“இன்றைக்கு தான் “ என்று அறிவித்தாள் அம்மா எல்லா நாட்களையும் போல் . மகள் காலை உணவு கொண்டு வரும் போது வழக்கமாக இதைத் தான் சொல்வாள். காலை மட்டும் என்றில்லை , எல்லா வேளைகளிலும் இதைத் தான் விடாது சொல்லிக் கொண்டிருந்தாள் அம்மா.
“குட் மார்னிங் மா” .உணவு ட்ரேயை அம்மாவின் முன் உள்ள மேசையில் வைத்தாள்.
மெல்லிய திரைச்சீலையை ஊடுருவி வரும் இளங்காலை சூரியனை கண்ணை இடுக்கியபடி பார்த்துக்கொண்டிருந்தாள் அம்மா.
மேசையில் அம்மாவின் அலங்காரப் பொருட்கள் ,பவுடர்கள், வாசனை திரவியங்கள் நிறைந்திருதிருந்தன. அதையெல்லாம் திறந்தோ, உபயோகித்தோ பல மாதங்கள் ஆகிவிட்டன.
மகளின் வருகையை கவனியாதது போல அம்மா அவளைத்தாண்டிச் சென்று தன் உடை அலமாரியைத் திறந்து நீலமும் வெள்ளையுமான கோடுகளுடைய சிறிய கைவைத்த ஒரு சட்டையை எடுத்து வந்து, படுக்கையில் ஏற்கனவே விரித்து வைக்கப்பட்டிருந்த இளநீல இலாஸ்டிக் வைத்த பாவாடையின் மேல் வைத்து ,அதை இஸ்திரி போடுவது போல தன் கைகளால் நீவிக் கொடுத்தாள்.அவளுக்கு திருப்தியளிக்காதது போல முகத்தை சுறுக்கிக் கொண்டாள்.
“ என்னிடமிருந்த அழகான உடுப்புகளெல்லாம் எங்கே போயின” என்றாள் தன் மகளை நேரடியாகப் பார்க்காமல் ,அந்த அறையிடம், அந்த காற்றிடம் சொல்வதுப் போல..” எங்கே போயின இடுப்பில் சுற்றி அணியும் என் அழகான பாவாடைகள் , என் பென்ஸில் பாவாடைகள் ?அவன் இன்றைக்கு வருகிறான் உனக்கு தெரியுமா? அவன் முன் நான் அழகான உடை உடுத்தி அழகாக இருக்க வேண்டாமா?,என் மெல்லிய மேல் சட்டைகள்,என் சூட்டுகளெல்லாம் எங்கே போயின? நீ பார்த்தாயா?நீ என் அலமாரியிலிருந்து எடுத்து வேறெங்கும் வைத்து விட்டாயா? என்னிடமிருந்து உடைகளை திருடுகிறாயா? “
“ இல்லை அம்மா” என்றாள் மகள்.
“ மார்ஷல் ஃபீல்ட் டிபார்ட்மென்டல் கடையில் வேலைபார்பவர்களுக்கான தள்ளுபடியில் நான் வங்கியவைகள். அதை என்னிடமிருந்து பறித்துக்கொள்ள உனக்கு எந்த உரிமையும் கிடையாது”
எண்பதுகளில் தன் அம்மா வேலை பார்த்த மார்ஷல் ஃபீல்ட் கடைகளை மூடியே பலவருடங்கள் ஆகிவிட்டன என்று மகள் சொல்லவில்லை. அம்மாவை மெதுவாக அழைத்து சாய்வு இருக்கையில் உணவிற்கு முன் அமர்த்தினாள் .அம்மாவுக்கு பசியும், செரிமானமும் நன்றாக தான் இருந்தது. அது மிகவும் நல்ல அறிகுறி என்று மருத்துவர் சொல்லியிருந்தார்.
தன் ரொட்டியில் வெண்ணையை தடவினாள், தன் முட்டையில் கெட்ச்சப் ஊற்றினாள் அம்மா ,ஓயாமல் பேசியபடியே உணவை உட்கொண்டாள். முட்டையும் கெட்ச்சப்பும் இரண்டுமே தனக்கு பிடிக்கும் என்றாலும் அவ்விரண்டையும் சேர்த்து உண்பது என்ன மாதிரியான பொருந்தாச்சுவை என்று எண்ணிக்கொண்டாள் மகள்.
“ அவன் இன்றைக்கு வருகிறான்” என்றாள் அம்மா சாப்பிட்டுக் கொண்டே.வாயிலிருந்து கெட்ச்சப் ,ஏற்கனவே சிகப்பு திட்டுகளாக கரை படிந்திருந்த அவளது இரவாடையின் ரிப்பனில் தெரித்தது. ஏனோ இது மட்டுமே மகளை எரிச்சல் படுத்தியது. அடுத்த முறை மெஷினில் போடும் போது கரையை நன்கு தேய்த்து எடுத்துவிட்டு போடவேண்டும் என்று எண்ணிக்கொண்டாள். தன் அம்மாவைப் போலவே எளிதில் எரிச்சலைடைய கூடியவளாக ,இந்தப்பெருங்குழப்பத்தில் ஒரு ஒழுங்கமைதி கொண்டுவர முயல்பவளாக தன்னை உணர்ந்தாள். இந்த அம்மா இல்லை இதற்கு முந்தைய அம்மாவைப் போல. தன்னை திருடி என்று சொன்னாலும் மறதி ஆட்கெண்ட இந்த மனதுடன் முன்பை விட அன்பாகவும் கருணை நிறைந்தும் இருப்பதால் ஒரு வகையில் முந்தைய அம்மாவைவிட இந்த அம்மாவே சிறந்தவளாகவும் இருப்பதால் மகளைக்கு இந்தம்மாவை பிடித்தது. அம்மாவின் தேவைகளும் முன்பைவிட எளிதானவையாகியிருப்பதும் பிடித்துப் போனதற்கு ஒரு காரணம்.
காகித துண்டைக்கொண்டு தன் வாயைத்துடைத்து ” சுவையாக இருந்தது . நன்றி “ என்றாள் மகளைப் பார்க்காமல் அவள் நின்றிருந்த திசையை மட்டும் பார்த்து.
“ இருக்கட்டும் மா” என்றாள் மகள் .அம்மாவின் கரிசனமான வார்த்தைகளுக்கு அவள் இன்னும் முழுதாக பழகியிருக்கவில்லை. அன்றைக்கான வேலையைத் தொடங்குவதற்காக (புதிய வீடுகளை வாங்குபவர்களிடன் காண்பிக்கும் வேலை) வெளியில் விரைந்தாள் . அம்மாவைப் பார்த்துக்கொள்ளும் செவிலியும் மகள் கிளம்புவதற்குள் வந்துவிடுவாள்.
“ அவன் வரும் நேரம் தான். நான் ஆயத்தமாக வேண்டும். அவன் வீட்டிற்கு வந்ததும் மறக்காமல் என்னிடம் வந்து சொல்” என்றாள் அம்மா.
மகள் கதவின் பிடியில் வைத்த ஒரு கையுடன் திரும்பாமல் அம்மாவிற்கு முதுகைக் காட்டி அப்படியே ஒரு கணம் நின்றாள்.
“ நான் சொன்னது கேட்டுதா? இன்றைக்குத் தான் அந்த நன்நாள்” என்றாள் அம்மா கெஞ்சும் தொனியில்.
கதவை தன் பின்னால் அடைத்து அறையைவிட்டு மகள் வெளியேறினாள்.
சிறு வயதில் விடுமுறை நாளின் சில சமயங்களில் மகள் தன்னுடைய பெயரை தனக்குத்தானே உச்சரித்துப் பார்ப்பாள். அந்தப்பெயரைக் கேட்டே பல மாதங்கள் ஆகியிருக்கும்.யாருமே அவளை பெயர்ச் சொல்லி அழைக்க மாட்டார்கள். அவளுடைய அம்மாவைப் பின்பற்றி எல்லோருமே ‘ மகள்’ என்றே அழைத்து வந்தனர்.தன்னுடைய இருப்பே அம்மாவின் மகளாக பிறந்த அந்த ஒரு உறவு முறையை பேணுவதால் மட்டுமே
சாத்தியபடுகிறதோ என்ற ஐயம் அவளுக்கு அவ்வப்போது உண்டாகும். மகள், வீட்டை பராமரிப்பவள், சமையல்காரி, குழந்தைகளைப் பராமரிப்பவள், செவிலி, அடிமை. இப்படித்தான் அவளுக்கு தன்னைப்பற்றிய ஒரு பிம்பம் , ஒரு எண்ணம் உண்டானது.
மகளே, இதைச் செய்வாயா? மகளே அதை எனக்காகச் செய்வாயா? என்று தன்மையான தொணியில் தான் கேள்விகள் இருக்கும். ஆனால் உண்மையில் அவை கட்டளைகள்…மகளே இதைச் செய்,அதைத்தான் செய்ய வேண்டும் …..என்பது தான் அதன் பொருள். எந்த கேள்வியும் கேட்காமல், புகார் கூறாமல் செய்யவேண்டியவைகள் . இல்லையென்றால் அடி விழும், கன்னத்தில் அறையப்படுவாள். ஆனால் அவளது சகோதர்ரகள் ரிக்கோ மற்றும் ப்ரூஸ் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பெயர்களால் அழைக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் இஷ்டபடியே நடந்தனர். அவர்களுக்கு எந்த கட்டுப்பாடும் அம்மா விதிக்கவில்லை.
அவர்கள் பெரியவர்களான பின்பும் பெரிதாக எதுவும் மாறவில்லை. என்ன ஒன்று இப்போது ப்ரூஸ் இல்லை, போதை பழக்கத்திற்கு அடிமையாகி இறந்து விட்டான். ரிக்கோ தன் மனைவி குழந்தைகளுடன் நகரத்தின் மறுபக்கத்தில் வசிக்கிறான். அம்மாவைப் பற்றிய பெரிதாக அக்கறைப் பட்டுக்கொள்ளமாட்டான். மகள் அவனை குற்ற உணர்ச்சிக்கு ஆட்படுத்தினால் மட்டுமே , அதுவும் எப்போதாவது வேறு வழியில்லாமல் வருவான்.அப்போது மட்டும் மகளுக்கு சிறிது ஓய்வு கிட்டும்.
“ ‘இன்றைக்கு தான் அந்த நன்நாள் ‘ என்று சொல்வதை அவள் நிறுத்த வேண்டும். இந்த எழவெடுத்த விஷயத்தை திரும்ப திரும்பக் கேட்டு காது புளித்து விட்டது “ என்று சலித்திக் கொண்டான் போன முறை வந்த போது. அம்மா எடி லீவர்டை எதிர்பார்த்து தினமும் காத்திருப்பது அவனை கோபமடையச் செய்தது.
“ நான் தினமும் அதை கேட்டுக் கொண்டிருக்கிறேன். என் இடத்தில் இருந்து பார் தெரியும் உனக்கு “ என்று கோபத்தில் மகள் கத்தினாள்.
“நீ முழு நேரமும் யாரையாவது உதவிக்கு வைத்துக் கொள்ளலாமே…”
“ நீ ஒரு மகனாக உன் கடமையை செய்யலாமே “
கோபத்தில் தன் கைகளை கட்டி, உதட்டை பிதுக்கி கடுமையான முகத்துடன் அமர்ந்திருந்தான். நாற்பது வயதிலும் குழந்தை முகம் மாறாமல் அப்படியே சிறு வயதில் இருப்பதைப் போலவே இருந்தான்.
“ நீ இங்கே இருக்கும் போது நான் எதற்கு வீணாக பணம் செலவு செய்து ஒரு ஆளை வைத்துக் கொள்ளவேண்டும். அம்மா மிகச் சரியான அம்மாவாக நம்மிடம் நடந்து கொள்ளவில்லை என்பது உண்மைதான். ஆனாலும் அவள் நம் அம்மா இல்லையா…”
“ நீ உன் சொற்பொழிவை மறுபடி தொடங்கிவிடாதே” .
அம்மாவிற்கும் ரிக்கோவின் மனைவிக்கும் தொடக்கத்திலிருந்தே ஒத்துப்போகவில்லை. மகள் இருவருடங்கள் வேலை நிமித்தமாக வேறு ஊரில் இருந்த போது ரிக்கோ அம்மாவுடன் இருந்தான். ஆனால் அப்போது அம்மா சுயநினைவுடன் இருந்தாள். ப்ரூஸின் இறப்பு அந்தக் குடும்பத்தில் எல்லோரையும் ஒவ்வொரு முறையில் பாதித்தது.என்ன இருந்தாலும் அம்மா தன் மகன்களின் மேல் அதிக பாசம் வைத்திருந்தாள். அவர்களை அவள் ஒரு முறை கூட அடித்ததேயில்லை.
“ சரி நான் எதையும் தொடங்கவில்லை, ஆனால் இந்த நிலையில் அம்மாவிற்கு எடி லீவர்டைப் பற்றி பேசவேண்டும் என்றால் பேசட்டுமே, அது நம்மை என்ன செய்துவிடும்.அவள் யாரையும் தொந்தரவு செய்யவில்லையே. அவள் பாட்டிற்கு தன் உலகத்தில் வாழ்ந்து விட்டு போகட்டுமே ரிக்கோ”
சிறு வயதில் பயிற்றுவிக்கப்பட்ட வழியில் தான் பெரியவனானதும் ஒருவன் நடக்கிறான் என்று பைபிலில் சொல்லப்பட்டுள்ளது.அம்மா தன் வயதான காலத்தில் பைபிலைப் பற்றிய எண்ணமே இல்லாமல் ,பதின் வயதில் தனக்கு மிகப் பிடித்த இசைக்குழு ஓஜேஸின் முன்னணிப் பாடகரான எடி லீவர்டின் வருகைக்கான நற்செய்தியை போதித்துக் கொண்டிருந்தாள்.
அம்மாவைப் போலவே எடியும் தன்னுடைய குழந்தை ஒன்றைப் பறிக்கொடுத்தவர்.மகளுக்கு தனக்கென குழந்தைகள் இல்லாவிட்டாலும், பிள்ளைகளை சாகக் கொடுப்பது பெற்றோருக்கு எவ்வளவு கொடுமையானது என்று புரிந்துக் கொள்ள முடிந்தது. அம்மாவிற்கு அந்த பாடகருடன் ஏதோ ஒரு உடைக்க முடியாத பந்தம் எப்படியோ உருவாகியிருக்கிறது.
எழுபதுகளில் ஓஜேஸ் குழு அந்த ஊருக்கு இசை நிகழ்ச்சி நடத்த வந்த நேரம் அம்மா எடியுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்திருக்கிறாள். புகைப்பட ஆல்பம் ஒன்றில் மகள் அதைப் பார்ததிருக்கிறாள்.
நெருப்பு சிகப்பில் கீழிறங்கிய கழுத்துடன் இறுக்கமான உடையும், கருஞ்சிவப்பில் சாயம் ஏற்றப்பட்டு ஃபாரா ஃபௌஸெட் போல சுருண்ட முடியுடன் இருப்பாள் அந்த படத்தில். அம்மாவின் நீள் மூக்கும் பருத்த உதடுகளும் இல்லாவிடில் அவளை ஃபாரா ஃபௌஸெட் என்றே சொல்லலாம்.அப்படி ஒரு ஒற்றுமை. அம்மா எவ்வளவுக்கெவ்வளவு வெள்ளையாக இருந்தாளோ அவ்வளவக்கவ்வளவு எடி கறுப்பாக இருந்தார். அவர் நெஞ்சு தெரியும் வண்ணம், பெரிய காலர்கள் வைத்த வெள்ளை சூட் அணிந்து ,அம்மாவின் மெல்லிய இடையை சுற்றிப் பிடித்திருப்பார். எடி காமெராவைப் பார்த்து பெரிதாக சிரித்துக் கொண்டிருப்பார். அம்மா எடியை திரும்பிப் பார்த்து பெரிதாக சிரித்துக் கொண்டிருப்பாள். ஒரு காலத்தில் அம்மா இவ்வளவு மகிழ்ச்சியான மனுஷியாக இருந்திருக்கிறாள் என்பதை உறுதி செய்து கொள்ளும் விதமாக சிறு வயதில் கூட மகள் இந்தப் புகைப்படத்தை அடிக்கடி எடுத்துப் பார்ப்பதுண்டு.
அம்மாவின் துக்கம் தன்னையும் தொற்றிக் கொள்ளகூடாது என்று தான் பதினெட்டு வயதில் மகள் வீட்டை விட்டு வெளியேறினாள் . மேலும் எல்லோருக்கும் வேலைக்காரியாக இருந்து இருந்து வந்த பெரும் சலிப்பும் ஒரு காரணம் .ஆனாலும் அம்மாவுடன் தொடர்பில் தான் இருந்தாள். அடிகளும் சுடு சொற்களும் நின்றுவிட்டன என்றாலும் ,அவர்களுக்குள் எல்லாம் சரியாகி விட்டதென சொல்ல முடியாது.
ஒரு வெள்ளிக்கிழமை மாலையில் அம்மாவும் மகளும் சாப்பாட்டு மேசையில் அமர்ந்து ரிக்கோ வருவதற்காக காத்திருந்தனர். மகள் தன் பள்ளித் தோழன் டோணியுடன் இரவு உணவுக்காக வெளியே செல்ல திட்டமிட்டிருந்தாள். டோணி அவ்வப்போது வீட்டிற்கு வந்து தேவையான சில உதவிகள் செய்து வந்தான்.முந்தைய வருடம் அம்மா இரண்டாவது முறையாக பக்கவாதத்தால் தாக்கப்பட்டபோது , மருத்துவரால் அவளுக்கு வாஸ்குலர் டிமென்ஷியா என்று கண்டுபிடிக்கப்பட்ட போது , ரிக்கோ வரவேயில்லை . டோணி தான் அம்மாவின் வீட்டை காலி செய்வது , இவளது வீட்டில் அம்மாவை கொண்டு விடுவது என்று சகலத்திற்கும் மகளுக்கு உதவியாக கூடவே இருந்தான்.
டோணி வந்ததும் அம்மா அவனிடம்” இன்று தான் அந்த நன்நாள். எடி வரப்போகிறான்” என்றாள்.
“ உங்களைப் பார்த்தாலே தெரிகிறது , இளமையாக அழகாக இருக்கிறீர்கள்” என்று அம்மாவைப்பார்த்து புன்னகைத்தான் .
அம்மா வெற்றிப் புன்னகையுடன் எழுந்து ஒரு சுற்று சுற்றி தன் உடையை டோணியிடம் காண்பித்தாள். “ என்னிடம் இது தான் இருக்கிறது “ மகளை குற்றவாளிப் போல பார்த்தாள்.
“ அவனுக்கு இந்த உடை பிடிக்குமா?நீ என்ன நினைக்கிறாய்”
“ கண்டிப்பாக பிடிக்கும் அம்மா. எனக்கு வயதாகிவிட்டது . நான் இளைஞனாக இருந்திருந்தால் எடியுடன் நானே போட்டி போட்டிருப்பேன்” என்றான் டோணி அசல் பிரியத்துடன்.
அம்மா அழகாக வெட்கப்பட்டு சிவந்து போனாள்.
“ எவ்வளவு நாளாகிவிட்டது அவனைப் பார்த்து “ என்றாள் அம்மா ஒரு கையின் விரல் நகங்களால் மேசையில் தாளம் போட்டாள், இன்னோரு கையால் தலையை வரட் வரடென்று சொறிந்தாள். மகளுக்கு அம்மாவை பார்லருக்கு அழைத்து சென்று தலை முடியை கழுவி அலங்காரம் செய்ய தவரிவிட்டோம் என்று குற்ற உணர்ச்சி ஏற்பட்டது.அடுத்த நாள் காலை முதல் வேலையாக தன் தோழி டேமியை அழைத்து அம்மாவுக்காக ,அவளுடைய பார்லரில் நேரம் ஒதுக்கி தரும்படி கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
ரிக்கோ 45 நிமிடங்கள் தாமதமாக வந்து சேர்ந்தான். அம்மா உற்சாகத்துடன் , “ என் செல்ல மகன் வந்துவிட்டான்! “ என்று கூவிக்கொண்டு எழுந்து அவனை கட்டிக் கொண்டாள். ரிக்கோ அவளை சம்பிரதாயமாக முத்தமிட்டான் . எடியைப் பற்றி அவள் சொல்லியதும் மிகுந்த அயர்ச்சியில் கண்களை உருட்டினான்.
“ தலையை ஏன் இப்படி சொறிந்து கொண்டிருக்கிறாள்” என்றான் மகளிடம் குற்றம் சாட்டுகிற தொனியில்.
மகள் அவனை முறைத்து பார்த்தாள், அம்மாவிடம்” நான் டோணியுடன் வெளியில் செல்கிறேன். நான் திரும்பி வரும் வரை ரிக்கோ உன்னுடன் இருப்பான்” என்றாள்.
அம்மா எங்கோ வெரித்துக் கொண்டு சரியென்றாள்.
பிறகு டோணியைப் பாரத்து “ நீ மகிழ்ச்சியோடு போய்வா “ என்றாள் ஆசீர்வாதமாய்.
டோணியின் காரில் ஏறியதும் மகள் அழத் தொடங்கினாள். அவன் அவளுடைய முதுகை ஆதூரமாக தடவிக் கொடுத்தான்.
“ ஏன் இப்படி அழுகை வருகிறது என்று தெரியவில்லை “ என்றாள்.
“ ஏனெனில் நீ அம்மாவை இவ்வளவு அன்போடு பார்த்துக்கொள்கிறாய். அவர்களுக்கு உன் பெயர் கூட நினைவில் இல்லை. ரிக்கோ ஒரு வேலையும் செய்யாமல ஏமாற்றுகிறான் அவன் மீது அவ்வளவு அன்பை பொழிகிறார்கள்…”
மகள் மறுபடியும் அழத் தொடங்கினாள்.
“ உனக்கு வேண்டும் என்றால் நாம் இப்படியே காரில் சிறிது தூரம் செல்லலாம். இரவு உணவை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றான்.
சரி என்று தலையாட்டினாள்.” நான் வீட்டைவிட்டு வெளியேறிய பின்பு கூட அம்மாவிற்காக நேரம் காலம் பார்க்காமல் உதவியிருக்கிறேன் தெரியுமா?ப்ரூஸ் இறந்த பிறகு அம்மா அந்த வெறுமையை போக்கிக்கொள்ள ஞாயிறு தேவாலயப் பள்ளி, சிறுமியர் சாரணிய இயக்கம், குழந்தைகளின் தேவாலயம் என பலவற்றில் ஈடுபட்டு வந்தாள்.ஒவ்வொரு இடத்திற்கும் நான் தான் அவளை கொண்டு விட்டேன் திரும்ப அழைத்து வந்தேன் . வீட்டின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றேன். கிரிஸ்துமஸ், ஈஸ்டர் எந்த பண்டிகையையும் அவளை தனிமையில் இருக்க விடாமல், கூட இருந்து பாரத்துக்கொண்டேன்.நான் தான் எல்லாவற்றையும் செய்தேன். ரிக்கோ இல்லை. இப்பொழுதும் நான் தான் அவள் கூட இருக்கிறேன் . சிறு வயதில் அவள் என்னை நடத்திய விதத்தை எல்லாம் புறம் தள்ளி அவளுக்காக உதவியாக இருந்தேன், இருக்கிறேன். ஆனால் நான் யாரென்றே அவளுக்கு தெரியவில்லை.. ஏதோ சம்பளத்திற்கு வேலை செய்யும் செவிலியை விடவும் மோசமாக என்னை நடத்துகிறாள்.
என்னை விட இந்த எடி லீவர்ட்டின் மேல் தான் அவளுக்கு அதிக பாசம். ஒவ்வொரு நாளும் இதே பல்லவி .சில சமயம் இந்த பாடகன் வரவே போவதில்லை என்று கத்தி கூச்சலிட வேண்டும் போல் உள்ளது.” என்று நீண்ட பெருமூச்சை விட்டாள்.
டோணி தன் தலையை ஒரு பக்கமாக சாய்த்து தன் தாடியை தடவி க்கொண்டான்.
“ என்ன” என்றாள் மகள்.
“ நான் ஒன்று சொன்னால் தப்பாக எடுத்துக்கொள்ளக் கூடாது” என்றான் டோணி.
“ இல்லை சொல்லு “
“ உனக்கு ஒரு விடுமுறை தேவை .. இப்படி சில மணி நேரமெல்லாம் போதாது.. சில நாட்கள் தேவை. மேலும் சிறு வயதில் நடந்தவற்றை நீ எப்படியாவது மறந்து மன்னித்து தான் ஆகவேண்டும் வேறு வழியில்லை” என்றான் டோணி.
இதைத்தானே வாழ்நாள் முழுவதும் செய்துகொண்டிருக்கிறேன் ,மறந்து மன்னித்து, என்னை நானே பாரத்துக்கொண்டு ,குறைவான சம்பளத்திற்கு சிறு சிறு வேலைகள் செய்து பின் இப்போது தான் ஒரு நல்ல வேலை கிடைத்தது அதற்குள் அம்மாவுடன் இருக்க வேண்டிய சூழல் என்று மனதிற்குள்ளேயே நினைத்துக் கொண்டாள் அவனிடம் சொல்லவில்லை.
“ தப்பாக எடுக்காதே” என்றான் மறுபடியும்.
“ சரி ,எனக்குப் பசிக்கிறது . நாம் உணவு விடுதிக்கே செல்லலாம்” என்றாள்.
அம்மா சரியான நிறத்தில் குழந்தை பிறக்கும் வரை குழந்தைகளை பெற்றெடுத்தாள் என்று அவர்களுடைய வீட்டின் அக்கம்பக்கத்தினர் சொல்வதுண்டு. அவளுடைய நடு குழந்தை தான் மகள், ப்ரூஸைவிட அடர்த்தியான நிறம். அம்மாவின் கடைகுட்டி ரிக்கோ , ஒரு போர்டோ ரீக்கன் தகப்பனுக்கு பிறந்தவன் அதனால் அவன் நீலக் கண்களுடனும், மணல் நிற கேசத்துடனும் , வெண்ணை மஞ்சளில் இருந்தான். கலப்பினமான, ப்ரௌன் நிறத்திலிருந்த அம்மா ,அடர் கருப்பு ஆண்கள் தான் உறவுக்கு சிறந்தவர்கள் என்று நம்பினாள்.ஒவ்வொரு முறை அப்படி ஒருவனை தன் படுக்கைக்கு அவள் அழைத்து வந்த போதும் பிறக்கப் போகும் குழந்தையின் நிறம் என்னவாக இருக்கும் என்று யாருக்கும் தெரியாது . இந்த மர்ம சூதாட்டத்தை மூன்று முறை ஆடியிருக்கிறாள்.
அவர்கள் வருடத்தில் மூன்று நாட்கள் மட்டுமே தேவாலயம் சென்றனர். … கிரிஸ்துமஸ், ஈஸ்டர், அன்னையர் தினம்.அன்னையர் தினத்தன்று ஒரு வெள்ளை மலரை தன் உடுப்பில் குத்திக் கொண்டு தேவாலயம் போகும் முன்பும் போய்வந்த பின்பும் அழுது அழுது தன்தாயின் நினைவில் அந்நாளைக் கடத்துவாள்.( ப்ரூஸ் அதை இறந்த பாட்டியின் பூ என்று சொல்வான்).
மகள், ப்ரூஸ் ,ரிக்கோ மூவருக்கும் பாட்டியின் மங்கலான நினைவுகள் இருந்தது.மிகத் திருத்தமாக உடை அணியக்கூடிய வெள்ளைத் தோலுடன் இருந்த கருப்புப் பெண் அவள். அம்மா பல ஆண்களுடன் தொடர்பு வைத்து பிள்ளைகளும் பெற்றதால் அவளை தனது மகள் என்றே ஏற்காத பாட்டி. பேரப்பிள்ளைகள் மீது பாசமாகவே இருந்தாள். நிறைய விளையாட்டுப் பொம்மைகளுடன் இவர்களை பார்க்க சில சமயம் வந்திருக்கிறாள்.
ஒவ்வொரு முறையும் இவர்கள் மூவருக்கும் புத்தம் புதிய இருபது டாலர் நோட்டுகளை தருவாள். அம்மாவிடம் அவள் எப்படி கடவுளின் குழந்தையாக இல்லை என்கிற குற்றச்சாட்டையும் வைத்து விட்டுச் செல்வாள். குழந்தையாக இருக்கும் போதே மகளுக்கு அம்மாவின் அன்னையர் தினத்து அழுகை நன்றாக புரிந்திருந்தது. சில சமயங்களில் காயப்படுத்தினாலும் பாட்டியுடனான அம்மாவின் பிணைப்பு எப்படிப் பட்டது என்று நன்கு புரிந்திருந்தது.
அவர்கள் முறையே 12,10 ,8 வயதிருந்த போது அம்மா கர்த்தரால் மீட்கப்பட்டார்.அப்போது அவர்களுக்கு அது என்னதென்ற முழுமையான புரிதல் இல்லாவிட்டாலும் மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள்.அதற்கு ஒரு வருடம் முன்பே பாட்டி இறந்து போயிருந்தாள். தேவாலயத்தில் அம்மாவை நிறைய பெண்கள் சூழ்ந்திருந்தனர்.போதகர் பிரார்தனை செய்துவிட்டு ஏதோ செய்வினை எடுப்பதைப் போல ஒன்றை ச்செய்தார்.அம்மா நிறைய அழுதபடி இருந்தாள். ஆனால் பிரார்தனை முடிந்ததும் இவர்கள் மூவரையும் அணைத்துக் கொண்டு, மகிழ்ச்சியாக வீடு வந்து சேர்ந்தாள்.
புதிதாக கடவுளைக் கண்டுகொண்டவர்களுடைய உற்சாகத்தை தாங்கிக் கொள்வது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை.இதுவரை சனிகிழமை இரவுகளில் அம்மா பூட்டின அறையில் தன்ஆண் நண்பர்களுடன் உறவு கொள்ளும் தாளகதிக்கு ஏற்ப கட்டிலின் பலகை சுவற்றில் இடித்துக் கொண்டேயிருக்கும் சத்தத்திற்கும், உச்சத்தில் அவர்களுடைய பெயர்களை அவள் கத்தி கூப்பிடும் சத்தத்திற்கும் பழக்கப்பட்ட பிள்ளைகளிடம் திடீரென்று அவர்கள் அமைதியாக விளையாடிக்கொண்டிருக்கும் சீட்டு கட்டை பிடுங்கி ‘ இது சாத்தானின் விளையாட்டு ‘ என்று கடிந்து கொண்டால் அவர்கள் பாவம் என்ன செய்வார்கள்.
மகளுக்கு அவளுடைய பத்து வயதே ஆன தர்க அறிவின் அடிப்படையில் ,ஜின் ரம்மி விளையாடுவது பாபச்செயலாக இருக்கலாம் ஏனென்றால் அந்தப் பெயரில் ஜின் இருக்கிறது ஆனால் தன் அண்ணன் தம்பியுடன் விளையாடும் ‘ நக்கில்ஸ்’மற்றும் ‘ ஐ டிக்ளார் வார்’ இதிலெல்லாம் என்ன பாவம் இருந்துவிட முடியும் என்று புரியாமல் தவித்தாள்.
மகள் அம்மாவின் வாழ்வை இரண்டாகப் பிரித்தாள் அம்மா க .பி ( கடவுளுக்குப் பின்) அம்மா க.மு ( கடவுளுக்கு முன்) . சில விஷயங்கள் மாறின. சீட்டுக் கட்டைப் போலவே ஆண்களும் அந்த வீட்டிலிருந்து தடை செய்யப் பட்டனர்.
சில விஷயங்கள் மாறவில்லை.இப்போதும் எதிரத்துப் பேசினால் அவளுடைய சகோதர்ர்களிடம் ‘ வாயை மூடு ‘ என்றும் இவளிடம் ‘ உன் கருவாயை மூடு ‘ என்றும் தான் சத்தம் போட்டாள்.
ஆனால் எடி லீவர்ட் பித்து மட்டும் மாறவேயில்லை.அம்மா க.மு. “ எடி என்னை எப்போது எங்கே கூப்பிட்டாலும் போய்விடுவேன்” என்று தன் தோழிகளிடம் சொல்வதுண்டு.அம்மா க.மு வெள்ளி இரவுகளில் அபூர்வமாக வீட்டில் இருந்தால் ஒரு கையில்’ கூல்’ சிகரெட்டும் மறு கையில் ஜானி வாக்கர் ரெட் விஸ்கியுடன் ( நேரடியாக ஐஸ் கட்டிகளில் ஊற்றப்பட்டது ) ஓஜேஸ் குழுவில் எடி பாடும் போது சத்தமாக பாடிக்கொண்டும் ,கண்களை மூடியபடி இடுப்பசைத்து மெல்லியதாக ஆடிக் கொண்டும் இருந்தவள்.
அந்த இரவுகளில் ரிக்கோ இசைத்தட்டுகளை மாற்றும் டி ஜே வாக இருப்பான். மகள் அம்மாவின் கோப்பையை ஐஸ் கட்டிகளாலும் மதுவாலும் நிறப்புபவளாக இருந்தாள்.வீடே இரவு நேர கேளிக்கை விடுதி போலிருக்கும். அம்மா எடியின் காதல் பாடல்களில் தன்னையே மறந்து அழுது கொண்டே தூக்கத்தில் அல்லது மயக்கத்தில் உறங்கி விடுவாள். ப்௹ஸ் மட்டும் வெளியில் சுற்றிவிட்டு நேரம் கழித்து வருவான். பதின்பருவத்தில் போதை மருந்துகளுக்கு அடிமையாகிவிட்டான். அதன் விளைவாக திருடுவதும், தெருச்சண்டைகளிலும் அவனது இரவுகள் கழிந்தன.
ஆனால் மகளை மட்டுமே கண்டித்தாள் அம்மா. மகள் அபூர்வமாக இரவு வெளியில் சென்றால் கூட “ உன் கருத்த உடம்பைக் காட்டிக் கொண்டு வெளியில் அலையாதே “ என்று கடிந்துக் கொண்டாள்.
அம்மா க.மு வும் அதே போல இரவை எடியின் பாடல்களுடன் கழித்தாள் ஆனால் மதுவும் சிகரெட்டும் இல்லாத்தால் இரு கைகளையும் வீசி அழகாக நடனமாடினாள். தேவாலயத்தில் பாடிக்கொண்டே ஆடுவதைப்போல . இரண்டு இடங்களிலுமே இறுதியில் அழுகையில் தான் முடியும். மகளுக்கு இரண்டும் உவப்பானதாகயில்லை. எதுவுமே அம்மாவிற்கு மகிழ்ச்சியை தரவில்லை என்று புரிந்து கொண்டாள். மது, மதம் இரண்டிலுமே அவளுக்கு நம்பிக்கை இல்லாமல் போனது.
டோணியுடன் இரவு உணவு முடித்து வீடு திரும்பியதும் அம்மா தூங்கிவிட்டாளா என்று மெதுவாக அவள் அறைக்கதவை திறந்து பார்த்தாள். அம்மா அமைதியாக குரட்டை விட்டுக் கொண்டிருந்தாள்.
டோணியும் மகளும் அவளது படுக்கைக்குச்சென்றனர். பத்து வருடங்கள் முன்பு டோணி வீட்டிற்கு வரத்தொடங்கினான். அப்போதே அவனுக்கு 32 வயது, இரு முறை மணமுறிவாகியிருந்தது. மகள் கல்யாணம் குழந்தை இரண்டையுமே எண்ணிப்பார்க்கவில்லை அந்த ஆசையும் இல்லை.தனியாக சுதந்திரமாக இருப்பதே பிடித்திருந்தது. ஆனால் உடலுக்கென்று சில தேவைகள் உண்டல்லவா? டோணி அவளை சிரிக்க வைத்தான், சிந்திக்க வைத்தான்,உதவி செய்தான், நல்ல காதலனாக இருந்தான்.அவளுக்கு இதுவே போதுமானதாக இருந்தது.
மகள் அந்த நோடியில் அவனிடம் தன் மனதை இருத்த முயன்றாள்.தன் உடல் டோணியை எப்படி எதிர்பார்த்து ஏற்று கொண்டாடுகிறது என்பதில் லயித்து கிடக்க முயற்ச்சி செய்தாள். ஆனால் மனது அம்மாவிடமே சென்றது . சிறு வயதில் அம்மா தன் காதலர்களுடன் இருந்த போது கட்டில் சுவரில் இடித்துக் கொண்டே உண்டாக்கிய தாளம் நினைவில் வந்து போனது.
அம்மாக்கள் மகள்களை வளர்க்கிறார்கள் ஆனால் மகன்கள் மேல் தான் தீராது அன்பு செலுத்துகிறார்கள் என்று ஒரு முதுமொழி உண்டு. அம்மாவின் மேல் பிரியமாக இருந்தவர்கள் மிக மிக குறைவே. அவளுடைய குழந்தைகளைத் தவிர யாருமே அவளிடம் உண்மையாக அன்பு செலுத்தவில்லை .கர்த்தரை நம் மனதில் உயிரப்பித்தால் கிடைக்குமென்று சொல்லப்படும் அழியாத அமைதியும் தேவ சமாதானமும் கூட அவளுக்கு கிடைக்கவில்லை. ஆண்களைப் போல வெளிபடையாக தொட்டு அன்பு செலுத்தாமல் ,தள்ளியருந்து உயிர்வழி அன்பு செய்யும் கர்த்தராலும் அம்மாவின் தீராத தாகத்தை தீர்க்க முடியவில்லை. ஆனால் கடவுள் ஆண்களை விடவும் நிறைய கட்டளைகளை விதிப்பவராக இருக்கிறார்.
மறுநாள் காலை உணவு முடிந்ததும் டோணியை சிறிது நேரம் வீட்டில் இருத்தி விட்டு ,கடைக்குச் சென்று குழந்தைகளுக்கான ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் வாங்கி வந்தாள். அம்மாவை பார்லருக்கு அழைத்து செல்வதற்கு பதில் தானே அந்த வேலையை செய்யலாம் என்று மகள் முடிவெடுத்திருந்தாள்.
முடியை கழுவலாமா என்று அம்மாவிடம் கேட்டு சம்மதம் பெற்றுக் கொண்டாள். சமையல் அறையின் சிங்கின் பக்கத்தில் அவளை அமர்த்தி வைத்தாள்.
“ எனக்கு தெரியலியே… எடிக்கு பிடிக்குமா இந்த ஹேர்ஸ்டைல்… இன்றைக்கு அவன் வருகிறான் உனக்கு தெரியும் இல்ல?” என்றாள் அம்மா.
“ தெரியும் மா. முடியை சுத்தமாக வைத்திருந்தால் தான் எடிக்கு பிடிக்கும்” என்றாள்.
“ அப்போ சரி “ என்று அம்மா உடனே தன் தலையை ஸிங்கில் கவிழ்த்தாள்.
மகள் தன் தொண்டையில் ஏதோ ஒன்று உருள்வதைப் போல உணர்ந்தாள்.
அம்மாவுக்கு ஏற்றவகையில் சரியான அளவில் நீரின் வெப்பத்தை கட்டுப்படுத்த சில நேரம் பிடித்தது. மகள் தன் கைகளில் நிறைய துண்டுகளை எடுத்துக்கொண்டாள். நன்றாக ஷாம்பூ தேய்த்து அலசி பின் கண்டிஷனர் போட்டு அலசி . அம்மாவை அவளுடைய அறைக்கு அழைத்துச் சென்று ட்ரையரை வைத்து முடியை காய வைத்து.ஈரமான அவளுடைய சட்டையை மாற்றி விட்டாள்.
பின் அம்மாவின் முடியை சிறிது சிறிதாக பிரித்து எடுத்து எண்ணை தேய்த்தபடி ,அவள் தலையை பிடித்துவிட தொடங்கினாள்.
அம்மா சிறு சிறு முனங்கல்களுடன் வசதியாக சாய்ந்து கொண்டாள்.
“ எடி இன்றைக்கு கொஞ்சம் தாமதமாக வருவதாக சொல்லி இருக்கிறார் அம்மா “ என்றாள்.
“ அய்யோ அப்படியா?” என்றாள் அம்மா வருத்தம் தோய்ந்த குரலில்.
“ ஆனால் தான் வரும் வரை என்னிடம் உன்னை பார்த்துக்கொள்ளச் சொல்லியிருக்கிறார்.’ மகளே அம்மாவை நல்ல பார்த்துகனும்’ என்றார் தெரியுமா “ என்றாள் மகள்.
“ மகளா?” என்றாள் அம்மா.
“ ஆமாம் . நான் தான் அது .உன் மகள்”
“ வேறு என்ன சொன்னான் எடி” என்றாள் அம்மா.
“ வேறு ஒன்றும் இல்லை .’அம்மாவை கவலை எதுவும் படாமல் நிம்மதியாக இருக்கச் சொல் . நான் வந்துவிடுவேன் ‘ என்றார். நானும்’ சரி ஐயா அப்படியே செய்கிறேன்’ என்று அவருக்கு வாக்கு கொடுத்திருக்கிறேன்” என்றாள் மகள்.
“ நீ மிகவும் நல்லவள்” என்றாள் அம்மா.தன் தலையை நீவீ கொண்டிருக்கும் கையை ஒரு கணம் பிடித்தாள் அம்மா.
“ என்னை நியாபகம் இருக்கிறதா அம்மா “ என்றாள் மகள்.
“ ஓ நல்ல நியாபகம் இருக்கே” என்றாள் அம்மா.
மகளுக்கு கண்களில் நீர் வழிந்துக் கொண்டிருந்தது.
“ அம்மா இது பிடித்திருக்கிறதா? “ என்று மகள் கேட்டாள்.
ஹம் ஹூம் ஹூம் என்று முனங்கலாக சொல்லிக்கொண்டே இருந்த அம்மா அப்படியே அதை ஒரு பாட்டைப் போல இழுத்து ப்பாடத் தொடங்கினாள் .அது என்ன பாட்டென்று மகளுக்கு புரியவில்லை.
மகள் இந்தக் காட்ச்சியை அப்படியே எதிரிலிருந்த கண்ணாடியில் பார்த்தாள்.ஒன்றே போல இரண்டு வட்ட முகங்கள், ஒன்றே போல இரண்டு பெரிய ப்ரௌன் கண்கள். ஒன்றே போலுள்ள ஒடிசலான தேகம் ஆனால் தோலின் நிறம் மட்டும் வேறு வேறு. ஒன்று கருப்பு ஒன்று வெள்ளை. தன் நினைவிருந்தால் அம்மா தன் தோற்றத்தைக் கண்டு பெருமிதம் கொண்டிருப்பாள்.
“ அம்மா வெகு நாட்கள் முன்பு என்னிடம் மிகக் கடுமையாக நடந்து கொண்டாய் .உனக்கு நினைவில் இருக்கிறதா என்று தெரியவில்லை, ஆனால் என்னால் அதை மறக்கவே முடியவில்லை. அது நினைவில் இருந்தால் அதற்காக வருத்தப்படுகிறாயா? எனக்கு அது மட்டும் தான்…..”
அம்மா காதில் வாங்காதது போல பாடிக்கொண்டே இருந்தாள்.” எடி அவனுடைய பல காதல்களைப் பற்றி பாடியுள்ளான். உனக்கு தெரியுமா அதில் நானும் ஒருத்தி .” அம்மா பெருமிதத்துடன் விரலால் தன் நெஞ்சை சுட்டிக் காட்டினாள்.” நான் எவ்வளவு சின்னவள், எதுக்கும் ஆகாதவள்,ஆனால் எடி ஒரு காலத்தில் என்னை காதலித்தான், என்னுடன் ஒரு இரவை கழித்தான் தெரியுமா” என்றாள் பூரிப்புடன்.
“ நீ எதுக்கும் ஆகாதவள் என்று யார் சொன்னார்கள்? ஏன் அப்படி நினைக்கிறாய்?” என்றாள் மகள்
“ அப்படியா? நான் பெரிதாக என்ன சாதித்து விட்டேன் சொல்லு?” என்றாள் .அம்மா புரிதலுடன் சரியாக பேசுவதைக் கேட்டு அதிர்ந்து விட்டாள் மகள். அறையில் வேறு யாரோ புதிதாக நுழைந்ததைப் போலத் தோன்றியது.
“ எனக்கு வேண்டியதை உன்னால் தர முடியும். நீ எதற்கும் ஆகாதவள் இல்லை “ என்றாள் மகள் மறுபடியும்.
“ அப்படியா?”
“ ஆமாம்”
அம்மாவின் முடியை ஒற்றை பின்னலாக முடிந்தாள் மகள். கடல் நீலத்தில் உள்ள அம்மாவின் உடை ஒன்றை கட்டிலின் மேல் எடுத்து வைத்தாள்.
“ இந்த உடையை அணிந்துக் கொள். நான் மதிய உணவு எடுத்து வருகிறேன்” என்றாள்.
“ அது தான் சரி . எடி வருவதற்குள் நான் தயாராக வேண்டும். இன்றைக்குதான் வருகிறான்”
மகள் உணவுத் தட்டை எடுத்து வரும் போது அம்மா தன் சாய்வு நாற்காலியில் அமர்ந்து தன் வேனிற்கால உடையில் இல்லாத சுறுக்கங்களை நீவி விட்டுக் கொண்டிருந்தாள்.
அழகானதொரு புன்னகையுடன் “ நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன்” என்றாள் அம்மா.
“ ஆமாம் மா “ என்று சாப்பட்டு தட்டை அம்மாவின் முன் வைத்தாள் மகள் .பக்கத்திலேயே அந்த புகைப்படத்தையும் வைத்தாள்.
அம்மா முதலில் அந்தப் புகைப்படத்தை எடுத்து பார்த்துவிட்டு பின் அதை கீழே வைத்துவிட்டு தட்டை எடுத்து சாப்பிடத் தொடங்கினாள்.
மகள் தன் அலைபேசியில் எடியின் பாட்டை ஒலிக்கச்செய்தாள்.’ என்றென்றைக்கும் நீ என்னுடையவள்’ என்ற அந்தப் பாட்டின் முதல் கிடார் கார்ட்டுகள் அந்த அறையை மிக ரம்மியமாக நிறைத்தன.
அம்மா ஏதாவது சொல்வாள் இல்லை ஒரு சிறு புன்னகையாவது செய்வாள் என்று மகள் எதிர்பார்த்தாள். ஆனால் அம்மா உணர்ச்சிகள் ஏதுமற்று தன்உணவில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தாள். எடி தனியாக பாடும் மூன்றாவது சரணத்தில் கூட எந்த உணர்ச்சியையும் வெளிகாட்டவில்லை. அம்மா சற்று முன் பாடிய பாட்டு தான் இது என்று உணர்ந்தாளா என்று கூட தெரியவில்லை. பாட்டு ஓடிக் கொண்டிருந்தது. அம்மா கேட்கிறாளா என்றே சந்தேகமாக இருந்து.
தன் உணவை முடித்து, பழங்களையும் உண்ட பின் அந்த புகைப்படத்தை மறுபடி கையில் எடுத்தாள். எடி அப்போது தன் காதலியிடம் தன்னை விட்டு போகாமல் தன்னுடனேயே தங்கும் படி கெஞ்சி ,கொஞ்சிக் கொண்டிருந்தான். அம்மா தன் திடமான உறுதியான குரலால் பெருங்குரலெடுத்து அவனுடன் சேர்ந்து பாடத் தொடங்கினாள்.
***
தீஷா ஃபில்யாவ் பற்றிய குறிப்பு
அமெரிக்க எழுத்தாளர், கட்டுரையாளர் , பேச்சாளர் மற்றும் நாளிதள்களில் எழுதுபவர்.
ஜாக்ஸன்வீல் நகரத்தில் ஃப்ளோரிடா மாகாணத்தில் பிறந்தவர். காப்பரேட் தொடர்பாளர் ஆக வேலை பார்த்தவர் .இப்போது முழு நேர எழுத்தாளராக இருக்கிறார். டோணி மோரிஸன் மற்றும் ஜேம்ஸ் பால்ட்வினை தன்னுடைய இலக்கிய ஆதர்சங்களாக குறிப்பிடுகிறார்.
The Secret Lives of Church Ladies என்கிற இவரது முதல் சிறு கதை தொகுதி 2021 யில் The Story Prize என்ற விருதை வென்றுள்ளது . மேலும் Los Angeles Times Book Prize, மற்றும் Pen /Faulkner Award for Fiction போன்ற பரிசுகளையும் வென்றுள்ளது.
‘ பல அடுக்குகளைக் கொண்டு பல தளங்களில் இயங்கும் வெளிச்சமான மனிதர்கள் நிறம்பிய கதைகள். மென்மையான அதே நேரத்தில் தீர்கமான இவரது கதைகளில் ,மன்னிப்புகள் எதுவும் கோராமல் நிமிர்ந்து நடக்கும் கருப்பின பெண்களைப் பார்க்கலாம். நீங்கள் அறியாமலேயே உங்களுக்குள் புகுந்து வேர் கொள்ளும் தன்மை கொண்ட கதைகள்’ என்று இத்தொகுப்பைப் பற்றிய நியு யார்க் டைம்ஸ் விமர்சன குறிப்பு சொல்கிறது . மேலும் இக்கதைகள்HBO Max தளத்தில் ஒரு தொடராகவும் வரவிருக்கின்றன.
Co-Parenting 101 என்று விவாகரத்தான பெண்கள் தங்கள் பிள்ளைகளை வளர்ப்பதற்கான கையேடு ஒன்றையும் எழுதியுள்ளார்.
Rumpus பத்திரிக்கையில் இவர் எழுதிய Visible: Women writers of color , மற்றும் The Girl is Mine என்ற கட்டுரைகளும் வெகுவாக பேசப்பட்டன.
தற்போது தனது இரு மகள்களுடன் பிட்ஸ்பர்கில் வசித்து வருகிறார்.
-தமிழில்:அனுராதா ஆனந்த்