அப்பாவும் அபாரிஜினும் …
இணையத்தில் எப்போதோ எதையோ தேடிக்கொண்டிருக்கையில் கண்ணில் பட்டது அந்தப் புகைப்படம். கையில் பிணைக்கப்பட்ட விலங்குகளோடு சிலர் .பின்னணியில் ஒரு வெள்ளைக்காரர் சிரிப்போடு. விலங்கால் பிணைக்கப்பட்ட ஒருவரின் முகம், அச்சு அசல் என் அப்பாவைப் போலவே இருந்ததைப் பார்த்தேன். கூரற்ற நாசி, வெள்ளைத்தாடி, லேசான சுருட்டை முடி. என் அப்பாவேதான். அபாரிஜின் என்று அழைக்கபட்டப் பூர்வகுடி ஆஸ்திரேலியர்களுக்கும் எனக்குமான உறவு அன்று தொடங்கியிருக்கலாம். நண்பன் குமார் அம்பாயிரம் அந்த பழங்குடியினரின் இசைக்கருவியான டிஜிருடூவை வாசிப்பதை பல நாட்கள் காணொளியில் கேட்டிருக்கிறேன். நண்பரின் குறும்படத்திற்கான இசைக்கோர்ப்பில் டிஜிருடூவை சேர்க்கச் சொல்லிப் பரிந்துரைத்திருக்கிறேன். மகுடியும், குழலும், வண்டின் ரீங்காரமும் இணைந்த அந்த இசையை , அந்தக் கருவியை பழங்குடிகள் உருவாக்கும் மரபான முறை எல்லாவற்றையும் தேடித் தேடி வாசித்திருக்கிறேன். இடையில் சொந்த சிக்கல்களால் இசையிலிருந்தும், மனிதர்களிடமிருந்தும் ஒதுங்கியிருந்தபோது பழைய பழக்கமான தினமொரு சினிமா மீண்டும் ஒட்டிக்கொண்டது. சமீபமாக பயணப் படங்கள் பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டதில் “TRACKS”(2014) என்கிற படத்தை பார்க்க நேர்ந்தது. மேற்கு ஆஸ்திரேலியப் பாலைவனத்தை தனியேக் கடக்கும் பெண்ணின் கதை. ஆஸ்திரேலிய நிலவியலும் திரையில் வரும் பழங்குடி மூத்தவர்களும் ஏனோ மீண்டும் டிஜிருடூ இசையைக் கேட்க வைத்தனர்.
அன்று நள்ளிரவில் திடீரென அபாரிஜின் குடிகளின் கவிதைகளைத் தேடினேன். கைக்கு அகப்பட்ட ஒன்றை அன்றிரவே மொழிபெயர்த்தேன். ஆஸ்திரேலியப் பூர்வகுடிகளின் வரலாறு, பண்பாடு என்று அதன் பிறகு வாசிப்பு விரிந்தது. அமெரிக்க பூர்வகுடிகள் போல, ஆப்பிரிக்க பூர்வகுடிகள் போல துயரார்ந்த வரலாறு இவர்களுக்கும் இருந்தது. ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் தொடங்குகிறது இவர்களின் வரலாறு. ஏறக்குறைய இருநூற்று ஐம்பது மொழிகள் கொண்டது. 1606 முதன்முறை டச்சு மாலுமிகள் ஆஸ்திரேலியாவில் காலடி வைத்தாலும் பின்னர் 1770, 1788- களில் பிரிட்டிஷ்காரர்கள் வந்தபின்பே காலனியாதிக்கத்திற்கு உட்பட்டது. தொடக்கத்தில் குற்றவாளிகளை சமூகவிலக்கம் செய்ய தோதான இடமாகவும் அதன் பிறகு அந்த நிலத்தின் வளத்தைக் கண்டு காலனியாதிக்கம் சுரண்டலுக்காகவும் உள்நுழைந்தது. அடிமை முறையும் முதலில் இருக்கவில்லை ஊழியம், தொண்டூழியம், அடிமை கடத்தல், ( Black birding) முறையற்ற அடிமை விற்பனை, கட்டாயக் கூலி வேலை, கூட்டு விலங்குப் பிணைப்பு ,கொத்தடிமை என அடிமைப் படுத்தலின் பல்வேறு வகைமைகள் நடந்தேறின. 1970–வரை அடிமைப்படுத்தல்கள் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. உலகின் எல்லாப் பகுதிகளையும் போலவே இங்கும் பூர்வீகக் குடிகள் சொல்லொணாத் துயர்களை அனுபவித்தனர்.. தங்கள் மூதைகளின் காலமான கனவுக்காலம் /பொற்காலம் (Dream time ) மீண்டும் வரும் என அவர்கள் நம்பினர். அந்த காலத்தில் உலா வந்த ஆன்மாக்கள் அவர்களை காக்கும் என இன்றும் காத்திருக்கின்றனர். கேரளத்தில் காணப்படும் காவுகளைப்(புனிதக் காடுகள்) போல இப்போதும் அபாரிஜின்கள் புனித வழித்தடங்களைப் பேணி வருகிறார்கள்.
அபாரிஜின், பூர்விக ஆஸ்திரேலியர்கள் என்று அழைக்கப்பட்டு தற்போது அதிகாரபூர்வமாக பூர்வகுடி ஆஸ்திரேலியர்கள். (Indigenous Australians ) என குறிப்பிடப்படுகிறார்கள். பெரும்பாலும் எல்லா பூர்வகுடிகளின் முதல் தலைமுறைக் கவிதைகளைப் போலவே பாடுகளையும் ,கோபத்தையும் வெளிப்படுத்துவதாகவே இந்தக் கவிதைகள் தொழிற்படுகின்றன. புழங்கு பொருள் ,வட்டார மொழி, மந்திரத் தன்மை, இசை ஒழுங்கு ஆகிய பண்பாட்டு அசைவுகளைக் கவிதைகள் பிரதிபலிக்கின்றன.
முன்னோர்களின் கலையை பண்பாட்டைக் காப்பாற்ற,கைப்பற்ற வாய்க்காத அதிகாரத்தை விட நம்பிக்கையே அவர்களுக்கு வலிமையைத் தருகிறது. கனவு காலத்தைப் பற்றிய கற்பனையில் காத்திருக்கும் அந்த தொல்குடிக் கிழவனில் ஒருவன் என் அப்பனாகவும் இருக்கலாம்.
1. ஆதிக்குடியின் ஆன்மப்பாடல் -ஹைலஸ் நோயல் மோரிஸ்( 1934-1986)
இந்நிலத்தின் ஒரு பகுதி சுருள் குங்கிலிய மரத்தை ஒத்தது
பொற்காலத்து மூதைகளின் குழந்தை நான்
கடலுக்கு செல்லும் பாதையில் எங்கள் பாடல்களை ஓதும்
மென்குரலில் பாடும் நதி நான்
சமவெளிகளில் நடனமாடும் கானல் நான்
தூசிப் பிசாசுகளின் ஆவி எனது
நானே பனி, நானே காற்று ,நானே பெய்யும் மழை
நானே பாறை
தமனிகளில் ஓடும் குருதியைப்போன்ற
இந்த செம்மண் பாலை நானே
நானே கழுகு,நானே காகம், நானே வழுக்கும் நாகம்
பூமி பூமியாய் இருந்தபோது இங்குதான் விழித்தெழுந்தேன் நான்
ஈமுவும் வாம்பாட்டும் கங்காருவும் இங்கிருந்தது
வேற்று நிறம்கொண்ட எந்த மனிதரும் இங்கில்லை
நானே இந்நிலம் இந்நிலமே நான்
நானே ஆஸ்திரேலியா
2.அவர்கள் ஜாக்கிக்கு உரிமை வழங்கினர் -முட்ரூரூ நரோஜின் (கோலின் ஜான்சன்)
இப்படியாக அவர்கள் ஜாக்கிக்கு உரிமை வழங்கினர்
புலிப்பாம்பு தன் இரைக்கு வழங்குவதுபோல
இப்படியாக அவர்கள் ஜாக்கிக்கு உரிமை வழங்கினார்கள்
துப்பாக்கி தன் பலியைப் பார்ப்பதுபோல்
இப்படியாக அவர்கள் ஜாக்கிக்கு உரிமை வழங்கினர்
கருப்பையிலிருந்து பிடுங்கியெடுத்த அம்மாவின்
பிறக்காத குழந்தைக்கு உரிமை வழங்குவதுபோல்
இப்படியாக அவர்கள் ஜாக்கிக்கு சாவதற்கான உரிமையை வழங்கினர்
அவர்கள் ஜாக்கிக்கு அந்த நிலத்தைத் தோண்டுவதை சம்மதிப்பதற்கான உரிமையை வழங்கினர்
இப்படியாக அவர்கள் ஜாக்கிக்கு அதைப் பார்வையிடும் உரிமையை வழங்கினர்
அவனது புனித இடங்கள் ஒரு துளை போல் மாறுவதைப் பார்க்கையில்
அவனது ஆன்மா மரிக்கிறது அவனது மூதைகள் அழுகிறார்கள்
அவனது ஆன்மா மரிக்கிறது அவனது மூதைகள் அழுகிறார்கள்
இப்படியாக அவர்கள் உரிமை வழங்கினர்-
நிலத்தில் ஒரு துளை
எல்லோருக்குமான நீதி, ஜாக்கி முழந்தாளிட்டு பிரார்த்திக்கிறான்
எல்லோருக்குமான நீதி ,நிலத்தில் துளைகளை தோண்டுகிறார்கள்
எல்லோருக்குமான நீதி ,அவர்கள் அவனது உரிமையை வழங்கினார்கள்-
ஒரு குவளை மலிவான மது, அவனது வலிகளை மழுங்கடிக்க
அவனது பெண்கள் அதற்காகத் தங்களை விற்க வேண்டியிருந்தது
எல்லோருக்கமான நீதி, அவர்கள் அவனுக்கு உரிமை வழங்கினர்-
அவனது அவநம்பிக்கையை அவனது பயத்தை ஒளித்துவைக்க நிலத்தில் ஒரு துளை
இப்படியாக ஜாக்கியால் என்ன செய்ய முடியும் போராடிக்கொண்டிருப்பதை தவிர
இப்படியாக அவனது மூதையின் ஆன்மா அவனை வலிமையோடு வைத்திருக்கிறது
3. வெள்ளை மனிதர்களின் பிரச்சனை -ஜிம் எவெரெட்
இப்போது 1982 ..200 வருடங்கள் போய்விட்டன,
பூர்வகுடிகள் போராடியிருக்கிறார்கள் தோல்விகள் தொடர்கிறது.
வெள்ளை மனிதர்கள் கொள்ளை நோய்களைப் பரப்பினர்,
நாங்கள் தேர்ந்தெடுக்காத “உரிமைகள்” அவர்களோடு வந்தன
எங்களை விழுங்கும் இதை எங்களால் கட்டுப்படுத்த இயலவில்லை.
இருந்தும் எங்கள் வாழ்வியலை காத்துக் கொள்ள வேண்டும்
பரிணாமத்தின் போக்கில் எங்கள்
நம்பிக்கைகளுக்கு விசுவாசமாய் இருக்க வேண்டும்
நம்பிக்கை கொள்ளும்போது வெள்ளை மனிதனின் பிரச்சனை குறைந்தளவே நினைவுக்குவரும்.
எங்கள் வழிமுறைகளைக் கற்றுக்கொடுக்கலாம்
கொஞ்சம் வெள்ளையர்களே அதை விரும்புவர்,
அவர்களுக்கு அவர்கள் தொழில்நுட்பமே சிறந்தது
அவர்கள் எங்கள் வாழ்முறைகளை வெற்றிகரமாக மாற்றிவிட்டனர் .
“நாகரிகம் ‘ பரந்து விரிந்துவிட்டது.
அவர்கள் செய்யும் தவறை அவர்கள் அறிவதில்லை
களிப்பும் அதிகாரமும் கண்ணை மறைக்கிறது
வாழ்வை வெற்றிகொள்வதை தடுக்கும் அதே அதிகாரம்
வெள்ளை மனிதர்களின் பிரச்சினை எங்களுக்கு புளிக்கிறது
வெள்ளையர்களின் பிரச்சினை பேராசையும் வன்புணர்வும்,
எப்போதும் மீறும் அவர்களது பத்துக் கட்டளைகள்.
நோக்கத்தை நிறைவேற்றாத சட்டங்கள் எதற்கு?
வெள்ளையர்கள் தங்களுக்குள்ளாகவே எப்போதும் சண்டையிட்டு அதிகாரத்தை வென்றவர்கள்
என்பதுதான் பதில்.
ஏழைகளைச் சுரண்டி சொந்தங்களையே கீழே வீழ்த்தி
நாய் நாயைத் தின்பதே இதுவரையிலான வெள்ளையின வரலாறு,
வெள்ளை மனிதர்களின் பிரச்சனை
வெறுமனே அவர்களது தோல் மட்டும் அல்ல.
4. கடந்த காலம் -ஊட்ஜெரூ நூனுக்கல் (கேத் வாக்கர்)
கடந்த காலம் இறந்து போனதாக ஒருவர் சொல்லலாம்
கடந்த காலம் நம்மைப் பற்றியது நமக்குள்ளேயானது
பழங்குடி ஞாபகங்களில் வெறுமை பீடிக்கப்பட்டு பாழடைந்து
கடந்த காலத்தால் முழுதும் உருவான எனக்கு
எனக்குத் தெரியும்
இந்த சிறிய தருணம் விபத்து போன்ற நிகழ்காலம்
என்னுடைய எல்லாமும் அல்ல
இன்றிரவு இந்த புறநகர் வீட்டில் உட்கார்ந்துகொண்டு மின்சார கணப்படுப்பின் முன்
சாய்வு நாற்காலியில் சிவப்பு ஒளியால் வெப்பமேற்றிக்கொண்டு கனவுக்குள் விழுகிறேன்
புதரின் அருகே நெருப்பு மூட்டிக்கொண்டிருக்கும்
என் சொந்த மக்களோடு
தரையில் அமர்ந்திருக்கிறேன்
என்னைச் சுற்றி சுவர்கள் இல்லை
எனக்கு மேலே நட்சத்திரங்கள்
சுற்றியிருக்கும் உயர்ந்த மரங்கள் காற்றில் சுழன்று
அவற்றின் சொந்த இசையை மீட்டுகின்றன
பழைய இயற்கையின் உயிரிகளாக அங்கு நாங்கள்
ஒன்றென இருக்கிறோம்
அறிந்தவரும் அறியாதவரும்
இப்போது கைவிட்டுப்போன எங்களுக்கு சொந்தமான காட்சிகளில்
ஒய்வு நாற்காலிகளும்
மின்சார வெப்பமூட்டிகளும்
நேற்று வந்தவை
ஆயிரமாயிரம் முகாம் நெருப்புகள்
என் குருதியில் கலந்திருக்கின்றன
பழைய வாழ்கை முழுமையாய் கைவிட்டுப் போனதை
யாரும் என்னிடம் சொல்லாதீர்கள்
இந்த கணம் காலத்தின் மீச்சிறியத் துண்டு
என்னை வடித்தெடுத்த இனவாழ்வின் மீச்சிறியத் துண்டு.
5. ரத்தம் இத்தனை சிவப்பாய் இருந்ததில்லை -க்ராண்ட்பாதர் கூரி
ரத்தம் இத்தனை சிவப்பாய்
இருந்ததில்லை இருந்ததேயில்லை
ரத்தம் இத்தனை சிவப்பாய் இருந்ததில்லை
கவிஞனின் ரத்ததைப்போல்
கோக்காதா கவிஞனின் ரத்தத்தைப் போல்
குட்டையின் அருகே ரொம்பவும் செத்துப்போய்க் கிடந்தவன்
ரத்தம் இத்தனை
சிவப்பாய் இருந்ததில்லை
இத்தனை சிவப்பாய்
லத்திகளில் மின்னும்
சுவர்களிலும் பாதங்களிலும்
காப்பாளனின் தலையிலிருந்தும்
சிவப்புச் சொட்டுகளாக ரத்தம் சொட்டும்
ஃ ப்ரீ மேன்டில் சிறையிலும்
இத்தனை சிவப்பாய் இருந்ததில்லை
கவிஞனின் ரத்தம்
கோக்காதா கவிஞனின் ரத்தம்போல்
நீதிக்கான அவனது கூக்குரல் இதமாய் சிந்தியிருந்தது
நீதிக்கான அவனது கூக்குரல் இதமாய் சிந்தியிருந்தது
குறிப்புகள்:
கோக்காதா-தெற்கு ஆஸ்திரேலியாவின் பூர்வ குடி மக்கள்.
ஃப்ரீமேண்டில் சிறைச்சாலை-மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள சிறை 1855-ல்,கட்டப்பட்டது.
ஆசிரியர் குறிப்புகள்:
ஆசிரியர் குறிப்புகள்:
ஹைலஸ் நோயல் மோரிஸ்( 1934-1986)
Hyllus Noel Moris
எழுபதுகளில் செயல்பட்ட மிக முக்கியமான ஆஸ்திரேலிய பூர்வகுடிகளுக்கான செயல்பாட்டாளர்களில் ஒருவர், கவிஞர், கல்வியாளர், திரைக்கதையாளர். விக்டோரியாவில் பூர்வகுடிகளுக்கான வெரயா கல்லூரியை ஸ்தாபித்தவர். சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.
முட்ரூரூ நரோஜின் (கோலின் ஜான்சன்) {1938-2019}
Mudrooroo Narrogin (Colin Thomas Johnson)
தாய் தந்தையின்றி ஆதரவற்றோர் இல்லத்தில் கல்வி பயின்ற கோலின் தாமஸ் சிறு திருட்டுகளுக்காக ஃப்ரீமேண்டில் சிறையில் அடைக்கப்பட்டு அங்கிருந்து தன் எழுத்துப் பயணத்தைத் தொடங்கியவர். பின்னர் மெல்போர்ன் தெருக்களில் அலைந்து திரிந்து அபாரிஜின் உரிமைகளுக்காக எழுத்துப் போராட்டத்தைத் தொடர்ந்தார். நாவலாசிரியர், கவிஞர், கட்டுரையாளர். அநீதி எல்லா இடங்களிலும் நிறைந்திருப்பதைக் கண்டு; தொடர்ந்த தேடலில் பௌத்தத்தின் மனித நேயத்திற்காக பௌத்தத்தில் சரணடைந்தார். இந்தியாவில் பதினைந்து ஆண்டுகள் சுற்றித் திரிந்து புத்த பிக்குவாக மாறினார். தனது அபாரிஜின் அடையாளக் குழப்பங்களுக்காக பல்வேறு அவமானங்களைச் சந்தித்தவர். இவரது ஆக்கங்களில் சில.
Wild cat falling(1965) long live sandawara (1979) before the invasion:aboriginal life to 1788(1980){ இணையாசிரியர்} doctor wooreddy”s prescription for enduring the ending of the world (1983) the song circle of jacky:and selected poems(1988) master of the ghost dreaming(1991)the promised land(2000)
ஜிம் எவெரெட் {1942}
Puralia Meenamatta (Jim Everett)
கவிஞர், நாடகாசிரியர், சிறுகதை எழுத்தாளர், நடிகர் எனப் பன்முகத் தளங்களில் தொடர்ந்து இயங்கும் ஜிம் தாஸ்மேனியாவில் பிறந்தவர். மீன்பிடித் தொழிலாளியாக இருந்துகொண்டே கலைஞராகவும் செயல்பட்டுவந்தவர். வெள்ளை இனத்தவர் குறித்த விமர்சனங்கள் இவரது எழுத்துகளில் தீவிரமாக வெளிப்படும்.
இவரது முக்கிய நாடகம் We are survivors (1984) voices from the first nation (1997the spirit of kuti kina Tasmanian aboriginal poetry (1990) ) a writer’s dilemma(2014)
ஊட்ஜெரூ நூனுக்கல் (கேத் வாக்கர்) {1920-1993}
Oodgeroo Noonuccal (Kath Walker)
கேத் வாக்கர் பூர்வகுடி ஆஸ்திரேலியர்களுள் முதல் எழுத்தாளராக அறிமுகமானவர். கவிஞர், ஓவியர், எழுத்தாளர், செயல்பாட்டாளர் எனப் பன்முகம் கொண்ட கலைஞர். ஆஸ்திரேலியாவின் பெண்கள் பிரிவு ராணுவத்தில் பணிபுரிந்தவர். வெள்ளை ஆஸ்திரேலியக் கொள்கையை எதிர்த்த ஒரே கட்சியான ஆஸ்திரேலியக் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அபாரிஜின் பழங்குடியின உரிமைக்காகப் போராடிவந்த பல்வேறு அமைப்புகளின் பல்வேறு பொறுப்புகளில் தன்னை ஒப்புக்கொடுத்தவர்.
Municipal gum (1960)a song of hope (1960) WE ARE GOING (1964) the dawn is at hand(1966) my people(1970) stradbroke dreamtime (1972) father sky mother earth(1981) the rainbow serpent(1988) இவரது ஆக்கங்களில் சில.
க்ராண்ட்பாதர் கூரி (Grandfather Koori)
விரட்ஜூரி பழங்குடி இனத்தை சேர்ந்தவர்.தாவரவியலிலும் இயற்க்கை அறிவியலிலும் கல்வி பயின்று விட்டு எல்லாவற்றையும் விட்டொழித்து தனது சிவப்பு மணல் பரப்பு நிலத்தில் அடையாளமின்றி வாழ்ந்து வந்தவர்.inside black Australia: anthology of aboriginal poetry கவிதைத் தொகுதியில் இவரது கவிதைகளான song in the symbol:look!look!/massacre sandhil: the rain the rain the rain /never blood so red / காணக்கிடைக்கின்றன.எனினும் இவர் குறித்த மேலதிகக் குறிப்புகள் தென்படவில்லை.
{மேற்கண்ட கவிதைகள் Inside Black Australia: Anthology of Aboriginal Poetry தொகுப்பிலிருந்தும் இணையத்திலிருந்தும் நன்றியோடு பெயர்க்கப்பட்டது}
-சிவசங்கர்.எஸ்.ஜே
மிகவும் அருமையான கவிதை மொழிபெயர்ப்பு உங்கள் தேடல் அபாரமானது வாழ்த்துகள்