“அமேசான் காட்டின் வேடனான திரு.டெய்லரின் கதை அவ்வளவு விசித்திரமாக வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம், ஆனால் நிச்சயமாக முன்னுதாரணமாக விளங்கக்கூடிய ஒன்று” என்றான் அந்த இன்னொரு ஆள்.
மாசஷுசெட்ஸ் மாகாணத்தின்  பாஸ்டன் நகரைவிட்டு 1937 இல் டெய்லர் வெளியேறியதாக அறியப்பட்ட காலகட்டத்தில் சல்லிக் காசு கூட இல்லாமல் வறுமையில் வாடுமளவுக்கு அவனுடைய ஆன்மா மிகத் தூய்மையாக இருந்தது. 1944 ஆம் வருடத்தில் முதன் முறையாக கிழக்கு அமெரிக்காவின் அமேசான் பகுதியைச் சென்றடைந்தவன் அங்கிருந்த இந்தியப் பழங்குடியினருடன் வாழ்ந்தான். அந்தப் பழங்குடியினருடைய பெயர்களை இங்கு நினைவுகூர வேண்டிய அவசியம் ஏதுமில்லை.
அவனுடைய கண்களுக்குக் கீழ் இருந்த கருவளையத்தினாலும் பட்டினியால் மெலிந்துகிடந்த அவனுடைய தோற்றத்தினாலும், வெகு விரைவிலேயே “வெளிநாட்டுப் பிச்சைக்காரன்” என்று அந்த மக்கள் அவனை அழைக்கத் தொடங்கினர்.  பொன்னிறச் சூரிய ஒளியில் பளபளக்கும் தாடியுடன் அவன் சாலையில் நடந்து சென்றபோது அவனைப் பார்த்த பள்ளிக்கூடக் குழந்தைகள் கூட அவன்மீது கற்களை வீசினர். ஆனால் பணிவான சுபாவமுடைய திரு.டெய்லரின் மீது எந்த வேதனையான விளைவையும் இது ஏற்படுத்தவில்லை. ஏனெனில் ‘பணக்காரர்களைப் பார்த்து ஒருவன் பொறாமை கொள்ளாதவரை ஏழ்மை என்பது அவமானம் இல்லை’ என்பதை அவன் வில்லியம் சி. நைட் தொகுத்த தி கம்ப்ளீட் வொர்க்ஸ் நூலின் முதல் தொகுதியில் வாசித்திருக்கிறான்.
அவனுடைய அந்நியத் தன்மை கொண்ட உடைக்கு  உள்ளூர் மக்கள் சில வாரங்களிலேயே பழகிவிட்டனர். அதுமட்டுமின்றி அவனுடைய நீலக் கண்களாலும், தெளிவற்ற அந்நியமான உச்சரிப்பாலும், சர்வதேசப் பிரச்சினை ஏதாவது  தூண்டப்பட்டுவிடுமோ  எனும் அச்சத்தில் பிரதமரும் வெளியுறவுத் அமைச்சரும் அவனுக்கு மிகுந்த மரியாதை அளித்து வந்தனர்.
பரிதாபகரமான ஏழ்மை நிலையில் இருந்தவன் உண்ணத் தகுந்த தாவரங்களைத் தேடி ஒரு நாள் காட்டுக்குள் பயணித்தான். எந்தப்  பக்கமும் திரும்பத் துணிச்சலின்றி நேராக சிறிது தூரம் நடந்தபிறகு மரங்களுக்குக் கீழ் வளர்ந்திருந்த புதரில் இருந்த இரண்டு கண்கள் தன்னைக் கவனமாகப் பின்தொடர்வதை மிகத் தற்செயலாக அறிந்தான். அச்சத்தில் திரு.டெய்லரின் முதுகுத் தண்டு சில்லிட்டு நடுங்கியது. ஆனால் அந்த அஞ்சாநெஞ்சன்  எதுவுமே கண்ணில் படாதது போல எல்லா ஆபத்தையும் மீறித் தன் வழியில் தொடர்ந்து நடந்தான்.
ஒரே தாவாகத் தாவிய (அதை பூனையின் பதுங்கல் என்று ஏன் அழைக்கவேண்டும்?) அந்த உள்ளூர்வாசி அவனெதிரே வந்து நின்று கூச்சலாக, “தலை வாங்கிக் கொள்கிறாயா? பணம்,  பணம்” என்றான்.
அவன் வழக்கமாகப் பேசும் ஆங்கிலம் இதைவிட இன்னும் மோசமாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்று திரு.டெய்லர் நினைத்தான். விசித்திரமாகச் சுருங்கியிருந்த ஒரு மனிதத் தலையை அந்த இந்தியன் தனக்கு விற்க முயற்சிப்பதைக் கண்ட திரு.டெய்லருக்குத் தன் உடல்நலம் திடீரென பாதிப்படைவது போலிருந்தது.
அதை விலை கொடுத்து வாங்கும் நிலையில் அவன் நிச்சயமாக இல்லை. ஆனால் திரு.டெய்லர் சொன்ன பதில் அந்த இந்தியனுக்குப் புரியாததால், தன் மோசமான ஆங்கிலத்தை நினைத்து அவன் மிகுந்த அவமானமடைந்து மன்னிப்புக் கேட்டவன், அந்தத் தலையை திரு.டெய்லருக்கே பரிசாக அளித்துவிட்டான்.
மிகுந்த மகிழ்ச்சியுடன்
தன் குடிசைக்குத் திரும்பிச் சென்ற திரு.டெய்லர் படுக்கை என்று சொல்லப்படுகிற பனை ஓலையின் மீது படுத்துக்கொண்டு தான் கைப்பற்றிய புதுமையான  பொருளைக் குறித்து ஆனந்தமான சிந்தனையில் அன்றிரவு ஆழ்ந்தான். அவனைச் சுற்றிப் பறந்தபடி ஆபாசமாகக் கலவியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காதற் பூச்சிகள் ஏற்படுத்திய ரீங்காரத்தால்  மட்டுமே அவனுடைய சிந்தனை இடையிடையே தடைப்பட்டது. அப்போது, திரு.டெய்லருடைய கவனம் தன் பக்கம் இருப்பதற்காக நன்றி கூறும் விதத்தில் புன்னகை புரிவதாகக் காட்சியளித்த வஞ்சப் புகழ்ச்சி வழியும் கண்களை நேருக்கு நேர் பார்த்துக்கொண்டும், தாடி மீசையில் இருந்த மயிரை ஒவ்வொன்றாக எண்ணிக் கொண்டும் இருந்தான். இது அவனுக்கு அழகுணர்ச்சி ததும்பும் மிகப் பெரிய ஆனந்தத்தை அளித்தது.
மகத்தான கலாச்சாரமுடைய திரு.டெய்லர் இவ்வாறான ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபடுவது என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்த முறை தன்னுடைய தத்துவார்த்தமான சிந்தனைகளிலிருந்து சீக்கிரமே களைப்படைந்தவன் அந்தத் தலையை தன் மாமா ரோல்ஸடனுக்குப்  பரிசளிக்க முடிவு செய்தான்.
நியூயார்க்கில் வசிக்கும் திரு.ரோல்ஸ்டன் சிறு வயது முதலே ஸ்பானிஷ் அமெரிக்க மக்கள் வெளிப்படுத்தும் கலாச்சாரக் கூறுகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
சில நாட்களுக்குப் பிறகு திரு.டெய்லரின் மாமா இன்னும் ஐந்து உருப்படிகளைத் தயவுகூர்ந்து தந்து உதவ முடியுமா என்று கேட்டார்(நலமாக இருக்கிறாயா என்ற முக்கியமான கேள்விக்கு முன்பே இது கேட்கப்பட்டது). யாரும் அறிந்துகொள்ள முடியாதபடி ‘விண்ணப்பத்தை நிறைவேற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்’ என்ற பதில் கடிதத்துடன் திரு.டெய்லர் அவருடைய ஆசையை நிறைவேற்றிவைத்தான். பெரும் நன்றியுணர்வுடன் திரு.ரோல்ஸ்டன் மேலும் பத்து வேண்டும் என்றார். திரு.டெய்லர் ‘சேவை செய்ய வாய்ப்புக் கிடைத்ததில் ஆனந்தம் அடைகிறேன்’ என்றான். ஆனால் அடுத்த மாதம் இன்னும் இருபதை அனுப்பச் சொன்னபோது தாடியுடன் ஒரு எளிய தோற்றத்தில் இருந்தாலும்  சிறப்பான கலைப் படைப்புகளைக் கண்டறியும் தேர்ந்த ஆற்றலுடைய திரு.டெய்லருக்கு, தன் அம்மாவின் தம்பி அவற்றை அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்கிறாரோ என்ற சந்தேகம் தோன்றியது.
உண்மையைச் சொன்னால் அவர் அதைத்தான் செய்துகொண்டிருந்தார். இந்த வணிகத்தால் பெரும் உத்வேகமடைந்த திரு.ரோல்ஸ்டன் சில காலத்திற்குப் பிறகு திரு.டெய்லருக்கு நாணயமிக்க ஒரு கடிதம் எழுதினார். முழுக்க வர்த்தக விதிமுறைகளுடன் இருந்த அந்தக் கடிதம், பிறரின் தேவைகளை விரைந்துணரக் கூடிய திரு.டெய்லருடைய மனச் சரங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிர்வுகளை ஏற்படுத்தியது.
அவர்கள் உடனடியாக ஒரு நிறுவனத்தை உருவாக்கினர். திரு.டெய்லர் இங்கிருந்து கப்பலில் ஏற்றி அனுப்பும் ஏராளமான சுருங்கிய தலைகளை முடிந்தளவு அதிக விலைக்கு திரு.ரோலஸ்டன் தன் நாட்டில் விற்பது என அவர்கள் இருவரும் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
ஆரம்பத்தில் அவர்களை கவலையுறச் செய்யும்படியான சில சிக்கல்களை உள்ளூர் மக்கள் ஏற்படுத்தினர். ஆனால் ஜோசஃப் ஹென்றி சில்லிமேன் குறித்து திரு.டெய்லரால் எழுதப்பட்ட கட்டுரை மிக அதிக மதிப்புப் பெற்று, மிகத் திறமையான ஒரு அரசியல்வாதியாக அவரை நிறுவியது. இதனால் அதிகாரிகள் அவருக்குத் தேவையான ஏற்றுமதி உரிமம் அளித்தது மட்டுமின்றி தொன்னூற்று ஒன்பது வருடங்களுக்கான சில பிரத்யேக சலுகைகளும் வழங்கினர். தேசபக்தி நிறைந்த இச் செயல் சமூகத்துக்கு வளம் சேர்க்கும் என்றும், ஆதிக் குடிகளுக்குத் தாகம் எடுக்கும்போது (தலைகளைச் சேகரிப்பதற்கு இடையே எப்போதெல்லாம் அவர்கள் சிறிது ஓய்வெடுத்தனரோ அப்போது) அவர்கள் அருந்துவதற்கென்றே, ஜில்லென்ற ஒரு குளிர்பானம் கிடைக்கும் என்றும், அதைத் தயாரிக்கும் அதிசய சூத்திரத்தை அவர்களுக்கு அவனே விநியோகிப்பான் என்றும் தலைமை நிர்வாகத்தினரையும் சட்டபூர்வமான மருத்துவர்களையும் நம்பவைப்பது கடினமாக இல்லை.
சுருக்கமான ஆனால் அறிவார்ந்த ஒற்றைக் கருத்துரையாடல் ஒன்றின் மூலமாக, இதன் நன்மைகளை அறிந்துகொண்ட பிறகு மந்திரி சபை உறுப்பினர்களின் தாய்நாட்டுப் பற்று பொங்கிப் பெருகியது. அதைத் தொடர்ந்து மூன்று நாட்களுக்குப் பிறகு  தலைகளின் உற்பத்தியை வேகப்படுத்துமாறு மக்களுக்கு ஒரு அரசாணை மூலமாக அவர்கள் உத்தரவிட்டனர்.
சில மாதங்களுக்குள்
திரு.டெய்லரின் நாட்டில்
தலைகள் பெரும் புகழடைந்தது நம் அனைவருக்கும் நினைவிருக்கிறது. ஆரம்பக் காலத்தில் அது செல்வந்தர்களுக்கு மட்டுமான சிறப்பு உரிமையாக இருந்தது. ஆனால் எப்படி இருந்தாலும் ஜனநாயகம் என்பது ஜனநாயகம் அல்லவா! ஆகவே சில வாரங்களிலேயே பள்ளிக்கூட ஆசிரியர்களும்கூட அதை வாங்கிச் செல்லும் நிலை ஏற்பட்டதை யாரும் மறுக்கமுடியாது.
தன்னகத்தே சுருங்கிய தலையொன்று இல்லாத வீடு தோல்வியுற்ற வீடாகக் கருதப்பட்டது. அந்த நாட்டை வந்தடைந்த தலை சேகரிப்பாளர்கள், பதினேழு தலைகளை ஒருவர் கைவசம் வைத்திருப்பது மோசமான ரசனையைக் குறிக்கும். ஆனால் அதுவே பதினோரு தலைகளைத் தம்வசம் வைத்திருப்பது பெரும்புகழ் தரும் என்பது போன்ற பல முரண்பாடுகளோடு வந்தனர். உண்மையிலேயே நேர்த்தியான ரசனையுடைய சில பொதுமக்கள் பொது இடத்தில் தனித்துத் தெரியும்படி வித்தியாசமான கூறுகளுடைய தலைகளை மட்டுமே வாங்குமளவுக்கு அவை பெரும் புகழ் பெற்றன. வீரதீரச் செயல்களுக்காகப் பல விருதுகளால் கௌரவிக்கப்பட்ட பிரஷ்ய நாட்டின் போர்த் தளபதி ஒருவரின் நீளமான மீசையுடைய அரிய தலை, டேன்ஃபெல்லர் கழகத்துக்குப் பரிசாக அளிக்கப்பட்டது. அதன் பலனாக லத்தீன் அமெரிக்க மக்களின் உற்சாகமிக்க கலாச்சார மேம்பாட்டுக்காக உடனடியாக மூன்றரை மில்லியன் டாலர்கள் மானியம் கிடைத்தது.
இதற்கிடையில் அரண்மனைக்குச் செல்லத் தமக்கான தனிப் பாதை அமையுமளவுக்குப் பழங்குடியினரின் பெருவளர்ச்சி அடைந்னர். நிறுவனம் தங்களுக்கு அளித்திருந்த சைக்கிள்களில் தொண்டையைச் செருமியபடி, தங்கள் தொப்பியில் செருகியிருந்த இறகுகளை மற்றவர்களுக்குக் காட்டியபடி தீவிரமான ஒரு சிரிப்புடன் அந்த ஆனந்தமான பாதையை ஞாயிறன்றும் சுதந்திர தினத்தன்றும் சட்டப் பேரவை உறுப்பினர்கள் வளையவந்தனர்.
ஆனால் தவிர்க்க முடியாதவை என்பவை உண்டல்லவா. எக் காலமும் நற்காலமாய் இருப்பதில்லையே. எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றி தலைகளுக்கான பற்றாக்குறை ஆரம்பித்தது.
திருவிழாவின் சிறப்பான காட்சி அதன் பிறகுதான் தொடங்கியது.
இயற்கை மரணங்கள் போதுமானதாக இல்லை. நேர்மையானவனாகத் தன்னைக் கருதியிருந்த பொதுச் சுகாதாரத் துறை அமைச்சர், அத்தனை விளக்குகளும் அணைக்கப்பட்டு, இருள் கவிந்த இரவொன்றில்,  எப்போதைக்கும் நிறுத்தவே போவதில்லை என்பது போலத் தொடர்ந்து தன் மனைவியின் மார்பை வருடிக்கொண்டிருந்தார். அப்போது, நிறுவனத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற அளவு இறப்பு விகிதத்தை அதிகரிக்கும் திறமை தனக்கு இல்லை என்று நினைப்பதாகத் தன் இயலாமையை அவளிடம் ஒப்புக்கொண்டார். அவள் கவலைப்படக்கூடாது என்றும், அனைத்தும் சரியாகிவிடும் என்றும், இப்போது உறங்கப் போவதே அவர்கள் இருவருக்கும் நன்மை பயக்கும் என்றும் கூறினாள்.
இத்தகைய நிர்வாகக் குறைபாட்டை ஈடுகட்டத் தீவிரமான நடவடிக்கைகள் தேவைப்பட்டன. கடுமையான மரண தண்டனையும் விதிக்கப்பட்டது.
தமக்குள் ஆலோசித்த நீதிபதிகள், மிகச் சிறிய குற்றங்களுக்கும் கூட தூக்கு தண்டனை, சுட்டுக் கொல்வது எனச் சட்ட மீறலின் தீவிரத்தன்மையைப் பொருத்துத் தீர்ப்பளித்தனர்.
சின்னஞ் சிறு தவறுகளும் குற்றச் செயல்களாகக் கருதப்பட்டன. உதாரணத்திற்கு வெகு இயல்பான ஒரு உரையாடலில் யாராவது கவனக்குறைவாக, “அதிக வெப்பமாக இருக்கிறது” என்று சொல்லிவிட்டால், அதன் பின் வெப்பமானியைக்கொண்டு அவ்வாறு வெப்பமாக இல்லை என்று நிரூபிக்கப்பட்டால், அந்த நபருக்கு சிறிய அளவில் அபராதம் விதிக்கப்பட்டு உடனடியாக அவனுடைய தலை துண்டிக்கப்பட்டு நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டது. அவனைப் பிரிந்து துயரத்தில் வாடும் அவனுடைய குடும்பத்தாரிடம் தலையும் காலுமற்ற முண்டமாக அவனுடைய உடல் திருப்பியளிக்கப்பட்டது என்பதை இங்கு குறிப்பிடுவதே நியாயமாக இருக்கும்.
நோய் குறித்த விஷயங்களைக் கையாண்ட சட்டத்துறை, இதன் காரணமாகப் பரந்துபட்ட பின்விளைவுகளைச் சந்தித்தது. அந்நிய நாட்டுத் தூதர்கள் இடையேயும் நட்பு நாடுகளின் தூதரகங்களின் இடையேயும் அடிக்கடி ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தப் பிரசித்திபெற்ற சட்டத்தின்படி மோசமான உடல்நலக் குறைபாடுள்ளவர்களுக்குத் தாம் வாழ்வில் செய்ய நினைத்த விஷயங்களை எல்லாம் முடித்துவிட்டுவந்து சாவதற்கு இருபத்து நான்கு மணி நேரம் தரப்பட்டது. ஆனால் அதற்கு இடைப்பட்ட நேரத்தில் அதிர்ஷ்டவசமாக அவர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு அந்த நோயைப் பரப்பினால், அவர்களால் தொற்றுக்கு ஆளான ஒவ்வொரு உறவினர் கணக்கிலுமாகச் சேர்த்து ஒரு முழு மாதத்திற்கான விலக்கு அந்த நோயாளிக்கு வழங்கப்பட்டது. சிறு உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களும், உடல் நலமில்லாதது போல உணர்ந்தவர்களும் மொத்த தேசத்தின் முகச் சுளிப்புக்கும் தகுதி பெற்றவராயினர். அவர்களைக் கடந்து சென்ற ஒவ்வொருவருக்கும் அவர்கள் முகத்தின்மீது எச்சில் துப்பும் உரிமை கிடைத்தது. யாருடைய நோயையுமே குணமாக்காத மருத்துவர்களுக்கு வரலாற்றில் முதல் முறையாக அங்கீகாரம் கிடைத்தது (அவர்களுள் நிறைய மருத்துவர்களின் பெயர்கள் நோபல் பரிசுக்குக் கூட
பரிந்துரைக்கப்பட்டன). மரணித்தலே மிகுந்த தேசபக்தியின் சிறந்த வெளிப்பாடாக ஆனது. இது தேசிய அளவில் மட்டுமின்றி கண்டங்களைக் கடந்து பரவுமளவுக்குப் புகழ் பெற்றது.
சார்புத் தொழில்கள் (உதாரணத்திற்கு நிறுவனம் அளித்த தொழில்நுட்ப உதவியால் சவப்பெட்டி உற்பத்தி செழிப்படைந்ததைப் போல மற்ற தொழில்கள்) அடைந்த வளர்ச்சி காரணமாகப் பெரும் பொருளாதார வளர்ச்சி எனும் காலகட்டத்துக்குள் நாடு காலடி எடுத்து வைத்தது. தங்கள் அழகிய முகங்களை இலையுதிர் காலப் பொன்னிறம்  சூழ்ந்திருக்க, புதிதாய் உருவான மலர்ப் பாதைகளில் சொகுசு நடைபயின்ற அரசுப் பிரதிநிதிகளின் மனைவியர் மூலமாக இந்த வளர்ச்சி வெளிப்படையாகத் தெரிந்தது என்று குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அதனருகே இருந்த பாதையில் நின்றிருந்த சில பத்திரிகையாளர்கள் அவர்களைப் பார்த்துப் புன்னகைத்து வரவேற்று தங்கள் அணிந்திருந்த தொப்பியைக் கழற்றித் அதனை அவர்களை நோக்கித் தாழ்த்தி வணங்கினர். அவர்கள் கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும், “ஆம். எல்லாம் நல்லபடி இருக்கிறது” என்று தம் தலையை அசைத்து அப் பெண்கள் பதில் கூறிக் கொண்டிருந்தனர்.
அவ்வாறு நின்றிருந்த பத்திரிக்கையாளர் ஒருவரிடமிருந்து இடிச் சத்தம் போன்ற தும்மல் ஒருமுறை வெளிப்பட்டது. அது ஏன் நிகழ்ந்தது என்ற காரணத்தை அவரால் விளக்க முடியவில்லை. இது தீவிரவாதச் செயல் என்று குற்றஞ்சாட்டப்பட்டதால் தண்டனையை நிறைவேற்ற இராணுவ வீரர்கள் வழக்கமாகக் கைதிகளைச் சுட்டுக் கொல்லும் சுவரின் எதிரே அவர் உடனே நிறுத்திவைக்கப்பட்டார். சுயநலமற்ற அவருடைய மரணத்துக்குப் பின்னரே அந்தப் பத்திரிகையாளரின் தலை நாட்டின் பருத்த தலைகளில் ஒன்று என்று மொழி வல்லுனர்கள் அங்கீகரித்தனர். ஆனால் அது சுருங்கிய பிறகு மற்ற தலைகளைப் போலவே காட்சியளித்ததால் யாராலும் எந்த வேறுபாட்டையும் காணமுடியவில்லை.
அப்புறம், திரு.டெய்லர்? அவர் அதற்குள்ளாகவே பிரதமரின் சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுவிட்டிருந்தார். தனிப்பட்ட ஒரு முயற்சியின் முன்னுதாரணமாகத் திகழும் திரு.டெய்லர் பணத்தை ஆயிரங்களாக எண்ணிக் கொண்டிருந்தார். ஆனால் இதன் காரணமாக அவர் தன் தூக்கத்தை இழக்கவில்லை. ஏனெனில் அவர் வில்லியம் சி.நைட் தொகுத்த கம்ப்ளீட் வொர்க்ஸின்  முதல் தொகுதியில் ஏழ்மை நிலையை ஒருவர் வெறுக்கவில்லை என்றால் செல்வந்த நிலை அவமானமில்லை என்பதை வாசித்திருக்கிறார்.
எக் காலமும் நற்காலமாய் இருப்பதில்லை. நான் இதை முன்பே கூறியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
நிறுவனத்தின் தற்போதைய செழிப்பான நிலை காரணமாக அதிகாரிகள், அவர்களின் மனைவிகள், பத்திரிகையாளர்கள், அவர்களுடைய மனைவியர் ஆகியோர் மட்டுமே எஞ்சியிருக்கும் தருணம் ஏற்பட்டது. இதற்கு ஒரே தீர்வு பக்கத்து தேசங்களின் பழங்குடியினர்மீது போர்  தொடுப்பதுதான் என்று முடிவுகட்டினார், எதற்கும் பெரிதாக அலட்டிக் கொள்ளாத திரு.டெய்லர்.  ஏன் கூடாது? இது வளர்ச்சி!
சில சிறிய வகை பீரங்கிகளின் உதவியுடன் மூன்றே மாதங்களில் முதல் பழங்குடியினரின் தலைகள் துண்டிக்கப்பட்டன. திரு.டெய்லர் தன் எல்லையை விரிவுபடுத்துவதில் எழுந்த புகழை ருசிக்கத் தொடங்கினார். அதன் பிறகு இரண்டாவது மூன்றாவது நான்காவது ஐந்தாவது என ஒவ்வொரு பழங்குடியாக இது தொடர்ந்தது. கட்டுக்கடங்காத வளர்ச்சி வேகம் காரணமாக தொழில்நுட்ப வல்லுநர்கள் எவ்வளவு முயற்சித்தும் அதற்கு மேல் போர் தொடுக்க அண்டை நாட்டுப் பழங்குடிகளே இல்லாமல் போயினர்.
முடிவு ஆரம்பமானது.
சிறிய பாதைகள் மறையத் தொடங்கின.யாராவது ஒரு பெண்ணோ அல்லது கவிஞனோ தங்கள் கைகளில் ஒரு நூலை ஏந்தியபடி சாலையை வேடிக்கை பார்த்தபடி மெல்ல நடந்து செல்லும் காட்சிகள் யாவும் இப்போது பெரும்பாலும் காணக் கிடைப்பதில்லை. இரண்டு பாதைகளுக்கு இடையே களைகள் வளர்ந்ததுடன் முட்களும் இருந்ததால் பெண்கள் தம் மென்மையான பாதங்களுடன் அங்கு நடை பயில்வது சிரமமாக இருந்தது. தலைகளோடு சேர்த்து சைக்கிள்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. மகிழ்ச்சியான நம்பிக்கையூட்டும் வாழ்த்துகள் ஏறத்தாழ மறைந்தேபோயின.
சவப்பெட்டி தயாரிப்பவன் இதற்கு முன் இல்லாத அளவுக்கு மனச் சோர்வுடனும்   ஈமச் சடங்குகளுக்குச் செல்வது போன்ற தோற்றத்துடனும் காணப்பட்டான்.  தங்க நாணயங்கள் நிறைந்த சிறிய பை  ஒன்றைக் கண்டெடுத்து தலையணைக்குக் கீழ் வைத்து உறங்கி, அடுத்த நாள் காலை விழித்தெழுந்து தேடுகையில் காணாமல் போனதாக, ஒரு இனிய அற்புதக் கனவு போல கடந்த காலக் காட்சிகள் அவர்கள் அனைவருக்கும் தோன்றியது.
துரதிர்ஷ்டவசமாக வழக்கம் போல வணிகம் தொடர்ந்து நடந்தது. ஆனால் இரவு உறங்கி விழித்தெழுந்தால் காலை நாம் வேற்று நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு விட்டிருப்போமோ எனும் அச்சத்தில் மக்களுக்கு உறக்கம் வரவில்லை.
திரு.டெய்லரின் நாட்டில் தலைகளுக்கான தேவை சர்வநிச்சயமாக அதிகரித்தபடி இருந்தது. தினமும் புதிய மாற்றுகள் வந்தவண்ணம் இருந்தாலும் அவற்றால் மக்களை ஏமாற்ற இயலவில்லை. மக்கள் லத்தீன் அமெரிக்கர்களின் சிறிய தலைகளே வேண்டும் என்று வற்புறுத்தினர்.
இறுதி நெருக்கடி முடிவுக்கு வந்தது. நம்பிக்கை இழந்துவிட்ட திரு.ரோல்ஸ்டன் தலைகள் வேண்டும் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார்.  நிறுவனப் பங்குகளின் விலைகள் பாதாளத்தில் வீழ்ந்தாலும், தன் மருமகன் ஏதாவது செய்து இந்த சூழலில் இருந்து காப்பாற்றுவான் என்று நிச்சயமாக நம்பினார்.
தலைகள் வைத்த பெட்டிகள் தினசரி கப்பலில் ஏற்றப்பட்ட நிலை மாறி மாதமொரு முறையாகக் குறைந்தது. ஆனாலும் அவற்றில் குழந்தைகளின் தலைகள், பெண்களின் தலைகள், ஏன் அரசுப் பிரதிநிதிகளின் தலைகள் கூட இருந்தன.
திடீரென அனைத்தும் முடிவுக்கு வந்தது.
தங்களுடைய துக்கத்தை வெளிப்படுத்திய நண்பர்களின் இரைச்சலாலும், பீதிநிறைந்த அவர்களின் கூச்சலாலும் திகைத்துப் போய், பங்குச் சந்தையில் இருந்து  மோசமான துயரம் நிறைந்த ஒரு வெள்ளிக்கிழமையன்று வீடு திரும்பினார் திரு.ரோல்ஸ்டன். தபாலில் ஒரு பெட்டி வந்திருந்தது. அதைத் திறந்து பார்த்ததும் அவர் ஜன்னல் வழியே வெளியே குதித்துவிட முடிவெடுத்தார் (துப்பாக்கியால் எழும் ஓசை அவருக்கு அச்சமூட்டும் என்பதால் அவர் சுட்டுக் கொண்டு சாக விரும்பமில்லை). எங்கோ தொலைவில், அமேசான் காட்டில் இருந்து வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த திரு.டெய்லரின் சுருங்கிய தலை அந்தப் பெட்டிக்குள் இருந்ததைக் கண்டார். அது ஒரு சிறுவனின் பொய்ப் புன்னகையுடன் அவரைப் பார்த்து, “என்னை மன்னித்துவிடுங்கள், நான் உண்மையில் வருந்துகிறேன், நான் இனி இப்படிச் செய்யமாட்டேன்” என்று சொல்வது போலிருந்தது.
****
ஆசிரியர் குறிப்பு:-
அமெரிக்காவில் பிறந்து மெக்சிகோவுக்குக் குடிபெயர்ந்த எழுத்தாளர் அகஸ்டோ மொண்டரஸ்சோ ஆரம்ப நிலைக் கல்வி மட்டுமே பயின்றவர். தி ப்ளாக் ஷீப் அண்ட் அதர் ஃபேபுல்ஸ் இவருடைய புகழ்பெற்ற சிறுகதைத் தொகுப்பு. இவருடைய படைப்புகள் நவீனமயமாக்கலையும் அதன் விளைவுகளையும் பற்றியே பெருமளவு பேசின. நுட்பமான விஷயங்களும் பகடியும் ஒருங்கிணைந்த ஒரு வடிவத்தை அவருடைய கதைகளும் நாவல்களும் கொண்டிருப்பினும் தற்கால லத்தீன் அமெரிக்க வாழ்வின் நிதர்சனங்களை அவை சிறப்பாகப் பிரதிபலிக்கின்றன.
மிகக் குறைவான படைப்புகளையே இலக்கிய உலகிற்குத் தந்துள்ளமையால் இலக்கிய விமர்சகர்களால் இரண்டாம் நிலை இலத்தீன் அமெரிக்க எழுத்தாளராக அடையாளப்படுத்தப்பட்டாலும் தன்னுடைய மறைமுகக் கதை சொல்லும் உத்தியால் போர்ஹேவுக்கு இணையாக வைக்கப்படுகிறார். முரண்கள், பகடி, நுண்ணறிவு ஆகியன கலந்த தனித்துவமான எழுத்துநடை கொண்ட அகஸ்டோ பின்நவீனத்துவ இலக்கியத்தின் உதாரணமாகக் கருதப்படுவதன் காரணத்தை விளக்கும் விதமாக இக் கதை அமைந்துள்ளது.
தமிழில்- கயல்
Please follow and like us:

1 thought on “திரு.டெய்லர் – அகஸ்டோ மொண்டரஸ்சோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *