக்கையறைக்கு எல்லோரும் வந்து சேர்ந்ததும் இவர்களிடமிருந்த போர்வைகளைப் பெற்றுக்கொண்டு ஒவ்வொருவருக்குமான படுக்கையை நிர்ணயித்தனர் தாதிகள். மனிதாபிமானம் கொண்ட மேலதிகாரியாய் இருக்கக்கூடும் என மரியாவிற்குத் தோன்றிய ஒரு ஒரு தாதி வரிசையாக ஒவ்வொரு பெண்ணிடமும் வந்து தனது பட்டியலிலிருக்கும் பெயரோடு அவர்களது சட்டையில் குத்தப்பட்டிருந்த அட்டையில் இருக்கும் பெயர்களை ஒப்பிட்டுச் சரிபார்த்தாள். மரியாவிடம் வந்தபோது அவளிடம் அடையாள அட்டை இல்லை என்பதைக் கண்டு ஆச்சர்யமடைந்தாள்.

தொலைபேசியைப் பயன்படுத்த மட்டும்தான் நான் இங்கு வந்தேன்’’, என்றாள் மரியா.

தனது கார் நெடுஞ்சாலையில் பழுதடைந்த விஷயத்தை மிக அவசரமாக விவரித்தாள். கேளிக்கை நிகழ்வுகளின் மாயவித்தைக்காரனாகிய தன் கணவன் அன்றைய நள்ளிரவிற்கு முன் செல்ல வேண்டிய மூன்று நிகழ்வுகளுக்காக பார்சிலோனாவில் தனக்குக் காத்திருப்பதாகவும், தன்னால் சமயத்திற்குச் சென்று அவனுடன் இணைய முடியாதென்பதைத் தெரிவிக்கவேண்டும் என்றும் கூறினாள். அப்போது கிட்டத்தட்ட ஏழுமணி ஆகியிருந்தது. அவள் இன்னும் பத்து நிமிடத்தில் கிளம்ப வேண்டும் என்றும் இவளுக்குத் தாமதமாவதால் அவன் அனைத்தையும் ரத்து செய்து விடுவானோ எனஅஞ்சுவதாகவும் தெரிவித்தாள். அவள் கூறுவதை தாதி கவனமாகக் கேட்பது போல் தோன்றியது.

’’உன் பெயர் என்ன?’’ என வினவினாள்.

ஆசுவாசமைடந்த மரியா தன் பெயரைத் தெரிவித்தாள். ஆனால் பலமுறை பட்டியலைச் சரிபார்த்தும் அவளால் அதனைக் கண்டறிய முடியவில்லை. துணுக்குற்ற அவள் இன்னொரு தாதியிடம் வினவ அவள் பதிலேதும் கூறாமல் தோள்களைக் குலுக்கினாள்.

ஆனால் நான் தொலைபேசியை பயன்படுத்த மட்டும்தான் இங்கு வந்தேன் என்றாள் மரியா.

’’கண்டிப்பாக இனியவளே,எனக் கூறிய மேற்பார்வையாளர் நம்பமுடியாத அளவு அப்பட்டமான இனிமை கொண்ட குரலில் ‘’நீ நலமாக இருக்கிறாய் என்றால் யாரை வேண்டுமானாலும் அழைக்கலாம். ஆனால் இப்போது வேண்டாம், நாளை’’ என்றபடி அவளைப்படுக்கைக்கு அழைத்துச் சென்றாள்.

பேருந்தில் இருந்த பெண்கள் அனைவரும் ஏன் ஒரு நீர்த்தொட்டியின் அடிப்பகுதியில் இருப்பதுபோல் நடந்தார்கள் என்பதன் காரணம் அப்போது தான் மரியாவிற்குப் புரிந்தது. அவர்கள் அனைவருக்கும் மயக்கமருந்து அளிக்கப்பட்டிருந்தது, தடிமனா கற்சுவரும் இறுகிய படிகளும் கொண்ட அக்கட்டிடம் உண்மையில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மருத்துவமனை. திகைத்த அவள் படுக்கையறையிலிருந்து தப்பியோட முயல, முன்கதவை அடையும் முன்பாகவே பெருத்த உருவம் கொண்ட ஒரு தாதி தன் பெரிய கையினால் அவளைத் தாக்கி தரையில் தள்ளி நகரமுடியாமல் இறுக்கிக் கொண்டாள். அச்சத்தில் செயலற்றுப்போன மரியா பக்கவாட்டிலூடாக அவளைப் பார்த்தாள்.

’’கடவுளின் பொருட்டு கருணை கொள்ளுங்கள். இறந்துபோன என் அம்மாவின் மீது ஆணையாகச் சொல்கிறேன். நான் இங்கே தொலைபேசியைப் பயன்படுத்தத்தான் வந்தேன்.’’

ஆனால் எந்தவிதமான கெஞ்சல்களும் சீருடை அணிந்த அந்த வெறிபிடித்தவளை அசைக்கப் போவதில்லை என்பதை அவளது முகத்தைக் கண்டவுடனேயே மரியா புரிந்து கொண்டாள். தனது அதீதமான வலிமைக்காகவே ஹெர்குலினா என அழைக்கப்படுபவள் அவள்.கட்டுப்பாடிழந்த நோயாளிகளுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த அவளது பனிக்கரடிக் கைகள் தவறுதலாகக் கொலை செய்வதற்குப் பெயர் போனவை. இருவர் அவளால் கொல்லப்பட்டபோது முதல் சம்பவம் விபத்தென நிறுவப்பட்டது. இரண்டாவது சம்பவம் அவ்வாறு நிறுவப்படுவதற்கான தெளிவான தரவுகளைக் கொண்டிராததால் அடுத்த முறை தீவிரமான விசாரணைக்குள்ளாக்கப்படுவாள் என எச்சரித்து விடுவிக்கப்பட்டாள். ஸ்பெயின் முழுவதிலுமுள்ள பல்வேறு மனநல மருத்துவமனைகளின் சந்தேகத்திற்கிடமான விபத்துகளின் வரலாற்றில் இந்தப் பாரம்பரிய மேல்தட்டுக் குடும்பத்தின் கருப்பு ஆடிற்குப் பங்குண்டு என்கிற ஒப்புக்கொள்ளப்பட்ட கதை நிலவி வந்தது.

அந்த முதல் இரவில் மரியாவைத் தூங்க வைக்கும்பொருட்டு அவர்கள் அவளுக்கு ஊசியிட வேண்டியிருந்தது. அதிகாலைக்கு முன்பு, சிகரெட் பிடிக்க வேண்டுமென்கிற ஏக்கம் அவளுள் எழுந்த போது அவளது மணிக்கட்டும் கணுக்காலும் படுக்கையின் உலோகக் கம்பியுடன் பிணைக்கப்பட்டிருந்தன. அவள் கத்தியபோதும் ஒருவரும் வரவில்லை. பார்சிலோனாவில் அவளது கணவன் அவளைப்பற்றி எந்த விவரமும் கண்டறிய இயலாமல் இருந்தபோது தனது துயரத்தில் மூழ்கி உணர்வற்றுப்போயிருந்த அவளை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றிருந்தார்கள்.

நினைவு திரும்பியபோது எவ்வளவு நேரம் கடந்திருந்ததென்பதை அவள் அறிந்திருக்கவில்லை. ஆனால் இப்போது உலகம் அன்பின் உறைவிடம் போலக் காட்சியளித்தது. தட்டைப்பாத நடையும் ஆற்றுப்படுத்தும் புன்னகையும் கொண்ட முக்கியஸ்தராகிய ஒரு நபர் தன் கரத்தின் திறம்மிக்க இரு அசைவுகளால், உயிருடன் எஞ்சியிருப்பது குறித்த அவளது மகிழ்ச்சியை மீட்டுக்கொணர்ந்தார். அவர்தான் அந்த மருத்துவமனையின் இயக்குநர்

அவரிடம் எதுவும் பேசுவதற்கு முன்பாக, அவருக்கு வணக்கம் கூறுவதற்கும் கூட முன்பாக மரியா அவரிடம் சிகரெட்கேட்டாள். ஒன்றைப் பற்றவைத்து, அத்துடன் கிட்டத்தட்ட நிரம்பியிருந்த ஒரு முழுப் பெட்டியையும் கொடுத்தார். மரியாவினால் அழுகையைக் கட்டுப்படுத்த இயலவில்லை

உன் இதயத்தில் இருப்பதனைத்தையும் நீ அழுது தீர்க்கவேண்டிய நேரம் இது. கண்ணீர் தான் ஆகச்சிறந்த மருந்துஎன மிக மென்மையான குரலில் கூறினார் மருத்துவர்

எந்த வெட்கமுமின்றி மரியா தன்னை அவரிடம் முழுமையாக இறக்கிவைத்தாள். புணர்தலுக்குப் பிறகான வெறுமையான பொழுதுகளில் தன் விளையாட்டுத்தனமான காதலர்கள் எவரிடமும் அவளால் அப்படிச் செய்ய முடிந்ததில்லை. அவளுக்குச் செவிமடுத்தபடியே தன் விரல்களால் அவளது கூந்தலைக் கோதியும், அவள் சீராக சுவாசிக்க ஏதுவாக அவளது தலையணையைச் சரி செய்தும், அவளது பிரச்சினைகளின் இழைகளினூடாகத் தன் ஞானத்தால் வழிநடத்தியும் அவள் ஒருபோதும் நினைத்திடாத இனிமையுடன் அவர் நடந்து கொண்டார். கூடப்படுப்பதை ஒரு பரிசாக எதிர்பாராமல் இதயபூர்வமாக அவளுக்கு ஒரு ஆண் செவிமடுத்துப் புரிந்துகொள்கிற அதிசயம் அவள் வாழ்விலேயே முதன்முறையாக அப்போதுதான் நடந்தேறியது. நீண்ட ஒரு மணி நேரத்தின் இறுதியில் தன் ஆன்மாவின் ஆழம் வரை வெளிப்படுத்திய பின் அவள் தன் கணவனுடன் தொலைபேச அனுமதி கோரினாள்

தன் பதவியின் அத்தனை கம்பீரத்துடனும் எழுந்து நின்றார் மருத்துவர். “இப்போது வேண்டாம் இளவரசியே“, என்றபடி இதுவரை ஒருபோதும் அவள் உணர்ந்திராத மென்மையுடன் அவளது கன்னத்தைத் தட்டினார். “நேரம் வருகையில் எல்லாமும் நடக்கும்என்றுவிட்டு கதவினருகே சென்றவர், பாதிரியார் போல் ஆசீர்வதித்து தன்னை நம்பும்படி கூறியபின் எப்போதைக்குமாக அவளிடமிருந்து மறைந்துபோனார்

அதே நாளின் பிற்பகலில் ஒரு வரிசை எண் அளிக்கப்பட்டு சந்தேகத்திற்குரிய அவளது இருப்பிடம் மற்றும் அடையாளம் பற்றிய சில மேம்போக்கான குறிப்புகளுடன் அந்த மன நல மையத்தில் மரியா அனுமதிக்கப்பட்டாள். அவ்விவரத்தின் பக்கவாட்டில் மருத்துவர் தன் கையாலையே அவள் குறித்த தனது மதிப்பீட்டினைக் குறித்திருந்தார்: கலக்கமடைந்திருக்கிறார்.

மரியா கணித்தது போலவே, அவளது கணவன் ஹார்டாமாவட்டத்திலுள்ள தங்களது நடுத்தர அடுக்கத்திலிருந்து தனது மூன்று நிகழ்ச்சிகளுக்காக அரை மணி நேரம் தாமதமாகக் கிளம்பியிருந்தான். பிரச்சனைகள் எதுவுமற்று, அன்புடன் அவர்கள் இணைந்திருந்த அந்த இரண்டாண்டு வாழ்வில் அவள் தாமதித்திருப்பது இதுதான் முதல் முறை. அந்த வார இறுதியில் ஒட்டுமொத்த மாகாணத்தையும் மூழ்கடித்த கடும் மழைதான் அதற்குக் காரணமாயிருக்கும் என அவன் ஊகித்தான். வெளியே கிளம்பும் முன்பாகத் தன்பயணம் பற்றிய விவரங்களை ஒரு காகிதத்தில் குறித்து கதவில் செருகினான்.

குழந்தைகளனைவரும் கங்காரு உடையணிந்திருந்த முதல் நிகழ்ச்சியில் அவன் தனது மிகச்சிறந்த மாயமீன் ஜாலத்தைக் காட்சிப்படுத்தாமல் தவிர்த்தான். அவளது உதவியின்றி அவனால் அதனைச் செய்ய இயலவில்லை. அவனது இரண்டாவது நிகழ்ச்சி சக்கர நாற்காலியில் இருக்கும் ஒரு தொண்ணூற்று மூன்று வயது மூதாட்டியின் வீட்டில் இருந்தது. கடந்த தனது முப்பது பிறந்தநாள்களையும் முப்பது வெவ்வேறு மாயவித்தைக்காரர்களுடன் கொண்டாடியது குறித்துப் பெருமிதப்பட்டாள் அவள். மரியாவின் இன்மையினால் அதீதமாய்ச் சங்கடமடைந்திருந்த அவனால் மிகச்சிறிய மாயாஜாலங்களில் கூட கவனம் செலுத்த இயலவில்லை. ரம்லாஸ் தெருவின் ஒரு காஃபி க்ளப்பில் தினசரி இரவு அவன் நிகழ்த்துகிற ஜாலங்களின் இன்றைய நிகழ்வாக சில பிரெஞ்சு சுற்றுலாவாசிகளுக்கு சில சுவாரஸ்யமற்ற ஜாலங்களை நிகழ்த்திக்காட்டினான். மாயாஜாலங்களில் நம்பிக்கை இல்லாத அவர்களால் அவற்றை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஒவ்வொரு நிகழ்ச்சியின் முடிவிற்குப் பிறகும் வீட்டிற்கு அவன் தொலைபேசியை அழுத்திக் காத்திருந்தபோது பதிலளிக்க மரியா இல்லாமல் ஏமாறநேர்ந்தது. இறுதியாக அழைத்த பிறகு, அவளுக்கு ஏதோ ஆகிவிட்டதென்கிற கவலையை அவனால் கட்டுப்படுத்த இயலவில்லை

பொது நிகழ்வுகளுக்கென ஒதுக்கப்பட்டிருந்த வாகனத்தில் பாஸியோ தி கிரேஸியா சாலையில் பனைமரங்களுக்கூடாகச் செல்கையில் வசந்தத்தின் பேரழகைக்கண்ட போதுதான் மரியா இல்லாமல் இவ்வுலகம் எப்படியிருக்கும் என்னும் அச்சம் நிறைந்த எண்ணம் அவனை அதிரச்செய்தது. அவன் எழுதிய குறிப்பு இன்னமும் கதவிலேயே செருகியிருப்பதைக் கண்டதும் அவனது இறுதி நம்பிக்கையும் தகர்ந்தது. மிகுந்த கவலையடைந்த அவன் பூனைக்கு உணவிடவும் மறந்தான்

ஒருபோதும் அவனது உண்மையான பெயர் எனக்குத் தெரிந்திருக்கவில்லை என்பதை இப்போது இதை எழுதும்போதுதான் உணர்கிறேன்; பார்சிலோனாவில் நாங்கள் அனைவரும் அவனது தொழில்சார்ந்த பெயரைத்தான் அறிந்திருந்தோம். மாயவித்தைக்காரன் ஸாடர்னோ. விநோதமான குணநலம் கொண்ட அவன் சமூகத்தொடர்பிலும் பின்தங்கியிருந்தான்; ஆனால் அவனிடம் இல்லாதிருந்த விவேகமும் வசீகரமும் மரியாவிடம் தேவைக்கு அதிகமாகவே இருந்தது. மனைவியைக்காணோமென நள்ளிரவுக்குப்பின் தொலைபேசுவது பற்றியெல்லாம்  ஒருவன் எண்ணவே முடியாத மாபெரும் புதிர்களடங்கிய இச்சமூகத்தினுள் அவள்தான் அவன் கரங்களைப் பற்றி வழிநடத்தியிருந்தாள். எனவே வீட்டிற்கு வந்தவுடன் ஜரகோசாவிற்குத் தொலைபேசியதோடு அவன் நிறுத்திக்கொண்டான்மரியா பிற்பகலிலேயே விடைபெற்றுவிட்டாள் என எந்த அதிர்ச்சியுமற்ற ,உறக்கத்திலாழ்ந்த ஒரு முதியவளின் குரல் மட்டும் பதிலாகக்கிட்டியது. அதிகாலையில் வெறும் ஒரு மணி நேரம் மட்டுமே அவன் உறங்கியிருந்தான். ரத்தம்படிந்த கந்தலான திருமண உடையில் மரியா இருப்பது போன்ற ஒரு குழப்பமான கனவினைக் கண்டவுடனே, இம்முறை மரியா இப்பெரிய உலகத்தை அவளின்றி அவன் எதிர்கொள்ளும்படியாகத் தனித்து விட்டுவிட்டு எப்போதைக்குமாகப் பிரிந்துசென்றுவிட்டாள் என்கிற உறுதியான அச்சத்துடன்தான் எழுந்தான்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இவன் உள்ளிட்ட மூன்று ஆண்களை அவள் கைவிட்டிருந்தாள். அவர்கள் சந்தித்து ஆறு மாதத்திற்குப் பிறகு, அன்ஜூர் மண்டலத்தில் ஒருவேலைக்காரியின் அறையில் மிருகத்தனமான புணர்ச்சிகளின் வேதனையில் இன்பம் துய்த்த காலத்தில் மெக்சிகோ நகரில் அவனைக் கைவிட்டாள். விவரிக்க முடியாதபடி தீவிரமாய்ப் புணர்ந்த ஓர் இரவுக்குப் பின்பான காலையில் மரியா அங்கிருந்து நீங்கியிருந்தாள். தனது முந்தை திருமண மோதிரங்கள் உள்ளிட்ட அவளது அனைத்து உடைமைகளையும் விட்டு விட்டுச் சென்றிருந்தஅவள், அந்த ஆக்ரோஷமான புணர்தலின் சித்திரவதைகளைத் தாங்கிக்கொள்ளும் சக்தி தனக்கில்லையென எழுதிய ஒரு கடிதத்தையும் அவற்றுடன் விட்டிருந்தாள். சட்டப்படியான வயது வரம்பை எட்டும் முன்பே அவள் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டஉயர்நிலைப் பள்ளி வகுப்புத் தோழனாகிய முதல் கணவனிடம்தான் அவள் சென்றிருப்பாள் என ஸாடர்னோ நினைத்தான். (காதலற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவனை விட்டுவிட்டு இன்னொருவனுடன் சென்றிருந்தாள்.) ஆனால் இல்லை, அவள் தன் பெற்றோரிடம் சென்றிருந்தாள். எந்தவிலை கொடுத்தேனும், எவ்வித நிபந்தனைகளுமின்றி, நிறைவேற்றுமளவிற்கு அவனே இன்னும் தயாராகாத வாக்குறுதிகளையும்கூட அளித்து தன்னுடன் வரும்படி வேண்டினான். ஆனால் தகர்க்கவே இயலாத உறுதியுடன் அவள் பதிலளித்தாள். “தற்காலிகமானவை, நீண்ட காலத்தியவை என காதலில் இரு வகை உண்டுஎனத் தொடங்கியவள்,நம்முடையது தற்காலிகமானதுஎனக் கருணையின்றி முடித்தாள். அவளதுஉறுதி அவனைத் தோல்வியை ஒப்புக்கொள்ளும்படி செய்தது. ஆனால் மிகுந்த பிரயாசையுடன் அவளை அவன் மறந்த ஓராண்டிற்குப் பிறகு கல்லறைத் திருநாளின் அதிகாலையில் தனது அனாதையான அறைக்குத் திரும்பியபோது வரவேற்பறையின் நீளிருக்கையில் ஒரு மணப்பெண்ணைப் போல முழு வெள்ளை கவுனும் ஆரஞ்சுப்பூக்களாலான கிரீடமும் அணிந்தபடி மரியா படுத்திருந்தாள்.

மரியா அவனிடம் உண்மையைக் கூறினாள். அவளுடன் திருமணம் நிச்சயமாகியிருந்த, மனைவியை இழந்து குழந்தைகளுமின்றி வாழ்ந்துவந்த செல்வந்தன் கத்தோலிக்க தேவாலயத்தில் இவளை மேடையிலேயே அலங்காரங்களுடன் காத்திருக்க வைத்துவிட்டு காணாமல் போயிருந்தான். எப்படியாயினும் வரவேற்பினை நடத்திவிடலாம் என அவளது பெற்றோர் எடுத்த முடிவிற்கு அவளும் உடன்பட்டாள். மரியாச்சி பாடல் குழுவினருடன் பாடி ஆடிய அவள் பின்னரே நிலைமையை உணர்ந்தாள்.வருத்தத்திலும் பச்சாதாபத்திலும் ஸாடர்னோவைத் தேடி நள்ளிரவில் கிளம்பினாள்.

அவன் வீட்டில் இல்லை. ஆனால் வழக்கமாக முற்றத்தில் அவர்கள் மறைத்து வைக்கிற பூந்தொட்டிக்குக் கீழிருந்து சாவியை எடுத்துக்கொண்டாள். எவ்வித நிபந்தனைகளுமின்றித் தன்னை ஒப்புக்கொடுப்பது இப்போது அவளது முறையாக இருந்தது. “இம்முறை எவ்வளவு காலம்?” என அவன் வினவியபோது வினிஸியஸ் டி மொரேஸின் வரியினால் அதற்குப் பதிலளித்தாள்: ”ஒரு காதலால் எவ்வளவு காலத்திற்கு நீடிக்க முடிகிறதோ அவ்வளவு காலத்திற்கு அது நித்தியமானது.” இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பும் அது நித்தியமாய் இருந்தது.

ரியா பக்குவமடைவது போல் தோன்றியது. நடிகையாவது குறித்த தனது கனவுகளைத் துறந்த அவள், வேலையிலும் படுக்கையிலும் தன்னை அவனுக்கு அர்ப்பணித்துக் கொண்டாள். கடந்த ஆண்டின் இறுதியில் அவர்கள் ஒரு மாயவித்தைக்காரனின் நிகழ்விற்கு பெர்பினன் சென்று திரும்பும் வழியில் பார்சிலோனாவிற்கும் முதல்முறையாகச் சென்றிருந்தனர். அது அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போனதால் ஹார்டாவின் கேடலோனியன் பகுதியில் ஒரு அடுக்ககத்தை வாங்கி கடந்த எட்டு மாதங்களாக இங்கே வசித்து வருகின்றனர். அது சந்தடி நிறைந்த இடமாக இருந்தது, வேலையாள் யாரும் இல்லை, என்றாலும் ஐந்து குழந்தைகள் வசிக்கும் அளவிற்கான இடம் தாராளமாக இருந்தது. கடந்த வார இறுதியில் ஒரு வாடகைக் கார் அமர்த்தி ஜரகோசாவில் இருக்கும் உறவினர்களைச் சந்திக்க அவள் கிளம்பும்வரை அங்கே மகிழ்ச்சியைத் தவிர வேறெதையும் யாராலும் கற்பனை செய்திருக்க முடியாது. திங்கள் இரவு ஏழு மணிக்கு வீடு திரும்பிவிடுவதாகச் சொல்லிச் சென்றிருந்தாள் அவள், அந்த வியாழனின் விடியற்காலை வரை அவளிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை.

அதற்கடுத்து வந்த திங்களில் மரியா வாடகைக்கு எடுத்துச் சென்றிருந்த காரின் காப்பீட்டு அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. “அவளைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது” எனக்கூறிய ஸாடர்னோ, அவளை ஜரகோசாபகுதியில் தேடும்படி தெரிவித்தான். ஒருவாரத்திற்குப் பின்னர் வீட்டிற்கு வந்த ஒரு காவல் அதிகாரி மரியா விட்டுச் சென்ற இடத்திலிருந்து தொள்ளாயிரம் கிலோமீட்டர் தொலைவில் க்யாடிஸ் என்கிற இடத்திற்குச் செல்லும் பாதையில் கார் சிதிலமடைந்து கிடந்ததாகக் கூறினார். கார் திருட்டுப் பற்றி அவளுக்கு வேறெதுவும் தெரியுமா என அறிய விரும்புவதாக அவர் கேட்டார். பூனைக்கு உணவளித்துக் கொண்டிருந்த ஸாடர்னோ நிமிர்ந்துகூடப் பாராமல், தன் மனைவி தன்னை விட்டுச் சென்றுவிட்டதாகவும், அவள் எங்கே சென்றிருக்கிறாள் என்பதோ யாருடன் சென்றிருக்கிறாள் என்பதோ தனக்குக் கிஞ்சித்தும் தெரியாதென்பதால் காவல் அதிகாரி இங்கே நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனவும் கூறினான்.  அதீதமாக வெளிப்பட்ட அவனது உறுதி அவரைச் சங்கடத்திற்குள்ளாக்கவே, தன் கேள்விகளுக்காக மன்னிப்புக் கோரிக் கொண்டார். இந்த வழக்கு முடிக்கப்பட்டுவிட்டதாக அவர்கள் அறிவித்தனர்.

மரியா மீண்டும் தன்னைப் பிரிந்து செல்லக்கூடும் என்னும் ஐயம் ஸாடர்னோவைக் கடக்யூஸ் குறித்து சிந்திக்கச் செய்தது. படகுச் சவாரிக்காக ஈஸ்டரின்போது ரோஸா ரெகஸ் அவர்களை அங்கே அழைத்திருந்தார். ஃப்ரான்காயிஸத்தின்*(Francoism) அந்திமத்தில், மாரிடிம் விடுதியின் காஷ்ஸ் டிவைன்*(gauche divine) மதுக்கூடத்தில் இருந்த ஆறுபேருக்கான தேனிரும்பு மேஜைகளில் ஒன்றைச் சுற்றி நாங்கள் இருபதுபேர் நெருக்கியடித்து நின்றிருந்தோம். மரியா அன்றைய நாளின் தனது இரண்டாவது சிகரெட் பெட்டியைக் காலி செய்து முடித்தபோது அவளது தீப்பெட்டியும் தீர்ந்து போயிருந்தது. ரோமானிய கைச்சங்கிலி அணிந்திருந்த மென்ரோமங்கள் கொண்ட ஒரு மெலிந்த கை அந்தக்கூச்சல் மிகுந்த கும்பலுக்கிடையே நீண்டு அவளுக்கு நெருப்பளித்தது. நிமிர்ந்து பாராமல் நன்றி கூறினாள் மரியா, ஆனால் மாயவித்தைக்காரனான ஸாடர்னோ அவனை நிமிர்ந்து பார்த்திருந்தான் – நன்கு சவரம் செய்த, மெலிந்த இளைஞனாகிய அவன் அதீதமாய் வெளிறியிருந்தான், கரிய குடுமி அவனது இடுப்புவரை தொங்கியது. வசந்தகாலப் பருவக்காற்றின் ஆக்ரோசத்தைச் சமாளிக்க அந்த மதுக்கூடத்தின் ஜன்னல் பலகைகள் திணறிக்கொண்டிருக்க அவன் பருத்தியாலான மலிவான அங்கியும் எளிமையான செருப்பும் அணிந்திருந்தான்.

அடுத்ததாக அவர்கள் இலையுதிர்க்காலத்தின் பிற்பகுதியில்  பார்சிலோனா கடற்கரையில் ஓர் உணவுக்கூடத்தில்தான் சந்தித்துக்கொண்டனர். அப்போதும் அவன் அதே போன்ற ஒரு எளிமையான ஆடையையே அணிந்திருந்தான், ஆனால் குடுமிக்குப் பதிலாக நீண்ட தாடியைக் கொண்டிருந்தான். பழைய நண்பர்கள் என்பது போல அவர்களுக்கு முகமன் கூறிய அவன் மரியாவை முத்தமிட்ட போது அவள் பதிலுக்கு முத்தமிட்ட விதம் அவர்கள் நீண்டகாலமாக ரகசியமாகச் சந்தித்துவரக்கூடும் என்னும் சந்தேகத்தை ஸாடர்னோவில் விதைத்தது. சில நாட்களுக்குப் பிறகு அவர்களது வீட்டின் குறிப்பேட்டில் ஒரு புதிய பெயரையும் அலைபேசி எண்ணையும் மரியா எழுதியிருப்பதைக் கவனித்தான். இரக்கமற்ற பொறாமை அவை யாருடையவை என்பதை அவனுக்குத் தெளிவாக்கிது. இவர்கள் வாழ்வின் இடையில் நுழைந்திருந்தவனின் வாழ்க்கைமுறை அதனை நிரூபணம் செய்தது: இருபத்தி இரண்டு வயதாகிய அவன் ஒரு செல்வந்தனின் ஒரே மகன். நவீன அங்காடிகளுக்கு ஜன்னல் அலங்காரம் செய்து தருபவனாகிய அவன் இருபால் புணர்ச்சியில் விருப்பமுடையவன் என அறியப்பட்டிருந்தான். அதோடு, மணமாகிய பெண்களை ஆற்றுப்படுத்துவதைத் தொழிலாகச் செய்கிறவன் என்னும் விதமாகவும் பெயர் பெற்றிருந்தான். ஆனால் மரியா வீட்டிற்குத் திரும்பி வராத தினம் வரை ஸாடர்னோ தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான். அதன்பிறகு தினமும் காலை ஆறுமணியிலிருந்து மறுநாள் அதிகாலை வரை முதலில் மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறையும் பின்னர் தொலைபேசிக்கு அருகில் செல்லும்போதெல்லாமும் அந்த எண்ணிற்கு அழைக்கத் தொடங்கினான். யாரும் அதற்குப்பதிலளிக்கவில்லை என்னும் நிஜம் ஸாடர்னோவின் இழப்பினை ஆழமாக்கியது.

நான்காம் நாள் அந்த வீட்டினைச் சுத்தம் செய்ய வந்திருந்த ஒரு அண்டலூசியப் பெண் தொலைபேசிக்குப் பதிலளித்தாள். ”அவர் வெளியே சென்றிருக்கிறார்,” என அவள் பொதுப்படையாகக் கூறியது அவனை மேலும் பைத்தியமாக்கியது. செனோரிடா மரியா என்பவள் அங்கு எப்போதேனும் வந்தாளா எனக் கேட்காமல் ஸாடர்னோவால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை.

“மரியா என யாரும் இங்கே வசிக்கவில்லை” என்ற அவள். “அவர் மணமாகாதவர், என்றாள்.

”அதை அறிவேன்,” என்ற ஸாடர்னோ, “அவள் அங்கே வசிக்கவில்லை. ஆனால் அவ்வப்போது வருகிறாள்தானே?” என்றான்.

அப்பெண்மணி எரிச்சலுற்றாள்.

“முதலில் நீ யாரென்று சொல்” என்றாள்.

ஸாடர்னோ அழைப்பைத் துண்டித்துவிட்டான். இனி இது குறித்து சந்தேகம் கொள்ளத்தேவையில்லை, அதுதான் தகிக்கின்ற உண்மை என்பதற்கான இன்னுமொரு உறுதிப்படுத்தலாக அப்பெண்மணியின் மறுப்பு அவனுக்குத் தோன்றியது. அவன் நிலைகுலைந்தான். அடுத்தடுத்த நாட்களில், பார்சிலோனாவில் அவனுக்குத் தெரிந்த அனைவருக்கும் அகரவரிசைப்படி தொலைபேசத் தொடங்கினான். யாராலும் அவனுக்கு எதையும் சொல்லமுடியவில்லை, ஒவ்வொரு அழைப்பும் அவனது துயரத்தைக் கடுமையாக்கிக்கொண்டே சென்றது. ஏனென்றால், அவனது பொறாமையின் வெறித்தனம் வருத்தமற்ற இரவு ஆந்தைகளான காஷ்ஸ் டிவைன் குழுவினருள் பிரபலமாகியிருந்ததால் இவனது அழைப்பிற்கு அவனை மேலும் துயருக்குள்ளாகும்படியான பதில்களையே அவர்கள் நல்கினர். அதன்பிறகுதான் அந்த அழகான,மனம்பிறழ்ந்த, ஊடுருவ இயலாத நகருக்குள் தான் எவ்வளவு தனித்திருக்கிறோம் என்பதையும் ஒருபோதும் அவன் அங்கே மகிழ்ச்சியாக இருக்க முடியாதென்பதையும் உணர்ந்துகொண்டான். மறுநாள் காலை பூனைக்கு உணவளித்தபிறகு இறப்பிலிருந்து மீண்டு வரும்படியாகத் தன் இதயத்தைக் கடினப்படுத்திக்கொண்டவன், மரியாவை மறந்துவிட உறுதிபூண்டான்.

இரண்டு மாதங்களுக்குப் பின்பும் கூட மரியாவினால் மனநலமருத்துவமனையின் வாழ்க்கைக்குத் தன்னைப் பொருத்திக்கொள்ள முடியவில்லை. சிறைச்சாலையின் கரடுமுரடான மேஜையோடு பிணைக்கப்பட்டிருந்த தட்டையான தட்டில் வழங்கப்பட்ட அளவு உணவை உண்பதன் வாயிலாகவும், இருளான மத்திம கால சாப்பாட்டுக்கூடத்தின் முகப்பில் இருக்கும் தளபதி ஃப்ரான்சிஸ்கோ ஃப்ரான்கோவின் புகைப்படத்தை உற்றுநோக்கியபடியுமே அவள் உயிர்த்திருந்தாள். அதிகாலை, காலை, மாலை என ஒவ்வொரு நாளின் பெரும்பாலான நேரத்தையும் எடுத்துக்கொண்ட  காலமுறைப் பிரார்த்தனைகளுக்கு ஆரம்பத்தில் அவள் உடன்பட மறுத்தாள். புத்துணர்வுக்கான பகுதியில் பந்து விளையாடவும், மிகத்தீவிரமாக உழைத்து சக பெண்கள் உருவாக்கிய செயற்கை மலர்களை உருவாக்கும் வகுப்புகளில் கலந்துகொள்ளவும் மறுத்தாள். ஆனால் மூன்றாவது வாரத்திற்குப் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக அவள் அப்பெண் துறவிகளின் வாழ்வுடன் இயைந்துகொண்டாள். அதனாலென்ன, அவர்களில் எல்லாருமே அப்படித்தான் துவக்கத்தில் இருந்தார்கள் எனவும் கால ஓட்டத்தில் மற்றவர்களுடன் இணைந்துகொண்டார்கள் எனவும் மருத்துவர்கள் கூறினர்.

ஆரம்ப நாட்களில், சிகரெட் இல்லாத பிரச்சனை தங்கத்தின் விலைக்கு அதை விற்ற தாதியினால் தீர்க்கப்பட்டது. ஆனால் மரியாவிடமிருந்த சிறிய தொகை தீர்ந்தபிறகு அப்பிரச்சனை அவளை மீண்டும் சித்திரவதை செய்யத்தொடங்கியது. ஆனால் சிகரெட் பிடிக்க வேண்டும் என்னும் பரிதவிப்பு தொலைபேச வேண்டும் என்னும் பரிதவிப்பிற்கிணையாக அவளை ஆக்கிரமிக்கத் துவங்கியதால், உடனிருக்கும் பெண்கள் குப்பையிலிருந்து எடுத்த சிகரெட் துண்டுகளுடன் செய்தித்தாள்களைக் கொண்டு உருவாக்கிய சிகரெட்டுகளில் ஆறுதல் அடைந்தாள். செயற்கை மலர்களை உருவாக்கியதன் மூலம் அவள் சம்பாதித்த குறைந்த அளவு பெடாஸ்கள் தற்காலிகமாக அவளது தேவையைத் தீர்த்தன.

ஆனால் இரவின் தனிமைதான் எல்லாவற்றையும் விடக் கொடூரமாய் இருந்தது. அவளைப்போலவே,  பெரும்பாலான பிற பெண்களும் வேறெதுவும் செய்யத் தைரியமின்றி அந்த அரையிருளில் விழித்துக்கிடந்தனர், ஏனென்றால் சங்கிலியும் பூட்டும் கொண்டு பாதுகாக்கப்பட்டிருந்த அதன் கனமான கதவினருகே காவல் காத்த இரவுச் செவிலியும் விழித்துக்கொண்டிருந்தாள். என்றாலும், துயரம் தாங்க இயலாத ஓர் இரவில் பக்கத்துப் படுக்கையில் இருக்கும் பெண்ணிற்குக் கேட்கும் அளவு சத்தத்தில்,

“நாம் இப்போது எங்கே இருக்கிறோம்?’ என வினவினாள் மரியா.

அருகிலிருந்தவளின் சூன்யமான குரல், “நரகத்தின் குழியில்” எனத் தெளிவாகப் பதிலளித்தது.

”இதொரு புதர்சூழ்ந்த தரிசுக்காடு எனக் கூறுகிறார்கள்,” எனப் படுக்கையறை முழுதும் எதிரொலிக்கும் குரலில் கூறியது இன்னொரு குரல். “அது உண்மையாகத்தான் இருக்கும். கோடைக்கால பௌர்ணமி இரவில் கடற்கரையோரம் நாய்கள் குரைப்பதை நம்மால் கேட்க முடியும்.”

பூட்டினோடு பிணைக்கப்பட்டிருந்த சங்கிலி ஒரு கப்பலின் நங்கூரம் போல ஒலியெழுப்ப கதவு திறந்தது. சட்டெனக் கவிழ்ந்த அமைதிக்கு நடுவே உயிர்த்திருந்த ஒரே ஒரு ஜீவன் போல் தோன்றிய இரக்கமற்ற பாதுகாவலர் படுக்கையறையின் ஒரு எல்லையிலிருந்து மறு எல்லைக்கு நடக்கத் தொடங்கினாள். மரியா பயத்தில் உறைந்து போனாள் – அதற்கான காரணத்தை அவள் மட்டுமே அறிவாள்.

மரியா இந்த மனநல மையத்திற்கு வந்துசேர்ந்த முதல்வாரம் தொட்டே, இரவுத்தாதி, பாதுகாவலர் அறையில் தன்னுடன் படுக்குமாறு அவளிடம் நேரடியாகவே வேண்டுகோள் விடுத்துக்கொண்டிருந்தாள். உயிரற்ற, தொழில்முறையிலான தொனியில் துவங்கிய அவள் அந்தக் காதலுக்குப் பதிலாக சிகரெட்டுகளும் மிட்டாய்களும் அவளுக்கு எதுவேண்டுமாயினும் கிடைக்கும் என்றாள். “உன்னிடம் எல்லாமும் இருக்கும். நீதான் ராணியாக இருப்பாய்.” என்றாள் லேசான நடுக்கத்துடன். ஆனால் மரியா அதற்கு உடன்படாதபோது அவள் தனது வழிமுறைகளை மாற்றிக்கொண்டாள்: அவளது தலையணைக்கடியில், ஆடைகளின் பாக்கெட்டுகளில், எதிர்பார்த்திராத இடங்களில் சிறிய காதல் குறிப்புகளை வைத்தாள்.  கல்லைக்கூடக் கசிய வைக்கும் விதமான இதயம் நொறுங்கும் அவசரச் செய்திகளை அவை சுமந்திருந்தன. படுக்கையறையின் இன்றைய நிகழ்விற்கு ஒரு மாதம் முன்பாக அவள் தோல்வியை ஒப்புக்கொண்டு விலகியதுபோல் தோன்றியிருந்தது.

உடன்வசிப்பவர்கள் அனைவரும் உறங்கிவிட்டார்கள் எனத் தோன்றியவுடன், மரியாவின் படுக்கையை நோக்கிவந்த தாதி அருவருக்கத்தக்க பல மென் வார்த்தைகளை அவளது செவியில் கூறியதோடு மரியாவின் முகத்திலும் பயத்தில் நடுங்கிய கழுத்திலும் விறைத்திருந்த கைகளிலும் சோர்வுற்றிருந்த கால்களிலும் முத்தமிடத்தொடங்கினாள். மரியா அசைவின்றி இருந்தது பயத்தினால் அல்ல, ஒப்புதலால் என்பதாகப் புரிந்துகொண்ட அவள் மேலும் முன்னேறினாள். அப்போதுதான் மரியா அவளைத் தன் புறங்கையால் தாக்கி அடுத்த படுக்கையில் சென்று மோதி வீழும்படி தள்ளினாள். கலவரமடைந்த அறைவாசிகள் உண்டாக்கிய கூச்சலின் நடுவே ஆங்காரத்துடன் நின்றாள் தாதி.

”தேவடியா நாயே,” எனக்கத்திய தாதி, “என் மேல் நீ பித்தாகும்வரை இந்த நரகத்தின் குழியில் நாம் சீழ்பிடித்துக் கிடப்போம்” என்றாள்.

ஜூன் மாத முதல் ஞாயிறின் காலைப்பொழுதில் அவசர நடவடிக்கைகளைக் கோரும்விதம் முன்னறிவிப்பின்றி கோடை பிறந்திருந்தது. பிரார்த்தனையின் போது புழுக்கம் தாளாத கைதிகள் தங்களது கம்பளி ஆடைகளைக் களைந்து வீசத்தொடங்கினர். பார்வையற்ற கோழிகள் போல நிர்வாணமான நோயாளிகளை செவிலியர் மேலும் கீழும் துரத்தி ஓடுவதைச் சற்று வேடிக்கையாகப் பார்த்துக்கொண்டிருந்தாள் மரியா. குழப்பத்தின் நடுவே அவர்களது கொடூரமான அடியிலிருந்து தன்னைக்காத்துக்கொள்ள முயன்ற அவள் எப்படியோ ஒரு ஆளற்ற அலுவலக அறைக்கு வந்து சேர்ந்திருந்தாள். அங்கே தன்னை எடுக்கும்படி கெஞ்சியபடி இடைவிடாமல் ஒரு தொலைபேசி அலறிக்கொண்டிருந்தது.   யோசனையின்றி மரியா அதனை எடுத்துப் பேசியபோது ஒரு தொலைதூரக்குரல் புன்னகையுடன் தொலைபேசி நிறுவனத்தின் நேர அறிவிப்பினைப் பிரதி செய்ய முயன்று கொண்டிருந்தது:

“தற்போது நேரம் நாற்பத்தி ஐந்து மணிகள், தொண்ணூற்று இரண்டு நிமிடங்கள், மற்றும் நூற்று ஏழு விநாடிகள்.”

குழப்பத்துடன் ”முட்டாள்” என்றபடி அழைப்பைத் துண்டித்துவிட்டு அந்த அறையைவிட்டு வெளியே கிளம்பியபோதுதான் தான் எப்படியொரு வாய்ப்பை நழுவவிட இருக்கிறோம் என்பதை மரியா உணர்ந்தாள். தன் வீட்டின் எண்தானா என்பதைக்கூட உறுதி செய்ய இயலாத வேகத்துடன் அந்த ஆறு இலக்க எண்ணை மிகுந்த பதட்டத்துடன் டயல் செய்தாள். இதயம் படபடக்க அவள் காத்திருந்தபோது பழக்கமான அந்தத் துன்பமிகு ஓசை ஒருமுறை, இருமுறை, மும்முறை என ஒலித்து இறுதியில் தான் இல்லாத வீட்டில் வசிக்கும் தான் மிகவும் நேசிக்கும் அந்த மனிதனின் குரலைக் கேட்டாள்.

“ஹலோ?”

தன் குரல்வளையில் முடிச்சிட்ட கண்ணீர் கரையும்வரை அவள் காத்திருக்கவேண்டியிருந்தது.

“செல்லமே, அன்பே” என்றபடி பெருமூச்சுவிட்டாள்.

இப்போது கண்ணீர் அவளை முந்திக்கொண்டது. தொலைபேசியின் மறுமுனையில் சற்றுநேர பயங்கரமான அமைதிக்குப்பின், பொறாமையில் எரிகின்ற ஒரு குரல்,

“தேவடியா” எனும் வார்த்தையைத் துப்பிவிட்டு தொலைபேசியை ஓங்கி அறைந்தது.

அன்றிரவு ஆத்திரம் தலைக்கேறிய மரியா உணவகத்திலிருந்த தலைமைத் தளபதியின் சித்திரத்தைக் கிழித்து தன் சக்தியனைத்தையும் உபயோகித்து தோட்டத்தின் புறமிருந்த கறைபடிந்த கண்ணாடி ஜன்னலை உடைத்து  வெளியே வீசினாள். பின் ரத்தம் சூழ தரையில் விழுந்தாள். அதற்குப் பின்பும் கூட அவளைக்கட்டுப்படுத்த முயன்று தோல்வியுற்ற செவிலியரின் அடிகளை எதிர்க்கும் அளவிற்கு அவளிடம் ஆத்திரம் மிச்சமிருந்தது. ஆனால் வாசலருகே கைகட்டியபடி நின்று இவளை முறைத்துப்பார்த்த ஹெர்குலினாவைக் கண்டவுடன் மரியா அமைதியடைந்தாள். என்றபோதிலும், ஆக்ரோஷமாக நடந்துகொள்ளும் நோயாளிகளுக்கான அறைக்கு அழைத்துச்செல்லப்பட்ட அவள்மீது குளிர்ந்த நீரைப் பாய்ச்சி அடங்கவைத்து அவளது காலில் டர்பண்டைன் ஊசி ஏற்றினர். அதனால் கால் வீங்கி நடக்கமுடியாது போனதும் இந்த நரகத்தில் இருந்து தப்பிக்க தான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என அவளுக்குப் புரிந்தது. அடுத்த வாரம் மற்ற நோயாளிகளுடன் படுக்க அனுமதிக்கப்பட்ட பிறகு அவள் பூனைப்பாதத்தில் நடந்து இரவுத்தாதியின் அறைக்கதவைத் தட்டினாள்.

தன் கணவனுக்கு தாதி தகவல் அனுப்ப வேண்டும் என்பதுதான் மரியா துவக்கத்திலேயே வைத்த கோரிக்கையாய் இருந்தது. யாருக்கும் தெரியக்கூடாது என்னும் நிபந்தனையுடன் அதற்கு ஒப்புக்கொண்ட செவிலி, தன்னையறியாமல் ஆட்காட்டி விரலை உயர்த்தி, “எப்போதேனும் அவர்கள் இதனை அறிய நேர்ந்தால் அதன்பின் நீ உயிர்த்திருக்க முடியாது.” என்றாள்.

அதற்கு அடுத்த சனிக்கிழமை மரியாவின் மறுவருகையைக் கொண்டாடுவதற்காகவே அலங்கரித்த தனது சர்க்கஸ் வாகனத்தில் மாயவித்தைக்காரனாகிய ஸாடர்னோ மனநலம் குன்றிய பெண்களுக்கான மருத்துவமனைக்கு வருகை புரிந்தான். ஒரு போர்க்கப்பல போல் ஒழுங்கும் தூய்மையும் கொண்டிருந்த தன் அலுவலக அறைக்கு அவனை நேரடியாகச் சென்று வரவேற்ற இயக்குநர் அவனது மனைவியின் நிலை குறித்த அறிக்கையினை அன்புடன் பகிர்ந்துகொண்டார். அவள் எங்கிருந்து எப்போது எப்படி வந்தாள் என்பது யாருக்கும் தெரியாதென்றும் அவளைப்பற்றிய அதிகாரபூர்வமான விவரமே அவர் அவளைச் சந்தித்தபிறகு கூறிய விஷயங்களைக்கொண்டுதான் பதிவிடப்பட்டதென்றும் கூறினார். அதே தினத்தில் துவங்கிய இதுசார்ந்த விசாரணை ஒன்றும் முடிவேயின்றிச் சென்று கொண்டிருப்பதாகக் கூறினார் இயக்குநர். ஆனால் ஸாடர்னோவிற்குத் தன் மனைவியின் இருப்பிடம் குறித்து எப்படித் தெரிந்தது என்பதுதான் அவரை யோசனையிலாழ்த்தியிருந்தது. ஸாடர்னோ தாதியைக்காட்டிக்கொடுக்கவில்லை.

“காப்பீட்டு நிறுவனத்தினர் சொன்னார்கள்,” என்றான்.

திருப்தியுடன் தலையாட்டிய இயக்குநர், “எல்லாவற்றையும் கண்டறிய இந்தக் காப்பீட்டு நிறுவனத்தினரால் எப்படி முடிகிறதெனத் தெரியவில்லை” என்றார். ரசனையான தன் மேஜையின் மீது கிடந்த கோப்பினை ஒருமுறை பார்வையிட்ட அவர், “ஆனால் அவள் இப்போது மிகுந்த சிக்கலில் இருக்கிறாள் என்பது மட்டும் உறுதி,” என்றார்.

தன் மனைவியின் நலனின் பொருட்டு அவர் கூறக்கூடிய நடத்தை விதிகளைக் கேள்வியின்றி ஏற்பானாயின், மாயவித்தைக்காரன் ஸாடர்னோ அவளைத் தேவையான முன்னெச்சரிக்கைகளுடன் பார்வையிட தன்னால் அனுமதி நல்க முடியும் என அவர் உறுதியளித்தார். அடிக்கடியும் ஆபத்தானதாகவும் சமீபமாக அவளுக்கு வரத்துவங்கியிருக்கும் வலிப்பு நோய் மீண்டும் வராதபடிக்கு அவன் நடந்துகொள்ள வேண்டியது எல்லாவற்றையும்விட முக்கியம் என்றார்.

“ஆச்சரியமாக இருக்கிறது,” என்றான் ஸாடர்னோ. மரியா சற்று முன்கோபிதான் என்றாலும் அவள் மிகுந்த நிதானமானவளும் கூட.”

கற்றரிந்தோரின் பாவனையை வெளிப்படுத்திய மருத்துவர், “பல காலமாக மறைந்திருக்கக்கூடிய சில குணங்கள் என்றேனும் ஒருநாள் திடீரென வெளிப்படுவதுண்டு. ஆனால் அவள் இங்கு வர நேர்ந்தது நல்லதாய்ப் போயிற்று. ஏனென்றால் கடும் நடவடிக்கை தேவைப்படுகிற இதுபோன்ற நோயாளிகளுக்கெனப் பெயர் பெற்றது இம்மருத்துவமனை.” அதன்பிறகு, தொலைபேசி மீது மரியாவிற்கு இருக்கக்கூடிய விநோதமான வெறிகுறித்தும் எச்சரித்தார்.

“அவளை மகிழ்ச்சிப் படுத்துங்கள்” என்றார்.

“கவலைப்படாதீர்கள் டாக்டர்,” என உற்சாகமாகக் கூறிய ஸாடர்னோ, “அதில் நான் தேர்ச்சிபெற்றவன்.” என்றான்.

ஒரு சிறைக்கூடமும் பாவ மன்னிப்புச்சாலையும் சேர்ந்தாற்போலிருந்த பார்வையாளர் அறை முன்பு மடத்தின் வரவேற்பறையாக இருந்தது. அவர்கள் இருவரும் எதிர்பார்த்திருக்கக்கூடிய குதூகலம் பொங்கும் ஒன்றாக இருந்திருக்கவில்லை ஸாடர்னோவின் வருகை. இரண்டு நாற்காலிகளும் ஒரு பூக்களற்ற ஜாடியும் கொண்டிருந்த மேஜைக்கருகே அறையின் நடுவில் மரியா நின்றிருந்தாள். பரிதாபத்திற்குரிய ஸ்ட்ராபெரி நிற ஆடையும் தர்மமாகக் கிடைத்த நைந்துபோன சப்பாத்துகளுமாக நின்ற அவள் கிளம்புவதற்குத் தயாராய் இருக்கிறாள் என்பது பார்த்தாலே தெரிந்தது. ஒரு மூலையில் அவர்கள் கண்களில் பட்டும்படாமல் ஹெர்குலினா கைகட்டி நின்றிருந்தாள். தன் கணவன் உள்ளே நுழைந்தபோது மரியா அசையவில்லை, சிதறிய கண்ணாடித்துண்டுகளால் உண்டான தழும்புகளைக் கொண்டிருந்த அவளது முகத்தில் எந்த உணர்வும் இல்லை. அடையாளபூர்வமாக அவர்கள் முத்தமிட்டுக்கொண்டனர்.

“உனக்கு எப்படி இருக்கிறது?” என அவன் வினவினான்.

“இறுதியாக நீ இங்கே வந்து சேர்ந்தது குறித்து மகிழ்ச்சி அன்பே. நான் செத்துக்கொண்டிருந்தேன்.” என்றாள்.

அமர்ந்து பேசுவதற்கு அவர்களுக்கு நேரம் இருந்திருக்கவில்லை. கண்ணீர் பெருகப்பெருக, அங்கே அவள் அனுபவித்த துயரங்கள் குறித்தும் செவிலிகளின் மிருகத்தனம் குறித்தும் நாய்களுக்கும் தகாத உணவு குறித்தும் பயத்தினால் கண்களை மூடமுடியாமல் கிடந்த நீண்ட இரவுகள் குறித்தும் கூறினாள்.

“எத்தனை நாட்களாக நான் இங்கே இருக்கிறேன், மாதங்களா வருடங்களா என்றும்கூடத் தெரியாது. ஆனால் ஒவ்வொரு நாளும் முந்தையதை விட மோசமானதாக இருந்தது.” என்றவள் உள்ளார்ந்து ஆழமாகப் பெருமூச்சுவிட்டபடி , “முன்புபோல் என்னால் இனி ஒருபோதும் இருக்கவே முடியாதெனத் தோன்றுகிறது” என்றாள்.

அவள் முகத்தில் சமீபமாகத் தோன்றியிருந்த தழும்புகளைத் தடவியபடியே, “அதெல்லாம் இப்போது முடிந்துவிட்டது.” என்றான் ஸாடர்னோ. “நான் எல்லா சனிக்கிழமையும் வருவேன். இயக்குநர் அனுமதித்தால் இடைநாட்களிலும்கூட வருவேன். எல்லாம் சரியாகிவிடுவதை நீயே பார்ப்பாய்.”

அச்சம் நிறைந்த கண்களால் அவனை வெறித்தாள் அவள். ஸாடர்னோ தன் நிகழ்த்துகலையின் வசீகரத்தைப் பயன்படுத்த முயன்றான். எல்லா மிகப்பெரிய பொய்களுக்கும் உரித்தான விளையாட்டுத்தனத்துடன் மருத்துவரின் பரிந்துரையை இனிய விதத்தில் கூறினான். ”அதாவது, நீ முழுதாகக் குணமாவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும்.” மரியா உண்மையைப் புரிந்துகொண்டாள்.

“தயவுசெய்து கண்ணே, எனக்குப் பைத்தியமென நீயும் நம்புவதாக மட்டும் கூறிவிடாதே.”

“உனக்கு என்னவெல்லாம் தோன்றுகிறது பார்,” என்றபடி சிரிக்க முயன்றான் அவன். “ஆனால், நீ இன்னும் சிலகாலம் இங்கே தங்கினால் அது நிஜமாகவே எல்லோருக்கும் பயன் தருவதாக இருக்கும். மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் என்பதைக் கூறவேண்டியதில்லை.”

“ஆனால் தொலைபேசியைப் பயன்படுத்த மட்டும்தான் நான் இங்கே வந்தேன் என்பதை முன்பே உன்னிடம் கூறினேனே,” என்றாள் மரியா.

அச்சம்தரும் அவளது இந்தப்பித்திற்கு எப்படி எதிர்வினையாற்றுவதென அவனுக்குத் தெரியவில்லை. அவன் ஹெர்குலினாவை நோக்கினான். அதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்ட அவள் தன் கையிலிருக்கும் கடிகாரத்தைச் சுட்டி, சந்திப்பை முடித்துக்கொள்ளும் நேரமாகிவிட்டதெனத் தெரிவித்தாள். இடையீட்டை உணர்ந்து மரியா திரும்பிப் பார்த்தபோது ஹெர்குலினா உடனடித்தாக்குதலுக்குத் தயாராகிக்கொண்டிருப்பதைக் கண்டாள். கணவனின் கழுத்தைக் கட்டிக்கொண்ட அவள் நிஜமாகவே பைத்தியம் பிடித்த ஒரு பெண்ணைப்போலக் கத்தத் தொடங்கினாள். எவ்வளவு அன்பாக முடியுமோ அவ்வளவு அன்பாக அவளை விடுவித்தவன் பின்னாலிருந்து குதித்து வந்த ஹெர்குலினாவின் கருணையில் அவளை ஒப்படைத்தான். மரியா செயலாற்றச் சிறிதும் வாய்ப்பளிக்காத ஹெர்குலினா, இடது கையால் அவளைத் தரையோடு அழுத்தி மறுகையால் அவளது தொண்டையைச் சுற்றி இறுக்கியபடி, மாயவித்தைக்காரனாகியஸாடர்னோவை நோக்கி,

“போ,” எனக் கத்தினாள்.

அச்சத்தில் ஓட்டமெடுத்தான் ஸாடர்னோ.

அவளைச் சந்தித்து வந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டபிறகு அடுத்த சனிக்கிழமை அவன் தனது பூனையுடன் மருத்துவமனைக்கு வந்தான். தன்னைப்போலவே அதற்கும் உடை அணிவித்திருந்தான்: சிவப்பும் மஞ்சளும் கலந்த இறுக்கமான கால்சராய், மேஜிக் நிபுணனின் தொப்பி, பறப்பதற்கென்றே வடிவமைக்கப்பட்டது போன்ற ஒரு கம்பளம். சர்க்கஸ் வாகனத்தை மருத்துவமனை வளாகத்தினுள் செலுத்திய அவன் அங்கே கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்கள் நீண்ட அற்புதமான தந்திரங்களைக் காட்சிப்படுத்தினான். மையத்தில் குடியிருந்த நோயாளிகள் அனைவரும் தொடர்பற்ற கூச்சல்களுடனும் ஒழுங்கற்ற கரவோசைகளுடனும் பால்கனியில் நின்றபடி அதனை ரசித்து மகிழ்ந்தனர். மரியாவைத்தவிர அனைவரும் அங்கிருந்தனர்- தன் கணவனைச் சென்று சந்திக்க மட்டுமின்றி, அவனது நிகழ்ச்சியைப் பார்க்கவும் அவள் மறுத்துவிட்டாள். ஸாடர்னோ மிக ஆழமாகக் காயமடைந்தான்.

“இது ஒரு எதிர்பார்க்கக்கூடிய எதிர்வினைதான். சீக்கிரம் மாறிவிடும்.” என ஆறுதல் கூறினார் இயக்குநர்.

ஆனால் ஒருபோதும் அது மாறவில்லை. மரியாவைப் பார்ப்பதற்கு எல்லாவகையிலும் முயன்று தோற்றபிறகு, தன்னிடமிருந்து ஒரு கடிதத்தையேனும் அவள் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனப் பரிதவித்தான், ஆனால் பலனில்லை. முயற்சிகளைக் கைவிட்ட ஸாடர்னோ, அலுவலகத்தில் அவளுக்கு சிகரெட்டுகளை மட்டும் தொடர்ந்து அளித்து வந்தான் – அவை நிஜமாகவே அவளைச் சென்றடைந்தனவா என்பதைக்கூட அவன் உறுதிசெய்துகொள்ளவில்லை. ஆனால் உண்மை அவனை ஒருநாள் தோற்கடித்தது.

மீண்டும் திருமணம் செய்துகொண்ட அவன் தன் நாட்டிற்கே சென்றுவிட்டான் என்பதன்றி அவனைப் பற்றி யாரும் எதுவும் அறிந்திருக்கவில்லை. பார்சிலோனாவை விட்டு நீங்கும் முன்பாக, பாதிப்பட்டினியாகக் கிடந்த பூனையை ஒரு தோழியிடம் கொடுத்தான், மரியாவிற்கு சிகரெட்டுகள் அனுப்புவதற்கும் அவள் உறுதி அளித்தாள். ஆனால் அவளும் காணாமலாகிவிட்டாள். ஆனால் மழிக்கப்பட்ட தலையும், ஏதோ கீழைத்தேய அமைப்பின் ஆரஞ்சு ஆடையும், கர்ப்பமான வயிறுமாக இருந்த அவளைப் பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு கார்ட் இங்லெஸ் கடையில் கண்டதாக ரோஸா ரெகஸ் தெரிவித்தார். தன்னால் முடிந்தபோதெல்லாம் மரியாவிற்கு சிகரெட்டுகள் எடுத்துச் சென்றதாகவும் எதிர்பாராமல் உண்டான சில பிரச்சனைகளைத் தீர்த்துவைத்ததாகவும் அவள் தெரிவித்தாள். ஆனால் பின்பு ஒரு நாள் அங்கே சென்றபோது, அந்த சபிக்கப்பட்ட காலத்தின் மோசமான நினைவுச்சின்னம் போல நின்றிருந்த அம்மருத்துவமனையின்இடிக்கப்பட்ட சிதைவுகளை மட்டுமே அங்கே கண்டிருக்கிறாள். ஆனால் கடைசியாகச் சந்தித்தபோது, சற்றுத் தெளிவாகவும் பருமனாகவும் காட்சியளித்த மரியா அவ்வுறைவிடத்தின் அமைதியில் திருப்தி கொண்டிருந்தாள். பூனைக்கு உணவளிப்பதற்காக ஸாடர்னோ தந்த பணம் முழுவதும் காலியாகி இருந்ததால் அந்தப் பூனையையும் அவள் அன்றுதான் மரியாவிடம் அளித்திருந்தாள்.

***

 

குறிப்பு:-

Francoism: ஸ்பெயின் சர்வாதிகாரி ஃப்ரான்கோ வின் கோட்பாடுகளும் விதிமுறைகளும்
Gauche divine: புதிதாக உதயமாகியிருந்த இடதுசாரி சிந்தனை அமைப்பு.

தமிழில் இல. சுபத்ரா.
Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *