இருளில், மஞ்சள் வண்ண குண்டு பல்பின் வெளிச்சத்தில்,வீட்டின் முற்றத்தில் படர்ந்து வளர்ந்து நிற்கும் மாமரத்தின் முன்னே அப்பாவின் கைகளை அம்மா தொட முயற்சித்தாள். அப்பாவோ, கைகள் அவரை எட்டும் முன்னே, எங்களை விட்டு விலகி விலகி பின்னே சென்றார். ஆனாலும், நிழலில் எல்லா கரிய உருவங்களும் ஒரே பிரதிப்பிம்பமாய் தரையில் கிடந்தன. நானும் அம்மாவின் புடவை நுனியை கைவிரல்களில் சுற்றி வாயில் சப்பியபடி நின்றேன். அப்பா என் கண்களை நோக்குவதும், பின் அதைத் தவிர்ப்பதும், மீண்டும் வரின் கைகளை பிசைந்துகொள்வதும் என தொடர்ந்து கொண்டிருந்தார். அம்மாவின் விழிகள் நீரில் மிதக்கும் கருமீனைப் போல நீந்தி கொண்டிருந்தன. இருப்பினும், இமைகள் மூடாமல் அப்பாவையே வெறித்தன. அந்தக் கண்கள் எதனால் கனத்து இருந்தன? அப்பாவின் கண்கள் ஏன் எங்களைத் தவிர்த்தன? அப்பா எங்களை விட்டுச் சென்றதால் எதை அடைந்தார்?. ‘அப்பா’, போதும் இனிமேல் உச்சரிக்கத்தேவையில்லாத ஒரு சொல். ‘ஏமாற்றம்’, எளிதான ஆசுவாசம். ஆனால் அவரின் கண்களில் தெரிந்தது எதிலிருந்தோ தன்னைத் தூர நிறுத்தி எல்லையில்லா வானில் இறக்கைளை அகல விரித்து மிதக்கும் பருந்தின் பார்வை.

கைகளுக்குள் இருந்த பேனா கனக்க ஆரம்பித்தது, அதனை நெடுநேரமாக வைத்திருக்கிறேன். முடிவின்றி பெருத்துக்கொண்டே போகும் நினைவுக் குமிழை அமிழ்த்திப்பார்க்க வேண்டும். அது உடையும் போது எதுவும் இல்லாத ஓர்வெற்றிடம் சாத்தியம் தானே. இல்லை, அந்த நினைவுக் குமிழை முன்பின் நகர விட வேண்டும். இதுவெல்லாம் சாத்தியமா? வலிய இதில் அலைந்து திரிபவன் நான்.இதுவெல்லாம் என்ன? சிரிப்பை அடக்க முடியவில்லை. எதனை நான் தொடர்கிறேன்? முயற்சிக்கிறேன்? எல்லாமே ஏதோ ஒன்றின் தொடர்ச்சி! மூச்சை மெதுவாகக் கூட விடலாம். பாதியில் நிற்கும் பரிசோதனையோ மூச்சு முட்ட வைக்கிறது. ஆனாலும், இது மட்டும் தான் என்னுடையஆசுவாசமும். நான் அமர்ந்திருக்கும் பரிசோதனைக் கூடத்தின் சுவர்கள் மெதுவாக என்னை நோக்கி நகர்ந்து வருவதைப் போல உணர்ந்தேன். கரும்பைப் பிழியும் இயந்திரத்தில் அகப்பட்ட உணர்வு என்னை ஆட்கொள்கிறது. இருக்கட்டும், இதைத் தானே நான் விரும்புகிறேன். எதிரே சுவரின் சட்டகத்தில் மாட்டப்பட்ட புகைப்படத்திலிருக்கும் சித்தார்த்தன் அமைதியாக பாதி இமைகள் மூடி மெல்ல இதழ் விரித்து புன்னகைக்கிறான். இப்படித்தானே அவன் இருக்க விரும்பிருக்க மாட்டான். மனதிலிருக்கும் அத்தனையையும்பிய்த்தெறிந்து அம்மணமாக அலைய வேண்டும்.

சதி, வழக்கம் போல உள்ளறையில் அமைதியாக இயங்கிக் கொண்டிருந்தாள். நான் சொல்வதை மட்டுமே செய்பவள். என்னிடம் கேள்விகள் எழும்பாமல் பதில் பேசாதவள். அப்பாவின் முகம் முழுவதுமாய் மங்கிய கருப்பு வெள்ளை புகைப்படம் என்னுள் மெல்ல ஸ்தூலமாகி உருக்கொண்டது. கண்களைச் சுருக்கி அதையும் காண மறுத்தேன். அப்பாஎனக்காக விட்டு சென்றதில் இந்த பரிசோதனைக் கூடமும்ஒன்று. செங்கற்கள் கொண்டு எழுப்பி, சிமெண்ட் பூச்சுஇல்லாத அமைப்பில், ஆங்காங்கே மூங்கிலின், பிரம்பின்இருப்பு. அப்பாவின் ரசனை தனிதான். மெதுவாக சன்னலின்அருகே சென்று பிரம்பு நாற்காலியில் அமர்ந்தேன், மாமரத்தில்இருந்து இறங்கிய காற்று பிஞ்சு மாங்காயின் மணத்தைஅறைக்குள் நிரப்பியது. கண்கள் இடப்புறம் எதேச்சையாக திரும்ப பரிசோதனைக் கூடத்தின் கதவிடுக்கில் அப்போதும்அந்த நிழல் தெரிந்தது,

வீட்டிற்கு வந்ததும் அடுக்காளையில் ஒளித்து வைத்திருந்த ராயல் சேலஞ்சு குப்பியை தேடிப்  பிடிக்க வெகுநேரம் பிடித்தது. கோப்புகளைக் கணினியில் இது இந்த இடம் என கவனமாக சேமித்து வைக்கும் பழக்கமுள்ளவன்,இதில் ஏன் கவனக்குறைவாக இருக்கிறேன் மனதிற்குள் திட்டியபடியே, நாற்பத்தைந்து மில்லி ஊற்றி தண்ணீரை நிரப்பினேன். மனைவியின் குரல், கூடவே குழந்தையின் அழுகையும் காதில் விழுந்தது. எதையோ தவற விடுகிறேன், யோசனையில் முதல் மிடறு குடித்தது  ஞாபகமின்றி அடுத்த குவளையை நிரப்பினேன். பவியின் நினைவுகள் மண்டைக்குள் குமைந்த. மது உள்நுழைந்ததும் எதையெல்லாம் தவிர்க்கிறோமோ! அதைத் தூண்டி விடுவதில் வல்லது.

விரும்பி பண்ணிய திருமணம் தானே. முதலிரவில் காமம் தூண்ட உடல் முயக்கம். அன்றைய இரவில் கண்களால் அவள் கண்களுக்குள் ஊடுபாய்ந்தேன். பவி கைகளால் கண்களை பொத்திக்கொண்டாள். உடலின் மொத்த சக்தியையும் இழந்து, தளர்ந்து அவளின் கூந்தலில் முகம் புதைத்தேன். இந்த நொடிக்காகத்தான், மோகத்திற்காகத்தான் காதல், திருமணம், குடும்பம் எல்லாமுமா? இருவரும் சிரித்துக்கொண்டோம். எதேச்சையாக தலையை இடப்புறம் திருப்பவும் நீலவண்ண இரவு விளக்கிலிருந்து விரியும் மெல்லிய வெளிச்சத்தை எத்தவொரு பொருளும் மறைக்காமல் தன்னிச்சையாய் ஓர் நிழல் கதவிடுக்கில் தெரிந்தது.

விதி, முதல் முயற்சியிலே கருவுற்றாள். பவியும்எல்லாமுமாய் இருந்தாள். நான் ஒரு வித்தியாசப் பிராணி. சிலசமயம் குழைவேன், பின் நெடுநாள் நெருங்கவே மாட்டேன். குழம்பித் தவித்திருப்பாள். அவளிடம் எத்தனையோ கேள்விகள் இருக்கும் என்னிடம் கேட்க? என்னைக் கண்டால் இயல்பாக இருப்பது போல காட்டிக்கொள்வாள். ஏதோ ஒரு புள்ளியில் இதுவெல்லாம் தித்திக்க ஆரம்பித்து, போதும் எனத் தோன்றியது. வீட்டில் எப்போதும் அறைக்குள்ளேயே கிடந்தேன். உணவுக்காக மட்டுமே வெளியே வருவேன். பவி இதையெல்லாம் எளிதாகக் கையாண்டாள். பெங்களூருவில்பல்கலைக் கழகத்தில் தான் அவளைச் சந்தித்தேன். காதலிக்கும் போதே என்னுடைய எல்லா கிறுக்குத்தனமும் அவளுக்குத் தெரியும். அவள் விண்வெளி பொறியியல் பற்றிய படிப்பில் சிறப்பு பட்டம் பெற்றவள். நான் பார்டிகிள்ஸ் ஃபிஷிக்ஸ் படித்தேன். முதுநிலை மாணவர்களுக்கும், பி.எச்.டி படிப்பவர்களுக்கும் புரோஜக்ட் செய்து கொடுப்பதும், சிறப்பு நிலை பேராசிரியராக செல்வதும் மட்டுமே என் வேலை. அவள் அலுவலகம் செல்லும் போது குழந்தையும் அழைத்துச் செல்வாள். நான் மட்டுமே தனியாக வீட்டிற்கும் பரிசோதனைக் கூடத்திற்குமிடையே அலைவேன். குழந்தையைக் கண்டால் சிலசமயம் கொஞ்சுவேன், விளையாடுவேன், அழும் போது வெறுக்கவும் செய்வேன். பவி, சில இரவுகளில் என்னருகே கட்டாயமாய் வேண்டும், அவளின் நடுமுதுகில் இருக்கும் மச்சத்தை மென் நீலவண்ண இரவி விளக்கின் வெளிச்சத்தில் பார்க்கவேண்டும். பின் இரவு கவிழ்கையில் தனியே சென்றுவிடுவேன். மது அதன் வேலையை காட்டுகிறது,  மீண்டும் ரு மிடறை பருகியபின், காலையில் நடந்த விஷயங்களை ஒருமுறை வலுக்கட்டாயமாய் நினைவுக்கூர்ந்தேன்.

திரும்பி வர வாய்ப்பு எவ்வளவு சதவிகிதம்?

சரிபாதி வாய்ப்புள்ளது.” சதியின் இந்தப் பதில் மண்டைக்குள் குடைந்தது.  பயமா இருக்கா? நிச்சயமா இல்லை. எதுக்கு இந்த பரிசோதனை எல்லாம்,யோசித்துக்கொண்டே என்னுடைய அறைக்குள் சென்றேன், அப்பா உபயோகித்த சில பொருட்கள் இருந்தன. ங்க கிட்ட சில கேள்விகள் இருக்கு, பார்த்தபடியே மீண்டும் ஒரு மிடறு. சாய்வு நாற்காலியில் அமர்ந்து கால்களை நீட்டி நிதானமாய் அமர்ந்தேன்.  நீங்க ஏன்பா சில கேள்விகள பதில் இல்லாம விட்டுட்டு போனீங்க? இதுக்கு காரணகர்த்தா நீங்கதான், சத்தியமா சொல்றேன். இதே ஆராய்ச்சி.  நீங்க விட்ட புள்ளில தொடர்றேன். பார்டிகிள்ஸ், பரிமாணம் மறுபடியும் எனக்குள். ஏதோ சண்ட போட்டீங்க அம்மாக்கூட, என்ன ஒருபார்வை பாத்தீங்க,  இப்போ புரியுது விரக்தியான பார்வை. ங்க முகம் கூட எனக்குத் தெளிவா ஞாபகம் இல்ல. அப்புறமா, நீங்க திரும்பி வரவேயில்ல. கொஞ்ச நாளுல அம்மாக்கு நினைவு தப்பிடுச்சு. தனியா பேசுவாங்க, கேட்டா நீங்க அங்க இருக்கிறதா சொல்வாங்க. சாகுற வரை இல்லாத உங்க கூட பேசிகிட்டு இருந்தாங்க. ஆனா, அதுனால பாதிக்கப்பட்டது நான் தான். அம்மாவும் அப்பாவும் இல்லாம எதுலயும் ஒரு விருப்பம் இல்லாம அலைய விட்டுட்டேங்க. இன்னைக்கு எனக்கும் கணவன் மனைவி குடும்பம் எதுலயும் ஒருவித பிடிப்புஇல்லாம ஆயிடுச்சு. இந்த சமூகமும், நகரமும் கூட புழுங்கல் வாடை அடிக்கிற அறை மாதிரிதான், ஓங்கரிக்குது. பொய்யா சிரிக்கிறது, வாழுறது, அட்ஜஸ்ட் பண்ணுறது என்னால முடியல. இப்போ இருக்கிறது உங்களோட பரிசோதனைக் கூடமும், அப்புறம் ங்க டைரி, வீடு ஷிப்ட் பண்ணும் போது என்னோட பேக்ல தான எடுத்து வச்சேன். அத எங்? ஓடினேன்.

பவி, குழந்தையை உறங்க வைத்தவள் என்னைக் கவனித்து பின்னாலே வந்தாள்.  பாதி சாத்தியிருந்த கதவைத் திறந்து உள்ளே வந்தாள். “நந்து, மணி என்ன ஆச்சுதெரியுமா?  எனக்கு உன்னால எந்த நிம்மதியும் இல்ல, பேசிக் வுமன் நீட் கூட உனக்குத் தெரியல. ரெண்டு பேரும் எப்போ ஒரே பெட்ல உறங்குனோம். ரொம்ப நாள் யோசிச்சுட்டேன். இது உன்னோட வாழ்க்கை மாத்திரம் இல்ல. நமக்கு குழந்தை இருக்கு. என்ன விடு. பாப்பா என்ன பாவம் பண்ணிச்சு?கடைசியா என்னைக்கி குழந்தையைத் தூக்கின?எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு. உன்ன மாதிரி ஒரு ஆளுக்குலாம் எதுக்கு கல்யாணம், கொழந்தைங்க,” கத்தினாள்.

“பெட் மட்டும் தான் ஃபேசிக் நீட், அப்படியா?” எவ்வளவோ தவிர்த்தும் வார்த்தைகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

“அப்படிப் பேசு, அட்லீஸ்ட் அப்போவாச்சும் எங்கூட பேசுவியே அந்த அர்த்தத்துல கேட்டேன். உன்னோட நினைப்பு எப்போவும் ஒன்னு தான். லவ் பண்ணும் போதும் என் பின்னாடி எப்படி சுத்துன, ஒனக்கு என்னோட உடம்ப நிர்வாணமா பாத்ததும் எல்லாம் முடிஞ்சிடிச்சுல்ல,அதுக்குத்தான் கல்யாணம்ன்னா குழந்தை எதுக்கு? இதுதான் எல்லாத்துக்கும் முடிவா இருக்கணும். என்னோட வாழ்க்கை ஒன்னும் முடிஞ்சு போகல. க்விட் பண்ணிக்கலாம்.” பேச்சை நிப்பாட்டியதும் கண்கள் கலங்கியபடி என்னையே வெறித்தாள்.நான் கதவிடுக்கைக் கவனிக்கையில் அந்த நிழல் அசைந்தாடியது.

“எங்கப் பாக்குற, பேசு. என்னப் பிரச்சனை இருந்தாலும் சொல்லு. நாம பாத்துக்கலாம். இல்ல, முடிச்சிக்லாம்.வாழ்க்கைய புதுசா ஆரம்பிச்சிக்கிறேன்.” தெவங்கி அழ ஆரம்பித்தாள்.

ஒருமுறை நிதானித்து அவளை நோக்கினேன். பெரும்பாவத்தின் சிலுவையை என் தோள்களில் இறக்குகிறாள். எனக்கு நான் மட்டும் இருக்கும் உலகில் மீண்டும் அலைய வேண்டும். அங்கே எவ்வித எதிர்ப்பார்ப்புகளுமில்லை. இவளிடம் சொல்லி எந்த பயனுமில்லை. ஆதலால் பதிலின்றி பார்வையைத் தவிர்த்தேன். குரலில் வலுவில்லை, “நான் இப்படித்தான், கொஞ்ச நேரம் தனியா விடு,அவள் கண்களைச் சந்திக்காமல் கூறினேன்.

“எப்போவும் நீ தனியா தான் இருக்க,” பதில் கூறிவிட்டு வேகமாகச் சென்றாள்.

என் அறைக்குள் நுழைந்து கதவைக்  காட்டமாகச்சாத்தினேன். பையைத்  தேடி, அப்பாவின் டைரி கையில் கிடைத்ததும், மூக்கு கண்ணாடியை அணிந்து அவரின் நாற்காலியில் அமர்ந்தேன். சரியாய் ஆறு ஆகஸ்ட் ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூறு அப்பாவின் கையெழுத்து இருந்தது, அவர் காணாமல் போன அதே நாள்.

தையுமே புரிஞ்சிக்கிற மனநிலைல நீ இல்ல. முடிவு பண்ணிஆரம்பிச்ச வாழ்க்கை இது, என்னோட கனவு எல்லாமுமேதெரிஞ்சு பண்ணின கல்யாணம் இது. ஆனா எல்லாமுமேஅதுக்கு அப்புறம் தலைகீழ். ரெண்டு பேருக்குமே கஷ்டம் தான். நீ வெளிய காட்டுற, நான் காட்டல. ஏன் கல்யாணம் முன்னாடிசகிச்ச மாதிரி, உன்னால இப்போ என்னை சகிக்க முடியல. எரிஞ்சு எரிஞ்சு விழுற. எனக்கு, போதும் இவ்வளவுதான்னு தோணுது. இன்னைக்கு நடந்த சண்டை மாதிரி இன்னொன்னுவேண்டாம். இனிமேல் நான் பொறுத்து போவேன். கண்டிப்பாசண்ட போட மாட்டேன். அதுவும் குழந்தை முன்னாடி.. போதும்

த  விட்டுறக்கணும்.  பட் முடியல. என்னோட ஒய்ப் என்னால  படுற கஷ்டம் என்ன தினம் தினம் குற்றவுணர்ச்சியா என்ன கொல்லுது. இந்த ஆராய்ச்சிய என்னால விடவும் முடியல. ஜெயிக்கிறது ஒருவித போதைன்னா,  முயற்சி செய்றது,தோக்குறது, மறுபடி மறுபடி அங்கேயே விழுறது எனக்கு அதைவிட போதையா இருக்கு. நிர்பந்திக்கப்பட்டவாழ்க்கைதான் பெரும்பாலும் எல்லோருக்கும் கிடைக்குது.விருப்பப்படி வாழனும்ன்னு நெனச்சா எதையெல்லாம் இழக்கவேண்டியிருக்கு. இந்த ஆராய்ச்சியினால என்ன வேணும்னாலும் நடக்கலாம். பார்டிகிள்ஸ், இணைப்பிரபஞ்சம் எல்லாமே நிஜம். நம்ம தொன்மங்கள் மறுஜென்மம்ன்னு சொல்றது ஒருவகைல உண்மை. பட்  ரெண்டுமே பேரலல்.  ஒரே நேர்கொட்ல பயணிக்கிற வேற வேற உலகங்கள். கால அளவு ஒண்ணுக்கொண்ணு மாறுபடுது. எல்லா காலத்துலயும் அதே நினைவுகள். நாம இந்த உடல விட்டுட்டு ஆன்மாவை வெளிய கொண்டு வந்தா அது சாத்தியம். என்ன சிலநேரத்துல மீண்டும் அதே காலத்துக்குள்ள நாம வரமுடியுமான்றது கேள்வி. மகாவிஷ்ணு தசாவதாரத்துல பத்து அவதாரம் எடுக்கிற மாதிரி.உடல் வேறவேற ஆனா ஆன்மா ஒன்னு. யோகா மூலமா இத நான் செய்ய போறேன். பிராணம் வெளிக்கொள்ளுதல் மூலமா. ஆன்மா வெளிய வந்தா இணைஉலகங்கள் கண்ணுக்கு தெரியுது அத லாவகமா கடக்கத் தெரியணும். ஒரு விபத்தா நா பாத்துட்டேன். விதி, திரும்ப பூத உடலுக்குள்ள நுழைஞ்சுட்டேன். ஒரு ட்ரையல். மறுபடியும் இந்த டைரி எழுதலனா, நா தோத்துட்டேன்.

குட்டுவுக்கு, இத நீ படிப்பியா இல்லையானு தெரியாது. அப்பா உன்கூட அதிக நேரம் இருந்தது இல்லை. நீ என்னவாகும்னு எனக்கு எந்த ஐடியாவும் கிடையாது, உன்னோட சாய்ஸ். ஐ அம் நாட் ஆன் ஆர்டினரி டாட். எங்க அப்பா ஒரு ப்ரோபசர், அவருக்கு நா அவரே மாதிரி ஆகணும்னு ஆசை. சின்ன வயசுலயே அதிகமான சயின்ஸ் தான் படிச்சிருக்கேன், எனக்கு ஒரு காமிக்ஸ்சும் தெரியாது, எல்லாமுமே சயின்ஸ். அதான் இன்னைக்கி இங்கே நிற்கிறேன். நீயும் உனக்கு புடிச்ச மாதிரி ஆகணும். எனக்கு உலகத்துல பொதுவா இருக்கிற எதையும் எக்ஸ்ப்ரெஸ் பண்ணத்தெரியாது. உன் விஷயத்துலயும். இத நீ படிப்பேன்னு நா எழுதல. ஐ தாத்ட் டு வ்ரைட் பார் மை ஓன் பேக்கஜ்’.

டைரியை கீழே வைத்ததும் மனம் சமநிலையின்றிகொதித்தது. அப்பாவோடு சில மலைச்சிகரங்களுக்கும், கடற்கரைகளுக்கும் சென்றிருக்கிறேன். ஆள் நடமாட்டமில்லாத தனித்தப் பகுதிகளாக அவையுமிருக்கும். அங்கேயும், அம்மாவும் நானும் ஒரு மூலையில் இருக்க, அப்பா தனியாக ஏதோ ஒரு புள்ளியை வெறித்தபடி அமர்ந்திருப்பார். கல்லூரி படிப்பு முடித்த பிறகு இருவருக்கு மேல் மனிதர்கள் இருக்கும் இடத்தில் நான் இருந்தேயில்லை. மனிதர்களோடு உராசிக்கொண்டு நடப்பதற்கு என்னால் முடியாது. இரவில் மட்டும் பயணிப்பேன். பகல் முழுக்க அறையில் ஒற்றையாய் எதையோ படித்துக்கொண்டும், செய்துகொண்டும் இருப்பேன். வெளிச்சம் என் கண்களைக் கூசக் செய்யும். இரவே எனக்கு இனிமையானது.

அப்பா போன பிறகு அம்மாவின் உடல்நிலை நாளுக்குநாள் சரியில்லாமல் போய்க் கொண்டிருந்தது. அப்பாவின்நண்பர்கள் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டவர்கள்கொஞ்சம் பேர் உதவினார்கள். அப்பா என்னிடம் அதிகம்நெருங்கியதில்லை, ஆனாலும் அவர் இருந்தவரையிலும் ஏதோ ஒரு உணர்வு எனக்கு பாதுகாப்பை அளித்தது. அப்பாஎங்களுக்காக பொருளியல் ரீதியாக சேர்த்தவையும் எங்களைகைவிடவில்லை. அம்மாவின் உளறல்கள் நெடுநாள்நீடிக்கவில்லை, சீக்கிரம் உறங்கிப் போனாள். நான்விடுதியிலே தங்கி படிக்க ஆரம்பித்தேன். உண்மையில் அந்தத் தனிமை பிடித்திருந்தது. தனிமை ஒரு உயிரி, பிற எவற்றையும் அண்டவிடாமல் சதாசர்வ நேரம் நம்மைப் பற்றி மட்டுமே சிந்திக்கவிடும். விடுமுறைகளில் இந்தியா முழுக்க தனியாகச் சுற்றினேன். நண்பர்களையும் சேர்த்துக்கொள்ளவில்லை. நானும் உணர்ச்சியுள்ள மிருகம்தான் என்பதே பவியால் தான் தெரிந்தது. அவளைப் பார்க்கும் போதெல்லாம் என்னுள் மோகம் படரும். அதுவே என்னைத் திருமணத்திலும் கொண்டு நிறுத்தியது. என்னைச் சுற்றிலும் காலப்பிரயாணம் பற்றிய புனைவுகள், அபுனைவுகள் மட்டுமே, நான் விரும்பிப் போவதும் அறிவியல் கூடங்கள் தான். அப்பாவின் கனவுகளை அவரின் நண்பர்கள் மூலமாக அறிந்தேன். உள்ளுக்குள் ஓர் குறுகுறுப்பு அதையே தொடர வைத்தது.

கூடவே அந்த நிழல், பவியைத் திருமணம் செய்த பிறகுதான் அதைக் கவனிக்கிறேன். என் வாழ்வின் உணர்ச்சிகள் மேலோங்கும் எல்லாத் தருணங்களிலும் கதவிடுக்கின் வழியே என்னை அது கண்காணிப்பது போன்றொரு தோற்றம். டைரியை மேஜையில் வைத்துக்கொண்டு கதவிடுக்கை நோட்டமிட்டேன். ஆம், நிழல் தொடர்கிறது. முதன்முறையாக எழுந்து அதன் அருகே சென்றேன். அருகே செல்ல செல்ல அதன் எல்லை விரிந்தது. சிலஅடி இடைவெளி மட்டுமே இருந்தது. என் கால்கள் தரையில் வீழ்ந்திருந்த நிழலின் மீது பதியவும் நான் மின்சாரத்தால் தாக்கியது போல தூக்கி வீசப்பட்டேன்.

கருவியில் சிலமாற்றங்கள் செய்து கொண்டேன். சதியின் அறிவியல் மூளை மின்நுழையா நுண்ணிழைக் குடிலை,கண்முன்னே காண்பித்தது. சதி, நான் உருவாக்கிய செயற்கைநுண்ணறிவு கொண்ட ஓர் இயந்திரம். “இந்த ஃபார்முலா செயல்படுமா?” கேட்டேன். “ஒரு அணுவைப் பிளந்தா, அதோடஅளவுக்கு சரிப்பாதியாய் இருக்கிற நுண்துகள் கூட இதுக்குள்ள நுழைய முடியாது. சிலதுக்குள்ள மின்மத் தன்மை இருக்காது.  அது நியூட்ரினோ. அதே மாதிரி போசான், கடவுளின் துகள். உள்ளுக்குள்ள நுழையும், வெளிய போக முடியும். நீங்க பிராணம் வெளிகொள்ளுதல் மூலமா இத செய்ய முடியும். ஆன்மா கண்டிப்பா யாரும் கண்டிராத போசான், இல்ல நியூட்ரினோ மூலக்கூறுகளோட ஒத்துப் போகணும். அதுக்கு நிறையின்மையும் இருக்கணும்.” சதியின் பதில் மீண்டும்பயமுறுத்தியது. ஒரு நீண்ட பெருமூச்சு, பின்விளைவுகளைப்பற்றி சிந்திப்பதை கொஞ்சம் தள்ளிப் போடும்.

பவியை முதன்முதலில் சந்தித்தப் பொழுது, அவளின்நெற்றி வியர்வையில் நனைந்திருந்தது, அவளின் கழுத்திறங்கி, மையத்தில் மார்புகள் பிரியும் கோட்டில் மென்கோடாய் செல்லும் மயிரிழைகள் நினைவில் வரவும், உடனே கண்களைஇறுக்கினேன். பாப்பாவை முதன்முதலில் கைகளில் வாங்கியநொடி என்னுள் மெல்லிய பதட்டம் உருவானது, அதே நிலை என்னைச் சுற்றி வளைக்க, சதையில் இருந்து பிய்ந்த ஓர்பிண்டம் கைகளுக்குள் புழுவைப் போல நெளிந்தது. வியர்க்க ஆரம்பித்தது, சுதாகரித்துக் கொண்டவனாய், கதவிடுக்கைக் கவனிக்காமல் தானாய் வார்த்தைகளை உருவாக்கஆரம்பித்தேன், சதி  என்னோட அஸெர்ட் லிஸ்ட் எல்லாமே உனக்குத் தெரியும். தெரிஞ்சுதான் இதப் பண்றேன். ஐ வான்ட் டு டூ சம் திங்க் எக்ஸ்ட்ராடினரி. ஒருவேளை என்ன நடந்தாலும். பண்ண வேண்டிய காரியங்கள் உனக்குத் தெரியும். அதை செய். பாப்பா..,” பாப்பா எனும்போது ஏனோ குரல் ஏறியிறங்கியது. என்ன முட்டாள்தனம். முடிவு எதுவாக இருந்தாலும் இதைப் பகிரவேண்டும். “உங்க மனைவி?சதியின் கேள்வியை முதல்முறை எதிர்கொண்டேன். நான்உருவாக்கிய ஒரு ஏஐ, அதன் நிரல்களை பவியின்குணாதிசத்திலே உருவாக்கினேன்.  இலை உதிரும் புன்னகையை விட்டவாரே, “அவளுக்கு நா கொடுக்கிற அஸெர்ட்ஸ் வேண்டாம்னு சொல்லுவா. ரொம்ப சென்சிடிவ் அண்ட் போல்ட். செல்ப் எஸ்டீம் அதிகம்,” சொல்லிக்கொண்டே நுண்ணிழைக் குடுவையில் நுழைந்து, மின்னழுத்தியை நெஞ்சில் சொருகினேன். “போன தடவை கொடுத்த அதே இன்புட்.” கண்களை மூடி, நெஞ்சில் கைவைத்தேன். ஆக்சிஜன் குழாய் மூக்கில் இருந்தது. ஒரே அழுத்து, நெஞ்சு கனமான இரும்பு கம்பியால் தாக்கிய வலியை உணர ஆரம்பித்தேன். வெளிச்சம் குறைய குறைய இருள் மட்டுமே எங்கும்.

விதவிதமான நிறங்களில் பாதைகள் பிரிந்தும் பின்சேர்ந்தும் கண்முன்னே விரிந்த.  நான் குழைந்து, பின் விரிந்தேன். ஊத விரியும் பலூன், விட்டதும் ஒருநொடியில் சுருங்குவதைப் போல அமிழ்ந்து பெருகினேன். ஒளி பிவுற்றுபல்லாயிரம் நிறங்கள் ஒளிர்ந்தன. வாய் விரிந்து பிளந்து, நானே வெளிவந்தேன். என்னை தாங்கிக் கொள் என்பது போல அலைந்தேன். லட்சம் எரிமலைகள் வெடித்து நெருப்பு குழம்பு  என் தலைமேல் அருவியாய் கொட் உடல் குளிர்ந்தது.  நான் லட்ச கண்ணாடிகளின் ஒற்றைபிம்பமாய் எல்லாவற்றிலும் தெரிந்தேன். இங்கே ஒலியில்லை. நிச்சலனம். எதிலும் பதறா மனம், இக்கொலை மௌனத்தில் அதிர்ந்தது. பருப்பொருள் இல்லை, நான் அடைபட்டு கிடந்த உடல் இல்லை.

மனதிற்குள் காலத்தை நினைக்க எத்தனித்தேன். எது காலம்? முதல் எது? முடிவு எது? அகம் அதன்போக்கில் ஒரு சொல்லை உச்சரித்தது ‘தனிமை’, ‘தனிமை‘. மனம் பெயரில்லா பறவையானது. சட்டென ஒரு நிழல்என்னைக்கடந்தது. அதை பின்தொடர்ந்தேன். எல்லாமுமே நீலமாக வியாபித்திருந்தது. முன்னே செல்லும் நிழலாகிய பிம்பம் மாத்திரமே வெண்மையாய் ஒளிர்ந்தது. சிலநேரம் ஆகியிருக்கும், எங்குமே கூச்சல், பெரும் சப்தங்கள். கோளமான ஒன்றில் நுழைந்திருந்தோம். சுற்றிலும் காட்சிகள், ஒரு அழகான பெண்ணின் கூந்தல், சிறிய மச்சமுள்ள நெற்றி, பிஞ்சு பாதம், விரல்கள். நான் கிறக்கத்தில் மிதந்தேன். பின் மாந்தோப்பு, நடுவே ஒரு வீடு, அங்கே கட்டிலில் படுத்திருந்தேன். வெகுநேரம் ஆகியிருக்க வேண்டும். அசதியின்றி எந்திரித்தேன், எதிரே நிழலாய் உருவம் அசைந்தாடியாது.

காட்சிகள் மாறியது. எல்லாமுமே தீர்மானித்தது போல, நாற்காலியில் அமர்ந்திருந்தேன். பரிச்சயமான இடம். என்னுடைய அலுவலகம். சன்னலோரத்தில் இரு இருக்கைகள். நடுவே சிறிய மேஜை அதிலே ராயல் சேலஞ்ச் போத்தல்,  இரு குவளைகளில் கொஞ்சமாய் ஊற்றிய மது, அருகே தண்ணீர்ப் புட்டி. சலனமின்றி இருந்தவரைக் கண்டேன். “தேவைக்கு தண்ணீ ஊத்திக்கோ. பட் என்னோட சஜஷன் கொஞ்சம் நிறைய ஊத்திக்கோ. விஸ்கி ஓகே. காலைல தெளிவா எந்திரிக்கலாம்” தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். எனக்கோ, என்ன நடக்கிறது?  எங்கே இருக்கிறேன்?இன்னொரு பிரபஞ்சமா?  என்றெல்லாம் எண்ணவோட்டம் பெருகியது. “சியர்ஸ்” என்றபடி ஒரு மிடறு குடித்தபடியே, கண்களால் “ம்ம்,  எடு” என்றார். எடுத்துப் பருகினேன், நிதானம் ஆனேன். “ரொம்ப சீக்கிரம். குட்” உதட்டின் ஓரம் மெலிதானப் புன்னகை வடிந்தது அவ்வுருவம் கூறும்போது. வார்த்தைகள் எதுவுமே உற்பத்தி ஆகவில்லை. மௌனம் மாத்திரமே நிரம்பியிருந்தது. அவரின் முகம் மட்டும் எனக்குத் தெரியவில்லை. கண்களைச் சுருக்கியும் அதில் தெளிவில்லை.

“நந்து, இப்போ உனக்கு முப்பது, முப்பத்திரண்டு வயசு இருக்குமா?” அலையலையாய் மடிந்திருந்த தாடியில் விரல்களால் கோதியபடியே கேட்டார். “ஆமா, முப்பது முடிஞ்சுடுச்சு.

“பாத்தா ரொம்ப வயசான மாதிரி இருக்க. நீ கடைசியா எப்போ மகிழ்ச்சியா இருந்த?

பவிய முதல்முறையா பாத்தப் போது, இல்ல இல்ல பாப்பா பொறந்த போது,இவர் யார்? இதெல்லாம் ஏன் கேட்கிறார் என குழம்பியபடியே இருந்தேன்.

ஒரு குழந்தை தானா?

ஆமா, ஒரு பொண்ணு மட்டும்,” இதெல்லாம் கனவாக இருக்குமா?  என்னிடம் நீண்ட உரையாடலை தொடங்க வார்த்தைகள் இன்னும் பிறக்கவில்லை. கேள்விகளுக்கு மட்டும் பதிலைச் சொல்கிறேன்.

காலப்பிரயாணம் செய்யிற, நிகழ்காலம் புளிச்சிடுச்சு போல?” தலையைக் கவிழ்த்தபடியே கேட்டார்.

யார் காட்சிகளைச் சுழல வைப்பது. மரத்தடியில் போடப்பட்டிருந்த கல்பெஞ்சில் இருந்தோம். எதிரே பரந்த ஏரி, அதன்மேல் பனி புகைந்தபடி கிடந்தது, நானும் தான். “ஆச்சர்யமா இருக்கா? என்ன எல்லாமுமே மாறிட்டேஇருக்குண்ணு. இது நிஜம் இல்லை. நாம இப்போ ட்ராவல் பண்றது உன்னோட கற்பனைல. இது எல்லாமுமே நீ என்கூட இருக்க ஆசைப்பட்ட இடங்கள் இல்ல. இந்த ஏரி, நீ கொடைக்கானல் போயிருந்தப்போ. வீடு ஆலப்பி காயல் நடுவுல. பட் ட்ரிங்க்ஸ் கொஞ்சம் ஓவர்ப்பா,” சிரித்தபடியேஎழுந்தவர், என் தோளைத் தட்டினார்.  வார்த்தைகள் பிறக்க ஆரம்பித்த.

“அப்பா”,  அவர்தான், கொஞ்சம் காற்றோடு வார்த்தையும்கலந்து வேறொரு ஒலியாய் அவர் காதில் நுழைந்திருக்க வேண்டும். என்னவென்பது போல பார்த்தார்.

“நா தனியா வளந்ததுக்கு நீங்க தான் காரணம்,” நேரடியான குற்றச்சாட்டு. எதிர்பார்த்திருந்தது போல, “ஒன்னோட குழந்தையும் இந்தக் கேள்விய கேட்கும். பதிலயும் நீயே சொல்லிக்கோ!” புரியாமல் விழித்தேன்.

 “என்ன பதில், நான் உங்கள மாதிரி இல்ல,” நெற்றி வியர்த்தது.

இது ஒரு போலித்தனம், பாவனையான முடிவு. ஈவன்ட்சுலி, நீயும் ஒரு கோழை. பைத்தியக்காரன். பீயிங்க் அலோன். சமூகத்துல ஒட்டி வாழ முடியாத பிள்ளைப்பூச்சி. ஒனக்கு தெரியுமா அந்த பூச்சிய? அருவருப்பா இருக்கும், ஆனா, யாரும் அத சீக்கிரம் கொல்ல மாட்டாங்க. அந்த அருவெருப்பே அது மேல கரிசனத்த உருவாக்கும். அதோட முடிவும் எந்த உயிரினத்தோட பார்வைலயும் இருக்காது.மண்ணுக்குள்ள தன்னோட இடம் எதுன்னு தோண்டிக்கிட்டே இருக்கும். மண்ணோட ஆழம் அதுக்குத் தெரியுமா? கடைசிவரையிலும் தோண்டுதல் தொடர்ந்துக்கிட்டே இருக்கும், முடிவே இல்லாம. அப்படியே செத்துப் போகும். அதுவா உருவாக்கிக்கிற விதி, தன்னோட விதியை தானே சமைக்கிற மாதிரி.நான் மௌனமானேன். அவரும் தொடர்ந்து எதுவும் பேசவில்லை. நீண்ட மௌனம் ஆபத்தானது. நானே அதை உடைக்க எத்தனித்தேன்.

“நீங்க வீட்டுல இருக்கவே மாட்டீங்க. உங்களோட முகம் தெளிவில்லாமத்தான் இப்போ வர ஞாபகம் இருக்கு. நீங்க வீட்டுல அதிகமா இல்லாதது  அம்மாவ ரொம்பவே காயப்படுத்திச்சு. பண்டிகைக்கு கூட நேரம் ஒதுக்கிட்டுவருவீங்க. அப்படி என்ன சாதிச்சீங்க?  திரும்பியே வராம இருக்கீங்க. அதுதான் அம்மாவக் கொன்னுச்சு. உங்களோட பிரிவு, உங்க மனசுல  அவங்களுக்கான இடம் என்னன்னே தெரியாம செத்து போனாங்க. அவ்ளோ பைத்தியம் உங்க மேல. ஒரே பையன் என்னையாவது கொஞ்சி இருக்கீங்களா?கிடையாது. தனியாவே இருக்கிறது எனக்கு வாய்க்கப்பட்டது.கடைசில என்ன ஆச்சு. எனக்கும் குடும்பம், மனைவி, குழந்தைஎல்லாம் இருந்தும் எது மேலயும் எந்தவொரு நம்பிக்கையும் இல்லாம, பயமாகி அதுவே ஒரு அழுத்தம் ஆயிடுச்சு. உடனே சித்தார்த்தன் மாதிரி எல்லாத்தையும் விட்டுட்டு வெளியேற முடியுமா? எதாவது ஒரு கிறுக்குத்தனம் நம்மக்கிட்ட இருக்கும்இல்லையா, என்னவா வேணா இருக்கட்டும், நீங்க காமிச்சது, எனக்கு தெரிஞ்ச வழியும் இதுதான் கோபத்தோடு முடித்தேன்.

“சரி, நான் தப்பு பண்ணிட்டேன். நீயும் அதையேத்தான் செய்ற. நான் என்கிற ராஜபோதைல இருக்க. யார் உணர்வுக்கும் மதிப்பு கொடுக்கிறது கிடையாது. நானும் பண்ணினேன். இப்போ நீயும் பண்ற. உன்னோட பார்வைல  உங்க அம்மாவ நான் கொன்னேன், அதேமாதிரி உன் பொண்ணும் சொல்லக்கூடாது. உண்மைல நமக்காக அன்போட ஏங்குறவங்கள உதாசீதனப்படுத்துறதும், நிராகரிக்கிறதும் கூட கையடிக்கிற மாதிரிதான், அந்த சுகம் திரும்ப திரும்ப வேணும்,” தீர்க்கமான பார்வையோடு நிறுத்தியதும், எதிரே அவர் சிரிக்கும் ஒலி கேட்டது.

. “சொல்லுங்க இப்போ நா எங்க இருக்கேன்”

“நீ காலத்தோட பிரபஞ்சம் இணையிற இடத்துல இருக்க. இங்க உன்னோட நினைவுகள் தான் எல்லாமுமே. நீ, பேசுற நா கூட ஒருவகைல நீ வகைப்படுத்தி வச்சு இருக்கிற உருவம் தான். பட் பேசுறது நான், புரியுதா! நீ, நான், பருப்பொருட்கள்எல்லாமுமே கற்பனை. நீயா ஒரு உருவம், இடம் உருவகிச்சிக்கிற மாதிரி, நானும் உன்ன எனக்கு தெரிஞ்ச உருவமா பாக்கிறேன்.”

ஆச்சர்யம், எல்லாமுமே கற்பனை உருவங்கள். ஆனால் உரையாடுகிறேன். இங்கே நான் என்ன?  கேள்விகள் ஆயிரம் கால் பூரான் போல உடலில் ஆய்ந்தது. எது உண்மை? என் தடுமாற்றம், என் அமைதியிலே அவருக்கு புரிந்திருக்க வேண்டும். “உருவத்தை மூளை உருவாக்குது. எல்லாமே உன்னோட எண்ணங்கள், நீ பார்த்த, கற்பனைல உருவாக்குன எல்லாமுமே. மாயைக்கும் சாயைக்கும் உள்ள வித்தியாசம் மாதிரி.”

“நீங்க எப்படி இங்கேயே இருக்கீங்க. நானும் இங்கே இருக்கேன்.”

இது ஒரு வேக்கும் பிளேஸ், எதுவுமற்றது. அதுதான் நிரந்தரம். இந்த உலகம், பிரபஞ்சம், கோடான கோடிதெய்வங்கள் எல்லாமுமே ஆரம்பத்துல எதுவுமற்றது தான். நீ வெறுக்கிற, பயப்படுற உறவுகள், உலகம் கூட.மீண்டும்மௌனம். அவரே தொடர்ந்தார், நீ இருக்கிற இடம்காலத்தோட நுழையிற புள்ளி. நீ இங்க இருக்கலாம். எவ்ளோ காலம் வேணும்னாலும். இது ஒரு லேயர் மாதிரி. இங்க இருந்து வெளியே போறது உன்னோட சாய்ஸ். இங்க வந்ததுக்கு அப்புறம் நா எந்த காலகட்டத்துல நுழையுறதையும் விரும்பல. மனுஷனோட ஆகப்பெரிய ஆசை என்ன தெரியுமா? நாளையை இன்னைக்கே அடைய முயற்சிக்கிறது தான், அதத்தான் நானும் பண்ணினேன். நீ நினைக்கிற மாதிரி எல்லாத்தில இருந்தும் தப்பிக்க முடியாது. வீ ஹேவ் டூ ஃபேஸ் இட். இங்க இருக்கிறது சாபம். நிகழ்காலம் போலாம்னு ஆசைப்பட்டா எல்லா முடிவுகளும் நமக்கு முன் கூட்டியே தெரிஞ்சிருக்கும். சோ நானா ஏத்துக்கிட்ட தண்டனை இது” குரலில் கூடத் தெம்பில்லை அவருக்கு.

நினைவுகள் சுழன்றது. பவியை ஏன் திருமணம் செய்தேன். அவள் மேல் மெல்லியதாய் ஒரு அன்பு என்னுள் உண்டு. அதை காதல் என்றே நம்பினேன். விரும்பிய ஒன்றை நெருங்க நெருங்க, அதுவும் என் கைகளுக்குள் அகப்பட்ட உடன் அதன் மேலான பற்றுதல் எனக்கு ஏன் குறைந்தது. அவளின் சுயம் சார்ந்த முடிவுகளில் என்றைக்கும் என் மறுப்பு இருந்ததில்லை. பின் ஏன் விலகுகிறேன். அதீத அன்பை உதாசீனப்படுத்துகிறேன். எதற்காக இந்தப் போராட்டம். இவரைப் போலத்தான் நானுமா? பாப்பா என்னை வெறுப்பாள்.அவளும் வளர ஆரம்பிப்பாள். மெல்லிய தென்றல் என்னைச் சூழ்ந்துக் கொண்டது.

“என்னோட பியூட்சர், நா பாக்கலாமா?”

நாம எல்லோரும் ஒன்னு தான் போல.”

“அப்போ இங்க இருந்து போக வேற வழியே இல்லையா?  செத்ததுக்கு சமம்.”

“சரிதான், அதான் சொல்றேன். அதெல்லாம் நீ பார்க்க வேண்டாம்.”

என் நெஞ்சில் எதுவோ கனமாய் அழுத்துவது போல உணர்ந்தேன். அருகிலே யாரோ நிற்பது போல, நிழல் உருவங்கள் எங்குமே, அப்பாவின் கண்கள், அம்மாவின் உளறல், பவியின் முனகல், பாப்பாவின் அழுகை என்னைச்சூழ்ந்தது. எதனாலோ ஓங்கி அடிப்பது போல உடல் அதிர்ந்தது. கருமை, எங்குமே இருட்டு. நான் முதலில் கண்ட அதே பெண்ணின் முகம், நெற்றியில் மச்சம்.நான் அறிந்த முகம். ஆம், இது பவி?  என்னை மன்னித்துவிடு பவி. எல்லாம் முடிந்துவிட்டது போல?  எங்கோ மிதக்கிறேன். இதுதான் முடிவா?  எல்லாமுமே இருள்.

சட்டென்று, எங்கோ இருக்கும் கதவிடுக்கில் இருளடைந்த மூலையில் தூக்கி எறியப்பட்டேன். பருப்பொருள் அற்று ஒரு நிழலாக என் முன்னே நிகழ்வதை காட்சிகளாகக் கவனித்துக் கொண்டிருந்தேன்.

“அப்ப்பா”, பாப்பாவின் குரல். சிறிய கைகளுக்குள் என்னுடைய பெரிய கையை அழுத்தி வைத்திருக்கிறாள் “அப்ப்பா” முனகுகிறாள். உடல் முழுக்க மருத்துவ உபகரணங்கள் மாட்டப்பட்டிருந்தன.   சடம் போல கிடந்தேன். எதிரே கண்ணீர் வடிய பவி நின்றிருந்தாள்.

“போதும், என்னோட விதியை மறுதலிப்பதும், ஏற்றுக்கொள்வதும் மட்டுமே என் முன்னே இருக்கும் சமவாய்ப்புகள்.”

காலத்தினுள் நுழையும் மெல்லிய இழை என் முன்னே வந்துபோனது.

 

***

-வைரவன் லெ.ரா

Please follow and like us:

1 thought on “நிழலைத் தொடர்வது – வைரவன் லெ.ரா

  1. ஒரு ரெட் அலர்ட் போல சரியான நேரத்தில் இந்த கதையை படித்தேன் நன்றி வைரவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *