பால்தாஸாரின் அற்புதப் பிற்பகல் (“La prodigiosa tarde de Baltazar”)

ஸ்பானிய மூலம்: காப்ரியல் கார்சியா மார்குவெஸ்

தமிழில்: சித்துராஜ் பொன்ராஜ்

 

பறவைக்கூண்டு செய்து முடித்தாயிற்று. பால்தாஸார் பழக்க தோஷத்தால் அதைக் கூரையோரமாக இருந்த வளைவில் மாட்டினான். அவன் மதிய உணவை முடித்துவிட்டு வந்த போது எல்லோரும் அதை உலகத்திலேயே மிக அழகான பறவைக்கூண்டு என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். பறவைக்கூண்டைப் பார்க்க வந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வீட்டிற்கு வெளியே கூட்டம் கூட தொடங்கியிருந்ததால் பால்தாஸார் பறவைக்கூண்டை இறக்கிவிட்டுக் கடையை மூட வேண்டியதானது.

”முகச்சவரம் செய்து கொண்டால்தான் என்ன,” என்று அவன் மனைவி உர்சுலா கேட்டாள், “பார்க்க கப்புச்சின் துறவி மாதிரி இருக்கிறாய்.”

”மதிய உணவுக்குப் பிறகு சவரம் செய்து கொள்வது நல்லதல்ல,” என்றான் பால்தாஸார்.

அவன் முகத்தில் கோவேறு கழுதையின் பிடறி மயிர்போல் விறைத்து நிற்கும் கட்டையான, கடினமான மயிரும், பயந்த சிறுவனின் தோரணையும் இருந்தன. ஆனால் அது பொய்யான தோற்றமே. பிப்ரவரியில் பால்தாஸாருக்கு முப்பது வயது முடிந்திருந்தது. உர்சுலாவைத் திருமணம் செய்து கொள்ளாமலும் பிள்ளைகள் பெற்றுக் கொள்ளாமலும் பால்தாஸார் நான்கு வருடங்களாக வாழ்ந்து வருகிறான்.  அவன் மிகக் கவனமாக இருக்கப் பல காரணங்களை வாழ்க்கை அவனுக்குக் கற்றுத் தந்திருந்தாலும் அவன் அச்சப்பட எந்தக் காரணத்தையும் அது அவனுக்கு கொடுத்திருக்கவில்லை என்பதுதான் உண்மை. வந்து பார்த்துவிட்டுப் போனவர்களில் சிலர் அவன் செய்து முடித்திருந்த பறவைக்கூண்டை உலகத்திலேயே மிக அழகான பறவைக்கூண்டாகக் கருதினார்கள் என்பதை அவன் அறிய மாட்டான். சின்ன வயதிலிருந்து பறவைக்கூண்டுகளைச் செய்து வருகிறான். அவன் செய்த மற்ற பறவைக்கூண்டுகளைவிட இந்தக் பறவைக்கூண்டைச் செய்வது அப்படி ஒன்றும் சிரமமான காரியமாக இருக்கவில்லை.

”அப்படியென்றால் கொஞ்சம் தூங்கு,” என்று அவள் சொன்னாள். “அந்தத் தாடியை வைத்துக் கொண்டு நீ எங்கேயும் முகம் காட்ட முடியாது.”

அந்தரத்தில் மாட்டியிருந்த வலைபோன்ற தொங்குகட்டிலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பால்தாஸார், அண்டைவீட்டுக்காரர்களிடம் பறவைக்கூண்டைக் காட்ட சில முறைகள் எழுந்து வர வேண்டியதாக இருந்தது. அதுவரைக்கும் உர்சுலா பறவைக்கூண்டின்மீது மிக சொற்பமான கவனத்தையே செலுத்தியிருந்தாள். கடையில் மிச்சமிருந்த தச்சு வேலையைக் கவனிக்காமல் தன் நேரம் முழுவதையும் தன் கணவன் பறவைக்கூண்டைச் செய்வதிலேயே செலவழித்ததில் அவளுக்குக் கோபம் இருந்தது. இரண்டு வாரமாக அவன் ஒழுங்காகவே தூங்காமல் அர்த்தமில்லாத வார்த்தைகளை முணுமுணுத்தபடியே புரண்டு படுக்கிறான். முகச்சவரம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே அவனுக்கு இல்லை. ஆனால் முடிக்கப்பட்ட பறவைக்கூண்டைப் பார்த்தபோது அவள் ஆத்திரம் முழுவதும் கரைந்து காணாமல் போனது.  பால்தாஸார் தூக்கத்திலிருந்து எழுந்தபோது அவள் அவனுடைய சட்டையையும் கால்சட்டையையும் தேய்த்துத் தந்தாள். தொங்கு கட்டிலின் அருகிலிருந்த நாற்காலி மீது உடைகளை மடித்து வைத்துவிட்டு பறவைக்கூண்டைச் சாப்பாட்டு மேசைக்கு எடுத்து வந்தாள். அதை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

”இதை என்ன விலைக்கு விற்பாய்?” என்று கேட்டாள்.

”தெரியவில்லை,” என்றான் பால்தாஸார். “இருபது பெஸோக்கள் கொடுப்பார்களா என்று பார்க்கப் போகிறேன். அதனால் முப்பது பெஸோக்கள் என்று விலையைச் சொல்லி ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன்.”

”ஐம்பது கேள்,” என்றாள் உர்சுலா. “இந்த இரண்டு வாரத்தில் நிறைய தூக்கத்தை இழந்திருக்கிறாய். அதைவிட, பறவைக்கூண்டு கொஞ்சம் பெரியதாகவும் இருக்கிறது. என் வாழ்க்கை நாளில் நான் பார்த்த மிகப் பெரிய பறவைக்கூண்டு இதுவாகத்தான் இருக்கும்.”

பால்தாஸார் முகச்சவரம் செய்து கொள்ளத் தொடங்கினான்.

”ஐம்பது பெஸோக்கள் கொடுப்பார்கள் என்று நினைக்கிறாயா, என்ன?”

”திரு செப்பே மொன்தியெலுக்கு அந்தக் காசெல்லாம் ஒன்றுமே இல்லை. நீ அறுபது பெஸோக்கள்கூட கேட்கலாம்.”

வெக்கை நிறைந்த நிழல் ஒன்றின் அடியில் அவர்கள் வீடு இருந்தது. ஏப்ரல் முதல் வாரம். சில்வண்டுகளின் சத்தத்தால் வெப்பம் மேலும் சகிக்க முடியாததாக ஆகியிருந்ததுபோல் தோன்றியது. பால்தாஸார் உடைமாற்றிக் கொண்டபின் வீட்டிற்குள்ளிருந்த வெப்பத்தைத் தணிக்க முற்றத்தின் கதவைத் திறந்துவிட்டான். கூட்டமாய்ச் சில சிறுவர்கள் சாப்பாட்டு அறைக்குள் புகுந்து கொண்டார்கள்.

பறவைக்கூண்டைப் பற்றிய செய்தி எங்கும் பரவியிருந்தது. வாழ்க்கையைப் பொறுத்தவரை மகிழ்ச்சியாகவும் தொழிலைப் பொறுத்தவரை பெரும்சலிப்போடும் இருந்த டாக்டர் ஒக்டாவியோ ஜிரால்டோ என்ற முதிர்ந்த மருத்துவர் நோயாளியான தனது மனைவியுடன் மதிய உணவைச் சாப்பிடும்போது பால்தாஸாரின் பறவைக்கூண்டைப் பற்றிச் சிந்தித்திருந்தார்.  அவர் வீட்டின் உள்முற்றத்தில் வெப்பமான நாள்களில் அவர்கள் உணவு மேசையை கொண்டு வந்து போடும் குளுமையான இடத்தைச் சுற்றிப் பல பூச்சாடிகளும் கேனரிப் பறவைகளுக்கான இரண்டு பறவைக்கூண்டுகளும் இருந்தன. அவர் மனைவிக்குப் பறவைகள் என்றால் கொள்ளைப் பிரியம் – பறவைகளைக் கொன்று தின்றுவிடும் என்பதால் பூனைகளை வெறுக்கும் அளவுக்கு அவள் பறவைகள் மீது பிரியம் வைத்திருந்தாள். அவளைப் பற்றி நினைத்தபடியே டாக்டர் ஜிரால்டோ தன்னிடம் சிகிச்சை பெறும் ஒரு நோயாளியைப் பார்க்கப் போனார். திரும்பி வந்ததும், பறவைக்கூண்டைப் பார்க்கப் பால்தாஸாரின் வீட்டுக்கு வந்தார்.

சாப்பாட்டு அறையில் நிறைய பேர் கூடியிருந்தார்கள். பறவைக்கூண்டு சாப்பாட்டு மேசையின்மீது காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. கம்பிகளால் வடிவமைக்கப்பட்ட கூம்பு வடிவக் கூரையுடன் பறவைக்கூண்டு மூன்று மாடிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதற்குள் நடைபாதைகளும் பறவைகள் உண்பதற்கும் தூங்குவதற்கும்  சின்னச் சின்ன அறைகளும்  அவற்றின் பொழுது போக்குக்காக ஒதுக்கியிருந்த இடத்தில் ஊஞ்சல்களும் இருந்தன. பறவைக்கூண்டு பார்ப்பதற்குப் பிரம்மாண்டமான பனிக்கட்டித் தொழிற்சாலையின் குட்டி மாதிரி உருவமாகத் தோற்றமளித்தது. டாக்டர் ஜிரால்டோ பறவைக்கூண்டைத் தொடாமல் அதை மிக நுணுக்கமாக ஆராய்ந்தார். அவர் காதுகளுக்கு எட்டிய செய்திகளில் இருந்த விவரிப்புகளைவிட பறவைக்கூண்டு மிகச் சிறப்பாகவும், தனது மனைவிக்கு அவர் தருவதாகக் கற்பனை செய்து வைத்திருந்த எந்தக் பறவைக்கூண்டை விடவும் அழகானதாகவும் இருப்பதாக அவருக்குத் தோன்றியது.

”இந்தப் பறவைக்கூண்டு கற்பனையின் உச்சத்தைத் தொட்டிருக்கிறது,” என்றார். கூட்டத்தில் நின்றிருந்த பால்தாஸாரைத் தேடிப் பிடித்து அவனை ஒரு தந்தையின் வாஞ்சையோடு பார்த்தபடி, “நீ மிகச் சிறந்த கட்டட வடிவமைப்பாளனாய் வந்திருக்க வேண்டியவன்” என்று சொன்னார்.

பால்தாஸார் நாணத்தால் முகம் சிவந்தான்.

”நன்றி,” என்றான்.

”சத்தியமாகச் சொல்கிறேன்,” என்றார் டாக்டர். இளமையில் அழகியாக இருந்த பெண்ணின் வழவழப்பானதும் மென்மையானதுமான உடற்பருமன் அவருக்கு வாய்த்திருந்தது. லத்தீனில் பேசும் பாதிரியைப்போன்ற குரலமைப்பு. “இதற்குள் நீ பறவைகளை அடைக்கவே வேண்டாம்.” பறவைக்கூண்டை ஏலம் விடுகிறவரைப்போல டாக்டர் அதைச் சுற்றியிருந்தவர்களுக்குத் திருப்பிக் காட்டினார். “மரத்தில் இதைத் தொங்க விட்டால் போதும் இந்தக் பறவைக்கூண்டு தானாகவே பாட ஆரம்பித்துவிடும்.” மறுபடியும் பறவைக்கூண்டை மேசைமீது வைத்துவிட்டுச் சிறிது நேரம் யோசித்தார். பிறகு பறவைக்கூண்டைப் பார்த்தபடி:

”நல்லது. இதை நான் வாங்கிக் கொள்கிறேன்,” என்றார்.

”இதை விற்றாகி விட்டது,” என்றாள் உர்சுலா.

”இது திரு செப்பே மொன்தியலின் மகனுக்குச் சொந்தமான பறவைக்கூண்டு,” என்றான் பால்தாஸார். “அவன்தான் இப்படி ஒரு பறவைக்கூண்டு வேண்டும் என்று பிரத்யேகமாகக் கேட்டு இதைச் செய்யச் சொன்னான்.”

டாக்டர் தன் முகத்தையும் உடலையும் மிகுந்த மரியாதையை வெளிப்படுத்தும் வகையில் வைத்துக் கொண்டார்.

”இப்படித்தான் பறவைக்கூண்டு இருக்க வேண்டும் என்று அவர்தான் இந்த வடிவமைப்பைக் குறிப்பிட்டுச் சொன்னானா?”

”இல்லை,” என்றான் பால்தாஸார். “ஒரு ஜோடி த்ரூபியல் பறவைகளை வைப்பதற்காக இதைப்போன்ற பெரிய பறவைக்கூண்டு ஒன்று வேண்டும் என்று மட்டும் சொன்னான்.”

டாக்டர் பறவைக்கூண்டைப் பார்த்தார்.

”ஆனால் இது த்ரூபியல் பறவைகளுக்கான பறவைக்கூண்டு மாதிரி தெரியவில்லையே.”

”அவற்றுக்கான பறவைக்கூண்டுதான், டாக்டர்.” மேசைக்கு அருகில் வந்து நின்றபடியே பால்தாஸார் பேசினான். அவனைச் சிறுவர்கள் சூழ்ந்து கொண்டார்கள். “இதன் அளவுகளை மிகத் துல்லியமாகக் கணக்கிட்டிருக்கிறேன்.” பறவைக்கூண்டுக்குள்ளிருந்த வெவ்வேறு அறைகளை ஆள்காட்டி விரலால் சுட்டிக் காட்டியபடி பால்தாஸார் கூறினான். பிறகு விரல்களை மடித்துக் கூண்டின் மீதிருந்த கூம்புக் கூரையைத் தட்டினான். கூண்டிலிருந்து இசை நயமிக்க ஒலிக்கோர்வைகள் எதிரொலித்தன.

”இருப்பதிலேயே மிக வலிமையான கம்பிகளைப் பயன்படுத்தி இந்தப் பறவைக்கூண்டை செய்திருக்கிறேன். ஒவ்வொரு இணைப்பையும் வெளிப்புறமாகவும் உட்புறமாகவும் பற்ற வைத்து இணைத்திருக்கிறேன்,” என்று சொன்னான்.

”ஒரு கிளியை வைக்கும் அளவுக்குப் பெரிய பறவைக்கூண்டு,” என்று சிறுவர்களில் ஒருவன் இடைமறித்துச் சொன்னான்.

”ஆமாம், ஆமாம்,” என்றான் பால்தாஸார்.

டாக்டர் தனது தலையைத் திருப்பிப் பார்த்தார்.

”சரிதான், ஆனால் அவர் பறவைக்கூண்டு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று உனக்கு எந்த வடிவமைப்புத் திட்டத்தையும் தரவில்லை. பறவைக்கூண்டு பெரியதாக இருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறெந்த துல்லியமான அளவுகளையும் குறிப்பிடவில்லை. அப்படித்தானே?”

”ஆமாம்,” என்று சொன்னான் பால்தாஸார்.

”அப்படியென்றால் ஒரு பிரச்சனையும் இல்லையே,” என்றார் டாக்டர். “அவர் கேட்டது த்ரூபியல் பறவைகளை வைத்துக் கொள்ளும் அளவுக்கு ஒரு பெரிய பறவைக்கூண்டு. இதோ இங்கு இருப்பது வேறொரு பறவைக்கூண்டு. இந்தக் பறவைக்கூண்டுதான் அவர் உன்னைச் செய்யச் சொன்ன பறவைக்கூண்டு என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லையே.”

”இதுதான் அது,” என்றான் பால்தாஸார் குழப்பத்தோடு. “அதனால்தான் இதை நான் செய்தேன்.”

பொறுமை இழந்தவரைப்போல் டாக்டர் சைகை காட்டினார்.

”நீ வேறொரு பறவைக்கூண்டைச் செய்தால் போயிற்று,” என்று உர்சுலா தன் கணவனைப் பார்த்துச் சொன்னாள். பிறகு டாக்டரிடம்: “உங்களுக்கு எந்த அவசரமும் இல்லையே,” என்றாள்.

”இன்று பிற்பகல் இந்தப் பறவைக்கூண்டை வாங்கி வருவதாக என் மனைவிக்கு வாக்குக் கொடுத்திருக்கிறேன்,” என்றார் டாக்டர்.

”என்னை மன்னிக்க வேண்டும் டாக்டர்,” என்றான் பால்தாஸார். “ஏற்கனவே விற்றுவிட்ட பொருளை உங்களிடம் நான் விற்க முடியாது.”

டாக்டர் தனது தோள்களை எழுப்பி மீண்டும் தளரவிட்டார். கைக்குட்டையால் தனது கழுத்தில் திரண்டிருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டே, கப்பல் கிளம்பிப் போவதைப் பார்க்கும் ஒருவனின் துல்லியமில்லாத வெறித்த பார்வையோடு பறவைக்கூண்டை மௌனமாகப் பார்த்தார்.

”இதற்கு எவ்வளவு பணம் தருவார்கள்?”

பால்தாஸார் பதில் சொல்லாமல் உர்சுலாவைப் பார்த்தான்.

”அறுபது பெஸோக்கள்,” என்று அவள் பதில் சொன்னாள்.

டாக்டர் பறவைக்கூண்டையே பார்த்துக் கொண்டிருந்தார். “மிகவும் அழகான பறவைக்கூண்டு,” என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே சொன்னார். “மிக மிக அழகாய் இருக்கிறது.” பிறகு வாசல் கதவுக்கு நடந்துபோனவர் சிரித்தபடியே தனக்குத் தானே விசிறிக் கொள்ள ஆரம்பித்தார். சற்று முன் நடந்த உரையாடல் அவர் நினைவிலிருந்து சுவடே இல்லாமல் மறைந்து போய் விட்டிருந்தது.

”மொன்தியல் உண்மையிலேயே பெரும் பணக்காரர்தான்,” என்றார்.

ஹோசே மொன்தியல்[1] உண்மையில் பிறர் நினைப்பதைப்போல் பெரும் பணக்காரன் அல்ல. ஆனால் அப்படி ஆவதற்கு எதை வேண்டுமானாலும் செய்யக் கூடியவனாக இருந்தான். இங்கிருந்து கொஞ்ச தூரத்தில், கருவிகள் நிறைந்து, யாரும் இதை விற்க முடியாது என்று சொல்லக் கூடிய ஒரு பொருள்கூட இல்லாத ஒரு வீட்டில் வசித்து வந்த மொன்தியலுக்கு பறவைக்கூண்டைப் பற்றிப் பரவிய செய்திகளைக் குறித்து எந்த அக்கறையும் ஏற்படவில்லை. சாவைப் பற்றிச் சதா சர்வ காலமும் நினைத்து அச்சப்பட்டே தனது காலத்தைக் கடத்திக் கொண்டிருந்த அவன் மனைவி மதிய உணவுக்குப் பிறகு கதவுகளையும் சன்னல்களையும் சாத்திவிட்டு இரண்டு மணி நேரமாய் படுக்கையறையின் நிழலைக் கொட்டக் கொட்ட விழித்துப் பார்த்திருக்க, ஹோசே மொன்தியல் மதிய தூக்கத்தில் ஆழ்ந்திருந்தான். வீட்டைச் சுற்றிக் கேட்ட குரல்களின் சத்தம் அவன் மனைவியை எழுந்து அமரச் செய்தது. வரவேற்பறையின் கதவைத் திறந்தவள் அவள் வீட்டின் முன்னால் பெருங்கூட்டம் கூடி இருப்பதைக் கண்டாள்.  புதிதாக முகச்சவரம் செய்து வெள்ளை உடைகளை உடுத்தியிருந்த பால்தாஸார் அந்தக் கூட்டத்தின் மத்தியில் கையில் பறவைக்கூண்டைப் பிடித்தபடி முகத்தில் பணக்காரர்களின் வீட்டுப் படிகளை மிதிக்கும் ஏழைகள் வெளிப்படுத்தும் ஒரே நேரத்தில் நேர்மையும் மரியாதையும் ஒருசேரக் கலந்த முகபாவத்தோடு நின்றிருந்தான்.

”என்ன ஒரு அற்புதமான பொருள்!” என்று பால்தாஸாரை வீட்டுக்குள் அழைத்துச் சென்றபடி முகத்தில் பிரகாசம் ஜொலிக்க ஹோசே மொன்தியலின் மனைவி கூவினாள். ”இதைப்போல் ஒன்றை என் வாழ்நாளிலேயே நான் பார்த்ததில்லை,” என்றாள். பின்பு, கதவுக்கு வெளியே கூடியிருந்த கூட்டத்தால் எரிச்சல் அடைந்தவளாக:

”அவர்கள் இந்த வரவேற்பு அறையைக் குதிரைப் பந்தயத் திடலாக மாற்றுவதற்குள் அதை முதலில் உள்ளே கொண்டு வாருங்கள்,” என்றாள்.

பால்தாஸார் ஹோசே மொன்தியலின் வீட்டுக்கு வருவது இது முதல் முறை அல்ல. முன்பே பல்வேறு சமயங்களில், அவனுடைய திறமையாலும் ஒளிவு மறைவின்றி நேர்மையாகப் பழகும் தன்மையாலும் சின்னச் சின்னத் தச்சு வேலைகளைச் செய்வதற்காகப் பால்தாஸார் அங்கு அழைக்கப்பட்டிருக்கிறான். ஆனால் அவனால் பணக்காரர்களோடு இயல்பாக இருக்க முடிந்ததில்லை. அவர்களைப் பற்றியும், அவர்களின் அழகற்ற, ஓயாமல் விவாதித்துக் கொண்டே இருக்கும் மனைவிகளைப் பற்றியும், அவர்களது மிகப் பிரம்மாண்டமான அறுவை சிகிச்சைகளைப் பற்றியும் அவன் யோசித்திருக்கிறான். அப்படி யோசிக்கும்போதெல்லாம் அவனுக்கு அவர்கள்மேல் பரிதாப உணர்ச்சி தோன்றத் தவறியதில்லை. அவர்களின் வீடுகளுக்குள் நுழையும்போதெல்லாம் அவன் இயல்பாக நகர முடியாதபடிக்குத் கால்களில் ஒரு கனத்தை உணர்வான்.

”பெப்பே வீட்டில் இருக்கிறாரா?” என்று கேட்டான்.

பறவைக்கூண்டைச் சாப்பாட்டு மேசைமீது வைத்திருந்தான்.

”பள்ளிக்கூடத்தில் இருக்கிறான்,” என்று ஹோசே மொன்தியலின் மனைவி சொன்னாள். “ஆனால் விரைவில் வந்துவிடுவான்.” பின்பு, “மொன்தியல் குளிக்கிறார்,” என்றாள்.

உண்மையில், ஹோசே மொன்தியலுக்குக் குளிக்க அவகாசம் கிடைக்கவில்லை. சீக்கிரமாய் வெளியே வந்து என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காகத் அவன் தன் உடம்பின்மீது அவசரமாக ஆல்கஹாலைத் தேய்த்துக் கொண்டிருந்தான். வீட்டில் என்ன சத்தம் கேட்டாலும் அதைக் கவனிப்பதற்காகத் தூங்கும் போது மின்விசிறி இல்லாமல் தூங்கும் அளவுக்கு அவன் மிகுந்த ஜாக்கிரதையானவனாக இருந்தான்.

”அடிலெய்ட்!” என்று கத்தினான். “என்ன நடக்கிறது அங்கே?”

உடம்பு நன்றாகப் பெருத்து ஊழற்சதை நிறைந்தவனாய் உடம்பு முழுவதும் மயிர் அடர்ந்தவனாகக் கழுத்தைச் சுற்றி ஒரு துண்டோடு ஹோசே மொன்தியல் படுக்கையறை சன்னலில் தோன்றினான்.

”என்ன அது?”

”பெப்பேயின் பறவைக்கூண்டு,” என்றான் பால்தாஸார்.

மொன்தியலின் மனைவி அவனைக் குழப்பத்தோடு பார்த்தாள்,

”யாருடையது என்று சொன்னாய்?”

”பெப்பேயினுடையது,” என்று பால்தாஸார் பதில் சொன்னான். பிறகு, ஜோசே மொன்தியலிடம் திரும்பி, “பெப்பேதான் இதைச் செய்யச் சொன்னார்.”

அந்தக் கணத்தில் எதுவும் நிகழவில்லை. ஆனால் யாரோ குளியலறைக் கதவைத் தன் முன்னால் திறந்து விட்டதைப்போல் பால்தாஸாருக்குத் தோன்றியது. ஹோசே மொன்தியல் படுக்கையிலறையிலிருந்து உள்ளாடையாய்ப் பயன்படும் அரைக்கால் சட்டையை மட்டும் அணிந்து கொண்டு வெளியே வந்தான்.

வெளியே வந்தவன் “பெப்பே!” என்று பலமாய்க் குரல் கொடுத்தான்.

”அவன் இன்னும் வீட்டிற்கு வரவில்லை,” என்று அவன் மனைவி மிகத் தன்மையான மெல்லிய குரலில் சொன்னாள். அவளிடம் வேறு எந்த அசைவும் இல்லை.

பெப்பே வாசலில் வந்து நின்றான். அவனுக்குச் சுமார் பன்னிரண்டு வயதிருக்கும். அவன் அம்மாவைப் போலவே அவனுக்கும் நீண்ட கண்ணிமை மயிர்கள் இருந்தன. அவளைப்போலவே மெல்லிய பரிதாபத்தை வரவழைக்கக் கூடிய தோற்றம்.

”வா இங்கே,” என்று ஹோசே மொன்தியல் அந்தப் பையனிடம் சொன்னான். “நீதான் இதைச் செய்யச் சொன்னாயா?”

பையன் தலை குனிந்து கொண்டான். ஹோசே மொன்தியல் பெப்பேயின் தலைமயிரைக் கையால் பற்றி இழுத்துத் தனது முகத்தைப் பார்க்கும்படிச் செய்தான்.

”பதில் சொல்,”

பையன் பதில் பேசாமல் தன் உதட்டைக் கடித்துக் கொண்டான்.

”மொன்தியல்,” என்று அவன் மனைவி கிசுகிசுத்தாள்.

ஹோசே மொன்தியல் பையனை விட்டுவிட்டுப் பால்தாஸாரிடம் கோபத்தோடு திரும்பினான். “என்னை மன்னித்துவிடு, பால்தாஸார்,” என்று அவனிடம் சொன்னான். “நீ இதைப்பற்றி என்னிடம் முதலில் கேட்டிருக்க வேண்டும். உன் ஒருவனுக்குத்தான் வயதுக்கு வராத ஒரு பையனோடு ஒப்பந்தம் செய்து கொள்ளத் தோன்றும்.” அவன் பேசிக் கொண்டிருக்கும்போதே அவன் முகம் அமைதியானது. பறவைக்கூண்டைத் திரும்பிப் பார்க்காமலேயே அதை எடுத்து பால்தாஸாரிடம் தந்தான்.

”இதை இப்போதே எடுத்துப் போய் யாரிடாமாவது விற்றுவிட முடியுமா என்று பார்,” என்று சொன்னான். “எல்லாவற்றுக்கும் மேலாக, என்னிடம் தயவு செய்து இதற்குமேல் விவாதம் செய்யாதே.” விளக்கம் அளிப்பதுபோல் பால்தாஸாரின் முதுகைத் தட்டிக் கொடுத்தபடி சொன்னான்: “டாக்டர் நான் கோபப்படக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்.”

பால்தாஸார் பறவைக்கூண்டைக் கையில் வாங்கிக் கொண்டு அவனைக் குழப்பத்துடன் பார்க்கும்வரை பையன் அசையாமல், கண்ணைக்கூட இமைக்காமல் இருந்தான்.  பின்பு, நாயின் உறுமலைப்போல் அடிவயிற்றிலிருந்து ஒருவகையான விகாரமான ஓசையை எழுப்பிக் கத்திக் கூக்குரலிட்டபடியே தரையில் விழுந்து புரண்டான்.

அவன் அன்னை அவனைச் சமாதானப்படுத்த முயல, ஹோசே மொன்தியல் பையனைச் சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தார். “அவனை அப்படியே விடு,”  என்றான். “தரையிலேயே கிடந்து அவன் மண்டையை உடைத்துக் கொள்ளட்டும். அதற்குப் பிறகு காயத்தின்மேல் உப்பையும் எலுமிச்சைச் சாற்றையும் பூசி விடு. இன்னும் பலமாகக் கத்தட்டும்.” பையனின் தாய் அவன் மணிக்கட்டுகளைப் பிடித்துக் கொண்டிருக்கப் பையன் கண்ணில் ஒரு துளி கண்ணீர்கூட இல்லாது கதறிக் கொண்டிருந்தான்.

”அவனை அப்படியே விடு,” என்று ஹோசே மொன்தியல் மறுபடியும் சொன்னார்.

வெறி பிடித்த ஒரு மிருகத்தின் மரண வேதனையைப் பார்ப்பவன்போல் பால்தாஸார் அந்தக் குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தான். மணி நான்கை நெருங்கிக் கொண்டிருந்தது. உர்சுலா வீட்டில் மிகப் பழைய பாடல் ஒன்றைப் பாடியபடி வெங்காயத்தைத் துண்டுகளாக அரிந்து கொண்டிருந்தாள்.

”பெப்பே,” என்றான் பால்தாஸார்.

பிறகு, புன்னைகைத்தபடியே பையனின் அருகில் போனான். பறவைக்கூண்டை அவனிடம் நீட்டினான். பையன் துள்ளி எழுந்து கிட்டத்தட்ட அவன் உயரம் இருந்த பறவைக்கூண்டை வாரி அணைத்துக் கொண்டு பறவைக்கூண்டுக் கம்பிகளின் வழியாக என்ன சொல்வதென்று தெரியாமல் பால்தாஸாரையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அதுவரை ஒரு துளி கண்ணீரும் சிந்தியிருக்கவில்லை.

”பால்தாஸார், அந்தக் பறவைக்கூண்டை எடுத்துப் போய்விடு என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன்,” என்று ஹோசே மொன்தியல் மெல்லிய குரலில் சொன்னான்.

”அதை அவரிடம் கொடுத்துவிடு,” என்று அவன் மனைவி பையனிடம் சொன்னாள்.

”இல்லை, பறவைக்கூண்டை வைத்துக் கொள்,” என்று பையனிடம் சொல்லிவிட்டுப் பால்தாஸார் ஹோசே மொன்தியலிடம் திரும்பி, “பையனுக்குத் தருவதற்காகத்தானே இந்தக் பறவைக்கூண்டையே செய்தேன்,” என்றான்.

ஹோசே மொன்தியல் பால்தாஸாரை வீட்டின் வரவேற்பறைவரை பின்தொடர்ந்து வந்தான்.

”முட்டாள்தனமாகப் பேசாதே, பால்தாஸார்,” என்று அவன் பாதையை மறித்தபடி ஹோசே மொன்தியல் சொன்னான். ‘உன் பொருளை எடுத்துக் கொண்டு போய் விடு. இத்தகைய முட்டாள்தனங்களைச் செய்யாதே. இந்தப் பொருளுக்காக உனக்கு ஒரு சல்லிக் காசையும் தர எனக்கு எண்ணமில்லை.”

”அதைப்பற்றிக் கவலையில்லை,” என்றான் பால்தாஸார். ”பெப்பேக்குப்  பரிசளிக்கத்தான் இந்தக் பறவைக்கூண்டைச் செய்தேன். இதற்காகப் பணத்தைப் பெற்றுக் கொள்ள எண்ண இதைச் செய்யவில்லை.”

கதவை அடைத்துக் கொண்டிருந்தவர்களைப் பால்தாஸார் தாண்டிப் போன போது, ஹோசே மொன்தியல் வரவேற்பு அறையின் மத்தியில் நின்று கொண்டு கத்திக் கொண்டிருந்தான். அவன் வெளிறிப் போயிருந்தாலும் அவன் கண்கள் சிவக்க ஆரம்பித்திருந்தன.

”முட்டாளே,” என்று அவன் கத்தினான். “உன் குட்டிப் பொருளை, அற்ப வஸ்துவை இங்கிருந்து எடுத்துப் போ. இந்த வீட்டில் உன்னைப்போல் ஒரு ஒன்றுமில்லாதவன் வந்து கட்டளைகள் போட்டுவிட்டுப் போகக் கூடாது. நாய்க்குப் பிறந்தவனே!”

சூதாட்டக் கூடத்தில் பால்தாஸாரைப் பெருத்த கரகோஷத்தோடு வரவேற்றார்கள். அந்த நொடிவரை, தான் முன் எப்போதும் செய்ததைவிடவும் மிக அற்புதமான பறவைக்கூண்டைச் செய்ததிருப்பதாகவும், ஹோசே மொன்தியலின் மகன் அழாமல் இருக்க அப்படிப்பட்ட பறவைக்கூண்டை அவனிடம் கொடுத்ததுதான் சரி என்றும், இந்தச் செயல்களில் வேறெந்த மகத்துவமும் இல்லை என்றுதான் பால்தாஸார் நினைத்திருந்தான். ஆனால் இப்போது இந்த விஷயங்கள் அனைத்தும் பலருக்கு ஓரளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருப்பதைப் பால்தாஸார் உணர்ந்து கொண்டதால் லேசாய் உணர்ச்சிவசப்பட ஆரம்பித்தான்.

”ஆக, உன் பறவைக்கூண்டுக்கு ஐம்பது பெஸோக்கள் தந்தார்கள், அப்படித்தானே.””

”அறுபது,” என்றான் பால்தாஸார்.

”அப்படியென்றால் இந்தச் சுற்றில் வெற்றி உனக்குத்தான்,” என்று எவனோ சொன்னான். “திருவாளர் செப்பே மொன்தியலிடம்  இருந்து இப்படி ஒரு தொகையைக் கறக்க முடிந்தவன் நீ ஒருவன்தான். இதைக் கொண்டாடியே ஆகவேண்டும்.”

அவனுக்கு அவர்கள் பீர் வாங்கித் தந்தார்கள். பால்தாஸார் பதிலுக்கு எல்லோருக்கும் ஒரு சுற்று மதுபானம் வாங்கித் தந்தான்.  இப்படிக் குடிப்பது முதல்முறை என்பதால் மாலைக்குள் பால்தாஸாருக்கு நன்றாகப் போதை ஏறிவிட்டது. பறவைக்கூண்டு ஒன்றுக்கு அறுபது பெஸோக்கள் என்ற விலையில் ஆயிரம் பறவைக்கூண்டுகளைச் செய்து விற்கும் அற்புதமான திட்டத்தைப் பற்றியும், பின்பு ஆறு கோடி பெஸோக்களைச் சம்பாதிக்கும் வகையில் பத்து லட்சம் பறவைக்கூண்டுகளைச் செய்வதைப் பற்றியும் பேச ஆரம்பித்தான். “பணக்காரர்கள் சாவதற்கு முன்னால் அவர்களிடம் விற்க நாம் நிறைய பொருள்களைச் செய்துவிட வேண்டும்,” என்றான். அவனுக்கு முழுதாய்க் குடிபோதை ஏறிவிட்டிருந்தது. கண்மண் தெரியவில்லை. “அவர்கள் எல்லோரும் நோயாளிகளாக இருக்கிறார்கள். விரைவில் செத்துப்போய் விடுவார்கள். கோபம்கூடப் பட முடியாத அளவுக்கு அவர்களின் நிலைமை மோசமாகி இருக்கிறது.” இரண்டு மணி நேரங்களுக்குத் தொடர்ந்து இசை வாசித்துக் கொண்டிருந்த ஜூக்பாக்ஸ் இசைப்பெட்டிக்கு அவனே பணம் கட்டிக் கொண்டிருந்தான். எல்லோரும் பால்தாஸாருக்கு உடல்நலமும், அதிர்ஷ்டமும், செல்வமும் கிடைக்க வேண்டும் என்றும் பணக்காரர்களுக்கு மரணம் கிடைக்க வேண்டும் என்று சொல்லித் தங்கள் மதுக் கோப்பைகளை உயர்த்தினார்கள். ஆனால் மாலை உணவு நேரம் நெருங்கவே பால்தாஸாரைச் சூதாட்டக் கூடத்தில் தனியாக விட்டுவிட்டுப் போனார்கள்.

உர்சுலா அவனுக்காக எட்டு மணி வரைக்கும் வெங்காயத் துண்டுகளால் மூடப்பட்டிருந்த் சுட்ட மாமிசத்தோடு காத்திருந்தாள். எவனோ ஒருவன் பால்தாஸார் சூதாட்டக் கூடத்தில் மகிழ்ச்சியில் மூழ்கிப் போயிருப்பதாகவும் எல்லோருக்கும் பீர் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறான் என்றும் சொன்னான். ஆனால் பால்தாஸார் அதற்கு முன்னால் என்றுமே போதையேறும் அளவுக்கு இப்படிக் குடித்ததில்லை என்பதால் உர்சுலா அவன் சொன்னதை நம்ப மறுத்தாள். அவள் தூங்கப் போனபோது மணி கிட்டத்தட்ட நள்ளிரவாகி இருந்தது. பால்தாஸார் ஒவ்வொன்றைச் சுற்றியும் நான்கு நாற்காலிகள் போட்டிருந்த சிறிய மேசைகளும் ஃப்ளோவர் பறவைகள் முன்னும் பின்னும் நடந்து கொண்டிருந்த வெளிப்புற நடன அரங்கும் உடைய ஒரு வெளிச்சமான அறையில் இருந்தான். அவன் முகத்தில் சிவப்பு உதட்டுச்சாயம் தீற்றி இருந்தது. அவனால் அதற்குப் பிறகு ஓரடிகூட எடுத்து வைக்க முடியாது என்று பால்தாஸாருக்குத் தோன்றியதால் அவனுக்கு இரண்டு பெண்களோடு ஒரே கட்டிலில் படுக்கும் விருப்பம் ஏற்பட்டது.

தனது கைக்கடிகாரத்தை அடுத்த நாள் வந்து மீட்டுக் கொள்கிறேன் என்று சொல்லிச் சூதாட்டக் கூடத்திலேயே விட்டுப் போகும் அளவுக்கு அவன் செலவு செய்திருந்தான். கொஞ்ச நேரம் கழித்துக் கைகள் விரிந்திருக்க தெருவில் கிடந்தபோது அவன் கால்களில் அணிந்திருந்த காலணிகளை யாரோ உருவுவதை அவன் உணர்ந்தான். ஆனால் அவனுக்குத் தனது வாழ்க்கையிலேயே மிக மகிழ்ச்சியான நாளை இழக்க மனமில்லாமல் கிடந்தான். அதிகாலை ஐந்து மணி திருப்பலி பூஜைக்கு போய்க் கொண்டிருந்த பெண்கள் அவன் செத்துக் கிடக்கிறான் என்ற எண்ணத்தில் அவனைப் பார்க்கவும் பயந்தபடி கடந்து போனார்கள்.

***

[1] பால்தாஸாரும் உர்சுலாவும் கதையின் ஆரம்பத்தில் ஹோசேயைத்தான் செப்பே என்று குறிப்பிட்டார்கள். செப்பே என்பது ஹோசே என்ற பெயருள்ளவர்களை அழைக்க லத்தீன்/தென் அமெரிக்கச் சூழலில் பயன்படுத்தப்படும் மற்றொரு பெயர். ஸ்பானிய கலாச்சாரங்களில் இப்படி அதிகாரப்பூர்வமான பெயர்களுக்குப் பதிலாக இப்படிச் சுருக்க/செல்லப் பெயர்களைப் பயன்படுத்துவதும் வழக்கம் உள்ளது – உதாரணம் பிரான்சிஸ் என்ற பெயருக்குப் பதிலாக பாக்கோ. இது கிட்டத்தட்ட ரஷ்ய கலாச்சாரத்தைப் போன்றது – உதாரணம், ரஷ்ய மொழியில் நிக்கோலாய்க்குப் பதிலாகக் கோல்யா.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *