​​​​

தன் அடர் காப்பி நிறக் கண்கள் நிரம்பித் தளும்பிட அவள் என்னை நோக்கி முணுமுணுத்தவாறு இந்த சொற்களைச் சொன்னாள்.

“ஒவ்வொரு வாட்டி அடிக்கும் போதும் இததான் சொல்லி என்னை சமாதானப் படுத்திரீங்க, நானும் சரி போட்டும் இனி நடக்காது

இனி நடக்காதுணு எத்தனை வாட்டி தான் பொறுத்துப் போறதுணு தெரியல”.

நான் சற்றே துணுக்குற்று அவள் சொன்ன சொற்களைச் செறிக்க முற்பட்டேன். இத்தனை நாட்களில் அவள் இதைப்போன்று ஒருபொழுதும் கூறியதில்லை. வழக்கமாக அழுதுவிட்டு சமாதானம் ஆகிவிடுவாள், நானும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் இம்முறைஅவள் இதை எவ்வாறோ தொகுத்துக்கொண்டுவிட்டாள். ஒரு விஷயத்தை நாம் தொகுத்துக்கொண்டு விட்டோமென்றால் அதன் பிறகு அதற்கு ஒரு புறவயமான உருவம் இருப்பது போல் ஒரு பிரமை நமக்கு ஏற்பட்டுவிடுகிறது.உருவம் வந்துவிட்ட ஒன்றை நாம் ஒருபொழுதும் தவிர்க்க முடியாதது மட்டுமல்ல, தவிர்க்க நினைத்தாலும் அதிலிருந்து நாம் வெளியேறுவது கடினமான ஒன்றாக மாறிவிடுகிறது. எனக்கு என் மீதே வெறுப்பாக வந்தது. நான் ஏன் அவளை சமாதானம் செய்வதை விடுத்து கருத்து புறவயம் என்று எதையோ நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

“மன்னிச்சுக்கம்மா,சாரி, நான் எதோ கட்டுபாடில்லாம உணர்ச்சிவசத்துல அடிச்சிட்டேன்”.

“அதான் நான் சொன்னேன்ல,நீங்க ஒவ்வொரு தடவை அடிக்கும் போது இப்படிதான் சொல்றீங்க, அடிக்கும் போது உங்களுக்கு எதுவும் தெரியமாட்து, ஆனா அப்புறமா வந்து மன்னிப்பு கேக்குறீங்க”.

அவள் தனது தலையைத் திருப்பிக் கொண்டாள்.

வழக்கமாக நான் கோபத்தில் அடிக்கும் பொழுது அவளை கன்னத்தில் அறைவேன்.அல்லது எனது இடது கைகளால் அவள் தலையைத் திருப்பி பிடித்துக்கொண்டு, அவள் கால்களுக்குள் என் ஒரு காலை விட்டு அவள் உடலை என் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து பின் தோள்பட்டையில் குத்துவேன். ஆனால் இன்று சற்றே பிறழ்ந்து அவளை சுவற்றின் ஓரமாக ஒரு முக்கில் சாய்த்து வைத்து அவள் இடுப்பில் நான்கு முறை மிதித்துவிட்டேன்.

அவள் அறையில் மூலையில் சுருண்டு கிடந்துதான் என்னுடன் பேசினாள். சற்று நேர அமைதிக்குப்பின் தனது அருகில் கிடந்த கைப்பேசியை எடுத்து அதன் திரையைத் தடவினாள். நான் கட்டிலிலில் நானிருந்த இடத்தை விட்டு நகர்ந்து அவள் அருகில் சென்று குத்தவைத்து கைப்பேசித் திரையைப் பார்த்தேன். அவள் அணுக்கத் தொடர்புகளை பெருவிரலால் தடவினாள். விரல் அனிச்சையாக அவளின் தம்பியின் படத்தின் மீது நின்றது. நான் சற்று பதற்றமாகி “ஏ கனி எதுக்கு இப்பம் நீ யாரு யாருக்கோ கால் பண்ற?”

“யாருக்கோ எல்லாம் இல்லை, என் தம்பிக்கு தான் கால் பண்றேன்”

“ஏ என்னப்பா உனக்கு தெரியாததா, கிரியேட்டிவிட்டி இருக்குறவங்க இப்படிதான் கொஞ்சம் ஆக்ரோஷமா இருப்பாங்க”.

“இதையேதான் எப்பவும் சொல்றீங்க, நானும் நம்புறேன்”.

“நம்பலணா போடி, எனக்கு ஒரு மயிருமில்ல”.

அவள் மீண்டும் உடைந்து அழுதுவிட்டாள். நான் அந்த அறையை விட்டு வெளியேறி முன் அறை சோபாவில் வந்து அமர்ந்துகொண்டேன். ஏதோவொன்று என்னை மீண்டும்ப டுக்கையறைக்குள் உந்தித் தள்ளிக்கொண்டிருந்தது. அமர்ந்திருக்கும் சோபா பள்ளத்தில் விழுந்துவிடும் என்பது போல் ஒரு மாயப்பெரும் உள்ளிளுப்புக்குள் தத்தளித்துக்கொண்டிருந்தேன். கால்களை தரையில் அழுத்திப்பிடித்தவாறு எழுந்து செல்வதை தற்காலிகமாக ஒத்திப்போட்டேன். சில நிமிடங்களுக்குப் பிறகு எழுந்து படுக்கையறைக் கதவைத் திறந்து பார்த்த பொழுது அவள் தனது அழுகையை நிறுத்தியிருக்கவில்லை.

எனக்கு ஏனோ ஆத்திரமாக வந்தது.மீண்டும் அவளை இழுத்து அடிக்கவேண்டுமென்பது போல ஒரு வெறி எழுந்து வந்துகொண்டிருந்தது. மீண்டும் வந்து சோபாவில் அமர்ந்துகொண்டேன். இப்பொழுது நான் செய்யக்கூடுவது ஒன்றே ஒன்றுதான், எழுந்து எங்காவது சென்றுவிடுவது, அதன் வழியாக சற்றே இந்தப்பிரச்சனையை ஆறப்போடுவது. அந்த ஒரு சிறிய இடைவெளியின் வழியாக இருவரும் இதிலிருந்து வெளியேறிவிடுவது. ஆனால் நான் வெளியே செல்லும் நேரம் அவள் தன் தம்பிக்கு கைப்பேசியில் அழைத்து சொல்லிவிட்டால்?, அவள் அப்படிச் செய்யமாட்டாள் என்று தெரியும், எனினும் தற்பொழுது அவள் இருக்கும் கோபத்தில் அவ்வாறு செய்துவிட்டால், ஒருவேளை அவள் தம்பியை கூப்பிட்டுவிட்டால், நான் அவர்களிடம் சம்பாதித்து வைத்திருக்கும் மிக மிக சாதுவான மனிதன் என்ற பிம்பம் உடைந்து சிதறிவிடும்.ஏற்கனவே அவள் சொல்லியிருக்ககூடும் என்று தோன்றியது எனக்கு. ஆனால் கடந்த மாதம் இங்கு வந்திருந்தபொழுது அவன் தம்பி என்னிடம் பழையது போலத்தான் நடந்துகொண்டான். நான் குற்றவுணர்ச்சி மேலிட அவன் என்னிடம் உரையாடிய ஒவ்வொரு வரிகளையும் அவன் உடல்மொழியையும் அன்று கவனித்தவாறிருந்தேன். ஆனால் அவற்றில் ஒரு இம்மியளவு கூட மாற்றம் தெரியவில்லை. ஆனால் வீட்டைவிட்டு கிளம்பும் தருவாயில் ஏதோ சொல்லவந்தவன் பின் தன் தொண்டைக்குள்ளேயே முழுங்கிவிட்டு  சென்றுவிட்டான். அப்படியானால் இவள் அவனிடம் சொல்லிருப்பாளா?

எழுந்து படுக்கையைறைக்குள் சென்றேன்.

“யே இங்கப் பாரு எனக்கு எவனக்கண்டும் பயமில்லை சரியா, நீ வேணும்ணா உன் தம்பிக்கு கால் பண்ணிக்க எனக்கு ஒரு மயிரும் கிடையாது.

நீ ஏற்கனவே அவன்ட்ட சொல்லிட்டணு எனக்குத் தெரியும், அதனால எனக்கு ஒரு புண்ணாக்கும் கெடையாது, நான் டிவோர்ஸ் பண்ணிட்டு போய்ட்டேயிருப்பேன். டிவோர்ஸ் பண்ணியாச்சுண்ணா அப்புறம் அவன் மட்டுமில்ல உங்க குடும்பத்துல யாரும் என்னை ஒண்ணுமே கேக்க முடியாது”.

சற்றே அழுகையை நிறுத்தியிருந்த அவளின் தாடைப் பொங்கியபடியே இருந்தது. மெல்ல கண்ணீரை நழுவவிட்டு பின் ஓசை கொண்டு அழத்துவங்கிவிட்டு என்னிடம் சொன்னாள்.

“இதயெல்லாம் வெளியிலப் போய் சொன்னா எனக்குதான் அசிங்கம். எனக்கு அப்பிடி சொல்லவேண்டிய அவசியம் எதுவுமில்லை”.

சட்டென ஒரு இனம்புரியாத ஆசுவாசம் என்னைத் தழுவிக்கொண்டது. ஒரு சிறு கரிசனம் அவள் மீது தோன்றியது. லேசாக நான் புன்னகைக்கிறேன் என்று கூடத் தோன்றியது.

ஒரு நொடிதான் பின் மெல்ல அவள் மீதான வெறுப்பு விரட்டப்பட்ட நாய் திரும்பி கடிக்கவருவதைப்போன்று திரும்ப வந்துவிட்டது. நான் மெல்ல என்னை கட்டுப்படுத்திக்கொள்ள முயன்றுகொண்டிருந்தேன். படுக்கையறையிலிருந்து வெளியேறி நடு அறையில் ஒரு பாயை விரித்து தலையணை ஒன்றைப் போட்டு படுத்துக்கொண்டேன். உள்ளே அவள் தன் முட்டியை தலையில் கூட்டியவாறு கட்டிலில் ஒருக்கழித்துப் படுத்திருந்தாள். என் நினைவுகள் கொப்பளித்தன. நான் ஒவ்வொருமுறை அவளை இத்தகைய துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் பொழுது அவள் உடைந்து அழுவதைத் தவிர வேறு எதுவும் செய்வதில்லை. ஆனால் நான் அவளிடம் கடைசியாகக் கூறும் ஒன்று உண்டு.

“கிரியேட்டிவிட்டி இருக்கிறவங்க கொஞ்சம் அக்ரஸிவாதாம்மா இருப்பாங்க”.

அவள் பெரும்பாலும் சமாதானம் ஆகிவிடுவாள். சற்று நேரத்தில் நான் எழுதப்பொகும் கதை குறித்து கண்கள் விரியக் கேட்டுக்கொண்டிருப்பாள். அவை குறித்து அவளுக்குச் சொல்ல பெரிய அபிப்பிராயங்கள் எதுவுமில்லை எனினும் கேட்டுக்கொண்டிருப்பாள். முதன்முதலாக என் கதையொன்று ஒரு அச்சு இதழில் வெளிவந்த அன்று அவளிடம் காட்டிவிட்டு நான் தூங்கிவிட்டேன். ஆனால் அன்று வெகுநேரம் அவள் தொடர்பு விட்டுபோன தோழிகளிடமெல்லாம் தொடர்புகொண்டு எப்படி இருக்கிறார்கள் என்ற பேச்சிற்குப் பிறகு மிக மிக நாசூக்காக என் கதை வெளிவந்ததைச் சொல்லிக்கொண்டிருந்தாள்.

எங்க வீட்டுல ஒண்ணு கெடக்குது பாத்துக்க, எப்படி தான் வளத்து விட்டாங்கணு தெரியல, திடீர்ணு கதையெல்லாம் எழுதும், போன வாரம் ஒரு கதை என்னது உயிர்மையா என்ன எழுவோ அந்த புக்ல வந்துச்சு.

இந்த இடத்தை சரியாக நினைத்துக்கொண்ட பொழுது என் கண்களின் நீர் வழிந்துவிட்டது. நான் புரண்டு தலையணைக்குள் என் முகத்தைப் புதைத்துக்கொண்டேன்.

மூச்சு முட்டுவது போல் நெஞ்சு முழுவதும் அடைத்து கண்ணீர் பெருகி தலையைணை நனைந்தது.

எத்தனை முறை அவளை நடுரோட்டில் என் நடுத்தர வர்க்க இயலாமை புத்தியினால் கடிந்திருப்பேன். அவமானப்படுத்தியிருப்பேன். ஆம், அன்றொருமுறை தில்லைகங்காநகரிலிருந்து மேடவாக்கம் நோக்கி வரும்பொழுது அவள் தரமணியில் ஒரு கடைக்கு செல்லலாம் என்றாள். எங்கிருந்தோ என்னை நிமிடம் தோறும் தொடர்ந்து கொண்டிருந்த அந்த கருமேகம் மழைபொழிந்து விட்டது.நான் முழுவதும் நனைந்திருந்த பொழுது எனது இருச்சக்கர வாகனத்தை சாலையின் ஓரம் நிறுத்தியிருந்தேன்.

“எறங்குடி கீழ வண்டியவிட்டு , நாயே”.

அவள் துடித்து போய் கெஞ்சினாள்.

“நம்ம தரமணி போகவேண்டாம்மா, வண்டிய எடுங்கம்மா. ப்ளீஸ்மா ப்ளீஸ்”.

“எறங்குடீ வண்டியவிட்டு நாயே”.

அவள் அழுதவாறே இறங்கினாள். இரவு ஏழு மணியென்பதாலும், அது சென்னை பறக்கும் ரயிலின் வேலை நடந்துகொண்டிருந்த கட்டிட இடிபாடுகளின் அருகில் என்பதாலும் ஆள் நடமாட்டம் முற்றிலுமில்லை. நான் அவளை இறக்கிவிட்டு வண்டியை முறுக்கினேன். முன்னூறு அடி கூட சென்றிருக்கமாட்டேன் அவள் அருகில் ஒரு வண்டி தன் வேகத்தைக் குறைப்பதை கண்ணாடியில் பார்த்து இதயம் பரபரபக்க வண்டியை திருப்பி அவளைடம் சென்றேன். அந்த வண்டி என்னைக் கண்டதும் விலகிச் சென்றது.

“ஏறு” என்றவுடன் தாவி ஏறிக்கொண்டாள்.

வண்டி தாம்பரம் அருகில் வந்தவுடன் என் கைகளால் அவள் முட்டியைத் தடவினேன். அவள் பதிலெதுவும் பேசாமல் அமர்ந்திருந்தாள். நான் மீண்டுமொருமுறை அவள் முட்டியைத் தடவினேன்.அவள் மீண்டும் பதிலெதுவும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள்.

“இருக்கியா”.

“ம்”.

“சாரிமா, உனக்குதான் தெரியுமில்ல” என்று தொடங்கியவுடன் அவள் சொன்னாள்

“கிரியேட்டிவிட்டி இருக்கிறவங்க கொஞ்சம் அக்ரஸிவாதாம்மா இருப்பாங்க”.

நான் காரில் அடிபட்ட ஒரு பூனையின் ஆட்டத்தைப் போல வண்டியை நான்கு ஐந்து முறை முறுக்கிவிட்டு அமைதியானேன்.

பின் எத்தனை எத்தனை தடவைகள்.எல்லா முறையும் அவளை அந்த ஒரு சொற்றொடர்தான் ஆறுதல் படுத்தியிருக்கிறது. சென்னை வேளச்சேரி சரவணா ஸ்டார்ஸில் ஒரு மாடி மேலே நின்றிருந்தவளை பார்த்து கீழிருந்து “ஏ கிறுக்கி கீழ வாடி” என்று பெரும் கூட்டத்தில் சொன்ன பொழுது, ஊருக்குப் புறப்படும் பொழுது வந்த சண்டையில் துணியெல்லாம் அணிந்து புறப்பட்டு நின்ற அவளை அப்படியே விட்டுவிட்டு தனியாக நான் மட்டும் சென்றபொழுது, அவள் தம்பிக்கு பிறந்தநாள் பரிசு கொடுப்பதில் வந்த தகராறில் அவள் கையை நிலைக் கதவில் அடித்து உடைத்தபொழுது, அவள் கைப்பேசியில் பேசிக்கொண்டே சோறு போட நேரமாகிவிட்டதென்ற கோபத்தில் அவள் கைப்பேசியைப் புடுங்கி நான்காம் மாடியிலிருந்து கீழே எறிந்தபொழுது, என் அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துசொல்ல மறந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தாள் என்பதற்காக தொலைக்காட்சியை அடித்து நொறுக்கியபொழுது, உப்பு கரிக்கும் சாம்பார் தட்டில் ஊற்றப்பட்ட அன்று அதை எடுத்து சுவற்றில எறிந்தபொழுது என்று இந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனை முறைகள்.

அத்தனை முறையும் அவள் அழுகையையும் ஆற்றாமையையும் அரற்றலையும் வெம்மையையும் “கிரியேட்டிவிட்டி இருக்கிறவங்க கொஞ்சம் அக்ரஸிவாதாம்மா இருப்பாங்க” என்ற சொற்றொடர் கொண்டு அணைத்திருக்கிறேன்.கணிணியின் பேக்ஸ்பேஸ் போன்று அவளின் எல்லா உணர்வுகளும் அழிந்து அவள் என் முன் நிற்பாள்.

நினைவுகள் கொப்பளிக்க உறங்கிப்போனேன். மறுநாள் காலையில் எழுந்து அவளிடம் பேசிக்கொள்ளாமல் பணிக்குப் புறப்பட்ட பொழுது வாசலில் வந்து

“சாப்பிட்டுட்டு போங்கமா” என்றாள்.

“உன் சாப்பாடு ஒண்ணும் எனக்கு வேண்டாம் , நான்வெளியில போய் சாப்பிட்டுக்குறேன்” என்றவாறு கதவை வேகமாக சாத்திவிட்டு வெளியேறினேன்.

நான் நான்காம் மாடியிலிருந்து கீழிறங்கி வந்து வண்டியை இயக்கிய பொழுது அவள் கைப்பேசியில் கூப்பிட்டாள்.

“வாங்கமா வந்து சாப்பிட்டுட்டு போங்கமா ப்ளீஸ்” என்றாள்.

“உன் சோறு எனக்கு வேண்டாம்”.

“அது என் சோறு இல்லமா, உங்க சோறுதான் , நீங்கதான் சம்பாதிக்கிறீங்க, அப்போ உங்க சோறுதான”.

“தெரியும்டி உன் நாடகமெல்லாம், நீ போண வைடி நாயே” என்று இணைப்பை துண்டித்துவிட்டு என் வண்டியை எடுத்து அலுவலகத்தை நோக்கி முறுக்கினேன்.

மாலை நான்கு மணிக்கு புயல் மழை தொடங்கியது. விடாது பெய்த மழையில் வேளச்சேரி வெள்ளத்தில் மிதந்தது. இரவு எட்டு மணிக்கு கைப்பேசியில் கூப்பிட்டாள்.  அங்குமின்சாரமில்லையென்றும் அச்சமாக இருக்கிறதென்றும் கொஞ்சம் சீக்கிரம் வீட்டிற்கு வரமுடியுமா என்றும் கெஞ்சும் தொனியில் கேட்டாள். நான் அலுவலகத்திலிருந்து அப்பொழுதுதான் புறப்பட்டிருந்தேன். அவள் கேட்டவுடன் மீண்டும் சென்று என் இருக்கையில் அமர்ந்துகொண்டேன்.”வர நேரமாகும் நீ சாப்பிட்டுவிட்டு படுத்துக்கொள்”

என்று கூறிவிட்டு கைப்பைசியைத் துண்டித்தேன். மீண்டும் அரைமணி நேரத்திற்குப்பின் அழைத்தாள்.

“எமர்ஜென்ஸி லாம்பில் சார்ஜ் தீர்ந்திடுச்சுமா ரொம்ப இருட்டா இருக்குமா வீட்டிற்கு வாங்கமா” என்று அழைத்தாள்.

நான் “வேலை இருக்கு” என்று மட்டும் ஒரு சொல் சொல்லிவிட்டு வைத்துவிட்டேன். இரண்டு முறை அழைத்தாள். நான் துண்டித்துவிட்டேன்.

மழை ஓயாது பெய்துகொண்டிருக்க நான் சரியாக இரவு பதினோரு மணிக்கு வீட்டிற்கு புறப்பட்டேன். வெள்ளத்தில் நிறைந்திருந்த வேளச்சேரியை பல சாகசங்களுக்குப் பிறகு தாண்டி தற்செயலாக உருவாகியிருந்த எல்லா குளங்களையும் தாண்டி வீடு வந்து சேர இரவு பன்னிரண்டு மணி ஆகிவிட்டிருந்தது.

முழுவதும் நனைந்துவிட்ட நான் நான்கு மாடியும் படிகளில் ஏறி வீட்டுக் கதவை அடைந்தபொழுது அது லேசாகத் திறந்திருந்தது.அதைத் தள்ளித் திறக்க முயன்றபொழுது கதவின் கைப்பிடியில் உருளையாகச் சுருட்டிச் சொருகப்பட்டிருந்த ஒரு தாள் இருள் படிந்து என் உடல் நீரில் நனைந்திருந்த தரையில் விழுந்தது. மின்சாரம் தாக்கிய உணர்வு உடலெங்கும் பரவ அதை வேகமாக பிரித்து பார்க்க அதில் எழுத்துக்கள் இருப்பதைக் கண்டு என் கைப்பேசி விளக்கை அதன் மேல் பிடித்துப்படித்தேன்.

என் உயிரினும் மேலான என் அன்பு கணவனுக்கு,

கிரியேட்டிவிட்டி இருக்கிறவங்க கொஞ்சம் அக்ரஸிவாதாம்மா இருப்பாங்க என்ற உங்கள் சொற்கள் என் மனதில் மீண்டும் மீண்டும் ஓடியது இன்று. நான் அதை சிந்தித்துப் பார்த்தேன்.

அது உண்மைதான்.ஆனால் நீங்கள் எத்தனைக் கதைகள் எழுதியுள்ளீர்கள்.ஒரே ஒரு கதை.மீதமுள்ளைவை நிராகரிக்கப்பட்டவை.அந்த ஒரு கதைக்குத்தான் இத்தனை அக்ரஸனுமென்றால் அதைத் தாங்கிக்கொள்ளத் தேவை ஒன்றுமில்லை. எங்கோ நான் கேட்டிருக்கிறேன், பழங்காலத்தில் புலவர்கள் தங்கள் படைப்புகளை எழுதி அவற்றின் மேன்மையை நிருபிக்க அந்தச் சுவடிகளை நீரில் மிதக்க விடுவார்களென்று, ஆனால் அதைப் போன்ற ஒன்றை செய்து பார்க்க உங்கள் படைப்புகள் வேண்டுமே, உங்களிடம் தான் படைப்புகள் இல்லையே, அதனால் வேண்டுமென்றால் ஒன்று செய்து பார்க்கலாம், அந்த ஊக்கம் உங்களுக்குள் இருக்குமென்றால் வீட்டிற்குள் செல்லுங்கள், அங்கே எரியும் தீயில் உங்களை நீங்களே சுட்டுக்கொள்ளுங்கள், அதில் வெற்றுக் குருதி சுற்றித் திரியும் உங்கள் இதயம் வெடிக்கட்டும், நுரையீரல் பொங்கி நுரைக்கட்டும், நான் நடுங்க சுடுச்சொல் சொல்லும் நா சுருண்டு பந்தாகி உருண்டு வெளியேறட்டும், சிறைந்து பார்க்கும்  கண்கள் தீயினாற் புண்ணாகி பறிந்து போகட்டும், முடி எரிந்து எழும் நெடியில் நாசி அடைத்து முட்டட்டும், தெரிவைக்கு இசையாமல் கவிதைக்கு இசையும் நின் செவி அடர்ந்து வீழட்டும், நெற்றிக் கூந்தல் பற்றிய உன் கையை நாய் உண்ணட்டும், வாதக்கூறு ஏறு பாதம் போல தன் கால் துடிக்கட்டும், விரால் மீன் கறி விசிறியடித்த நின் விரல்கள் பரண் மேல் பறக்கட்டும்,உன் சதையெரிந்து

நெய் கொதித்து தரையில் பரவட்டும். அந்த நெய்யில் எங்கேனும் துளி பால் இருந்தால் நாம் உங்களுக்குள் இருக்கும் படைப்பூக்கத்தை ஒத்துக்கொள்ளலாம்.

நான் வேகமாக தாளைத் திருப்பி பார்த்தேன், வேறு எதுவும் எழுதப்படவில்லை.உடனே அவசரமாகக் கதவைத்திறந்து வீட்டினுள்ளே நுழைந்தேன். வீட்டின் ஜன்னல்கள் அனைத்தும் திறந்து கிடந்தது. புயல் மழையில் வீட்டினுள் காற்று எல்லாப்புறமுமிருந்து பொருட்களை உருட்டிக்கொண்டிருந்தது. ஜன்னலின் வழி நீர் வீட்டினுள் வந்துகொண்டிருந்தது. நெகிழி இருக்கை ஒன்று பறந்து வந்து என் காலருகில் விழுந்தது. முன்னறையின் நடுவில் எங்கள் திருமணத்திற்கு தரப்பட்ட தோளுயரக் குத்துவிளக்கில் ஏற்றப்பட்டிருந்த சுடர் அந்த குத்திருட்டினுள் எரிந்துகொண்டிருந்தது. உள்ளே சென்ற என் உருவம் அதன் ஒளியில் பெரும் நிழலாய் சுவற்றில் வீங்கித் தெரிந்தது. காற்றில் பொருட்களெல்லாம் பறந்துகொண்டிருக்க,மொத்த அறையும் அல்லல் பட்டுக்கொண்டிருக்க அந்த இரண்டு விரல் திண்ணம் கொண்ட சுடர் நின்று எவ்வித அசைவுமின்றி எழுந்து எரிந்துகொண்டிருந்தது. அந்த அறையில் நிகழும் அத்தனை அலைகழிப்பும் நிலையழிதலும் எரியும் சுடரில் ஒரு சிறு அசைவையும் ஏற்படுத்தவில்லை. அது உண்மையில் எரிகிறதா என்ற சந்தேகம் எனக்குள் எழுந்தது. அந்தச் சுடர் ஒரு சுவரோவியம் போல நிலைத்து நின்றது. நான் நடுங்கிக்கொண்டிருந்த என் கால்களை

முன்னெடுத்து சற்றே நெருங்கி வர, அந்த மஞ்சள் நிறத்தில் நின்றெரிந்த சுடரின் நடுவில் ஒரு நொடி ஆக்ரோஷத்தைக் கண்டேன்.

***

-ஜெயன் கோபாலகிருஷ்ணன்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *