ஒளிர மறுத்த நிலவொளி
==========================
அந்த மாளிகையின் தோட்டத்தை
மூடிமறைக்கும் புறவாயில் கதவு
தூண்களில் அலங்காரமாய்
பொருத்தப்பட்ட கண்ணாடிக் குடுவை
முப்பரிமாண பௌர்ணமி நிலவு
இரண்டு முழுநிலவை
ஒரே சமயத்தில் பார்த்த பரவசம்
சற்றே நீடிக்கும் முன் தெரிந்தது
அதன் மங்கிய வெளிச்சமும்
அதனுள் மிதக்கும் ஒளி
விளக்கிடம் இரவல் பெற்றது
பூவேலைபாடுகள் செய்த
வெந்நிற கண்ணாடி குடுவைக்குள்
மிந்தது ஒளிரும் சிறு விளக்கு
பனிக்குடத்தில் மிதக்கும் சிசுவை போலிருந்தது
என்னுள் ஒளிரும் விளக்காக இருந்தால்
எவ்வளவு அதை ஒளிர்வித்திருப்பேன்
இன்னும் எத்தனை வெளிச்சபுள்ளிகளை இணைத்திருப்பேன்
எவ்வளவு பிரகாசம் பிரகாசம் என்று பார்த்து மகிழ்ந்திருப்பேன்
என் சிறுவிளக்கே
ஏன் என்னுள் ஒளிர மறுத்தாய்?
வீட்டின் நிர்வாணம்
=====================
மூடாமல் நின்றிருந்தது அவ்வீடு
உள்ளே ஒரு ஓவியமும்.
அவ்வீட்டின் மனிதர்கள் ஆடையால் போர்த்தியிருந்தனர்
எல்லா கலையும் திறந்தே கிடந்தது.
இதுவரை இவ்வளவு திறந்தமேனியை கண்டிராதவள்
திடுக்கிட்டாள் கண்களும் கூசின
கட்புலனாக ஆடையொன்றை
அதன் மேல்
போர்த்திப் போர்த்தி தோற்றுப்போனாள்.
அவர்களின் கவிதைகளும் திறந்தே கிடந்தன
அவ்வீட்டில் குழந்தைகளுக்கு
வண்ண ஓவியத்தின் ஆடையின்மையும் வெவ்வேறு கருமையும்
சாதாரணமாய் இருந்தது
பின்னர் தான் புரிந்தது
அதுவே கலை கலைந்த பரிபூரணம்
நிஜத்தின் பிரதிபலிப்பு
பிறந்தமேனியின் பாசாங்கின்மை.
சிறிது நேரம் செல்ல செல்ல
நடுக்கம் நீங்கி
பேச்சு சாதாரணமாகியது
அங்கே நிலவிய அன்பும்
எந்த ஆடையும் அணியவில்லை.
இடைவெளி
===========
காலி நாற்காலியில் ஒன்றை ஒன்று பார்த்தபடி
இடையில் இருந்த டீபாயில்
எதிரெதிரே வீற்றிருந்தன
இரு காலிக் காப்பிக் கோப்பைகள்
இரண்டுக்கும் நடுவே முத்தத்துக்கும் உதட்டுக்கும் இடைப்பட்ட தூரம்
படுக்கையில் புரண்டு படுத்தவளுடன்
உறங்கிக் கொண்டிருந்த கவிதைகளிலிருந்து எழும் நறுமணத்துக்கும்
விழித்தெழுந்தவள் நுகரும் புத்தக மணத்துக்கும்
புலர்ச்சிக்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட காலம்
சுழற்சிக்கும் மகிழ்ச்சிக்கும் இடைப்பட்ட
தூரத்தில் காலத்தில் சுழலும் மின்விசிறிகளுக்கு
மட்டுமே தெரிந்த ரகசியமது.
***