விடியலின் வெள்ளி மினுங்கலுக்கும் கடலின் பச்சை பளபளப்புக்கும் இடையே அந்த படகு ஹார்விச் துறைமுகத்தை அடைந்து கூட்டமாய் மக்களை விடுவித்தது. அந்த கூட்டத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாதவர் போல் இருந்தார்  நாம் தொடர வேண்டிய நபர்.  அவருடைய விடுமுறைக்கானவை போலிருந்த உடைகளுக்கும், தீவிரமான முகபாவத்திற்குமான வேறுபாட்டைத் தவிர அவரை குறிப்பிட்டு கவனிக்க  வேறு எதுவுமில்லை.  வெள்ளை மேலங்கியும் அதற்கு  மேல் வெளுத்த சாம்பல் வண்ண ஜாக்கெட்டும், சாம்பல் நீல ரிப்பனை கொண்டிருந்த  வெள்ளி நிற வைக்கோல் தொப்பியுமாக அவரது உடையும் அதற்கு சற்றும் பொருத்தமில்லாத உத்தியோகபூர்வமான ,முகமுமாக இருந்தார்.

அவரது இருண்ட ஒடுங்கிய முகத்தில்  ஸ்பானியர் என கருத இடமளிக்கும்  கருப்பு தாடி இருந்தது. சோம்பேறிகளின் தீவிரத்துடன் அவர் சிகெரெட் புகைத்து கொண்டிருந்தார்.

அவரது சாம்பல் வண்ண ஜாக்கெட்டுக்குள் குண்டுகள் நிரப்பிய கைத்துப்பாக்கி இருப்பதும், அவரது  மேலங்கியில் காவல் துறையின் அடையாள அட்டை இருப்பதும், ஐரோப்பாவின் அதிபுத்திசாலித்தனத்தை அந்த வைக்கோல் தொப்பி மறைத்திருக்கிறது என்பதையும்  யாராலும் யூகித்திருக்க முடியாது.

ப்ருஸெல்ஸிலிருந்து லண்டனுக்கு அந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கைதொன்றை செய்யும் பொருட்டு பாரீஸ் காவல் துறையின் தலைவரும், உலகின் மிக பிரபலமான விசாரணை அதிகாரியுமான வேலெண்டீனே நேரில் வந்திருக்கிறார்.

மகா குற்றவாளி  ஃப்ளேம்போ இங்கிலாந்தில் இருந்தான்.  மூன்று நாடுகளின் காவல் துறைகளும்   அவனை கெண்ட்’லிருந்து புருஸ்ஸெல்ஸுக்கும், பின்னர் புருஸ்ஸெல்ஸிலிருந்து ஹாலந்தின் ஹூக் நகருக்கும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர்.

அப்போது லண்டனில் நடைபெற்றுக்கொண்டிருந்த நற்கருணை மாநாட்டின் கூட்டத்தையும், குழப்பங்களையும் பயன்படுத்திக்கொண்டு அவன் ஒரு கீழ்மட்ட உத்யோகஸ்தனை போலவோ அல்லது அந்த மாநாட்டுக்கு தொடர்புடைய செயலராகவோ  மாறு வேடத்தில் அங்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வேலண்டீனுக்கு அவனை குறித்து எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. உண்மையில் ஃப்ளேம்போவை    யாராலுமே கணிக்க முடியாது.

உலகை கொந்தளிக்க செய்துகொண்டிருந்த  அவனால் நிகழ்த்தப்பட்ட மாபெரும் குற்றங்கள்  ரோலண்டின் மரணத்திற்கு பிறகு திடீரென்று நின்று போனபோது உலகமே அமைதியாக இருந்தது.

ஆனால் அவன்  செல்வாக்கின் உச்சத்திலிருக்கையில் (அதாவது   மோசமான பெரும் கொள்ளைகளில் ஈடுபட்டிருக்கையில்)  அவன் சர்வதேச அளவில் ஒரு பேரரசனை போல புகழுடன் இருந்தான். பெரும்பாலான காலைகளில், தினசரி நாளிதழ்களில் அவன் ஒரு அசாதாரணமான குற்றத்தின் விளைவுகளிலிருந்து தப்பிக்க   மற்றொரு குற்றத்தை செய்த செய்தி இடம் பெற்றிருக்கும்.

அவன்  பிரம்மாண்டமான அச்சமூட்டும் உடற்கட்டை கொண்டிருந்தான். அந்த உடற்கட்டுடன் அவன் ஒரு  நீதிபதியை  மன அமைதிக்கு வழிகாட்டுவதாக சொல்லி தலைகீழாக நிற்க வைத்தது, டிரெவோலி சாலையில் கைக்கொன்றாக இரு காவலர்களை தூக்கி கொண்டு ஓடியது போன்ற   செய்கைகள் பலதரப்பட்ட கதைகளாக நகரில் உலவியது.

ரத்தம் சிந்தவில்லை என்றாலும் இது போன்ற கண்ணியமற்ற செயல்களுக்கு அவனது அசாதாரண உடல்வலிமை காரணமாயிருந்ததை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். இப்படி  வேடிக்கை கதைகள் அவனைக்குறித்து உலவினாலும்  அவனது  பெருங்கொள்ளைகள்  உண்மையில் மிக புத்திசாலித்தனமான நடத்தப்பட்டவை.  அவனது ஒவ்வொரு திருட்டுக்கும் தனித்தனியே கதைகளும் உருவாகின.

அவனது அனைத்து செயல்பாடுகளிலும்  இருந்த எளிமை பிரத்தியேகமானது. உதாரணமாக, ஒரு நள்ளிரவில் தெருக்களின் அடையாள பலகைகளின் எண்களை மாற்றி எழுதி  ஒரு பயணியை அவன் திசை திருப்பி சிக்க வைத்தான்.

ஃப்ளேம்போ லண்டனின்  தைரோலியன் பால் நிறுவனத்தை மாடுகளோ வண்டிகளோ பாலோ எதுவுமே இல்லாமல் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுடன்  நடத்தி வந்தான்.

மிக எளிதாக வீட்டு வாசல்களில் வைக்கப்பட்டிருக்கும் பிற பால்  நிறுவனங்களின் பால் கேன்களை எடுத்து அவனது  வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பது அத்தனை எளிதானதாயிருந்தது அவனுக்கு.

அவன் ஒரு இளம்பெண்ணுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த போதும் அவளின் அனைத்து கடித தொடர்புகளையும் துருவி துருவி ஆராய்ந்தும் ஃப்ளேம்போவை குறித்த ஒரு தகவல் கூட கிடைக்கவில்லை. ஏனெனில் புகைப்படம் எடுத்து நுண்ணோக்கியால் மட்டுமே பார்த்து வாசிக்க முடியும் அளவுக்கு மிக நுண்ணிய அளவில்  அவனது  கடித எழுத்துக்கள் இருந்தன.

நகர்த்தக்கூடிய தபால் பெட்டிகளை உருவாக்கி  புறநகர் சாலை முனைகளில் அவற்றை வைத்து அதை உபயோகப்படுதுபவர்களின்  தபால்களை திருடும் வழியையும் அவனே கண்டுபிடித்தான்.

அவன் பிரம்மாண்ட உடற்கட்டை கொண்டிருந்தாலும்  ஒரு வெட்டுக்கிளியை போல தாவி மரக்கூட்டங்களுக்கிடையே அவன் மறைந்து விடுவதை அனைவரும் அறிந்திருந்தனர். திறமைசாலியான வேலண்டீனுக்கு  ஃப்ளேம்போவை  தேட துவங்கியபோதே தெரிந்திருந்தது அவனை  இருக்குமிடத்தை கண்டுபிடிப்பதோடு அவரது  வேலை முடிந்துவிடாதென்று.

ஆனால் அவனை எப்படி கண்டுபிடிப்பது?. வேலண்டீனின் இதுகுறித்த  யோசனைகள்  முடிவடையாமல் இருந்தன. ஃப்ளேம்போவை குறித்த   இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால் எந்த மாறு வேடத்திலும் மறைக்க  முடியாத  அவனது  அதீத உயரம் தான்.

இந்த தேடலில்  வேலண்டீன் உயரமான ஒரு ஆப்பிள் விற்கும் பெண்ணையோ, ஒரு உயரமன படைவீரனையோ அல்லது சுமரான உயரம்கொண்ட  ஒரு சீமாட்டியை பார்த்திருந்தால் கூட அவர்களை கைது செய்திருப்பார்.  ஆனால் அந்த ரயில் பயணத்தில் அப்படி வழக்கத்துக்கு மாறான உயரத்தில் அப்பயணத்தில் யாரையும்  வேலண்டீன் கண்டிருக்கவில்லை. அந்த இடத்தில் இருக்கும் ஒருவரை ஃப்ளேம்போ என சந்தேகப்படுவது ஒரு பூனையை ஒட்டகச்சிவிங்கி என சொல்வதை போலத்தான்.

இந்த படகு பயணத்தில்  வேலண்டீனுடன் வெறும் 6 பிரயாணிகளே இருந்தார்கள். கடைசி நிறுத்தம் வரை பயணித்த குள்ளமான ஒரு ரயில் நிலைய ஊழியர்,  இரண்டு நிறுத்தங்கள் தாண்டி ஏறிய  சுமாரான குள்ளமாயிருந்த மூன்று தோட்டக்காரர்கள், எஸ்ஸெக்ஸ் கிராமத்திலிருந்து  ஏறிய  மிக குள்ளமான ஒரு விதவைப் பெண்மணி மற்றும் மிக மிகக்குள்ளமான ஒரு  ரோமன் கத்தோலிக்க பாதிரியார்.

கடைசியாக ஏறிய  அந்த பாதிரியாரை பார்த்ததும்  வேலண்டீன் ஏறக்குறைய சிரித்து விட்டார். கிழக்கு பகுதிக்கே உரிய  மந்தமான முகமும்,  வடக்கு கடலை போன்ற வெறுமையான கண்களும்  கொண்டிருந்த அவன் தூக்கமுடியாமல்  பல பழுப்பு காகித பெட்டகங்களை கையில் வைத்துக் கொண்டிருந்தான்.

அந்த நற்கருணை மாநாட்டிற்கு அந்த பாதிரியை போலவே மூடநம்பிக்கையுடன்  புற்றீசல்கள் போல பலரும் வந்து கொண்டிருந்தார்கள்.

கடவுள் நம்பிக்கை அற்றவரான வேலண்டீனுக்கு  பாதிரிகளை பிடிக்காது, சொல்லப்போனால் அவர்கள் மீது அவருக்கு கொஞ்சம் இரக்கம்  கூட  உண்டு.  இந்த குள்ளப்பாதிரியோ பார்ப்போர் அனைவரின் இரக்கத்திற்கும் உரியவனை போலிருந்தார்.

பயணச்சீட்டின்  எந்த முனையை பிடித்து கொள்வது என்று கூட  தெரிந்திருக்காத அவரிடம் அடிக்கடி கீழே விழுந்தபடி இருக்கும் மலிவான பெரிய  குடை ஒன்று இருந்தது

அவர் வெள்ளந்தியாக  பெட்டியிலிருந்த அனைவரிடமும் தன் கையில் உள்ள பழுப்பு  பெட்டகங்களொன்றில் இருக்கும்  அசல் வெள்ளியில் செய்யப்பட்டு, நீல அருமணிகள்  பதிக்கப்பட்டிருக்கும்  அரிய பொருளை தான் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை சொல்லிக்கொண்டே இருந்தார் .

எஸ்ஸெக்ஸின் அப்பாவித்தனமும் துறவிக்கான எளிமையுமாக  இருந்த அந்தக் கலவை  டோடென்ஹேமில் இறங்கிச் சென்று, மீண்டும் திரும்பிவந்து , மறந்துவிட்ட குடையை எடுத்துக்கொண்டு திரும்பிச்செல்லும்  வரை வேலண்டீனுக்கு வேடிக்கையாகவே இருந்தது

அவர் அப்படி குடையை எடுக்க திரும்பி போது வேலண்டீனே   அந்த அரிய பொருளை குறித்து  அனைவரிடமும் சொல்லிக்கொண்டிருக்க  தேவையில்லை என்று அவரை எச்சரித்தார்.

பயணத்தின் போது வேலண்டீன் யாரிடம் பேசிக் கொண்டிருந்தாலும் செல்வந்தர்கள், ஏழைகள், ஆண்கள், பெண்கள் என்று 6 அடிக்கு  மேல் இருப்பவர்கள் மீது ஒரு கண் வைத்திருப்பார். ஏனெனில் ஃப்ளேம்போ அதற்கும்  4 இன்சுகள் அதிகமான உயரம் கொண்டவன்.

ரயிலிலிருந்து இறங்கி  லிவர் பூல் தெருவில் நடந்து கொண்டிருந்த அவர் குற்றவாளியை தான் இன்னும் நழுவ விடவில்லை என்று தானே தன் மனச்சாட்சியிடம்  சொல்லிக்கொண்டார். பின்னர் ஸ்காட்லாந்து யார்டுக்கு சென்று தனக்கு தேவைப்படும் போது அங்கிருந்து உதவிகள் கிடைப்பதை உறுதி செய்துகொண்டார் மீண்டுமொரு சிகரெட் புகைத்தபடி லண்டன் தெருக்களில் உலாவிக் கொண்டிருந்தார்.

விக்டோரியாவின் தெருக்களிலும் சதுக்கத்திலும் நடந்துகொண்டிருந்த அவர் திடீரென்று நின்றார். லண்டனுக்கே உரித்தான பழமையான அமைதியான அந்த சதுக்கம் அப்போது  தற்செயலாக அசைவற்று இருந்தது. அங்கிருந்த  உயரமான வீடுகள் ஒரே சமயத்தில் செல்வச் செழிப்புடனும் யாருமற்றும் இருப்பது போல் தோன்றின.

சதுக்கத்தின் மத்தியிலிருந்த புதர்ச் செடிகள் கைவிடப்பட்ட தீவைப்போல் காட்சியளித்தன. அவற்றின் நான்கு பக்கங்களில் ஒன்று பிறவற்றை காட்டிலும் சற்று உயரமாக மேடை போலிருந்தது. அங்கு அவ்விடத்துக்கு சற்றும் பொருத்தமில்லாதது போல   லண்டனின்  வியக்கத்தக்க  உணவகம்  ஒன்று சொஹோவிலிருந்து தவறுதலாக அங்கு வந்தது போல அமைந்திருந்தது.

குட்டையான செடிகளும் நீளநீளமான, மஞ்சள் மற்றும் வெள்ளை பட்டைகளுடன் அமைந்திருந்த  திரைமறைப்புக்களுடன் காரணம் சொல்ல முடியாத வசீகரத்துடன் இருந்தது அந்த உணவகம்.

லண்டனின் வழக்கமான சமமான கட்டிட அமைப்புகளுக்கு மாறாக  அது தெருவுக்கு மேலே விசேஷமாக உயர்ந்து நின்றது,  அதன் வாசற்படி,  முதல் மாடி ஜன்னல் வரை செல்லும் ஒரு  தீபாதுகாப்பு வழியை போல செங்குத்தாக அமைந்திருந்தது.. வேலண்டீன்  அந்த  மஞ்சள் வெள்ளை திரைமறைப்புக்களுக்கு  முன்பு நின்று சிகரெட் புகைத்தபடி அவற்றின் அதிக நீளத்தை அவதானித்தார்.

அற்புதங்களின்  வியக்கத்தக்க  விஷயம் என்பது அவை நிகழ்வதுதானே.  மேகங்கள் ஒன்றிணைந்து மனிதனின் கண்களை போல  வடிவு கொள்ளக்கூடும். ஒரு தேடல் பயணத்தின் போது வழியில் காணும் மரமொன்று கேள்விக்குறியை போல தோற்றமளிக்க கூடும்.

இவை இரண்டையுமே  நான் இந்த கடைசி இரு நாட்களில் கண்ணுற்றேன். நெப்போலியனுடன் நடந்த  போரில் வெற்றி பெற்ற, வெற்றி என்று பெயரிடப்பட்ட கப்பலில் இருந்த கடற்படை அதிகரியான நெல்சன்  வெற்றிக்கனியை சுவைப்பதற்குள் இறந்தார். வில்லியம்ஸ் என்னும் பெயருடைய ஒருவர் வில்லியம்சன் என்னும் ஒருவரை தற்செயலாக கொலை செய்ததும் அப்படித்தான் சிசுக்கொலையை போல தோன்றுகிறது.

சுருக்கமாக சொல்லப்போனால்  இப்படியான ஊழின் விளையாட்டுக்களை  வாழ்வை எந்த மாற்றமும் இன்றி எதிர்கொள்ளும் சாமான்யர்கள் எப்போதும்  கவனிக்க தவறுகிறார்கள் ஆனால் ’போ’  விதியின் முரண்பாட்டின் படி வாழ்வின் எதிர்பாராமையை எதிர்பார்ப்பதே அறிவு  .

அரிஸ்டடே வேலண்டீன் முழுக்க முழுக்க பிரெஞ்சுக்காரர். பிரெஞ்சு புத்திசாலித்தனம் என்பது மிகச் சிறப்பானதும் தனித்துவமானதும் கூட. அவர் வெறும் சிந்திக்கும் இயந்திரமல்ல. சிந்திக்கும்  இயந்திரம் என்பதே   நவீன ஊழ்வினைக் கொள்கையும், பொருள்வாதமும் இணைந்து  உருவாக்கிய ஒரு முட்டாள்தனமான சொற்றொடர்.

சிந்திக்க முடியாதென்பதனால்தான் ஒரு இயந்திரம் வெறும் இயந்திரமாக இருக்கிறது. ஆனால் இவர் ஒரு சிந்திக்கும் மனிதர். மிக எளிமையானவரும்  கூட.

அவருடைய பெரும் வெற்றிகள் அனைத்தும் மந்திர வித்தையால் அடையப்பட்டவை போல தோன்றினாலும் உண்மையில் அவை தர்க்கபூர்வமாக அடையப்பட்டவையும்  துல்லியமான சமயோஜித   சிந்தனையால் பெறப்பட்டவையும்தான்.

வெறும் முரண்பாட்டை குறித்த விவாதங்களை துவங்கியல்ல, மெய்யியலை சரியாக கையாண்டே பிரெஞ்சுகாரர்கள் உலகை பிரமிக்க வைக்கிறார்கள் .சொல்லப்போனால் பிரெஞ்சுக்காரர்கள் மெய்யியலை  அளவு கடந்தும் எடுத்துச்சொல்வார்கள், ஃப்ரெஞ்ச் புரட்சியில் நடந்தது போல.

ஆனால் வேலண்டீன் தர்க்கத்தை மட்டுமல்ல அதன் எல்லைகளையும்  உணர்ந்திருந்தார்.  மோட்டார்களை குறித்து எதுவுமே தெரியாத ஒருவனே பெட்ரோலை தவிர்த்துவிட்டு மோட்டாரை குறித்து பேசுவான்

தர்க்கங்களை பற்றி எதுவும் தெரியாத ஒரு மனிதன் மட்டுமே  தர்க்கங்களின் அடித்தளமாக இருக்கும் வலுவான, மறுக்க முடியாத அனுமானங்களை தவிர்த்துவிட்டு  தர்க்கத்தை குறித்து பேசுவான்.

ஆனால் வேலண்டீனுக்கு இங்கு வலுவான அனுமானங்கள் ஏதும் இல்லை. ஃப்ளேம்போ ஹார்விச்சில் காணாமலாகியிருந்தான். அப்படியே அவன் லண்டனில் இருந்திருந்தாலும்  அவன்  விம்பிள்டன் காமனின் உயரமான ஒரு நாடோடியில் இருந்து  ஹோட்டல் மெட்ரோபோலின் உயரமான அறிவிப்பாளர்  வரை  யாராகவும்  இருந்திருக்கும்  சாத்தியங்கள் இருக்கிறது.

இத்தகைய வெளிப்படையான அறிவின்மையை எதிர்கொள்ள வேலண்டீனுக்கு அவருக்கேயான பிரத்யேக  பார்வையும் வழிமுறையும் இருந்தது.

இத்தகைய  தர்க்கரீதியான   பாதையை பின்பற்ற முடியாத சந்தர்ப்பங்களில் ,அவர் எதிர்பாராததை  கணக்கிட்டு,  சாத்தியம் குறைவான பாதையை  கவனமாகவும் துணிச்சலாகவும்  தேர்ந்தெடுப்பார்.    வழக்கமாக காவலர்கள் தேடிச்செல்லும் இடங்களான வங்கிகள், காவல் நிலையங்கள் மற்றும்  சந்திப்புக்களுக்கான பிரத்யேக இடங்களை தவிர்த்து, அவற்றிற்கு மாறான இடங்களிலேயே தேடிச்செல்வார், ஒவ்வொரு காலியான வீட்டுக்கதவையும் தட்டுவார் முட்டுச்சந்துக்குள் திரும்புவார், குப்பை கூளங்கள் நிறைந்திருக்கும் சந்துகளுக்குள் தேடிப்போவார். நேரான பாதைகளை தவிர்த்து விட்டு சுற்று வழிகளில் பயணிப்பார்.

ஏனெனில் தேடப்படுபவனின்  கண்களுக்குப் படும் வாய்ப்புகளும் விசித்திரங்களும்  தேடுபவனின் கண்களிலும் தென்படலாமல்லவா?  ஒரே ஒரு சிறு துப்பு இருந்தால் கூட  இதுபோன்ற வழக்கத்துக்கு விரோதமான வழிகள்  மோசமானவைகள் என்று சொல்லி விடலாம், ஆனால் எந்த துப்பும் இல்லாத போது அதுவே சிறந்த வழியாகிவிடும் என்று. இந்த பைத்தியக்காரத்தனத்தை அவர் தர்க்கபூர்வமாகவும்  விளக்குவார்.

எங்காவது ஒரு மனிதன் தொடங்க வேண்டும், அந்த இடம்  மற்றொருவர் தனது தேடலை நிறுத்திய இடமாக இருப்பது இன்னும் சிறப்பு .

விநோதமாக மேலேறும் அந்த உணவகத்தின் படிகளிலோ, அல்லது  அந்த உணவகத்தின் அமைதியிலும் வசீகரத்திலுமோ ஏதோ ஒன்று  அந்த துப்பறிவாளரின் உள்ளுணர்வை தூண்டியது. தோராயமாக ஒரு முயற்சி செய்ய எண்ணி படிகளில் ஏறி மேலே சென்றவர், ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து ஒரு கருப்புக் காப்பிக்கு சொன்னார்.

ஏறக்குறைய முற்பகலாகி விட்டிருந்தது.  அவர் காலையுணவும் உண்டிருக்கவில்லை மேசைகளில் சிதறிக்கிடந்த உணவின் மிச்சங்கள் அவருக்கு பசியை நினைவூட்டியதால் காப்பியுடன் பொறித்த முட்டையும் சொன்னார்.

காப்பியில் சர்க்கரையை இட்டு கலக்கியபடியே ஃப்ளேம்போ இதுவரை தப்பித்த விதங்களை   குறித்து எண்ணிக் கொண்டிருந்தார். வெறும் நகவெட்டிகளைக்கொண்டே தப்பித்திருந்தான் ஒருமுறை. இன்னொரு முறை வீட்டை தீயிட்டு கொளுத்தி தப்பித்தான்

முத்திரை வைக்கப்பட்டிருக்காத  தபால்தலைக்கு பணம் கொடுப்பதாக ஒருமுறையும்,  உலகை அழிக்க வரும் வால் நட்சத்திரம்  ஒன்றை மக்கள் தொலைநோக்கியில்  ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்த போது  இன்னொரு முறையும் தப்பித்திருந்தான்.

அவர் தனது துப்பறியும் மூளை குற்றவாளியின் மூளைக்கு இணையானது என்று நம்பினார். அது உண்மையும் கூட. அப்படி ஒப்பிடுவதலிருக்கும்  பிழையையும் அவர்   அறிந்திருந்தார். குற்றவாளி ஒரு கலைஞன், துப்பறிவாளனோ வெறும் ஒரு விமர்சகன், இதை எண்ணிக்கொண்டே காப்பிப்கோப்பையை உதட்டுக்கு கொண்டுவந்து ஒரு வாய் பருகியவர் கோப்பையை வேகமாக  கீழிறக்கினார். சர்க்கரைக்கு பதில் அவர் உப்பை கலந்து விட்டார்

அந்த வெள்ளை நிற பொடி வைக்கப்பட்டிருந்த சீசாவை அவர்  பார்த்தார். உறுதியாக அது சர்க்கரைக்கானதுதான். எப்படி ஷேம்பெயின் பாட்டிலில் ஷாம்பெயின்தான் இருக்குமோ அப்படி சர்க்கரையை கொண்டிருக்க வேண்டிய சர்க்கரை சீசாதான் அது. அதில்  ஏன் உப்பை வைத்தார்கள்  என அவர் வியந்தார்.

வேறு ஏதேனும்   சீசாக்கள்  இருக்கிறதா என அவர் ஆராய்ந்தார். இருந்தன இரு உப்பு புட்டிகள் நிறைந்து காணப்பட்டன. அதில் எதேனும் விசேஷமாக இருக்கலாம் என்று அவர் அவற்றை சுவைத்து பார்த்தார்,  இனித்தது ஆம் அது உப்பல்ல,  சர்க்கரை

உப்பையும் சர்க்கரையையும் மாற்றி வைத்த  அந்த வித்தியாசமான ரசனைக்கான வேறு தடயங்களும் அங்கு  இருக்கிறதா என வேலண்டீன் அந்த உணவகத்தை புதிய ஆர்வத்துடன்  சுற்றி பார்த்தார்.

வெள்ளைத்தாள் ஒட்டப்பட்டிருந்த சுவரில்  வீசியெறியப்பட்ட ஏதோ ஒரு திரவத்தின் கறையை தவிர அந்த இடம் மிக சுத்தமாகவும் சாதாரணமாகவும் தான் இருந்தது. சிப்பந்தியை  வரவழைக்க அவர் மேசையிலிருந்த மணியை அடித்தார்

அந்த காலை வேலையில் தூக்க  கலக்கக்துடன், கலைந்த தலையுடன் வந்த  சிப்பந்தியிடம் அந்த சர்க்கரையை சுவத்துப் பாரத்து அந்த உணவகத்தின் தரத்துக்கு அது  ஏற்புடையதுதானா? என்று சொல்ல சொன்னார் அதைப்போன்ற எளிய நகைச்சுவைகளை விரும்பும் அந்த துப்பறிவாளர்.

ஒரு துளி வாயிலிட்டு சுவைத்த  அந்த சிப்பந்தி தூக்கம் விலகி அவசரமாக ஒரு கொட்டாவியை வெளியேற்றி சுதாரித்துக்கொண்டான்

’’இப்படித்தான் வாடிக்கையாளர்களை ஒவ்வொரு நாள் காலையிலும் வேடிக்கை செய்கிறீர்களா? என்று கேட்டார் வேலண்டீன்

சர்க்கரையையும் உப்பையும் மாற்றி வைப்பது உங்களுக்கு அலுக்கவில்லையா? என்று அவர் கேட்டதும் சிப்பந்தி விஷயத்தின் தீவிரத்தை புரிந்தவராக தடுமாறி அப்படியான எண்ணம் ஏதும அந்த உணவகத்துக்கு இல்லையென்றும் எப்படியோ இந்த தவறு நிகழ்ந்து விட்டிருக்கிறதென்றும் பணிவுடன் கூறினார்

சர்க்கரை சீசாவையும் உப்பு சீசாவையும் எடுத்து உற்றுப் பார்த்த சிப்பந்தியின் முகம் மேலும் மேலும் குழப்பமடைந்தது. ‘’மன்னித்துக்கொள்ளுங்கள்’’ என்று சொன்னபடி விரைந்து அங்கிருந்து விலகிய அவர் சில நொடிகளில் உணவகத்தின் உரிமையாளருடன் திரும்பி வந்தார். சர்க்கரை உப்பு சீசாக்களை ஆராய்ந்த உரிமையாளர் முகமும் குழம்பியது

அவவசரமாக  பலவற்றை சொல்ல முயன்ற  சிப்பந்தி  ’’நான்  நினைக்கிறேன் நான் நினைக்கிறேன் அந்த இரு பாதிரியார்கள்தான்’’ என்று திணறினார்.

’’என்ன அந்த இரு பாதிரிகள்?’’ என்றார் வேலண்டீன்.

’’அவர்கள்தான், அந்த பாதிரிகள்தான்  சூப்பை சுவரில் வீசி எறிந்தார்கள்’’ என்றார் சிப்பந்தி

’’சூப்பை சுவற்றில் எறிந்தார்களா?’’ என்ற வேலண்டீன் இது  வேறு ஏதாவதொன்றிற்கான இத்தாலிய படிமமாக இருக்குமோ என்று யோசித்தார்.

’ஆம்! ஆம்! ’’ என்று உணர்வு மேலிட சொல்லிய  அந்த சிப்பந்தி சுவற்றின் கறையை சுட்டிக்காட்டி ’’அங்கேதான்! அங்கேதான்! சூப்பை வீசினார்கள்.’’ என்றார்

வேலண்டீன் இப்போது உரிமையாளரை கேள்வியுடன் பார்த்தார். அவரும் ’’ஆம் உண்மைதான்  ஆனால் அதற்கும் சர்க்கரையும் உப்பும் இடம்மாறியதற்கும் தொடர்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை.’’

’’இன்று அதிகாலையில் கடையை திறந்தவுடன் இரு பாதிரியார்கள் வந்து சூப் அருந்தினார்கள் இருவரும் மிக அமைதியாக மிக கெளரவமானவர்களாக தோன்றினார்கள்’’.

’’இருவரில் ஒருவர் பணத்தை செலுத்தி விட்டு வெளியேறினார் கொஞ்சம் நிதானமாக புறப்பட்ட மற்றொருவர் சில நொடிகள் தாமதமாக தனது பொருட்களை சேகரிக்க துவங்கினார். கடையை விட்டு வெளியேறும் முன்பு வேண்டுமென்றே அவர் பாதி அருந்தி வைத்திருந்த சூப் கப்பை எடுத்து சுவற்றில் வீசி எறிந்தார்’’.

’’நான்  பின்னாலிருக்கும் என் அறையில் இருந்தேன் இந்த சிப்பந்தியும் அங்கு தான் இருந்தார்.  சத்தம் கேட்டு ஓடி வந்த போது இங்கு யாருமே இல்லை!’’ பெரிய சேதமொன்றும் இல்லைதான் எனினும் அவர்களின் இந்த செய்கை குழப்பமேற்படுதியது.

’’அவர்களை பிடிக்க  ஓடிச்சென்று தெருவில் தேடினேன் ஆனால் அவர்கள் வெகு தூரம் சென்று விட்டிருந்தார்கள், அடுத்த தெருவில் திரும்பி அவர்கள் கார்ஸ்டேர்ஸ் தெருவை நோக்கி செல்வதை மட்டும் பார்க்க முடிந்தது’’ என்றார் உரிமையாளர்.

அவர் பேசி முடிக்கையில் வேலண்டீன்  கைகளில் தடியுடன் புறப்பட்டு விட்டிருந்தார்,   ஊழ் முதலில் சுட்டிக்காட்டும்  விநோதமான  வழியில் செல்வது என அவர் ஏற்கனவே முடிவு செய்திருந்தார்.. இந்த வழி போதுமான அளவுக்கு விநோதமாகத்தான் இருந்தது. அவசரமாக பணத்தை செலுத்திவிட்டு  கண்ணாடிக்கதவை  தனக்கு பின்னால் அறைந்து சாத்திவிட்டு விரைவில் அடுத்த தெருவுக்கு வந்தார்

இத்தனை பரபரப்பிலும் அவரது கண்பார்வை அதிர்ஷ்டவசமாக  துல்லியமாகவும் நிதானமாகவும் இருந்தது.. ஒரு கடையை தாண்டுகையில் அவரது கண்களில் மின்னல் போல எதோ ஒன்று பளீரிட்டது.  அவர் திரும்பி  அதை பார்க்க அங்கு வந்தார்

அது ஒரு பிரபல பச்சை காய்கறிகளும் பழங்களும் விற்கும் கடை. ஏராளமான பொருட்கள்  பெயரும் விலைப்பட்டியலும் வைக்கபட்ட அட்டைகளுடன் வெளியே விற்பனைக்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

ஆரஞ்சுகளும் முந்திரிகளும் குவித்து வைக்கப்பட்டிருந்த ஒரு வரிசையில் முந்திரிக்கொட்டைகளின் குவியல் மீது இரண்டு ஆரஞ்சுகள் ஒரு பென்னி என்று தெளிவாக நீல சாக்கட்டியால்  எழுதப்பட்ட அட்டை சொருகி இருந்தது.

தரமான பிரேஸில்  முந்திரி கொட்டைகள்  ஒரு பவுண்ட்  4 டைம் என்னும் அட்டை ஆரஞ்சுகளின் மீது வைக்கப்பட்டிருந்தது. வேலண்டீனுக்கு இதே போன்ற நுட்பமான  வேடிக்கையை  முன்பே, மிக சமீபத்தில்  பார்த்திருப்பது  நினைவுக்கு வந்தது.

தெருவை அளப்பது போல மேலும் கீழுமாக பார்த்துக்கொண்டிருந்த அந்த சிவந்த முகம் கொண்ட பழக்கடைக்கரரை  அணுகிய வேலண்டீன்  அதை சுட்டிக்காட்டினார். பழக்கடைக்காரர் ஒன்றுமே சொல்லாமல் அட்டைகளை மட்டும் இடம் மாற்றி சரியாக வைத்தார்

ஒயிலாக கைத்தடியை ஊன்றி அதன் மீது சாய்ந்தபடி  கடையை நோட்டமிட்ட வேலண்டீன் கடைக்கரரிடம். ’’தொடர்பில்லாமல்  கேட்பேனாகில் மன்னியுங்கள் எனக்கு உளவியல்  ரீதியாக உங்களை ஒரு கேள்வி கேட்க வேண்டி இருக்கிறது“ என்றார்

எரிச்சலுடன்  பார்த்த, சிவந்த முகம் கொண்ட  கடைக்காரரிடம்  கைத்தடியை சுழற்றியபடியே ’’ஏன்? ஏன்? பாதிரிமார்கள் லண்டனுக்கு சுற்றுலா வந்ததுபோல பொருத்தமில்லாமல் விலை அட்டைகள் இடம் மாற்றி வைக்கப்பட்டிருந்தன?’’, என்று கேட்டார்

’’ஒருவேளை நான் கேட்பது உங்களுக்கு புரியவில்லை எனில் தெளிவாகவே கேட்கிறேன்  முந்திரிகளென குறிககப்பட்டிருக்கும் ஆரஞ்சுகளுக்கும் நெட்டையாகவும்,   குட்டையாகவும் இருந்த இரு பாதிரிகளுக்கும் என்ன தொடர்பு?’’ என்று கேட்டார்

நத்தையை போல  கண்கள் வெளியே தெறிக்கும் படி வெறித்துப் பார்த்த,     வேலண்டீன் மீது  பாயப் போவது போல் தோற்றமளித்த அந்த கடைக்காரர் கோபமாக  ’’இதில் உங்களுக்கு என்ன தொடர்பு என தெரியவில்லை, ஆனால் அவர்கள் உங்கள் நண்பர்கள் எனில் மீண்டும் என் ஆப்பிள்களை அவர்கள் சேதப்படுத்தினால் பாதிரிகள் என்று கூட பார்க்காமல்  அவர்களை உதைத்து விடுவேன் என்று சொல்லுங்கள்’’ என்றார்

’’அப்படியா?’’  என்ற வேலண்டீன் ’’உங்கள் ஆப்பிள்களை அவர்கள் சேதப்படுதினார்களா?’’ என்றார் அனுதாபத்துடன்.

கோபம் தணிந்திருக்காத கடைக்காரர் ’’ஆம் ஆம் அவர்களில் ஒருவன் ஆப்பிள்களை  கொட்டி தெருவில் ஓடவிட்டான்  ஆப்பிள்களை பொறுக்க வேண்டி இருந்ததால்,அவர்களை பிடிக்காமல் விட்டுவிட்டேன்’’ என்றார்

’’அவர்கள் எந்த வழியே போனார்கள்?’’’ என்று கேட்டார் வேலண்டீன். வலது பக்கமாக இருக்கும் அந்த  இரண்டாவது தெருவில் மேலேஏறி பின்னர் அந்த சதுக்கத்தை கடந்து போனார்கள்’’ என்றார் கடைக்காரர்.

‘’நன்றி’’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து மாயமானார் வேலண்டீன், இரண்டாம் சதுக்கத்தில் நின்றிருந்த காவலரிடம் ’’இது மிக அவசரம்,  நீங்கள் தொப்பியுடன் இருந்த இரு பாதிரிகளை பார்த்தீர்களா?’’ என்று கேட்டார்.

”அந்த காவலர் அவசரமாக தலையாட்டியபடி ’’ஆம்! பார்த்தேன் அவர்களில் ஒருவன் குடித்திருந்தான், போதையில் சாலையின் நடுவில் நின்று அவன்’’ என்று சொல்லிக் கொண்டிருக்கையிலேயே வேலண்டீன் விரைந்து குறுக்கிட்டு  ’’எந்த வழியாக போனார்கள்? ‘’ என்று கேட்டார்.

’’அவர்கள் ஹேம்ஸ்டீடு போகும் மஞ்சள் நிற பேருந்தில் சென்றார்கள்’’ என்றார் காவலர்.

வேலண்டீன் தனது அடையாள அட்டையை அவரிடம் காட்டி ’’உடனே இரு காவலர்களை என்னுடன் தேடலுக்கு வர சொல்லுங்கள்’’ என்றபடியே அந்த காவலர் பணிந்து வணங்கியதை கூட கவனிக்காமல் சாலையை கடந்து மறுபக்கம் விரைந்தார்.

ஒன்றரை  நிமிடங்களில்   எதிர்ச்சாலையின்  நடைபாதையில் வேலண்டீனுடன் ஒரு இன்ஸ்பெக்டரும் சாதாரண உடையில் இருந்த மற்றொரு காவலரும்  இணைந்து கொண்டார்கள்

அந்த இன்ஸ்பெக்டர் உரையாடலை துவக்கும் பொருட்டு ’’இப்போது என்ன?’’ என்று சொல்ல முற்படுவதற்குள் தன் கையில் இருந்த கைத்தடியினால் தூரத்தில் இருந்த பேருந்தை சுட்டிக்காட்டி ’’எல்லாவற்றையும் அந்த பேருந்தில் வைத்து சொல்கிறேன்’’ என்றார் வேலண்டீன்

போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறி ஒரு வழியாக மூவரும் அந்த பேருந்தில் மேல்பக்க இருக்கைகளில் அமர்ந்ததும்,’’ இதைக்காட்டிலும் நான்கு மடங்கு வேகமாக நாம் டாக்ஸியில் சென்றிருக்கலாமே’’என்றார் இன்ஸ்பெக்டர்.

‘’ஆம்! ஆனால் அது நாம் போகுமிடம் தெரிந்திருந்தால்தானே’’ என்றார் வேலண்டீன்

’’நாம் இப்போது எங்குதான் செல்லவிருக்கிறோம்?’’ என்றார் அந்த இரண்டாமவர்.  அமைதியாக  இரண்டு நொடிகளுக்கு சிகெரெட் புகைத்த வேலண்டீன் சிகெரெட்டை அகற்றிவிட்டு  ’’ஒருவன் என்ன செய்கிறான் என்று பார்க்க அவனுக்கு முன்னால் செல்ல வேண்டும், ஆனால் ஒருவன் என்ன செய்வான் என்று யூகிக்க அவ்னை கவனமாக பின்தொடர வேண்டும்’’ என்றார்

’’அவன் விலகினால் நாமும் விலகி, அவன் நின்றால் நாமும்  நின்று, அவன் வேகத்துக்கு இணையாக நாம் செல்லவேண்டும்’’. ’’அப்போதுதான் அவன் காண்பவற்றை நாமும் கண்டு அவன் செய்பவற்றை நாமும் செய்யமுடியும்’’ இப்போது நாம் செய்யக்கூடியதெல்லாம் விந்தைகளை காணும் பொருட்டு நம் கண்களை திறந்து வைத்திருப்பதுதான்’’ என்றார் அவர்

’’எப்படியான விந்தைகளை?’’என்றார் இன்ஸ்பெக்டர் ’’எப்படிப் பட்டவைகளாக இருந்தாலும்’’ என்ற வேலெண்டீன் மீண்டும் அமைதியில் மூழ்கினார்

முடிவற்று சென்று கொண்டிருப்பது போல அந்த மஞ்சள் பேருந்து வடக்கு சாலையை நோக்கி மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. மேற்கொண்டு அந்த துப்பறிவாளர் விளக்கமேதும் அளிக்காததால்  உதவியாளர் இருவருக்கும் அவரின் நோக்கத்தின் மீதும் அந்த பயணத்தின் மீதும் ஐயம் எழுந்தது

கூடவே மதிய உணவிற்கான வேளையும் கடந்து விட்டதால் அவர்களுக்கு கடும் பசியும் உண்டாகி இருந்தது. வடக்கு லண்டன் சாலைகளில் பிரபஞ்சத்தின் எல்லைக்கே அழைத்துச் செல்வது போல் நீண்டு கொண்டிருந்த  அந்தப்பயணம், டஃப் நெல்  பூங்காவின் துவக்கத்திற்கு தான் வந்திருந்தது

லண்டன் கொஞ்சம் கொஞ்சமாக பின்னால்  மறைந்துபோய், கைவிடப்பட்ட கட்டிடங்களும், அழுக்கான சத்திரங்களும் தென்பட்டு லண்டன் முடிந்து விட்டதென்றும், பளபளக்கும் விஸ்தாரமான  சாலைகளும், பிரம்மாண்டமான விடுதிகளும் இடைப்பட்டு பேருந்து இன்னும் லண்டனில் தான் இருக்கிறது என்பதையும்  நினைவூட்டிக்கொண்டிருந்தன..

பேருந்துப்பயணம்  ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருக்கும் 13 ஒழுங்கற்ற நகரங்களை கடந்து செல்வது போலிருந்தது. குளிர்காலத்தின் அந்தி நெருங்கிக்கொண்டிருந்த வீதிகளின் முகப்புக்கள் இருபுறமும் விரிந்து மறைவதை பார்த்தபடி பாரீஸ்காரரான அந்த துப்பறிவாளர் சிந்தனையில் ஆழ்ந்து அமைதியாக அமர்ந்திருந்தார்..

திடீரென வாலண்டீன் துள்ளி எழுந்து அவர்களின் தோள் மீது கையை ஊன்றிய்போது காவலர்கள் திடுக்கிட்டனர். ஓட்டுநரை நோக்கி வண்டியை நிறுத்தும்படி கத்தினார் அவர்.  கேம்டென் நகரத்தை தாண்டியபோது ஏறக்குறைய தூங்கியே விட்டிருந்த. காவலர்கள், படிகளில் அவருடன் அவசரமாக இறங்கி, எதற்காக இறங்கினோமென்று  அறியாமல் சுற்றும் முற்றும் குழப்பமாக பார்த்த போது வேலண்டீன் சாலையின் வலது புறம் இருந்த கட்டிடமொன்றின்  ஜன்னலை  வெற்றிகரமாக சுட்டிக்காட்டுவதை  கண்டார்கள்

அங்கிருந்த  உயர்குடியினருக்கான ஒரு உணவகத்தின் ஒரு பகுதியில் இருந்த,  மற்ற ஜன்னல்களை போலவே சித்திர வேலைப்பாடுகளை கொண்டிருந்த ஒரு ஜன்னல் கண்ணாடி பனிப்பாளத்தில் நட்சத்திரம் போல நடுவில்  பெரிதாக  உடைந்திருந்தது

கைத்தடியை வீசியபடி’’ உடைந்த ஜன்னலுடன் ஒரு கட்டிடம்,  ’’நாம் தேடி வந்தது கிடைத்து விட்டது’’ என்று கூவினர் வேலண்டீன்.

’’என்ன ஜன்னல்? என்ன கிடைத்துவிட்டது’’ என்றார் முதல் உதவியாளர். ‘’எந்த ஆதாரம்  அங்கு இருக்கிறது?  அவர்களுக்கும் இதற்கும் என்ன  தொடர்பு ?

பிரம்பு கைப்பிடியை உடைத்துவிடும் அளவுக்கு ஆவேசமானார் வேலண்டீன்.

’’ஆதாரமா!’’ அவர் அலறினார் ’’கடவுளே, கடவுளே இந்த மனிதன் ஆதாரத்தை தேடுகிறான். ஆம் கிடைத்திருப்பது ஆதாரமாக இருப்பதற்கான சாத்தியம்,  20ல் ஒன்றுதான். ஆனால்  நம்மால் வேறென்ன செய்ய முடியும்? இப்போது நம் முன்னே இருப்பது கிடைத்திருக்கும் இந்த  யூகத்தைதொடர்ந்து செல்வது அல்லது வீட்டுக்கு திரும்பி சென்று படுக்கையில் உறங்குவது என்னும் இரண்டே சாத்தியங்கள் தானே?  என்று சொல்லிக்கொண்டே வேலண்டீன் அதிரடியாக அந்த உணவகத்துக்குள் உதவியாளர்கள் தொடர நுழைந்தார்

உணவு மேசைகளில், சென்று அவர்கள் விரைவாக அமர்ந்து ஜன்னல் கண்ணாடி உடைந்து நட்சத்திரம் போல் விரிசலிட்டிருப்பதை உள்ளிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போதும் அந்த கண்ணாடியின் உடைசலிலிருந்து இவர்களுக்கு புதிதாக எதும் கிடைப்பதுபோல் தெரியவில்லை

’’உங்களது ஜன்னலொன்று உடைந்திருக்கிறதே!’’  என்றார் வேலண்டீன் உணவக சிப்பந்தியிடம் பில் தொகையை கொடுத்தவாறே.

தொகையை குனிந்து எண்ணிக்கொண்டிருந்த சிப்பந்தி, வேலண்டீன் கொடுத்த  தாராளமான சன்மானத்தின் பொருட்டு மெல்ல முதுகை நிமிர்த்தி  ’’ ஆமாம், மிக விசித்திரம் தான் சார்’’ என்றான்.

’’அப்படியா? அதுகுறித்து சொல்லுங்களேன்’’ என்று அதை கேட்பதில் பெரிதாக ஆர்வமில்லாதது போல கேட்டார்  வேலண்டீன்

’’மாநாட்டுக்காக ஊரெங்கும் வந்திருக்கும் கருப்பு உடை அணிந்திருக்கும் பாதிரிகளில்  இருவர் இங்கு   வந்திருந்தார்கள். இருவரும் எளிய உணவை  உண்டபின் ஒருவர் பில் தொகையை செலுத்திவிட்டு வெளியேறினார். மற்றொருவரும் சிறிது தாமதமாக வெளியேறும் முன்புதான் எனக்கு அவர்கள் கொடுக்க வேண்டிய தொகையை  காட்டிலும் மூன்று மடங்கு கொடுத்திருப்பதை பார்த்தேன்’’

’’இதோ பாருங்கள்! எனக்கு மூன்று மடங்கு அதிகமாக கொடுத்துவிட்டீர்கள்! ,என்று நான் உரக்க சொன்னதும்,  திரும்பி ’’அப்படியா? என்ற அவரிடம் நான் பில்  தொகையை காண்பிக்க முயன்றபோதுதான் குழப்பம் துவங்கியது’’ என்றான்

’’என்ன சொல்கிறீர்கள்?’’ என்றார்  வேலண்டீன்.

’’ஏழு பைபிள்களில் வேண்டுமானலும் நான் சத்தியம் செய்து சொல்வேன். நான் பில்லில் எழுதியது 4 ஸ்டெர்லிங்தான் ஆனால் அப்போது பில்லில் அச்சடித்தது போல 14 ஸ்டெர்லிங்குகள் என்று இருந்தது’’ என்றான் அவன்..

’’அப்படியா!’’ என்று கூவிய வேலண்டீன் ’’பிறகு’’ என்றார் ஆவலுடன்.’’கதவருகில் நின்ற அந்த பாதிரி என்னிடம் ’’ பில் தொகையில் குழப்பமேற்படுத்தியதற்கு மன்னித்துக்கொள்ளுங்கள்,, அந்த கூடுதல் தொகையை, இந்த ஜன்னலுக்காக எடுத்துக் கொள்ளுங்கள் ‘’ என்றான்

’’எந்த ஜன்னல்?’’ என்று நான் கேட்டபோது  ’’இதோ நான் இப்போது  உடைக்க போவது தான்’’ என்று சொல்லியபடியே கையிலிருந்த குடையால் ஜன்னலை ஓங்கி அடித்து கண்ணாடியை  உடைத்துவிட்டான்’’ என்றான்

கேட்டுக்கொண்டிருந்த மூவரும் வியப்பொலி எழுப்பினார்கள். அந்த காவலர் மூச்சொலியில் ’’நாம் பைத்தியக்காரர்களையா தேடி சென்று கொண்டிருக்கிறோம் ‘’ என்றார்.

உணர்வு மேலிட்டு அந்த சிப்பந்தி தொடர்ந்து சொல்லிக் கொண்டே போனான்.’’ஒரு நொடி எனக்கு எதுவும் புரியவில்லை, என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அவன் வெளியேறி அந்த மூலையில் காத்திருந்த தன் நண்பனுடன்  சேர்ந்துகொண்டான்., நான் கம்பிகளை தாண்டி ஓடியும் அவர்களை  பிடிக்க முடியவில்லை.  இருவரும்  புல்லக் தெருவுக்குள் சென்றனர்’’ என்றான்

’’புல்லக் தெரு’’ என்று சொன்ன வேலண்டீன்,  பாதிரிகள் சென்ற அதே வேகத்தில் அந்த தெருவுக்கு சென்றார். கைக்கு கிடைத்தவற்றையெல்லாம் கொண்டு கட்டப்பட்டிருந்த நடைபாதைகளிலும், சுட்ட செங்கற்களாலான  குகைப்பாதைகளிலும்,  ஒரு சில விளக்குகளே இருந்த, ஜன்னல்களற்ற இருட்டு சாலைகளிலும் அவர்கள் பயணித்தார்கள்.

இருட்டிக்கொண்டே வந்ததால் லண்டனின் காவலர்களாகிய அவர்களுக்கே சென்று கொண்டிருக்கும் திசை சரியாக புலப்படவில்லை. அந்த இன்ஸ்பெக்டருக்கு  அந்த பாதை ஹேம்ப்ஸ்டட் ஹீத்தின் ஏதோ ஒரு இடத்தில் முடியும் என்று மட்டும் தெரிந்தது

ஒரு  பிரகாசமான சிறிய  மிட்டாய்க்கடையின் விளக்கு வெளிச்சத்தில் ஒளிர்ந்த ஜன்னலொன்று சாலையின் இருட்டை துண்டித்தது வேலண்டீன் அந்த கடை முன்னால் நின்றார்

ஒரு கண தயக்கத்துக்கு பிறகு கடைக்குள் நுழைந்த வேலண்டீன் அங்கிருந்த வண்ணமயமான மிட்டாய்களுக்கு மத்தியில் நின்றுகொண்டு பதிமூன்று சாக்லேட் சுருட்டுக்களை வாங்கிக்கொண்டு, விசாரணையை எப்படி தொடங்குவது என்று யோசித்துக் கொண்டிருந்தார்

ஆனால் அதற்கு அவசியமேற்படவில்லை..

எலும்புகள் துருத்திக்கொண்டிருக்கும் முகத்துடன் இருந்த அந்த கடைக்காரப் பெண், அதிகார தோற்றத்தில் இருக்கும் இவர் ஏன் இங்கு வந்திருக்கிறார் என்று யோசித்துக் கொண்டிருக்கையிலேயே  கதவுக்கு பின்னால் சீருடையில் இருந்த  காவலரை பார்த்துவிட்டால். சுதாரித்துக் கொண்டு அவளாகவே ’’ஓ! அந்த பெட்டகத்துக்காக  வந்திருக்கிறீர்களா?’’ நான் அதை முன்பே அனுப்பிவிட்டேனே’’ என்றாள்

’’பெட்டகமா?’’ என்றார் வேலெண்டீன். இப்போது வியப்படைவது அவர் முறையாகிவிட்டது

’’அதுதான் அந்த பாதிரிகள் விட்டு சென்ற பெட்டகம்’’ என்றாள் அவள்

’கடவுளே ’தயவு செய்து என்ன நடந்ததென சொல்லுங்கள்’’ என்றார் வேலண்டீன் முதன் முறையாக  ஆவலை வெளிக்காட்டும் குரலில்

’’இரு பாதிரிகள் கடைக்கு  அரைமணி நேரத்துக்கு முன்பு வந்து பெப்பர்மிண்டுகள் வாங்கிவிட்டு சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்..  பிறகு ஹீத்தைநோக்கி அவர்கள் போன சில நொடிகளில் அவர்களில் ஒருவர் மட்டும் கடைக்கு வேகமாக திரும்பி வந்து ’’எதாவது பெட்டகத்தை நான் கடையில் விட்டுவிட்டு சென்றேனா?’’ என்று கேட்டார்

நான் எல்லா பக்கமும் பார்த்தபின்பு ’’அப்படி எதுவும் இல்லை’’யென சொன்னேன். ’’பரவாயில்லை, ஒருவேளை பெட்டகமேதும் உங்கள் கண்ணில் பட்டால், அதை இந்த முகவரிக்கு அனுப்பி விடுங்கள்’’ என்று சொல்லி முகவரியையும், அந்த  சிரமத்திற்கான பணத்தையும் கொடுத்துவிட்டு அவர் போய்விட்டார்’’.

’’நன்றாக பார்த்து விட்டேன் என்றுதான் நினைத்திருந்தேன், ஆனால் அவர் ஒரு பழுப்பு காகித பெட்டகமொன்றை விட்டுச்சென்றிருந்ததை பிறகுதான் பார்த்தேன் அதை அவர் கொடுத்திருந்த முகவரிக்கு அனுப்பி விட்டேன்.’’

’’அந்த விலாசம் எனக்கு இப்போது சரியாக நினைவிலில்லை ஆனால்  அது எங்கோ வெஸ்ட்மிஸ்டரில் இருக்கும் இடம்.  ஒருவேளை அது  முக்கியமான பொருளாக இருந்து அதன்பொருட்டுதான் காவலர்களாகிய நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள் என்று நினைத்தேன்’’ என்றாள்

’’ ஆம், அதன்பொருட்டு தான்’’ என்ற வேலண்டீன் ’’இங்கிருந்து ஹேம்ப் ஸ்டட் ஹீத் எத்தனை தொலைவு?’’ என்று கேட்டார். ’’நேராக சென்றால் பதினைந்து நிமிடங்களில் போய் விடலாம்’’ என்றாள்.. கடையிலிருந்து பாய்ந்து வெளியே ஓடிய அவரை விருப்பமின்றி பெருநடையில் தொடர்ந்தார்கள் உதவியாளர்களும்

இருண்டிருந்த அந்த குறுகிய சாலையிருந்து வெளியே வந்து  பரந்த வானின் கீழ் நிற்கையில்தான் இன்னும் அத்தனை பொழுதாகிவிடவில்லை நல்ல வெளிச்சம் இன்னும் இருக்கிறதென்பது தெரிந்தது

தொலைவில் அடர்ந்திருந்த மரக்கூட்டங்களின் இருட்டில் மயில்பச்சைநிற வானத்தை அந்திச்சூரியன் சிவப்பக்கிக்கொண்டிருந்தது. ஒளிர்ந்த அந்திவானத்தில் ஒன்றிரண்டு நட்சத்திர பொட்டுக்களும் தென்பட்டன. பகற்பொழுதின் .சந்தடிகள் மெல்ல அடங்கி  அன்றைய தினத்தின் மிச்சம் ஹேம்ஸ்டெனின் பிரபல   வேல் ஆஃப் ஹெல்த் பூங்காவில்  அந்தியின் பொன்னிற ஒளியில் குளித்துக் கொண்டு  இருந்தது.  .

விடுமுறைக்காக அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் இன்னும் அங்கும் இங்குமாக பூங்காவில் இருந்தார்கள்.. சில ஜோடிகள் அங்கிருந்த பெஞ்சுகளில் அமர்ந்திருந்தனர். தொலைவில் ஒரு சிறுமி ஊஞ்சலில் உற்சாக கூச்சலுடன் விளையாடிக்கொண்டிருந்தாள்.

ஒரு சரிவில் நின்று கொண்டு பள்ளத்தாக்கின் குறுக்கே பார்த்துக்கொண்டிருந்த வேலண்டின் தான் தேடிக்கொண்டிருந்ததை கண்டார். தொலைவில்   கருப்பு உடைகளில் கலைந்து சென்று கொண்டிருந்தவர்களில்  அந்த இருட்டிலும் மிகத்தனித்து நெட்டையும் குட்டையுமாக இருந்த இரு கருப்பு உருவங்கள்  அவர் கண்களுக்கு தென்பட்டன.

அங்கிருந்து பார்க்கையில் அவர்கள் சிறு பூச்சிகளை போலத்தான் தெரிந்தார்கள் எனினும் வேலண்டீனுக்கு அதில் ஒருவன் மற்றவனை விட மிக சிறிதாக இருப்பது தெளிவாக தெரிந்தது

மற்றொருவன் அடையாளம் தெரியாமலிருக்கும் பொருட்டு  லேசாக குனிந்து கொண்டிருந்தாலும்  வேலண்டீனுக்கு அவன்  ஆறடிக்கு மேலும் உயரமாயிருந்ததை  பார்க்க முடிந்தது.

பொறுமையிழந்து கைத்தடியை சுழற்றியபடியே பல்லைக்கடித்தபடி அவர் முன்னோக்கி சென்றார். அவர்களுக்கிடையிலிருந்த தொலைவு குறைந்து அவ்விருவரின் உருவங்களும் உருப்பெருக்கியில் தெரிவதுபோல கொஞ்சம் கொஞ்சமாக துலங்கி தெரிய ஆரம்பித்த போது அவருக்கு மற்றுமொரு புதிய விஷயமும் தெரியவந்தது. திடுக்கிட செய்த அந்த உண்மையை  எப்படியோ அவர் எதிர்பார்த்துமிருந்தார்.

அந்த உயரமான பாதிரி யாரென்று தெரியாவிட்டாலும்,  சந்தேகமில்லாமல் அந்த குள்ளமானவரை அடையாளம் தெரிந்தது. அவன் அன்று  அவருடன் ஹார்விச் ரயில் பயணத்தில் அவருடன் பயணித்த, அவரால் பழுப்பு நிற காகித பெட்டகங்கள் குறிதது எச்சரிககபட்ட அதே எஸ்ஸெக்ஸ்  குளளப்பாதிரிதான்

இவ்வளவு தூரத்திற்கு வந்த பின்னால் எல்லாமே எல்லாவற்றுடனும் பொருந்தி சரியாக வந்தது

இன்று காலையில்  பாதிரியார் பிரெளன் எஸ்ஸெக்ஸிலிருந்து விலைமதிப்பற்ற   நீலக்கற்கள் பதிக்கப்பட்டிருக்கும் ஒரு வெள்ளிச்சிலுவையை மாநாட்டிற்கு வந்திருக்கும் வெளிநாட்டு இறைப் பணியாளர்களுக்கு காண்பிக்கும் பொருட்டு கொண்டு வந்திருப்பதை அவர் தனது விசாரணையில் அறிந்திருந்தார்.

சந்தேகமில்லாமல் அது வெள்ளியில் நீலக்கற்கள் பதித்திருக்கும் சிலுவைதான். பாதிரியார் பிரெளனும் சந்தேகமில்லாமல்  ரயிலில் உடன்பயணித்த குள்ளமானவரேதான்

வேலண்டீன் கண்டுபிடித்ததை ஃப்ளேம்போவும் கண்டுபிடித்திருப்பதில் எந்தஆச்சரயமும் இல்லை. இப்போது ஃப்ளேம்போ எல்லாவற்றையும் அறிந்துவிட்டான். நீலச்சிலுவையை குறித்து  அறிந்துகொண்ட ஃப்ளேம்போ அதை திருடிச்செல்ல முயற்சித்ததிலும் ஏதும் ஆச்சரயமில்லை. வரலாற்றில் இயற்கையாக  இதுவரை அப்படித்தான் நடந்திருக்கிறது

ஃப்ளேம்போ அந்த குடையையும் காகித பெட்டகங்களையும் கொண்டிருந்த அப்பாவி பாதிரியை அப்படி தனியே திருட்டுக்கான நோக்கத்துடன் அழைத்து சென்றிருப்பதிலும் ஏதும் ஆச்சர்யமில்லை தான். அந்த பாதிரியை அப்படி  யாரும் எங்கு வேண்டுமானாலும் அழைத்து செல்ல முடியும்தான்

ஃப்ளேம்போவை போல தேர்ந்த நடிகனொருவன் பாதிரியின் வேஷத்தில் பாதிரியார் பிரெளனை ஹேம்ஸ்டெட் ஹீத் வரையிலும் அழைத்து வந்திருப்பதிலும் எந்த ஆச்சர்யமுமில்லை.. இதுவரையிலும் குற்றம் தெளிவாகவே தெரிந்தது.

அந்த  அப்பாவி  பாதிரி பிரெளனின் மீது அவருக்கு கனிவு உண்டானாலும் அப்படியான எளிய ஒருவனை ஏமாற்ற துணிந்த ஃப்ளேம்போவின் நாயகத்தன்மை  மீது அவருக்கிருந்த அபிப்பிராயம்   வெகுவாக குறைந்து விட்டிருந்தது.

எனினும் ஏறக்குறைய வெற்றிக்கனியை பறிக்கவிருந்த இந்த சமயத்தில் வேலண்டீனுக்கு  சமீபத்தில் நடந்த சில விஷயங்களை கிடைத்தவற்றுடன் பொருத்திப் பார்க்க முடியாமல் இருந்தது

எஸ்ஸெக்ஸ் பாதிரியிடமிருந்து நீலச்சிலுவையை திருடுவதற்கும், சூப்பை சுவற்றில் வீசி எறிவதற்கும்  என்ன  தொடர்பு? எதன் பொருட்டு ஆரஞ்சுகள் முந்திரிகளென மாற்றி அழைக்கப்பட வேண்டும்? ஏன் முன்கூட்டியே பணம் கொடுத்துவிட்டு  ஜன்னல் கண்ணாடியை உடைக்க வேண்டும்

அவுர் தேடலின் முடிவுக்கு வந்துவிட்டார் ஆனால் அவரின் தேடல் கதையின் நடுவில் சில பக்கங்கள்தான்  காணாமல் போயிருந்தன.அரிதாக அவர் தோற்றிருந்த நேரங்களிலும் குற்றவாளியை தப்ப விட்டிருந்தாலும்  தடயங்களை  கண்டுபிடித்து இருப்பார். ஆனால் இந்த முறை            அவர் குற்றவாளியை நெருங்கியும் தடயங்களை  கண்டுபிடிக்க முடியவில்லை

அங்கிருந்த குன்றின் பசும் மடிப்புக்களின் குறுக்காக தொடர்ந்து நடந்து கொண்டிருந்த அவ்விருவரும் கருப்பு பூச்சிகளைப் போல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தார்கள்

உரையாடலில் மூழ்கியிருந்த அவர்களிருவரும் சென்று கொண்டிருக்கும் திசையைகூட கவனிக்கவில்லை. ஆனால் உறுதியாக அவர்கள் ஹீத்தின் அடர்ந்த  அமைதியான இடங்களை  நோக்கித்தான் சென்று கொண்டிருந்தார்கள்.

அவர்களை நெருங்க,  மான் வேட்டையாடுபவர்களைப்போல புல்தரையில் தவழ்வதும்,  மரக்கூட்டங்களுக்கிடையில் ஒளிந்து கொள்வது போன்ற கண்ணியக்குறைவான செயல்களிலும் இவரகள் ஈடுபட வேண்டி இருந்தது.

இத்தனை ரகசிய நடவடிக்கைகளுடன் மெதுவாக அவர்களை நெருங்கிய போது அவர்களின் உரையாடல் கூட லேசாக கெட்டது. முழுக்க  தெளிவாக இல்லையென்றாலும் தர்க்கம் எனும் சொல் அடிக்கடி  கீச்சுக் குரலில் உச்சரிக்கப்பட்டது   கேட்டது

அடர்ந்த மரக் கூட்டங்கள்  இடைப்பட்ட ஒரு பகுதியில் அவர்களை காவலர்கள் பார்வையிலிருந்து தவற விட்டனர்.பதட்டமான பத்து நிமிடங்களுக்கு அவர்கள் இருக்கும் சுவடே தெரியவில்லை பின்னர் அந்த அடர்ந்த பகுதியை தாண்டியதும்   கதிரணைந்து கொண்டிருந்த  சரிவில்  ஒரு அழகிய தனிமையான இடத்தில்   ஒரு மரத்தடியிலிருந்த   சேதமான பெஞ்சில் அவர்களிருவரும் அமர்ந்திருந்தது தெரிந்தது. இன்னும் தீவிரமான உரையாடலில் தான் அவர்களிருவரும்  இருந்தார்கள்.

இருட்டிக்கொண்டிருந்த தொடுவானில் பசுமஞ்சள் நிறம் இன்னும் ஒட்டிக் கொண்டிருந்தது ஆனால் தலைக்கு மேலிருந்த  மயில்பச்சை கார்நீலமாகி விட்டிருந்தது. தனித்து துலங்கிய நட்சத்திரங்கள் ஆபரணங்களை போல் பிரகாசித்தன.

உதவியாளர்களுக்கு சைகை காண்பித்துவிட்டு ஓசையற்று அந்த  பெருங்கிளைகள் கொண்ட மரத்தின் பின்னால் மறைந்து நின்றிருந்த வேலண்டீனுக்கு அந்த இரு புதிரான பாதிரிகளும் பேசிக்கொண்டிருந்தது முதல் முறையாக துல்லியமாக கேட்டது

ஒன்றரை நிமிடங்களுக்கு அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்டவருக்கு தான் ஹீத்தின் இருளுக்குள்  இரு காவலர்களை கூட்டிக்கொண்டு இவ்வளவு தூரம்  வந்த சிரமம் எல்லாம்  விழலுக்கு நீர் இறைத்தது போல வீணான வேலையோ என்று  பயங்கரமான   சந்தேகமே வந்துவிட்டது

ஏனெனில் அந்த ஒரு பாதிரிகளும் அசல் பாதிரிகளை போலவே பொறுமையாக இறையியலின்  நுண்மையான சாராம்சத்தை குறித்து பேசிக்கொண்டிருந்தார்கள்

பாதிரி பிரெளன் தனது வட்ட முகத்தை, துலங்கிக்கொண்டிருந்த நட்சத்திரங்களை  நோக்கி வைத்துக்கொண்டு  பேசிக்கொண்டிருந்தான். மற்றவனோ தான் நட்சத்திரங்களை  பார்க்கவும் தகுதியற்றவன் என்பது போல  தலையை குனிந்தவாறு அமர்ந்திருந்தான்

கருப்பினத்தவர்களுக்கான ஸ்பானிய தேவாலயங்களிலோ அல்லது வெள்ளையர்களுக்கான இத்தாலியின் தேவாலயங்களிலோ கூட அத்தனை இறைமை ததும்பும் உரையை கேட்க முடியாது

முதலில் அவர் கேட்டது ’’இதுதான் மாசுபடுத்த முடியாத  சொர்க்கமென்று   இடைக்காலத்தில் அவர்கள்  சொன்னதெல்லாம்’’ என்று எஸ்ஸெக்ஸின்பாதிரி  பேசி முடித்த  வாக்கியத்தின் கடைசி பகுதியைத்தான். பின்னர் அவர்களின் உரையாடல்  தொடர்ந்தது

உயரமான பாதிரி தலையை ஆமோதிப்பது போல் அசைத்து ’’ஆம்  நவீன காப்பிரிகள் தர்க்க பூர்வமாக அனைத்தையும் அணுகுகிறார்கள்.எனினும் இத்தனை கோடி நட்சத்திரங்களையும் கோடானு கோடி உலகங்களையும் கொண்டிருக்கும் இந்த அற்புதமான பிரபஞ்சத்தில் எங்கேனும் எல்லா தர்க்கங்களும் பொருளற்றும் போகுமல்லவா’’ என்றான்

’’இல்லை ’’என்றார் பாதிரி பிரெளன்  ’’தர்க்கம் என்றைக்குமே, ,கடைசி தீர்ப்பு நாளன்று கூட  பொருளற்று போகாது’’ ’’எனக்கும் தெரியும் தேவாலயங்கள் தர்க்கத்துக்கு அப்பாற்பட்டவைகள் என மக்கள் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பது. ஆனால் இப்பூமியில் தேவாலயங்கள் மட்டும்தான் தர்க்கங்களை அவற்றிற்கு உரிய உயரிய இடத்தில் வைத்திருக்கின்றன. இதே தேவாலயங்கள் தான் இறைவனும் தர்க்கங்களால் கட்டுண்டவர் என்பதை உறுதிபட கூறுகின்றன’’என்றார்.

மற்றவன் நிமிர்ந்து  நட்சத்திரங்கள் தூவப்பட்டிருந்த வானை நோக்கி ’’யாரால் இவற்றையெல்லாம் அறிந்துகொள்ள முடியும் இந்த முடிவற்ற பிரபஞ்சத்தில்’’ என்றான்

’’பருவடிவில்  எல்லையற்றது தான் எனினும் சத்திய விதிகளில் இருந்து தப்பிக்கும் அளவுக்கு எல்லையற்றதல்ல  இப்பிரபஞ்சம்’’ என்றார் பிரெளன்.

மரத்துக்கு பின்னிருந்து தன் விரல் நகங்களை வேலண்டீன் கடித்து துப்பிக்கொண்டிருதார். மிகப் பிரமாதமான யூகத்தின் பேரில் தான் அழைத்து வந்த இரு காவல் உதவியாளர்களும் இந்த பாதிரிகள் நிதானமாக விரிவாக  விவாதித்துக்கொண்டிருக்கும் மெய்யியல் ரகசியங்களை கேட்டு, தன்னை ஏளனம் செய்யப்போவதை மனக்கண்களால் அவரால் காணவே  முடிந்தது.

பொறுமையிழந்து இவற்றை சிந்தித்து கொண்டிருந்ததில் உயரமானவன் சொன்ன அதே அளவுக்கான   விரிவான பதிலை கேட்க தவறிவிட்டிருந்த வேலண்டீன் இப்போது மீண்டும் பாதிரி பிரௌன் பேசுவதை கேட்டார்.

’’தர்க்கமும் நீதியும் எப்போதும் மிக மிக தொலைவிலும் தனிமையிலும் இருக்கும் நட்சத்திரங்களைக்கூட அணுகி விடுகின்றன. அந்த நட்சத்திரங்களை பாருங்கள் அவை ஒற்றை வைரங்களாகவும், நீலமணிகளாகவும் தெரியவில்லையா?’’

’’உதாரணமாக  தாவரவியல் அல்லது புவியியலை கூட கற்பனை செய்து கொள்ளலாம். பெரும் காடொன்றின் மரங்களின் பசும் இலைகளனைத்தும் மரகதங்களென்று எண்ணலாம்.. இந்த நிலவை கூட  நீலநிலவென்று எண்ணிப்பாருங்கள், ஒரு மாபெரும் நீலக்கல். இது போன்ற எந்த கற்பனாவாத மாற்றங்களாக இருப்பினும் அந்தந்த இடங்களுக்கான தர்க்கமும் நியாமமும் மாறா உண்மையென அங்கேயிருக்கும்.’’.

’’முத்து முகடுகள் கொண்ட அமுதக் கற்களினாலான  சமவெளியில்  கூட  திருடாதீர்கள் என்ற எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட்டிருக்கும்’’.

இவற்றை கேட்டுக்கொண்டிருந்த வேலண்டீன், தன் வாழ்வின் ஆகப்பெரிய தவறை நினைத்து வருந்தியபடி மெல்ல தான் மறைந்திருக்கும்  இடத்திலிருந்து அகன்று செல்ல முடிவெடுத்தார் .ஆனால் உயரமானவனின்  திடீர் அமைதியால்  அதைச் செய்யாமல் அவன் பேசும் வரை அங்கேயே காத்திருந்தார்

ஒருவழியாக அவன் பேசினான் தலை குனிந்தபடி கைகளை முழங்கால்களில் வைத்துக்கொண்டு ’’ஆனால் நான்  இன்னும் நம்புகிறேன். பிற உலகங்கள் நம் தக்ர்க நியாயங்களுக்கு அப்பாற்பட்டவையாக இருக்கலாம். பரமண்டலத்தின் மர்மங்களை,நம்மால் புரிந்து கொள்ள முடியாது  வணங்க மட்டுமே முடியும்’’ என்றவன்., தலையை குனிந்தவாறே தனது நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இன்றி ’’உன்னிடம் இருக்கும் நீலச்சிலுவையை என்னிடம் கொடுத்துவிடு. நாம் இங்கே  தன்னந்தனிமையில் இருக்கிறோம் நீ மறுத்தால் உன்னை துண்டு துண்டாக்கி விடுவேன்’’ என்றான்

குரலிலும் பாவனையிலும் எந்த மாற்றமுமின்றி சொல்லப்பட்டதால் அந்த  சொற்கள்  மிக பயங்கரமாக இருந்தன.

ஆனால் எந்த திகைப்பும் ஆச்சர்யமுமின்றி, அந்த சிலுவை பாதுகாப்பாளன் மெல்ல முகத்தை திருப்பினார்.  நட்சத்திரங்களை பார்த்துக்கொண்டிருந்த அந்த முகத்தில் இன்னும் கூட அதே முட்டாள்தனம் தான் நிறைந்திருந்தது

ஒருவேளை என்ன நடக்கிறது என அவருக்கு புரியவில்லையா அல்லது   என்ன நடக்கிறது என்று தெரிந்து  அச்சத்தினால் அப்படி அசையாமல் அமர்ந்திருக்கிறாரா?

’’ஆம்’’ என்றான் அந்த உயரமான பாதிரி அதே மெல்லிய குரலில், ’’ஆம் நான் தான் ஃப்ளேம்போ. கொடுக்கிறாயா அந்த நீலச்சிலுவையை என்னிடம்’’ என்றான்

’’இல்லை’’  என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னார் பாதிரி பிரெளன்

சட்டென்று தனது பாசாங்குகளை எல்லாம் தூக்கி எறிந்த  ஃப்ளேம்போ இருக்கையில் நன்றாக சாய்ந்து கொண்டு மெல்ல  சிரித்தான். ’’என்னது முடியாதா? என்னிடம் கொடுக்க மாட்டாயா அதை? இறுமாப்பு கொண்ட மதகுருவே, எளியவனே! ’’நீ ஏன் கொடுக்கமாட்டாய்  என்று நான் சொல்லட்டுமா?  அதைத்தான் நான் ஏற்கனவே என் சட்டை பாக்கெட்டில் வைத்திருக்கிறேனே’’ என்றான்

எஸ்ஸெக்ஸின்  பாதிரி அந்த இருளில்  பிரமித்தது போல் தெரிந்த முகத்துடன் ஆர்வமுடன்  கோழைத்தனமும் நாடகத்தனமுமான குரலில்  ’’என்னது உன்னிடம் இருக்கிறதா? உண்மையாகவா?’’ என்றார்

மகிழ்ச்சியில்  கூச்சலிட்ட ஃப்ளேம்போ  ’’ அடடா , நீ   நாடகத்தில் நடிக்கலாம். ’’ஆமாண்டா கூமுட்டை, நிச்சயமாக தான் சொல்கிறேன்  நான் உன்னிடமிருந்து நீல சிலுவையை எடுத்துக்கொண்டு போலி சிலுவை இருந்த பெட்டகத்தை மாற்றி வைத்து விட்டேன் நீ வைத்திருப்பது போலி, அசல் நீலச்சிலுவை என்னிடம் இருக்கிறது. அரதப்பழசான  திருட்டு வேலையடா இது’’ என்றான்

தலைமுடியை கைகளால் கோதிகொண்டே பாதிரியார் பிரெளன் புதிரான குரலில் ’’ஆம்  பழசுதான்,    நான் இதை முன்பே கேட்டிருக்கிறேன்’’ என்றார்.

திருட்டுவேலைகளில் பழம் தின்று கொட்டை போட்ட அனுபவசாலியான ஃப்ளேம்போ திடீர் ஆர்வத்துடன்  ஏறக்குறைய பாதிரியார் பிரெளன்   மீது சாய்ந்துகொண்டு ’’கேட்டிருக்கிறாயா?, எப்போது கேட்டாய்’’? என்றான்

’’அவன் பெயரை உன்னிடம் சொல்லமுடியாது. அவன்  என்னிடம் பாவமன்னிப்பு  கேட்க வந்தவன்.  இதே வித்தையை, காகித பழுப்பு பெட்டகங்களை இடம் மாற்றிவைக்கும் இதே வித்தையை செய்து 20 வருடங்கள் மிக செழிப்பாக வாழ்ந்தவன். உன் மீது சந்தேகம் வந்தவுடனேயே  அந்த பாவபப்ட்டவனைபோலவே நீயும்  செய்யப்போகிறாயே’’  என்றுதான்  நினைத்தேன்

’’என்னது என்னை சந்தேகித்தாயா?  என்றான் அந்த சட்ட விரோதி. ‘’ஹீத்தின் இந்த தனிமையான  இடத்திற்கு உன்னை அழைத்து வந்திருப்பதால் என்னை சந்தேகப் படும் அளவுக்கு அத்தனை கூர்மதி  கொண்டவனா நீ “

மறுத்து தலை ஆட்டியபடி ‘’ இல்லை இல்லை நாம் முதல்முதலாக பார்த்த போதே சந்தேகித்தேன்’’ ’’உன்னைப்போன்ற ஆட்கள்  கைகளில் மாட்டியிருக்கும் முட்கள் கொண்ட காப்பினால் வீங்கி இருக்கும் சட்டைக்கையே உங்களை காட்டிக்கொடுக்குமே’’ என்றார்

’’அடப்பாவிப்பயலே! உனக்கெப்படி முள்காப்பை பற்றியெல்லாம் தெரியும்’’? என்றான் ஃப்ளேம்போ

புருவத்தை உயர்த்தியபடி  ’’எல்லாம் சகவாச தோஷம்தான்’’ என்றார் பாதிரியார் பிரெளன் ’’ஹார்டில்பூலில் நான் உபகுருவாக பணிபுரிகையில் அங்கிருந்த மூன்று நபர்கள் இதுபோன்ற முள்காப்பை கைகளில் அணிந்திருந்தனர். எனவே உன்னை பார்த்ததுமே சந்தேகம் கொண்டு நீலச்சிலுவையின் பாதுகாப்பை உறுதிசெய்துகொண்டேன்’’

’’உன்னை கண்காணித்துக்கொண்டே இருந்தேன். நீ பெட்டகத்தை   மாற்றிய பின்னர்,  நீ பார்க்காத போது மீண்டும் அவற்றை இடம் மாற்றினேன் அசல் நீலச்சிலுவை இருக்கும் பெட்டகத்தை  அந்த மிட்டாய் கடையில் விட்டுவிட்டு வந்தேன்’’ என்றார்

’’என்னது விட்டுவிட்டு வந்தாயா’’? என்று அலறினான் ஃப்ளேம்போ. முதல்முறையாக அவன் குரலில் வெற்றியல்லாத ஒரு தொனி கலந்திருந்தது

அதே மாறுபடில்லாத குரலில் தொடர்ந்தார் பாதிரியார் பிரெளன்   ’’நான அந்த மிட்டாய்க்கடைக்கு முதலில் திரும்பசென்ற போது ஏதேனும்  பொட்டலமொன்றை  விட்டுவிட்டேனா?’’ என்று கேட்டு அப்படியேதும்  கிடைத்தால் அனுப்பிவைக்கும்படி ஒரு முகவரியை கொடுத்துவிட்டு வந்தேன். ஆனால் அப்போது அங்கு எதையும் விட்டுவிட்டு வரவில்லை என்று எனக்கு தெரியும்’’

’ மீண்டும்  அங்கு சென்று அசல் நீலச்சிலுவை இருந்த பெட்டகத்தை  அங்கே வைத்து விட்டு வந்தேன். அதன்பிறகு அவர்கள் என் பின்னால் தேடிக்கொண்டு வராமல் நான் கொடுத்திருந்த வெஸ்ட்மின்ஸ்டர் முகவரியில் இருக்கும் என் நண்பருக்கு அதை அனுப்புவார்கள்  என்று அறிந்திருந்தேன்.’’ என்றவர்

சற்றே சோகமாக ’’நான் இதையும் ஹார்டில் பூலின் திருடனிடமிருந்தே கற்றுக்கொண்டேன். அவன் ரயில்நிலையங்களில் திருடும் கைப்பைகளை இப்படித்தான் தபாலில் அனுப்புவான். இப்போது அவன் ஒரு மடாலயத்தில் இருக்கிறான்.  ஒரு பாதிரியாக  இருப்பதால் என்னிடம் இதுபோன்ற விஷயங்களை பாவ மன்னிப்பின் போது மக்கள் தெரியப்படுத்தி விடுகிறார்கள்’’   என்றார்

ஃப்ளேம்போ  சட்டைக்குள்ளிருந்து ஒரு பழுப்பு காகித பெட்டகத்தை  எடுத்து அதை அவசரமாக கிழித்தான். அதற்குள்ளே வெறும்  ஈயக்குச்சிகளே இருந்தன.

அவன் எழுந்துநின்று உரக்க கத்தினான். ’’நான் நம்பமாட்டேன் உன்னைப்போல ஒரு அடிமுட்டாள் இத்தனை சாமர்த்தியமாக இதைசெய்திருக்கவே முடியாது’’

’’அந்த நீலச்சிலுவையை  நீதான் வைத்திருக்கிறாய். ஒழுங்காக கொடுத்துவிடு, உன்னை என்னிடமிருந்து காப்பாற்ற இங்கு யாருமில்லை. நாமிருவரும் இங்கு தனியாக இருக்கிறோம். என்னால் உன்னிடமிருந்து அதை பலவந்தமாக எடுத்துக்கொள்ள முடியும்’’ என்றான்.

’’முடியாது’’   என்றார் பாதிரியார் பிரெளன்  எழுந்து நின்றபடி ’’ உன்னால் என்னிடமிருந்து அதை பலவந்தமாக எடுத்துக்கொள்ள முடியாது ஏனெனில் என்னிடம் அது இல்லை’’

இரண்டாவது ’’நாம் இங்கு தனியாகவும் இல்லை’’ என்றார்

அவரை  நோக்கி நகர எத்தனித்த ஃப்ளேம்போ இதைக்கேட்டதும் அப்படியே திகைத்து நின்று விட்டான்

’’மரங்களுக்கு பின்னால்’’ என்று சுட்டிக்காட்டிய அவர் சொன்னார் ’’அங்கே இரண்டு பலசாலிகளான  காவலர்களும், உலகின் மிகச்சிறந்த துப்பறிவாளர் ஒருவரும் இருக்கிறார்கள். அவர்கள் இங்கு எப்படி வந்தார்கள் என நீ கேட்கலாம், நான் தான் அவர்களை அழைத்து வந்தேன்  நான் எப்படி இதை செய்தேன் என  தெரிந்து கொள்ள  நீ விரும்பினால் அதை சொல்கிறேன். ஏனெனில் குற்றவாளிகளிடம் புழங்குகையில் இதுபோல பலவற்றை நாம் அறிந்துகொண்டிருக்க வேண்டும்’’

’’நீ ஒரு திருடன் தானா, என்று எனக்கு அத்தனை உறுதியாக தெரிந்திருக்கவில்லை.   ஒரு பாதிரியாகிய  என்னால் மற்றொரு பாதிரியை அப்படி திடீர் என்று குற்றம்சாட்டி விடமுடியாது. எனவே நீயாக உன்னை வெளிப்படுத்தும் தருணங்களை  உருவாக்கினேன்’’

’’பொதுவாக  உணவகங்களில் காப்பியில் சர்க்கரைக்கு பதிலாக உப்பு கலந்திருந்தால் அதை பெரிய பிரச்சனையாக்குவார்கள்,   ஆனால் அப்படி பிரச்சனை ஏதும் பண்ணாமல் அமைதியாக இருக்கவேண்டுமானால் அதற்கு ஏதேனும் முக்கிய காரணம் இருக்கும். சர்க்கரையையும் உப்பையும்  நான்தான் மாற்றி வைத்தேன் ஆனால் நீ உப்பை சுவைத்த பின்னரும்  அமைதியாகவே இருந்தாய்’’

‘’பில் கட்டணம் அதிகமாக இருந்தால் யாராக இருந்தாலும் அதை ஆட்சேபிப்பார்கள். அப்படி ஆட்சேபிக்காமல் அந்த அதிக தொகையையும் ஒருவன் தருவானானால், அவன் தன்னை யாரும் கவனிக்க கூடாது என்று எண்ணுபவனாகத்தான் இருப்பான். உன்  பில் கட்டணத்தை  மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் படி  நான் தான் மாற்றினேன் அதையும் நீ  செலுத்தினாய்’’ .

அனைவருமே ஃப்ளேம்போ ஒரு புலியைப்போல தாவிக்குதித்து தப்பியோடி விடுவானென்றே எதிர்பார்த்தனர், ஆனால் அவன் மந்திரத்துக்கு கட்டுண்டவன் போல அப்படியே அமர்ந்திருந்தான். அவன் உண்மையில் இப்போது நடந்தவற்றை குறித்து அறிந்து கொள்ள பெரும் ஆர்வம் கொண்டிருந்தான்.

மீண்டும் தெளிவான குரலில் தொடர்ந்த பாதிரியார் பிரெளன்,  ’’சரி  தேடிக்கொண்டிருக்கும்  காவலர்களுக்கு  நீ எந்த தடயங்களையும் விட்டுவிட்டு வரவிடாவிட்டாலும் யாராவது ஒருவர் தடயங்களை உண்டாக்க வேண்டுமல்லவா? என்று கேட்டார்

நாமிருவரும்  சென்ற எல்லா இடங்களிலும், நாம் அங்கிருந்து சென்ற பின்னர் முழு நாளும் நம்மை பற்றியே அவர்கள் பேச வேண்டும் என்பது போல எதோ ஒரு காரியத்தை செய்துவிட்டு வந்தேன். ஆனால் அவை எல்லாம் பெரிய குற்றங்களொன்றுமில்லை,  ஒரு சுவற்றை பாழ்படுத்தினேன், ஆப்பிள்களை கொட்டினேன்,   ஜன்னல் கண்ணாடியை உடைத்தேன் ஆனால் நீலச்சிலுவயை காப்பாற்றிவிட்டேன் ஏனெனில் சிலுவை எப்போதும்  காப்பாற்றபப்டும்.

’’இப்போது நீலச்சிலுவை வெஸ்ட்மின்ஸ்டரில் பாதுகாப்பாக இருக்கும். நல்லவேளை,  நீ .கழுதை விசிலை உபயோகித்து  என்னை தடுத்துவிடுவாயோ என்று  கூட நான் நினைத்தேன்’’

’’எதைக் கொண்டு?’’ என்றான் ஃப்ளேம்போ

முகத்தை சுருக்கியபடி ’’நல்லவேளையாக நீ அவற்றை கேள்விப்பட்டிருக்க வில்லை’’ என்ற  பாதிரியார் பிரெளன்   அது ஒரு மோசமான விஷயம்  நீ அந்த விசிலடிப்பவனை காட்டிலும்  நல்லவன் என்று நான் அறிவேன்’’ என்றார்

’’ஒருவேளை உனக்கு அது தெரிந்திருந்தால்,  நான்  புள்ளி வித்தை வழிமுறையை உபயோகித்துக் கூட உன்னை பிடித்திருக்க  முடியாது ஏனெனில் .என் கால்களில் அத்தனை வலுவில்லை’’

’’புள்ளி வித்தை வழிமுறையா? எதைப்பற்றி சொல்லிகொண்டிருக்கிறீர்கள்?’’ என்றான் மற்றவன்

’’அட! புள்ளி வித்தை வழிமுறையாவது உனக்கு தெரிந்திருக்கும் என்று நினைத்தேன்’’  என்று ஆச்சரியப்பட்ட பாதிரியார் பிரெளன் .  நீ இன்னும் அத்தனை மோசமாக ஆகியிருக்கவில்லை போலிருக்கிறது என்றார்.

’’நீ எப்படி இந்த மோசமான வழிமுறைகளையெல்லாம் அறிந்து கொண்டாய்?’’  என்று கூச்சலிட்டான் ஃப்ளேம்போ

அவரது வட்டமான எளிய முகத்தில்  புன்னகையில் சாயல்  வந்து போனது ’’ஒரு எளிய பாதிரியாக  இருந்து தான் இவற்றை கற்றுக்கொணடிருந்திருப்பேனாக இருக்கும். ஆனால் உனக்கு தெரியவில்லையா? அன்றாடம்  மனிதர்களின்  பாவங்களை  கேட்பதை தவிர வேறேதும் செய்யாமல் இருப்பவனுக்கு மனிதர்களின் தீமையை குறித்து அனைத்தும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை என்று?’’

’’மேலும் எனது இறைப்பணியின் மற்றொரு அனுபவத்தினாலும் நான் உன்னை சந்தேகித்தேன்’’

’’ அது என்னது ? ‘’ என்றான் அந்த திருடன் அதிர்ந்துபோய்

புன்னகையுடன் ’’நீ தர்க்கத்தை  சாடினாய், அது  முறையான இறையியலல்ல!’’ என்றார் பாதிரியார் பிரெளன்

பாதிரின் பிரெளன் தனது உடைமைகளை எடுக்க திரும்புகையில் மரங்களின் இருட்டிலிருந்து மூன்று காவலர்களும் வெளியே வந்தார்கள். நல்ல கலைஞனும் விளையாட்டு வீரனுமான ஃப்ளேம்போ இரண்டெட்டு பின் வைத்து தலை குனிந்து வேலண்டீனுக்கு  வணக்கம்  தெரிவித்தான்

துல்லியமான குரலில்.   ’’என்னை வணங்காதே,  நண்பா!’’  நாமிருவரும் நமது ஆசானாகிய இவரை வணங்குவோம்’’ என்ற வேலண்டின் பாதிரியார் பிரெளனை கைகாட்டினார்

இருவரும் தங்களது தொப்பிகளை கழற்றி கையில் வைத்துக் கொண்டு குனிந்து வணக்கம் சொல்லியபோது பாதிரியார் பிரெளன்  தனது குடையை  தேடிக்கொண்டிருந்தார்.

 

 

***

குறிப்பு :-

நீலச்சிலுவை லண்டனை சேர்ந்த 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தின் ஆங்கில எழுத்தாளர். இலக்கிய விமர்சகர், சிந்தனையாளர், நாடகாசிரியர் , பேச்சாளர், இதழியலாளர், மற்றும் இறையியலாளரான கில்பர்ட் கெய்த் செஸ்டர்டன் (Gilbert Keith Chesterton- May 29, 1874 – June 14, 1936) எழுதிய சிறுகதைகளில் ஒன்று. இது செப்டம்பர் 1910’ல் “The Storyteller”. என்ற இதழில் வெளியானது

 இந்த சிறு கதையில்தான் அவரது நெருங்கிய நண்பரான ஒரு பாதிரியின் சாயலில், துப்பறியும் பாதிரியாரான பிரெளன் என்னும் ஒரு கற்பனை கதாபாத்திரத்தை முதன் முதலில் உருவாக்கி இருந்தார்.. இக்கதைக்கு கிடைத்த வரவேற்பால் தொடர்ந்து இதே துப்பறியும் பாதிரியார் இடம்பெறும்  மேலும் பன்னிரண்டு கதைகளின் முதல் தொகுப்பான  ’’தி இன்னோசன்ஸ் ஆஃப் ஃபாதர் பிரவுன்” 1911’ல் வெளியிடப்பட்டது இந்த பாதிரியார் பாத்திரம் தொலைக்காட்சி நாடகங்களிலும், திரைப்படங்களிலும் இடம்பெறும் அளவுக்கு பிரபலமானது

இவர் துப்பறியும் கதைகளை மட்டுமல்லாது குற்றப்புலனாய்வை அடிப்படையாக கொண்ட கதைகளை எப்படி எழுதுவது என்று பல கட்டுரைகளும்  எழுதியிருக்கிறார்.

அவரின் செயலாளராக இருந்த எழுத்தாளரும் பாடலாசிரியருமான  ஃப்ரான்சிஸ்  ஆலிஸையே அவர் மணந்து கொண்டார். பிரான்ஸிசின் ’’பெத்லஹேம் இன்னும் எத்தனை தொலைவு’’ என்னும்  கவிதை மிக புகழ்பெற்றது

 செஸ்டர்டன் நல்ல கம்பீரமான ஆகிருதி கொண்டவர். 6 அடிக்கு மேல் உயரமும் நல்ல பருமனும், அதற்கேற்ற உடல் எடையும் கொண்டவர்.  உன்னத ஆடைகளின் பிரியரும் கூட.  எப்போதும் பெரிய தொப்பி அணிந்து,  வாயில் புகையும் சுருட்டுடன் காணப்படுவார்

 இவர் 80 நூல்கள் 2000 கவிதைகள் 200 சிறுகதைகள், 4000 கட்டுரைகள் மற்றும் ஏராளமான நாடகங்களை எழுதியிருக்கிறார். 1932 ல் இருந்து தனது இறுதிக்காலம் வரையிலும் சுமார் 40 பிரபல உரைகளை  BBC வானொலிக்கு அளித்திருந்தார்.

. இறை நம்பிக்கை இல்லாத குடும்பத்தை சேர்ந்த இவர் தனது 48 ஆவது வயதில் கத்தோலிக்க மதத்தை தழுவினார்.   ’’கத்தோலிக்க தேவாலாயங்களும்  மத மாற்றமும்’’ என்னும் இவரது நூல் மிக பிரபலமானது.

பிரெளன் பாதிரியின் புத்திகூர்மையை வாசகர்கள் மெச்சவேண்டும் என்ற கூடுதல் கவனத்தில், கதை சொல்லலில் சில நுண்மையான விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க மறந்துவிட்டார்,  பல அவிழ்க்கப்படாத முடிச்சுகளையும், நிரப்பபடாத இடைவெளிகளையும் கொண்டிருக்கிறது என்னும் விமர்சனமும் நீலச்சிலுவையின் மீது உண்டு.

தமிழில் :- லோகமாதேவி

 

 

Please follow and like us:

1 thought on “நீலச்சிலுவை – கில்பர்ட் கெய்த் செஸ்டர்டன்

  1. மிகவும் அருமையான சிறுகதை புதிய சொல்லாடல் மர்மமும்கேள்வியும் அங்கங்கே ஊசலாடுகின்றன மொழிபெயர்ப்பு சிறந்த தமிழில் வந்திருக்கின்றன வாழ்த்துகள்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *