தொப்புள் குறித்த தியானத்தில் இருக்கும் ஆலன்
சூரியன் மேகக் கூட்டத்திலிருந்து எட்டிப் பார்த்துக்கொண்டிருந்த ஜூன் மாதக் காலை வேளையொன்றில் பாரீசு நகர வீதியில் ஆலன் நடந்து சென்று கொண்டிருந்தான். அங்கு அவன் கண்ணில்பட்ட அத்தனை இளம் பெண்களுமே குட்டையான டி ஷர்ட்டும் தொப்புள் தெரிய தாராளமாக இறக்கிக் கட்டப்பட்ட பேண்ட் பெல்டுமாக இருந்தனர்.  இது அவனைக் கவர்ந்திழுத்தது என்பதை விடத் தொந்திரவு செய்தது. காம உணர்வைத் தூண்டும் ஆற்றல், பெண்களின் தொடை, பிட்டம், மார்பு ஆகிய இடங்களில் இருந்து அவர்களுடைய உடலின் நட்ட நடுவே இருந்த சிறிய வட்ட வடிவத் துளைக்கு இடம் பெயர்ந்துவிட்டது தான் அவனைத் தொந்திரவுக்கு உள்ளாக்கியது.
இது அவனை ஆழமாகச் சிந்திக்கத் தூண்டியது. பெண்களின் கைவசமுள்ள காம உணர்வைத் தூண்டும் ஆற்றலின் மையமாகத் தொடைகளே விளங்கின என்று ஒரு ஆணோ அல்லது வரலாற்றின் குறிப்பிட்ட காலகட்டத்தில் வாழ்ந்த மக்களோ நினைத்திருந்தால், அவ்விதமாகத் தூண்டப்பட்ட தனித்தன்மையுடைய அந்தப் பாலுணர்வு எழுச்சியை நாம் எப்படி விளக்கவோ வரையறுக்கவோ முடியும்? காமத்தை அடையும்  நீண்ட வசீகரமான சாலையை உருவகப்படுத்தும் காட்சிப் படிமங்கள் நீளமான தொடைகளே (அதனால் தான் தொடைகள் நீளமாக இருப்பது அவசியம்) என்று இதற்கான விடையை அவன் மெருகேற்றினான். கலவியின் இடையில் தோன்றுவதற்கு சிறிதும் வாய்ப்பற்ற காதல் உணர்வை உருவாக்கும் மந்திர சக்தியைக் கூட நீளமான தொடைகளுடைய பெண்கள் வரமாகப் பெற்றுள்ளனர் என்று ஆலன் தனக்குள் சொல்லிக் கொண்டான்.
பெண்களின் வசமுள்ள காம உணர்வைத் தூண்டும் ஆற்றலின் மையமாகப் பிட்டமே விளங்கியது என்று ஒரு ஆணோ அல்லது வரலாற்றின் குறிப்பிட்ட காலகட்டத்தில் வாழ்ந்த மக்களோ நினைத்திருந்தால் அவ்விதமாகத் தூண்டப்பட்ட தனித்தன்மையுடைய அந்தப் பாலுணர்வு எழுச்சியை நாம் எப்படி  விளக்கவோ வரையறுக்கவோ முடியும்? மிருகத்தன்மை, இன்ப உணர்ச்சி, இலக்கை அடைவதற்கான குறுக்கு வழி, இரட்டையாக இருப்பதாலேயே மிகவும் ஆர்வமூட்டுவதாகத் தோன்றும் இலக்கு என்று இதற்கான விடையை அவன் மேன்மைப்படுத்தினான்.
பெண்களின் வசமுள்ள காம உணர்வைத் தூண்டும் ஆற்றலின் மையமாக மார்புகளே இருந்தன என்று ஒரு ஆணோ அல்லது வரலாற்றின் குறிப்பிட்ட காலகட்டத்தில் வாழ்ந்த மக்களோ நினைத்திருந்தால் அவ்விதமாகத் தூண்டப்பட்ட தனித்தன்மையுடைய அந்தப் பாலுணர்வு எழுச்சியை நாம் எப்படி விளக்கவோ வரையறுக்கவோ முடியும்?  பெண்களின் திருப்தி, கன்னி மாதாவிடம் பாலருந்தும் ஏசு, உன்னதமான குறிக்கோளான பெண்பாலின் முன் மண்டியிட்டு அமர்ந்திருக்கும் ஆண்பால் என்று இதற்கான விடையை அவன் மேம்படுத்தினான்.
ஆனால் உடலின் நடுப் பகுதியில் உள்ள தொப்புளே காம உணர்வைத் தூண்டும் ஆற்றலின் மையப்புள்ளி என்று ஒரு ஆணோ அல்லது வரலாற்றின் குறிப்பிட்ட காலகட்டத்தில் வாழ்ந்த மக்களோ நினைத்தால் அவ்விதமாகத் தூண்டப்படுகிற பாலுணர்வு எழுச்சியை எவ்வாறு வரையறுக்க முடியும்?
ஆகவே தொப்புளைப் பற்றியே நினைத்துக்கொண்டு, மீண்டும் மீண்டும் அதையே நினைப்பது குறித்த எந்தக் கவலையுமின்றி ஆலன் அந்த வீதிகளில் மெல்ல நடந்து சென்றான். சொல்லப்போனால் அவ்வாறு செய்வது தனக்குப் பிடித்திருப்பதை உணர்ந்தான். ஏனெனில் அவனுக்குள் இருந்த ஒரு ஆழமான நினைவை அவன் கண்ட தொப்புள் காட்சி கிளறியது. அவனுக்கும் அவனுடைய தாய்க்கும் இடையே எதிர்பாராமல் நிகழ்ந்த இறுதிச் சந்திப்பின் நினைவுகளை அது கிளறியது.
அவனுக்கு அப்போது பத்து வயது. அவனும் அவனுடைய அப்பாவும் தோட்டமும் நீச்சல் குளமும் கொண்ட ஒரு வாடகை மாளிகையில் தங்களுடைய விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்தனர். ஏழு வருடங்களுக்குப் பிறகு முதன் முறையாக அவள் அவர்களைச் சந்திக்க வந்திருந்தாள். தன் முன்னாள் கணவரான அவன் தந்தையுடன் அவள் அந்த மாளிகைக்குள் சென்றாள். பிறகு அவர்கள் இருவரும் அதன் கதவை அடைத்துக் கொண்டனர். மாளிகையைச் சுற்றிலும் இருந்த பல மைல் தூரங்கள் அதனால் மூச்சுத் திணறும் சூழல் ஏற்பட்டது. அவள் அங்கிருந்த இரண்டு மணி நேரமும் ஆலன் நீச்சல் குளத்தினுள் தன் நேரத்தைக் கழிக்க முயற்சி செய்து கொண்டிருந்தான். அவள் கையசைத்து விடைபெறும்போது அவன் நீச்சல் குளத்தில் இருந்து மேலே வந்தான். அங்கு அவள் தனியே இருந்தாள். அவர்கள் இருவரும் என்ன பேசியிருப்பார்கள் என்று அவனுக்குத் தெரியவில்லை. அவள் தோட்டத்திலிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்ததும் ஈரமான நீச்சல் உடையுடன் தான் அவள் முன் நின்றதும் மட்டுமே அவனுக்கு நினைவிருந்தது. தாங்கள் இருவரும் பேசிக் கொண்டது எதுவும் அவனுக்கு நினைவில்லாமல் போனாலும், தன் மகனின் தொப்புளை நாற்காலியில் அமர்ந்தவாறே அவள் தீவிரமாகப் பார்த்த அந்தத் தருணம் கூர்மையாக அவன் மனதில் பதிந்திருந்தது. தன் வயிற்றின் மீது பதிந்த அவளுடைய வெறித்த பார்வையை இப்போதும் அவனால் உணர முடிந்தது. அது அவனால் புரிந்து கொள்ள முடியாத ஒரு பார்வையாக இருந்தது. இரக்கமும் இகழ்ச்சியும் இணைந்த விளக்கமுடியாத கலவையாக அது இருந்தது. சிறிய புன்னகையின் வடிவத்தில் அவளுடைய இதழ்கள் இப்போது லேசாக விரிந்தன. அந்தப் புன்னகையும் கூட இரக்கமும் இகழ்ச்சியும் சேர்த்த கலவையாகவே இருந்தது. பிறகு நாற்காலியில் அமர்ந்தவாறே அவனை நோக்கிச் சாய்ந்தவள், தன்னுடைய சுட்டுவிரலால் அவனுடைய தொப்புளைத் தொட்டாள்.
அடுத்த நொடியே எழுந்து அவனை முத்தமிட்டாள்.(அவள் அவனை உண்மையிலேயே முத்தமிட்டாளா? அவனுக்கு உறுதியாகத் தெரியவில்லை) பிறகு அங்கிருந்து போய்விட்டாள். அதன் பிறகு அவன் அவளைச் சந்திக்கவே இல்லை.
ஒரு பெண் தன் காரிலிருந்து இறங்குகிறாள்
ஒரு சிறிய கார் ஆற்றின் அருகே இருந்த சாலையில் நகர்கிறது. சில வீடுகள் அரிதாகக் காணப்பட்ட,  பாதசாரிகள் தென்படாத, புறநகரின் எல்லைக்கும் திறந்தவெளிக்கும் இடைப்பட்ட அந்தக் கவர்ச்சியற்ற நிலப்பரப்பை, சில்லென்ற காலை நேரக் காற்று கவனிப்பாரற்ற ஒரு இடமாக மேலும் மாற்றியது. சாலையோரத்தில் நின்ற காரிலிருந்து ஒரு அழகிய இளம் பெண் இறங்கினாள். அவள் காரின் கதவை மிக அலட்சியமாக மூடினாளே தவிர பூட்டவில்லை. இது விசித்திரமாக இருந்தது. திருடர்கள் நிறைந்த காலகட்டத்தில் இத்தகைய அலட்சியத்திற்கு வாய்ப்பேயில்லை எனும்போது இதற்கு என்ன அர்த்தம்?  இந்தப் பெண் அவ்வளவு கவனக் குறைவுடன் இருக்கிறாளா?
இல்லை. அவள் கவனக் குறைவாக இருப்பதாகத் தோன்றவில்லை. அதற்கு நேர்மாறாக அவளுடைய முகத்தில் திடமான உறுதி தான் தெரிந்தது. தனக்கு என்ன தேவை என்று அவளுக்குத் தெரிந்திருந்தது. இந்தப் பெண் உறுதியின் உருவம். சாலையில் நூறு அடிகள் நடந்தவள் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த உயரமான பாலத்தை நோக்கிச் சென்றாள். அது வண்டிகள் செல்லத் தடை செய்யப்பட்டிருந்த குறுகிய பாலம். அதன் மீது ஏறி தொலைவில் தெரிந்த அதன்  கரையை நோக்கிச் சென்றவள், தன்னைச் சுற்றிலும் மறுபடி மறுபடி திரும்பிப் பார்த்தாள். அந்தப் பார்வை அவளுக்காக யாராவது காத்திருக்கிறார்களா என்று பார்ப்பது போல் இல்லாமல் யாரும் அவளுக்காகக் காத்திருக்கவில்லை என்பதை அவள் உறுதி செய்து கொள்வது போலிருந்தது. பாலத்தின் நடுவே அவள் இப்போது நின்றாள். முதலில் பார்ப்பதற்கு அவள் தயங்குவது போல் தோன்றும். ஆனால் அது தயக்கமோ மனஉறுதியில் ஏற்பட்ட திடீர் சோர்வோ இல்லை. அதற்கு நேர்மாறாக தன்னுடைய கவனத்தை ஒருமுகப்படுத்த, கூர்மைப்படுத்துவதற்காக செய்யப்பட்ட ஒரு இடை நிறுத்தம். அது தன்னுடைய மன உறுதியை இன்னும் இரும்பாக்குவதற்காகச் செய்யப்பட்டது. அவளுடைய மன உறுதியா? துல்லியமாகச் சொல்ல வேண்டும் என்றால் அவளுடைய வெறுப்பு. ஆம். தயக்கம் போலத் தோற்றமளித்த அந்த இடை நிறுத்தம் உண்மையில் அவளுடைய வெறுப்பு அவளோடு துணை நிற்பதற்கான, ஆதரிப்பதற்கான, ஒரு நிமிடம் கூட அவளை விட்டு விலகிச் செல்லாமல் இருப்பதற்கான முறையீடு.
அவள் தன்னுடைய ஒரு காலை உலோகக் கம்பித் தடுப்பிற்கு மேல் தூக்கி அங்கிருந்த வெற்றிடத்தில் குதித்தாள். தண்ணீரின் தின்மையான மேற்பரப்பின் மீது அதிவேகமாக மோதிய அவளுடைய உடல் அதன் குளிர்ச்சியால் சிறிது நேரம் செயலிழந்து போயிற்று. ஆனால் அவள் நீச்சலில் தேர்ந்தவள் என்பதால் அவளுடைய ஒட்டுமொத்த அனிச்சை எதிர்வினைகளும் கிளர்ந்து அணிவகுத்து, இறப்பதற்கான அவளுடைய விருப்பத்துக்கு எதிராகச் செயல்பட, அடுத்த சில நொடிகளிலேயே அவளுடைய தலை நீரிலிருந்து உயர்ந்தது. பிறகு அவள் தன் தலையை மறுபடி நீருக்குள் அதிவேகமாக அழுத்தி, சுவாசத்தைத் தடை செய்வதற்காக வலுக்கட்டாயமாக நீரை உள்ளிழுத்தாள். தொலை தூரமிருந்த ஆற்றின் கரையிலிருந்து திடீரென ஒரு கூச்சல் கேட்டது. யாரோ அவளைப் பார்த்துவிட்டிருக்கவேண்டும். மரணம் என்பது எளிதானது அல்ல என்று அவளுக்குப் புரிந்தது. தன்னுடைய மிகப் பெரிய எதிரி, நல்ல நீச்சல் பயிற்சி பெற்றவள் என்பதால் தனக்கு இயல்பாகவே இருக்கக் கூடிய துடிப்பான எதிர்வினை அல்ல என்பதையும், தனக்கு முன்பின் தெரியாத யாரோ தான் என்பதையும் அவள் புரிந்து கொண்டாள். அவள் போராட வேண்டும். தன்னுடைய மரணத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்குப் போராட வேண்டும்.
அவள் கொலை செய்கிறாள்
கூச்சல் வந்த திசையைப் பார்க்கிறாள். யாரோ ஆற்றுக்குள் குதித்து விட்டார்கள். யாருடைய வேகம் அதிகமாக இருக்கும்? நீரின் அடியாழம் செல்லும் முடிவுடன் தண்ணீரை அருந்தியபடி மூழ்கிக் கொண்டிருக்கும் தனக்கா அல்லது இப்போது குதித்த அந்த நபருக்கா என்று யோசித்தாள். நுரையீரலில் தண்ணீர் சேர்ந்து அவள் பாதி மூழ்கிக் கொண்டிருக்கையில் அவளுடைய நுரையீரல் பலவீனம் அடைந்து அவளுடைய ரட்சகருக்கு அவள் எளிதான இரையாகி விட மாட்டாளா? அவன் அவளைக் கரையை நோக்கி இழுத்துச் சென்று, தரையின் மீது கிடத்தி, நுரையீரலில் இருந்த தண்ணீரை வாய் மீது வாய் வைத்து உறிஞ்சி வெளியேற்றுவான். மீட்புப் படையையும், காவல்துறையையும் அழைப்பான். அவள் காப்பாற்றப்பட்டு காலத்துக்கும் கேலிக்கு ஆளாவாள்.
“நிறுத்து! நிறுத்து!” என்று அந்த ஆள் கூச்சலிட்டான். எல்லாமே மாறிவிட்டது. தண்ணீரில் மூழ்குவதற்குப் பதிலாக அவள் தன்னுடைய தலையை உயர்த்தி, தன்னுடைய பலத்தைச் சேகரித்துக் கொள்ள ஆழமாக மூச்சு விட்டாள். அவன் அதற்குள் அவள் எதிரே வந்து விட்டான்.  தன்னுடைய புகைப்படம் செய்தித்தாள்களில் வந்தாலே புகழடைந்துவிடுவோம் என்று நம்பக் கூடிய ஒரு பதின்வயது இளைஞன் அவன். “நிறுத்து! நிறுத்து!” என்று மறுபடி மறுபடி அவன் அதையே சொல்லிக் கொண்டிருந்தான். தன் முன்னே நீண்ட அவனுடைய கைகளில் இருந்து விடுவித்துக் கொள்வதற்குப் பதில் அவள் அதனை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள். அவனுடைய கையைப் பற்றியதில் ஆற்றின் ஆழத்துக்கு இப்போது அவனும் இழுக்கப்பட்டான்.   இப்போது அவன் மீண்டும் “நிறுத்து” என்றான். அவனுக்குத் தெரிந்த ஒரே சொல் அது மட்டும் தான் போலிருந்தது.
ஆனால் அவன் வாயிலிருந்து அதற்கு மேல் அந்த வார்த்தை வரவில்லை. அவள் அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு அவனை ஆற்றின் கீழ்ப் பகுதிக்கு இழுத்தாள். பிறகு அவனுடைய தலையைத் தண்ணீருக்குள்ளே கிடக்கும்படி தன்னுடலின் மொத்த பாரத்தையும் அவன் முதுகின் மீது  வைத்து அழுத்தினாள். ஏற்கனவே நிறைய நீரைக் குடித்து விட்டிருந்தவன் அவளை எதிர்த்துப் போராடினான். அவளைக் கீழே தள்ள முயற்சி செய்தான். ஆனால் அவள் அவனுடைய உடலின் மீது அழுத்தமாகப் படுத்துக் கிடந்தாள். அவனால் மூச்சு விடுவதற்காகத் தன் தலையை நீரின் மேற்பரப்புக்கு உயர்த்த முடியவில்லை. வெகுவாக நீண்ட சில நொடிகளுக்குப் பிறகு அவனுடைய அசைவு நின்று போனது. அவள் அவனை அதே நிலையில் சில நொடிகள் கிடக்கவிட்டாள். களைப்புடனும் உடல் நடுக்கத்துடனும் அவள் அவன் மீது படுத்துக் கிடந்தது போலிருந்தது. தன்னுடைய உடலுக்குக் கீழே கிடந்த அந்த ஆணால் இதற்குப் பிறகு நகர முடியாது என்று உறுதி செய்து கொண்டாள். பிறகு அவன் உடலை அப்படியே விட்டுவிட்டு இப்போது நிகழ்ந்த சம்பவத்தின் நிழலைக் கூட தன் மனதுள் அண்டவிட விரும்பாதது போல, முன்பு எந்த இடத்திலிருந்து ஆற்றுக்குள் குதித்தாளோ அதே இடத்தை நோக்கி மறுபடி சென்றாள்.
ஆனால் என்ன நடக்கிறது? தன் உறுதியான முடிவை அவள் மறந்து விட்டாளா? அவளுடைய மரணத்தை அவளிடமிருந்து திருட முயற்சி செய்த அந்த நபர் இப்போது உயிருடன் இல்லை எனும்போது, அவள் ஏன் தண்ணீருக்குள் மூழ்கவில்லை? அவனுடைய பிடிக்குள் இருந்து விடுவிக்கப்பட்டு இப்போது சுதந்திரமாக இருக்கும் அவள் இனி இறப்பை நாடப்போவதில்லையா என்ன?
எதிர்பாராத விதமாக காப்பாற்றப்பட்டதால் ஏற்பட்ட
அதிர்ச்சி அவளுடைய மனஉறுதியை உடைத்துவிட்டது. தன்னுடைய மொத்த ஆற்றலையும் தன் இறப்பின் மீது குவிக்கும் வலுவை அவள் இப்போது இழந்துவிட்டிருந்தாள்.  உறுதியும் வலிமையும் தன் உடலில் இருந்து திடீரென உரித்து எடுக்கப்பட்டது போல் அவள் நடுங்கினாள். காரை அநாதரவாக விட்டுவிட்டு வந்த இடத்தை நோக்கி இயந்திரகதியில் நீந்தத் துவங்கினாள்.
வீட்டுக்குத் திரும்புகிறாள்
சிறிது சிறிதாக நீரின் ஆழம் குறைவதை உணர்ந்தாள். ஆற்றின் கரை மீது தன் பாதங்களைப் பதித்தாள். கரையில் விட்டுச் சென்றிருந்த தன் காலணிகளைத் தேடுவதற்கு அவளுக்கு பலமில்லாததால் ஆற்றின் மறுகரையை நோக்கிச் செல்லும் சாலையில் வெறுங் காலில் நடந்தாள்.
இப்போது அவள் மறுபடி கண்டடைந்த உலகம் இணக்கமற்ற தோற்றத்துடன் அவளை வரவேற்கிறது . திடீரென அவளைப் பதற்றம் ஆட்கொண்டது. அவளிடம் காரின் சாவி இல்லை. அது எங்கே போனது? அவள் அணிந்திருந்த ஸ்கர்டில் பாக்கெட் இல்லை.
மரணத்தை நோக்கிச் செல்லும் போது வழியில் எதையாவது கீழே போட்டுவிடுகிறோமா என்பதைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை. அவள் காரைவிட்டு இறங்கிச் சென்றபோது எதிர்காலம் என்ற ஒன்றே அவள் எதிரே இல்லை. மறைப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால் இப்போதோ அவள் அனைத்தையும் மறைத்தாகவேண்டும். எந்தவிதமான தடயமும் இருக்கக்கூடாது. அவளுடைய பதற்றம் மென்மேலும் அதிகரித்தது. சாவி எங்கே? எப்படி வீட்டுக்குத் திரும்பிச் செல்வது?
காரை அடைந்து அதன் கதவை இழுத்துப் பார்த்தபோது அது உடனே திறந்துகொண்டதில் அவள் திகைப்படைந்தாள். அநாதரவாக அவள் விட்டு சென்ற சாவி டேஷ்போர்டிலேயே அவளுக்காகக் காத்திருந்தது. காரில் ஏறி அமர்ந்தவள் காலணி அணியாத தன் வெற்றுப் பாதங்களை பெடல்களின் மீது வைக்கிறாள். அவளுடைய உடல் இன்னும் நடுங்கிக்கொண்டிருக்கிறது. இப்போது அது குளிரின் காரணமாகவும் நடுங்குகிறது. முழுதாக நனைந்துவிட்டிருந்த அவளுடைய சட்டையில் இருந்தும் ஸ்கர்ட்டில் இருந்தும் அழுக்கான ஆற்றுத் தண்ணீர் வழிந்து கொண்டிருக்க அவள் காரை ஓட்டத் தொடங்கினாள்.
வற்புறுத்தி அவள்மீது வாழ்வைச் சுமத்த முயற்சி செய்தவன் நீரில் மூழ்கி இறந்து போனான். ஆனால் அவள் கொல்ல முயற்சி செய்த அவளுடைய வயிற்றில் இருந்த உயிர் இன்னும் பிழைத்திருக்கிறது. தற்கொலை எண்ணம் முடிவுக்கு வந்துவிட்டது.  இனி அதைத் திரும்பச் செய்யவே கூடாது. அந்த இளைஞன் இறந்துவிட்டான். கரு உயிருடன் இருக்கிறது. இப்போது அவள் செய்யக்கூடியதெல்லாம் நடந்ததை மற்றவர்கள் யாரும் கண்டுபிடிக்க முடியாதபடி காப்பது தான்.  அவள் நடுங்கிக் கொண்டிருக்கிறாள். அவளுடைய மனஉறுதி மீண்டும் தோன்றுகிறது.  தனக்கு உடனடியாக நடக்கப் போகிற விஷயங்களைத் தவிர வேறு எதையும் அவள் இப்போது யோசிக்கவில்லை. மற்றவர்கள் கண்ணில்படாமல் காரிலிருந்து எப்படி வெளியேறுவது?  நீர் சொட்டிக் கொண்டிருக்கும் தன் உடைகளுடன் குடியிருப்பினுடைய காவலாளியின்  பார்வையில் படாமல் அவருடைய ஜன்னலை எப்படி கடப்பது?
ஆலனுடைய தோளில் மீது பலமான ஒரு அடி விழுந்தது. “முட்டாள்! கவனமாகப் பார்த்து நட” என்ற குரல் கேட்டது. அவன் திரும்பிப் பார்த்த போது ஒரு பெண் உத்வேகத்துடன் நடந்து சென்று கொண்டிருப்பதைப் பார்த்தான். “மன்னியுங்கள்!” என்று (தன் பலவீனமான குரலில்) அவன் அவள் முதுகுக்குப் பின் கூச்சலிட்டான். அவனைத் திரும்பிப் பாராமல் “ஆஸ்ஹோல்” என்று (தன்னுடைய கனத்த குரலில்) அவள் பதில் கூறினாள்.
மன்னிப்புக் கேட்பவர்கள்
இரு நாட்களுக்குப் பிறகு தன்னுடைய ஸ்டுடியோவில் தனியாக இருந்த ஆலன் தன் தோளில் அந்த வலி இன்னும் அப்படியே இருப்பதை உணர்ந்தான். சாலையில் தன்மீது இடித்த அந்தப் பெண் வேண்டுமென்றே அதைச் செய்திருக்க வேண்டும் என்று முடிவு செய்தான். அவளுடைய கடுமையான உரத்த குரலை அவனால் மறக்க முடியவில்லை. அதைத்தொடர்ந்து பணிவான குரலில் தான் அவளிடம் மன்னிப்புக் கேட்டதும் பதிலுக்கு அவள் ஆஸ்ஹோல் என்றதும் அவனுடைய காதுகளில் இப்போதும் ஒலித்தது. மீண்டும் ஒரு முறை காரணமேயின்றி அவன் மன்னிப்புக் கேட்டிருக்கிறான். மன்னிப்பைப் பிச்சை கேட்கும் இந்த முட்டாள்தனம் எப்போதும் ஏன் தன்னிச்சையாக நிகழ்கிறது? இந்த நினைவுகள் அவனை விட்டு அகலவே இல்லை. யாரிடமாவது பேச வேண்டும் போலிருந்தது. அவன் தன்னுடைய பெண் தோழி மேடலீனை அழைத்தான். அவள் பாரிசில் இல்லை. அவளுடைய அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. ஆகவே அவன் சார்லியின் எண்ணை அழுத்தினான்.  தன் நண்பனுடைய குரல் கேட்ட அடுத்த நொடி ஆலன் மன்னிப்புக் கேட்டான்.
“கோபப்படாதே! நான் இப்போது ஒரு மோசமான மனநிலையில் இருக்கிறேன். உன்னிடம் பேச வேண்டும்” என்றான்.
” அடடா! இது அருமையான தருணம். நானும் மிக மோசமான ஒரு மனநிலையில் தான் இருக்கிறேன். சரி. நீ எங்கே இருக்கிறாய்?” என்று கேட்டான்.
“நான் என் மீதே கோபத்துடன் இருக்கிறேன். குற்ற உணர்ச்சி அடையக் கூடிய ஒவ்வொரு வாய்ப்பையும் என்னால் எப்படித் தேடிக் கண்டடைய முடிகிறது?”
” அது அவ்வளவு கவலைப்பட வேண்டிய விஷயமொன்றும் இல்லை” என்றான் நண்பன்.
“குற்ற உணர்ச்சி ஏற்படுகிறதோ இல்லையோ, விஷயம் இது தான். வாழ்க்கை என்பது ஒவ்வொருவரும் அடுத்தவருடன் போராடுவதே. இது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆனால் ஏறத்தாழ நாகரிகம் அடைந்துவிட்ட ஒரு சமூகத்தில் இந்தப் போராட்டம் எவ்விதம் நடக்கிறது? தம் கண்ணில் படுகின்ற நபர்களையெல்லாம் மக்களால் தாக்கமுடியாது. அதற்குப் பதிலாக ஒவ்வொருவரும் செயல்திறன் குறித்த அவமதிப்பை அடுத்தவர் மீது சுமத்த முயற்சி செய்கின்றனர். அடுத்தவரைக் குற்றவுணர்ச்சி கொள்ளச் செய்யக் கூடிய மனிதன் வெற்றி பெறுகிறான். குற்றத்துக்காக மன்னிப்பு கேட்கிறவன் தோற்கிறான். ஏதோ சிந்தனையில் லயித்தபடி நீ சாலையில் நடந்து போய்க் கொண்டிருக்கிறாய். இந்த உலகத்தில் தான் ஒருத்தி மட்டுமே இருப்பது போன்ற எண்ணத்தில் இடம்வலம் பார்க்காமல் உனக்கு நேரெதிரே ஒரு பெண் வருகிறாள். நீங்கள் ஒருவர் மீது ஒருவர் மோதிக் கொள்கிறீர்கள். இப்போது யார் மற்றவரைப் பார்த்துக் கூச்சலிடப் போகிறீர்கள், யார் மன்னிப்புக் கேட்கப் போகிறீர்கள் என்பது தான் உண்மையின் தருணம். இது ஒரு சிறப்பான முக்கியத்துவம் வாய்ந்த சூழல். உண்மையில் நீங்கள் இருவருமே அடுத்தவரை இடித்தவர்கள் என்பதோடு அடுத்தவரால் இடிபட்டவர்களும் தான். ஆனாலும் சிலர் எப்போதுமே, உடனடியாக, தன்னிச்சையாகத் தங்களையே இடித்தவர்களாகக் கருதிக் கொள்கிறார்கள். ஆகவே தவறு செய்து விடுகிறார்கள். மற்றவர்கள் எப்போதுமே, உடனடியாக, தன்னிச்சையாகத் தங்களை இடிக்கப்பட்டவர்களாகக் கருதிக் கொள்கிறார்கள். ஆகவே அவர்களின் பக்கம் நியாயம் இருக்கிறது. உடனே வேகமாக அடுத்தவர் மீது குற்றம் சுமத்தி அவர்களைத் தண்டிக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் நீ மன்னிப்புக் கேட்பாயா அல்லது குற்றம்
சுமத்துவாயா?”
“நான் நிச்சயமாக மன்னிப்புக் கேட்பேன்”
“பாவப்பட்ட என் நண்பா! ஆக நீயும் மன்னிப்பு கேட்பவர்களின் வரிசையில் வருகிறாய்.  நீ அந்த இன்னொரு நபரின் கோபத்தை உன்னுடைய மன்னிப்பின் மூலமாக நீ தணிக்கிறாய்”
“சர்வ நிச்சயமாக”
“நீ செய்வது தவறு. மன்னிப்பு கேட்கிறவன் தன் குற்ற உணர்வைத் தானே பிரகடனம் செய்கிறான். அவ்வாறு பிரகடனம் செய்கிறபோது எல்லோர் முன்னிலையிலும் நீ உயிரோடு இருக்கும் காலம்வரை உன்னை அவமதிக்கவும், குற்றம் சுமத்தவும் நீ அவனை ஊக்கப்படுத்துகிறாய். யார் முதலில் மன்னிப்புக் கேட்கிறார்களோ அவர்கள் தவிர்க்கவே முடியாத இந்தப் பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டும்”
” அது உண்மைதான். யாருமே மன்னிப்புக் கேட்க கூடாது. ஆனால் அனைவருமே மன்னிப்புக் கேட்கும் ஒரு உலகத்தையே நான் விரும்புகிறேன். அதற்கு யாருமே விதிவிலக்கல்ல. காரணமே இல்லாமல், அதீதமாக, எந்த அவசியமும் இன்றி மன்னிப்பு என்ற சுமையை அவர்கள் ஏன் தங்கள் மீது சுமத்திக் கொள்ள வேண்டும்?”
மேடலீனை அழைப்பதற்காக ஆலன் தன்னுடைய அலைபேசியை மறுபடி எடுத்தான். அலைபேசி வீணாக அடித்துக்கொண்டிருந்தது. இத்தகைய தருணங்களில் அவன் வழக்கமாகச் செய்வது போல சுவரில் தொங்கிக் கொண்டிருந்த புகைப்படத்தில் இருந்த அழகிய இளம் பெண்ணின் முகத்தின் மீது தன் கவனத்தைச் செலுத்தினான். அது அவனுடைய அம்மாவின் இளவயதுப் புகைப்படம். அவனுடைய ஸ்டூடியோவில் அதைத் தவிர வேறு புகைப்படமே இல்லை.
ஆலன் பிறந்த சில மாதங்களிலேயே அவனுடைய அம்மா அவனுடைய அப்பாவைப் பிரிந்துவிட்டாள். யாருக்கும் எந்த இடையூறும் விளைவிக்காத அவருடைய வழக்கமான செயல்பாடுகளைப் போலவே அவளைப் பற்றி அவர் எப்போதுமே குறை கூறியதில்லை. அவர் ஒரு நல்ல மனிதர். இத்தகைய ஒரு மென்மையான நல்ல மனிதரை எப்படி ஒரு பெண்ணால் நிராதரவாக விட்டுச் செல்ல முடியும் என்று அந்த குழந்தைக்குப் புரியவில்லை. குழந்தைப் பருவத்திலிருந்தே (அல்லது கருவுற்றதில் இருந்தே) மென்மையானவனாகவும் நல்லவனாகவும் (அவன் அறிந்தவரையில்) இருந்த தன்னுடைய மகனைக் கூட நிராதரவாக விட்டுச்செல்ல அவளால் எப்படி முடிந்தது என்பதும் அவனுக்குப் புரியவில்லை.
“அம்மா எங்கு வசிக்கிறாள்?” என்று அவன் தன்னுடைய தந்தையிடம் கேட்டிருக்கிறான்.
“அனேகமாக அமெரிக்காவாக இருக்கலாம்”
” அனேகமாக என்றால் என்ன அர்த்தம்?”
“அவளுடைய முகவரி எனக்குத் தெரியாது”
” ஆனால் உங்களுக்கு அதைத் தெரிவிக்க வேண்டிய கடமை அவளுக்கு இருக்கிறது தானே?”
” அவளுக்கு அப்படி எந்தவிதமான கடமையும் கிடையாது”
” என்னைப் பொறுத்தவரையில் கூட அவளுக்கு எந்தக் கடமையும் இல்லையா? என்னைப் பற்றிய தகவல்களை அவள் பெற விரும்பவில்லையா? நான் என்ன செய்கிறேன் என்று அவள் அறிந்து கொள்ள விரும்பவில்லையா? அவளைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்று அவள் தெரிந்துகொள்ள விரும்பவில்லையா?”
ஒருநாள் அவனுடைய அப்பா தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்துவிட்டார்.
” நீ வற்புறுத்துவதாலேயே இதைச் சொல்கிறேன். உன்னுடைய அம்மா உன் பிறப்பையே விரும்பவில்லை. நீ இங்கிருக்கும் அந்தச் சாய்வு நாற்காலியில் சொகுசாக சாய்ந்துகொண்டிருப்பதை அவள் விரும்பவில்லை. உன்னைப் பற்றிய எதையும் அவள் விரும்பவில்லை. இப்போது உனக்குப் புரிந்ததா?” என்றார்.
அவனுடைய அப்பா முரடர் இல்லை. ஒரு உயிர் பூமிக்கு வருவதைத் தடுக்க முயற்சி செய்த அந்தப் பெண்ணின் மீது தனக்கிருந்த உள்ளார்ந்த முரண்பாட்டை  அவர் எவ்வளவோ மறைத்தும் அதை மீறி அவருடைய உணர்வுகள் வெளிப்பட்டன.
விடுமுறைக் காலமொன்றில் ஒரு  மாளிகையின் நீச்சல் குளத்தருகே ஆலனுக்குத் தன் தாயுடன் நிகழ்ந்த இறுதிச் சந்திப்புக் குறித்து நான் ஏற்கனவே விளக்கியிருக்கிறேன். அவனுக்கு அப்போது பத்து வயதிருக்கும். அவனுக்குப் பதினாறு வயதாகும்போது அவனுடைய அப்பா இறந்து விட்டார்.
ஈமச் சடங்குகள் நடந்து முடிந்த சில நாட்களுக்குப் பிறகு தங்கள் குடும்பத்தினரின் புகைப்பட ஆல்பத்தில் இருந்து தன் அம்மாவின் புகைப்படம் ஒன்றைக் கத்தரித்தவன் அதற்குச் சட்டமிட்டு தன் ஸ்டூடியோ சுவரின் மீது தொங்கவிட்டான். அவனுடைய அப்பாவின் புகைப்படம் ஒன்று கூட அவனுடைய குடியிருப்பில் இல்லை. எனக்குத் தெரியாது. அது காரணப் பொருத்தமற்றதா? ஆம். நிச்சயமாக. நியாயமற்றதா? ஆமாம். சிறிதும் ஐயமின்றி. ஆனால் அது அப்படித்தான். அவனுடைய ஸ்டுடியோவின் சுவரில் ஒற்றைப் புகைப்படம் மட்டுமே இருந்தது. அவனுடைய தாயின் புகைப்படம். அவ்வப்போது அவன் அதனுடன் பேசுவான்.
மன்னிப்புக் கேட்கும் ஒருவரை  உருவாக்குவது எப்படி
“நீங்கள் ஏன் கருக்கலைப்பு செய்து கொள்ளவில்லை? அவர் உங்களைத் தடுத்தாரா?”
” அதை நீ எப்போதுமே தெரிந்து கொள்ள முடியாது. என்னைப் பற்றி நீ கற்பனை செய்து கொண்டு இருப்பதெல்லாம் தேவதைக் கதைகள் மட்டுமே. ஆனால் உன்னுடைய தேவதைக் கதைகளை நான் விரும்புகிறேன். ஆற்றில் ஒரு இளைஞனை மூழ்கடித்துக் கொன்ற கொலையாளியாக என்னை நீ மாற்றியபோது கூட அது எனக்குப் பிடித்திருந்தது. வாழ்த்துகள் ஆலன். ஒரு கதை சொல். கற்பனை செய். அதை நான் கேட்கிறேன்” என்று புகைப்படத்தில் இருந்து ஒரு குரல் ஒலித்தது.
அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் நிலவும் ஊழலை நான் அடியோடு அழிக்க வேண்டும். அழித்த பிறகு அது அரசாங்கத்தின் கீழ் மட்டத்தில் நடைபெறுவதாகக் காண்பிக்க வேண்டும்.
ஆலன் மீண்டும் கற்பனை செய்தான். அவனுடைய அப்பா அவனுடைய அம்மாவின் உடலின் மேல் இருப்பதாகக் கற்பனை செய்தான். அவர்கள் கலவியில் ஈடுபடுவதற்கு முன்பு அவள், “நான் மாத்திரை எடுத்துக் கொள்ளவில்லை. ஆகவே நீ தான் கவனமாக இருக்க வேண்டும்”  என்று எச்சரிக்கிறாள். அவர் அவளுக்கு உறுதியளிக்கிறார். ஆகவே அவள் அவநம்பிக்கை ஏதுமின்றி இயல்பாக உடலுறவில் ஈடுபடுகிறாள்.  அவருடைய முகத்தில் உச்சகட்ட இன்பம் அடைவதற்குரிய அறிகுறி தோன்றி, பிறகு அது பெருகியதும் அவள் “கவனமாக இரு. வேண்டாம். வேண்டாம்” என்று கூச்சலிடுகிறாள். ஆனால் அவருடைய முகம் மென்மேலும் சிவந்து கொண்டே போனது. சிவப்பாகவும் அருவருப்பாகவும் இருந்தது. தன் மீது பாரமாக அழுத்திக் கொண்டிருந்த அவருடைய உடலை அவள் கீழே தள்ளிவிட முயற்சி செய்கிறாள். அவள் போராடிய போது அவர் இன்னும் இறுக்கமாக அவள் மீது படர்ந்தார். அவரைப் பொறுத்தவரை அது குருட்டுத்தனமான காதல் இல்லை,  காதல் சிறிதுமற்ற திட்டமிட்ட செயல் என்பது, அப்போது சட்டென அந்த நொடியில் தான் அவளுக்குப் புரிந்தது. ஆனால் அவளுக்கிருந்ததோ உறுதி மட்டுமல்ல. வெறுப்பு. அந்த யுத்தத்தில் அவள் தோல்வி கண்டதால் ஏற்பட்ட  கடும் வெறுப்பு.
அவர்களுடைய கலவியை அவன் கற்பனை செய்வது இது முதல் முறை அல்ல. அது அவனை வசியம் செய்தது. எல்லா மனிதர்களும் தாம் கருவுற்ற அந்தத் தருணத்தின் துல்லியமான நகலாக இருப்பர் என்று அவனை நினைக்கச் செய்தது. மென்மையும், உடல் பலமும் கொண்ட ஆண் வெறுப்பு, தைரியமும் உடலளவில் பலவீனமும் கொண்ட பெண் வெறுப்பு ஆகிய இரண்டும், உடலுறவின் உச்சகட்டத்தில் ஒன்றிணைகின்றன. தன்னுடைய பிறப்புக்குக் காரணமாகத் திகழ்ந்த அந்த இரு வெறுப்புகளின் சுவடுகள் தன் முகத்தில் தெரிகின்றனவா எனக் கண்ணாடியின் எதிரே நின்று பரிசோதித்தான்.
மன்னிப்புக் கேட்கும் ஒருவனை உருவாக்கியது மட்டுமே இரட்டை வெறுப்பின் பலன் என்ற முடிவுக்கு வந்தான். அவன் தன் தந்தையைப் போலவே மென்மையானவனாகவும்  புத்திசாலியாகவும் இருந்தான். அவனுடைய தாயின் பார்வையில்
அவன் அனுமதியின்றி நுழைந்த ஒருவனாகவே எப்போதும் இருப்பான். மென்மையானவாகவும் அதே சமயத்தில் அனுமதியின்றி ஓரிடத்தில் நுழைபவனாகவும் இருக்கும் ஒருவன் பொருத்தமான காரணமின்றித் தன் வாழ்நாள் முழுவதும் மற்றவர்களிடம் மன்னிப்புக் கேட்கும்படி தண்டிக்கப்படுவான். சுவரின் மீது தொங்கிக் கொண்டிருக்கும் புகைப்படத்தை ஆலன் மீண்டும் பார்த்தான். தோற்றுப் போனவளாக, ஈரம் சொட்டும் ஆடையுடன் காரில் ஏறி, காவலாளியின் ஜன்னலை அவர் கண்ணில் படாமல் கடந்து, படிகளில் ஏறி, தன்னுடைய குடியிருப்பை அடைந்து, அனுமதியின்றி நுழைந்தவன் தன்னுடலை விட்டு வெளியேறும் வரை அவ் வீட்டில் தங்கியிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்தான். சில மாதங்கள் கழிந்ததும் அவள் அந்த இருவரையும் அனாதரவாக விட்டுவிட்டுச் சென்றாள்.
ஏவாளின் மரம்
ஆலன் சுவரின் மீது சாய்ந்து தலை குனிந்தபடி ஸ்டுடியோவின் தரையில் அமர்ந்திருந்தான். ஒருவேளை அவன் தூங்கிவிட்டானா? ஒரு பெண்ணின் குரல் அவனை எழுப்பியது.
“நீ இதுவரை என்னிடம் சொன்ன அனைத்தும் எனக்குப் பிடித்திருக்கிறது. நீ கண்டுபிடிக்கிற அனைத்தும். அதற்கு மேல் சொல்ல எதுவும் இல்லை. தொப்புளைப் பற்றி வேண்டுமானால் சொல்லலாம். தொப்புள் அற்ற பெண் உன்னுடைய கருத்துப்படி ஒரு தேவதை. எனக்கோ அவள் ஏவாள் என்கிற முதல் பெண். அவள் தொப்புள் வழியாகப் பிறக்கவில்லை. அவளை உருவாக்கியவரின் மனம் போன போக்கில் ஏற்பட்ட பெருவிருப்பத்தின் காரணமாகப் பிறந்தவள். தொப்புள் இல்லாத அந்தப் பெண்ணின் இனப்பெருக்க உறுப்பின் வெளிப்பகுதியில் இருந்து தான் முதல் தொப்புள் கொடி வெளிவந்தது. நான் பைபிளை நம்புவதாக இருந்தால் ஒவ்வொரு சிறுவனின் சிறுமியின் உடலுடன் இணைக்கப்பட்டிருந்த மற்ற தொப்புள் கொடிகளும் இவ்வாறே தோன்றியிருக்க வேண்டும் என்று நம்புவேன். ஆண்களின் உடல்கள் எவ்விதமான தொடர்ச்சிகளும் இன்றி முற்றிலும் பயனற்றனவாக இருந்தன. ஆனால் ஒவ்வொரு பெண்ணின் பாலியல் உறுப்பில் இருந்தும் வெளியே வந்த இன்னொரு தொப்புள் கொடியின் விளிம்பிலும் இன்னொரு பெண்ணோ ஆணோ இருந்தனர். முடிவற்ற அந்த உடல்கள் அனைத்தும் லட்சோப லட்சம் முறைகளாகப் பெருகி ஒரு மாபெரும் மரமாக உருக்கொண்டது. அந்த மரத்தின் கிளைகள் வானைத் தொட்டன. கற்பனை செய்து பார்! பேருருக் கொண்ட அந்த மரம், தொப்புள் அற்ற, பரிதாபத்துக்குரிய ஏவாள் எனும் ஆதிச் சிறு பெண்ணின் இனப்பெருக்க உறுப்பின் வெளிப் பகுதியில் இருந்து  உருவானது.
“நான் கருவுற்றபோது நான் அந்த மரத்தின் ஒரு பகுதியாக, அதன் தொப்புள் கொடிகளுள் ஒன்றிலிருந்து தொங்கிக் கொண்டிருப்பவளாகவும்,  பிறந்திராத உன்னை வெற்றிடம் ஒன்றில் மிதக்கும் உயிராக, என் உடலில் இருந்து வெளியேறும் கொடியுடன் கொக்கியிடப்பட்டவனாகப் பார்த்தேன். தொப்புள் அற்ற அந்தப் பெண்ணின் தொண்டையைக் கிழிக்கும் ஒரு கொலையாளியை அன்றிலிருந்து நான் கனவு காணத் துவங்கினேன். அவளுடைய  உடல் மரண வலியில் துடிப்பதை, அழுகிப்போவதை, அவளுடைய உடலில் இருந்து தோன்றிய பேருருக் கொண்ட அந்த மரம் திடீரென வேர்களும் அடித்தளமும் இன்றி விழத் துவங்குவதுவரை  நான் கற்பனை செய்து பார்த்தேன். எங்கெங்கும் பரவிக் கிடந்த அதன் கிளைகள், வானம் பொத்தலாகிப் பெருமழை பெய்வது போலத் தரையில் வீழ்வதைப் பார்த்தேன். நான் கனவு கண்டு கொண்டிருந்தது மனிதகுல வரலாற்றின் முடிவையோ அல்லது எதிர்காலத்தின் அழிவையோ அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.  இல்லையில்லை. ஒட்டுமொத்த மனிதகுலம், அதன் கடந்த காலம், எதிர் காலம், ஆதி, அந்தம், இருத்தலின் கால அளவு, நிகழ்வுகள் குறித்த நினைவுகள், நீரோ, நெப்போலியன், புத்தர், ஏசு அனைத்தும் மறைந்து போய்விடவேண்டும் என்று நான் விரும்பினேன். தொப்புள் அற்ற அந்த ஆதிச் சிறு பெண்ணின் வயிற்றிலிருந்து வேர்விட்ட மரம் முழுதாக நிர்மூலமாவதை நான் விரும்பினேன். தான் என்ன செய்கிறோம் என்பதையோ, மிகச் சிறிய இன்பத்தையும் அவளுக்குத் தராத பரிதாபகரமான அவளுடைய கலவியின் காரணமாக நாங்கள் அனுபவிக்கப் போகும்
பயங்கரங்களையோ அறியாத முட்டாள் அவள்.
அம்மாவின் குரல் அமைதியாகிவிட்டது. சுவரின் மீது சாய்ந்தபடி ஆலன் மறுபடி உறங்கினான்.
மோட்டார் சைக்கிளின் மீது நடந்த உரையாடல்
அடுத்த நாள் காலை பதினோரு மணியளவில் ஆலன் தன் நண்பர்கள் ரேமோனையும் காலிபனையும் லக்சம்பார்க் கார்டன் எதிரே இருந்த அருங்காட்சியகத்தின் முன் சந்திப்பதாக இருந்தது. அவன் தன் ஸ்டூடியோவில் இருந்து கிளம்புவதற்கு முன் திரும்பிப் பார்த்து, புகைப்படத்தில் இருந்த தன் அம்மாவிற்குக் கையசைத்தான். பிறகு தெருவில் இறங்கி குடியிருப்புக்கு சற்று தொலைவில் நிறுத்தியிருந்த தன் மோட்டார் சைக்கிளை நோக்கி நடந்தான். அவன் வண்டியோட்டத் துவங்கியதும் யாரோ தன் முதுகின் மீது சாய்வது போன்ற தெளிவில்லாத ஒரு தொடு உணர்வு அவனுக்குத் தோன்றியது. மேடலீன் அவனுடன் இருப்பது போலவும் அவனை லேசாகத் தொடுவது போலவும் இருந்தது. இந்த மாயத் தோற்றம் அவனை உணர்ச்சி வசப்பட வைத்தது. இது தனக்கு அவள் மீதிருந்த அன்பின் வெளிப்பாடு தான் என்று நினைத்தபடி அவன் வண்டியை ஓடட்டத் துவங்கினான்.
அதற்குப் பிறகு “நான் இன்னும் சிறிது நேரம் பேச விரும்பினேன்” என்று ஒரு குரல் அவனுடைய முதுகுக்குப் பின் ஒலித்தது.
இல்லை. இது மேடலீன் இல்லை. தன் அம்மாவின் குரலை அவனுக்கு அடையாளம் தெரிந்தது.
போக்குவரத்து மிதமாக இருந்தது.
“நம் இருவருக்கிடையில் எவ்விதமான குழப்பமும் இல்லை, ஒருவரை ஒருவர் முழுதாகப் புரிந்து கொண்டிருக்கிறோம் என்பதை நான் உறுதி செய்துகொள்ள விரும்பினேன்…” என்று அவள் பேசிக்கொண்டே சென்றபோது அவன் பிரேக்கை அழுத்த வேண்டியதாயிற்று.
கார்களுக்கு இடையே புகுந்து சாலையைக் கடந்த பாதசாரி ஒருவன் அச்சமூட்டும் விதத்தில் திடீரென ஆலனின் எதிரே தோன்றியதால் அது நிகழ்ந்தது.
“நான் வெளிப்படையாகப் பேசுகிறேன். இங்கிருக்க விருப்பம் தெரிவிக்காத  ஒருவரை இந்த உலகத்துக்கு அனுப்புவது என்பது மோசமானது என்று நான் எப்போதுமே உணர்ந்திருக்கிறேன்”
” எனக்குத் தெரியும்”என்றான்  ஆலன்.
“உன்னைச் சுற்றிலும் பார். நீ பார்க்கும் எல்லா மனிதர்களுமே தம்முடைய விருப்பத்தின் பேரில் இங்கு வந்தவர்கள் கிடையாது. நான் இப்போது சொன்னது இங்கு நிலவும் உண்மைகளிலேயே மிகச் சிறியது. அது எவ்வளவு சிறியது, எவ்வளவு அடிப்படையானது என்றால் நாம் அதை பார்ப்பதையோ கேட்பதையோ கூட நிறுத்தி விட்டோம்”
இரண்டு புறமும் அவனை அழுத்திக் கொண்டிருந்த டிரக்குக்கும் காருக்கும் இடையேயான ஒரு வரிசையில் பல நிமிடங்கள் அவன் நின்று கொண்டிருந்தான்.
“எல்லோருமே மனித உரிமைகளைப் பற்றி உளறுவது எவ்வளவு நகைச்சுவையாக இருக்கிறது. உன்னுடைய இருப்பு எவ்வித உரிமையின் அடிப்படையிலும் வந்ததில்லை. மனித உரிமைகளின் பாதுகாவலர்களாகிய இவர்கள் உன் விருப்பத்திற்கேற்ப உன்னுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்ளக் கூட  உன்னை அனுமதிப்பதில்லை”
சாலைகள் சந்திக்கும் இடத்தில் பொருத்தப்பட்டிருந்த விளக்கு சிகப்பு நிறத்துக்கு மாறியதும் அவன் நின்றான். சாலையின் இரு புறத்தில்  இருந்தும் பாதசாரிகள் எதிர்த் திசையில் இருந்த நடைபாதையை நோக்கி நடக்கத் துவங்கினார்கள்.
“அவர்கள் அனைவரையும் பார். நீ பார்ப்பதில் பாதி ஆட்களாவது அழகற்றவர்களாக இருக்கிறார்கள். அழகற்று இருப்பதும் மனித உரிமைகளில் ஒன்றுதான். ஒருவர் வாழ்நாள் முழுக்க அழகற்ற தன் உருவத்தைச் சுமப்பது எப்படி இருக்கும் என்று உனக்குத் தெரியுமா? ஒரு நிமிடமாவது நிம்மதி இருக்குமா? உன்னுடைய பாலினம்? உன்னுடைய கண்களின் நிறம்? நீ பூமியில் வாழும் காலகட்டம்? உன்னுடைய நாடு? உன்னுடைய தாய்? வாழ்வின் அதிமுக்கியமான இந்த எந்த விஷயத்தையும் உன்னால் தேர்வு செய்ய முடியாது. சண்டையிடுவது, பெரும் பிரகடனத்தை எழுதுவது போன்ற தேவையற்ற விஷயங்களுக்கு மட்டுமே ஒரு மனிதனுக்கு உரிமைகள் தரப்படுகின்றன” என்றாள்
அவனுடைய அம்மா.
அவன் மீண்டும் வண்டியோட்டிக் கொண்டிருந்தான். “நீ இங்கே இவ்விதமாக இருப்பற்குக் காரணம் நீ பலவீனமாக இருப்பதே. அது என்னுடைய தவறு தான். என்னை மன்னித்து விடு” அவனுடைய அம்மாவின் குரல் மென்மையாக ஒலித்தது.
ஆலன் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். பிறகு மெல்லிய குரலில், “நீங்கள் எதற்காக குற்ற உணர்ச்சி கொள்கிறீர்கள்? என்னுடைய பிறப்பைத் தடுப்பதற்கான பலம் உங்களிடம் இல்லாமல் போனதற்கா? அல்லது உங்களை என்னுடைய வாழ்வில் மறுபடி இணைத்துக் கொள்ள முடியாமல் போனதற்கா? அவ்வாறு நடந்தால் அது அவ்வளவு மோசமானது ஒன்றும் இல்லையே?” என்று கேட்டான்.
சிறிது நேரம் அமைதியாக இருந்த பிறகு அவள், “ஒருவேளை நீ சொல்வது சரியாக இருக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் நான் அதற்காக இருமடங்கு குற்றவுணர்ச்சி கொள்கிறேன்” என்று பதில் சொன்னாள்.
“மன்னிப்புக் கேட்க வேண்டியது நான் தான். உங்களுடைய வாழ்வில் நான் ஒரு பசுஞ் சாணம் போல, திடீரென வந்து விழுந்தேன். உங்களை அமெரிக்காவுக்குத் துரத்தியடித்தேன்” என்றான்.
“மன்னிப்புக் கேட்பதில் இருந்து வெளியே வா. என்னுடைய வாழ்க்கையைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? என் அருமை முட்டாளே!  உன்னை முட்டாள் என்று நான் அழைக்கவா? என்னைப் பொருத்தவரையில் நீ ஒரு முட்டாள். உன்னுடைய முட்டாள்தனம் எங்கிருந்து வருகிறது என்று உனக்குத் தெரியுமா? உன் நற்பண்புகளிலிருந்து! முட்டாள்தனமான நற்பண்புகள்!”
லக்சம்பார்க் கார்டனை அடைந்தவன் தன்னுடைய மோட்டார் சைக்கிளை அங்கே நிறுத்தினான்.
“எதிர்ப்புத் தெரிவிக்காதீர்கள். என்னை மன்னிப்புக் கேட்க விடுங்கள். நான் மன்னிப்புக் கேட்பவன். அவ்விதமாகத்தான் நீங்கள் இருவரும் என்னை உருவாக்கி இருக்கிறீர்கள். அத்துடன் மன்னிப்புக் கேட்கும் ஒருவனாக இருப்பதில் நான் உண்மையில் மகிழ்ச்சி அடைகிறேன். நாமிருவரும் ஒருவருக்கொருவர் மன்னிப்புக் கேட்கும் போது அது ஒரு இதமான உணர்வை எனக்குத் தருகிறது.  ஒருவருக்கொருவர் மன்னிப்புக் கேட்பது இனிமையாக இருக்கிறது இல்லையா?” என்று கேட்டான்.
அதற்குப் பிறகு அவர்கள் அருங்காட்சியகத்தை நோக்கி நடக்கத் துவங்கினர்.
***
-பிரெஞ்சு மொழியில்-மிலான் குந்தரே
செக்கலோவாஸ்கியாவில் 1921 இல் பிறந்த எழுத்தாளர் மிலன் குந்த்ரே சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், கவிதைகள் எனப் பல தளங்களில் இலக்கியத்துக்கான தன் பங்களிப்பைத் தந்துள்ளார். 1971 இல் ஃபிரான்சுக்கு நாடு கடத்தப்பட்ட இவர் 1981 ஆம் ஆண்டு ஃபிரான்ஸின் குடியுரிமை பெற்றார். அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு செக்கெல்லோவாகியா அரசு அவருக்கு அந்த நாட்டின் குடியுரிமையை அளித்தது. ஆனால் தான் ஒரு ஃபிரெஞ்சு குடிமகனாகவே அறியப்பட வேண்டும் என்றும், தன்னுடைய படைப்புகளும் அவ்விதமாகவே வகைப்படுத்தப்பட வேண்டும் என்றும் மிலன் குந்த்ரே வற்புறுத்துகிறார். தி ஜோக் (1967), தி புக் ஆஃப் லாஃப்டர் அண்ட் ஃபர்கெட்டிங்க்(1979) தி அண்பேரபிள் லைட்ஸ் ஆஃப் பீயிங்(1984) ஆகியன இவருடைய புகழ் பெற்ற படைப்புகள். ஜெருசலேம் விருது (1985) ஹர்டர் விருது (2000), செக் ஸ்டேட் லிட்டரேச்சர் விருது(2007) உள்ளிட்ட இன்னும் பல விருதுகளைப் பெற்றவர்.
-தமிழில் :-கயல்
Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *