ஜன்னல் அருகே நின்றுக்கொண்டிருந்ததில் கால் கடுக்க துவங்கியிருந்தது. கதவை ஒருமுறை திறந்து வெளியே பார்த்தால் நிம்மதி. கைகளை ஜன்னல் கண்ணாடியின் மீது வைத்து அழுத்தினேன். விரல்களுக்கிடையில் இருந்து உடல் இல்லாத உருவத்தின் பாதங்கள் மட்டும் கைகள் மேல் ஏறுவது போல் இருந்தது. கைகளை திருப்பிவிட்டு கண்ணாடியின் முன் நின்று பார்த்தபோது முதுகுத்தண்டு வழியாக நான்கு கால்களில் நடந்து தலையில் ஏறி நின்றது அந்த உருவம். உடலை சிலிர்த்து உதறிவிட்டு பார்த்தபோது எங்கே போனது அது? சுற்றிமுற்றி பார்த்தேன். ஜன்னலை திறக்கும் வரை இதையெல்லாம் அனுபவித்து தான் ஆக வேண்டும்.

பொறுமை இழந்து ஒருவழியாக கதவைத் திறந்தேன். ஜன்னலின் வெளியே முட்டி மோதி நின்றிருந்த குளிர்மை உள்ளே புகுந்தது. எதிர்வீட்டு குடியிருப்புகளில் குறைந்த வெளிச்சம் உள்ள விளக்குகள் எரியவிட தொடங்கியிருந்தார்கள். இரவில் எழுப்பும் பூச்சிகளின் சப்தம். அது ஒரு சீரான மெல்லிசை. கதவை சாத்திக்கொண்டபோது, கொஞ்சம் தூரத்தில் இருந்து கேட்பது போலிருந்தது. அடுத்தது என்ன நடக்கும் என்று தான் தெரியுமே! உடனே காய்த்து வைத்திருந்த பசைப் பானையை வீட்டின் நடுவில் நகர்த்திக் கொண்டு வந்தேன். கிளறின போது, பரவாயில்லை நேற்றைக்குவிட இன்று நல்ல பதம். வீட்டில் இருந்த பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து அதனதன் இடத்தில் ஒட்டினேன். இன்று உபயோகிக்காத பொருளிற்கு அந்த சிரமம் இல்லை. சிலது பசையின் சொற்படி கேட்பதில்லை. அவற்றை கயிற்றினால் இடைவெளியின்றி இறுக்கிக் கட்டினேன். கூரையில் கட்டி கீழே தொங்கியாவறு விழுந்துக் கிடக்கும் வடத்தை என்றும் அவிழ்ப்பதில்லை.

எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த நேரம் வந்துவிட்டது. இதற்கு இறந்த காலம் இல்லை. எதிர்காலம் குறித்து நேரத்தின் முடிவில் உணர்ந்தால் உண்டு. கண்களை மூடியபோது இரவு பூச்சிகளின் ஒலி முழுவதும் நின்று ஆழ்ந்த நிசப்தம். அறையில் பரவியிருந்த காற்று எங்கே போனது? மூச்சு முட்டியது. கண்களைத் திறந்தால் உடல் லேசாக மேலும் கீழுமாக அசையத் தொடங்கியது. மாலையில் இருந்து எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த கணம் மிக அருகில். இந்த காலத்திற்கு மட்டும் அத்தனை சாகசத்தன்மை. நான் அதைக் கட்டியணைத்து ஆரத்தழுவும் அளவிற்கு இடைவெளியின்றி. லேசான அசைவில் இருந்த என் உடல் குறிப்பிட்ட கால இடைவெளியில் கொஞ்சம் உயர்வாக தூக்கித் தள்ளியதில் நீர்த்துளிகள் தெறித்தன. நீரிரைச்சல் பிருமாண்டமாய் காதில் ஒலித்தது.

மெல்ல நகர்ந்து அந்த கயிறைப் பிடித்து எழும்ப எத்தனித்தபோது, ராட்சஷ அலையொன்று மேலெழும்பி சுழற்றியது. தூக்கி எறியப்பட்டாலும் கயிற்றின் பிடியை விடாமல், மூலையில் இருந்து நகர்ந்து ஜன்னலை நோக்கி ஊர்ந்து வந்தேன். வீட்டின் ஒரு மூலை உயர மற்றொன்று தாழ்ந்தது. மீண்டும் சற்றே ஆக்ரோஷம் குறைந்த பேரலை. இந்தமுறை வருவதற்கு முன்னரே அலையின் ஒலியைக் கொண்டு உணர்ந்ததால், உடலை அரையடி கூட நகராமல் பார்த்துக்கொண்டேன். எதிர்கொள்ளும்முன் இருந்த பதற்றம் தணியத் தொடங்கியிருந்தது. ஒருவழியாக கையிற்றைக் கட்டியாகப் பிடித்து மெல்ல மேலெழும்பினேன். சுற்றி பொருட்களை கவனித்தபோது சில உருண்டு கீழே விழுந்துவிட்டது. பசையின் பக்குவத்தில் பிசகு அல்ல. நேரம் தவறியது தான். பசை சரியாக காயவில்லை. பதற்றம் எனக்கான பணிகளை தள்ளிப் போடுகிறது. இப்போது அப்படியில்லை. ஒரு நொடியைக் கூட வீணடிக்க மனம் ஒப்பவில்லை. இன்னும் சற்று நேரத்தில் மனம் பேதலிக்க தொடங்கிவிடும். அதற்கு முன்பாக ஜன்னலை திறந்தாக வேண்டும்.

காற்றின் வேகம் சீரில்லை. இரண்டு மூன்று தடவை கயிற்றில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு அங்குமிங்கும் சுற்றினேன். எதிரில் நிற்பது ஆக்ரோஷம் அடைவதற்கு ஏற்ப மனம் சாகசம் அடைகிறது. ஜன்னலை திறந்தபோது ஒரு பேரலையின் நீர்த்தொகுப்பு அதிவேகத்தில் மோதியது. வீட்டின் சுழற்சி-தலை சுற்றல். உப்புநீரை கொப்பளித்துவிட்டு வெளியே எட்டிப்பார்த்தேன். பேரமைதியின் உச்சநிலையை அந்த நொடி வழங்கியது. நடுக்கடலில் மிதந்துக் கொண்டிருந்த வீட்டில் தன்னந்தனியனாக இருப்பது பேரனுபவம். இந்த நேரத்தில் முதுகுத் தண்டில் ஊர்ந்து தலைக்கு வந்த உருவம் துணைக்கு வந்தால், நான் அடைந்துக் கொண்டிருக்கும் பரவச நிலையை அதனிடம் உணரவைக்க முயல்வேன். தினமும் காணும் மூன்று நட்சத்திரங்கள் வானில் மின்னுகிறதா என அண்ணாந்துப் பார்த்தேன். கருமேகங்கள் மறைத்துக் கொண்டாலும் அது எந்த சூழ்நிலையிலும் தன் இருப்பிடத்தை விட்டு நகர்வதில்லை. ஆரம்பத்தில் இப்படியான காணாத நாட்களில் சொல்ல முடியாத சோகம் சூழும்.

தூரத்தில் எரிநட்சத்திரம் ஒன்று கடலில் விழுந்து தற்கொலை செய்தது. அதன் அழகியலினால், காற்றில் வேகத்தில் ஏற்பட்ட மாறுதலை உணர முடியவில்லை. தூக்கி எதிர்சுவரில் வீசப்பட்டேன். உருண்டு சென்றதில் வடம் என்னை சுற்றிக்கொண்டது. நான்கைந்து மீன்கள் நீரில் படுத்துக் கொண்டிருந்த கயிற்றில் துள்ளிக்குதித்து விளையாடின. அடுத்த பேரலைக்கு முன்பு ஒருவழியாக கயிற்றை பாதி அவிழ்த்து ஜன்னலோடு உடலைக் கட்டிக்கொண்டேன். நேரம் செல்ல செல்ல நீரின் கொந்தளிப்பு அதன் எல்லையைக் கடந்தது. அலையின் வேகத்தினால் உடல் முழுவதுமாக நனைந்த போதிலும், இடையில் முட்டி மோதிய வேகத்தில் நீர்த்துளி ஒன்று முகத்தில் பட்டதில் சமநிலையை இழக்க துவங்கினேன். பதற்றம் அதிகரித்தது. ஜெர்மானிய தேசத்து கடற்கன்னி நட்டாஷாவின் நினைவு வந்தது. கைகளால் தலையை தடவினேன். அவள் இப்போது பெயரை மாற்றிவிட்டாள். அவளுடைய கண்களும், மீன்களுடைய கண்களும் எனக்கு வேறொன்றாக தெரிந்ததில்லை. உயரமான கால்கள். ஆனால் கால்களை கண்டதில்லை. துடுப்பும், வாலும் தான் கிளர்ச்சியூட்டின. இது அதற்கான நேரமில்லை. இதைவிட சிறந்த நேரம் எதுவுமில்லை. உள்ளுக்குள் கருத்து மோதல்கள். நீர்த்துளி வந்த இடத்தை கூர்மையாக பார்த்தேன். நட்டாஷா ஆழத்தில் எனக்காக காத்துக் கொண்டிருப்பாள். அங்கே எந்த சலனமும் இருக்காது. சீரான காற்றினால் இயல்பான சூழலாக மாறியதை உணர முடியவில்லை. இப்போவே கடலில் குதித்துச்சென்று நட்டாஷாவைக் கண்டுத் திரும்பவேண்டும்.

மென்மையான தென்றலும், இசையாக ஒலிக்கத் தொடங்கிய அலையில் சப்தமும் இச்சையை, அதன் வீரியத்தை இழந்துக் கொண்டிருந்ததை உணர்ந்தேன். அப்போது தான், தொலைவில் தகரம் மினுங்க தொடங்கியிருந்தது தெரிந்தது. வழமையாக வரும் நேரம் தான். அது ஒரு நகரத்து தெருமுனையில் இருக்கும் குப்பைத்தொட்டி. அதன் கழுத்தளவிற்கு மனிதர்களால் நிரப்பப்பட்ட குப்பைகள், குப்பைகளின் மேல் அழுக்கு மனிதர் சீழ்பிடித்த முகம், அழுக்கேறிய தலை, கத்தரிக்கோலை காணாத முடி, நரம்புகள் பிசகி வாய் அசைவு இருந்துக்கொண்டே இருக்கும். துவக்கத்தில் குப்பைத்தொட்டி மட்டும் வெறும் குப்பைகளோடு வரும். நானும் ஏன் இந்த குப்பைத்தொட்டி இந்நேரம் வருகிறது? வியப்பு அடங்குவதற்கு முன்பு, ஒருநாள் குப்பைகளின் நடுவே இரண்டு கைகளும், இடுப்பிற்கு கீழும் வெட்டப்பட்ட வெறும் தலையும், மனித உடலும் உள்ள உருவம் ஒன்றைக் கண்டேன். பார்ப்பதற்கு அச்சு அசலான மனிதன் போன்ற தோற்றம். அதற்கு அடுத்த நாளில் இருந்து தான் அழுக்கு மனிதரின் வருகை அறிமுகம். குப்பைத்தொட்டியில் இருக்கும் வீண், கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவார். அந்த குப்பைத் தொட்டியில் இருக்கும் குப்பைகள் எதுவுமே கடலில் விழுவதில்லை. ஏதோ ஒரு தாய் குப்பைதொட்டியில் போட்டு சென்ற கருவாக இருப்பாரா? தன் இடத்தை மாற்றக் கூடாது என்று நினைக்கும் மனிதனா?

 

தனியாக வந்துக்கொண்டிருந்தவர், அழகான நாய் ஒன்றை ஒருநாள் அழைத்து வந்தார். அதைப் பார்க்கும்போது கண்டிப்பாக ஒரு மேட்டுக்குடி வீட்டில் வளர்க்கப்பட்ட நாயாகத் தான் இருக்கும். மிகவும் கச்சிதமான தோற்றத்துடன், துருதுருவென குப்பைத்தொட்டியை சுற்றி நடந்துக்கொண்டே இருக்கும். நாட்கள் நகர நடப்பது குறைந்து எந்நேரமும் அழுக்கு மனிதரின் அண்டையில் படுத்தேக் கிடக்கும். அவர் குப்பைத்தொட்டில் தெரக்கி கண்டுபிடிக்கும் உணவை அந்த வாயில்லா ஜீவனுக்கு ஊட்டினார். அவர் உண்ணும் உணவை குறைத்து, கிடைப்பது அனைத்தையும் நாயிற்கான உணவாக்கினார். அழுக்கு மனிதர் குளிப்பதில்லை என்பதால் தன் உடலிலும் நீர் விழுவதற்கு நாய் விரும்புவதில்லை. நாளடைவில் நாயும் அழுக்காகி, உடல் முழுவதும் சதை தொங்கிப் பெருத்துப்போனது.

இருவருக்கும் இடையில் இருந்தது விசித்திரமான உறவு தான்.  நாள் முழுவதும் அருகாமையில் இருந்தாலும் ஒருவர் மற்றொருவர் மீது எந்த உரிமையும் எடுத்துக் கொள்வதில்லை. நாயை கட்டுப்படுத்த முனையும் செயலை ஒருநாளும் கண்டதில்லை. தன்னைவிட ஒரு அறிவு குறைவு போன்ற பாவனைகள் இல்லை. ஒவ்வொரு நாளும் குப்பைத் தொட்டி வீட்டைக் கடந்து செல்லும்போது நரகமே ஊர்ந்து செல்வது போல் தோன்றும்.

கடல் கொந்தளிப்பாக இருக்கும் காலத்தில் குப்பைத்தொட்டி வருவதில்லை. இருவரின் நிதானம் குப்பைத்தொட்டி இருக்கும் இடத்தில் கூடுதல் வெளிச்சத்தை வழங்கியிருந்தது. அவர்கள் மேல் எனக்கு ஆர்வம் ஏற்பட அந்த வெளிச்சமும் காரணம். மனிதர்கள் போட்ட குப்பைகளின் மேல் வாழ்க்கை நகர்ந்துக் கொண்டிருந்தாலும் கடலின் உப்புக்காற்று நோய் எதிர்ப்புசக்தியை அளிப்பதால் எந்த நோய்களும் அண்டுவதில்லை. சமீப நாட்களாய் அந்த நாய்க்கு பாதி கிழிந்து தொங்கிய அழுக்கான முகக்கவசத்தை அதன் காதில் சொருகிக்கொண்டு அழைத்து வருகிறார். அதன் கண்களை பார்க்கும்போது தனக்கும் அணிய விருப்பமில்லை என்று சொல்வதாக தோன்றும்.

படகு ஒன்று குப்பைத்தொட்டிக்கு வெகுதொலைவில் அதிவிரைவாக வருவது தெரிந்தது. படகை சுற்றி நாற்புறமும் கொளுந்து விட்டெரியும் நெருப்பு ஜாலைகள். திமிங்கல வேட்டைக்கு வந்தவர்கள் போல் படாடோபமான தோற்றம். குப்பைத்தொட்டியிற்கு அருகே நெருங்கியவர்கள் குரலை நீளத்திற்கு உயர்த்தி “இந்த பகுதியில் எண்ணெயினால் வறுக்கப்பட்ட மீன் எங்கு கிடைக்கும்? உயிரோடு திரியும் மீன்கள் எமக்கு தேவையில்லை, இது கடல் ராஜாவின் உத்தரவு, எங்கள் நேரத்தை வீணடிக்காமல் உடனே கூறுங்கள்” என்று சிம்ம கர்ஜனை. ஒருவன் நுண்ணோக்கியினைக் கொண்டு வட்டமாக பார்வையை விரித்தான். பயனில்லை, ஆகட்டும் என இரண்டு பேர் கடலில் குதித்து வறுத்த மீன்களை தேடினர். அவர்கள் இந்த இடத்தை நெருங்கி வருவதற்கு முன்னரே விளக்கை அணைத்திருந்தேன். என் அறையில் துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்த மீன்கள் காலை உரசியது. பிடித்துப்போகவே மீண்டும் மீண்டும். அவர்கள் கையில் நீளமான மரத்துப்பாக்கி வைத்திருந்தனர். ஒருவன் அருகிலிருந்த பாறை அருகே ஒட்டியிருந்த கடற்பாசியை கையில் எடுத்து தேடி வந்த மீன் என்று நம்பி ஏமாந்தான். இருவரும் வாடின முகத்தோடு படகு திரும்பினார்கள். “சுற்றி எரியும் நெருப்பு ஜாலைகள் அணைவதற்குள் நாம் மீனுடன் திரும்பியாக வேண்டும், அவ்வாறு நடக்கவில்லையெனில், ஒழுங்காக தயாரிக்கப்படாத அரைகுறை துப்பாக்கியின் குண்டு நம் மண்டையை துளைத்து வெளியேற முடியாமல் மூளைக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும். நெருப்பு அணையத் துவங்குகிறது.”

குப்பைத்தொட்டிக்குள் அழுக்கு மனிதருக்கும், நாய்க்கும் இமை அசையவில்லை. பிறையை மறைத்த மேகங்கள் விலகியபோது லேசான சாரல் மழை. அங்கிருந்த மக்காத குப்பைகளை நடுவில் குவியலாய் நிரப்பி, அணையாமல் பொசுங்கிக் கொண்டிருந்த பீடித் துண்டினால் கொளுத்தினார். காற்றில் மேற்குநோக்கி வீசிக்கொண்டிருந்த மழையில் நெருப்பு பிரகாசமாக எரிந்தது. படகின் நெருப்பு அணையாமல் இருக்க தென்னை நாரினால் உருவாக்கப்பட்ட சாக்கினால் இணைக்கப்பட்ட கூடாரத்தை உருவாக்கி இழுத்துக் கட்டிக் கொண்டிருந்தார்கள்.

கயிறை இறுக்கும்போது ஒருவன் வெறிபிடித்தது போல் கத்தி கூச்சலிட்டான். காற்று குறைந்தபோதும் அலையின் இரைச்சலோடு மழை பெய்வதால் அவர்கள் பேசுவது சரியாக காதில் விழவில்லை. அவர்களின் உடல்மொழியும், செய்கைகளையும் கொண்டு உணர்ந்தேன். “அந்த கிழட்டு கபோதியின் அருகில் இருக்கும் நாயின் வயிற்றை பார்த்தாயா? வீங்கிப் போயுள்ளது. நாம் தேடி வந்த மீன்களை அது தின்றுவிட்டது. நமக்கு தேவையான மீன் கிடைக்காமல் போனதற்கு இந்த அழுக்கு கிழவன் தான் காரணம்.” இப்போது என்ன செய்வது என்று மூவரும் குழம்பி போய் நின்றனர். அப்போது மற்றொருவன் “நமக்கான நேரம் முடியப் போகிறது. நாயின் வயிற்றைப் பார்க்கும்போது, நாம் வருவதற்கு சற்று முன் தான் தின்றிருக்க வேண்டும், நமக்கு இருக்கும் கடைசி வழி, நாயின் வயிற்றைக் கிழித்து மீனை எடுத்து செல்வது தான்” மூன்று பேரும் தலையை உதறினர்.

“முதலில் யார் செல்வது…?” என கேட்டுக்கொண்டு குப்பைத்தொட்டியை பார்த்தான் ஒருவன். உடனே மற்ற இருவரும் அவனை பிடித்து கடலில் தள்ளினர். நீந்திச்சென்று குப்பைத்தொட்டியை நெருங்கியபோது நாவு இழுத்துக்கொண்டு சத்தம் உடலுக்குள் தொண்டை வழியாக வயிறுக்கு இறங்கத் தொடங்கியது. கைகால்கள் சுழன்றதில் சுற்றியிருந்த மீன்கள் வேறு திசைக்கு நகர்ந்தன. படகில் நின்று கண்டவர்களுக்கு எதுவும் புரியவில்லை. ஒருவன் வேகமாக கிளம்ப தயாரானான். நிலைமையை உணர்ந்த மற்றொருவன் தடுத்தான். “அந்த கிழவனை சாதரணமாக எடை போட்டுவிட்டோம். அவன் நாம் நினைத்ததைவிட பயங்கரமான சூனியக்காரன். நம்மால் அவனை நெருங்க முடியாது.” நெருப்பின் வெளிச்சத்தில், அதன் சூட்டில் அழுக்கு உருகி தொப்பையில் வழிந்தது. தாடியின் முனையிலும் நெருப்பு. நாயின் கருவிழிகளிலும் தான்.

அரைகுறை துப்பாக்கியை எடுத்து தோட்டாக்களை நிரப்பினார்கள். மழையில் எரியும் நெருப்பைக்கண்டு கைவிரல்களில் ஆட்டம். முதல் குறியை நாயின் நெற்றிக்கு வைத்தான். “அதன் கண்களுக்கு வை” என்றான் இன்னொருவன். “கிழவா நீ சில நிமிட வேதனையாவது அனுபவிக்க வேண்டும்.” முதல் குண்டுக்கு பொறுமை இல்லை. ஏதோ சத்தம் கேட்டது. சுற்றிமுற்றி திரும்பி பார்த்தார்கள். வானத்தை துளைத்தது போல் ஒரு சத்தம். மேலே பார்த்தார்கள். இருவரின் வலக்கண்களிலும் ஒருதுளி நீர். குப்பைத் தொட்டியின் உயரம் குறையத்தொடங்கியது. அடுத்த குறிகள் அனைத்தும் குப்பைத்தொட்டியை பதம் பார்த்தன.

“நம் உயிருக்கான நேரம் முடிவடைந்து விட்டது. அத்தனை பேருக்கு அவமானப்பட்டு தான் சாக வேண்டுமா?” நாற்புறமும் பார்த்து சிந்தித்தார்கள். எந்த யோசனையும் கைகூடவில்லை. “வலையை இடப்புறமாக வீசுங்கள்” என்ற அசரீரீ சத்தம் ஒலித்தது. அழுக்கு கிழவரைப் பார்த்தார்கள். அந்த திசையில் ஒலி வரவில்லை. எந்த திசையிலும் வரவில்லை. அந்த ஒலிக்கு திசைகள் இல்லை. அவர்கள் உள்ளில் கேட்ட ஒலி. இருவரும் உடனடியாக வலையை இடப்பக்கமாக வீசினார்கள். நீரில் பொரிந்துக் கொண்டிருந்த மீன்கள் மிதந்தன. முகத்திலிருந்து விழுந்துக் கொண்டிருந்த நீர் வெள்ளிக்கொலுசு போல் நீண்டு படகின் முனையில் சரணடைந்தது. வலையில் அகப்பட்ட அத்தனை மீனையும் அள்ளி படகில் போட்டனர். “இதை அரசனிடம் கொண்டுப்போய் கொடுத்தால் வெற்றிப்பெற்ற பெருமிதத்தோடு சாகலாம் இல்லையா?” உடனே படகைத் திருப்பிக்கொண்டு கிளம்பினார்கள். சாவதற்குமுன் ஒரு மீனை ருசி பார்ப்போம். ஆஹா அருமையான யோசனை.

தாடியில் எரிந்து கொண்டிருந்த நெருப்பு நீரில் பட்டு அணைந்தது. கடலின் மேல் இரு தலைகள் மட்டும் எந்த அசைவும் இல்லாமல். கடைசியாக இருவரின் உடல்களும் முழுவதும் மறைந்து போனது.

சிறிதுநேரத்தில் இருள் சூழத் தொடங்கியிருந்தது. வீட்டின் அசைவிலும் மாற்றம். இதுவரை ஓயாமல் கேட்டுக்கொண்டிருந்த அலையின் இரைச்சல் எங்கே போனது. இருட்டில் எதுவும் தெரியவில்லை.

காலம் உறைந்துப் போயிருந்தது. எதிர்காலத்தின் மீது நம்பிக்கை இழக்க தொடங்கினேன். குப்பைத்தொட்டி மூழ்கிய அதே இடத்தில் மீண்டும் ஒரு சலசலப்பு. காற்றின் வேகம் பலமடங்கு அதிகரித்திருந்தது. நீரின் சலனம் இயல்பாக. நீரில் இருந்து ஏதோ ஒன்று மேலேழும்பப் போவதாக உணர்ந்தேன். அழுக்கு என்ற ஒன்று இந்த உலகில் இருக்கும் வரைக்கும் மனிதனுக்கு சாவில்லை. குப்பைத் தொட்டி மூழ்கிப் போனதாக என் கண்ணிற்கு தெரிந்தது வெறும் பிரம்மை. நாயின் கதை அவ்வளவு தான். மரணத்தை வெல்லும் கலை இன்னும் அதற்கு கைக்கூடவில்லை. நினைத்தது போலவே நீரில் ஒன்று மிதக்க தொடங்கியிருந்தது. அதே வெளிச்சம் மீண்டும். அவரே தான். ஒரே ஒரு வித்தியாசம் இந்த முறை கீழிருந்து மேல். இல்லை இது அந்த தகரம் இல்லை. துரும்பரித்துக் காணப்பட்டாலும் இடையில் மினுங்கும் அந்த குப்பைத்தொட்டி இல்லை. என் கண்ணெதிரே மிதந்துக் கொண்டிருப்பது என்ன? அது ஒரு மரம்.

மிகவும் நேர்த்தியாக கலா ரசனையுடன் மரத்தினால் செய்யப்பட்ட சவப்பட்டி அது. நான் நினைத்தது அனைத்தும் பொய்த்து போனது. அழுக்கு மனிதனுக்கு இன்னும் அந்த கலை கைக்கூடவில்லை. அது மெல்ல என் வீட்டைக் கடப்பதற்காக நகர்ந்து வந்தது. வெளிச்சமும் அதனோடு இணைந்து. இமையை மூடித் திறப்பதற்கு மறந்திருந்தேன். மூடியபோது லேசாக வலி. திறந்தபோது அது திறந்திருந்தது. சவப்பெட்டியினுள் ஒரு அழகான ஆட்டுக்குட்டி. அதன் தோளில் செந்நிற துண்டு.

***

-ஐசக் பேசில் எமரால்ட்

Please follow and like us:

1 thought on “இரவானால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *