-எம்.எம். ஜெயசீலன்
இலங்கையின் மலைப்பிராந்தியங்களைத் தமது பூர்வீக வாழ்விடமாகக் கொண்டுள்ள மலையகத் தமிழர்கள், அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய நிலவியற் சூழலில் வாழ்ந்துவருவதுடன் அவர்களது இருப்பிட அமைவு, தொழிற்களம் முதலானவையும் அனர்த்தங்களுக்கு வாய்ப்பானவையாக அமைந்துள்ளன. மண்சரிதல், மரங்கள் முறிந்து விழுதல், வெள்ளம் பெருகுதல், காட்டு விலங்குகள் தாக்குதல், குளவி கொட்டுதல், லயங்கள் தீப்பற்றுதல் முதலான அனர்த்தங்களால் அவர்கள் தொடர்ந்தும் பாதிப்புக்கு உள்ளாகிவருகின்றனர். ‘கூனி அடிச்ச மல / கோப்பிக் கன்னு போட்ட மல / அண்ணன தோத்த மல / அந்தா தெரியுதடி’ என்ற மலையக வாய்மொழிப்பாடல், அடர்ந்த காடுகளைப் பயிர்நிலங்களாக மாற்றும்போது ஏற்பட்ட அனர்த்தங்களால் நிகழ்ந்த இழப்புக்களின் கூட்டுச்சாட்சியமாக விளங்குகிறது.
தம் மூதாதையரின் உயிர் குடித்த மலைகளைத் தமது உழைப்பினால் செழுமைப்படுத்திய அம்மக்கள், இயற்கை அனர்த்தங்களாலும் மனித தவறுகளால் நிகழ்கின்ற அனர்த்தங்களாலும் ஏற்படுகின்ற இழப்புக்களுடன் இரு நூற்றாண்டு கால நெடிய வரலாற்றைக் கடந்துவந்துள்ளபோதும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய வாழ்வியற் சூழலை ஏற்படுத்தித் தருவதில் அரசும் தோட்ட நிர்வாகமும் பின்நிற்பதோடு அனர்த்தங்களிலிருந்து பாதுகாப்பதற்கான பொறிமுறைகளை முறையாக நடைமுறைப்படுத்துவதுமில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்குவதிலும் அவர்களது வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதிலும் மிகுந்த அலட்சியம் காட்டப்படுகிறது. 37 உயிர்களைக் காவுகொண்டு 80க்கும் மேற்பட்ட குடும்பங்களை நிர்க்கதிக்குள்ளாக்கிய கொஸ்லாந்தை மீரியபெத்த மண்சரிவு (2014) இடம்பெற்று ஒரு தசாப்தமாகப்போகின்ற நிலையில் அச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மீள்கட்டமைப்பு வசதிகள் இன்னும் முழுமையாகச் செய்துகொடுக்கப்படாமை அந்த அலட்சியத்துக்குச் சிறந்த சான்றாகும்.
மலையகத்தில் இடம்பெற்ற அனர்த்தங்கள் குறித்துச் சமூகவியல், அரசியல், சூழலியல் முதலான நோக்குமுறைகளில் ஆய்வுகள் வெளிவந்துள்ளதுடன் அனர்த்தங்களின் நினைவேந்தல் அறிக்கைகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. அவற்றுள் புள்ளிவிபரங்களும் பரிந்துரைகளும் இடம்பெறுகின்ற அளவுக்கு அனர்த்தங்களில் சிக்குண்ட மக்களின் காயப்பட்ட இதயங்களைக் காணமுடியவில்லை; அந்தத் துர்ப்பாக்கிய வாழ்வியலின் உள்ளடுக்களைத் திரட்டித் தரும் வகையில் தனித்துச் சுட்டிக்காட்டத்தக்க படைப்புகள் எவையும் இதுவரை வெளிவரவுமில்லை. மேலே குறிப்பிட்ட வாய்மொழிப் பாடலில் நிறைந்திருக்கும் கூட்டனுபவ சாரத்துக்கு இணையான வகையில், மலையகத்தில் இடம்பெறும் அனர்த்தங்களின் அழிவுகள், அவற்றுள் சிக்கித் தவித்தவர்களின் உடல் – உள நெருக்கடிகள், அனர்த்தங்கள் சிதைத்த வாழ்வு, அச்சிதைவிலிருந்து மீண்டெழ இடம்பெறும் போராட்டங்கள், அதன் சவால்கள் முதலானவை ஏட்டிலக்கியங்களில் இன்னும் அழுத்தமாக வெளிப்படுத்தப்படாத நிலையே தொடர்கிறது. அந்த இடைவெளியை நிரப்பும் முன்னோடி முயற்சியைச் சுஜித் ப்ரசங்க சிங்கள மொழியில் மேற்கொண்டுள்ளார். அவரது சாமிமலை (2021) என்ற நாவல், மலையகத்தில் நிகழ்ந்த நிலச்சரிவினை, அந்நிலச்சரிவு சரித்த வாழ்வினை மையக் கதையாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. அந்நாவலை எம்.ரிஷான் ஷெரீப் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
வளர்ந்துவரும் இளம் சிங்கள எழுத்தாளரான சுஜித் ப்ரசங்க, ஊடகத்துறையில் பட்டம் பெற்று அத்துறையில் பணிபுரிந்து வருவதால், தேர்ந்த ஓர் ஊடகவியலாளனுக்கு உரிய நுட்பமான பார்வையில் கதை நிகழ்வுகளை அணுகியுள்ளார். நாவலின் மையக்கரு தோன்றிய பின்புலத்தை, ‘ஆசிரியரின் சாட்சியம்’என்ற தலைப்பின்கீழ் சிங்கள மூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.அப்பகுதி தமிழ் மொழிபெயர்ப்பில் இடம்பெறவில்லை.அச்சாட்சியத்தில் “நான் தீபாவை, சரோத்தை, வஜ்ராவை என்றும் சந்தித்ததில்லை. குறைந்தது தேயிலைத் தோட்டத்தையாவது பார்த்ததில்லை” எனக் கூறியுள்ள அவர், அவசர தேவையொன்றுக்காக நாரஹென்பிட்ட தொழிலாளர் காரியாலயத்துக்குச் சென்றிருந்தபோது, அங்கு தமிழில் பாதி நிரப்பிய சிங்களப் படிவம் ஒன்றின் மிகுதியை நிரப்பித்தருமாறு கேட்ட, பன்னிரண்டு வயது மதிக்கத்தக்க சிறுமியுடன் தேயிலைத் தோட்டமொன்றிலிருந்து வந்திருந்த தமிழ்ப்பெண் கூறிய தகவல்களும் அப்பெண்ணின் துயரநிலையும் இந்நாவலுக்கு அடிப்படையாக அமைந்தமையைப் பதிவுசெய்துள்ளார். அப்பெண் கூறிய தகவல்களுள் “தங்கள் தோட்டத்தில் தொடர்ந்து பெரும் மழை பெய்து வருகிறது.எப்பொழுது மலை சரிந்து லயத்தை மூடுமென்று தெரியவில்லை” என்ற செய்தியும் அடங்கியிருந்துள்ளது.அச்செய்தியினால் உந்தப்பட்ட சுஜித், அவதானிப்பு மிகுந்த தன் தேடலால் தேயிலைத் தோட்ட வாழ்வின் அடியோட்டமான அம்சங்களையும் அனர்த்தங்கள் இடம்பெறுகின்றபோது முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளையும் அனர்த்தங்களுக்குப் பின்பான நிலைமைகளையும் மிகவும் நுண்ணிய தளத்தில் திரட்டியுள்ளதுடன் அவற்றைக் கலைத்துவம் குன்றாத வகையில் வெளிப்படுத்தியுள்ளார். அதனால் ஓர் ஊடகவியலாளனும் படைப்பாளியும் இணைந்த புள்ளியின் வெளிப்பாடாக இந்நாவலைக் கொள்ளலாம்.
மலையக மக்களின் சமூக வரலாற்றுச் சம்பவங்களையும் சமகால வாழ்வியற் கூறுகளையும் யதார்த்தம் சிதையாத வகையில் கதைக்குள் பிணைத்து வெளிப்படுத்தியிருக்கும் சுஜித், நிலச்சரிவில் தன் மொத்தக் குடும்பத்தையும் இழந்த தீபா என்ற சிறுமி, அந்த அனர்த்தம் நிர்ப்பந்தித்த வாழ்விலிருந்து மீள்வதற்கு எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும் சவால்களையும் ஆதாரமாகக் கொண்டு மலை மனிதர்மீது இறக்கிய துயரையும் அத்துயர் ஏற்படுத்தும் அலைக்கழிப்புக்களையும் விரிந்த தளத்தில் புனைவாக்கியுள்ளார்.
சாமிமலை டன்மோர் தோட்டத்தில் இடம்பெற்ற நிலச்சரிவினை மாதிரியாகக் கொண்டு, திடீரென ஏற்படும்நிலச்சரிவு சாதாரண மக்களின் இயல்பு வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது, அந்நிலச்சரிவினால் ஏற்படும் அழிவுகள், நிலச்சரிவுக்குப் பின்னர் அரசும் ஏனைய அமைப்புக்களும் சடுதியாக மேற்கொள்ளும் செயற்பாடுகள், தற்காலிக கூடார வாழ்வியலின் அவஸ்தை, தற்காலிக கூடாரமே நிரந்தர இருப்பிடமாகும் அவலம், முகாம் வாழ்வு ஏற்படுத்தும் பண்பாட்டுச் சிதைவுகள், வாழ்வியல் நெருக்கடிகள் முதலானவற்றைப் புனைவுப்பெறுமதியுடன் சமகால வாழ்வனுபவமாக வெளிப்படுத்தியுள்ள நாவலாசிரியர், அனர்த்தங்களில் சிக்குண்ட மக்களின் வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதற்குப் பதிலாக தற்காலிக நிவாரணங்கள் மட்டும் வழங்கப்படும் தூரநோக்கற்ற நடைமுறைகளையும் அந்நிவாரணங்களையும் சுரண்டிக்கொழுக்கும் குட்டி முதலாளித்துவத்தையும் அம்பலப்படுத்தியுள்ளதுடன் அனர்த்தம் இடம்பெற்று, குறுகிய காலத்திலேயே அனர்த்தத்துக்கு இலக்கான மக்கள் குறித்த அக்கறை மெல்ல மெல்லக் கரைந்துபோகின்ற யதார்த்தத்தையும் பிரசாரத்தொனியற்றுப் பதிவுசெய்துள்ளார்.
தொடர்ச்சியற்ற கதைசொல்லல் முறையில் நுணுக்கமான காட்சிச் சித்திரிப்புகள், அளவான உரையாடல்கள், நீதிமன்ற வாக்குமூலங்கள் முதலான உத்திகளின் மூலம் கச்சிதமாகக் கட்டப்பட்டுள்ள இந்நாவல், சாமிமலை டன்மோர் தோட்டம், கொழும்பு அறுபதாம் தோட்டம், றியாத் நகரம் ஆகிய மூன்று களங்களைப் பிரதான கதைநிகழிடங்களாகக் கொண்டுள்ளது. இம்மூன்று கதைக்களங்களும் தீபா என்ற பாத்திரத்தாலும் அப்பாத்திரம் எதிர்கொள்ளும் இழப்புக்களாலும் இணைக்கப்பட்டுள்ளன.
நாவலின் தொடக்கம் முதல் இட்டு நிரப்ப முடியாத இழப்புக்களை எதிர்கொண்டு ஈற்றில் அறுத்தெறிய முடியாத வடுக்களைச் சுமந்துநிற்கும் சிறுமியான தீபா, நிலம்சரித்த வாழ்வின் துயர சாட்சியமாக வார்க்கப்பட்டுள்ளாள். நிலச்சரிவில் தன் மொத்தக் குடும்பத்தையும் பலிகொடுத்தல், கொழும்பு அறுபதாம் தோட்டத்தில் வேலியே பயிரை மேய்ந்ததுபோல அடைக்களமளித்த சரோத்தினால் பலவந்தமாகச் சிதைக்கப்படுதல், அவனது வல்லுறவால் மூன்று முறை கருக்கலைப்பு செய்யப்பட்டு உருக்குலைதல், சரோத்திடமிருந்து தப்பி வெளிநாடு செல்ல முனைகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர், வயது குறைந்த அவளை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக அவளது உடலையும் முதலாகப் பெறுதல், சவுதி அரேபியாவில் அவள்மீது அளவற்ற காதலைப் பொழிந்து எண்ணற்ற வாக்குறுதிகளைத் தந்த ஃபராஸ், அவளிடம் சொல்லிக்கொள்ளாமலே பிரான்ஸ் செல்லல், மீண்டும் இலங்கைவந்தபோது அவளுக்குத் துணையாக இருந்த ராஜேஸ்வரி உயிருடன் இல்லாதிருத்தல் என நாவல் முழுதும் தீபாவின் வாழ்வு இழப்புக்களால் நிறைந்துள்ளது. பொறுப்பு நிறைந்த சிறுமியாக அறிமுகமாகும் அவள், நிலச்சரிவுக்குப் பின்பான அலைக்கழிப்பும் நெருக்கடிகளும் சூழ்ந்த வாழ்வினால் சிறுவயதிலேயே முதிர்ச்சியடைந்த பெண்ணாக மாறுகின்றமை நாவலில் இயல்பாக வெளிப்பட்டுள்ளது. அம்முதிர்ச்சி ஃபராசுக்கும் அவளுக்கும் இடையிலான உடையாடல்களில் நன்கு புலப்படுகின்றது.
தீடீரென ஏற்பட்ட அனர்த்தம் ஏற்படுத்திய அழிவும் அந்த அழிவிலிருந்து மீள்வதற்குச் சிறுமியொருத்தி – பெண்ணொருத்தி – முகங்கொள்ளும் போராட்டமும் நாவலில் மையக் கதையாக அமைந்தபோதும், ஆண்களும் ஆணாதிக்கச் சமூக அமைப்பும் பெண்கள்மீது நிகழ்த்திவரும் வன்மம்மிகு தாக்குதல்களும் சுரண்டல்களுமே நாவலின் உள்ளார்ந்த பொருண்மையாக விரிந்துள்ளன. தீபாவின் உடல், உள நெருக்கடிகளைக் கிஞ்சித்தும் கணக்கிலெடுக்காது அவளை உடலாலும் உணர்வாலும் காயப்படுத்தும் சரோத், காதர், ஃபராஸ் முதலானோர் தனிநபர்களாக இருந்தாலும் அவர்கள் யாவரும் ஆணாதிக்கச் சமூகத்தின் வாரிசுகளாகவே வார்க்கப்பட்டுள்ளனர். இயற்கை அனர்த்தத்தால் பாதிப்படைந்த தீபா மட்டுமல்ல அத்தகைய அனர்த்தத்தை எதிர்கொள்ளாத வஜ்ரா, லலி அக்கா என யாவரும் ஆணாதிக்கப் பிடியில் சிக்குண்டு அதிலிருந்து மீள முடியாமல் நொறுங்குண்டவர்களாகவே படைக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்தம் சிதைத்த வாழ்விலும் ஏனைய சராசரி வாழ்விலும் பெண்களின் இருப்பு பாரிய இடைவெளிகளைக் கொண்டதில்லை; இயற்கைச் சீற்றம் ஏற்படுத்தும் அழிவைவிட ஆணாதிக்கம் நிகழ்த்தும் அனர்த்தங்கள் பெண்களின் வாழ்வில் மிகுதியான அழிவினை ஏற்படுத்துகின்றன என்பதன் உயிர்ப்புள்ள சாட்சியங்களாகத் தீபா, வஜ்ரா, லலி அக்கா ஆகியோர் வார்க்கப்பட்டுள்ளனர். அவர்களது வாழ்க்கை நெருக்கடிகள், உணர்ச்சிக்கொதிப்புகள் முதலியவற்றைச் சமூக யதார்த்தத்துக்கு அந்நியப்படாதவகையில் செறிவாக எடுத்துரைத்துள்ள ஆசிரியர், அவற்றின் மூலம் சமகால வாழ்வுமீது கூர்மையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
நாவலில் பெண்களின் உள்ளுணர்வு, அவர்களின் அகவெழுச்சி முதலானவை பல சந்தர்ப்பங்களில் இயல்பாக வெளிப்பட்டுள்ளன. வஜ்ராவினதும் லலி அக்காவினதும் வாக்குமூலங்கள் பெண்களின் குரலிலேயே அவர்களது வாழ்க்கை யதார்த்தத்தை, அவர்களது உளப்போராட்டத்தை வெளிப்படுத்துவனவாக அமைந்துள்ளன. அதேவேளை, சன்னவினதும் வஜ்ராவினதும் வாக்குமூலங்கள் பின்தங்கிய கிராமங்களில் வாழ்கின்ற சராசரி சிங்களக் குடும்பங்களின் வாழ்வியலையும் அவர்களது குறைந்தபட்ச எதிர்பார்ப்புக்களையும் வெளிப்படுத்தியிருப்பதோடு லலி அக்காவின் வாக்குமூலத்தில் நகரங்களை ஒட்டிய பகுதிகளில் வாழும் அடிநிலை மக்களின் வாழ்க்கை நெருக்கடிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவை தேயிலைத் தோட்டங்கள், சிங்களக் கிராமங்கள், நகரங்களை ஒட்டிய சேரிப்பகுதிகள் என எங்கும் வாழ்கின்ற சாதாரண மக்களின் துயரங்கள், நெருக்கடிகள் முதலானவை ஒரே நேர்கோட்டில் சங்கமிக்கின்றன என்ற உண்மையை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளன. இந்த வாக்குமூலங்கள் நாவலின் ஒற்றைப்படையான நகர்வைத் தகர்த்து அதன் பொருண்மையை ஆழமான விசாரணைக்குட்படுத்தியுள்ளன.
பெண்கள்மீது ஆதிக்கத்தை, வன்மத்தைச் செலுத்தி அவர்களது மொத்தவாழ்வையும் சிதைக்கும் ஆணாதிக்கம், பெண்களாலேயே அழிவுகள் இடம்பெறுகின்றன, பெண்களே அழிவு சக்திகள் என்ற கருத்தாக்கத்தை ஆழமாக விதைக்க முயல்கிறது. அதனைப் “பொம்பளைங்க போற இடங்களெல்லாம் நாசம்தான்” என்ற சன்னவின் முணுமுணுப்பினூடாகப் பதிவுசெய்துள்ள ஆசிரியர், இக்கருத்தாக்கத்துக்கு மாறாக நடைமுறை வாழ்வு இயங்குவதையும் ஆண்களின் ஆதிக்கக் கரங்கள் எல்லாவித நாசங்களையும் கூச்சமின்றி நிகழ்த்துவதையும் அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளார்.
பெண்கள்மீதான பரிவை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தியுள்ள ஆசிரியர், அவர்களிடம் சக பெண்ணுக்கான ஈரம் எப்போதும் உள்ளோடி இருக்கிறது என்பதைப் பலதளங்களில் நிலைநிறுத்தியுள்ளார். போதைப் பொருள் விற்பனை, விபசாரம் முதலியவற்றைச் செய்பவளாகவும் அடாவடித்தனம் மிக்கவளாகவும் சித்திரிக்கப்பட்டுள்ள லலி அக்கா, தீபாவின் துயரைச் சகிக்க முடியாமல் அவளைச் சவுதி அரோபியாவுக்கு அனுப்பி வைத்தல், சவுதியில் தீபாவை அச்சுறுத்தலுக்குரியவளாகக் கருதி, அலட்சியமாக நடத்திய அபுசாலி வீட்டுப் பணிப்பெண்ணான ராக்கி, துயரச்சுமையுடன் தீபாவெளியேறும்போது கண்ணீர் சிந்துதல், சன்னவின் தாய், “பெண் பிள்ளைகளை ஒருபோதும் கைவிடக்கூடாது மகனே. அது மிகப்பெரிய பாவம்” எனச் சன்னவிடம் வேண்டுகோள் விடுத்தல் போன்றன இதற்குச் சான்றாக அமைகின்றன.
இயற்கை அனர்த்தம் அழித்த வாழ்விலிருந்து மீண்டு நல்வாழ்வை அமைத்துக்கொள்வதற்காக டன்மோர் தோட்டத்தைவிட்டு கொழும்பு சென்று, பின்னர் அங்கிருந்து சவுதி அரோபியா சென்ற தீபா, ஒவ்வொரு அசைவிலும் துயரங்களையும் இழப்புக்களையும் எதிர்கொண்டு, பக்குவம்நிறைந்த பெண்ணாக மீண்டும் டன்மோர் தோட்டத்துக்கு வந்துள்ளதுடன் நாவல் முடிவடைகிறது. கணப்பொழுதில் மலை விழுங்கிய தன் குடும்பத்தினரதும் அவர்களுடன் உயிர்நீத்த ஊராரினதும் புதைமேட்டைத் தரிசித்து, விளக்கொன்றை ஏற்ற வேண்டும் என்ற ஆத்மார்த்தமான எதிர்பார்ப்பு தீபாவின் உள்ளத்தை அரித்துக்கொண்டே இருந்திருக்கிறது என்பதை அறுபதாம் தோட்டத்தில் சரோத்திடமும் சவுதியில் ஃபராஸிடமும் அந்த விருப்பினை அவள் வெளிப்படுத்தியதிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. அவர்கள் இருவரும் நிறைவேற்றாத அந்த அடிமனவிருப்பை நிறைவேற்றிக்கொள்ள தீபாவே டன்மோர் தோட்டத்துக்கு வந்திருந்தாலும் அவள் மீண்டும் வந்தமைக்கு வேறுகாரணமும் உண்டு என்ற இடைவெளி நாவலில் இடம்பெற்றுள்ளது.
மலையகத் தேயிலைத் தோட்டங்களைவிட்டு வெளியேறிச் செல்பவர்களுள் ஒரு சாரார் தீபாவைப் போல மீண்டும் அத்தோட்டங்களுக்கே வந்துசேர்வதோடு இன்னுமொரு சாரார் தோட்டங்களுடனான தம் உறவை முறித்துக்கொண்டு அந்நியமாகிச் செல்கின்றனர். வெளியிடங்களில் தொடர்ந்து வாழ்வதற்கான பொருளாதார வளமற்றவர்களும் தமது இயல்பான வாழ்வைக் கொண்டுநடத்தக்கூடிய பாதுகாப்பான வாழ்வியற் சூழல் அமையாதவர்களும் மீளத் தோட்டங்களுக்கே திரும்புவதைப் பெரிதும் அவதானிக்க முடிகிறது. நாவலில் தீபாவுக்கான பொருளாதார வளம் வெளிநாட்டு உழைப்பிலிருந்து கிடைத்திருந்தாலும் தனித்துநிற்கும் அவளுக்கான பாதுகாப்பைத் தருவதாக வெளியிடங்கள் அமையவில்லை. அப்பாதுகாப்பின்மை அவளைச் சாமிமலையை நோக்கி உந்தித் தள்ளியுள்ளது எனலாம்.
லயங்களின் தன்மை, அவற்றின் போதாமை முதலியவற்றின் ஒரு பகுதியைத் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தியுள்ள சுஜித், லயத்தை – லய வாழ்வைச் சிறையாகக் காணும் குறுகிய தளத்திலிருந்து விடுபட்டு லயத்து – தோட்டத்து – வாழ்வில் மனிதர்களிடையே நிலவும் மேலான மனிதப் பண்புகளில், உன்னதமான வாழ்வியற் கூறுகளில் கவனத்தைக் குவித்துள்ளார். லயத்தில் உள்ள மனிதர்களிடையே நிலவுகின்ற பிணைப்பு, நம்பிக்கை, அவர்களிடையேயான அன்னியோன்னியமிக்க வாழ்வு முதலியவற்றுடன் லயமும் லயத்து மனிதர்களும் தரும் பாதுகாப்பு, அரவணைப்பு ஆகியவை நாவலில் யதார்த்தபூர்வமாக வெளிப்பட்டுள்ளன. ராஜேஸ்வரி தீபாவின் வீட்டிலுள்ளோர் பசியுடன் இருப்பதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாமல் தோசை கொண்டுவந்து கொடுத்தல், தீபா பாண் வாங்குவதற்காக மாலை நேரத்தில் கடைக்குச் சென்றபோது, வழியில் அவளைக் கண்ட முனியாண்டி, கடைக்காரன் நல்லவன் இல்லை எனக் கூறி, தலையில் கொழுந்து சாக்குடன் அவளுக்காகக் காவல் இருத்தல், எந்தவித உறவுமில்லாத ராஜேஸ்வரி தீபாவின் நலனில், பாதுகாப்பில் மிகுந்த அக்கறை காட்டுவதுடன் தனது வாழ்வையே அவளுக்காக அர்ப்பணித்தல் முதலானவை லய – தோட்டத்து – வாழ்வில் நிறைந்திருக்கும் பிணைப்பையும் பாதுகாப்பையும் வெளிப்படுத்திநிற்கின்றன. அதேவேளை, மண்சரிவுக்குப் பின்னரான முகாம் வாழ்வில் அங்கு இருக்கும் இராணுவச் சிப்பாய் தீபாவிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்தல், பாதுகாப்பு தருவதாகக் கொழும்புக்கு அழைத்துச்சென்ற சரோத்தே தீபாவை உருக்குலைத்தல், தீபா வெளிநாட்டுக்குச் செல்ல முனைகையில் வெளிநாட்டுவேலைவாய்ப்பு முகவரான காதர் அவளிடம் முறையற்று நடந்துகொள்ளல் முதலானவை லயத்துக்கு வெளியேயான வாழ்வில் நிறைந்திருக்கும் பாதுகாப்பின்மையை வெளிப்படுத்திநிற்கின்றன. இந்த எதிர்முரணான வெளிப்பாடு,லயத்து – தோட்டத்து – வாழ்வில் பெண்களுக்கு நிறைந்திருக்கும் பாதுகாப்பும் சுதந்திரமும் லயத்துக்கு – தோட்டத்துக்கு – வெளியே கிடைப்பதில்லை என்பதை அனுபவக் காட்சியாகப் பதிவுசெய்துள்ளது.
இராணுவத்தின் செயற்பாடுகளைத் தூய்மையானதாகக் காட்டி, அவர்களைப் புனிதப்படுத்தும் எந்த முயற்சியையும் ஆசிரியர் மேற்கொள்ளவில்லை. முகாமிலுள்ள பெண்களிடத்தில் அத்துமீறிநடக்க முனையும் இராணுவச் சிப்பாயின் போக்கிரித்தனம், போலி ஒப்பனைகளற்று வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டுள்ளது. போர் நிலத்துக்கு அப்பால், போருக்குப் பின்னரான காலத்தில் இயற்கை அனர்த்தத்தினால் முகாம் வாழ்வுக்குள் தள்ளப்பட்டவர்களிடையேயே நீளும் இத்தகைய ஆதிக்கக் கரங்கள், போர்க் காலத்திலும் போரை வெற்றிகொண்ட காலத்திலும் முகாம் வாழ்வுக்குள் சிக்குண்டவர்களிடம் எத்தகைய வன்மங்களை நிகழ்த்தியிருக்கும் என்பதற்கான பதச்சோறாக அச்சித்திரிப்பினைக் கொள்ளலாம்.
இராணுவ வீரனுக்குரிய மிடுக்குடன் அறிமுகமாகும் சரோத், நாவலின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியிலும் அந்த மிடுக்கிலிருந்து மெல்ல மெல்லத் தேய்ந்து செல்கிறான்.இளகிய மனமும் மக்கள்மீதான நேயமும் தன்னார்வத்துடன் உதவி செய்ய முனையும் குணமும் கொண்டவனாகத் தொடக்கத்தில் நடமாடும் அவன், சக மனிதர்களின் உணர்வுகளைக் கருத்தில்கொள்ளாது அவர்களைத் துன்புறுத்தும் வக்கிர குணங்கொண்டவன் என்பதைக் கதையின் நகர்வு குவிமையப்படுத்தியுள்ளது. அதிலும் தான் உதவி செய்தவர்களை, தன்னிடம் அடைக்களம் பெற்றவர்களைத் துன்புறுத்துகின்றவனாக, தனது சுய இச்சைகளுக்கு அவர்களைப் பயன்படுத்திக்கொள்கின்ற நயவஞ்சகம் மிக்கவனாக, அவர்கள்மீது தன் ஆதிக்கத்தைப் பிரயோகிக்கும் கொடூரனாக அவன் வார்த்தெடுக்கப்பட்டுள்ளான். சிறுவயதில் தன்னைப் பராமரித்த லலி அக்கா யாருமற்றவளாகத் தனித்துபோகையில் அவளுக்கு ஆதரவாக இருந்து அவளைத் தன் போகத்துக்காகப் பயன்படுத்திக்கொண்டமை, அவளுடன் நெருக்கமாக இருந்த காலத்திலேயே வஜ்ராவைக் காதல் திருமணம் செய்தமை, பின்னர் வஜ்ராவின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது அவளைப் புறக்கணித்தமை, மண்சரிவுக்குப் பின்னரான முகாம் வாழ்விலிருந்து விடுபட விரும்பிய ராஜேஸ்வரிக்கும் தீபாவுக்கும் நல்வாழ்வு அமைத்துத்தருவதற்காக அழைத்துச் சென்று சிறுமி தீபாவைப் பலவந்தமாகத் தன் இச்சைக்கு ஆளாக்கிக்கொண்டமை, தன்னால் கர்ப்பமாக்கப்பட்டு மூன்றுமுறை கருக்கலைப்பு செய்யப்பட்ட தீபாவைத் திருமணமுடித்துக்கொள்ளுமாறு தனது விசுவாசமிகு சாரதிக்குக் கட்டளை பிறப்பித்தமை முதலானவை இளகிய மனம்கொண்டவனாக அறிமுகமாகும் கேப்டன் சரோத்தின் உண்மையான இயல்பினைத் தோலுரித்துக்காட்டியுள்ளன. சரோத்தின் இத்தகைய இழிநடத்தைக்கான பின்புலத்தின் ஒரு பக்கத்தைக் கண்டறியும் திறப்பினை ஆசிரியர், லலி அக்காவின் வாக்குமூலத்தில் புதைத்திருக்கிறார் எனலாம்.
லலி அக்காவின் வாக்குமூலத்தின்படி, அவளும் சரோத்தும் பெற்றோர் அறியாத அநாதைகள். அவர்கள் கண்டி நகரிலிருந்த அநாதைவிடுதி ஒன்றில் வளர்ந்துள்ளனர். அங்கு வளரும் சிறுமிகள் வயதுக்கு வந்ததும் அங்கிருந்த மேடம்களால் பெரிய பெரிய மனிதர்களின் படுக்கையறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பின்னர் அங்கவீனமானவர்களுக்குத் திருமணமுடித்துக் கொடுக்கப்பட்டுள்ளனர். எனவே, யாருமற்றவர்களுக்கு அடைக்களம் வழங்கி, அவர்களைத் தமது லாபங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ளல், அடைக்களம் பெற்றவர்களின் உள்ளுணர்வினைப் பொருட்படுத்தாது அவர்களை வெறும் இயந்திரங்களாக நடத்துதல் முதலியன இடம்பெற்ற சூழலில் சரோத் அரவணைப்பற்று வளர்ந்துள்ளதால் அவன் சிறுவயது முதலே மனப்பிறழ்வுக்கு உள்ளாகியிருந்திருக்கக்கூடும் என்று பொருள்கொள்வதற்கான வெளியினை அவ்வாக்குமூலம் திறந்துள்ளது. அதேவேளை, அநாதைவிடுதி காலத்துக்குப் பின்பான சரோத்தின் இராணுவ வாழ்வு, அப்பிறழ்வில் தாக்ககரமான பாதிப்பினைச் செலுத்தக்கூடிய சாத்தியங்களைக் கொண்டதாகும். அவனது பிறழ்வுச் செயற்பாடுகளுக்கு இராணுவ அதிகாரமும் துணைபுரிந்துள்ளமையை நாவலில் காணமுடிகிறது. சரோத் இறுதியில் தன்னைத்தானே மாய்த்துக்கொண்டமை அவனது மனப்பிறழ்வை உறுதிப்படுத்தும் சாட்சியமாக அமைந்துள்ளது.அவன் தற்கொலை செய்துகொள்ளமுன் தீபாவுக்கென எழுதிய கடிதம், தீபாவின் கைகளுக்கு எட்டியும் வாசிக்கப்படாமலே நாவல் முடிவடைந்துள்ளது. அக்கடிதத்தைச் சரோத்தின் சுய உணர்வுக்கும் மனப்பிறழ்வுக்கும் இடைப்பட்ட அல்லாட்டத்தின் வெளிப்பாடாகக் கொள்ளலாம்.
அண்மைக் காலமாகச் சிங்களத்திலிருந்து தமிழுக்குப் பல படைப்பிலக்கியங்களை நேர்த்தியாக மொழிபெயர்த்து மிகுதியான கவன ஈர்ப்பைப் பெற்றுள்ள எம்.ரிஷான் ஷெரீப், பிறமொழி நாவல் என்ற உணர்வு ஏற்படாதவகையில் இந்நாவலைச் செம்மையாக மொழிபெயர்க்க முனைந்துள்ளார். இருப்பினும் நாவலில் இடம்பெறும் டர்பன்டைன் மரங்கள், வண்டுத் தேனீ, லயன் – லயன் அறை, ஐயா முதலான பல சொற்கள் கதையின் களத்திலிருந்து ஓர் அந்நியத்தன்மையை ஏற்படுத்துகின்றன. அச்சொற்களுக்கு இணையாக மலையக மக்களிடையே புழக்கத்தில் உள்ள கருப்பந்தேயிலை மரங்கள், பம்பர, லயம் – லயக் காம்பரா, மாத்தியா முதலான சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்குமாயின் அத்தகையதொரு இடைவெளி உணரப்படாமல் இருந்திருக்கும். அவ்வாறே மூலத்தில் கொழும்பு அறுபதாம் தோட்டம் என்று இடம்பெற, மொழிபெயர்ப்பாசிரியர் அதனை அறுபதாம் தோட்ட குப்பம் – அறுபதாம் தோட்டத்துக் குப்பம் – எனக் குப்பம் என்ற சொல்லை இணைத்து இருவேறுவிதமாகப் பயன்படுத்தியுள்ளார். குப்பம் என்ற சொல்லும் இலங்கைச் சூழலுக்கு – கொழும்புக்கு – அந்நியப்பட்டதாகும்.
சிங்கள மூலத்தில் இடம்பெறுகின்ற பேச்சு வழக்குச் சொற்கள், மொழிபெயர்ப்பில் தராதரத் தமிழுக்கு மாற்றப்பட்டுள்ளதைச் சில இடங்களில் அவதானிக்க முடிகிறது. எடுத்துக்காட்டாக, ‘கடிதத்துக்குமேல் கடிதம்’, ‘நான் அப்படி இரும்புப் பொம்பள’ என மூலத்தில் இடம்பெறுகின்றவை, மொழிபெயர்ப்பில் ‘நிறைய கடிதங்கள்’, ‘அந்தளவு தைரியமான பெண் நான்’ என இடம்பெற்றுள்ளன. இத்தகைய மாற்றங்கள், உரையாடலின் இயல்பான வெளிப்பாட்டினிடையே செயற்கைத்தன்மையைப் புகுத்தியுள்ளன. இவற்றுடன் மூல நாவலிலிருந்து சிறுசிறு மாற்றங்களை மொழிபெயர்ப்பில் ஆங்காங்கே காணமுடிகிறது. ஒரு படைப்பிலக்கிய மொழிபெயர்ப்பில் அத்தகைய மாற்றங்கள் தவிர்க்கமுடியாதவையாகும்.ஆனால், அச்சிறுமாற்றங்கள் மூலநூலை, மூலநூலாசிரியன் வெளிப்படுத்த விழைந்ததைச் சிதைக்காத வகையில் அமையவேண்டியது அவசியமாகும். சாமிமலை மொழிபெயர்ப்பில் சில இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறு மாற்றங்கள், அத்தகைய சிதைவினை ஏற்படுத்தியிருப்பதை அவதானிக்கமுடிகிறது. சான்றாகச் சில எடுத்துக்காட்டுக்களைக் குறிப்பிடலாம்:
இன அடையாளங்களை நீக்குதல், திரிபுபடுத்தல், பொது அடையாளங்களை வழங்குதல் முதலானவை மொழிபெயர்ப்பாசிரியரால் திட்டமிட்டோ திட்டமிடப்படாமலோ மேற்கொள்ளப்படும்போது அவை மூலநூலாசிரியன் வெளிப்படுத்த முனைந்ததைச் சிதைத்துவிடுவதுடன் மூலநூல் உள்ளடக்கியிருக்கும் பன்முகத்தன்மையை, அதன் சமூக பண்பாட்டுப் பெறுமதிகளை அழித்துவிடுகின்றன. அதேவேளை, மூலநூலாசிரியன் வழங்காத இன அடையாளத்தை வழங்குவதும் சிக்கலுக்குரியதாகும். சாமிமலை நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பில் மலையக மக்கள், மலையகம் முதலான அடையாளங்கள் இடம்பெற்றுள்ளன. மலையகத் தமிழரிடையே மலையகத் தமிழரா, இந்திய வம்சாவளித் தமிழரா, இந்திய வம்சாவளி மலையகத் தமிழரா முதலான இன அடையாள வாதங்கள் இன்று பரவலாக இடம்பெற்றுவருகின்றன. அரச ஆவணங்கள் அவர்களை‘இந்தியத் தமிழர்’ என அடையாளப்படுத்துகின்றன.இந்நிலையில் பிறிதொரு இனத்தவர் – பெரும்பான்மை இனத்தைச் சார்ந்தவர் – இன அடையாளச் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கின்ற அம்மக்கள் குழுவுக்கு எத்தகைய அடையாளத்தை வழங்குகிறார் என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
சிங்கள மூலத்தில் சுஜித், ‘மலையக மக்கள்’ என்ற அடையாளத்தை எங்கும் கையாளவில்லை.மொழிபெயர்ப்பாசிரியர், ‘அந்த மக்கள்’ என்று இடம்பெறும் இடத்தில் ‘மலையக மக்கள்’ எனப் பயன்படுத்தியுள்ளார்.சிங்கள மூலத்தில் மட்டும் இடம்பெறும் ‘ஆசிரியரின் சாட்சியம்’ என்ற பகுதியில் ‘தோட்ட மக்கள் – வத்துகரே ஜனதாவ’ எனச் சிங்களவர்களிடையே பொதுப் புழக்கத்தில் உள்ள அடையாளத்தையே சுஜித் கையாண்டுள்ளார். ‘கந்துகரே’ என்ற சிங்களச் சொல்லுக்கு இணையாக ‘மலையகம்’ என்ற சொல் மொழிபெயர்ப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்பயன்பாடு பொருத்தம்போல் தெரிந்தாலும் தமிழ்ச் சூழலில் வழங்கப்படும் இன அடையாளப் பொருளில் அச்சொல் இடம்பெறாது, மலைநாடு என்ற பிராந்திய அடையாளச் சுட்டாகவே இடம்பெற்றுள்ளது. இத்தகைய மாற்றங்கள், பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனமொன்றின் அடையாளம் தொடர்பில் கொண்டுள்ள புரிதலை அவ்வாறே வெளிப்படுத்துவதற்கு மாறாக திரிபுபடுத்தப்பட்ட புரிதலை அச்சிறுபான்மையினரிடம் கையளிக்கின்றன. அவை அரசியல் மட்டத்திலும் பண்பாட்டுத் தளத்திலும் உணர்ச்சிமயமான சிக்கல்களைத் தோற்றுவிக்கக்கூடியதோடு மொழிபெயர்ப்பின்வழி எதிர்பார்க்கப்படும் சமூக பண்பாட்டுப் புரிதலையும் சாத்தியமற்றதாக்குகின்றன.
சாமிமலை நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பில் மேற்கூறியவாறான நெருடல்கள் இருந்தாலும், அது தட்டையான நேரடி மொழிபெயர்ப்பாக அமையவில்லை; நாவலின் ஓட்டத்தில் தடங்கலை ஏற்படுத்தாத வகையிலும் கலைப்படைப்பு என்ற உணர்வைச் சிதைக்காத வகையிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மலையகத் தமிழ்நாவல் வெளியில் பொருண்மை, கட்டமைப்பு, எடுத்துரைப்பு, மொழி முதலானவற்றில் நிலவும் பின்னடைவை இத்தமிழாக்கத்திலிருந்து துலக்கமாகக் கண்டுகொள்ள முடிகிறது.
இளம் சிங்கள எழுத்தாளரான சுஜித், புனைவுத் தொழில்நுட்பம் நன்கு கைவரப்பெற்றவராகவும் மிகவிரிந்த சமூக நோக்குக் கொண்டவராகவும் விளங்குகிறார் என்பதற்குச் சாமிமலை நாவல் சான்றாக விளங்குகிறது. சிங்களப் புனைகதை உலகில் அவர் காத்திரமான தாக்கத்தைச் செலுத்துவார் என்று உறுதியாக நம்பலாம்.அத்தகைய ஆற்றல்மிக்க இளம் படைப்பாளியை இனங்கண்டு, அவரைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய ரிஷான் ஷெரீப்பின் பணி பாராட்டுதலுக்குரியதாகும்.
***
-எம்.எம். ஜெயசீலன்