“மரம் மாதிரி நிக்கிறியே, ஒத்து!”
யாரு? வார்டுபாய் கணேசனா? நெனச்சேன்! அவனத்தவிர வேற யாரும் இப்படிகத்தமாட்டாங்க. ஒரு ஹாஸ்பிடல்ல அதுவும் ஐ.சி.யு. வாசல்ல! என்னிக்கோ ஒரு நாள்டாக்டர் கிட்ட நல்லா வாங்கப்போறான். சரி அத விடுங்க! அவன் என்ன சொன்னான்? மரம்மாதிரி நிக்கிறியேன்னா? வரட்டும்! என்னிக்காவது அவன் இங்க வந்து உக்காராமலா போயிடுவான்? அன்னிக்கி கேக்கறேன் அவன, மரம் நிக்கிறதப்பத்தி ஒனக்கு என்னடா தெரியும்ன்னு!
எனக்கு மட்டும் எப்படி தெரியும்ன்னு கேக்கறீங்களா? நான் அப்படி நின்னிருக்கேனே! பெஞ்சா ஆகறதுக்கு முன்னாடி நான் மரமாதான நின்னேன்!
மரம் தன்னோட எடைய மட்டும் இல்லீங்க, தன் மேல உக்கார்ற எல்லாரோட, எல்லாத்தோடஎடையையும் சேத்துல்ல தாங்குது? கூடு கட்டற பறவைங்க, ஊஞ்சல் ஆடுற மனுஷங்க, பூவும், காயும், பழமும் பறிக்க ஏறறவங்க – இப்படி எத்தன சொல்லலாம்? மனுஷனாலஅப்படி முடியுமா? அதத்தான் சொல்றேன்!
இப்ப பெஞ்சா ஆனப்பறம் கூட எத்தன பேர ஒரே சமயம் தாங்கறேன் பாக்கறீங்கள்ல? இன்னும் சொல்லணும்னா இந்த ஐ.சி.யு. வாசலுக்கு வந்தப்பறம் மனுஷங்க உடல் எடையவிட மனசு எடைதான் என்னைய ரொம்ப பாதிச்சிது.
நான் இந்த எடத்துக்கு வந்தது ஒரு தற்செயல்தான். ஏழு அல்லது எட்டு வருஷம் இருக்கும். வந்த கொஞ்ச நாள்லயே இங்க உக்காறர ஒவ்வொருத்தரோட சின்ன அசைவுலயும் அவங்கமனசையும் தவிப்பையும் உணர ஆரம்பிச்சிட்டேன். இங்க வந்ததால நான் ஒரு ஞானியாவே ஆயிட்டேன்னு கூட சொல்லலாம். ‘புனரபி ஜனனம், புனரபி மரணம்’ன்னு தத்துவம்லாம்கூட சொல்ல ஆரம்பிச்சிட்டேன். ஏன்னா இங்க ஒவ்வொருத்தரோட உணர்ச்சியையும் பாத்து பாத்து தெளிஞ்சிட்டேன்.
உள்ள இருக்கவங்க மீண்டு வரணும்ன்னு தவிப்பும் வேண்டுதலுமா இருக்கவங்க, அப்படி வரும்போது சிரிப்பும் கண்ணீரும் ஒரே சமயம் காட்டறவங்க, திரும்பவேண்டாம்ன்னு மனசுல நெனச்சு ஆனா பொழச்சுட்டா அத மறச்சு மொகத்த சந்தோஷமா வெச்சுக்கறவங்க, அப்படி மறைக்கமுடியாம சிடுசிடுக்கறவங்க, காப்பாத்த முடியாம போகும்போது கதறுறவங்க, ஒறைஞ்சு போறவங்க, மயக்கமாறவங்க, அப்பாடன்னு பெருமூச்சு விடறவாங்க, அந்த பெருமூச்ச மறைக்க கஷ்டப்படறவங்க இப்படி பல பேர பாத்தாச்சு.
ஆனா இங்க ஆரம்பத்துல நான் பாத்த ஒரு சம்பவம் – சொல்லப்போனா ஒண்ணுல்ல ரெண்டு சம்பவங்கள் – என்னால என்னிக்கும் மறக்கவே முடியாது.
ஒருநாள் ஒரு வயசான பாட்டிய இங்க கொண்டுவந்தாங்க. 95 வயசுக்கு மேலன்னாங்க. அப்பப்போ மயக்கமாறதும் கொஞ்ச நேரத்துல சரியாறதுமா இருந்திருக்காங்க. அன்னிக்கு காலைல மயக்கமானவங்க கண்ணு முழிக்கவேயில்ல. அவங்க மக தான் கூடவந்திருந்தாங்க. எங்க மொதலாளி டாக்டர் ரகுராமனுக்கு தெரிஞ்சவங்களாம். அவரு பாத்துட்டு அவங்கள்ட்ட நெலமைய சொல்ல கூப்பிட்டப்போ “டாக்டர், எப்படியாவது எங்கம்மாவ காப்பாத்துங்கோ! ப்ளீஸ்”ன்னு அந்த மக அழுதுட்டிருந்தாங்க.
“வெண்டிலேட்டர்ல வெச்சு முயற்சி பண்ணலாம், ஆனா நான் நிச்சயம் சொல்ல முடியாது. இந்த வயசுக்கு ரொம்ப கஷ்டம்.”
“ப்ளீஸ், டாக்டர்! நீங்க பண்ணுங்கோ! எங்கம்மா பொழச்சுப்பா. என்ன விட்டு போமாட்டா!”
“சரி மாமி! நான் ட்ரை பண்றேன். சிஸ்டர், இவங்கள்ட்ட ஃபார்மாலிடீஸ் எல்லாம் பாத்துக்கோங்க”ன்னு சொல்லிட்டு டாக்டர் உள்ள போயிட்டாரு.
நர்ஸ் அவங்கள்ட்ட விவரம் கேக்க ஆரம்பிச்சாங்க.
“பேஷண்ட் பேர் என்ன?”
“ரமணி.”
“வயசு?”
“96.”
“நீங்க அவங்களுக்கு என்ன ஒறவு?”
“பொண்ணு.”
“உங்க பேர்?”
“வத்ஸலா.”
எல்லாம் கேட்டு முடிச்சு அவங்க வத்ஸலா கிட்ட ஒப்புதல் படிவத்துல கையெழுத்து வாங்கும்போது டாக்டர் வந்தாரு.
“மாமி, உங்கம்மா கண்டிஷன் மோசமாத்தான் இருக்கு. கோமால இருக்கா. நாள் கணக்கா, மாசக் கணக்கா இல்ல வருஷக்கணக்கான்னு சொல்ல முடியாது. நீங்க யாருக்கானும் சொல்றதுன்னா சொல்லிடுங்கோ.”
வத்ஸலா கொஞ்ச நேரம் அப்படியே வெறிச்சு பாத்துட்டிருந்தாங்க. அப்பறம் யாருக்கோ ஃபோன் செஞ்சாங்க. சாயந்தரம் ஆறேழு பேர் வந்தாங்க. வத்ஸலாட்ட கேள்வி மேல கேள்வி கேட்டு ஆளாளுக்கு ஒரு அபிப்பிராயம் சொன்னாங்க. எல்லாரும் ஒரே சமயம் பேசி சத்தம் அதிகமானதும் நர்ஸ் வந்து அவங்கள வெளில போய் பேச சொன்னாங்க.
ஒரு பையன் “உஷ்! மத்த பேஷண்ட்ஸ நாம டிஸ்டர்ப் பண்ணக்கூடாது. கொஞ்சம் எல்லாரும் சும்மாயிருங்கோ. இல்லாட்டா வெளில போய் வெயிட் பண்ணுங்கோ. நான் டாக்டர பாத்து விவரமா கேட்டுண்டு வரேன்”ன்னு சொன்னான்.
“கரெக்ட். நீ போ, ஷ்யாம்”ன்னு இன்னொருத்தரு சொன்னாரு.
அவன் போயிட்டு வர்ற வரைக்கும் ஒரே அமைதி. ஜன்னலுக்கு வெளில கிளி கத்தறதையும், வார்டுல மருந்து ட்ராலி இழுக்கறதையும் தவிர ஒரு சத்தம் இல்ல. ஷ்யாம் திரும்பி வந்தப்போ எல்லாரும் அவன் மொகத்தையே பாத்துட்டிருந்தாங்க. அவன் ரெண்டு நிமிஷம் தலைய குனிஞ்சு மௌனமா இருந்தான். அப்பறம் பொதுவா எல்லாரையும் பாத்து“பாட்டி ரொம்ப மோசமாத்தான் இருக்காளாம். வெண்டிலேட்டர் சப்போர்டுலதான் வெச்சுருக்கா”ன்னான்.
“சரியாயிடுமா?”
“நிச்சயம் சொல்லமுடியாதுன்றார் டாக்டர். பொழைக்கறதுக்கு சான்ஸ் ரொம்ப கம்மின்றார். இப்பிடியே வெண்டிலேடர்லதான் இருக்க வேண்டியிருக்குமாம்.”
“எவ்ளோ நாள்டா?”
“அது தெரியாதாம். நாளா, மாசமா, வர்ஷமான்னு சொல்ல முடியாதுன்றார்.”
எல்லாரும் அமைதியாயிட்டாங்க. ஒவ்வொருத்தரா வத்ஸலா கிட்ட சொல்லிட்டு கெளம்பினாங்க.
“நீயே பாத்துண்டுட முடியுமா?”
“ஒனக்கு சாப்பாடு கொண்டுவரவா?”
“ஏதேனும் வேணுமானா ஃபோன் பண்ணு.”
எல்லாத்துக்கும் தலையசச்சாங்க வத்ஸலா.
அவங்க மனசுக்குள்ள பொலம்பினத நான் மட்டும் கேட்டுட்டே இருந்தேன்.
‘பகவானே, அம்மா இல்லாட்டா நான் என்ன பண்ணுவேன்? என்னை கைவிட்டுடாதே! எனக்கு அவள விட்டா வேற கதியில்ல. இதோ, இப்போ வந்தாளே இவா யாரும் என்னை வெச்சுக் காப்பாத்தமாட்டா. என்னாலயும் அவா யாராத்துலயும் போய் இருக்க முடியாது. அப்பா போனதே இன்னும் என்னால தாங்க முடியல. அம்மாவையும் பறிச்சுண்டுடாத. நான்யாருக்கும் ஒரு தீங்கும் நெனைக்கக் கூட இல்லியே! என்னை சோதிச்சுடாத.’
ராத்திரியானதும் நர்ஸ் கண்டிப்பா சொன்னதால அவங்களுக்கு ஒதுக்கியிருந்த ரூமுக்குபோனாங்க. நடுநடுவே இங்க வந்து விசாரிச்சிட்டே இருந்தாங்க.
நாலஞ்சு நாள் இதே கதை தான். இதே பொலம்பல்தான். அப்போ ஐ.சி.யு.வுக்கு இன்னொருத்தரு வந்துசேந்தாரு. ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் முத்துகுமாரோட பேஷண்ட். அவரும் வயசானவருதான். 75-க்கு மேல் இருக்கும். சில மாசம் முன்னால பைபாஸ் ஆபரேஷன் செஞ்சாங்களாம். மூச்சுத்திணறல் இருக்கதால கூட்டி வந்திருந்தாங்க. அவரு பொண்டாட்டியும் மகளும் கூட இருந்தாங்க.
அந்த மக நடையும் பாவனையும் எனக்கு ஏனோ பிடிக்கவேயில்லை. ஒரு சலனமும் இல்லாம இருந்தா. ரொம்ப தைரியசாலின்னு ஷோ காட்றா போல. அழுதுட்டே இருந்த அவ அம்மாவ வத்ஸலா பக்கத்துல உக்கார வெச்சுட்டு அவ நின்னுட்டே இருந்தா.
ஓ! பெரிய மஹாராணி பெஞ்சுல உக்காரமாட்டீங்களோ!
டாக்டர் வந்து பாத்துட்டு “ரெண்டு நாள் ஐ.சி.யு.ல அப்சர்வேஷன்ல இருக்கட்டும். பாக்கலாம்”ன்னாரு.
அந்த மக கேட்டா “டாக்டர், உயிராபத்து இல்லியே?”
“நான் போன தடவ சொன்னதுதான். ஹார்ட் வீக்காதான் இருக்கு. ட்ரீட்மெண்டுக்கு நல்லா ரெஸ்பாண்ட் பண்ணினாருன்னா நல்லது. ஏஜ் ஃபேக்டர் இருக்கில்லியா, பாக்கலாம்.”
அந்த அம்மா விசும்ப ஆரம்பிச்சிட்டாங்க. அவ அவங்க தோள இறுக்கிப் பிடிச்சா. “அம்மா!”
என்ன மெரட்டல் கொரல்ல!
“இங்க பாரு, இது அழறதுக்கான நேரம் இல்ல.”
வேற என்ன செய்வாங்க? அதோ, அந்த வத்ஸலாம்மா கூட ஒரு வாரமா அழுதுட்டேதான் இருக்காங்க. எல்லாரும் உன்ன மாதிரி இரக்கம் இல்லாம இருப்பாங்களா?
“ஒண்ணும் முடியாதுன்னு ஆயிடுத்தானா நன்னா அழு, நான் வேண்டாங்கல. ஆனா அதுக்கு முன்னாடி நம்மளால முடிஞ்சத செய்யலாமே! ப்ரார்தனை பண்ணு. பெருமாளவேண்டிண்டே இரு. கண்டிப்பா பலன் இருக்கும்.”
ஓ! பிரசங்கம்! யம்மா, உம்பேர் என்ன? வித்யா! அந்த அம்மாக்கு இப்போ சொல்லவேண்டியது ஆறுதல், அட்வைஸ் இல்ல.
அம்மா பக்கத்துல அவளும் உக்காந்தா. அப்போ எனக்கு லேசா சிலிர்த்த மாதிரிஇருந்துச்சு.
அதெல்லாம் ஒண்ணும் இல்ல. அவ வெய்ட் தாங்காம ஆடியிருக்கும்.
கண்ண மூடி மூச்சிழுத்துவிட்டா.
தியானம் பண்றீங்களோ!
‘அப்பா, நான் பேசறது ஒங்களுக்கு கேக்கறதா?’
அப்படி போடு! டிஸ்டன்ஸ் ஹீலிங்? மேடம் சகலகலாவல்லியோ!
‘நீங்க ட்ரீட்மெண்டுக்கு ரெஸ்பாண்ட் பண்றத வெச்சுதான் சொல்லமுடியும்ன்னு டாக்டர் சொல்லிட்டார். ஸோ, உங்க கைலதான் இருக்கு. நீங்க மனசு வெச்சா சரியாகும். இந்தவயசுல பைபாஸ் முடிஞ்சு எவ்வளவு ஈஸியா நீங்க ரிகவர் ஆனேள்! இதெல்லாம் ஒங்களுக்கு ரொம்ப சாதாரணம். ட்ரை பண்ணுங்கோப்பா, ப்ளீஸ்!’
இந்தப் பக்கம் வத்ஸலா!
‘ஐயோ, பகவானே! அம்மா போயிட்டா நான் என்ன பண்ணுவேன்? யாரும் கூட வெச்சுக்கமாட்டாளே!’
ஒரு வாரமா இதே பொலம்பல்தான். சத்தமில்லாம அழுகைதான். பாவந்தான். ஆனா இந்தபொலம்பலால என்ன லாபம்?
‘அப்பா, ஒங்களுக்கு ஹாஸ்பிடல், ஊசி, மருந்து, மாத்திரை எதுவும் பிடிக்காது. எனக்குத்தெரியும். ஆனா உங்கள அப்படியே விட்டுட எப்டி மனசு வரும்? எண்பது வயசுக்கு மேலதாத்தா கீழ விழுந்து ஃப்ராக்சர் ஆனப்போ நீங்க அப்டியே விட்டுடலியே, அட்மிட் பண்ணி பாத்துண்டேளே. இப்போ அதே நியாயம்தான எனக்கும்.’
என்னையறியாம நான் அவள கவனிக்க ஆரம்பிச்சேன்.
‘ஒங்க பேரன் ரெண்டு பேரையும் ஹாஸ்டல்லேர்ந்து வரச்சொல்லியிருக்கேன். கார்த்தால அவா வர்றச்சே நீங்க சரியாயிடணும். ஓகே?’
இவ நெஜமாவே நம்பிக்கையோடதான் இத செய்றாளா? இது சாத்தியமா?
சாயங்காலம் டாக்டர் ரவுண்ட்ஸ் வந்தப்போ “ஹீ இஸ் பிக்கிங் அப். இப்படியே தொடர்ந்தா, நாளைக்கு ரூமுக்கு மாத்திடலாம்”ன்னாரு.
அவ உள்ள போயி அப்பாவ பாத்துட்டு வந்தா. “அம்மா, நீ போய் பாக்கறியா? ஆக்ஸிஜன் வெச்சிருக்கு. பேச்சு குடுக்காத. ஜஸ்ட் பாத்துட்டு வா. நாளைக்கு நன்னா ஆனதுக்கப்பறம் நெறைய பேசலாம், என்ன?”
அவங்க உள்ள போனப்போதான் இவ திரும்பி வத்ஸலாவ பாத்தா.
“உள்ள ஒரு பாட்டி இருக்காளே, அவாளோட வந்திருக்கேளா?”
வத்ஸலா தலையாட்டினாங்க.
“என்னாச்சு அவாளுக்கு?”
வத்ஸலா மூக்க உறிஞ்சிட்டே முணுமுணுன்னு விவரம் சொன்னாங்க.
வெளில வந்த அம்மாகிட்ட “மாமி இங்கதான் இருப்பாளாம். ஒனக்கு தொணையாச்சு. நீஇங்க இருந்துக்கறியா இல்ல நான் இருக்கட்டுமா?”ன்னா.
ஏம்மா, நீதான் இரேன். நீ போயிட்டா அவருக்கு திரும்ப ஜாஸ்தியாயிட்டா என்னசெய்யிறது?
சீ! இதென்ன பைத்தியக்காரத்தனம்? இவ பேச்சுலயா அவரு சரியானாரு, ட்ரீட்மெண்டாலதானே? இல்லாத பெருமைய நானா இவளுக்கு ஏன் குடுக்கணும்?
இவளையே பாத்துட்டிருந்ததுல வத்ஸலாவ கவனிக்கவே விட்டிட்டேனே! அவங்கள சுத்திஎன்ன கூட்டம்? அவங்க சொந்தக்காரங்கதான். என்ன பேசறாங்க எல்லாரும்? அவங்கமட்டும் ஏன் வாய்விட்டு அழுதுட்டிருக்காங்க?
ஹலோ! ஒரே சமயம் எல்லாரும் பேசினீங்கன்னா என்ன புரியும்? ஒவ்வொத்தரா பேசுங்க!
அவங்க போடற சத்தத்துல என் கொரல் அவங்களுக்கு எப்டி கேக்கும்!
மறுநா காலையில ஷ்யாம் மட்டும் வந்து வத்ஸலா பக்கத்துல உக்காந்துக்கிட்டான். அந்தநிமிஷம் வத்ஸலா ஒடம்புல வந்த நடுக்கத்த இப்போகூட என்னால ஃபீல் பண்ண முடியுது.
“அத்தை, புரிஞ்சுக்கோ. அப்பாகிட்ட ஒருமாதிரியா விஷயத்த சொல்லிட்டேன். அவர் ஒன்னவிட பெரியவர். எண்பதாகப் போறது. அவரே மத்தவா தொணையில்லாம இருக்கமுடியாத நெலமைக்கு வந்தாச்சு. பாட்டி ஏற்கெனவே ஒரு பொண்ணையும் பிள்ளையையும் பறிகுடுத்தாச்சு. இன்னும் அவ இருந்து கஷ்டப்படணுமா?”
“அண்ணா என்ன சொன்னான்?”
“அழுதார். நாங்க எல்லாரும் சேந்து அவருக்கு எடுத்து சொன்னோம். கடசீல சரின்னுசொல்லிட்டார். இன்னிக்கு சாயந்தரம் வருவார், பாட்டிய பாக்க. அதோட சுரேஷும்லண்டன் கெளம்பணும். சித்தப்பா போனதிலேர்ந்து சித்திய தன்னோட வரசொல்லிண்டேயிருக்கான். சித்தி இப்பதான் ஒத்துண்டிருக்கா. அதனால அவாளும் இருக்கும்போதே பண்ணிடலாம்னு.”
“சாந்தா என்ன சொல்றா?”
“சின்ன அத்தை ஓகே சொல்லிட்டா. யு.எஸ்.லேர்ந்து நேத்தே கெளம்பிட்டா. மத்தியானம் வந்துடுவா. சாயந்தரம் அவளும் வந்து பாத்துட்டாள்ன்னா நாளைக்கு வெண்டிலேட்டரஎடுத்துடலாம். நீ மட்டும்தான் இன்னும் பிடிவாதம் பிடிக்கற.”
வத்ஸலா மேல ஒண்ணும் பேசல. திரும்பவும் கண்ணீர்.
“ப்ஸு, சும்மா சும்மா அழாத, அத்தை. ஒனக்கு மட்டும்தானா, எங்களுக்கெல்லாம் பாசம் இல்லியா? டாக்டர் க்ளியரா சொல்லிட்டார். நீயும் கேட்டேல்ல? வேற வழி என்ன சொல்லு?”
“…”
“பொறுமையா யோசி. நான் சாயந்தரம் அப்பாவ கூட்டிண்டு வரேன்.”
கொஞ்ச நேரத்துல, கரெக்ட்டா டாக்டர் வர்ற சமயம், வித்யா வந்தா.
“எப்படி இருக்கார், டாக்டர்? ரூமுக்கு எப்போ மாத்துவீங்க?”
“நானே உங்கள கூப்பிடணும்ன்னு நெனச்சேன், நீங்களே வந்துட்டீங்க.”
“ஏன் டாக்டர், எனிதிங் ராங்?”
“நேத்திக்கு சாயந்தரம் வரைக்கும் நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருந்தது. மிட்நைட்டுக்கு மேல கொஞ்சம் மாறிடுச்சு. அதாவது, திடீர் திடீர்ன்னு ஒரு டவுன் வருது. அப்பறம் சரியாகுது. ஸோ, இங்கியே இன்னும் ரெண்டு நாள் இருக்கவேண்டியிருக்கும். நான் சாயந்தரம் வந்து பாக்கறேன்.”
அவ பேசாம உக்காந்துட்டா. அம்மாவோட விசும்பல் கூட அவளுக்கு கேக்கல. ஆனா அவ உள்ளுக்குள்ள ஒரு அதிர்வு எனக்கு தெரிஞ்சது. சில நிமிஷம்தான். கண்ண மூடி மூச்சிழுத்துவிட்டா.
‘ஏம்ப்பா இந்த ஊசலாட்டம்? ஒங்களுக்கு வாழ்ந்தது போறும்ன்னு தோணிடுத்தா? எங்களுக்காக யோசிக்கறேளா? பரவால்லப்பா, நாங்க சமாளிச்சுக்கறோம்!’
எனக்கு ஒரு நிமிஷம் ஒண்ணும் புரியல. என்ன சொல்றா? என்னத்த சமாளிச்சுக்கறோம்னு சொல்றா? சட்டுனு புரிஞ்சதும் டென்ஷனாயிட்டேன்.
ஏய் லூசு, ஒனக்கு நட்டு கழண்டுடிச்சா? நீ நேத்து இங்கியே இருந்திருந்தா இப்படியெல்லாம் ஆயிருக்காதுன்னு நான் நெனச்சிட்டிருக்கேன். நீ என்ன பேசற?
‘ஐயோ, பகவானே! அம்மா போயிட்டா நான் என்ன பண்ணுவேன்? யாரும் கூட வெச்சுக்கமாட்டாளே!’
ப்ஸு! வத்ஸலாம்மா, சும்மா இருங்க! ஓயா மாரியா ஒரே பாட்டு!
ஏய் வித்யா, நீ நேத்து மாதிரி பேசு. அவரு கேப்பாரு.
‘அம்மாவ நெனச்சு வருத்தப்படறேளா? வாஸ்தவம்தான், ரொம்ப நொந்துபோவா. ஆனாலும்நான் பாத்துக்கறேன்ப்பா. என் பேர்ல நம்பிக்கை இருக்கில்லியா ஒங்களுக்கு? நான்இப்படி நெனக்கறது தெரிஞ்சா எல்லாரும் என்னபத்தி தப்பாதான் நெனப்பா. ஆனாஒங்களுக்கு தெரியும்ப்பா நான் எந்த அர்த்தத்துல சொல்றேன்னு. எனக்கு அது போறும். நீங்க நன்னா ஆயிடணும்ன்னுதான் நான் ஆசப்படறேன். ஆனா அதுக்காக நீங்க இப்படி ஊசலாடறதையும் பாக்க முடியலப்பா. நீங்க முடிவு பண்ணுங்கோ. நீங்க எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு ஓகேதான்.’
நான் அப்பிடியே ஒறஞ்சு போயிட்டேன். என்ன நெஞ்சுரம்! என்ன தீர்மானம்! ஆனா அவ சொல்றது எவ்வளவு சரி! இப்போ வத்ஸலாவோட பொலம்பல் எனக்கு எரிச்சலாவேஇருந்துச்சு.
நான் ஏன் எரிச்சல் படணும்? அவங்க கஷ்டம் அவங்களுக்கு.
ஆனா என்னால நம்பவே முடியல. ஒரே நெலமை. அத இந்த ரெண்டு பேரும் எடுத்துக்கறவிதத்துல எவ்ளோ வித்தியாசம்? வத்ஸலா வயசானதால பொலம்பறாங்களா? அவங்கஅம்மா இன்னும் வயசானவங்கள்ள, அவங்களோட கஷ்டம் என்னன்னு யோசிக்கவேண்டாமா? வித்யாவுக்கு இந்த தெளிவு எப்டி வந்துச்சு? இவ நெனைக்கறத, இவளோட இந்த தெளிவ என்னால வத்ஸலாவுக்கு சொல்ல முடிஞ்சா?
நான் இப்டியெல்லாம் யோசிக்கும்போதே டாக்டர் முத்துகுமார் வேகமா உள்ள போனாரு. வித்யாவுக்கு ஒரு சின்ன கலக்கம் வந்தா மாதிரி இருந்திச்சு. டக்குன்னு எழுந்திரிச்சா.
அதுக்குள்ள டாக்டர் வெளிய வந்தாரு. வித்யாவ அவரு கூப்டப்பவே அவளுக்கும் எனக்கும்தெரிஞ்சுபோச்சு.
“ஹீ இஸ் ஸின்க்கிங். ஸடன் கார்டியாக் அரெஸ்ட். ஃப்யூ மினிட்ஸ் ஆர் அவர்ஸ் ஒன்லி. நீங்கஅவர் பக்கத்துல இருக்கணும்னா போகலாம்.”
அவ அசையாம நின்னா. ஒரு நிமிஷம் தான். ஒடனே சமாளிச்சிட்டு, கேவ ஆரம்பிச்ச அம்மாவ அணச்சு பிடிச்சுக்கிட்டு தன் புருஷனயும் பசங்களையும் அழச்சிக்கிட்டு ஐ.சி.யு. உள்ள போனா.
அரைமணில இறுக்கமான மொகத்தோட எல்லாரும் வெளில வந்தாங்க. அவ புருஷனையும் பசங்களையும் ஏதேதோ வேலை சொல்லி அனுப்பிவெச்சா. சிலர ஃபோன்ல கூப்பிட்டு தகவல் சொன்னா. அப்பறம் அம்மா கிட்ட வந்து உக்காந்தா. கொரல்ல சின்ன கலக்கம்கூட இல்லாம அவங்கள்ட்ட பேச ஆரம்பிச்சா.
“அம்மா, ஒனக்கு எவ்வளவு கஷ்டம்ன்னு எனக்குத் தெரியும். அழுகை வந்தா அழுதுடு. ஒம்மனசு ஆறறமட்டும் அழு. ஆனா ஒண்ணு ஞாபகம் வெச்சுக்கோ. நமக்கு ஒரு இம்சையும் குடுக்காம அப்பா போயிருக்கா. மொத்த குடும்பமும் அவர சுத்தி நின்னு ராமநாமம் சொல்லியிருக்கோம். அது எவ்வளவு பேருக்கு கெடைக்கும் சொல்லு? அதோ, அந்த பாட்டி உள்ள இருக்காளே, அந்த மாதிரி இக்கட்டுலயெல்லாம் நம்மள அப்பா வெக்கல. அதநெனச்சுக்கோ. தைரியமா இரு.”
வத்ஸலாம்மா, கேட்டீங்களா? ஒங்களவிட எவ்வளவு சின்ன பொண்ணு! எப்படி தெளிவாஇருக்கா பாருங்க.
ஆம்புலன்ஸ் வந்துச்சு. அதுல ஏத்திக்கிட்டு போயிட்டா.
சாயந்தரம் வத்ஸலாவோட அண்ணனும் மத்தவங்களும் வந்தாங்க. வழக்கம்போல எல்லாரும் பேச அவங்க தன் அண்ணன் மொகத்தையே பாத்துட்டிருந்தாங்க. அவருதங்கச்சி கைய பிடிச்சிக்கிட்டு பேசாம உக்காந்திட்டிருந்தாரு.
அவங்க எல்லாம் போனப்பறம் நான் வத்ஸலாட்ட பேச ஆரம்பிச்சேன். நெஜமாவேபேசினேன். அவங்களும் பதில் சொன்னாங்க.
‘உங்கம்மாவுக்கு வயசாயிடுச்சுதானே? ஏன் இவ்வளவு ஃபீல் பண்றீங்க? மத்தியானம் பாத்தீங்கள்ள அந்த பொண்ணு வித்யாவ? இத்தனைக்கும் அவங்கப்பா எதிர்பாக்காம இறந்துட்டாரு. ஆனா அவ எப்படி தைரியமா இருந்தா! என்ன நெஞ்சுரம்! ஒங்க ஒறவுக்காரங்களும் எல்லாரும் சாதாரணமாதான எடுத்துக்கறாங்க?’
‘ஏன்னா அவாளுக்கெல்லாம் அவா அவா குடும்பம் இருக்கு.’
‘ஒங்களுக்கு?’
‘என் அப்பா போனப்பறம் என் அம்மா மட்டும்தான் என் குடும்பம்.’
‘அப்டீன்னா?’
‘நான் கல்யாணம் பண்ணிக்கல.’
‘ஏன்?’
‘என்னவோ சரி வரல.’
‘எதுனால?’
‘எனக்கு சின்ன வயசுல ஒரு தடவ கீழ விழுந்ததுல வலது கை கொஞ்சம் பாதிச்சிடுத்து. ஒரு அளவுக்கு மேல அத நீட்ட முடியாது.’
‘அதனால?’
‘அதனால எனக்கு கல்யாணம் பேசறச்சே எங்க மாமா ஒரு போலியோ அட்டாக் ஆனவரோட ஜாதகத்த கொண்டுவந்தார். நம்மாத்து பொண்ணும் கொறை உள்ளவதானேன்னார். எனக்கு சுர்ருனு ஏறிடுத்து. கல்யாணமே வாண்டாம்ன்னு சொல்லிட்டேன்.’
‘உங்கப்பா அம்மால்லாம் ஒண்ணும் சொல்லலையா?’
‘கொஞ்ச நாள் சொன்னா. அப்பறம் என் பிடிவாதத்த பாத்து நிறுத்திட்டா. எனக்கும் பெருசா ஒண்ணும் வருத்தம் இல்ல. நிம்மதியாத்தான் இருந்தேன். அப்பா போனப்போதான் எனக்கு கொஞ்சம் பயம் வந்துது. ஆனா அம்மா பாவம், தன் துக்கத்த மறச்சுண்டு எனக்காக தைரியமா நடமாடிண்டிருந்தா. இப்போ அம்மாவும் என்ன விட்டுட்டு போயிடப்போறா…’
திரும்பவும் அழ ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கே கண்ணு கலங்கும் போல ஆயிடுச்சு.
‘நான் ஒண்ணு சொன்னா செய்வீங்களா?’
‘என்ன?’
‘மனசுக்குள்ள உங்கம்மா கிட்ட பேசுங்களேன்.’
‘அம்மாகிட்டயா? என்ன பேச?’
‘அவங்க உங்களுக்கு வேணும்ன்னு சொல்லுங்க. கண்ணு முழிக்க சொல்லுங்க. உங்களபாக்க சொல்லுங்க. ஏதோ ஒண்ணு சொல்லிட்டே இருங்க.’
‘நான் மனசுக்குள்ள பேசினா அவளுக்கு எப்படி கேக்கும்?’
‘கேக்கும். நீங்க பேசுங்க. அவங்க கண்ணு முழிச்சிட்டா அதுக்கு மேல யாரும் ஒண்ணும் பண்ண முடியாதுல்ல?’
‘நெஜமா அம்மாக்கு கேக்குமா? அவ எழுந்திடுவாளா?’
‘நம்பிக்கை வெச்சு செய்ங்க. நடக்கும்.’
அதோட ரெண்டு பேரும் மௌனமாயிட்டோம். அவங்க ரூமுக்கு கூட போகாம இங்கியே உக்காந்து மனசுக்குள்ள பேசிட்டே இருந்தாங்க. நடுநடுல கொழந்த மாதிரி ஒரு எதிர்பார்ப்போட உள்ள போயி விசாரிச்சிட்டே இருந்தாங்க. விடிகாலைல அவங்க பேசறதகேட்டு எனக்கு திடுக்குன்னு ஆயிடுச்சு.
‘அம்மா, நன்னா கேட்டுக்கோ. நான் சொன்னா நீ கேப்பன்னு பொறுமையா சொல்லிண்டே இருக்கேன். எல்லாரும் கார்த்தால வருவா. நீ அதுக்குள்ள கண்ணு தொறக்கலேன்னா நான்இங்க இருக்கமாட்டேன். எட்டு மணிக்கு நேரம் குறிச்சிருக்கா ஒன்ன அனுப்பறதுக்கு. சரியா அதே எட்டு மணிக்கு ஒன்னோட சேந்து நானும் வந்துடுவேன். நீயே முடிவு பண்ணிக்கோ!’
ஐயோ, கடவுளே! இவங்க என்ன இப்டி சொல்றாங்க! நான் ஒரு ஆறுதலுக்கு சொன்னா இவங்க… இப்ப நான் என்ன செய்ய?
அம்மா, ரமணியம்மா! தயவுசெஞ்சு கண்ணத் தொறங்க! என்னைய பழிக்கு ஆளாக்கிடாதீங்க!
கிட்டத்தட்ட ஏழு மணிக்கு அந்தக் குடும்பம் மொத்தமும் வந்துசேந்துச்சு. டாக்டர் ஷ்யாமை உள்ள அழச்சிட்டு போனாரு.
ஒரு அஞ்சு நிமிஷம் ஆயிருக்கும், அவன் பதட்டமா வெளில வந்தான்.
எல்லாரும் சேந்துதான முடிவு பண்ணீங்க, அப்பறம் இப்ப என்ன ஓவரா சீன் போடற?
“என்னாச்சு?”
எல்லாரும் ஒரே கொரலா கேட்டாங்க.
“பாட்டி கண்ணு அசையறது. கண்ண தெறக்க ட்ரை பண்றா.”
அவங்களுக்கெல்லாம் ஒரே அதிர்ச்சி. எனக்கு சந்தோஷம் பிடிபடல.
வித்யா, ஒன்னாலதான் இது நடந்துச்சு. நீ நெஜமாவே க்ரேட்.
வத்ஸலாம்மா, ஒங்க ப்ரார்த்தனை பலிச்சிடுச்சு. நடக்குமான்னு கேட்டீங்களே, நடந்திடுச்சில்ல! இப்ப சந்தோஷமா?
அம்மா, வத்ஸலாம்மா, எங்க போனீங்க? ஐயோ! வத்ஸலாம்மா!