வடச் சென்னை நகரத்தின் சேரிகளில் அல்லது புறநகர் பகுதிகளில் அண்ணாடங்காச்சிகளாக வாழ்ந்திருக்கக் கூடிய வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய விளிம்பு நிலை மக்கள் பற்றியதான நாவல்தான் லட்சுமி சரவணக்குமாரின் ‘உப்பு நாய்கள்’. இந்த நாவலை வாசித்துக் கொண்டிருக்கையில் ஜி.நாகராஜனின் ‘குறத்தி முடுக்கு’, ‘நாளை மற்றொரு நாளே’ என்ற இரண்டு நாவல்களும் ஞாபகத்தில் அசைபோட்டதோடு அந்த இரண்டு நாவல்களின் புனைவு தன்மையின் யதார்த்தமும் அது சொல்லவந்த கரு, பாத்திரங்களின் நியாயப்பாடும் இந்த புனைவை வாசிக்கும் போது இன்னும் பன்மடங்காகி அதிகரித்து போனதுதான் மிச்சம்.

பண்பாடு அல்லது இனம், மொழி, சமயம், பிரதேசம் என்ற அடையாளங்களை முன்னிறுத்தி ஒரு குறித்த மக்கள், பிரிவினர் தொடர்பாக முன்வைக்கப்படும் இலக்கியங்களின் கருவும் அது தாங்கி நிற்கும் உண்மைத்தன்மையும் அது தன்னை முறைப்படுத்திக்கொண்ட விடயமும் அந்த மக்கள் குறித்தான கள ஆய்விலும் அங்கிருந்து பெறப்பட்ட நியாயமானதும் யதார்த்தமிக்கதுமான தேடல் தொகுப்பிலே தங்கியிருக்கிறது. வாசகனுக்கு தான் வாசிக்க இருக்கும் குறித்த மக்கள் பற்றியதான அல்லது பண்பாடு பற்றியதான நியாயமான பிரதிவிம்பத்தை அல்லது அந்த மக்களின், பண்பாட்டையொத்த நிலைப்பின் நகலை உண்டுபண்ணிவிட வேண்டும். அதுதான் வாசிப்பில் மட்டுமே ஒரு சமூகத்துடன் பண்பாட்டு அடுக்குகளுடன் தொடர்பு கொள்ள முனையும் வாசகன் ஒருவனின் உச்சபட்ச எதிர்ப்பார்ப்பாக இருக்கக்கூடும்.

உப்பு நாய்களை வாசிக்க முற்பட்டதில் இருந்து முடிவு வரை திட்டமிடப்பட்ட. முறையில் ஒரு மக்கள் பிரிவினரின் அடையாளங்களை அவர்களின் இருப்பினை தனக்கேற்ற அவசியத்தில் திசைப்படுத்தி இருக்கிறாரா அல்லது அவருக்கு அவசியமானதை அல்லது புனைவை கவர்ச்சியாக்க அந்த மக்கள் பற்றிய இருப்பின் ஈரத்தை சுரண்டியிருக்கிறாரா என்று எண்ணத் தோன்றுகிறது.

மாநகரங்களில் சேரிகள் அல்லது புறநகர் பகுதிகள் என்பது நகரத்தின் ஒதுக்கு புறங்களில் விற்பனைக்கு பொருத்தமில்லாத நிலங்கள், புகைவண்டி பாதை ஓரங்கள், கைவிடப்பட்ட புறம்போக்கு நிலங்கள், அரச காணிகளில் தகரங்கள், காட்போட் மட்டைகள், பலகை துண்டுகளை பயன்படுத்தி தற்காலிகமாக அமைத்துக்கொள்ளப்பட்ட நிரந்தர குடியிருப்புக்கள். இங்கு குடியிருக்கக்கூடிய மக்களின் ஒரு வகைப்படுத்தப்பட்ட இனம், சமயம், மொழி என்று வேறுபடுத்தி அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு இறுக்கமான, நெருக்கமான உறவு பிணைப்புக்களையும் தங்களுக்கான மொழி தனித்துவங்களையும் கொண்டவர்கள். இங்குள்ள பண்பாட்டு வெளி என்பதும் அவர்களின் அன்றாட வாழ்வியல் ஓட்டங்கள் என்பதும் தனித்தனியானதாக இருப்பதோடு அவை அனைத்தும் சமூக விரோதங்களை அன்றியும் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கான களமாகவும் வியாபார சந்தையாகவும், போதைவஸ்து கடத்தும் கும்பல்களின் மாப்(f)பியா கூட்டங்களை கொண்டமைந்தது மாத்திரமில்லை, என்பதன் யதார்த்தத்தை லட்சுமி சரவணகுமார் இந்த மக்கள் குறித்தான தேடலில் புரிந்துகொள்ள வில்லையா அல்லது, நாவலின் சுவாரஸ்யத்திற்கு தேவையான பாத்திரங்களை மட்டும் தெரிந்து மற்றைய கள யதார்த்தங்களை தவிர்த்து விட்டாரா என்ற மனநிலை நாவலை வாசிக்கும் யாவருக்கும் ஏற்பட்டு விடுவது இயல்பு. ‘உப்பு நாய்கள்’ வட சென்னை சேரிகளை தாண்டி ஒட்டு மொத்த சேரிகள் தொடர்பான தவறான பிரதிவிம்பத்தை ஏற்படுத்தி விடுகிறது. இது ஒரு எழுத்தாளனின் துரதிஸ்ட வசமான முன்மாதிரி.

காமத்தை அல்லது அதுசார்ந்த உடல் மொழியை வெளிக்காட்டும் தந்திரம் என்பது எந்த மக்கள் பிரிவை பற்றிய இலக்கியம் என்றாலும் அதற்கான ஒரு நுட்பமான முறைகளும் அது சார்ந்த நியாயங்களும் இருக்கின்றன. முழுக்க முழுக்க வேசிகள் வாழக்கூடிய குறத்தி முடுக்கிலும் நாகராஜன் அதைத்தான் செய்தார். லட்சுமி சரவணக்குமார் சொல்லியிருக்கக்கூடிய சேரிகள் அதில் உறவாடி திரியும் சம்பத், செல்வி, முத்து லட்சுமி போன்ற பாத்திரங்களில் நிறைந்து வழியும் கதைதான் நாளை மற்றொரு நாளே நாவல். இந்த இரண்டு நாவலும் காமத்தை முன்வைக்கக் காட்டிய யதார்த்தமும் கரிசனையும் லட்சுமி சரவணக்குமார் செய்யவில்லை. அவருக்கு தேவை எல்லாம் வெவ்வேறு பட்ட ஆண் பெண் அல்லது ஓரினத்தாரின் முயக்கம் மாத்திரமே. முயக்கம் முயக்கம் எங்கு பார்த்தாலும் முயக்கம் எல்லா பாத்திரங்களின் இருளிலும் முயக்கம் இருக்கிறது. ஒரு நீளப்படத்தின் சாயலில் அமைந்திருப்பதோடு இங்கு வரக்கூடிய பெரும்பாலான முயக்கங்களின் சித்திரங்கள் சுய மைத்துனம் கொள்வதற்கான இடங்கள்.

அண்மைய கால மொழிபெயர்ப்புகளாக இருக்கட்டும் அல்லது தமிழின் புனைவிலக்கியங்களாக இருக்கட்டும் வெளிப்படையாக காமம் பற்றியும் ஆண்பெண் அந்தரங்கம் பற்றியும் பேசும் படைப்புகள் அதிகமாக வெளிவந்து கொண்டிருப்பதோடு அப்படியான இலக்கியங்கள் தேடப்பட்டும் வாசிக்கப்பட்டும் விருதுகள் அளிக்கப்பட்டும் வரும் அதே சமயம் அது ஒரு கலாசாரமாக (Fashion) மாறிவருகிற பின்னணியில் லட்சுமி சரவணக்குமாரின் இப்படியான நாவல் வெளிவருவது இயல்பென்றானாலும் ஒரு சமூகம் பற்றியும் அவர்களின் வாழ்வியல் பற்றியும் எழுதும் போது தனித்த காமத்தையும் அதனால் உண்டாகும் வடுக்களை பற்றி மட்டுமே எழுதுவதுதான் வாசிக்க அருவருப்பையும் குறித்த மக்கள் குறித்தான தவறான புரிதலையும் உண்டு பண்ணிவிடுகிறது.

இந்த கதை போக்கில் இருக்கும் இன்னுமொரு யதார்த்த மீறல்தான் சினிமாதனமான இடைசெருகலும் கதை போக்கும். ஷிவானியின் முன்னாள் காதலன் கதை, ஆதம்மாவுக்கு சொல்லப்பட்டிருக்கும் கதையும் அவளோடு இடை நடுவிலே வானத்தில் இருந்து வந்து குதிக்கும் ஆர்த்தி போன்ற பாத்திரங்களுக்கான கதைகளையும் சொல்லலாம். அதோடு நாய் இறைச்சி விற்று பிழைக்கும் காட்சிகள் எல்லாம் கதைக்கான யதார்த்தத்தை எல்லை மீறுவதோடு அவை வாசிப்பு கவர்ச்சிக்கு மாத்திரமே சேர்க்கப்பட்டிருக்கிறது என்பது இயல்பாக புரிகிறது.

இந்த நாவலை இரண்டு வகையறாவாக வாசித்து புரிந்து கொள்ளும் முறைகள் உண்டு. அதிலொன்று இதோ மேலே நான் பார்த்த விதம். இன்னுமொரு முறை நான் மேற்சொன்ன வாசகப்படையினருக்காக உருவாக்கப்பட்ட வாசிப்பு மனநிலையில் இருந்து இந்த நாவலை வாசித்தால் தமிழில் வட சென்னை சேரிகளை பற்றி வெளிவந்திருக்கும் நாவல்களில் மிக சிறந்த நாவலொன்று என அடையாளப்படுத்தலாம். அப்படியான வாசகர்களுக்கு தேவையான அளவு முயக்கம் இருக்கிறது அந்த முயக்கங்களின் ஓய்விலும் மிகவும் சோகம் நிறைந்த வாழ்க்கை வடு வடிந்து கிடக்கிறது. மேலும் சினிமா தனமான கதை மற்றும் மாந்தர்கள். ஆச்சரியப்பட்டு வேடிக்கை பார்க்கக்கூடிய அளவிற்கு நாய் கறி வியாபாரமும் ஆட்கடத்தலும் இருக்கிறது அவைகள் போதுமானதாக இருக்கிறது சுவாரஸ்யத்தின் உச்சத்திற்கு. அவைகளை சரியாக புரிந்து வாசகர்களுக்கு வழங்கக்கூடிய சமைப்பு முறையும் லட்சுமி சரவணகுமாருக்கு தாராளமாக கைகூடி இருக்கிறது. மேலும் இந்த கதை கரு, பாத்திரங்கள் பற்றி எதுவும் பேசவில்லை. அதற்கான அவசியமும் இல்லை என்று தோன்றுகிறது.

***

 

 

-VM ரமேஷ்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *