2020ம் ஆண்டின் புத்தகக் கண்காட்சியில்தான் செகாவ் எனக்கு அறிமுகமானார். யார்மூலம் என்பதை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. நிச்சயமாக எஸ். ரா அல்ல; நான் செகாவின் எழுத்தை நேசிக்கத் தொடங்கிய பிறகுதான் அவருடைய ‘My dear Chekhov’ உரையை இணையத்தில் பார்த்தேன். தஸ்தயேவ்ஸ்கி, சிங்கிஸ் ஐத்மாத்திவ் போன்ற ரஷ்ய படைப்பாளிகளைத் தொடர்ந்து வாசித்து வந்த காலமது. ரஷ்ய இலக்கியம் குறித்த பல உரைகளில் டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கிக்குப் பிறகு செகாவின் பெயர்தான் அடிப்பட்டது. அப்படித்தான் அவரைக் கண்டடைந்தேன் போலும். இந்த ஓராண்டில் அவரை நினைக்காத நாளே இல்லை!

 

 செகாவ் கிட்டத்தட்ட 400 கதைகள் எழுதியுள்ளார். ஆனால் தமிழில் 40 கதைகள் மட்டுமே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் மொத்தம் 210 கதைகள் வாசிக்கக் கிடைக்கின்றன. மீதமுள்ள கதைகளைப் படிக்க வேண்டுமானால் ரஷ்ய மொழியைக் கற்றுக் கொண்டு அந்த நாட்டுக்குத்தான் போக வேண்டும். மற்றபடி, அவர் எழுதிய நாடகங்கள், கடிதங்கள், குறிப்புகள் அனைத்தும் கிண்டிலில் இருக்கின்றன. நேரடியாக ரஷ்ய மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட அவருடைய கதைகளைத் தாராளமாகத் தமிழில் வாசிக்கலாம். ரஷ்ய இலக்கியத்தை ரஷ்ய மக்களுக்குப் பிறகு தமிழர்கள்தான் அதிகம் கொண்டாடுகின்றனர். தமிழ் மொழியில் வெளியாகியுள்ள கதைகளில் செகாவ் உங்கள் ஆன்மாவைத் தொட்டுவிட்டால் நீங்கள் பிறகு ஆங்கிலத்திற்குப் போகலாம். ‘அந்தோன் செகாவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்’ (பாரதி புத்தகாலயம்) புத்தகத்தில் ஆங்கிலத்திலேயே வாசிக்கக் கிடைக்காத ‘நினோக்கா – ஒரு காதல் கதை’ மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. (பாலு மகேந்திரா நூலகத்தில் நண்பர்களிடம் நினோக்கா காதல் கதையைப் பகிர்ந்து கொண்டேன். ஒருகணம், 21ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களது புருவங்கள் 19ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அக்கதையைக் கேட்டதும் ஆச்சரியத்தில் அரை இன்ச் உயர்ந்தது.)

 

 செகாவை அறிமுகப்படுத்த வேண்டுமானால் ‘வான்கா’ கதையிலிருந்துதான் தொடங்க வேண்டும். அது அவரது முதல் கதை இல்லையெனினும், அவருடைய பால்யத்தின் ஒரு துளி அக்கதையில் ஒளிந்திருப்பதை நம்மால் உணர முடியும். துயரம் நிறைந்த பின்னணியிலிருந்து வந்த செகாவ், ஒரு கூலான எழுத்தாளராக மாறுகிறார். செகாவின் கதைகளில் ஒரு ஷாம்பெயின் சுவையைக் கண்டடைய முடியும். வடிவத்தின் அடிப்படையில் பார்க்கையில் அவர் ஒரு கதையை சிம்ஃபனி போல அமைப்பார்.

 

 செகாவ் வெறும் கதை மட்டும் சொல்வாரே தவிர அதில் எவ்வித நோக்கங்களும் இருக்காது. படிக்கும் வாசகர்களால் பல்வேறு விதமான நோக்கங்களைக் கண்டடைய முடியும். உதாரணமாக, அவர் எழுதிய ‘ஷாம்பெயின்’ கதை, ஒருவருக்கு மூடநம்பிக்கைக்கு எதிரான கதையாக இருக்கலாம்; அது திருமணத்தை எதிர்த்து எழுதப்பட்ட கதை என்று நான் சொல்வேன். இந்தக் கதையில் மட்டுமல்ல; அவரது பெரும்பாலான கதைகளில் ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சுட்டிக் காட்டு, ‘இந்த இடத்தில் செகாவ் திருமணத்தை எதிர்க்கிறார்’ என்று என்னால் சொல்ல முடியும். உலகத்தில் செகாவைவிட யாரும் அதிக காதல் கதைகளை எழுதியதில்லை. காதலைக் கொண்டாடிய அளவிற்குத் திருமணத்தை எதிர்க்கவும் செய்தார்.

 

 ‘In Passion week’ என்ற கதையில் ஒன்பது வயது சிறுவன் பேரழகி ஒருத்தியைக் காண்கிறான். அழகில் தடுமாறிப் போனவன் அவளைப் பற்றி நம்மிடம் பேசுவதுதான் கதை. அக்கதையின் இறுதி வரியாக செகாவ் எழுதுகிறார்:

 

 ‘நான் அவளை விரும்புகிறேன். வளர்ந்த பிறகு நிச்சயமாக இவளைப் போன்ற ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்வேன் என நினைத்தேன். ஆனால் கல்யாணம் செய்து கொள்வதென்பது வெட்கக்கேடான செயல் என்பதால் அந்த நினைப்பை அப்போதே கைவிட்டேன்.’

 

 ஒன்பது வயது சிறுவனுக்கு இப்படித் தோன்றுமா என்பது கேள்விக்குறி. ஆனால் செகாவ் படைக்கும் உலகத்தில் ஒன்பது வயது சிறுவனுக்குக்கூட இந்த அடிப்படை அறிவு இருக்கும். தன் பெரும்பாலான கதைகளில் தனக்கென்று ஓர் உலகத்தைப் படைத்திருக்கிறார் செகாவ்.

 வாழ்க்கைக்கான அர்த்தத்தைக் கண்டடையும் கலைஞன், அதைத் தன் கலையில் வெளிப்படுத்தி வாழ்க்கையில் பின்பற்ற மறந்து விடுவான். அவர்கள்மீது எனக்கு எவ்வித புகாருமில்லை. காட்டைக் கடந்து வந்தவன்தானே முட்கள் இருக்கும் இடமறிவான்! ஆனால் செகாவ் தான் கண்டடைந்த உண்மையை வாழ்க்கை முறைக்கும் எடுத்துக்கொண்டார். தனது 41வது வயது வரை அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை. அவர் தன் பதிப்பாளரான சுவோரினுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

 

‘நீ ஆசைப்பட்டால் திருமணம் செய்து கொள்கிறேன். ஆனால் ஒரு நிபந்தனையுடன்; அவள் மாஸ்கோவில் வசிக்க வேண்டும். நான் யால்டாவில் வசிப்பேன். நான் விருப்பப்பட்டால் அவளைச் சென்று பார்ப்பேன். அவள் விருப்பப்பட்டால் என்னை வந்து சந்திக்கலாம். ஒரு நாளுடைய மகிழ்ச்சியை என்னால் இன்னொரு நாளுக்குக் கொண்டு செல்ல முடியாது. யாரேனும் ஒருவர் ஒரே விஷயத்தைப் பற்றி ஒரே குரலில் தினமும் என்னுடன் பேசினால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நான் நிச்சயம் அற்புதமான கணவனாக இருப்பேன், என் வானில் தினமும் தோன்றிடாத நிலவைப் போன்ற மனைவியை எனக்கு அளிப்பாயாக’

 

 இந்த விதிமுறையின்படி செகாவுக்கும், நாடக நடிகை ஓல்கா நிப்பருக்கும் திருமணம் நடந்தது. இருவரும் இணைந்து தங்களைத் தம்பதியாகப் பதிவு செய்து கொண்டார்களே அன்றி சேர்ந்து வாழவில்லை. திருமணத்திற்கு பிறகும் காதலி மனைவியாகாமலும், காதலன் கணவனாகாமலும் இருந்தனர். இப்படியொரு கல்யாணம் உலகத்தில் வேறு எங்கேனும் நடந்திருக்குமா என்றே ஆச்சரியமாக இருக்கிறது.

 

 அவர்கள் யாரிடமும் தெரியப்படுத்திக் கொள்ளாமல் திருமணம் செய்து கொண்டதால் செகாவின் தங்கை மரியாவுக்கு ஓல்காவை பிடிக்கவில்லை. செகாவுக்கு ஓல்கா எழுதிய ஒரு கடிதத்தைக்கூட அவருக்குத் தெரியாமல் நெருப்பில் போட்டிருக்கிறார் மரியா. ஆனால் அவர் இறந்த பிறகு, அந்த அகங்காரத்தையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அந்தக் கடிதங்களைத் தொகுத்துள்ளார் மரியா. செகாவ் – ஓல்கா ஆகியோர் எழுதிக்கொண்ட காதல் கடிதங்கள் யாவும் ‘Dear Writer, Dear actress’ என்று தனி புத்தகமாகவே கிடைக்கிறது.

 

செகாவ் சினிமாக்கள்

 

செகாவ் சார்ந்து வெளியாகிய படங்களில் மிக முக்கியமான படம் ‘Anton Chekhov 1980 (2015)’. இப்படம் அவருடைய வாழ்வின் ஒரு பகுதி மட்டுமே. என்னைப் போல் செகாவை அளவு கடந்து நேசிப்பவரால் கண்ணீர் சிந்தாமல் இப்படத்தைப் பார்க்க முடியாது. படத்தின் முடிவில் செகாவுக்கு ஒரு கடிதம் வருகிறது. அக்கடிதத்தின் கடைசி வரிகள் இவ்வாறாக எழுதப்பட்டுள்ளன:

 

 ‘You can’t die Anton. You’re too important.

  • Your friend, Leo Tolstoy’

 

கடிதத்தை மூடி வைத்துவிட்டு ஷாம்பெயினை அருந்துகிறார் செகாவ். தன் ஆன்மாவிலிருந்து ரஷ்ய இலக்கியத்தை நேசிக்கும் ஒருவனால் எப்படி இந்தக் காட்சியில் கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியும்?

 

இதேபோல் 2007ம் ஆண்டு ‘Chekhov & Maria’ என்ற படம் வெளியானது. அவருக்கும் அவர் தங்கை மரியாவுக்கும் இடையேயான உறவைக் காட்சிப் படுத்தியிருக்கிறது இப்படம். அவர் குடும்ப வாழ்க்கையைப் பற்றி மேலோட்டமாக தெரிந்து கொள்ள இப்படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

 

 செகாவின் ‘The Seagull’ என்ற நாடகம் முதன்முதலில் கலை நயமற்ற ஓர் இயக்குநரால் இயக்கப்பட்டதால் தோல்வியடைந்தது. பிறகு, மாஸ்கோ கலையரங்கத்தில் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி என்ற புகழ்பெற்ற இயக்குநரால் அந்நாடகம் மீண்டும் இயக்கப்பட்டு உலகப்புகழ் அடைந்தது. இதேதான் இந்நாடகத்தின் திரைப்பட தழுவல்களுக்கும் நடந்தது. 1972ம் ஆண்டு ரஷ்ய மொழியில் இயக்குநர் யூலி கரசிக்கால் “The Seagull’ படமாக்கப்பட்டது. காகிதத்தில் எவ்வாறு எழுதப்பட்டதோ அதை அப்படியே எடுத்து வைத்ததை தவிர திரைமொழிக்கு உண்டான எவ்வித மாற்றமும் இல்லாமல் தட்டையான படமாக இருந்தது. நாடகத்தைப் படித்தவர்களால்கூட அப்படத்தை முழுதாகப் பார்க்க முடியாது. இப்படம் வெளியான 46 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆங்கிலத்தில் மைக்கில் மேயரால் ‘The Seagull’ படமாக்கப்பட்டது. செகாவின் நாடகத்தை நேரில் பார்க்காத குறையை இப்படம் தீர்த்தது என்றே சொல்லலாம். ஒளிப்பதிவு, இசை, நடிப்பு என எல்லாமே சிறப்பாக இருந்தது. இக்கதை முழுக்க முழுக்க நாடக வடிவத்திற்காக உருவாக்கப்பட்டது என்பதால் எழுத்து வடிவில் அவ்வளவு உணர்ச்சிப்பூர்வமாக இருக்காது. எனவே, கடல் நாரையைப் படிப்பதைவிடப் படமாகப் பார்த்துவிடுவது இன்னும் நல்லது. இப்படத்தை அனைவரும் கண்டிப்பாகப் பார்க்குமாறு பரிந்துரைக்கிறேன். (The Seagull – 2018)

 

 அவரது பல படைப்புகள், உலக சினிமாவின் பல்வேறு மொழிகளில் படமாக்கப்பட்டிருக்கின்றன. ‘வான்கா’ சிறுகதை ‘ஒட்டால்’ என்ற பெயரில் மலையாளத்தில் வெளியாகியுள்ளது. வான்காவை நிச்சயமாகப் படமாக்க முடியாதென்பது இப்படத்தைப் பார்ப்பதற்கு முன்பே தெரியும். வான்காவே 4 பக்க கதைதான். அதன் முதல் பக்கத்தையும் கடைசி பக்கத்தை மட்டும் வைத்து ஒட்டாலில் 80 நிமிடங்களுக்குப் படமாக்கியுள்ளனர். அதில் 40 நிமிடங்கள் அழகியல் காட்சிகள் மட்டுமே நிறைந்துள்ளன. மீதமுள்ள 40 நிமிடங்களுக்குக் கதை சொல்ல ஏன் திரைப்படம் எடுக்க வேண்டும்? ஒருவேளை வான்காவைக் குறும்படமாக எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கலாம்!

 

 தமிழில் வாசிக்கக் கிடைக்கும் அனைத்து ‘செகாவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்’ புத்தகங்களிலும் ‘இயோனிச்’ கதை இருக்கும். அக்கதை ‘In the town of S’ என்று ரஷ்யாவில் படமாக்கப்பட்டிருக்கிறது. நான் இதுவரை பார்த்த செகாவ் சிறுகதைகளின் தழுவல் திரைப்படங்களில் இப்படம் நன்றாக இருந்தது. ஆனால்…

 

 ‘இயோனிச்’ கதையில் மருத்துவர் இயோனிச் எஸ் நகருக்குக் குடி வருவார். அங்கே ஒரு குடும்பத்தினரால் அவர் விருந்துக்கு அழைக்கப்படுவார். கணவன், மனைவி, மகள் ஆகிய மூன்று பேரைச் சேர்ந்த குடும்பத்தில் தினமும் விருந்துதான்; கொண்டாட்ட வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள். மனைவி தன் நாவலை விருந்தாளிகளுக்குப் படித்துக் காண்பிப்பார்; ஆனால் வெளியிட மாட்டார். மகளுக்கு ஓரளவு பியானோ வாசிக்கத் தெரியும். இயோனிச் அப்பெண்மீது காதல் கொள்வார். ஆனால் அவளுக்குப் பேருக்காகவும் புகழுக்காகவும் பெரிய இசை கலைஞர் ஆக வேண்டுமென்ற ஆசை.. அதற்காக மூன்று ஆண்டுகள் இசை பள்ளியில் பயில மாஸ்கோ செல்கிறாள். திரும்பி வந்ததும் அவள் ஒரு விஷயத்தை உணர்கிறாள்:

 ‘நான் பெரிய இசை கலைஞர் ஆக விரும்பினேன். இந்தக் கனவு எனக்கு மட்டும்தான் இருந்ததென் நினைத்தேன். ஆனால் இப்போது எவ்வளவோ பேர் பியானோ வாசிக்கிறார்கள். நானும் அதில் ஒருத்தி என்பதைப் புரிந்து கொண்டேன். என் அம்மா எப்படி நாவல் எழுதுகிறாரோ அப்படித்தான் நான் பியானோ வாசிக்கிறேன். அங்கே இருந்த நாட்களில் உங்களை மட்டும்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். உங்களைத் திருமணம் செய்து கொண்டு உங்களுடனேயே இருந்துவிடுகிறேன்’ என்கிறாள்.

 

ஆனால் அப்போது அவளை ஏற்றுக்கொள்ள இயோனிச் மறுத்துவிடுகிறார்; ஏதோவொன்று அவரைத் தடுத்துவிடுகிறது. சில ஆண்டுகள் கழித்து, வயதாகி நடக்க முடியாமல் தொப்பை உருவத்துடன் அந்த வீட்டுக்கு வருகிறார் இயோனிச். இப்போது அவருக்கு அவள்மீதிருந்த காதலெல்லாம் வற்றியிருந்தது. வழக்கமாக, மனைவி விருந்தாளிகளுக்கு நாவல் வாசித்துக் காண்பிக்கிறார். அவருடைய எழுத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. மகள் மிக அற்புதமாக பியானோ வாசிக்கிறாள். அந்த இசையால் மனம் குளிர்ந்து போன அனைவரும் கைதட்டி அவளுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவிக்கின்றனர். அப்போது இயோனிச்சுக்கு ஒரு விஷயம் தோன்றுகிறது.

 

 ‘நல்லவேளையாக நான் அவளைத் திருமணம் செய்து கொள்ளவில்லை’

 

ஒரு சிறுகதையைத் தாங்கிப் பிடிப்பதே ஒரு குறிப்பிட்ட வரியாக, வசனமாக அல்லது கதாபாத்திரத்தின் எண்ணமாக இருக்குமென்பது என் கருத்து. அப்படிப்பட்ட இடமாகத்தான் இயோனிச்சின் இந்த எண்ணத்தைப் பார்க்கிறேன். சொல்லப்போனால் இந்தச் சிறுகதையின் சாரமே அவ்வரிதான். அந்த இடத்தை ‘In the town of S’ படத்தில் சரியாகக் காட்சிப்படுத்தப்படாமல் போனது மிகப்பெரிய ஏமாற்றம். மருத்துவரின் குறிப்பிட்ட எண்ணத்தைச் சரியாகச் சொல்லாமல் ‘இயோனிச்’ கதையைப் படமாக்குவது அர்த்தமற்றது.

 

செகாவ் 161

 

செகாவ் எழுதியதில் ‘Three sisters’ நாடகம் மிகவும் பலவீனமாக இருந்ததாக உணர்ந்தேன். ஆனால் அது உலகத்தால் கொண்டாடப்பட்ட மாஸ்டர்பீஸ். எனக்கு மட்டும்தான் மாற்றுக்கருத்து இருந்தது என்று நினைத்தால் செகாவுக்கே அது பலவீனமாகத் தோன்றியிருக்கிறது. நாடகத்தை எழுதிக் கொண்டிருக்கும்போதே நிறைய கதாபாத்திரங்களைப் புகுத்தி கடினமாக்கிக் கொள்கிறோமோ என்று நினைத்திருக்கிறார். நாடகம் வெளியாகி ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்ற பிறகும்கூட அவருக்கு நிறைவாக இல்லை.

 

 டால்ஸ்டாய்க்கு செகாவின் நாடகங்கள் சுத்தமாகப் பிடிக்காது. அதற்கு முதன்மையான காரணமாக அவர் முன்வைப்பது, அக்கதாபாத்திரங்களின் Illicit Relationships. செகாவ் தன் சிறுகதைகளைப் போல் வாழ்வை கருப்பொருளாக மாற்றாமல், நாடகங்களை முழுக்க முழுக்க கற்பனையிலிருந்து படைத்தார். ‘தத்துக்கிளி’ கதையை தன் அண்ணனின் காதல் வாழ்க்கையில் நடந்தவற்றை எழுதினார். அக்கதையைப் படித்ததும் அண்ணன், செகாவிடம் சண்டை போடுகிறார். அதற்குச் செகாவ் அளிக்கும் பதில்:

 

‘நீ ஓவியன்தானே? மரத்தை வரைவதற்கு அதனிடம் அனுமதி கேட்பாயா?’

 

 இதுபோல் அவர் வாழ்விலும் அவரைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்விலும் நடந்த ஏராளமான நிகழ்வைச் சிறுகதையாக மாற்றியிருக்கிறார். நாடகங்களில் அவருக்குரிய பாணி இருந்தாலும் அவ்வடிவத்தைப் புரிந்து கொள்ள செகாவுக்குக் காலம் எடுத்தது. நாடகங்களில் இடம்பெறும் ஒரு சில காட்சிகளில் மட்டும் தன் வாழ்வை கருப்பொருளாக மாற்றியிருக்கிறார்.

 

 உலக இலக்கியத்தில் சிறந்த நவீன சிறுகதை ஆசிரியர்களாகக் கொண்டாடப்பட்டவர்கள் மாப்பசான், செகாவ், ரேமண்ட் கார்வர். இதில் செகாவ், மாப்பசானைத் தன் சிறுகதை ஆசானாகக் கருதினார். கார்வர், செகாவைத் தன் சிறுகதை ஆசானாகக் கருதினார். மேலும், கார்க்கி, புனின், செகாவ் ஆகிய மூவரும் மகத்தான நண்பர்களாக விளங்கினார்கள். அவர்களது நட்பு ஒரே விதமான ரசனையிலிருந்து தொடங்கியது. எப்படி நமக்குப் பிடித்த நடிகரோ, இயக்குநரோ அல்லது இசையமைப்பாளரோ மற்றொருவருக்கும் பிடித்திருப்பது தெரிய வந்தவுடன் அந்நபருடன் நண்பராகிவிடுகிறோமோ அப்படித்தான் மூவரும் தங்களை டால்ஸ்டாய் ரசிகன் என்று வெளிப்படுத்திக் கொண்டு நண்பர்களானார்கள். இலக்கியம், டால்ஸ்டாய், நாடகங்கள், இசை, பெண்கள், ரஷ்யா ஆகியவற்றைக் குறித்து நிறைய உரையாடினார்கள்.

 

‘செகாவ் வாழ்கிறார்’ என்ற எஸ்.ரா நூலை வாசித்தேன். செகாவும் இவான் புனினும் சந்தித்துக் கொள்கின்றனர். செகாவ் புனினிடம் கேட்கிறார், ‘நீ தினமும் எழுதுகிறாயா?’ அதற்குப் புனின் தான் எப்போதாவது எழுதுவதாகச் சொல்கிறார். செகாவ் : ‘ஓ! நண்பா, எழுத்தாளர்களாகிய நாம் தினமும் எழுத வேண்டும். அதைவிட நமக்கு வேறு என்ன கடமை இருக்க முடியும்?’ என்கிறார்.

என்னால் இந்தப் பத்தியைப் படித்ததும் கடந்து போக முடியவில்லை. நான் எப்போதாவது எழுதக்கூடியவன். செகாவின் அறிவுரையைப் பின்பற்ற நினைத்தேன். ஆனால் என்னால் தினமும் கதைகளையோ கவிதைகளையோ எழுத முடியாது. அது ஓர் அற்புதம்; தன்னால் நிகழ வேண்டும். ஆனால் எதையாவது எழுதியே ஆக வேண்டுமென யோசித்தபோதுதான் நாட்குறிப்பு எழுதத் தொடங்கினேன்.

தினமும் எழுதுவது எவ்வளவு முக்கியமோ அதேபோல் கதையை எடிட் செய்வதும் முக்கியம் என்கிறார் செகாவ். கதையில் தேவையில்லாமல் ஒரு வார்த்தைகூட வீணடிக்க விரும்பாதவர். அதனாலேயே தன் பெரும்பாலான கதைகளை சிறியதாகவும், One Act Narration ஆகவும் அமைத்திருப்பார். அதிக விவரிப்புகளை விரும்பாததால் அவரால் தஸ்தயேவ்ஸ்கியின் எழுத்துக்களைக்கூட ரசிக்க முடியவில்லை. இதே காரணத்திற்கான டால்ஸ்டாய் செகாவுக்கு அறிவுரை கூறினார். ‘நீ நன்றாக எழுதுகிறாய். ஆனால் கதையைச் சீக்கிரம் முடித்துவிடுகிறாயே! எழுத்தாளராகிய நமக்குப் பொறுமை மிகவும் முக்கியம்’ என்றார். செகாவுக்கு அவர் முன்வைத்த விமர்சனம் நியாயமாகப் பட்டது. ஏனெனில் கதை எழுதத் தொடங்கியவுடன் முடிவை நோக்கிய பதட்டம் செகாவுக்குள் இருந்துகொண்டே இருந்தது.

 செகாவின் கதைகளைப் போலவே அவரது வாழ்வும் சிறியதாக, ஆழமாக, அன்பு, காதல் ஆகியவற்றை நிறைந்ததாக இருந்திருக்கிறது. தனது 27ம் வயதில் காசநோயால் பாதிக்கப்பட்ட செகாவுக்கு கைக்குட்டையிலுள்ள ரத்தத்தில் மரணம் தன்னை நெருங்கி வந்து கொண்டிருப்பதை உணர்ந்தார். ஆனால் அவர் பதற்றமடையவும் பயப்படவுமில்லை; வாழ்ந்தார். நிறைய எழுதிக் குவித்தார். உடனிருந்த பெண்களுக்குக் காதலை அள்ளி வீசினார். ஷாக்லின் தீவில் அடைக்கப்பட்டிருந்த பத்தாயிரம் கைதிகளின் வாழ்வை ஆவணப்படுத்தினார். ரஷ்ய மக்களை மட்டும் கருத்திற்கொண்டு இலக்கியம் படைத்த செகாவை இன்று உலகம் முழுதும் உள்ள மக்கள் வாசித்துக் கொண்டாடுகிறார்கள் என்றால் எதனால்? தன் வாழ்வின் அர்த்தமாக செகாவ் எதை நினைத்தாரோ அதுவே இன்றைய காலகட்டத்தில் வாழ்ந்து வரும் ஒட்டுமொத்த மனிதக் குலத்தின் தேடலாக இருக்கிறது. அது என்னவெனில், தனிமனித சுதந்திரம். அந்தத் தனிமனித சுதந்திரத்திற்குத் தடையாக இருப்பது திருமணம். மனிதனுக்குத் தனிப்பட்ட முறையில் உண்டாகும் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் திருமணத்தைத் தவிர்ப்பதே தீர்வு.

 

 ஒருவேளை செகாவ் புத்துயிர் பெற்று வந்தால், ஒன்றரை நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் முக்கியமான பிரச்சனையாகத் தாம் எதை முன்வைத்து இலக்கியம் படைத்தோமோ, அவை அப்பிரச்சனைகளிலிருந்து துளியும் மாற்றம் காணாத இன்றைய தலைமுறையினரால் வாசிக்கப்படுவதை எண்ணி மிகவும் வருத்தமடைவார்.

-பாலு 

Please follow and like us:

2 thoughts on “செகாவ் 161

  1. I am delighted reading this article. First of all, I have to apologize to comment in English. It’s very interesting to came to know about the world famous writer Chekhov and his creations. The language pattern you used here is simply awesome. That makes people belong to all category can be admired. Definitely, I should appreciate your passion for searching biographies of legends in writing and deriving morals from them. Well, wish you all the best for your upcoming successes.

  2. எழுத்துலகப்புதினங்களை மிகவும்துல்லியமாக செகாவின் பதிவு எழுத்து இலக்கியத்துக்கு முன்னோடி என்று எண்ணத்தோன்றுகிறது,சிறப்பான கட்டுரை , வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *