பகுதி 2
உண்டு முடித்த கேபிரியேல் ஒரு மிகப்பெரிய புட்டிங் கேக்கை உணவு மேஜையில் கொண்டு வந்து வைத்தார்.முள்கரண்டி மற்றும் உணவுக்கரண்டிகளின் சலசலப்பு மறுபடியும் கேட்க தொடங்கியது.கேபிரியேலின் மனைவி தட்டுகளில் கரண்டி நிறைய புட்டிங்கேக்கை எடுத்து பரிமாறி மேஜையை சுற்றி அமர்ந்திருந்தவர்களுக்கு எடுத்துக்கொடுத்தாள். மேஜையின் நடுப்புற ஓரத்தில் அமர்ந்திருந்த மேரிஜேன் அத்தட்டுகளில் ராஸ்ப்பெர்ரி அல்லது ஆரஞ்சு ஜாமையோ இல்லாவிட்டால் வெண்நிற கிரீம் ஜாமையோ வைத்து  கொடுத்தாள்.அந்த புட்டிங்கை செய்த ஜுலியா சித்திக்கு எல்லோரும் பாராட்டு தெரிவித்தாலும் அவள் அதை ஏற்றுக்கொள்ளாமல் சரியான பொன்னிறம் வரவில்லை என்றாள்.
” நல்லது செல்வி.மோர்கென்,நான் நினைக்கிறேன்” என ஆரம்பித்த திரு. பிரவுனி
” நான் நல்ல பழுப்பு நிறம்தானே ஏனென்றால் எனது பெயரே அதுதானே”என்றார்.
கேபிரியேலைத்தவிர எல்லா ஆண்களும் ஜுலியா சித்திக்கான சமர்ப்பணமாக அந்த புட்டிங்கை உண்டு வைத்தனர்.கேபிரியேல் எப்போதும் இனிப்புகளை உண்பதில்லை என்பதால் அவருக்கு மட்டும் கொத்தமல்லி போன்ற தழைவகைகளை வைத்திருந்தனர்.அதில் ஒரு தண்டை எடுத்து தனது புட்டிங்கோடு சேர்த்து சாப்பிட்டான் பிரட்டி மாலின்ஸ்.மருத்துவர் அவனிடம் ரத்தம் ஊறுவதற்கு தழைவகைகள் சிறந்தது என்று சொன்னதாலும் அவரது மருந்துகளை அவன் உட்கொண்டு வந்ததாலும் அதை உண்டான்.
இரவு உணவில் ஏதும் பேசாமல் இருந்த திருமதி.மாலின்ஸ் தனது மகன் அடுத்த வாரத்தில்
மெல்லரி மலைக்கு போகப்போவதாக சொன்னாள்.உடனே மேஜை முழுவதும் மெல்லரி மலையை பற்றிய பேச்சாக மாறியது, அங்கு வீசும் கடும் குளிர் காற்றை பற்றியும்,அங்கிருக்கும் மடாலய பிட்சுக்களின் அன்பான சிகிச்சை உபசரிப்புகளை பற்றியும் அதற்காக அவர்கள் எந்த பணமும் பெற்றுக்கொள்ளாததையும் பேசினர்.
இதைக்கேட்டு ஆச்சரியப்பட்ட திரு. பிரவுனி, ” நீங்க என்ன சொல்றீங்க,ஒருவன் அங்கு போய் விடுதியில் தங்குவதைப்போல தங்கி உண்டு கொழுத்துவிட்டு அதற்கான எந்த தொகையையும் கொடுக்காமல் வரலாமா?” என்றார்.
” ஓ, பெரும்பாலானோர் போய்விட்டு திரும்பும்போது எதாவது கொஞ்சம் நன்கொடைகளை மடாலயத்திற்கு கொடுக்கிறார்கள்.” என்றாள் மேரி ஜேன்.
” இது போன்ற அமைப்பு நமது தேவாலயங்களிலும் இருக்கவேண்டும் என நான் ஆசைப்படுகிறேன்” என பட்டவர்த்தனமாக சொன்னார் திரு.பிரவுனி.
பிட்சுகளின் மௌன விரதங்களைபற்றியும் அவர்களின் பேசா நோன்பு பற்றியும் அவர்களுக்கான உறக்கம் சவப்பெட்டி போன்ற பதுக்கைகளில்தான் என்பதையும் விடியற்காலை இரண்டு மணிக்கே விழித்து எழுந்து கொள்ளும் அவர்களின் நடைமுறைகளை கேட்டவர் மிகவும் பிரமித்துப்போனார்.
அவர்கள் ஏன் அப்படி நடந்துகொள்கிறார்கள் என வினவினார்.
” அது அவர்களது பிட்சு சங்க விதிமுறையாகும் ” என்று கேட் சித்தி உறுதியாக சொன்னாள்.
” சரிதான் ஆனால் ஏனப்படி?” என கேட்டார் திரு. பிரவுனி.
கேட் சித்தி மறுபடியும் அதுதான் அவர்களுக்கான விதி , அவ்வளவுதான் என்று சொன்னபின்பும் திரு. பிரவுனி புரிந்துகொண்டதுபோல் தெரியவில்லை.தன்னால் முடிந்த அளவிற்கு விளக்க முற்பட்ட பிரட்டி மாலின்ஸ்,உலகில் உள்ள அனைத்து பாவிகளுக்கும் பாபவிமோசனம் கிடைக்கவே இந்த பிட்சுக்கள் தங்களால் இயன்றதை முயற்சிக்கிறார்கள் என்று விவரித்தாலும் அதை சரியாக உள்வாங்கிக்கொள்ளாத திரு.பிரவுனி புன்சிரிப்போடு
” அவர்களது நோக்கம் பிடித்திருக்கிறது, என்னதானிருந்தாலும் பதுக்கைக்கு பதிலாக பஞ்சுமெத்தையாக இருந்தால் அவர்களுக்கு வசதியாக இருந்திருக்குமே?”என்றார்.
” சவப்பெட்டி போன்ற” என ஆரம்பித்த மேரிஜேன்
” பதுக்கை தூக்கம் அவர்களின் இறுதியான வழியை ஞாபகப்படுத்துகிறது”
இந்த உரையாடல் ஒரு மனச்சோர்வை உருவாக்குவதாக போனதால் ஒரு கட்டத்தில் பேச்சற்ற அமைதியில் போய் முடிந்தது.
அப்போது திருமதி. மாலின்ஸ் மட்டும் பக்கத்திலிருந்தவரிடம் அடங்கிய குரலில்
“அவர்கள் மிக நல்ல மனிதர்கள்,அந்த பிட்சுக்கள்,மிக பக்தியானவர்கள்”என்றாள்.
தற்போது உலர் திராட்சைகளும்,முந்திரி, அத்தி பழங்கள்,ஆப்பிள் பழங்கள்,ஆரஞ்சு,
சாக்லெட்கள் மற்றும் இனிப்பு வகைகளை மேஜைக்கு கொடுத்து உபசரித்தபின் ஜுலியா சித்தி எல்லோரையும் போர்ட் அல்லது ஷெர்ரி ஒயினை பருக அழைத்தாள்.ஆரம்பத்தில் திரு. பார்டெல் டி’ ஆர்சி எந்த ஒயினும் வேண்டாம் என்றாலும் பக்கத்திலிருந்தவர் இடித்து பருக சொன்னபின்னர் தனது தம்ளரில் வாங்கிக்கொண்டார்.எல்லோருடைய தம்ளர்களிலும் நிறைத்த பின்னர் பேச்சு மெதுவாக குறைந்து ஒரு அமைதி நிலவியது,நாற்காலிகளை நகர்த்தும் சத்தமும் ஒயினை ஊற்றும் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.
மூன்று மார்க்கென் பெண்களும் மேஜை விரிப்பையே குனிந்து பார்த்துக்கொண்டிருந்தனர்.ஓரிரு முறை யாரோ இருமினார்கள், சில ஆண்கள் அமைதியாக இருக்கும்படி மேஜையை மெதுவாக தட்டினர்.அமைதி
திரும்பியதும் கேபிரியேல் தனது இருக்கையை பின் தள்ளி விட்டு எழுந்தார்.
அவரது உரைக்கான எதிர்பார்ப்பாக கைதட்டல் உரத்து ஒலித்து பின்பு முற்றிலுமாக ஓய்ந்தது.கேபிரியல் நடுங்கும் தனது பத்து விரல்களையும் மேஜை விரிப்பின் மீது வைத்தபடியே கூடியிருந்தோரை பார்த்து பலவீனமாக புன்னகைத்தார்.தன்னை நோக்கி பார்த்தவர்களின் பார்வைகளை சந்தித்தபின்னர் மேலிருந்த சாண்டிலியர் விளக்குகளை தலையை தூக்கி பார்த்தார்.வரவேற்பறையிலிருந்து வால்ட் இசையை பியானோ வாசிப்பிலும் அதற்கு ஏற்ப நடனமாடும் கவுன்களின் சரசரப்போசையையும் கேட்டார்.பனிப்பொழியும் படகுத்துறையோரம் வெளியே நின்றவாறே ஊர் மனிதர்கள் வால்ட் இசை கசியும் இந்த ஒளிரும் ஜன்னல்களை நோக்கி கேட்டவண்ணம் இருக்கக்கூடும்.அங்கு வெளியே சுத்தமான குளிர் காற்று வீசியது.தூரத்தில் அமைந்திருந்த பூங்காவில் இருந்த மரங்களின் மீது கனமாக பனி அடர்ந்து படர்ந்திருந்தது.வெல்லிங்டன் நினைவகத்தின் உச்சி விதானம்  பனிக்குவியலால் மின்னும் வெள்ளை தொப்பி அணிந்தது போல மினுக்கியது மேற்க்கு புறமாக இருந்த வெள்ளை வெற்றுநிலமான பதினைந்து ஏக்கரில் பிரதிபலித்தது.
அவர் பேச ஆரம்பித்தார்:
“பெண்டீர்களே மற்றும் கனவான்களே,
“சென்ற ஆண்டுகளைப்போலவே  இன்றைய மாலையிலும் மிக அருமையான பணி எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது,ஆனாலும் அதற்கு தகுதியாக எனது உரையை நிகழ்த்த என்னாலாகுமா என அச்சம் கொள்கிறேன்”
“இல்லை இல்லை” என்றார் திரு. பிரவுனி.
” ஆனாலும்,என் அச்சம் எப்படியிருந்தாலும் உங்களது மேலான கவனத்தை எனது பேச்சின் போது செவிசாய்த்து கேட்குமாறு மட்டும் கேட்டுக்கொள்கிறேன்.அப்போது இந்த நிகழ்வை பற்றிய எனது உணர்வுகளை பகிரமுடியும்”.
“பெண்டீர்களே, கனவான்களே,இந்த அன்பான உபசரிப்பை நல்கும் கூரையின் கீழ் நாம் கூடுவது இது ஒன்றும் முதல் முறையல்ல. இதை நாம் முதல்முறையாக ஒன்றும் பெற்றுக்கொண்டதில்லை- இன்னும் சொல்லப்போனால் இந்த நல்ல பெண்மணிகளின் உபசரிப்பில் சிக்கிக்கொண்ட இரை தான் நாம்”.
அவர் தனது கையை உயர்த்தி சுழற்றியவாரே பேச்சை நிறுத்தினார். அனைவரும் சித்திகள் கேட்டையும் ஜுலியாவையும் மற்றும் மேரி ஜேனையும் பார்த்து வாய்விட்டு சிரித்தும் புன்னகைத்தும் மகிழ்ந்தனர். இதை உணர்ந்த மூவரும் சந்தோஷத்தில் கன்னம் சிவந்தனர். கேபிரியேல் மேலும் ஊக்கத்தோடு தொடர்ந்தார்.
“கடந்து போகும் ஆண்டுகளினூடே நான் உணர்ந்து கொண்ட ஒரு விஷயம் என்னவென்றால்,நமது நாடு விருந்தோம்பல் எனும் பாரம்பரியத்தை மற்ற அனைத்தையும் விட மேலானதாகவும் தலையாயதாகவும் கட்டிக்காத்து வருகிறது.என் அனுபவத்திலிருந்து சொல்லுகிறேன் ( நான் வெளிநாடுகளுக்கு குறைவாக ஒன்றும் போய்வரவில்லை) இந்த பாரம்பரியமானது மற்ற நவீன நாடுகளைக்காட்டிலும் அதீதமானது. சிலர் இதில் பெருமைப்பட ஒன்றுமில்லை, இது ஒருவகையான தோல்விதான் என்று சொல்வர்,அதை நாம் ஒப்புக்கொண்டாலும்கூட இது ஒருவகையான ராஜதோல்விதானே தவிர குறைந்தது ஒன்றுமல்ல என நான் நினைக்கிறேன்.இதை நாம் காலம்காலமாக பராமரித்து வருகிறோம் என நம்புகிறேன்.ஒரு விஷயம் மட்டும் எனக்கு துல்லியமாக புரிகிறது,இந்த மூன்று பெண்மணிகள் இந்த கூரையின் கீழ் இருக்கும்வரை– இன்னும் வரப்போகும் பலப்பல வருடங்களுக்கு– நமது மூதாதைகள் நமக்கு கையளித்து நாம் நம் வாரிசுகளுக்கு மடைமாற்றப்போகும் உண்மையான நெஞ்சார்ந்த ஐரிஷ் விருந்தோம்பல் ஆனது மரிக்காமல் உயிர்ப்போடு நம்மிடையே இருக்கிறது”.
மனப்பூர்வமாக ஒப்புக்கொள்ளும் முணுமுணுப்பான பேச்சொலி சுற்றியும் எழுந்தது. செல்வி.ஐவர்ஸ் தற்போது அங்கில்லாமல் நறுவிசுகுறைவாக; சடாரென புறப்பட்டு போனதை நினைவுகூர்ந்த கேபிரியேல் தன்னம்பிக்கையோடு மேலும் பேசினார்.
“பெண்டீரும் கனவான்களும் நிறைந்த இந்த அவையில் மேலும் சொல்கிறேன்,
நம்மிடையே வளர்ந்துவரும் இளம்புதிய தலைமுறை, புதிய கருத்துக்களாலும் புதிய கோட்பாடுகளாலும் கவரப்பட்டுள்ளது.இந்த புதிய கருத்துகளை அவர்கள் தீவிரத்தன்மையோடும் மிகுந்த விருப்போடும் அணுகுகிறார்கள். இக்கருத்துகள் தவறாக வழிநடத்தினாலும் அதை புரிந்துகொள்ளாமல் உண்மையான தீவிரத்தோடு பாவிக்கிறார்கள்.ஆனால் நாம் தற்போது ஒரு ஐயறவு மனப்பான்மையுடைய, இந்த பதத்தை நான் சொல்லுவேனென்றால்,
நினைவுகளால் அலைக்கழிக்கப்படக்கூடிய காலக்கட்டத்தில் வாழ்கிறோம் என்பேன்:எனது சஞ்சலம் என்னவென்றால் இந்த படித்த , மெத்தபடித்த இளைய சமுதாயம் ஆனது, பழைய காலக்கட்டம் போற்றி பாதுகாத்த மனிதாபிமானம், விருந்தோம்பல்,அன்பான நகைச்சுவையுணர்வு போன்றவற்றில் குறைந்துள்ளது என்பதேயாகும்.
இன்றிரவில் கேட்ட காலம்சென்ற பழம் பெரும் பாடகர்களின் பெயர்களை கேட்டபின் எனக்கு தோன்றியது என்னவென்றால்,நாம் தற்போது ஒரு குறுகிய மனப்போக்கான வாழ்வை வாழ்கிறோமோ என்று,
விஸ்தாரமாக கூறாமல் சொல்லவேண்டும் என்றால் அந்த காலக்கட்டம் விசாலமான மனநிலையால் ஆனது: மற்றவர்கள் இந்த பெருமைவாய்ந்த சிறந்த மனிதர்களை நினைவுகூற தவறினாலும் இம்மாதிரியான கூடுகைகளில் நாம் நெஞ்சார பாராட்டி சீராட்டும் அவர்களைப்பற்றி பெருமையோடும் பரிவோடும் பேசவேண்டும்.
பெரும் பெயரோடும் புகழோடும் மரித்துப்போனவர்களின் நினைவுகளை இவ்வுலகம் அவ்வளவு சீக்கிரம் சாகவிடாது”
” கேளுங்க கேளுங்க!”என உறக்க சத்தமிட்டார் திரு பிரவுனி.
“ஆனால் இன்னும்”என மேலே தொடர்ந்தார் கேபிரியேல், அவரது குரல் மென்மையாக தழைந்தது,
” இந்த மாதிரியான கூடுகைகளில் இறந்தகாலத்தின் சோகநினைவுகள் நிழலாடக்கூடும்.
இளமைக்காலங்கள்,மாறிய மாற்றங்கள்,நம்மிடையே இருந்து தற்போது மறைந்துபோன பல முகங்கள். வாழ்வின் பாதையில் இம்மாதிரியான வருத்த நினைவுகள் இறைந்து கிடக்கின்றன:
இவைகளைபற்றியே நினைத்து உழன்றுகொண்டிருந்தால் வாழ்பவர்களோடு இயைந்து வாழ்க்கையை தைரியமாக சந்திக்கும் மனத்திண்மையை இழப்போம்.
நம் எல்லோருக்குமே உள்ள வாழ்க்கை பணிகள் வாழ்வியலின் மீதுள்ள பிடிப்பினாலும் நமது கடின முயற்சிகளாலும் பலிதமாகிறது.
“அதனால் , நான் போனவற்றை பற்றி பேசப்போவதில்லை.இன்றைய இரவின் இக்கூட்டத்தில் கடந்த கால இருண்மையை பற்றி பேசி ஞாயபடுத்த மாட்டேன்.நமது தினசரி பரபரப்புகளிலிருந்து விலகி நாம் அனைவரும் இங்கு கூடியுள்ளோம்.நட்பாக நாம் இங்கு இணைந்துள்ளோம்.
தோழமையின் சான்றாகவும் ஓரளவிற்கு, உண்மையான சகமனித நட்பாளர்களாக, இவர்களுடைய விருந்தாளிகளாக– இவர்களை நான் என்ன சொல்லி அழைப்பது?–டப்ளின் இசைஉலகின் மூன்று கிருபைகள் என.”
இந்த விவரிப்பை கேட்டவுடன் மேஜையை சுற்றியிருந்தவர்கள் கரவொலி எழுப்பியும் சிரித்தும் மகிழ்ந்தனர்.ஜூலியா சித்தி கேபிரியேல் என்ன சொன்னார் என பக்கத்தில் உட்கார்ந்து இருந்தவர்களிடம் மீண்டும் மீண்டும் கேட்டார்.
“நாம மூன்று பேரும் மூன்று கிருபைகள் ன்னு சொல்றார், ஜூலியா சித்தி” என்றாள் மேரி ஜேன்.
அதை ஜூலியா சித்தி புரிந்துகொள்ளாவிடினும், அவரை பார்த்து, புன்னகைத்தாள்.
கேபிரியேல் மேலும் தொடர்ந்தார்.
“பெண்டீர்களே, கனவான்களே,
மற்றொரு  நிகழ்வில் பாரிஸ் பேசிச்செய்தது போல இங்கு இன்றைய இரவில்  நான் முயற்சிக்கப்போவதில்லை.நான் இவர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்கப்போவதில்லை.
அம்மாதிரியான முயற்சி வெறுக்கத்தக்கதும், என்னால் ஆகாததும் ஆகும்.
இவர்களை பார்க்கும்போது, அது நமது
முதன்மை விருந்தளிப்பவரின் நல்லிதயத்தை பற்றி நம்மனைவருக்கும் நன்றாகத்தெரியும்,
அவரது சகோதரி,வற்றாத இளமையோடு இன்று பாடிய அவரது பாட்டு நம்அனைவருக்கும் ஒரு திறப்பாக இருந்தது, கடைசியாக ஆனால் குறைவு ஏதுமற்ற, நமது இளைய விருந்தளிப்பவரை பற்றி நான் சொல்லவேண்டும் என்றால்,திறமைசாலி கடின உழைப்பாளி மலர்ந்த வதனமுடையவர் உறவுக்காரர்களிலேயே சிறந்தவர், ஆகையால் நான் உண்மையாகவே ஒப்புக்கொள்கிறேன்,சீமான்களே சீமாட்டிகளே, இவர்களில் யாருக்கு பரிசை கொடுப்பது என்பது எனக்கு தெரியவில்லை என்று”
கேபிரியேல் தனது சித்திகளை பார்த்தபோது,ஜுலியா சித்தி மலர்ந்த சிரிப்போடும் கண்கலங்கிய முகத்தோடு கேட் சித்தியும் இருந்ததைத்கண்டு தனது உரையை விரைந்து முடித்தார்.அவர் தனது ஒயின் தம்ளரை உயர்த்தி வாழ்த்த ஆரம்பித்தவுடன் அனைவரும் தங்களின் தம்ளர்களையும் உயர்த்த,கேபிரியேல் உரக்க
“நாம் இம்மூவரையும் ஒருசேர வாழ்த்துவோம்.இவர்களின் நலத்திற்காகவும், நீண்ட ஆயுளுற்காகவும்,மகிழ்விற்காகவும்,சுபிட்சத்திற்காகவும்,செல்வ கடாட்சத்திற்காகவும் நாம் அருந்துவோம்.
அவர்களது இசைப்பணியில் பெருமைமிகு இடத்தை சுயமாக போராடி வென்ற நிலை எப்போதும் நிலைத்திருக்கட்டும் எனவும், நமது இதயங்களில் அவர்களின் பரிவும் அன்பும் என்றும் இருக்கும் எனவும் கூறிக்கொள்கிறேன்”
எல்லா விருந்தாளிகளும் எழுந்து நின்று உட்கார்ந்திருந்த மூவரை பார்த்து தங்களின் தம்ளர்களை உயர்த்தி பாடலானார்கள். இதில் திரு. பிரவுனிதான் தலைமை.
அவர்கள் மகிழ்வான குதூகலமானவர்கள்,
அவர்கள் மகிழ்வான குதூகலமானவர்கள்,
அவர்கள் மகிழ்வான குதூகலமானவர்கள்,
இதை யாரும் மறுக்கமுடியாது.
கேட் சித்தி ஒளிவுமறைவின்றி தனது கைக்குட்டையை எடுத்து கண்களை  துடைத்துக்கொள்ள,ஜுலியா சித்திக்கூட மனநெகிழ்வு அடைந்திருந்த மாதிரி இருந்தது.பிரட்டி மாலின்ஸ் கேக் முள்கரண்டியால் பாடகர்களுக்கேற்ப தாளமிட்டான்.அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்ட வண்ணம் இசை குழுவில் சேர்ந்திசைப்பதைப்போல அழுத்தமாக பாடினர்.
அவன் பொய் சொல்லாமலிருந்தால்,
அவன் பொய் சொல்லாமலிருந்தால்,
என பாடியபடியே தங்களது விருந்தளிப்பவரை நோக்கி திரும்பி,
அவர்கள் மகிழ்வான குதூகலமானவர்கள்,
அவர்கள் மகிழ்வான குதூகலமானவர்கள்,
அவர்கள் மகிழ்வான குதூகலமானவர்கள்,
இதை யாரும் மறுக்கமுடியாது.
ஆனந்தகளேபரமான கரவொலியும் பாட்டும் உணவு அறையையும் தாண்டி பலமுறை  ஒலித்தது.இந்த கொண்டாட்டத்திற்கு தனது முள்கரண்டி தாளத்தோடு பிரட்டி மாலின்ஸ் தலைமையேற்று நடத்தினான்.
வீட்டு முற்றத்திற்கு அவர்கள் வந்து நின்ற போது விடியற்காலை குளிர்காற்று ஊசிபோல் குத்தியது. இதனால் கேட் சித்தி
” யாராவது கதவை மூடுங்களேன். இந்த கடுங்குளிரால் திருமதி. மாலின்ஸுக்கு எதாவதாகிவிடும்” என்றாள்.
“பிரவுனி வெளியிலே இருக்காரே கேட் சித்தி” என மேரிஜேன் சொல்ல.
“பிரவுனி எல்லா இடத்திலேயும் இருக்காரு” என கேட் சித்தி மெல்ல சொன்னாள்.
அவளது கிசுகிசுத்த குரலினை கேட்டு மேரி ஜேன் சிரித்தாள்.
” உண்மையாவா” என நாடகீயமாக கேட்டுவிட்டு
“ரெம்பத்தான் கவனிச்சு நடந்துக்கிறார்”
” அறையை உஷ்ணமூட்டும் வாயுவைப்போன்றே அவர் இங்கே பழியாக கிடக்கிறார்” என கேட் சித்தி அதே கிசுகிசுப்பாக,
” கிருஸ்துமஸ் தினங்கள் முழுக்க இப்படித்தான்” என்றாள்.
இதை சொல்லிவிட்டு தனது நகைச்சுவையை எண்ணி தன்னைப்பார்த்தே சிரித்துக்கொண்டவள்,
“மேரிஜேன் அவரை உள்ளே வரச்சொல்,
கடவுளே
நான் பேசினதை கேட்டிருக்கமாட்டார் என நினைக்கிறேன்” என்றாள்.
அப்போது முற்றக்கதவை திறந்துகொண்டு திரு. பிரவுனி வெடிச்சிரிப்பு சிரித்தபடியே உள்ளேவந்தார்.
அவர்  அஸ்ட்ரகான் ஆட்டு ரோமத்தைப்போல செய்த போலி கம்பிளியாலான பச்சை நிற வெளி மேலங்கியையும் கழுத்து பட்டியும் அணிந்து நீள்வட்ட ரோம தொப்பியையும் அணிந்திருந்தார்.பனி படர்ந்த படகுத்துறையிலிருந்து வந்த நீண்ட காதைத்துளைக்கும் சீழ்க்கை ஒலியை சுட்டிக் காட்டி ,
” டெட்டி டப்ளினில் இருக்கும் எல்லா வாடகை வண்டிகளையும் எழுப்பிடுவான் போல” என்றார்.
கேபிரியேல் உக்கிராண அறையிலிருந்து தனது வெளி மேலங்கியை கஷ்டப்பட்டு போட்டுக்கொண்டே வீட்டுள்முற்றத்திற்கு வந்து சுற்றிமுற்றியும் பார்த்துவிட்டு:
“கிரேட்டா இன்னும் கீழே வரவில்லையா?”என்றார்.
” அவள் தனது பொருட்களை எடுத்துக்கொண்டு இருக்கிறாள் கேபிரியேல்” கேட் சித்தி.
” யார் மேலே இசைத்துபாடிக்கொண்டிருப்பது?”
என கேபிரியேல் கேட்டார்.
” யாருமில்லையே,எல்லோரும் போயிட்டாங்களே”
“ஓ இல்லை,கேட் சித்தி” என்ற மேரிஜேன்
“பார்டெல் டி ஆர்சி யும் செல்வி ஓ’கலாஹனும் இன்னும் வெளியேறவில்லை”
“யாரோ பியானோவை நோண்டிக்கிட்டிருக்காங்க” என்றார் கேபிரியேல்.
கேபிரியேலையும் திரு.பிரவுனியையும் பார்த்த மேரிஜேன் உடல் நடுக்கத்தோடு சொன்னாள்,
“உடல்பூராவும் கம்பிளியால் போர்த்தியுள்ள உங்க ரெண்டுபேரையும் பாக்கும்போதே எனக்கு குளிரடிக்குது.இந்த நேரத்துல வீட்டுக்கு போறதைப்பற்றி என்னால் நினைத்துப்பார்க்கவே முடியவில்லை”
” இப்ப இதைத்தவிர எனக்கு  பிடித்தது என்று சொல்ல வேறு ஒன்றுமில்லை” என உறுதியாக சொன்ன திரு. பிரவுனி
“கடகடன்னு இந்த பனிப்பொழிவுல நடந்து போகனும் , அல்லது கட்டிய வண்டிசட்டத்து நடுவுல குதித்தோடும் உருப்படியோடு, வேகமான சவாரி”என்றார்.
” எங்களின் வீட்டில் ஒரு மிக நல்ல குதிரையும் கூண்டு வண்டியும் இருந்தது” என சோகமாக சொன்னாள் ஜுலியா சித்தி.
“மறக்கவே முடியாத ஜானி” என மேரி ஜேன் சிரித்தபடியே சொன்னாள்.
கேட்சித்தியும் கேபிரியேலும் இதைக்கேட்டு சிரித்தார்கள்.
” ஏன்,ஜானிய பற்றிய சிறப்பு என்ன?” என கேட்டார் திரு. பிரவுனி.
” காலஞ்சென்ற,எங்கள் நினைவில் நிற்கும் எங்கள் பாட்டனார் பேட்ரிக் மோர்க்கென்” எனவிவரித்த கேபிரியேல்
“அவரது முதுமையில் எல்லோரும் அவரை பெரியவர் என அழைத்தார்கள். அவர் பசை காய்ச்சி உருவாக்கும் பட்டரை வைத்திருந்தார்”
ஓ, இப்ப அதை சொல்லுறியா கேபிரியேல்” என்ற கேட் சித்தி
” அவருக்கு ஒரு ஸ்டார்ச்சு மாவு ஆலை இருந்தது” என சிரித்தபடியே சொன்னாள்.
” நல்லது,பசையோ ஸ்டார்ச்சு மாவோ” என்ற கேபிரியேல்
“பெரியவரிடம் ஜானி என்ற குதிரையொன்று இருந்தது. அது அவரது செக்கு ஆலையில் சுற்றி சுற்றி நடந்து செக்கை ஆட்ட உதவும்.அதெல்லாம் நல்லபடியாத்தான் நடந்தது; இப்போதான் ஜானியின் விபரீத கட்டம் வருகிறது.
ஒரு சுபயோக சுப தினத்தன்று நம்ம பெரியவர், பூங்கா திடலில் நடந்த ராணுவ அணிவகுப்பை பார்வையிட தனது தரமான உடைகளை அணிந்து போக. முடிவு செய்தார்”.
“கடவுள்அவரது ஆத்மாவை ரட்சிக்கட்டும்”என கேட் சித்தி அனுசரனையோடு சொன்னாள்.
” ஆமென்’என்றார் கேபிரியேல்
“சரி நான் மேற்சொன்னபடி பெரியவர் தனது மிகச்சிறந்த நீள தொப்பியையும்  அழகான கழுத்துபட்டியுடைய கம்பிளி மேலங்கியையும் அணிந்துகொண்டு கம்பீரமாக, ஜானிய வண்டியில பூட்டி புறப்பட்டார்.
தனது பூர்வீக
வீடிருந்த
புறத்து வீதியிலிருந்து புறப்பட்டு வந்தார் என்று நினைக்கிறேன்”
கேபிரியேல் விவரித்த விதத்தை கேட்டு எல்லோரும்,திருமதி. மாலின்ஸ் உட்பட சிரிக்க,
கேட் சித்தி இடைமறித்து சொன்னாள்:
” ஓ,ஆனா, கேபிரியேல், அவர் புறத்து வீதியில வசிக்கவில்லை,உண்மைதான், ஆலை மட்டும்தான் அங்கிருந்தது”
“தனது மூதாதைகள் வசித்த மாளிகையிலிருந்து  ஜானியோடு கிளம்பி வந்தார்.
ஜானி பில்லி அரசரின் சிலையை பார்ப்பது வரை எல்லாம் மிகச்சிறப்பாக நடந்தது: அரசர் பில்லி அமர்ந்திருந்த குதிரையை ஜானி ரசித்ததோ அல்லது தான் செக்கு ஆலைக்கு திரும்பிவிட்டோம் என நினைத்ததோ தெரியவில்லை,எதுஎப்படியோ ஜானி சிலையை சுற்றி வர ஆரம்பித்துவிட்டது”.என்றார்.
மற்றவர்களின் வெடிச்சிரிப்பிற்கு நடுவே கேபிரியேல் தனது பனி சப்பாத்துகளோடு முற்றத்தில் சுற்றி வந்து நடை பயின்றார்.
” சுற்றி சுற்றி அது வந்தது” என்ற கேபிரியேல்
” தற்புகழ்ச்சியும் பந்தாவையும் உடைய நம்ம பெரியவர் செம கடுப்பாகிட்டார்.
ஏய் நேரா போ!
என்னநெனச்சிட்டிருக்கே? ஜானி! ஜானி!  மிக அசாதாரணமான நடவடிக்கை இது! இந்த குதிரையை புரிஞ்சுக்க முடியவில்லை!”
கேபிரியேலின் நாடகீய விவரிப்பை கேட்டு எழுந்த பலத்த சிரிப்பு வெளி கதவின் பலத்த தட்டலால் தடைப்பட்டது. மேரிஜேன் விரைவாக ஓடி வெளிக்கதவை திறந்து பிரட்டி மாலின்ஸை உள்ளே அனுமதித்தாள்.
தலையில் அணிந்த தொப்பியோடு குளிரால் தோள்பட்டைகளை குறுக்கிக்கொண்டும் மேல் மூச்சு விட்டுக்கொண்டும் சுவாசிக்கும்போது உஷ்ண ஆவியை வெளிவிட்டுக்கொண்டும் பிரட்டி மாலின்ஸ் வந்துசேர்ந்தான்.
“என்னால் ஒரு கோச் வண்டியைத்தான் பிடிக்க முடிந்தது” என்றான்
” ஓ பரவாயில்லை,நாங்கள் மற்ற ஏதாவது ஒன்றை படகுதுறையோரம் பிடிக்கப்பார்க்கிறோம்” என்றார் கேபிரியேல்.
” ஆமா அதுவும் சரிதான்,திருமதி. மாலின்ஸை வெகுநேரம் இந்த குளிர் காற்றில் நிறுத்த முடியாது” என்றாள் கேட் சித்தி.
திருமதி. மாலின்ஸை அவரது மகனும் திரு. பிரவுனியும் வீட்டு தலைவாசல் படிக்கட்டுகளில் கவனமுடன் நடத்தி கூட்டி வந்து பல முயற்சிகளுக்கு பிறகு கோச் வண்டியினுள் நுழைத்தார்கள்.அவருக்கு பின் ஏறிக்கொண்ட பிரட்டி தனது தாயை உள்ளே வசதியாக உட்காரவைக்க நீண்ட நேரமெடுத்துக்கொண்டான். இதை செய்வதற்கு திரு. பிரவுனியும் பல ஆலோசனைகளை கூறினார்.ஒருவழியாக நல்ல வசதியான முறையில் அமர்த்திய பிறகு பிரட்டி மாலின்ஸ் திரு. பிரவுனியையும் உடன் வரச்சொல்லி அழைத்தான்.குழப்பமான பேச்சொலிகளுக்கு பிறகு அவரும் ஏறிக்கொண்டார்.கோச் ஓட்டுபவர் தனது முழங்கால்களுக்கு மேல் கம்பளி துணியை போர்த்திக்கொண்டு விலாசத்தை விசாரிக்க குனிந்து கேட்டார்.பிரட்டி மாலின்ஸும் திரு. பிரவுனியும் மாற்றி மாற்றி தலைகளை கோச் ஜன்னல்களுக்கு வெளியே விட்டு  வெவ்வேறு விலாசங்களை சொல்லியதால் குழப்பம் மேலும் பெருகியது.திரு. பிரவுனியை போகும் வழியில் எங்கு இறக்கி விட வேண்டும் என்பதுதான் விஷயம்.இதை வீட்டு வாசல் படிக்கட்டுகளில் நின்றுகொண்டிருந்த கேட் சித்தி ஜுலியா சித்தி மற்றும் மேரி ஜேனும் சேர்ந்துகொண்டு ஆளாளுக்கு ஒரு வழியையும் பாதையையும் சொல்ல ஒரே களேபரமான சிரிப்பும் அங்கு நிலவியது.பிரட்டி மாலின்ஸ் ஒரு கட்டத்திற்கு பிறகு பேசமுடியாமல் சிரித்து மூச்சு முட்டியிருந்தான்.இதில் அவ்வப்போது தனது தொப்பி வீழ்ந்துவிடும் அபாயத்தை பொருட்படுத்தது தலையை வெளியே விட்டு உள்ளிழுத்துகொண்டு தனது தாயிடம் பேச்சு போய்க்கொண்டிருக்கும் நிலையை வேறு விவரித்துக்கொண்டிருந்தான்.இறுதியாக அனைவரின் சிரிப்புசத்தத்திற்கும் மேலாக கூச்சலிட்டு திரு.பிரவுனி கோச்வண்டிக்காரனிடம் சொன்னார்:
” உனக்கு டிரினிட்டி கல்லூரி தெரியுமா”?
“தெரியும் ஐயா” என்றான் கோச் ஓட்டி.
“நல்லது,கல்லூரி வாசல் வரை ஓட்டிப்போ, அங்கு போன பிறகு எங்கே செல்லவேண்டும் என்பதை சொல்கிறோம். இப்போது புரிந்ததா”?
“சரி ஐயா”
“டிரினிட்டி கல்லூரியை நோக்கி வண்டி சிட்டாக பறக்கட்டும்”
“சரி ஐயா”
பலத்த சிரிப்பொலிகளுக்கும் பிரிவு முகமன்களுக்கும் இடையே, சவுக்கால் சொடுக்கப்பட்ட குதிரை,கோச்வண்டியை இழுத்துக்கொண்டு படகுதுறையில் நுழைந்து சென்றது.
கேபிரியேல் மற்றவர்களோடு வாசலுக்கு செல்லாமல்,உள் முற்றத்தின் இருண்ட பகுதியில் நின்றபடி மேலே,மாடியையும் மாடிப்படிக்கட்டையும் பார்த்தபடி நின்றிருந்தார்.நிழலுருவாக மேலே மாடி தரைத்தளத்தில் ஒரு பெண் நின்றிருந்தாள்.அவரால் அவளது முகத்தை பார்க்க முடியாவிட்டாலும் அவள் அணிந்திருந்த பாவாடைகவுனில் செம்மண்நிற மற்றும் சால்மன் மீனின் ரோஜா நிற வர்ண பட்டைகள் இருட்டில் கருப்பு வெள்ளை பட்டைகளை போல் தெரிந்ததை பார்த்தார்.
அது அவரது மனைவிதான்.அவள் மாடி கிராதி கைப்பிடி கட்டைகளில் கையூண்றியபடியே எதையோ கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்தாள்.
அவளது ஆழ்ந்த அசைவற்ற அமைதியைக்கண்டு ஆச்சரியப்பட்டவர், தானும் கூர்ந்து கேட்க முயன்றார்.ஆனாலும் வாசலில் ஒலித்த களேபரமான விவாதம் மற்றும் சிரிப்பொலிகளால் தெளிவாக அவரால் கேட்க முடியவில்லை. பியானோவை இசைத்து பாடும் யாரோ ஒரு ஆண் குரல் மட்டும் துண்டுதுண்டாக கேட்டது.
முற்றத்து இருளில் நின்றபடியே பாடலின் வரியை அறிந்துகொள்ளவும் தன் மனைவியை பார்த்தபடியும் கேபிரியேல் நின்றிருந்தார்.அவள் நின்றிருந்த விதத்தில் ஒரு நளினமும் மர்மமும் , அவளே எதுவோ ஒன்றின் அடையாளம் என்பதைப்போலிருந்தது.
இருளில் நின்றபடி ஒரு பெண் தூரத்து இசையை கேட்பது என்பது எதன் அடையாள சின்னம் என அவரையே அவர் கேட்டுக்கொண்டார்.
அவர் மட்டும் ஒரு ஓவியராக இருந்திருந்தால் அந்த கணத்தில் நின்றவளை அப்படியே வரைந்திருப்பார்.அவள் அணிந்திருந்த நீல நிற தொப்பி  அவளது செம்பழுப்பு நிற தலைமுடியை இருளிலும் பிரகாசிக்க வைப்பதையும், கவுனில் இருந்த அடர் வர்ண பட்டைகள் மங்கி வெளிறிய வர்ண பட்டைகளை நன்றாக காட்சிப்படுத்தியதையும் வரைந்து காட்டியிருக்க முடியும்.அவர் மட்டும் ஓவியராக அந்த ஓவியத்தை படைத்திருந்தால் அதற்கு தூரத்து இசை என பெயர்சூட்டியிருப்பார்.
வாசல் கதவை மூடிவிட்டு எல்லோரும் சிரித்து முழக்கமிட்டபடியே வந்தனர்.
” அது சரி, ஆனால் பிரட்டி தொந்திரவுதான் இல்லையா?என்றாள் மேரிஜேன்.
இதற்கு எதுவும் பதிலளிக்காமல் மேலே நின்ற தன் மனைவியை காட்டினார் கேபிரியேல்.தற்போது வாசல் கதவு மூடப்பட்டதால் பியோனோ இசை சற்று தெளிவாக கேட்டது.எல்லோரையும் அமைதியாக இருக்கும்படி அவர் சைகை செய்தார்.அந்த பாட்டு பண்டைய ஐரிஷ் மொழியாக இருந்தது.அதை பாடுபவர் அதன் வரிகளையும் தன் குரலையும் தெளிவற்ற வகையில் பிரயோகித்ததைப்போல தென்பட்டது.தூரத்திலிருந்து ஒலித்த அந்த குரல் வரண்டிருந்தது.அது இரைஞ்சுவதைப்போலவும் பாடல்வரிகளில் பொதிந்திருந்த துக்கத்தை பிரதிபலிப்பதாகவும் இருந்தது:
ஓ,மழை எனது கனத்த சுருள் முடியில் வீழ்கிறதே
பனித்துளிகள் என் தேகத்தை ஈரப்படுத்துகிறதே
என் குழந்தை குளிர்ந்து போய் கிடக்கிறாளே…
‘ஓ’ என வியந்த மேரி ஜேன்,
” இது பார்டெல் டி’ ஆர்சி தற்போது பாடுகிறார், இரவெல்லாம் இவர் பாடவேயில்லை,
ஓ, அவர் புறப்படுவதற்குள் ஒரு முழு பாட்டை பாடச்சொல்லப்போகிறேன்” என்றாள்.
” ஓ,அப்படியே செய்,மேரிஜேன் ” என்றாள் கேட் சித்தி.
மற்றவர்களை விலக்கிக்கொண்டு மேரிஜேன் மாடிக்கு போவதற்குள் சடாரென இசையும் பாடலும் நின்று போனது.
” ஓ என்ன ஒரு துயரம்!” என சத்தமிட்டாள்.
” அவர் கீழே வருகிறாரா, கிரேட்டா?”
கேபிரியேலுக்கு தன் மனைவி அக்கேள்விக்கு ஆமோதித்து பதிலளித்தபடியே கீழிறங்கி வருவதையும்,அவளின் பின்னால்
திரு. பார்டெல் டி’ ஆர்சியும்
செல்வி ஓ’ கலாஹெனும் படியிறங்கி வருவதை பார்த்தார்.
” ஓ, திரு.டி’ ஆர்சி என கூவிய மேரிஜேன்
” நாங்கள் அனைவரும் உங்களின் இசைப்பாடலை கேட்க மயங்கி ஓடோடி வரும்போது சட்டென நீங்கள் நிறுத்திக்கொண்டது மிகவும் மோசம்”
” சாயங்காலத்திலிருந்தே நானும் திருமதி. கான்ராயும் இவரை பாடச்சொல்லி கேட்டுக்கொண்டேயிருந்தோம் ஆனாலும் இவர் தனது கடினமான சளித்தொந்திரவால் பாட முடியாது என்றார்” என. செல்வி. ஓ’ கலாஹென் சொன்னாள்.
” ஓ, திரு. டி’ ஆர்சி இது சரியான கதையாகவில்ல இருக்கு” என்றாள் கேட் சித்தி.
” நான் காக்காயை போல் கரைந்து கத்தியதை பார்க்வில்லையா”?  என திரு. டி’ ஆர்சி முரட்டுதனமாக கேட்டார்.
அவர் அவசரமாக உக்கிராண அறைக்குள் போய் தன் வெளி மேலங்கியை அணிந்தார்.அவரது மரியாதைக்குறைவான பேச்சைக்கேட்ட அனைவரும் ஏதும் சொல்லமுடியாமல் மௌனமாக நின்றனர்.கேட் சித்தி புருவத்தை சுருக்கியபடியே இந்த பேச்சை விட்டுவிட சைகை செய்தாள்.திரு. டி’ ஆர்சி கவனமுடன் கழுத்தை சுற்றி கம்பிளி பட்டியை சுற்றியபடியே முறைத்தார்.
” இந்த தட்பவெட்பம்தான்”
ஒரு சிறிய இடைவெளி மௌனத்திற்கு பிறகு ஜுலியா சித்தி சொன்னாள்.
” ஆம்,எல்லோருக்கும் தடுமன் சளி பீடிக்கிறது” என உடனடியாக ஆமோதித்தாள் கேட் சித்தி
” எல்லோருக்கும்தான்”
” மற்றவர்கள் சொல்கிறார்கள்” என ஆரம்பித்த மேரிஜேன்,” “முப்பது ஆண்டுகளில் காணாத பனி தற்போது பொழிகிறதாம்,ஐயர்லாந்து பூராவிலும் பனிப்பொழிகிறதாம் இன்றைய காலைபத்திரிக்கையில் படித்தேன் “
” பனிப்பொழிவை பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும்”என சோகத்தோடு சொன்னாள் ஜூலியா சித்தி.
” எனக்கும் தான்” என்ற செல்வி. ஓ’ கலாஹென்,
“தரையில் பனி படர்வு இல்லையென்றால் கிருஸ்துமஸ்  தினம் கிருஸ்துமஸ் தினமாகவே இருக்காது என நினைக்கிறேன்” என்றாள்.
” ஆனால் நம்ம டி’ ஆர்சிக்கு பனி என்றாலே பிடிக்காது ” என புன்னகைத்தபடியே சொன்னாள் கேட் சித்தி.
உக்கிராண அறையிலிருந்து முழுதாக உடைகளை அணிந்து வெளிவந்த
 திரு.டி’ ஆர்சி சமாதானப்படுத்தும் தோரணையில் தனது தடுமன் பிரச்சனையின் சரிதத்தை சொல்லலானார்.அவர் மேல் அக்கரை கொண்ட அனைவரும் அவரின் மேல் பரிதாபப்பட்டு, ஜாக்கிரதையுடன் தொண்டையை இந்த இரவு குளிரிலிருந்து பாதுகாக்க சொல்லி அறிவுறுத்தினர்.கேபிரியேல் இந்த பேச்சில் தன் மனைவி கலந்து கொள்ளாததை கவனித்துக்கொண்டார்.
கதவின் மேல்புற அறைவட்ட கண்ணாடி தடுப்பின் கீழ்  வழியாக ஊடுருவி வந்த ஒளி அவளது அடர்ந்த செம்பழுப்பு கேசத்தை ஒளியுற செய்தது.சில நாட்களுக்கு முன்பாகத்தான் கனப்பு அடுப்பின் உஷ்ணத்தில் அவள் தனது கேசத்தை உலர்த்திக்கொண்டிருந்ததை பார்த்திருந்தார்.அவள் அதே மனோபாவத்தோடு அருகே நடக்கும் பேச்சை கவனிக்காமல் இருந்தாள்.இறுதியாக அவள் திரும்பி வரும்போது அவளின் கன்னக்கதுப்புகள் கன்றி சிவந்தும் கண்கள் ஒளிர்ந்தும் இருப்பதை பார்த்த கேபிரியேலுக்கு சட்டென ஒரு மகிழ்வு துள்ளல் அவரது இதயத்திலிருந்து வெளிவந்தது.
” திரு. டி’ ஆர்சி அவர்களே,
நீங்கள் பாடிய பாட்டின் தலைப்பு பெயர் என்ன?” என கேட்டாள்.
” அதன் தலைப்பு
ஆக்ரிம் மின் வாலைக்குமரி” என்றார் ” ஆனாலும் என்னால் சரியாக ஞாபகப்படுத்திக்கொள்ள முடியவில்லை,ஏன்? உங்களுக்கு அது தெரியுமா?”
” ஆக்ரிம் ன் வாலைக்குமரி” என திருப்பிசொன்னவள்
” எனக்கு அதன் தலைப்பு மட்டும் நினைவுக்கு வரவில்லை” என்றாள்.
” அது மிக இனிமையான மெட்டில் அமைந்த பாட்டு” என்றாள் மேரி ஜேன்.
” இன்றிரவு உங்களுக்கு குரல் கைகொடுக்காததில் எனக்கு வருத்தங்கள்தான்”
“இங்க பாரு,மேரிஜேன்” என்ற கேட் சித்தி
” திரு. டி’ ஆர்சியை கோபமூட்டாதே, அவர் கோபப்படுவதை நான் ஏற்கமாட்டேன்”
எல்லோரும் புறப்பட தயாராக இருப்பதைக்கண்டு அவர்களை வாசலுக்கு அழைத்து வந்தாள்.அங்கு நல்லிரவு என பிரிவு முகமன் கூறப்பட்டது.
” நல்லது,நல்லிரவு கேட் சித்தி,அருமையான மாலை நேரத்தை தந்தருளியதற்கு நன்றிகள்”
“நல்லிரவு, கேபிரியேல். நல்லிரவு கிரேட்டா!”
“நல்லிரவு கேட் அத்தை,மிக்க நன்றிகள்
நல்லிரவு ஜூலியா அத்தை”
“ஓ நல்லிரவு, கிரேட்டா,நான் உன்னை சரியாகவே பார்க்கவில்லை”
“நல்லிரவு திரு. டி’ ஆர்சி நல்லிரவு செல்வி ஓ’ கலாஹென்.”
” நல்லிரவு செல்வி. மோர்க்கென்”
“நல்லிரவு மீண்டும்”
” எல்லோருக்கும் நல்லிரவு,பத்திரமாக வீடு போய் சேருங்கள் “
” நல்லிரவு, நல்லிரவு “
விடியற்காலை இன்னும் இருண்டேயிருந்தது.மந்தமான ஒரு மஞ்சள் ஒளி நகர வீடுகளின் மேலேயும் ஆற்றின் மேலேயும் சூழ்ந்திருந்தது;வானம் மூட்டத்துடன் கீழ் நோக்கி கவிந்திருந்தது.
நடக்கும்போது தரை பனிச்சேறால் உழற்றியது;வீட்டு கூரைகள் மேலும் படகுத்துறையின் சுற்று சுவர்கள் மேலும் கைப்பிடி சுவர்களிலும் பனித்துகள்கள் வரியோடியும் மொத்தையாகவும் வீழ்ந்திருந்தது.
தெருவிளக்குகள் குளிர் காற்றில் சிவந்து எரிந்துகொண்டிருந்தன.
ஆற்றின் அக்கரையில் நான்கு கோர்ட் மாளிகை பூதாகரமாக அடர் வானத்தின் கீழே நின்றுகொண்டிருந்தது.
கேபிரியேலுக்கு முன்பாக அவள் திரு. பார்டெல் டி’ ஆர்சி யுடன் நடந்து வந்தாள்.அவளது தோல் சப்பாத்துகளை பழுப்பு நிற காகித உறையில் பொட்டலமாக ஒரு கையில் பிடித்திருந்தாள், மறு கை சேற்றில் அவளது பாவாடை அழுக்கடையாமல் இருக்கும் பொருட்டு தூக்கி பிடித்திருந்தது.தற்போது அவள் நளினமான மனோபாவத்தில் இல்லாதிருந்தாலும் கேபிரியேலின் கண்கள் இன்னும் மகிழ்வால் ஒளிர்ந்துகொண்டுதான் இருந்தது.அவரது நாடி நரம்புகளில் உதிரம் துள்ளிகுதித்தோடியது.
மூளைக்குள் நினைவுகள் கொண்டாட்டம் போட்டன, பெருமை,மகிழ்வு,கனிவு, வீரம் என முயங்கி மயங்கின.
அவருக்கு முன்னால் காற்றைப்போல இதமாகவும் வில்லைப்போன்ற நிமிர்வோடும் நடந்து போகுபவளை, ஓடிசென்று அவள் தோள்களை வளைத்துப்பிடித்து எதாவது முட்டாள்தனமாகவும் அன்பானதாகவும் அவள் காதோரம் போய் சொல்லவேண்டும் என்று ஏங்கினார். அவளது பூஞ்சைத்தன்மையை நினைத்து அவளை கைக்குள் வைத்து பொத்தி பாதுகாக்கவேண்டும் என்றும் அவளோடு தனித்து இருக்க வேண்டும் என்றும்  நினைத்துக்கொண்டார்.
அவர்களது தாம்பத்ய வாழ்வின் சுகந்தமான நினைவுகள் நட்சத்திர வெடிப்புகள் போல அவரது நினைவிலாடியது.
அவரது காலையுணவு கோப்பை அருகே இருந்த சூரியநீலவாசனை மலர்கள் கொண்ட கொத்தை வருடிக்கொடுத்து கொண்டிருந்தார்.அருகில் படர்ந்திருந்த ஐவி கொடிகளில் சிறுபறவைகள்
கெச்சட்டமிட்டுக்கொண்டிருந்தன,சூரிய ஒளியை ஜன்னல் திரைச்சீலை உள்வாங்கி தரையை ஜொலிக்க செய்தது:மனம் நிறைந்த மகிழ்வால் சாப்பிடக்கூட முடியவில்லை.
அவர்கள் இருவரும் ஜனக்கூட்டம் மிகுதியாயிருந்த நடைமேடையில் நின்றுகொண்டிருக்க அவர் அவளது கதகதப்பான கையுறையில் பயணச்சீட்டை வைக்கிறார்.
வெளியே அவளோடு நடுக்கும் குளிரில், ஒரு குறுக்கு சட்டமிட்ட கண்ணாடி ஜன்னலுக்கு உள்ளே கண்ணாடி போத்தல்களை எரிஅடுப்பில் வணைந்துகொண்டிருந்த ஒருவனை, இருவரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.மிகுந்த குளிராயிருந்தது.
குளிர் காற்றால்அவளது சுகந்த வாசனை வீசும் முகம் அவருக்கு மிக அருகே இருந்தது.
சட்டென அவர் எரிஉலையில் வேலைசெய்துகொண்டிருந்தவனை நோக்கி:
” நெருப்பு ரெம்ப சூடா,ஐயா?”
ஆனால் எரிஉலையின் சத்தத்தால் அந்த வேலையாளுக்கு அது கேட்கவில்லை. அதுவும் நல்லதுதான்.காதில் கேட்டிருந்தால் முரட்டுதனமாக எதையாவது சொல்லியிருப்பான்.
மென்மையான மகிழ்வுணர்வு அலையாய் அவர் நெஞ்சத்தில் இருந்து தப்பித்து வெளிப்பாய்ந்து இதமாய் அவரது ரத்த தமனிகளில் ஓடியது.
யாரும் அறியாத,எப்போதும் அறிந்துகொள்ள முடியாத அவர்களது மணவாழ்வின் நட்சத்திர ஜொலிப்பு கணங்கள் அவர் நினைவில் வந்து மின்னியது.அந்த
தேவகணங்களை அவளுக்கு நினைவுபடுத்த ஏங்கினார்.இதன் மூலம் அவர்களது உப்புசப்பற்ற தினசரி வாழ்க்கையை மறந்து அந்த உச்ச கணங்களை மட்டும் நினைவுகூற முடியும் என நினைத்தார்.மணவாழ்வின் இத்தனை வருடங்கள் உருண்டோடிய பிறகும் ஒருவர்மேல் மற்றவருக்கு இருக்கும்  ஆன்ம தாகம் குறையவேயில்லை.
குழந்தைகள்,அவரது வேலைப்பணிகள்,அவளது வீட்டு வேலைகள் போன்றவைகள் அவர்களது
ஆத்மாவின் கனிந்த நெருப்பை அணைக்கவேயில்லை.
அவர் அவளுக்கு எழுதிய கடிதம் ஒன்றை எழுதி அனுப்பிய பின் :
 ” ஏனிந்த இந்த எழுத்து பதங்கள் எனக்கு மொன்னையாகவும் உறைந்தும் தோன்றுகின்றது?
இது எதனால் என்றால் உனது பெயரை போன்ற மென்மை எந்த வார்த்தைகளுக்கும் கிடையாது என்பதால்தானோ?”
தொலைவிலிருந்து கேட்கும் இசைத்துணுக்கு போல அவரது கடிதங்களின் வார்த்தைகள் இத்தனை வருடங்களுக்கு பிறகும் அவருக்கு இதமளிக்கும் விஷயங்களாயிருந்தது.
அவளோடு தனித்திருக்க எண்ணி ஏங்கினார்.அனைவரும் சென்றுவிட்ட பிறகு அவரும் அவளும் மட்டும் விடுதி அறைக்கு வந்து சேரும்போதுதான் தனித்து இருக்க முடியும்.அவர் மென்மையாக அவளை அழைப்பார்;
” கிரேட்டா”
அதை அவள் உடனடியாக கேட்டிருக்க முடியாமலிருக்கலாம்:அவள் உடை மாற்றிக்கொண்டிருக்கலாம். பிறகு அவரது குரலில் இருக்கும் வித்தியாசத்தை உணர்ந்து,திரும்பி அவரை பார்க்கலாம்…
வைன்டேவர்ன் தெரு முனையில் அவர்களுக்கு ஒரு வாடகை வண்டி கிடைத்தது.அதன் கடகடப்பு சத்தத்தால் பேசிக்கொள்ள முடியாமலிருந்ததில் அவருக்கு ஒரு நிம்மதி.அவள் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டு வந்தாள். சோர்வாக காணப்பட்டாள்.வண்டியிலிருந்த மற்றவர்கள் கட்டிடங்களை காட்டியும் தெருப்பெயர்களை சொல்லியும் குறைவாகவே பேசிக்கொண்டார்கள்.வண்டிகுதிரை மேகமூட்டங்களுடன் இருந்த காலைவானத்தின் கீழே சலிப்பாக தனதுகூண்டு வண்டியை இழுத்தபடியே ஓடியது.
கேபிரியேல் மற்றொரு வண்டியில் அவளோடு தங்களது தேன்நிலவிற்கு போவதற்கான கப்பலைப்போய்ச்சேர வேகமாக போய்க்கொண்டிருந்தார்.
வண்டி ஓ’ கோனெல் பாலத்தை கடக்கும்போது செல்வி.ஓ’ கலாஹென் சொன்னாள்:
“ஓ’கோனெல் பாலத்தை கடக்கும்போது கட்டாயமாக ஒரு வெள்ளை குதிரையை பார்க்காமல் யாரும் போகமுடியாது என சொல்லுவார்கள்”
” நான் தற்பொழுது ஒரு வெள்ளை மனிதனை பார்க்கிறேன்” என்றார் கேபிரியேல்.
” எங்கே?” என பார்டெல் டி’ ஆர்சி கேட்க
கேபிரியேல் பனியால் வெளுத்திருந்த சிலையை காட்டினார்.பின்பு அதை நோக்கி சினேகமாக தலையசைத்து கையை ஆட்டினார்
” நல்லிரவு, டேன்,”என மகிழ்வோடு சொன்னார்.
விடுதியை வண்டி சென்றடைந்தபோது முதலில் குதித்திறங்கி பார்டெல் டி’ ஆர்சி வாடகைப்பணம் கொடுக்கிறேன் என சொன்னபோதும் ஒப்புக்கொள்ளாமல் ஓட்டுனரிடம் வாடகைபணத்தை
 கொடுத்தார். பேசியதற்கு மேல் ஒரு ஷில்லிங் கொடுத்தார். ஓட்டுனர் வணங்கி:
“வளமான புத்தாண்டாக உங்களுக்கு அமையட்டும், ஐயா.”
” உனக்கும் அப்படியே அமையட்டும்” என மனப்பூர்வமாக கேபிரியேல் பதிலிருத்தார்.
வண்டியை விட்டு அவள் இறங்கும்போது அவரது கரங்களை லேசாக பிடித்தபடியே இறங்கி நடைபாதையோரம் நின்று மற்றவர்களுக்கு நல்லிரவு பிரிவு முகமன்களை கூறினாள்.சில மணிநேரங்களுக்கு முன், நடனத்தின் போது அவரது தோள்களில் லேசாக சாய்ந்த மாதிரியே இப்போதும் லேசாக சாய்ந்திருந்தாள்.
அவளது நளினமும் காதல்மனைவி எனும் பொறுப்பையும் எண்ணி அவர் பெருமையும் சந்தோஷத்தையும் அடைந்தார்.ஆனால் தற்போது அவர்களது இன்பமான பல நினைவுகளை மீட்டி,அவளது வித்தியாசமானதாகவும்,
இசைப்பூர்வமாகவும், மெல்நறுமண வாசத்தோடும் இருந்த ஸ்பரிசத்தால் தூண்டப்பட்டு காமவயப்பட்டார்.அவளது அமைதியை நோட்டமிட்டபடியே தனது தோளோடுதோளாக அவளை நெருக்கிக்கொண்டார்;
விடுதிவாசலில் நின்றிருந்த பொழுது, தங்களது தினசரி வாழ்விலிருந்தும் பணிகளிலிருந்தும் நண்பர்களிடமிருந்தும், இல்லத்திலிருந்தும் பிரகாசிக்கும் இதயங்களோடு தப்பி புதிய சாகசங்களை நோக்கி ஓடுவதாக யோசித்தார்.
விடுதி வராண்டாவில் ஒரு கிழவன் மறைப்பு பலகை பொருத்திய ஆசனத்தில் அமர்ந்த படியே தூங்கிக்கொண்டிருந்தான்.
எழுப்பிய பின் அவன், அலுவலகத்தில் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துவிட்டு அவர்களை அழைத்துக்கொண்டு படிக்கட்டுகளை நோக்கி சென்றான்.மௌனமாக அவனை பின் தொடர்ந்துசென்ற,
அவர்களது காலடி ஓசை படிக்கட்டுகளில் போடப்பட்டிருந்த கனத்த நடை விரிப்பால் சன்னமாக ஒலித்தது.விடுதி சேவகனுக்கு பின் நடந்துசென்றவளின் தலை படி மேல் ஏறுவதால் குனிந்திருந்தது.மெலிந்த அவளது தோள்கள் ஏதோ பாரத்தை சுமப்பதுபோல வளைந்திருந்தது,அவளது கவுன் இடுப்பு பட்டி அவளது உடலோடு ஒட்டி இறுகியிருந்தது.அப்படியே அவளது இடுப்பை பிடித்து இறுக்கி அணைத்துக்கொள்ளவேண்டும் என அவரது கைகள் விரகதாபத்தால் துடித்தது.நகங்களால் கையை அழுத்தி தன்னையே கட்டுப்படுத்திக்கொண்டார்.சேவகன் தனது மெழுகுவர்த்தியை மேடையில் வைக்க படியில் நின்றான்.கீழே அவனுக்கு பின்னே அவர்களும் நின்றனர்.அந்த அமைதியில் உருகி விழும் மெழுகின் ஓசையையும் தன் நெஞ்சுக்கூட்டுக்குள் ஒலிக்கும் இதயத்தின் ஒலியையும் அவர் உணர்ந்தார்.
மேல்தளத்தில் நடத்திக்கூட்டி சென்று ஒரு அறைக்கதவை சேவகன் திறந்தான்.தனது நடுங்கும் மெழுகுவர்த்தியை குளியலறை மேசையில் வைத்துவிட்டு காலையில் எத்தனை மணிக்கு எழுப்ப வேண்டும் என கேட்டான்.
” எட்டு மணிக்கு” என்றார் கேபிரியேல்.
சேவகன் எரியாத மின் விளக்கை காட்டி மன்னிப்பு கோர,அதை கேபிரியேல் தடுத்து பேசினார்.
” எங்களுக்கு வெளிச்சம் வேண்டாம்.தெருவிளக்கின் வெளிச்சமே போதும்” என்றபடியே
” நல்லவனைப்போல இந்த அழகான பொருளையும் எடுத்துக்கொண்டு போய்விடு ” என மெழுகுவர்த்தியை சுட்டிக்காட்டினார்.
இதைக்கேட்டு ஆச்சரியப்பட்டுப்போன சேவகன் மெதுவாக மெழுகுர்த்தியை எடுத்துக்கொண்டு நல்லிரவு முகமனை சொல்லிவிட்டு வெளியேறினான்.
கேபிரியேல் அறைக்கதவை தாழிட்டார்.
தெருவிளக்கின் கலங்கிய ஒளி ஜன்னலில் இருந்து கதவு வரை நீண்ட பட்டகம் போல் விழுந்திருந்தது.கேபிரியேல் தனது வெளி மேலங்கியையும் தொப்பியையும் இருக்கையில் வீசிவிட்டு ஜன்னலருகே சென்றார்.தனது உணர்வுகளை மட்டுப்படுத்திக்கொள்ள முயன்றபடியே வெளியே பார்த்தார்.பின்பு மர அலமாரியின் பக்கமாக சாய்ந்தபடியே திரும்பினார்.வெளிச்சம் அவருக்கு பின்புறமாக வீசியது.
அவள் தனது மேலங்கியையும் தொப்பியையும் கழற்றி வைத்துவிட்டு தொங்கும் பெரிய கண்ணாடி முன் நின்றுகொண்டு இடுப்பு கொக்கியை விலக்கிக்கொண்டிருந்தாள்.அவளையே பார்த்தபடி சில நொடிகளுக்கு பிறகு கேபிரியேல்:
” கிரேட்டா!” என அழைத்தார்.
அவள் கண்ணாடி முன்னிருந்து திரும்பி அவரை நோக்கி, விழுந்திருந்த ஒளி பட்டகத்தினூடே நடந்து வந்தாள்.அவளது முகம் தீவிரத்தன்மையோடும் சோர்ந்தும் இருந்ததால் கேபிரியேலின் உதட்டிலிருந்து வார்த்தைகள் ஏதும் வெளிவரவில்லை.
இல்லை,இது அதற்கான சரியான பொழுதில்லை.
” நீ சோர்ந்ததை போலிருக்கிறாய்” என்று அவர் சொன்னார்.
“எனக்கு கொஞ்சம் அப்படித்தான் இருக்கு” என பதிலளித்தாள்.
” உனக்கு உடல் நிலை சரியில்லாதது போலவோ அல்லது பலஹீனமாகவோ உணர்கிறாயா?”
“அதெல்லாம் இல்லை, சோர்வு மட்டும்தான்: வேறுஒன்றுமில்லை”
அவள் ஜன்னலருகே சென்று வெளியே பார்த்தாள்.கேபிரியேல் பொறுத்துபார்த்து பின் தன்னுடைய அலைபாய்தல் தன்னை வென்றுவிடுமோ என அஞ்சி சடாரென சொன்னார்:
” இங்க பாரு கிரேட்டா!”
“என்ன?”
” அந்த பாவப்பட்ட பயல் மாலின்ஸ் பற்றி தெரியுமா?”என விரைந்து கேட்டார்.
“ஆமாம். அவனைபற்றி என்ன?”
” நல்லது,பாவம் அவன்,ஒரு வகையில் அவன் நல்லவன்தான்” என போலியான குரலில் தொடர்ந்த கேபிரியேல்,” நான் கடனாக கொடுத்த ஒரு பவுண்டு சவரனை திரும்பக்கொடுத்துவிட்டான்,உண்மையாகவே இதை நான்  எதிர்பார்க்கவேயில்லை. அவன்
அந்த பிரவுனியிடமிருந்து விலகவே மாட்டேன் என்றிருப்பதுதான் கொடுமை,எனென்றால் உண்மையில் அவனொன்றும் மோசமானவன் இல்லை என்பதால்தான்.”
தற்போது தனது சுற்றிவளைத்து பேசும் போக்கை நினைத்து தன்மீதே எரிச்சலடைந்தார்.அவருக்கு எங்கிருந்து ஆரம்பிப்பது என தெரியவில்லை.அவளும் எதாவது ஒரு காரணத்தால் எரிச்சலடைந்திருக்கிறாளா?அவளது தன்னியல்பிலேயே விரும்பி அவரை நோக்கி வந்தாள் எனில்!
தற்போது அவளிருக்கும் நிலையில் அணைவது என்பது மிருகத்தனமானது.
இல்லை. முதலில் அவளது கண்களிலிருந்து கொஞ்சமாவது விருப்ப ஒளி தென்பட வேண்டும்.அவளது வித்தியாசமான மனநிலையை புரிந்துகொள்ள அவர் ஏங்கினார்.
” எப்போது அவனுக்கு கடன் கொடுத்தீங்க?” என ஒரு இடைமௌன கணத்திற்கு பிறகு கேட்டாள்.
கேபிரியேல் ஸ்காட்டிஷ் மாலின்ஸ் பற்றியும் அவன்  கடன் வாங்கிய பவுண்டை பற்றியும் வன்மையான மொழியில் பேச ஆரம்பித்து தன்னை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டார்.
அவரது உள்ளத்திலிருந்து கொந்தளிக்கும் அன்பால் அவளை சீராட்ட ஏங்கினார்,
தன்னுடலோடு அவளுடலை முயங்கி,அவளை வெல்ல மயங்கினார்.ஆனால் அவர் சொன்னதோ:
” ஓ கிருஸ்துமஸ் தினத்தன்று,அவன் ஹென்றி தெருவில் அந்த சிறிய கிருஸ்துமஸ் வாழ்த்தட்டை கடையை ஆரம்பித்த போது”
அவர் இருந்த உணர்ச்சி கொதிப்பான மனநிலையில் அவள் ஜன்னலை விட்டுவிலகி வந்த ஒலியை கேட்கவில்லை.அவர் முன் வந்து அவரை வினோதமாக ஒரு நொடி பார்த்தாள்.பின்பு நுனிக்கால்களில் உந்தி அவரது தோள்களில் லேசாக கையணைத்தபடி,அவரை முத்தமிட்டாள்.
” நீங்கள் மிகவும் பெருந்தன்மையானவர், கேபிரியேல்,” என்றாள்.
திடீரென கிடைத்த முத்தத்தால் சந்தோஷத்தின் உச்சிக்கே போனவர் அவளது அழகான புகழுரையை கேட்டு உடல் சிலிர்த்தார்.அவளது கேசத்தை மிக மென்மையாக வருடிக்கொடுத்தார்.
தலைகுளித்து கழுவியிருந்த அவளது கேசம் மென்மையாகவும் ஒளிர்ந்தும் இருந்தது.அவரது நெஞ்சம் மகிழ்வால் ததும்பியது.அவர் விரும்பியபோது அவளே தன்விருப்பாக வந்தது அவரை மிகவும் மகிழவைத்தது.அவளும் அவரைப்போலவே நினைத்திருந்திருக்கலாம்.
அவரது உணர்வெழுச்சியை உணர்ந்து தன்னை அளிக்க முன்வந்திருக்கலாம்.
இவ்வளவு சுலபமாக இவள் தன்னை ஒப்புவிக்கும்போது தான் ஏன் குழப்பிக்கொண்டேன் என தன்னையே வினவிக்கொண்டார்.
அவளது முகத்தை தன் இரு கைகளால் ஏந்திக்கொண்டவாறே அவளுடலை தன்னோடு நெருக்கி அணைத்துக்கொண்டு மெதுவான குரலில் கேட்டார்
” அன்பே,கிரேட்டா எதைப்பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறாய்?”
அவள் அதற்கு பதிலளிக்கவுமில்லை மேலும் அவரது அணைப்பில் முற்றாக இணையவுமில்லை. அவர் மறுபடியும் மென்மையாக கேட்டார்;
” என்னவென்று சொல் கிரேட்டா,என்னவென்று எனக்கு தெரியுமென்று நினைக்கிறேன். எனக்கு தெரிந்த விஷயமா?”
அவள் உடனடியாக ஏதும் சொல்லவில்லை.பிறகு கண்ணீர் தளும்ப தேம்பிய படியே சொன்னாள்:
“ஓ,நான் அந்த பாடலை பற்றித்தான் நினைத்துக்கொண்டுள்ளேன்,
ஆக்ரிம் ன் வாலைக்குமரி”
அவரது அரவணைப்பிலிருந்து விலகி ஓடி படுக்கையில் போய் வீழ்ந்து தலைசட்டத்தில் கைகளை தொங்கப்போட்டபடி முகத்தை மறைத்துக்கொண்டாள்.
கேபிரியேல் வியப்பில் சிலையென ஒரு கணம் மலைத்து நின்ற பின்னர் அவளை பின் தொடர்ந்தார்.அவர் கட்டிலை நோக்கி போனபோது சுவற்றில் மாட்டியிருந்த கண்ணாடியில் தன் முழு உருவத்தை பார்த்தார்.அவரது அகன்ற, நன்றாக விரிந்து பரந்திருந்த
மேல் சட்டை பாகமும்,பொன் முலாம் பூசிய கண் கண்ணாடியும், அவரது முகத்தை பார்க்கும்போதெல்லாம் பிரதிபலிப்பில் தெரிந்த முகக்குறிப்பு அவருக்கு புதிராகவே இருந்தது.
அவளருகே சென்று கேட்டார்:
” அந்த பாட்டைப்பற்றி என்ன விஷயம்?
அதைக்கேட்டு ஏன் அழுக வேண்டும்?”
அவள் தனது கரங்களில் படிந்திருந்த தலையை தூக்கி கண்ணீரை புறங்கையால் ஒரு குழந்தையைப்போல துடைத்துக்கொண்டாள்.
அவரையும் மீறி அன்பான தொனி அவர் கேள்வியில் தொனித்தது.
” ஏன்,கிரேட்டா?”
“வெகு காலத்திற்கு முன்னர் இப்பாட்டை பாடிய ஒருவரின் ஞாபகம் எனக்கு வந்தது”
” வெகு காலத்துக்கு முன் பாடிய ஒருவர் யாராம்?” என புன்னகைத்தபடியே கேபிரியல் கேட்டார்.
” என் பாட்டியோடு நான் கால்வேயில் வசித்தபோது அறிந்த நபர் தான் அது”என்றாள்.
கேபிரியேலின் புன்னகை அவரது முகத்திலிருந்து மறைந்தது.அவரது உள்ளத்துக்குள் மெதுவாக ஒரு கோபம் உருவெடுத்தது. உணர்வெழுச்சி அவரது நாடி நரம்புகளில் கோபத்துடன் ஒளிர்ந்தது.
” நீ காதலித்த யாரோ ஒருவனா?”என ஏறுக்குமாறாக கேட்டார்.
” அவன் எனக்கு தெரிந்த சிறிய பையன்” என பதிலிட்டவள்
” அவன் பெயர் மைக்கேல் ப்யூரே.இந்த பாட்டை அவன் அடிக்கடி பாடுவான்.
ஆக்ரிம் ன் வாலைக்குமரி,
அவன் மிக அதீதமானவன்”.
கேபிரியேல் மௌனமானார்.அவனது அதீதத்தன்மைபற்றியும் அவனைப்பற்றியும் அவர் ஆவலோடு விசாரிப்பதாக அவள் நினைத்துக்கொள்ளக்கூடாது என விரும்பினார்.
” என்னால் அவனை இப்போதும் துல்லியமாக நினைவுகூற முடியும்,”என்றவள், சிறிது நேரம் கழித்து
” அவ்வளவு அருமையான கண்கள் அவனுடையது:பெரிய,
கருங்கண்கள்!அதில் வெளிப்படும் அவனது முகத்தோற்றம்–ஒரு பார்வை!
“ஓ,அப்போ நீ அவனோடு காதலாக பழகினாயோ?” என்றார் கேபிரியேல்.
” நான் கால்வே யில் இருந்த போது அவனோடு பலமுறை நடைபயணம் போயிருக்கிறேன்”. என்றாள்.
கேபிரியேலின் மனதில் ஒரு எண்ணம் சிறகடித்தது.
” இதனால்தான் நீ ஐவர்ஸ் பெண்ணோடு கால்வே யிற்கு போக ஆசைப்பட்டாயா?”என இறுக்கமாக கேட்டார்.
அவரை ஆச்சரியத்துடன் பார்த்து கேட்டாள்:
“எதற்காக?”
அவளது பார்வை அவரை குழப்பியது.அவர் தன் தோளை குலுக்கிய படியே சொன்னார்:
“எனக்கென்ன தெரியும்? அவனை பார்க்க என்பதாக இருக்கலாம்.”
அவரை விட்டு விலகி தன் பார்வையை ஜன்னலில் இருந்து விழும் ஒளிக்கற்றையை நோக்கி அமைதியாக வீசினாள்.
“அவன் இறந்துபோனான்.” என தாமதமாக சொன்னவள்,
“அவனுக்கு பதினேழு வயதாக இருக்கும்போதே இறந்துவிட்டான். இளமையில் இறப்பு என்பது அநியாயம் அல்லவா?”
” அவன் என்ன வேலையிலிருந்தான்?” என குறுக்கிட்டு கேட்டார் கேபிரியேல்.
” எரிவாயு தொழிற்சாலையில் வேலைசெய்தான்” என்றாள்.
கேபிரியேல் இறந்துபோன அந்த தொழிற்சாலைப்பையனை நினைத்தும் தனது எண்ணத்தையும் நினைத்து அவமானப்பட்டார். தங்களது தாம்பத்யத்தின் ரகசிய நினைவுகளை மிகுந்த கனிவோடும் மகிழ்வோடும் உணர்வெழுச்சியோடும் அவர் நினைத்துக்கொண்டிருக்கும்போது,அவள் மற்றொருவனோடு அவரை ஒப்பிட்டுக்கொண்டிருந்திருக்கிறாள்.அவரை பற்றிய ஒரு  அவமானகரமான சித்திரம் அவருக்கே தோன்றியது.தன்னை ஒரு கேலிக்குரிய பிரகிருதியாகவும், அவரின் சித்திகளின் எடுபிடியாளாகவும், சலனப்படும், மேம்போக்கான உணர்வுகளால் ஆட்படும் சாதாரணர் எனவும்,முரட்டு புதுபணக்காரர்களை நோக்கி உரை நிகழ்த்தும் கோமாளித்தனமான ஆள் என்றும்,பரிதாபப்படக்கூடிய ஆளாகவும் தன்னை கண்ணாடியில் பார்த்துக்கொண்டார்.தனது முகத்தில் பிரதிபலித்த அவமானத்தை அவள் பார்த்துவிடக்கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வோடு இருளில் மறைந்துகொண்டார்.
அவர் தனது விசாரணையை இறுக்கமாக கேட்க நினைத்தாலும் அவரது குரலின் தொனி பணிவாகவும் விருப்புவெறுப்பற்றும்  இருந்தது.
“கிரேட்டா, இந்த மைக்கேல் ப்யூரே யுடன் நீ காதலாயிருந்தாய் என நினைக்கிறேன்” என்றார்.
” அந்த காலக்கட்டத்தில் அவனோடு எனது நட்பு சிறப்பாக இருந்தது” என்றாள்.
அவளது குரல் மங்கியும் சோகமாகவும் ஒலித்தது.கேபிரியேல் தனது உணர்வெண்ணப்படி அவளை தற்போது கொண்டு போக முடியாததை நினைத்து வருந்தியபடியே,அவளது ஒரு கையை வருடிய படியே சோகமாக கேட்டார்:
“அவ்வளவு இளமையில் அவன் இறக்க என்ன காரணம் கிரேட்டா? நுரையீரல் நோயா என்ன?”என்றார்.
” அவன் எனக்காக இறந்தான் என நினைக்கிறேன்” என்று பதிலளித்தாள்.
இந்த பதிலால்  ஒரு இனம் புரியாத பயத்தை அவர் அடைந்தார்.தான் வெற்றியடையக்கூடிய இந்த கணத்தில் ஒரு மர்மமான பழிவாங்கும் குணமுடைய ஏதோ ஒரு உருவம், கலங்கலான வாழ்வுலகில் தனக்கு எதிராக வருவதைப்போல எண்ணி கலங்கினார்.அதை மன தர்க்கத்தால் கஷ்டப்பட்டு  விலக்கிவைத்துவிட்டு அவளது கையை வருடிக்கொடுத்துக்கொண்டே இருந்தார்.அவர் மேற்கொண்டு அவளிடம் எதையும் கேட்கவில்லை. அவளே சொல்லுவாள் என அவருக்கு தோன்றியது.அவளது கை மிதமான சூட்டோடும் ஈரத்தோடும் இருந்தது:அவரது தொடுகையை அது அங்கீகரிக்கவில்லை,
ஆனாலும் அவள் அவருக்கு ஒரு வசந்த கால காலையில் எழுதிய முதல் கடிதத்தை வருடிக்கொடுத்ததைப்போல அவளது கையை தொடர்ந்து வருடலானார்.
” அது ஒரு மாரிக்காலம்” என தொடங்கியவள்
“பனிக்கால தொடக்கத்தில் எனது பாட்டியின் வீட்டிலிருந்து கான்வெண்ட் பள்ளிக்கு நான் புறப்பட இருந்த போது அவன் கால்வே யில் இருந்த தொழிற்சாலையின் தங்குமிடத்தில் நோய்வாய்பட்டிருந்தான்.
அவனை எங்கும் வெளியில் விடாமல் அவனது நெருங்கிய உறவினர்கள் இருக்கும் ஊரான அவுட்டரார்ட் க்கு சேதி அனுப்பியிருந்தனர்.அவன் நிலை மோசமாக இருந்தது என சொல்லிக்கொண்டார்கள்,
எனக்கு தெளிவாக ஏதும் தெரியவில்லை.
ஒரு நொடி மௌனித்து பெருமூச்செறிந்தாள்.
” பாவம் அவன்” என்றவள்,
” என்னை அவனுக்கு மிகவும் பிடிக்கும், அவன் மிகவும் அமைதியான பையன்.நாங்கள் இருவரும் ஜோடியாக நடை பயணங்கள் போவோம். ஆம் கேபிரியேல் கிராமப்புறங்களில் நடை போவார்களே, அப்படித்தான். அவன் தனது உடல் நலத்திற்காகத்தான் சங்கீதத்தை பாடமாக எடுத்து படித்தான். அவனுக்கு மிக நல்ல குரல் இருந்தது.
பாவம் மைக்கேல் ப்யூரே”
” சரி,அப்புறம் என்னாச்சு?” என கேட்டார் கேபிரியேல்.
” நான் கால்வே யிலிருந்து பள்ளிக்கு போகவேண்டிய காலத்தில் அவனது உடல்நிலை மோசமடைந்ததால் அவனை நான் பார்க்க அனுமதிக்கப்படவில்லை,அதனால் அவனுக்கு நான் ஒரு கடிதத்தில் ,டப்ளினுக்கு படிக்கப்போகிறேன் என்றும் கோடை காலத்தில் திரும்பி வருவேன் எனவும் நான் திரும்ப வரும்போது அவனது உடல் நலமுடன் இருக்கும் என நம்புவதாக எழுதி அனுப்பினேன்.”
தனது நடுங்கும் குரலை கட்டுப்படுத்திக்கொள்ள கொஞ்சம் நேரமெடுத்துக்கொண்டு மேலும் தொடர்ந்தாள்:
” நான் எனது பாட்டியின் நன் தீவிலிருந்த வீட்டிலிருந்து புறப்பட்டு போவதற்கு முதல் நாள் இரவில் எனது உடைகளையெல்லாம் எடுத்து வைத்துக்கொண்டிருந்த போது ஜன்னல் கண்ணாடியில் சிறு கல் வந்து அடித்த ஒலியை கேட்டு எட்டிப்பார்த்தேன்.கண்ணாடி ஜன்னல் ஈரமாகவும் பார்க்க ஒன்றும் தெரியாதலால் நான் மெதுவாக கீழிறங்கி  பின்புறம்  போய் தோட்டத்தை நோட்டம் விட்டேன்.அந்த பரிதாபமானவன் தோட்டத்தின் கடைக்கோடியில் நடுங்கிய படியே நின்றுகொண்டிருந்தான்.”
” அவனை நீ திரும்பப்போக சொல்லவில்லையா?” என கேட்டார் கேபிரியேல்.
” இப்படி மழையில் நின்றுகொண்டிருந்தால் அவனது உடல்நிலையின் காரணமாக மரணம்கூட சம்பவிக்கும் என கெஞ்சி அவனது தங்குமிடத்திற்கு போகச்சொன்னேன். ஆனால் அவன் உயிர் வாழ பிடிக்கவில்லை என சொன்னான்.அதை அவனது கண்களிலும் நான் கண்டேன்.தோட்டத்து எல்லை சுவற்றின் கடைக்கோடியில் நின்ற ஒரு தனி மரத்தினடியில் அவன் நின்றிருந்தான்.
” அவனது வீட்டிற்கு திரும்பினானா?” என கேட்டார்.
ஆம்,திரும்பிப்போனான்.கான் கான்வெண்ட் பள்ளிக்குப்போன ஒருவாரத்திலேயே அவன் இறந்து போய் அவர்களது உறவினர்களால் அவுட்ரார்டில் புதைக்கப்பட்டான்.
 ” ஓ,  அவன் இறந்ததாக எனக்கு தெரிவித்த நாளில் நானடைந்த துயரம்!”
மேலோங்கிய சோக உணர்ச்சியால் விம்மியபடியே பேசமுடியாமல் நிறுத்திக்கொண்டு படுக்கையில் குப்புற வீழ்ந்துஅழுதாள்.கேபிரியேல் சிலகணங்கள் அவளது கையை பிடித்திருந்தவர்,அவளது துக்கத்தில் குறுக்கிடகூடாது என நினைத்து மெதுவாக அதை விட்டார். மௌனமாக ஜன்னலருகே சென்று நின்றார்.
அவள் நன்றாக உறங்கி விட்டாள். கட்டில் தலைமாட்டு சட்டங்களில் கைவைத்து குனிந்து தூங்குபவளை மனக்கசப்பின்றி சில கணங்கள் பார்த்தார்.தலைமுடிகள் கலைந்து வாய் லேசாக திறந்திருக்க ஆழ்ந்த சுவாசிப்பொலியை விட்டுக்கொண்டு தூங்குபவளை ஆழ்ந்து பார்த்தார். அவளது வாழ்விலும் ஒரு காதல் இருந்திருக்கிறது: ஒருவன் அவளுக்காக இறந்திருக்கிறான். அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழாததைப்போல வித்தியாசமாக நினைத்தபடி, தூங்கிக்கொண்டிருக்கும் அவளையே பார்த்தார்.அவரது ஆர்வமான கண்கள் அவளது முகத்திலும் கேசத்திலும் நிலைத்தது:அந்த காலக்கட்டத்து இளம்வயதில்
அவளது கன்னிப்பருவத்து அழகு எப்படி இருந்திருக்கும் என நினைத்தவருக்கு ஒரு நட்பான கருணையெண்ணம் அவர் மனதில் அவளைப்பற்றி தோன்றியது. அவளது தற்போதைய வதனம் அவ்வளவாக அழகாக வடிவாக இல்லை என்பதை தனக்குள்ளாக கூட சொல்லிக்கொள்ள அவர் விரும்பவில்லை. மைக்கேல் ப்யூரே இறப்பதற்கு கூட அஞ்சாமல் பார்க்க ஏங்கிய முகம் இதுவல்ல என்பதையும் அவர் புரிந்துகொண்டார்.
அவள் முழு கதையையும் சொல்லாமல் விட்டிருக்கலாம்.அவளது கழற்றி எறிந்த உடைகளை பார்வையிட்டார்.பாவாடை நாடா தரையில் கிடந்தது.அவளது ஒரு சப்பாத்து நேராக நின்றது.அதன் மற்றைய ஜோடி சாய்ந்து வீழ்ந்திருந்தது.சில மணிநேரத்திற்கு முன் தனக்கு ஏற்பட்ட உணர்ச்சி கொந்தளிப்புகளை நினைத்து வியந்துகொண்டார். அது எங்கிருந்து ஆரம்பித்தது? சித்திகளின் இரவு விருந்திலிருந்து,தனது மூடத்தனமான உரையிலிருந்து,நடனத்தாலும் ஒயின் அருந்தலாலும், இரவு முகன்களின் போது முற்றத்தில் செய்த நகைச்சுவைகளாலும், பனிப்பொழிவினூடே ஆற்றங்கரையோரம் நடைபயின்ற உற்சாகத்தாலும் என யோசித்தார். பாவமான ஜூலியா சித்தி! அவளும் பேட்ரிக் மோர்க்கெனும், அவரது குதிரையும் நிழலாக ஆனதுபோல் ஒரு நாள் நிழலாகிப்போவாள். சித்தி ‘மணநாளுக்கான வரிசை’ என்ற துள்ளலான புதுமணப்பெண்ணை பற்றிய பாடலை சிறப்பாக அன்றிரவு பாடியபோதும் அவளது முகத்தில் தோன்றிய முதுமையின் நிழல் அவர் நினைவிலாடியது. கூடிய சீக்கிரம் அவளது அதே வரவேற்பறையில் தனது பட்டு தொப்பியை மடியில் வைத்தபடி , கருப்பு துக்கஆடை அணிந்து கேபிரியேல் அமர்ந்திருப்பார். திரைச்சீலைகள் இழுத்து மறைத்திருக்க,அருகே கேட் சித்தி அழுது மூக்கை சிந்தியபடியே ஜூலியா சித்தி எப்படி இறந்துபோனாள் என்பதை சொல்லுவாள்.அவளை ஆறுதல் படுத்த சில வழமையான கவைக்குதவாத வார்த்தைகளை அவர் சொல்லுவார். ஆம், ஆம்; இது கூடிய சீக்கிரம் நடக்கக்கூடிய ஒன்றுதான்.
அறையில் இருந்த குளிர் அவரது தோள்களை குளிர்வித்தது. அவர் எழுப்பிவிடாதபடிக்கு கவனத்துடன் தன் மனைவியருகே படுத்து, போர்வையை எடுத்து போர்த்திக்கொண்டார். ஒவ்வொருவராக நிழலாகி மரிக்கப்போகிறார்கள். புகழோடும் எதாவது ஒரு வேட்கையோடும் உயிர்ப்பின் உச்சத்தில் இருக்கும்போதே மாற்றைய உலகினுள் கம்பீரமாக நுழைய வேண்டும். மாறாக வயது முதிர்ந்து தேய்ந்து ஓய்ந்து போய் சேர்வதை விட இது மேலானது. தன்னருகே படுத்திருந்தவள், தனது மனப்பெட்டகத்தில், வாழப்போவதில்லை என சொன்ன காதலனின் கண்களின் நினைவை எவ்வளவு காலம் நினைத்து பூட்டி வைத்திருக்கிறாள் என யோசித்து ஆயாசப்பட்டார்.
கேபிரியேலின் கண்கள் கண்ணீரால் நிறைந்து வழிந்தது. எந்த பெண்ணையும் இப்படியாக அவர் உணர்ந்ததேயில்லை, ஆனால் இந்த உணர்வுதான் காதல் என அவர் உய்த்தறிந்தார்.கண் நிறைந்து வழிந்தது.
இருள் சூழ்ந்த அந்த கணத்தில், மழை துளிகள் சொட்டும் மரத்தடியே நின்று பாடும் இளைஞனின் உருவத்தை மனக்கண்ணால் கண்டார்.அருகே மேலும் சில வடிவமற்ற சில உருவங்கள்  நின்றிருந்ததையும் கண்டார், அவரது ஆத்மா இறந்து போனவர்களின் பிரமாண்டமான பெரும் பிரதேசத்திற்குள் பிரவேசித்தது.அங்கிருந்தோரின் மங்கலான இருப்பை பற்றி அவர் அறிந்தபோதும் ஏன் இப்படி என புரிந்துகொள்ள முடியவில்லை.அவரது அடையாளமும் சாம்பல் நிறமான பொருத்தப்பாடற்ற அந்த உலகில் தேய்ந்து மறைய ஆரம்பித்தது.ஒரு காலத்தில் இறந்தவர்கள் உயிர்போடு இருந்த நிலையான இவ்வுலகும் கரைந்து மறைய தொடங்கியது.
ஜன்னல் கண்ணாடியை லேசாக தட்டிய சத்தம் கேட்டு அதை நோக்கி திரும்பி பார்த்தார்.மறுபடியும் பனித்துகள்கள் விழ ஆரம்பித்தது.தூக்கக்கலக்கத்தோடே விளக்கொளியில் வெள்ளி நிறத்தில் கனத்து சாய்ந்து, பொழியும் பனியை நோக்கினார்.மேற்கு நோக்கி அவர் பயணப்பட வேண்டிய நேரம்வந்து விட்டது.
ஆம், செய்தி தாள்கள் சரியாகத்தான் சொல்கின்றன:
பனிப்பொழிவு ஐயர்லாந்து முழுமைக்குமாக பொழிகிறது.அது நடு பாகமான சமவெளியெங்கும் வீழ்கிறது,
மரங்களற்ற மலைகள் மேலும், ஆலன் சதுப்பு நிலத்தின் மேலும், மேற்கு கடைசியின்  ஷேனன் பகுதி  முரட்டு கடல் அலைகள் மீதும் வீழ்ந்துகொண்டே இருக்கிறது. மைக்கேல் ப்யூரேவை புதைத்த , குன்றின் மேலிருந்த தனிமையான தேவாலய இடுகாட்டிலும் பனி பொழிந்துகொண்டேயிருக்கிறது. புதைகுழிகளின்மேல் வைக்கப்பட்டிருந்த  தலைக்கல்களின் மீதும் சிலுவைகள் மீதும்  புதைகாட்டு இரும்பு வாசல் கதவின் மீதும் வரண்ட முள் செடிகளின் மீதும் கனத்து படிந்திருந்தது. இந்த பிரபஞ்சம் முழுமைக்கும், தங்களது வாழ்வின் எல்லை வரைக்கும், இருப்பவர்கள் மற்றும் இறந்தவர்கள் மேலே பனி வீழ்ந்துகொண்டே இருப்பதை கண்ட அவரது ஆத்மா மெல்ல மயங்கியது.
” மரித்தவர்கள்”
குறுநாவல் ஜேம்ஸ் ஜாய்ஸ் கடைசியாக எழுதிய கதையாகும்.(1914) டப்ளினர்கள் என்ற சிறுகதை தொகுப்பில் வந்த இதை அவரது மிகச்சிறந்த கதையென அனேகம்பேர் சொல்லியுள்ளார்கள்.
T.S. எலியட், “எழுதப்பட்ட சிறுகதை வரலாற்றிலேயே இது ஒரு மிக மகத்தான சிறப்புமிக்க கதை” என சான்றுரைத்துள்ளார்.
      ஜேம்ஸ் ஜாய்ஸ்
-தமிழில் : விஜயராகவன்
Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *