” யாரு சொன்னாலும் கேட்காமலும் வரச்சொன்னாலும் வராமலும் அந்த சேர்ந்திசை கோஷ்டியிலேயே கிடந்து இரவு பகலாக உழல்கிறாள்.கிருஸ்துமஸ் தினத்திலெல்லாம் ஆறுமணிக்கே சாதகத்திற்கு! இதெல்லாம் எதற்காக?”
“நல்லது,இதெல்லாம் கடவுளின் கருணைக்காகதானே கேட் அத்தை?” என்று புன்னகைத்தபடியே பியானோ முன்னிருந்த முக்காலியில் சுழன்றடியே மேரி ஜேன் கேட்டாள்.
கேட் சித்தி வேகமாக திரும்பியபடியே தனது அண்ணன் மகளை பார்த்து சொன்னாள்:
“எனக்கு கடவுளின் கருணையை பற்றியெல்லாம் நல்லாத்தெரியும் மேரிஜேன், ஆனாலும் தங்கள் வாழ்நாளெல்லாம் உழைத்து சேர்ந்திசை குழுவில் பாடும் பெண்டிரை விடுத்து அவர்களுக்கு மேலாக சிறு பொடியன்களை அமர்த்தும் போப்பின் செயல் மரியாதைக்குரியதல்ல.தேவாலயத்தின் நன்மைக்காக போப் அப்படி செய்வாராயிருக்கும். ஆனாலும் அது சரியல்ல மேரி ஜேன் சரியல்ல”
இது பற்றிய பேச்சு அவளுக்கு ஒரு கோபமூட்டக்கூடிய ஒன்றானதால் தனது சகோதரிக்காக மேலும் மூச்சை பிடித்துக்கொண்டு சூடாக பேச முற்படும்போது நடன ஜோடிகள் அனைவரும் திரும்ப வருவதை கண்ட மேரிஜேன் சமாதானமாக குறுக்கிட்டாள்:
“கேட் அத்தையே,இப்போது நீங்கள் திரு.பிரவுனியின் பக்க நியாயத்திற்கு எதிராக சர்ச்சையை கிளப்புகிறீர்களே”என்றாள்.
திரு.பிரவுனி தனது மதத்தை பற்றிய பேச்சு வந்ததைகேட்டு சிரித்தபடி நின்றுகொண்டிருந்த பக்கம் திரும்பிய கேட் சித்தி அவசரமாக சொன்னாள்:
” ஓ,நான் போப்பின் நடவடிக்கையை கேள்வி கேட்கவில்லை. நானொரு மூடக்கிழவி அப்படியெல்லாம் நிலையெடுக்கமாட்டேன்.ஆனாலும் பொதுவான மரியாதையையும் தினம்தோறும் கடைபிடிக்கவேண்டிய நன்றிவிசுவாசத்தை பற்றியும் நினைக்கவேண்டுமல்லவா.ஜுலியாவின் இடத்தில் நானிருந்திருந்தால் பாதர். ஹீலியின் முகத்திற்கு நேராவே சொல்லியிருப்பேன். . .”
“அப்புறம், கேட் அத்தை” என்ற மேரிஜேன்
” நாமெல்லோரும் இப்போது பசியோடிருக்கிறோம்,நாமனைவரும் பசியோடிருக்கும்போது சண்டைக்காரர்களாக ஆகிவிடுகிறோம்”
” மேலும் தாகமாகயிருக்கும்போதும் கலகக்காரர்களாகிவிடுகிறோம்” என இணைத்தார் திரு.பிரவுனி
” ஆகவே நாமனைவரும் இரவுணவுக்கு போவோம்” என்றாள் மேரிஜேன்,
” நமது விவாதத்தை அதன்பின் வைத்துக்கொள்ளலாம்”
நடன வரவேற்பறைக்கு வெளிப்பக்கமாக இருந்த வராண்டாவில் கேபிரியேலின் மனைவியும் மேரிஜேனும் செல்வி.ஐவர்ஸை இரவுணவு உண்டுவிட்டு செல்லுமாறு கேட்டுக்கொண்டிருப்பதை பார்த்தார்.ஆனாலும் தனது தொப்பியை அணிந்துகொண்டு பனிமேலங்கியின் பொத்தான்களை போடத்தொடங்கிய ஐவர்ஸ் மறுத்துக்கொண்டிருந்தாள்.
பசியில்லையென்றும் இப்பொழுதே வெகுநேரமாகிவிட்டதால் வீட்டிற்கு போகவேண்டும் என சொல்லிக்கொண்டிருந்தாள்.
” என்ன ஒரு பத்து நிமிடம்தானே மோலி” என்றாள் திருமதி. கான்ராய்
” அது ஒன்றும் உன்னை தாமதப்படுத்தாது”
” இவ்வளவு நேரம் நடனமாடியதற்கு கொஞ்சமாவது ஊட்டம் இட வேண்டாமா? என்றாள் மேரிஜேன்.
“உண்மையிலேயே என்னால் முடியாது” என்றாள் செல்வி. ஐவர்ஸ்.
” எனக்கென்னவோ நீ நிகழ்வை நன்றாக சுகிக்கவில்லையோ
என சம்சயமாக இருக்கிறது” என வருத்தத்தோடு சொன்னாள் மேரிஜேன்.
” அப்படியெல்லாமில்லை. நன்றாக அனுபவித்தேன் என உறுதியாக சொல்கிறேன்” என்றாள் செல்வி.ஐவர்ஸ்,
” இப்போது என்னைப்போக அனுமதிக்க வேண்டும்”
” வீட்டிற்கு எப்படி போவாய்?” என்றாள் திருமதி. கான்ராய்.
” ஓ , அதென்ன படகுத்துறையிலிருந்து ரெண்டு தப்படி தூரம்தானே “
கேபிரியேல் தயங்கியபடியே சொன்னார்:
” செல்வி. ஐவர்ஸ் , போயே ஆகவேண்டும் என்றால் , நீங்கள் அனுமதித்தால் நான் உங்களை வீட்டிற்கு அழைத்துப்போய்விடுகிறேனே”
ஆனால் செல்வி. ஐவர்ஸ் அவர்களிடமிருந்து விலகி புறப்பட்டாள்.
” அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்”என சொன்னவள் ” ” “என்னைபற்றி பொருட்படுத்தாமல் உங்களது இரவுணவிற்கு போங்கள்,என்னைபார்த்துக்கொள்ள எனக்கு தெரியும்”
” நல்லது,நீயொரு வினோதமான பெண்,மோலி” என நேராக சொன்னாள் திருமதி. கான்ராய்
” பென்னாக்ட் லிப்” என ஐரிஷ் கேலிக் மொழியில் சிரித்தபடியே வந்தனங்களை சொன்ன செல்வி. ஐவர்ஸ் படிக்கட்டுகளில் துள்ளியோடி இறங்கிப்போனாள்.
யோசனையான முகத்தோடு அவள் செல்வதையே மேரி ஜேன் பார்த்துக்கொண்டிருக்க,
கீழ்வெளியறையின் கதவு திறக்கப்போவதை எதிர்பார்த்து மாடி கிராதி கட்டைகளில் சாய்ந்திருந்தாள் திருமதி. கான்ராய்.அவள் திடீரென வெளியேறியதற்கு தான் தான் காரணமோ என கேபிரியேல் அவரையே கேட்டுக்கொண்டார்.ஆனாலும் அவள் வருத்தமுற்றவளைப்போலில்லை:சிரித்தபடிதான் வெளியேறினாள்.அவர் படிக்கட்டுகளையே வெறுமனே வெறித்து பார்த்தார்.
அப்போது கேட் சித்தி உணவறையிலிருந்து குழப்பத்தோடு வெளியே வந்து,
” கேபிரியேல் எங்கே?” என கூக்குரலிட்டாள்.
” எங்கத்தான் போனான்,அங்கே எல்லோரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்,மேடை தயாராகிவிட்டது,வாத்துகறியை கூறுபோட ஆளில்லை!”
” இதோயிருக்கிறேன் கேட் சித்தி! ” என கூவிய கேபிரியேல் திடீரென தோன்றிய உற்சாகத்தோடு
” மந்தை வாத்துக்களானாலும் சரி கூறு போட்டுவிடுகிறேன்” என்றார்.
உணவு மேஜையின் ஒரு ஓரத்தில் கொழுத்த பொன் நிறமாக வறுத்திருந்த முழு வாத்து இறைச்சி வைக்கப்பட்டிருந்தது,அருகில் தூவப்பட்ட கொத்தமல்லி தண்டு இலைகளோடு முழுதாக பன்றி இறைச்சி மேல்தோல் நீக்கப்பட்டு மிளகு தடவிவைக்கப்பட்டிருந்தது.பன்றியின் கணுக்கால் ஓரத்தில் காகிதத்தால் நேர்த்தியாக கட்டியிருந்தனர்.அதன் பக்கத்தில் மசாலிட்ட மாட்டுக்கறியின் பெரும்தொடை இருந்தது.இதற்கு இடைப்பட்ட பாகங்களில் மற்ற தொடுகறிகள் வைக்கப்பட்டிருந்தது: சிவப்பும் மஞ்சளுமான நிறத்தில் ஜெல்லி புட்டிகள் இரண்டு;அகலமான பாத்திரத்தில் வெண்பாகு கூழ்,சிவப்பு ஜாம்,பசும் இலை வடிவ உணவு காம்பு போன்ற கைப்பிடியோடும்,அதனருகே உலர் பழ கொட்டைகளும் தோலுரித்த பாதாமும், அதனோடு சேர்த்து சாப்பிடக்கூடிய உணவு வகையோடு வட்ட வடிவ ஸ்மைர்னா அத்தி பழங்களும்,ஜாதிக்காயை அரைத்து பொடி தூவிய கேக் வகையும்,கண்ணாடி ஜாடி நிறைய சாக்லேட் வகைககளும்,
தங்க, வெள்ளி காகிதங்களில் சுற்றி வைக்கப்பட்ட இனிப்பு வகைகளும்,நீளமான கண்ணாடி குடுவைகளில் கொத்தமல்லி போல தோற்றமளித்த செலரி தண்டுகளோடு வைக்கப்பட்டிருந்தது.மேஜையின் நடுநாயகமாக வைக்கப்பட்டிருந்த ஆஞ்சு மற்றும் அமெரிக்க ஆப்பிள் பழங்களால் ஆன பிரமீடிற்கு இரு புறமும் காவல் போல, பழமையான இரு கனத்த கிரிஸ்டல் கண்ணாடி போத்தல்களில் போர்ட் வொயினும் சிவப்பு ஷெர்ரீ வொயினும் நிறைத்து வைக்கப்பட்டிருந்தது.மூடப்பட்ட பியானோ மேஜையின் மீது மஞ்சள் நிறத்தில் மிகப்பெரிய புட்டிங் கேக் வைக்கப்பட்டிருக்க அதன் பின்புறம் மூன்று வரிசைகளில் பீர் மற்றும் விஸ்கி பாட்டில்கள் மற்றும் தாதுஉப்புகள் கலந்த குடி தண்ணீர் பாட்டில்கள் தங்களது நிறத்திற்கேற்ப கருப்பு மற்றும் சிவப்பு லேபிள்களை அணிந்து நின்றிருந்தன.நிறமற்ற சிறிய பாட்டில்கள் பச்சை லேபிளிலிருந்தது.
கேபிரியேல் மேஜையின் நடுவே ஆணித்தரமாக நின்று வெட்டுகத்தியின் கூர்மையை பதம்பார்த்துவிட்டு வாத்துகறியை கூறு போடத்தொடங்கினார்.அவர் ஒரு சிறப்பான தேர்ந்த கறி வெட்டி கூறுபோடுவராதலால் அப்போது தன்னை லகுவாக உணர்ந்தார்.நிறைந்த உணவுமேஜை முன் நின்று பரிமாறுவது அவருக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்.
” செல்வி. பர்லாங், உனக்கு என்ன கொடுக்கட்டும்? இறக்கைபாகமா,
கறித்துண்டா,அல்லது நெஞ்சுக்கறியா?” என கேட்டார்.
“நெஞ்சுக்கறியில் ஒரு துண்டு போதும்”
” செல்வி. ஹிக்கின்ஸ்,உனக்கென்ன வேண்டும்?”
“ஓ , எதுவாயிருந்தாலும் பரவாயில்லை திரு. கான்ராய்.”
கேபிரியேலும் செல்வி. டாலியும் விருந்தினர்களுக்கு வாத்து மற்றும் பன்றி இறைச்சி மற்றும் மசாலிட்ட மாட்டுக்கறி நிறைந்த தட்டுகளை கொடுத்துக்கொண்டேயிருக்க லில்லி மாவிட்ட சூடான உருளைகிழங்குகளை வெள்ளை நாப்கின் துணிகளில் சுற்றி தட்டில்வைத்து எல்லோருக்கும் பரிமாறிக்கொண்டிருந்தாள். இது மேரிஜேனின் யோசனையாகும் மேலும் வாத்துக்கறிக்கு தொட்டுக்கொள்ள ஆப்பிள் சாஸை வைக்கவேண்டும் என கூறியிருந்தாள். ஆனால் சாதாரணமாக வறுத்த வாத்துக்கறியை சாஸில்லாமல் அப்படியே சாப்பிடுவதுதான் சிறப்பு என கேட் சித்தி சொல்லிவிட்டாள்.தனது இசைப்பள்ளி மாணவர்களுக்கு நல்ல கறித்துண்டுகளாக பார்த்து பார்த்து பரிமாறினாள் மேரிஜேன்.கேட் சித்தியும் ஜுலியா சித்தியும் பியானோ மேஜையிலிருந்த பீர் மற்றும் விஸ்கி பிராந்தி பாட்டில்களை எடுத்துவந்து ஆண்களுக்கும் தாதுஉப்புகள் கலந்த குடிதண்ணீர் பாட்டில்களை பெண்களுக்கும் கொடுத்தபடியிருந்தனர். அங்கு குழப்படியான சத்தமும் சிரிப்பும் மிகுந்த ஓசையும் கலந்து ஒலித்தது. இது வேண்டும் அது வேண்டும் என ஆணைகளும்,உணவுப்பொருட்களோடு மோதும் முள்கரண்டி மற்றும் சாப்பாட்டு கத்தி, பாட்டில்களை திறந்தபோது சத்தமிட்ட மரத்தக்கைகளின் ஒலி என கலவையான ஒலிகளால் நிறைந்திருந்தது. கேபிரியேல் முதல் முறை தீர்ந்தபின் இரண்டாவது முறையாக இறைச்சிகளை கூறிடத்தொடங்கினார்.தனக்கு என எதுவும் சாப்பிடாத அவரை பார்த்து மற்றவர்கள் உணவுன்ன கேட்டு சத்தமிட்டாலும் அவர் சாப்பிட ஆரம்பிக்கவில்லை.மற்றவர்களுக்காக உபசரித்துக்கொண்டிருந்தவரை எல்லோரும் நச்சரித்ததால் விஸ்கியை மட்டும் தாராளமாக ஒருமுறை அருந்திக்கொண்டார்.மேலும் கறி வெட்டுவது ஒரு முரட்டு வேலை என்பதாலும் அதை அருந்தி மகிழ்ந்தார்.மேரிஜேன் தற்போது அமைதியாக அமர்ந்து உணவு உண்ண ஆரம்பித்தாள்.ஆனால் இரு சித்திமார்களும் இன்னும் மற்றவர்களுக்கு பரிமாறியபடியே இங்கும் அங்கும் சுற்றி வந்து இடித்துக்கொண்டும் அவசியமின்றி ஒருவருக்கொருவர் சத்தமிட்டுக்கொண்டுமிருந்தனர்.திரு. பிரவுனியும் கேபிரியேலும் அவர்களை சாப்பிட உட்கார கெஞ்சி கேட்டும் இன்னும் நேரமிருக்கிறது,அப்புறம் சாப்பிட்டுக்கொள்ளலாம் என சொல்ல, கடைசியில் பிரட்டி மாலின்ஸ் குதித்தெழுந்து,கேட் சித்தியை பிடித்து தூக்கி ஒரு இருக்கையில் அமர்த்த எல்லோரும் கொல்லென சிரித்தனர்.