தண்ணீர் குடிப்பதற்காக ஜோகு லோட்டாவைத் தன் வாயருகே கொண்டு சென்றபோது, ​​அந்த தண்ணீர் துர்நாற்றம் வீசியது. ஜோகு, “என்ன இது? தண்ணீரிலிருந்து இவ்வளவு துர்நாற்றம் அடிக்கிறது. என்னால் இதைக் குடிக்கவே முடியாது. என் தொண்டை வறண்டுபோய்க் கடுமையான தாகமெடுக்கிறது. இப்போது பார்த்து நீ இந்த ‌அழுக்கான தண்ணீரைக் குடிக்கத் தருகிறாயே” என்று கங்கியிடம் கேட்டார்.
கங்கி தினமும் மாலையில் கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து பாத்திரத்தில் நிரப்பி வைப்பாள். கிணறு வெகு தொலைவில் இருந்ததால் அடிக்கடி அங்கு செல்வது கடினம். நேற்று அவள் தண்ணீரை முகர்ந்து வந்து வைத்தபோது அதில் சிறிதளவும் நாற்றமில்லை. ஆனால் இன்று எப்படி நாற்றமடிக்கிறது! ஏதும் புரியாதவளாக லோட்டாவைத் தன் மூக்கருகில் வைத்துப் பார்த்தாள். ஆமாம். மிக மோசமான‌ வாசனை வீசியது. நிச்சயமாக எதோ ஒரு விலங்கு கிணற்றில் விழுந்து இறந்து போயிருக்கக் கூடும். ஆனால் அந்தக் கிணற்றைத் தவிர வேறு எங்கிருந்து தண்ணீர் கொண்டு வர முடியும்?
டாக்கூருடைய கிணற்றின் மீது இவள் ஏறுவதை ஊர் மக்கள் யாராவது அனுமதிப்பார்களா என்ன? அவர்கள் தொலைவில் நின்றபடி அவளை ஏசுவார்கள். கிராம எல்லையில், சாஹூவின் கிணறு இருந்தது. ஆனால் அங்கேயும் அவள் தண்ணீர் இறைத்துக்கொள்ள யார் சம்மதிப்பார்கள்? இந்த இரு கிணறுகளைத் தவிர இந்தக் கிராமத்தில் வேறு கிணறே இல்லை.
ஜோகுவுக்குப் பல நாட்களாக உடல்நிலை சரியில்லை. சிறிது நேரம் தாகத்துடன் அமைதியாகப் படுத்துக் கிடந்தவர், பிறகு “இதற்கு மேல் என்னால் தாகத்தைத் தாங்க முடியாது. அந்தத் தண்ணீரைக் கொண்டு வா. மூக்கை மூடிக் கொண்டு குடித்துவிடுகிறேன்” என்றார்.
கங்கி தண்ணீர் தரவில்லை. மோசமான அந்த நீரால் நோய் தீவிரமடையும் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால் நீரைக் கொதிக்க வைத்த பிறகு அதன் குறைபாடு எப்படி நீங்குகிறது என்பது தான் அவளுக்குப் புரியவில்லை.
“இந்தத் தண்ணீரை நீங்கள் எப்படிக் குடிப்பீர்கள்? எந்த விலங்கு விழுந்ததோ ! நான் வேறு கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வருகிறேன்” என்றாள்.
‘இவள் வேறு எங்கிருந்து தண்ணீர் கொண்டு வருவாள்?’ என நினைத்து ஜோகு ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தார்.
டாக்கூர், சாஹு என இரண்டு பேருடைய வீட்டிலும் கிணறுகள் இருந்தாலும் ஒரு லோட்டா தண்ணீர் நிரப்ப வழியில்லையா?
‘கை கால்கள் உடைவதைத் தவிர வேறெதுவும் நடக்காது. பேசாமல் அமைதியாக உட்கார். பிரம்ம தேவதைகள் உன்னை ஆசீர்வதிப்பார்கள்.  டாக்கூர் லாத்தியால் அடிப்பார். சாஹுவும் சளைத்தவர் இல்லை. ஏழைகளின் வலியை யார் புரிந்துகொள்கிறார்கள்! நாம் இறந்தே போனாலும் நம் கதவருகே எட்டிப் பார்க்கக் கூட யாரும் வருவதில்லை. இதில் உதவிக்குத் தோள் தருவது  என்பது மிகப் பெரிய விஷயம். அத்தகைய இவர்கள் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க அனுமதிப்பார்களா? ‘
இந்தச் சொற்களில் கசப்பான உண்மை இருந்தது. கங்கியால் இதற்கு எந்த பதிலும் சொல்ல முடியாதபோதும் துர்நாற்றம் வீசும் அந்தத் தண்ணீரை அவள் அவருக்குத் தரவில்லை.
இரவு ஒன்பது  மணியாகிவிட்டது. களைத்துப் போன தொழிலாளர்கள் தூங்கிவிட்டனர். வேலையற்ற ஐந்து பேர் மட்டும் டாக்கூரின் அருகே இருந்தனர். யுத்தகாலத்தில் துணிச்சலுடன் போராடி சாகசம் காட்டிய காலங்களும் சந்தர்ப்பங்களும் தீர்ந்து போனவர்களாக, சட்டரீதியான போராட்டங்களில் தாம் அடைந்த வெற்றி குறித்தே இப்போதெல்லாம் அவர்கள் பேசிக் கொள்கின்றனர். வழக்கொன்றில் சிக்கிக் கொண்ட டாக்கூர் காவல் நிலைய ஆய்வாளருக்கு எப்படி லஞ்சம் கொடுத்து தப்பித்தார்! எவ்வளவு புத்திசாலித்தனமாக ஒரு அதிமுக்கிய வழக்கினுடைய தீர்ப்பின் நகலை அங்கிருந்து பெற்றார்!  நீதிமன்றத்தில் இருந்த கிளார்க்குகளும் மற்ற அதிகாரிகளும் அதன் நகலைப் பெற வாய்ப்பே இல்லை என்றனர். ஐம்பதிலிருந்து நூறு ரூபாய் வரை தந்தால் மட்டுமே அதைத் தர முடியுமென்று அவர்கள் கூறினர்.
ஆனால் டாக்கூரோ சல்லிக் காசு செலவு செய்யாமல் அதைக் கையகப்படுத்தினான். சூழ்ச்சி எனும் கலையை மனிதன் கற்றிருக்க வேண்டுமா இல்லையா?
தெருவில் எண்ணை விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அதிலிருந்து வந்த
வெளிச்சம் கிணற்றின் மீது மங்கலாகக் கசிந்து கொண்டிருந்தது.
கிணற்றுக்கு அருகே வந்த கங்கி அதன் மேடையருகே ஒரு போர்வையைப் போர்த்தியபடி அமர்ந்துகொண்டு, சரியான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தாள்.
இந்தக் கிணற்றின் நீரைத் தான் அந்த முழு கிராமமும் குடிக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டம் பிடித்த அவர்கள் மட்டும் இதைக் குடிப்பதற்கு அனுமதி இல்லை. காலங்காலமாக கடைப்பிடிக்கப்படும் சமூகக் கட்டுப்பாடுகளையும் நிர்ப்பந்தங்களையும் நினைத்து கங்கியின் கலகம் புரிகிற இதயம் இப்போது ஆத்திரம் கொள்ளத் துவங்கியது. நாம் ஏன் தாழ்ந்தவர்கள், இவர்கள் மட்டும் ஏன் உயர்ந்தவர்கள்? இவர்களுடைய மார்பைச் சுற்றித் தவழும் ஒரு கயிறு அவர்களை உயர்ந்தவர்களாக்கி விடுகிறதா? இவர்கள் அனைவருமே  சிறிதளவும் நேர்மை இல்லாதவர்கள். ஒருவரை ஒருவர் மிஞ்சக் கூடிய அளவுக்கு ஏமாற்றுப் பேர்வழிகள். திருடுகிறார்கள், மோசடி செய்கிறார்கள். ஒருவர் மீது மற்றொருவர் பொய் வழக்குப் போடுகிறார்கள். முன்பொரு நாள் டாக்கூர் அந்த ஏழை ஆடு மேய்ப்பவனின் ஆடுகளைத் திருடி  நன்றாக வெட்டிச்  சாப்பிட்டார்.
இந்தப் பண்டிதரின் வீட்டில் வருடம் முழுக்க  சூதாடிகள் விளையாடிக் களிக்கிறார்கள். இந்த சாஹுஜி, நெய்யில் எண்ணையைக் கலந்து விற்கிறார்.
அவர்களுக்காக நம்மை உழைக்கச் செய்கின்றனரே தவிர அதற்கான பணத்தைத் தர அவர்களுக்கு விருப்பமில்லை. அவர்கள் எங்களை விட எந்த விதத்தில் உசத்தி? தற்பெருமை பீற்றிக் கொள்வதில்.
ஆமாம். நாங்கள் உயர்வானவர்கள் என்று அவர்களைப் போல நாங்கள் தெருவில் இறங்கிக்
கூச்சலிடுவதில்லை. நான் கிராமத்தைக் கடந்து செல்லும் போதெல்லாம் காமம் வழியும் கண்களால் அவர்கள் என்னைப் பார்ப்பார்கள். அவர்களுடைய இதயம் பொறாமையால் தடம் புரளும். ஆனாலும் தாங்கள் தான் உசத்தி
என்று டம்பம் அடித்துக் கொள்வார்கள்.
கிணற்றுக்கு அருகே யாரோ வரும் காலடிச் சத்தம் கேட்டது. கங்கியின் மார்பு பயத்தில் படபடவென அடிக்கத் துவங்கியது. யாராவது அவளை இங்கே பார்த்துவிட்டால் அதோகதி தான். தான் கொண்டு வந்திருந்த குடத்தையும் கயிற்றையும் எடுத்துக் கொண்டு தலையைத் தாழ்த்தியபடியே நகர்ந்து அங்கிருந்த மரத்தின் இருண்ட நிழலில் தன்னை மறைத்துக்கொண்டாள். அவர்கள் கொஞ்சம் கூட இரக்கம் இல்லாதவர்கள். இப்படித் தான், “நீங்கள் கூலி தராமல் நான் வேலை செய்யமாட்டேன்” என்ற மங்குவை இவர்கள் அடி அடியென்று அடித்தார்கள். பாவம்! பல மாதங்களுக்கு அவன் வாயிலிருந்து ரத்தம் வழிந்தபடி இருந்தது. ஆனால் இவர்கள் தான் உயர்ந்தவர்கள் !
இப்போது கிணற்றிலிருந்து தண்ணீர்  எடுத்துச் செல்வதற்காக அங்கு இரண்டு பெண்கள் வந்தார்கள்.
“சாப்பிடுவதற்காக வீட்டுக்குள் நுழைந்த அடுத்த நொடியே, கிணற்றிலிருந்து  தண்ணீரைக் கொண்டு வரச் சொல்லி அவர்கள் எனக்கு உத்தரவிடுகிறார்கள்”
“கொஞ்ச நேரம் நாம் அக்கடாவென்று  உட்கார்ந்தால் போதும். இந்த ஆண்களால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாது”
“தானே இங்கு வந்து தண்ணீர் இறைத்துக் கொள்ளும் கண்ணியம் அவர்களுக்கு இல்லை. நாமென்னவோ அவர்களுக்கு அடிமைகள் போல நமக்கு உத்தரவிட மட்டும் தான்
அவர்களுக்குத் தெரியும்”
“நீ அடிமை இல்லாமல் வேறென்ன? உனக்குச் சாப்பாடும் துணியும் தருகிறார்கள். பணம் தேவைப்படும் போது ஐந்தோ பத்தோ அவர்களிடமிருந்து பிடுங்கிக் கொள்கிறாய். நீயும் அடிமையும் ஒன்று தான்”
“அவமானப்படுத்தாதீர்கள் அக்கா! எனக்கு ஓய்வென்பதே இல்லை.
வேறொருவரின் வீட்டில் இவ்வளவு வேலை செய்திருந்தால், நான் வசதியாகவாவது இருந்திருப்பேன். கொஞ்சம் கருணையாவது காட்டியிருப்பார்கள். உயிரைக் கொடுத்து வேலை செய்தாலும் இங்கே திருப்தி என்பதே கிடையாது”
தண்ணீர் நிரப்பியதும் இரு பெண்களும் ​​அங்கிருந்து கிளம்பி விட்டனர். மரத்தின் நிழலில் மறைந்து கொண்டிருந்த கங்கி அங்கிருந்து எழுந்து வந்து கிணற்றை அடைந்தாள். வேலையற்ற வெட்டிப் பயல்களை அப்போது அங்கு காணவில்லை. டாக்கூர் கதவை மூடிக்கொண்டு முற்றத்தில் தூங்கப் போய்விட்டிருந்தார். கங்கி நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். இப்போது அங்கு யாருமே இல்லாததால் எந்தப் பிரச்சினையும் இல்லை. அமிர்தத்தைக் கவர்ந்து வரச் சென்ற இளவரசன் கூட அவ்வளவு கவனமாகவும் புத்திசாலித்தனமாகவும் நடந்து கொண்டிருக்க மாட்டான் என்று தன்னையே மெச்சிக் கொண்டாள். கிணற்றின் மீது பூனைப் பாதம் வைத்து நடந்த கங்கி முதன்முறையாக  வெற்றியின் களிப்பை அனுபவித்தாள்.
கயிற்றின் ஒரு முனையை வாளியின் கழுத்தில் கட்டினாள். எதிரிக் கோட்டையின் உட்புகும் சிப்பாயின் கவனத்துடன் தன் கண்களை இட வலதாக சுழற்றி அந்த இடத்தைக் கூர்ந்து பார்த்தாள். இந்தத் தருணத்தில் அவள் பிடிபட்டால், அவளுக்கு எவ்விதமான கருணையும் காட்டப்படாது. கடைசியாக ஒரு முறை எல்லா தெய்வங்களையும் மனதுள் நினைத்துக் கொண்ட பின், இதயத்தை பலப்படுத்திக் கொண்டு, வாளியைக் கிணற்றுக்குள் விட்டாள்.
வாளி எந்த ஓசையும் ஏற்படுத்தாது மிக மென்மையாகத் தண்ணீரில் மூழ்கியது. கங்கி அதிவிரைவாக கயிற்றை மேலே இழுத்ததும் வாளி கிணற்றின் மேற்பகுதிக்கு வந்தது. வலிமை மிகுந்த ஒரு மல்யுத்த வீரனால் கூட அவ்வளவு வேகமாக அதை இழுத்திருக்க முடியாது.
எட்டி வாளியைப் பிடித்து கிணற்றின் விளிம்பின் மீது கங்கி வைத்த அதே நொடியில் டாக்கூர் வீட்டின் கதவு திடீரெனத் திறந்தது. சிங்கத்தின் கர்ஜனை கூட  அப்போது எழுந்த அந்த ஓசையை விடப் பயங்கரமானதாக கங்கிக்கு இருந்திருக்காது.
பதற்றத்தில் தன் கையிலிருந்த கயிற்றை அவள் நழுவவிட்டதும், பெரும் சத்தமெழுப்பியபடி வாளி கிணற்றுக்குள் விழுந்தது. சில கணங்களுக்குத் தண்ணீரில் அலையெழுப்பியபடி இருந்தது.
அடுத்த நொடி, “யாரது? யார் அங்கே?”  என்று கூச்சலிட்டுக் கொண்டே டாக்கூர் கிணற்றை நோக்கி வேகவேகமாக நடந்து வருவது தெரிந்தது.
சட்டெனக் கிணற்று மேடையின் மீது  குதித்தவள் அதிவிரைவாக அங்கிருந்து  ஓடத் துவங்கினாள்.
மூச்சிரைக்க ஓடிய கங்கி வீட்டை அடைந்தபோது லோட்டாவில் இருந்து அந்த அழுக்கான நீரை ஜோகு குடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்.
*******
-தமிழில் : கயல்
Please follow and like us:

1 thought on “டாக்கூரின் கிணறு – முன்ஷி பிரேம்சந்த்

  1. மிகச்சிறப்பான மொழிநடை வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *