(அ.கா. பெருமாள் தமிழகத்தில் உள்ள ஆய்வாளர்களில் முதன்மையானவர். தென்குமரி நாட்டார் ஆய்வு,  குமரி மாவட்ட வரலாற்று ஆய்வு இலக்கிய ஆய்வு என தொண்ணூறுகும் மேல்  நூல்கள் எழுதியுள்ளார். பழைய சுவடிகளை பதிப்பித்தும் உள்ளார்.  தொல்லியல்  துறை, ஆய்வுத்துறை, தமிழக வளர்ச்சித் துறை என ஆய்வு சமந்தப்பட்ட முக்கியமான துறைகளில் தொடர்ந்து, தனதுஆய்வு பங்களிப்பை தருபவராகவும்  ஆலோசகராகவும் இருந்தும், தமிழக ஆய்வு பணியில் பெரும் பங்களிப்பாற்றிவருகிறார். சமீபத்தில் எழுத்தாளர் ஜெயமோகனால் முன்னெடுக்கப்பட்டதமிழ்விக்கியில் முதன்மை ஆசிரியராகவும் இருக்கிறார். அவரை நாகர்கோயிலில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்தோம்.) 

 

நீங்கள் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் நூல் பற்றிய செய்தியுடன் துவங்குவோமா?

 கண்ணகி வழிபாடு பற்றி ஒரு நூல்  எழுதி இருக்கிறேன். கண்ணகி பிறந்து வளர்ந்தது இங்கே தான்.  கோவலனை இழந்து மதுரையை எரித்தது என இத்தனையும் நடந்தது தமிழகத்தில், ஆனால் ஓரிரண்டு இடங்கள் தவிர தமிழகத்தில் கண்ணகிக்கு வழிபாடு பெரிதாக இல்லை. அதே சமயம் கேரளம் முழுக்க கண்ணகிக்கு வழிபாடு இருக்கிறது, இப்போது சில கோயில்கள் பகவதி வழிபாடாகமாற்றம் பெற்றலும் கண்ணகி வழிபாடு கேரளத்தில் வலுவாக உள்ளது. அதே போல் இலங்கையிலும் வலுவாக உள்ளது.

தமிழில் கண்ணகி கதை, கோவிலன் கதை போன்ற பிரதிகள் முழுமையாக கிடைத்துள்ளன. அவை பெரும்பாலும் பிற்காலத்தில் , 19 ஆம் நூற்றாண்டில் நாடகத்திற்காக எழுதப்பட்டது. மூலக் கதை சிலப்பதிகாரத்திலும் கண்ணகி அம்மானையிலும் மட்டும் தான் முழுமையாக உள்ளது. அதே சமயம் மொத்த கேரளத்தில் 14லில் இருந்து 17 வரைக்கும் கண்ணகி கதை சம்பந்தப்பட்ட மலையாள நூல் பிரதிகள் கிடைத்துள்ளது. அவை இங்குள்ள கதைகளில் இருந்து வேறுபட்டவை. கேரளத்தில் கண்ணகி கதை வேரூன்றி இருக்கிறது. உதாரணமா கேரளாவுல அம்மன் வழிபாட்டுல அரக்கனான தாருகன் கதை மிகுந்த செல்வாக்குடையது, காளி அங்க தாருகனை கொன்று தலையை வெட்டி சிவன் காலடியில் வைக்குறதா கதைகளுண்டு, கண்ணகியும் அதேபோல கொடூரமான பாண்டிய மன்னன் தலையை சிவன் காலடியில வைப்பதாக மலையாள பிரதியில வருது.  இந்த மாறுதல்களை புத்தகம் பேசுகிறது.

கொடுங்களூர் பகவதியாக இன்று கோவிலில் வழிபடப்படுபவள் கண்ணகிங்கறத பலவாறாக பார்க்க முடியும். மூல விக்கிரகம் பலா மரத்தாலானது, சிலமுறை அந்த சிலையை புனரமைச்சிருக்காங்க, ஒவ்வொரு முறையும் அந்த எட்டுக்கைகளில் உள்ள ஆயுதங்கள் மாறுது ஆனா சிலம்பு மட்டும் மாறலை, வயதான பெண்கள் இன்னும் அந்த அம்மனை எண்ட கண்ணகியம்மே அப்பிடிங்கிறாங்க , ஒற்றை முலைச்சின்னு சொல்றாங்க. நிறையப்பேருக்கு இந்த கோவில் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கு. கொடுங்களூரில் எனது உறவினர் வீட்டுக்குபோயிருந்தப்போ,  நடிகர் கலாபவன் மணி என்னை சந்திக்கும்போது அவர் திரட்டியிருந்த தகவல்களை காட்டினார். அவர் அங்க நாடன் பாட்டுக்குங்குற நாட்டுப்புற பாடல்களை பாடுவதில் சிறந்தவர்.  

இரண்டாவதாக ‘’தமிழும், சம்ஸ்கிருத உறவும்’’ என்ற தலைப்பில் இரண்டு வருடம் முன் நானும் மொழியியல் அறிஞர் ராஜாராம் என்பவரும் பல பேரிடம் கட்டுரைகள் பெற்று காலச்சுவடு வழியாக ஒரு தொகுப்பு வெளியிட்டோம். இப்போது அதை மேலும் விரிவுபடுத்தி தமிழகம், கேரளம், கனடா ஆகிய நாட்டிலிருந்து சமஸ்கிருத முனைவர்களிடம் கட்டுரைகள் பெற்று பெரிய நூலாக வெளிவர உள்ளது.

 

தமிழ்-சமஸ்கிரு தொடர்புகள் பற்றிய ஆய்வுகள் போல தமிழ்- பிராகிரு தொடர்புகள் குறித்த ஆய்வுகள் ஏதேனும் வந்திருக்கிறதா?

ட்டாம் நூற்றாண்டிலிருந்து பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை இருந்த உரையாசிரியர்கள் பிராகிருதத்தில் தேர்ந்தவர்களா ருந்திருக்கிறார்கள். அந்த உரைகளிலேயே நிறைய குறிப்புகள் இருக்கு. ஆரம்ப காலகட்டத்திலே பிராகிருதக்கதைகள் நிறைய இருக்கு, இரண்டு ராமாயணங்கள் பிராகிருதத்தில இருக்கு. பின்னால சமஸ்கிருதம் அந்த இடத்தை எடுத்துக்கொள்கிறது.

தமிழில் ஜகந்நாதராஜா”, தமிழும் பிராகிருதமும்னு ஒரு புத்தகம் எழுதியிருக்கார். தஞ்சை பல்கலைக்கழகத்திலிருந்து வி.. சுப்ரமணியத்தின் முயற்சியால், கார்த்திகேயன் என்பவர் மூலமா சில படைப்புகள் வந்ததாகவும் நினைவு.

தமிழத்தை விட ஸ்ரீலங்காவில் பிராகிருதம் சம்மந்தபட்ட ஆய்வு  நல்ல நிலையிலே தான் இருக்கிறது.   பிராகிருதம் குறித்து ஆழ்ந்து எழுதுபவர்கள் இருக்காங்க.  இலங்கையைச் சேர்ந்த கைலாசநாத குருக்கள் ரொம்ப முக்கியமானவரு, அவருக்கு சமஸ்கிருதக் கடல்னே பேரு. பன்மொழிப்புலமை உள்ளவர் தமிழ்நாட்டுல எல்லா ஊருக்கும் போய் ஏடு தேடியிருக்கார். அவரு இலங்கை அரசின் ஏற்பாட்டால் பூனே இன்ஸ்டிடூட்டில் பிராகிருதம் படித்தார், சைவ ஆகமங்கள்ள சமஸ்கிருதம் மற்றும் பிராகிருதத்தின் செல்வாக்கு குறித்து விரிவா ஆய்வு செய்து எழுதியிருக்கார். அவரைப்போல ஒரு ஸ்காலர் இப்போ இல்லை.

 கலைக்கும் தெய்வத்திற்கும் உள்ள தொடர்பையும், தெய்வங்களுக்கு  நிகழ்த்துக்கலை தேவையா? என்பதைபற்றியும் சொல்லுங்கள்.

நான் ‘’சடங்கில் கரைந்த கலைகள்’’ என்ற நூல் எழுதியிருக்கிறேன். அதில் எவ்வளவு நிகழ்த்து கலைகள் இப்போது வழக்கில் உள்ளன என்றும் சொல்லியிருக்கிறேன். ஏன் அவை இன்னும் தொடர்கிறது என்றால் அவை தெய்வங்களுடன் தொடர்பில் இருப்பதினால் தான், சடங்குகளுடன்  தொடர்புடன் இருப்பதினால் தான். நீங்கள் சடங்குகளில் இருந்து கலையை எடுத்தாலும், தெய்வத்திடமிருந்து கலைகளின் உறவை பிரித்து விட்டாலும் அவை அழிந்து போகும். நிகழ்த்துக்கலை பெரும்பாலும் சடங்குகளுடன் பின்னிப் பிணைந்துள்ளன.

உதாரணமாக திரௌபதி வஸ்திராபரண நாடகத்தில் துச்சாதனன் நாடகம் தொடங்கும் முன் கற்பூரம் ஏற்றி அம்மனுக்கு நாங்கள் நாடகம் தான் நடத்துகிறோம் மன்னிக்க வேண்டும் என்று சொல்லுவான். அந்த நாடகம்  திரௌபதி அம்மன் ஆலயம் முன் நடக்கும். அதையே தியேட்டரில் நடத்தினால், அப்போது ஏன் அனைவரும் நாடகம் தொடங்கும் முன் கும்பிடுகிறார்கள் என்பது தெரியாது. நீங்கள் அதைப் பார்த்து  கட்டுரை எழுதுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள் அது எப்படி முழுமையானவையாக இருக்கும். அந்த சடங்குடன் நடக்கும்போதே, அந்த நாடகம் முழுமை அடைகிறது.

சிறுத்தொண்டர் கதையை அன்னக்கொடி கதைன்னு ஞ்சாவூர் பக்கத்துல நிகழ்த்துறாங்க, அங்க சிறுத்தொண்டர் கையில இருந்து பிள்ளையில்லாத பெண்கள் சீராளன் கறின்னு பிரசாதம் வாங்கி உண்கிறார்கள்.  நான் அதை வாங்கிப் பார்த்திருக்கேன், அதுல உள்ள பொருள் சேர்க்கையை பத்தி சித்த மருத்துவர் ஒருவரிடம் விசாரிக்கும்போது சொல்லுறாரு, உண்மைதான் அந்த மருந்து கர்ப்பப்பைக்கு ரொம்ப நல்லதுன்னு. இங்க அன்னக்கொடி கதையை ஊர்மக்கள் நடத்தாம எப்போ வெளியாட்கள் மூலமா நடத்துற நாடகமா மாத்திடுறாங்களோ, அப்போ இந்த தொடர்பு விட்டுப்போயிடும். மருந்து கொடுக்கிறது வெற்று சடங்காமாறிடும்.  

அது போலவே பொன்னர் சங்கர், காத்தவராயன் கூத்து ஆகியவற்றில் ஒட்டுமொத்த ஊர் மக்களே கூத்தில் பங்கு பெறுகிறார்கள். அந்தச் சடங்குகளில் தெய்வங்களோடு நெகழ்ச்சியாக மக்களும் இணைந்து கொள்கிறார்கள். அந்த இணைவு தான் கலைகளை இன்னும் அழியாமல் செய்து கொண்டிருக்கிறது. வரத்துப்பாட்டு, உடுக்கடிப்பாட்டுன்னு சாமிகளும் கலைகளும் ன்னாத்தான் இருக்கு,  அதை பிரிக்கும் போது வழிபாடும் அழியும், கலையும் அழிந்து போகும். தெய்வம், சடங்கு, கலை  இது மூணும்,முக்கோணம் மாதிரி ஒன்றை ஒன்று பிடித்துள்ளது. அதில் எதை அழித்தாலும் மற்றவையும் அழியும்.

 

 நீங்க சொல்ற மாதிரியே சடங்குகளில் இருந்து கலைகளை எடுக்க முடியாது என்றே வைத்துக் கொள்வோம். இப்போ நிறைய கோயில்களில் கலைகள் வெறும் சடங்காக மட்டுமே உள்ளன. அவைகளை எப்படி  மீட்டுருவாக்கம் செய்து மேலும் கலைத்தன்மையோடு செயல்படவைப்பது?
 
அது முடியும். எப்போதுன்னா அந்த கலையையும், சடங்கையும் அறிந்த அறிஞர் வரும்போது. நீங்க பார்த்தீங்கன்னா திருக்குறுங்குடி கோவிலில்சே. ராமானுஜன்’ அதை தான் பண்ணியிருக்கிறார். அங்க வராபுராணத்தை மட்டும் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர் பழைய சுவடிகளை தேடி இசை வல்லுனர்களை வைத்து ‘கைசிக புராண நாடகத்தை’ மீட்டுருவாக்கம் செய்தார். அப்படி நமக்கு ஒரு ராமானுஜம் தானே இருக்காரு. அவர் இன்னும் உடல் நலமோடு இருந்தால் பத்து கலைகளை மீட்டுருவாக்கம் செய்திருப்பார். இந்த விஷயத்துக்காக அவருக்கு  டி.வி.எஸ்லிருந்து எல்லா உதவிகளும் குறைவின்றி செய்யப்பட்டது, அந்த குடும்பத்திலிருந்து வந்த நடனக்கலைஞர்  அனிதா ரத்னம் அவருக்கு வேண்டிய நிதியையும், மனித உதவிகளையும் செய்து கொடுத்தார்கள். அது ரொம்ப முக்கியம். இந்த மாதிரி ஒரு தாளாளர், களத்தில் இறங்கி வேலை செய்ய ஒரு ‘ ராமானுஜம்’ இருந்தால் பல கலைகளை மீட்டுருவாக்கம்செய்து விடலாம்.

 

நாட்டார் தெய்வங்களை நிறைய பதிவு செய்திருக்கீங்க, பிராந்தியம் தாண்டி இந்த தெய்வங்களுக்குள்ள உள்ள ஒற்றுமை என்ன இருக்குன்னு சொல்ல முடியுமா  ?

அனைத்து நாட்டார் தெய்வத்துக்கும் ஒரு கதை அம்சம் தான் அடிப்படையாக இருக்கிறது. பல வகைகளில் அகால மரணம் அடைஞ்சிருப்பாங்க. தீ விபத்து, கொலை,  ராஜா பெண் கேட்டு மறுத்து அந்தப்பெண்ணை பல வகைகளில் கொன்றிருப்பாங்க. அப்படி ஒரு பெண் அல்லது ஆண் கொலை செய்யப்பட்டால் அவர்கள் நேராக கைலாயம்  செல்வார்கள்.

 தன்னை கொன்றவர்களை, துரோகம் செய்தவர்களை பழி தீர்க்க வரம் பெறுவார்கள், வாதைகளை ஏவவும், கட்டுக்குள் வைக்கவும் சக்தி வேண்டுவாங்க. பெரும்பாலும் சிவனிடம், பிறகு பார்வதியிடம் வரம் பெருவார்கள். இங்க வந்து முதல் வேளையாக தனக்கு கெடுதல் செய்த அனைவரையும் பழிவாங்குவார்கள். கடைசியில் இந்த தெய்வங்களால தண்டிக்கப்படுபவர்கள் தங்களுக்கு ஏன் தண்டனைகள் வழங்கப்படுகிறது என்று உணர்ந்து, மன்னிப்பு கேட்டு அவர்களை வழிபடத் தொடங்குவார்கள். வழிபாடு ஆரம்பமானவுடன் தன் பெயராலேயே தெய்வமாவார்கள், அல்லது மற்ற தெய்வங்களோடு அந்த தெய்வம் இணைந்து அறியப்படும். இந்த மாதிரியே கதைகள் பல வாய்மொழியாகவோ சுவடிகளிலோ உள்ளது. சில கதைகள் அச்சிலும் வந்துள்ளது.

நான் குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் தொடராகவே குலசாமிகளை பற்றி எழுகியிருக்கிறேன். அதைப்படித்துவிட்டு ஒருவர் பெங்களூரிலிருந்து வந்து திருப்பதிசாரத்துக்கு அருகேயுள்ள குலதெய்வத்தை கண்டுபிடித்தார், அவருக்கு இந்த இடத்தை குறிப்பா சொன்னவர் ஒரு கன்னட ஜோசியர்.

இது போல சில விஷயங்கள் இருக்கு. சாதாரணமா தூக்கமுடியாத இரும்புச்சங்கிலியை, சொரிமுத்தையனார்கோவில், பட்டவராயன் சாமிகொண்டாடி நெருப்பிலிருந்து சங்கிலியை எடுத்து தூக்கிப்போட்டு பிடிப்பாரு. என்னாலும்இதேயெல்லாம் விளக்க முடியலை. னா இப்படி சில விஷயங்கள் நடக்குது அவ்வளவுதான்.

சில வருடங்கள் முன்பு கேரள தோல்பாவைக்கூத்தில் கம்ப இராமாயணப் பாடல்களை கண்டறிந்து எழுதியிருந்தீங்க, கம்பன் அங்க போனது ஆச்சரியமாக இருக்கு.

 ராமக் கதையை பார்த்தீங்கள்னா கம்பன் சொல்லப்பட்டதுக்கும் சுசீந்திரம் கோயில் கோபுர ஓவியங்களுக்கும் வித்தியாசம் உள்ளது. கேரளத்தில் பகவதி அம்மனுக்காக நடக்கும் கூத்தில் கம்பராமாயணத்திலிருந்து இரண்டாயிரம் பாட்டு படிக்கப்படுகிறது. மலையாளத்தில் பாட்டும், அதற்கு மணிப்ரவாளத்தில் தனி உரையும் உள்ளது.

இந்தியாவில் இன்று அதிகமாக ராமாயணங்கள் கிடைப்பது ஆந்திராவுலதான். தமிழில் கம்பராமாயணம், ராம சரிதம், ராமாயண வெண்பா, தக்கை ராமாயணம் இவை அல்லாமல் சில ராமாயண தனி பாடல்கள் இருக்கலாம், அவை முழுமையானது அல்ல ஆனால் ஆந்திராவில் 14 ராமாயணம் முழுமையாக கிடைக்கிறது.

ரங்கநாத ராமாயணத்தை ஒட்டித்தான் தோல் பாவைக்கூத்து நடத்தப்படுகிறது. உத்திர காண்டத்திலேயே கம்பன் இல்லையே, இன்னும் சொல்லப்போனால் நமக்கு தெரிந்த வால்மீகி ராமாயணம் தமிழ்நாட்டுடைய பாடமே தவிர மூல வால்மீகி ராமாயணம் இல்லை. வால்மீகி ராமாயணமே இங்கே பல பாட பேதங்களுடன் கிடைத்துள்ளது. கன்னியாகுமரியில் மட்டும் இரு பிரதிகள் கிடைத்தது.பொதுவாக கும்பகோணம் பதிப்பையே அனைவரும் அறிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ராமன் மகேந்திரகிரிக்கு வந்ததோ அகஸ்தியரை சந்தித்ததோ வடநாட்டு பாடத்தில் இல்லை.
 

இப்ப இந்த ராமாயணங்கள் ஏன், எப்படி சேர்க்கப்படுகின்றன ?

ஏன்னா ராமாயணம்னனு என்று சொல்லப்பட்டது ஒன்று அல்ல, பல ராமாயணங்கள்.இவைகள் நாட்டுப்புற  பாடல்களிலிருந்து வந்திருக்கலாம், ஆந்திர ராமாயணத்திலிருந்து வந்திருக்கலாம். ராமாயணம் சம்பந்தப்பட்ட சுவரோவியங்கள் முழுமையாக ஆராய்ச்சி செய்யப்படும்போது அதற்குண்டான வித்தியாசங்களை நம்மால தெரிந்து கொள்ள முடியலாம். 15 – 16ஆம் நூற்றாண்டு காலகட்டத்துல இப்பிடி நிறைய நடந்திருக்கு. நிறைய சுவரோவியங்களை பதிவு செய்திருக்காங்க ஆனா அதை ஆய்வு செய்தால் கம்பன் கதையில ஒட்டாத பலவிஷயங்கள் வருது.

உதாரணமா  அகலிகை கதை, அவ கல்லா மாறிட்டான்னு வருவதை ஓவியன் அகலிகையை பெண் சிலையாகத்தான் வரைஞ்சு வச்சிருக்கான், சாப விமோசனம் கிடைச்சதும் எனக்கு பசிக்குது ராமாங்குறா, ராமர் சொல்லி லச்சுமணன் ஒரு இலையில பழங்களை கொண்டு தாரான். இதெல்லாம் ஓவியங்கள்ல இருக்கு, எல்லாம் தெலுங்கு ராமாயணத்தை ஒட்டிய காட்சிகள். இதை நான் ஐராவதம் மகாதேவன் நினைவு அரங்குல பேசியபோது, இப்படி ஒரு தொடர்பு இருக்கிறது என்பதையே யோசிக்கலைன்னு சொன்னாங்க, இப்படி சுவரோவியங்களை ஆய்வு செய்தால்  இன்னும்நிறைய கண்டறிய முடியும்.

 

நாட்டுப்புறப் பாடல்களிலும், கம்பராமாயணம் போன்ற செவ்விலக்கியங்களிலும் உள்ள பொதுவான வேறுபாடு என்னவாக உள்ளது?

 காவியத்திற்கு அனைவரையும் மாண்போடு அணுகும் தன்மையுண்டு. ஒருவரை குற்றம் சொல்லும் தன்மை காவியத்தன்மை அல்ல. அதுவே நாட்டுப்புறப்பாடல்களில் ராமனாகிலும், ராவணனாகிலும் அவர்களை இகழ்ந்து பேசும் இடங்கள் உள்ளது. ராமன் சீதையை இரண்டாம் முறையாக காட்டுக்கு அனுப்பும்போது லக்ஷ்மணனின் மனைவி சுருதகீர்த்தி, ராமனை பல விதமா பழித்து பேசுகிறாள், கர்ப்பிணியை ஊரார் பேச்சுக்காக காட்டுல கொண்டு விடுவது என்ன அறம் என்று கேட்கிறாள்.

ஆந்திராவுல உள்ள பெண்ணிய மைப்புகள் இதைப்பாட்டாவே பாடுறாங்க. நாட்டுப்புறப் பாடல்களில், தவறு செய்பவர்கள் 99% தண்டிக்கப்படுகிறார்கள். காவியங்கள் மன்னிக்கும் தன்மை உடையது. நாட்டுப்புறப் பாடல்களில் அனைவருக்கும் பொதுவான அறமே முக்கியமாக இருக்கிறது. ராமனையும் மன்னிக்கமாட்டார்கள், தருமனையும் மன்னிக்கமாட்டார்கள். நியாயம் தான் முக்கியம்.

 

தொல்லியல் சார்பாக இப்போது அரசின் முன்னெடுப்புகள்பற்றி கூற முடியுமா ?


இன்றைய அரசாங்கம் கோவில்களில் உள்ள ஓலைச்சுவடிகளை ‘படி’ எடுத்து, அவைகளை புதுப்பிக்கவும்சொல்லி இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் 500 ஏடுகளாவது புதுப்பிக்கப்படும் என்று நம்புகிறேன்.  மூன்றுவருடங்களில் தமிழகத்தில் உள்ள கோவில்கள் அனைத்திலிருந்தும் ஏடுகள் படி எடுக்க முடியும். அப்படியே செப்பேடுகளும் படி  எடுத்து, தொல்லியல் துறை இடம் கொடுத்து அவைகளை ஆவணங்களாக  செய்து விட்டால், அதை வைத்துக்கொண்டு வரும் காலத்தில் நாம் மேலும் நுணுகி ஆராய வாய்ப்பு நமக்கு அமைகிறது.

 

இறுதியாக, நீங்கள் ‘தமிழ்விக்கிக்கு முதன்மை ஆசிரியராக இருக்கிறீர்கள் தமிழ்விக்கியின் நோக்கம் என்ன?. அதன் பங்களிப்பு என்னவாக இருக்கும்?
 
நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம் ‘விக்கி பீடியாதமிழையும் ’ ‘தமிழ்விக்கியையும் ஒப்பிட்டு படிச்சுபாருங்கள். உங்களுக்கே தெரியும் அந்த இரண்டுக்கும் உள்ள அடிப்படையான வேறுபாடு.  விக்கிபீடியாவில் தமிழில் பதிவு எழுதும்  ஒரு நபர் தனக்கு பதிவு செய்யப்பட்ட விஷயம் தெரியவில்லை என்றால் நீக்கிவிடுகிறார். முகநூலில் இருந்து எந்தத் தகுதியும் இல்லாதவருடைய சொற்களை மேற்கோள் காட்டுகிறார்கள். அவை அடிப்படையாகவே தவறா செய்தியாக இருந்தாலும் போடுகிறார்கள்.  சுருக்கமாக இருந்தாலும் சரியான தகவலை மட்டுமே சேர்க்க வேண்டும் என்ற உறுதிப்பாடு இல்லை. ஒருவருடைய நூல்களில் இருந்து தகவல்களை எடுக்கிறோம் என்றால்,அவரை மேற்கோள் காட்ட வேண்டும் இவை அடிப்படைகள்.  அங்கு அது செய்யப்படுவதில்லை. இதனால் தமிழ் விக்கிபீடியாவில் வாசிக்கும் ஒருவர் சரியான செய்தியுடன் தவறான செய்தியையும் சேர்ந்தே வாசிக்க வேண்டும்.

 ஆனால் ‘தமிழ்விக்கி’யில் அனைத்து பதிவுகளுமே தகவல்கள் சரிபார்க்கப்பட்டு ஆசிரியர் குழுவால் பதிவேற்றப்படுகிறது. ‘தமிழ்விக்கியில் எழுதப்பட்ட பதிவில் தவறான செய்தியை ஒருவர் சேர்க்க முடியாது. சரியான செய்திதான் அங்கு காணப்படும். இவை மிகவும் அடிப்படையான ஒன்று. தமிழ்விக்கியில் நீங்கள் ஒருவரை தேடுவதில் குழப்பம் கிடையாது. ஒருவருடைய பதிவிலிருந்து. அவர் சம்பந்தப்பட்ட லிங்க் சரியாக கொடுக்கப்பட்டிருக்கும். ஒரு முறையான வடிவம் தமிழ்விக்கியில் உள்ளதுஅபத்தமான தவறுகள் கூட தமிழ் விக்கிபீடியாவில் இருக்கிறது அது இங்கே தவிர்க்கப்படுகிறது.
 

விக்கிபீடியாவில் ஒரு பதிவை தேடி ஆராய்ந்து போடும் தன்மை இல்லை. தமிழ்விக்கியில் ஒரு தகவலுக்காக உழைத்து தேடி அதை பதிவு செய்கிறோம். நீங்கள் தமிழ் அறிஞர் நல்லசாமி பிள்ளையின் பதிவை எடுத்துக் கொள்ளுங்கள். தமிழ் விக்கி பீடியாவுக்கும் தமிழ்விக்கிக்கும் ள்ள  வித்தியாசம் உங்களுக்கே தெரியவரும்.

 

***

சந்திப்பு

-அனங்கன்.

-தாமரைக்கண்ணன், புதுவை.

 .

   

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *