பகுதி 1
மாளிகை மேற்பார்வையாளரின் பெண்ணான லில்லி சிட்டாக பறந்துகொண்டிருந்தாள்.
வரவேற்பறையின் பின் உள்ள உபசரிப்பு அறைக்கு ஒரு விருந்தினரை அழைத்துவந்து அவருடைய குளிராடை மேலங்கியை கழற்ற உதவி செய்துகொண்டிருக்கும்போதே  வாயிற்கதவின் மணி அடுத்த விருந்தாளியின் வரவை சொல்லி ஒலிக்கவும், அவள் உடனே அவரை வரவேற்க உஷ்ணப்படுத்தப்படாத வெளிவறாண்டாவை தாண்டிப்போய் கூட்டிவர வேண்டியிருந்தது. நல்லவேளையாக அவளுக்கு பெண் விருந்தாளிகளை கவனிக்க வேண்டிய பணி கொடுக்கப்பட்டிருக்கவில்லை. அதை செல்வி.கேட் டும் செல்வி.ஜூலியாவும் ஒப்புக்கொண்டு மாடியிலிருந்த விசாலமான குளியலறையையே பெண் விருந்தாளிகளின் அலங்கரிப்புகளுக்கு உபயோகப்படுத்திக்கொண்டார்கள். செல்வி.கேட் டும் செல்வி. ஜூலியாவும்   வந்தோரிடம் சிரித்து முகமன்கள் கூறியும் குசுகுசுவென பொரணிகளை பேசிக்கொண்டும்  மாடி படிக்கட்டு அருகே இங்கும் அங்கும் போய் வந்து ஓடிக்கொண்டும் கீழே பார்த்து லில்லியிடம் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என கேட்கவுமாயிருந்தனர்.
செல்வியர்.மோர்க்கன்  நடத்தும் வருடாந்த நடன நிகழ்வு எப்போதுமே மிகவும் பேசப்பட்டதும் சிறப்பானதுவும் ஆகும்.  குடும்ப அங்கத்தினர்கள்,சுற்றத்தினர்கள், தெரிந்தவர்கள்,குடும்பத்தின் நண்பர்கள்,ஜூலியாவின் சேர்ந்திசை பாட்டுக்குழு அங்கத்தினர்கள்,கேட் டின் வளர்ந்த மாணாக்கர்கள்,மற்றும் மேரி ஜேனின் மாணவர்களும் என எப்போதும் சிறப்பான கூட்டமாக சேர்வார்கள். நினைத்து பார்க்கும் போது, பலவருடங்களாக இம்மாதிரியே கூட்டம் கூடி அபாரமாக கொண்டாடினார்களே ஒழிய ஒரு வருடத்தில்கூட கூட்டம் குறைந்ததேயில்லை.
கேட் மற்றும் ஜூலியாவின் சகோதரன் பேட் இறந்த பின்பு, அண்ணனின் ஒரே மகளான மேரி ஜேனையும்  ஸ்டோனி பேட்டர் பகுதியிலிருந்த வீட்டிலிருந்து கூட்டிக்கொண்டு வெளியேறி அஷ்ஷர் தீவிலிருக்கும் இந்த அழகற்ற இருண்மையான வீட்டிற்கு குடி வந்தனர்.திருவாளர். புல்ஹாம் அவர்களிடமிருந்து இந்த வீட்டின் மேல் மாடி முழுவதையும் வாடகைக்கு எடுத்துக்கொண்டார்கள். கீழ்தளத்தில் சோள அரவையகம் இருந்தது. அவர்கள் இங்கு வந்தும் முப்பது வருடங்கள் ஆகிப்போனது.இங்கு சிறுபெண்ணாக சிற்றாடைகளை அணிந்து வந்த மேரிஜேன் தற்போது இந்த இல்லத்தின் அச்சாணியாக மாறியிருந்தாள்.
இசைக்கழகத்தில் முறையாக பயின்றிருந்த அவள் ஹேடிங்டன் சாலை வளாகத்தில் இசை மேசையை பொருத்தி வைத்திருந்து ,  வருடாவருடம் மாணவர்களுக்கு இசைப்பாடத்தை புகட்டி அவர்களின் இசை நிகழ்ச்சியை பாரம்பரிய இசை கழக கட்டிடத்தில் நடத்தி வந்தாள்.கிங்ஸ்டவுன் மற்றும் டால்க்கீ லைனை சேர்ந்த பல மேல்தட்டு குடும்பங்களின் பிள்ளைகள் இவளது மாணவர்களாவார்கள்.வயது முதிர்ந்தவர்களானாலும் அவளது அத்தைமார்களும் இசைப்பாடத்தில் உதவினார்கள்.முதியவளாயிருந்தாலும் ஜூலியா இன்றும் உச்ச ஸ்தாயியில் பாடும் திறன் பெற்றவளாயிருந்தாள்.
கேட் அவ்வளவிற்கு மேல் ஷட்ஜம சாரீரம் பெறாவிட்டாலும், ஆரம்ப கட்ட மாணவர்களுக்கு பின்புற அறையிலிருந்த ஒரு புராதன பியானோ வில் பாடம் சொல்லிக்கொடுத்தாள். மேற்பார்வையாளரின் மகளான லில்லி அவர்களது வீட்டுவேலைகளை கவனித்துக்கொண்டாள்.
எளிமையான வாழ்க்கைமுறையை அவர்கள் கடைபிடித்தாலும்  உணவுவிஷயத்தில் சிறப்பாகவே இருந்தார்கள்.நல்லி எலும்போடு கூடிய மாட்டு தொடைக்கறி,மூன்று ஷில்லிங்க்கு கிடைக்கும் தரமான டீத்தூள்,சிறப்பான சீசாவில் அடைக்கப்பட்ட விஸ்கி போன்ற வஸ்துகளை துல்லியமாக வாங்கிவரும் லில்லி உணவு விஷயங்களில் தவறே செய்வதில்லையாதலால்  அவளது மூன்று எஜமானிகளிடம்  நல்ல பெயரையே வாங்கியிருந்தாள். அவர்கள் கலவரப்படக்கூடியவர்கள்தான், ஆனால் வேறு பிரச்சனைகள் ஏதுமில்லை. அவர்களால் தாங்கமுடியாதது பதிலுக்கு பதில் கொடுப்பது மட்டும்தான்.

அவர்கள் கலவரமடைய காரணம் பத்து மணியாகியும்  கேபிரியலும் அவரது மனைவியும் வந்து சேராததால்தான். மேலும் பிரட்டி மாலின்ஸ் போதையோடு வந்து சேர்வானே என்பதாலும்தான். அப்படியான சூழலில் மேரி ஜேனின் மாணவர்கள் அவனை பார்த்துவிடக்கூடாது , ஏனெனில் அம்மாதிரிசூழலில் அவனை கட்டுப்படுத்தவே முடியாது . அவன் எப்போதும் தாமதமாகவேதான் வருவான், ஆனால் கேபிரியேல் ஏன் இப்படி காலதாமதப்படுத்துகிறான் என யோசித்து குழம்பி அதனால் அடிக்கடி மாடி விளிம்பு கிராதியருகே வந்து லில்லியை நோக்கி கேபிரியேலும் பிரட்டியும் வந்துவிட்டனரா என கேட்டவண்ணமிருந்தனர்.

“ஓ திருவாளர் கான்ராய் அவர்களே,இரவுவந்தனங்கள் திருமதி, கான்ராய், நீங்களிருவரும் வரவே மாட்டீர்களோ என செல்வி. கேட் டும் செல்வி.ஜூலியாவும் பயந்துகொண்டேயிருந்தார்கள்” என முகமன் கூறியவாறே லில்லி வெளிக்கதவை திறந்து அவர்களை வரவேற்றாள்.
” ஆமா அவங்க பயந்திருப்பாங்கதான், ஆனா என் மனைவி தன்னை அலங்கரித்துக்கொள்ள மூன்று மணிநேரத்தை எடுத்துக்கொண்டது அவங்களுக்கு தெரியாதில்லையா” என்றார் கேபிரியேல்.
அவர் மிதியடியில் தனது பனி சப்பாத்துகளை தேய்த்து பனித்துகள்களை தட்டிவிடும்போது , லில்லி அவரது மனைவியை படிக்கட்டுக்கடியில் கொண்டு நிறுத்தி மேல்நோக்கி,
“செல்வி கேட்,திருமதி. கான்ராய் வந்திருக்கிறார்” என கூவினாள்.
கேட் டும் ஜூலியாவும் சத்தம்கேட்டு உடனடியாக விரைந்து படிக்கட்டிலிறங்கி வந்து கேபிரியலின் மனைவியை முத்தமிட்டனர். மேலும் கேபிரியல் உடன் வந்திருக்கிறாரா,குளிரில் விறைத்துப்போயிருப்பதைப்போல் உள்ளதே எனவும் வினவினர்.
” நான் நல்லாத்தான் இருக்கேன் கேட் சித்தி ,மேலே போங்க பின்னாலேயே வர்றேன்” என கேபிரியேல் இருட்டிலிருந்து உரக்க சொன்னார்.
அவர் தனது கால்சப்பாத்துக்களை  விரைந்து  தேய்த்து கொண்டிருந்தபோது மூன்று பெண்மணிகளும் சிரித்து பேசியபடியே மேலேறி பெண்மணிகளின் அலங்கரிப்பறைக்கு சென்றனர். அவரது வெளி மேலங்கியின் தோள் பட்டை பகுதியில், பனித்துகள்கள் குவியலாக படிந்திருந்தது. பனிச்சப்பாத்துகளின் முனைகளில் வளையமாக பனி படர்ந்திருந்தது.வெளி மேலங்கியின் பொத்தான்களை விடுவிக்கும்போது கம்பளியாடையின் பனி விறைப்பால் கீச்சொலி எழுந்தது.வெளிப்புறத்து  சில்லென்ற பனிக்காற்றின் சுகந்தம் உடையின் மடிப்புகளிலிருந்து வெளியேறியது.
” தற்போது மறுபடியும் பனி பெய்கிறதா திரு.கான்ராய்? என்றாள் லில்லி.
லில்லி அவருக்கு முன் வரவேற்பறைக்கு சென்று அவரது வெளி மேலங்கியை கழற்ற உதவினாள்.
அவளது கேள்வியை கேட்டு புன்னகைத்தவாறே கேபிரியல் அவளை நோக்கினார்.
மெலிந்த, வளரும்பெண், வெளிறிய நிறத்தவள்,வைக்கோல் நிற கேசத்தை உடையவள்.
உக்கிராண அறையின் வெப்பமூட்டியின் நீராவிபுகையில் அவள் மேலும் வெளிறி தோற்றமளித்தாள். கேபிரியேலுக்கு, அவள் படிக்கட்டில் உட்கார்ந்துகொண்டு பொம்மையோடு விளையாடும் சிறுகுழந்தையாக இருந்த காலம் முதல் அறிமுகம்தான்.
” ஆமா லில்லி” என பதிலளித்தார்.
” இன்றிரவு முழுக்க பெய்யும் என நினைக்கிறேன்”
மேல்தளத்தில் இருந்த பலரின் காலடியோசையால் அதிர்ந்த உக்கிராண அறையின் விதானத்தை பார்த்தபடியே பியானோ வின் இசை சத்தம் கேட்கிறதா என யோசித்தார். தனது வெளிமேலங்கியை பதனமாக மடித்து அலமாரி மூலையில் வைக்கும் லில்லியை கேட்டார்,
” சொல்லு லில்லி, நீ இன்னும் பள்ளிக்கு போகிறாயா?”
“ஓ இல்லை ஐயா, பள்ளிபருவத்தை முடிச்சாச்சு”
” ஓ. அப்படியா, அப்ப வரும் நாட்களில் உனது மனம் கவர்ந்தவனோடு உனது திருமணத்தை நாங்கள் காணப்போகிறோம்ன்னு சொல்லு”
என குஷியாக கேபிரியல் சொன்னார்.
அவள் மிகுந்த சலிப்போடு அவரை திரும்பி பார்த்து
“இப்போதைய ஆண்கள் வெறும் பெரிய பேச்சுகளை பேசுவதற்கும், நம்மிடமிருந்து எதை பெறலாம் என நினைப்பவர்களாகவும் தான் இருக்கிறார்கள்” என்றாள்.
முகம் சிவந்து துணுக்குற்ற கேபிரியேல் தவறாக பேசிவிட்டோமோ என நினைத்தபடி அவள் முகத்தை பார்க்காமல் தனது பனி சப்பாத்துகளை உதறிவிட்டு உள்ளே அணிந்திருந்த தனது கைதையல்வேலை செய்திருந்த தோல் காலணியை தனது கம்பளி கழுத்து பட்டி துணியால் உதறி துடைக்கலானார்.
அவர் உயரமான சற்று தடித்த இளைஞர். கன்னக்கதுப்புகளில் தெரிந்த செந்நிறம் நெற்றிமேட்டின் உச்சிவரை படர்ந்து வெளிறிய செம்மையை காட்டியது. அவரது மென்மையானதும்,அலைவதுமான கண்களை பொன் முலாம் பூசிய விளிம்புள்ள கண் கண்ணாடி அங்கரித்தது. அவரது பளபளக்கும் கேசத்தை நடு வகிடு எடுத்து  காதுகளுக்கு பின்  சுருண்டு வீழுமாறு வாரியிருந்தார்.அவரது தொப்பிக்கு கீழே கேசம் சுருள் வடிவாக படிந்திருந்தது.
தனது தோல் சப்பாத்து காலணியை மெருகேற்றியபின்னர் தனது கனத்த திரேகத்தின் மீது இடை மேலங்கியை  இழுத்து விட்டுக்தொண்டார். பின்பு தனது சட்டையிலிருந்து ஒரு நாணயத்தை விரைந்து எடுத்தார்.
” ஓ. லில்லி “என்றவாறே அவளது கையில் திணித்தபடியே
” இது கிருஸ்துமஸ் காலமல்லவா?அதனால்.. .
ஒரு சிறிய….”
கொடுத்துவிட்டு வேகமாக கதவை நோக்கி நடந்தார்.
” ஓ இல்லை ஐயா,

என சத்தமிட்டபடியே பின்தொடர்ந்தவள்,

“உண்மையாகவே இதை என்னால் பெற்றுக்கொள்ள முடியாது ஐயா” என்றாள்.
படிக்கட்டுகளை நோக்கி ஓட்டமும் நடையுமாக சென்றுகொண்டிருந்த கேபிரியல் அவளை பார்த்து சமாதானமாக தடுப்பதைபோல கைகளை அசைத்து, ” சரி சரி இது கிருஸ்துமஸ் நேரம்,கிருஸ்துமஸ் நேரம் “
என்றார்.
படிக்கட்டுகளில் ஏறி கடந்துவிட்டவரை பார்த்து அப்பெண்,
” நல்லது, நன்றி ஐயா” என்றாள்.
நடனமாடும் பெண்மணிகளின்  கவுன்களின் சரசரப்பையும் கால்களின் சத்தத்தையும் ,வால்ட்ஸ் நடன இசையும் முடிவுக்கு வரட்டும் என நினைத்து வரவேற்பு கூடத்திற்கு முன் சென்று நின்றார்.அந்த பெண்ணின் சலிப்பான மற்றும் திடுக்கிடும் பதிலால் சற்றே நிலைகுலைந்துதான் போயிருந்தார்.அதனால் ஏற்பட்ட அசௌகரியத்தை மறைக்க தனது முழுகை சட்டையின்  கைபொத்தான் குமிழ்களையும் கழுத்து பட்டியையும் சரி செய்தவாறு இருந்தார். பின்னர் தனது இடுப்புஅங்கியிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்து அதில் எழுதியிருந்த தனது வரவேற்பு உரையை சரிபார்த்தார்.கவி ராபர்ட் பிரவுனிங் பற்றி சொல்லியிருப்பது கேட்பவர்களுக்கு புரியுமா என சந்தேகம் கொண்டார். சில ஷேக்ஸ்பியர் வரிகளும் பாடல்வரிகளும் அவர்களுக்கு தெரிந்திருக்கலாம். நறுவிசற்ற முறையில் நடனமாடும் இந்த ஆண்களின் கலாச்சாரத்தின் தரத்தை, தனதிலிருந்து வித்தியாசப்படுவதை உணர்ந்தார்.அவர்களுக்கு புரியாத கவிதைகளைப்பற்றி பேசி தன்னை முட்டாளாக்கி கொள்வதுதான் நடக்கும் என்றும்   தனது மேட்டிமையான படிப்பை பீற்றிக்கொள்வதாகவும் நினைத்துக்கொள்வர். கீழே உக்கிராண அறையில் அந்த பெண்ணிடம் தோற்றது போல இவர்களிடம் தோற்கவேண்டி வரும். அவரது உரையின் மொழிபு  முதலிலிருந்து முடிவுவரை வேறு கோணத்திலும், முற்றிலும் தவறாகவும் இருந்தது.
அப்போது அவரது சித்திகளும் அவரது மனைவியும் பெண்டிர்களின் அலங்கரிப்பறையிலிருந்து வெளி வந்தனர்.சித்தியர் இருவரும் குள்ளமாகவும் எளிய படோடோபமற்ற உடைகளை அணிந்தவர்களாயிருந்த முதியவர்கள்.ஜூலியா சித்தி மற்றவரை விட ஒரு இஞ்ச் உயரமாகவும், காதோடு படிய வாரிய அவரது கேசம் நரைத்துமிருந்தது. தொங்கு சதையோடு கூடிய அவரது முகம் அகன்றிருந்தது. தடித்த உடலோடு நேராக நின்றிருந்தாலும் அவரது மெதுவாக பார்க்கும் கண்களும் லேசாக திறந்திருந்த உதடுகளாலும், எங்கு இருக்கிறோம் எங்கு போகப்போகிறோம் என தெரியாத தோற்றத்தை அவருக்கு அளித்தது.
கேட் சித்தி மற்றவரைவிட சற்று சுறுசுறுப்பானவர். அவரது முகம், தனது சகோதரியின் சுருக்கங்கள் வாய்ந்த சுருங்கிபோன ஆப்பிள் போன்ற முகத்தைகாட்டிலும் ஆரோக்கியம் மிகுதியாயிருந்தது. சம்பிரதாயமான முறையில் பின்னலிடப்பட்டிருந்த அவரது கூந்தல் பழுப்பு கொட்டை நிறத்தில் பிரகாசித்தது.
அவர்களிருவரும் கேபிரியலை அன்பாக முத்தமிட்டு வரவேற்றனர்.  கேபிரியல் அவர்களின் இறந்துபோன மூத்த அக்காள் எல்லனின் ஒரே மகனும் இவர்களின் பிரியத்திற்கு உரிய மகனுமாவார்.துறைமுக பகுதியை சேர்ந்த T.J. கான்ராய் என்பவரைத்தான் எல்லன் மணம் புரிந்திருந்தார்.
”  கிரேட்டா, மோன்க்ஸ்டவுனுக்கு இன்றிரவே வாடகை வண்டி பிடித்து திரும்பப்போவதில்லை தானே,என்ன கேபிரியல்” என கேட் சித்தி கேட்டாள்.
” இல்லை” என கூறியபடியே தனது மனைவியை திரும்பி பார்த்தவர்
” போனவருடம் அப்படி திரும்பிப்போய்தான் சரியாக அனுபவிச்சோம் இல்லையா கேட் சித்தி,கிரேட்டாவுக்கு சரியான சளித்தொந்திரவு ஏற்பட்டதே?
மெர்ரியன் பகுதியை நாங்கள் கடக்கும் போது வாடகை வண்டியின் லொடலொடத்த கண்ணாடி ஜன்னல்கள் வழியே வீசிய கீழைக்காற்று கிரேட்டாவிற்கு மோசமான சளிப்பிரச்சனையை உருவாக்கியது. பெரிய ரோதனையா போச்சு” என்றார்.
கேட் சித்தி தலையை அசைத்துக்கொண்டே ஒவ்வொரு வார்த்தையையும் கூர்ந்து கேட்டார்.
” உண்மைதான் கேபிரியல் உண்மைதான்,
நீ ரெம்ப ஜாக்கிரதையாகவும் இருக்கமுடியாது” என்றாள்.
“ஆனால் கிரேட்டாவை அனுமதித்தால் அவள் இந்த பனிப்பொழிவில் கூட நடந்தே வீடு போய் சேர்ந்துவிடுவாள்” என்றார் கேபிரியல்.
இதைக்கேட்டு திருமதி. கான்ராய் நகைத்தாள்.
” அவர் சொல்வதை நம்பாதீர்கள் கேட் அத்தையே” என்றபடியே
“இவரு தொந்திரவை தாங்கவே முடியாது, டாம் பையனுக்கு கண்மறைப்பானாக பச்சை துணியை போட்டும் உடற்பயிற்சிக்காக எடை இரும்புகளை தூக்கவைத்தும் ஈவா பெண்ணிற்கு குடிக்க சத்து மாவு சாற்றையும் கொடுத்து வம்படிப்பார்.அந்த பாவப்பட்ட குழந்தை அதை பார்க்கவே சகிக்கமாட்டாள்!….ஓ இந்த நிகழ்விற்காக என்னை என்ன உடை அணிய சொன்னார் என உங்களால் ஊகிக்கவே முடியாது!” என்றபடியே கொல்லென சிரித்தபடியே கணவனை பார்த்தாள்,அவர் சந்தோஷமாக அவளது ஆடையையும் அவளது முகத்தையும் கேசத்தையும் பார்த்து சித்தபடியிருந்தார்.அவரது இரு சித்திகளும் வாய்விட்டு மனமாற சிரித்தபடிதானிருந்தனர்.
கேபிரியலின் அக்கறைகளைபற்றி அவர்கள் எப்போதும் கேலி செய்து சிரிப்பார்கள்.

“பனி சப்பாத்துகள்” என்றாள் திருமதி.கான்ராய்.

” இதுதான் இப்பத்திய புது விஷயம்,எப்போதெல்லாம் பனியீரம் அதிகமாக உள்ளதோ அப்போதெல்லாம் இதை அணிய வேண்டும் என அடம் பிடிப்பார். இன்று இரவுகூட அதை போட்டுக்கொள்ள சொல்லி வற்புறுத்தினார் , நான் முடியாதென சொல்லிவிட்டேன்.அடுத்ததாக நீர்மூழ்கி ரப்பர் உடைதான் வாங்கி கொடுப்பார் போலிருக்கிறது “
கேபிரியேல் தளர்வாக சிரித்தபடியே தனது கழுத்து பட்டியை தட்டிக்கொண்டார், அதேசமயம் கேட் சித்தி இதை கேட்டு குலுங்கி சிரித்து மிகவும் சந்தோஷப்பட்டுக்கொண்டாள்.  ஜூலியா சித்தியின் புன்னகை தேய்ந்து , அதன்பின் அவளது உணர்ச்சியற்ற கண்களால் தனது தமக்கை மகனை நோக்கி மெதுவாக கேட்டாள்,
“கோலோஷ்கள் என்றால் என்ன கேபிரியல்?”
“கோலோஷ் தெரியாதா ஜூலியா! ” என ஆச்சரியப்பட்ட அவளது சகோதரி,
 “கோலோஷ் ன்னா என்னன்னு தெரியாதா உனக்கு? நீ உனது சப்பாத்துகளின் மேல்…. அணிந்துகொள்ளும் பனி மேல்சப்பாத்துகள்தான்,
இல்லையா  கிரேட்டா?
 “ஆம் ” என்றாள் திருமதி. கான்ராய்.
“அது தொந்திரவு புடிச்ச பொருள்கள்.நாங்கள் இருவரும் ஒவ்வொரு ஜோடியை இப்போது வைத்திருக்கிறோம்.இந்த கண்டத்தில் எல்லோருமே இதை அணிகிறார்கள் என கேபிரியல் சொல்கிறார் “
“ஓ ,இந்த கண்டம் முழுதிலுமா”  என முணுமுணுத்தபடியே ஜூலியா சித்தி தலையை மெதுவாக அசைத்துக்கொண்டாள்.
கேபிரியல் தனது புருவங்களை நெறித்தபடியே லேசாக கோபப்படுவதைப்போல முகத்தை வைத்துக்கொண்டு,
“இதில் ஆச்சரியப்பட ஒன்னுமில்லை,ஆனால்  கிரேட்டாவிற்கு வினோதமாக இந்த பெயர் இசைக்குழுவான கிரிஸ்டி மின்ஸ்ட்ரல்களின்  பெயரை ஞாபகப்படுத்துகிறதாம்.” என்றார்.
“அதுசரி சொல்லு கேபிரியேல்”எனஉரக்க கேட்ட கேட் சித்தி
“தங்கும் அறையை நீ பார்த்தாய்தானே. கிரேட்டா சொல்லிகிட்டிருக்கா….”
“ஓ அறையெல்லாம் பரவாயில்லை”என பதிலிறுத்த கேபிரியேல்
“கிரிஷேம் பகுதியில் ஒன்றை எடுத்துள்ளேன்.”
” உறுதிபடுத்திக்கொள்ளத்தான்” என்ற கேட் சித்தி
” எடுத்துக்கொண்டதுதான் சிறந்த விஷயம், குழந்தைகளை பற்றி ஏதும் சஞ்சலப்படுகிறாயா கிரேட்டா?”
“ஓ. ஓரிரவுதானே” என்ற திருமதி.கான்ராய்,
” பெஸ்ஸி அவர்களை மேற்பார்வையிட்டுக்கொள்வாள்”
“உறுதிப்படுத்திக்கொள்ளத்தான்” என மறுபடியும் சொன்ன கேட் சித்தி,
“இந்த மாதிரி நம்பிக்கையான பெண் பார்த்துக்கொள்ள இருப்பது எவ்வளவு வசதி! இங்க பாரு இந்த லில்லியை, சமீபகாலமா இவளுக்கு என்ன ஆச்சுன்னே எனக்கு தெரியலே. முதலில் இருந்தது போல் இப்போது இல்லை”
கேபிரியல் இதைக்குறித்து சில கேள்விகளை சித்தியிடம் கேட்கலாம் என முனைந்தபோது, அவள் தனது சகோதரி நகர்ந்து சென்று படிக்கட்டு கிராதியை பிடித்துக்கொண்டு கீழே கழுத்தை வளைத்து பார்த்துக்கொண்டிருந்ததை கண்டு,
” இப்ப ஜூலியா எங்க போகிறாள்?
ஜூலியா எங்கே போகிறாய்?” என சற்று எரிச்சலாய் கேட்டாள்.
பாதி படிக்கட்டுகள்வரை இறங்கிய ஜூலியா மீண்டும் மேலேறி வந்து மெதுவாக அறிவித்தாள்:
“பிரெட்டி இதோ வந்தாச்சு”
அதே சமயம் உள்கூடத்தில் பியானோ வாசிப்பாளர் முற்றாய்ப்பாக வாசித்து முடித்ததால் எழுந்த கைதட்டல் ஒலியால் வால்ட்ஸ் நடனம் முடிந்தது என அறியமுடிந்தது. உள்கூட கதவை திறந்துகொண்டு சில ஜோடிகள் வெளியே வந்தனர்.கேட்சித்தி கேபிரியேலை அருகேயிழுத்து அவர் காதில் கிசுகிசுத்தாள்:
“இறங்கி போ கேபிரியேல்,உனக்கு புண்ணியமா போகட்டும்,அவன் நிதானத்துல இருக்கானான்னு பாரு, குடிச்சிருந்தான்னா அனுமதிக்காதே. அவன் குடிச்சுத்தானிருப்பான். எனக்கு நல்லா தெரியும்.”
கேபிரியல் கிராதியருகே சென்றபோது உக்கிராண அறையில் இருவர் பேசும் குரல்களை கேட்க முடிந்தது. பின்பு பிரட்டி மாலினி ன் சிரிப்பை அடையாளம் கண்டுகொண்டார். வேகமாகவும் சத்தத்தோடும் படியிறங்கினார்.
“இது பெரிய நிம்மதி”என கேட் அத்தை திருமதி.கான்ராயிடம் சொன்னாள்.
“கேபிரியேல் இங்கு இருப்பது என் மனதுக்கு உவப்பாக இருக்கு…..
ஜூலியா,அதோ செல்வி.டேலியும் செல்வி.பவரும் வர்றாங்க பாரு,அவங்களுக்கு குடிக்க ஏதாவது கொடு,
உனது அழகான வால்ட்ஸுக்கு நன்றி செல்வி.டேலி அது சிறப்பாயிருந்தது”
 வெளிர்பழுப்பு நிறமுடைய தோலால் முகச்சுருக்கங்களையுடைய ஒரு உயரமான ஆள் தனது கூட்டாளியுடன் வெளியே வந்தார். அவருக்கு கனத்த மீசையுமிருந்தது. அவர்
“எங்களுக்கும் புத்துணர்ச்சி பானம் எதாவது கொடுங்களேன் செல்வி.மோர்க்கென்?”
“ஜூலியா” என அழைத்த கேட் சித்தி
இதோ திரு.பிரவுனும் செல்வி.பர்லாங்கும் இவர்களை செல்வி. டேலியுடனும் செல்வி.பவருடனும் சேர்த்து உபசரி” என்றாள்.
” பெண்மணிகளுக்கான ஆள் நான்தான்”என்ற திரு. பிரவுன் தனது உதடுகளைஅழுத்தி தனது முகசுருக்கங்கள் அனைத்தும் பொங்க சிரித்ததில் அவரது மீசை சிலிர்த்தது.
“பெண்கள் அனைவருக்கும் என்னை பிடித்துப்போக காரணம் என்னவென்று தெரியுமா செல்வி.மோர்க்கென்—“
அவர் முடிப்பதற்குள் கேட் சித்தி கேட்கும் தொலைவை தாண்டி சென்று விட்டதால் மூன்று இளம்பெண்களையும் அழைத்துக்கொண்டு உள்அறைக்கு சென்றார்.
அறையின் நடுவே இரு சதுர மேசைகளை வைத்து அதில் பெரிய துணி விரிப்பை ஜூலியா சித்தியும் மேற்பார்வையாளும் போட்டுக்கொண்டிருந்தனர். ஓரத்திலிருந்த அலமாரியில் தட்டுகளும் கண்ணாடி கோப்பைகளும் சாப்பாட்டு கத்திகளும் முள்கரண்டிகளும் உணவுக்கரண்டிகளும் தட்டுமுட்டு பீங்கான் சாமான்களாலும்
 நிறைந்திருந்தது.மூடப்பட்டிருந்த சதுர பியானோவின் மேல் பகுதியிலும் உணவு பொருட்களாலும் இனிப்பு வகைககளாலும் அடுக்கப்பட்டிருந்தது. மற்றபக்கமிருந்த சிறு அலமாரியருகே நின்ற இரு இளைஞர்கள் கலவைமது வை கோப்பைகளில் அருந்திக்கொண்டிருந்தனர்.

திருவாளர்.பிரவுன் தன்னோடு கூட்டிச்சென்ற இளம் பெண்களுக்கு , மகளிர் அருந்தக்கூடிய இனிமையும் போதையும் உரப்பும் உள்ள ஒயின் வகைகள் ஏதாவது தரட்டுமா என நகைச்சுவையோடு வினவினார். அவர்கள் லாகிரி பானங்கள் அருந்துவதில்லை என சொன்னதால் மூன்று எலுமிச்சை சாற்று போத்தல்களை கொடுத்துவிட்டு அதன்பின் அங்கே நின்றிருந்த இளைஞனை ஒதுங்க சொல்லிவிட்டு கிரிஸ்டல் வடிகலத்திலிருந்த விஸ்கியை தனது தம்ளரில் தாராளமாக விட்டுக்கொண்டார். பரிசோதிப்பாக அவர் அருந்த ஆரம்பித்ததை அவ்விளைஞன் மரியாதையோடு பார்த்தான்.

” கடவுளென்னை காக்கட்டும்”என புன்னகைத்தபடி
” இது மருத்துவரின் ஆணை” என்றார்.
முதிய சுருங்கிப்போன அவரது முகம் பெரும் புன்னகையால் விரிவடைந்தது,உடனிருந்த மூன்று இளம்பெண்கள் அவரது நகைச்சுவையை கேட்டு தோள் பட்டைகள் குலுங்க உடலசைத்து கிளுகிளுத்து சிரித்தபோது அவர்களின் உடலசைவு இசை நடனம் போலிருந்தது.
துணிச்சல்காரியான ஒருத்தி சொன்னாள்:
” ஓ, திரு.பிரவுன் அதுபோல எந்த மருத்துவரும் ஆணையிட்டிருக்கமாட்டார் என்பது உறுதி”
திரு.பிரவுன் தனது விஸ்கியை இன்னொரு மடக்கு அருந்தியபடியே அடங்கிய பலகுரல் பேச்சாக சொன்னார்:
” நல்லது,இப்போது பார்த்தால், நானும் புகழ்வாய்ந்த திருமதி. கேஸ்ஸிடி போலத்தான்,அவர் சொன்னதாக,
“மேரி கிரைம்ஸ்,நான் இதை எடுத்துக்கொள்ளாமலிருந்தால் எடுத்துக்கொள்ள வைத்துவிடு, நான் அதை விரும்புவேன் எனத்தான் நினைக்கிறேன்”
கன்றி சிவந்த முகத்தோடு மிக மிதமான டப்ளின் பிராந்திய உச்சரிப்பில் அவர் முன்நகர்ந்து ரகஸ்யமாக பேச முற்பட்டதும் அப்பெண்கள் ஒருமித்த உள்ளுணர்வால் மௌனமாக கேட்டனர்.
மேரிஜேனின் மாணவியான செல்வி. பர்லாங், செல்வி. டேலியை பார்த்து அவளிசைத்த அழகான வால்ட்ஸின் பெயரென்ன என கேட்டாள்;
தன்னை பொருட்படுத்தவில்லை என்பதை பார்த்த திரு.பிரவுன் தன் பேச்சை கவனமுடன் கேட்ட இரு இளைஞர்களின் பக்கம் திரும்பினார்.
பூவலங்கார கவுன் அணிந்த சிவந்த முகத்தையுடைய பெண்ணொருத்தி  அறைக்குள் விரைந்து வந்து கைகளை தட்டியபடியே கூவினாள்:
“நாலு ஜோடி நடனம்! நாலு ஜோடி நடனம்!”
அவளை பின்தொடர்ந்து  வந்த கேட் சித்தி சத்தமாக,
” இரண்டு ஆடவரும் மூன்று பெண்களும் வேணும் மேரிஜேன்!”
” ஓ இதோ திரு.பெர்ஜின் மற்றும் திரு.கெரிகன் ” என்றாள் மேரிஜேன்.
“திரு. கெரிகன் அவர்களே நீங்கள் செல்வி. பவரோடு சேர்ந்துகொள்கிறீர்களா? செல்வி. பர்லாங் உங்களுக்கான ஜோடியாக திரு. பெர்ஜின்.
சரிதான் இப்போதைக்கு இது போதும்.”

‘மூன்று பெண்கள்,மேரி ஜேன்’ என்றாள் கேட் சித்தி.

இரு இளைஞர்களும் தங்களோடு நடனமாட விரும்ப்பம்தானா என அந்த பெண்களை கேட்டுக்கொண்டிருந்தபோது,
மேரிஜேன் செல்வி. டாலியின் பக்கம் திரும்பி
” ஓ,செல்வி.டாலி நீங்கள் கடந்த இரு நடனங்களிலும் மிக அருமையாக ஆடினீர்கள்,ஆனாலும் இன்றைய இரவு விருந்து நடனத்திற்கு பெண்கள் குறைவாகவே உள்ளனர்.”
” எனக்கு ஒரு பொருட்டுமில்லை செல்வி. மார்க்கென்”
” நான் உங்களுக்கு நல்ல ஜதையாக திரு.பார்ட்டெல் டி ஆர்சி யை, அதான் பாடகரை இணைக்கிறேன். அவரை பின்பு பாட வைத்துக்கொள்கிறேன். டப்ளின் நகரமே அவரது பாடற்சிறப்பை சிலாகிக்கிறது”
“அற்புத குரல், அற்புத குரல்” என்றாள் கேட் சித்தி.
பியானோ ஆரம்ப கட்ட இசைக்கோர்வையை வாசிக்க ஆரம்பித்தபோது தனது குழுவை மேரிஜேன் அழைத்துக்கொண்டு அறையிலிருந்து வேகமாக நகர்ந்தாள். அவர்கள் போன மறுநிமிடமே ஜுலியா சித்தி அறைக்குள்  நுழைந்தபடியே பின்பக்கத்தில் எதையோ திரும்பித்திரும்பி பார்த்துக்கொண்டாள்.
” என்ன விஷயம் ஜுலியா?” என கேட் சித்தி படபடத்தாள்.
” யார் அது?”
மேஜைவிரிப்புகளை அம்பாரமாக தூக்கி வந்தபடியே ஜுலியா தனது சகோதரியை நோக்கி திரும்பியவள் இந்த கேள்வி அவளை ஆச்சரியப்படுத்தியதுபோல் எண்ணி,
” அது பிரட்டிதான்,கேட்,அவனுடன் கேபிரியேலும் உள்ளான்”
அவளுக்கு பின்பாக கேபிரியேல் பிரட்டி மாலின்ஸை நகர்த்திக்கொண்டு வந்ததை பார்க்க முடிந்தது.அவன் நாற்பது வயது இளைஞன்,கேபிரியேலின் உயரத்தையும் உருவத்தையும் , உருண்டையான தோள்களையும்
கொண்டிருந்தான்.அவனது முகம் சதைபிடிப்பாகவும் வெளிறியும்,காது நுனிகளிலும் மூக்கின் பக்கங்களிலும் மட்டும் நிறமேறியும் இருந்தது.கரடுமுரடான தோற்றமும் மொன்னையான மூக்கும் ,வளைந்த லேசான வழுக்கை தலைமுடியோடும்,தொங்கும் உதடுகளோடும் இருந்தான்.அவனது அடர்ந்த கண்புருவங்களும் கலைந்த தலைமுடியும் பார்வைக்கு அவன் தூக்கக்கலக்கத்தில் இருப்பதைப்போல காண்பித்தது.அவன் படிக்கட்டில் கேபிரியேலுக்கு எதுவோ ஒரு விஷயத்தை சொல்லியபடியே உச்ச ஸ்தாயியில்சிரித்துக்கொண்டு தனது இடது கண்ணை இடது புறங்கையால் முன்னும் பின்னுமாக தேய்த்துக்கொண்டான்.
“நல்மாலை பிரட்டி” என்றாள் ஜுலியா சித்தி.
பிரட்டி மாலின்ஸ் மார்க்கென் சகோதரிகளுக்கு சோம்பலாக மாலைவந்தனங்களை தெரிவித்ததைப்போலிருந்தது அவனது கம்மல் குரலால்தான். அதன்பின் அலமாரியருகே இருந்தபடி  அவனைப்பார்த்து புன்னகைத்த திரு.பிரவுனியை நோக்கி தடுமாறும் காலடிகளை எடுத்து வைத்தபடியே போய் கேபிரியேலிடம் சொன்ன அதே கதையை மறுபடியும் அவரிடம் சன்னமான குரலில் சொல்ல ஆரம்பித்தான்.
“இவன் அவ்வளவு ஒன்னும் மோசம் இல்லேல்லியா?” என கேட் சித்தி கேபிரியேலிடம் கேட்டாள்.
” ஓ இல்லியே,அவ்வளவாக தெரியாது”
” தொந்திரவான ஆளுதான் இப்ப,இல்லையா!” என்றாள்.
“அவனை புதுவருஷ பிரதிக்ஞையாக எடுக்க வைத்தாள் அவனது அம்மா.பாவம்.
அது கிடக்கட்டும் நீ வரவேற்பறைக்கு வா”
கேபிரியேலோடு வெளியேறும் முன்பாக அவள்
திரு. பிரவுனியை பார்த்து ஆள்காட்டி விரலால் சைகை செய்தபோது அவரும் அதற்கு பதிலளிக்கும்முகமாக தலையசைத்தார்.
அவள் போனபின்பு பிரட்டி மாலின்ஸை பார்த்து:
” அப்புறம்,டெட்டீ,
இப்ப உனக்கு ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறு கொடுத்து  தெளியவைக்கப்போறேன்”
தனது கதையின் உச்சகட்டத்தை நெருங்கிக்கொண்டிருந்த பிரட்டி மாலின்ஸ் பொறுமையற்று கையசைத்தபோதும் அதை பொருட்படுத்தாது அவனது கலைந்த ஆடைகளை பற்றி சொல்லிவிட்டு ஒரு தம்ளர் நிறைய எலுமிச்சை ரசத்தை விட்டு கொடுத்தார் திரு. பிரவுனி.
இடது கையால் இயந்திரத்தனமாக அதை பெற்றுக்கொள்ளும்போதே வலது கையால் தனது ஆடையை நீவி விட்டுக்கொண்டான்.
மகிழ்வான மலர்ந்த முகத்தோடுசிரித்ததால் திரு. பிரவுனியின் முகம் சுருக்கங்களால் நிறைந்தது.அவர் தனக்கு ஒரு கிளாஸ் விஸ்கியை நிறைத்துக்கொண்டிருந்தபோது பிரட்டி மாலின்ஸ் தனது கதைமுடிவில் வெடித்து சிரித்தான். அந்த சிரிப்பு சளித்தொந்திரவால் சீழ்க்கையாக ஒலித்தது.குடிக்காமலிருந்த எலுமிச்சை சாறு நிறைந்த தம்ளரை ஓரமாக வைத்துவிட்டு
இடது கண்ணை இடது புறங்கையால் முன்னும் பின்னுமாக தேய்த்துக்கொண்டே கதையின் கடைசி வார்த்தைகளை சிரித்தபடியே சொல்லிக்கொண்டிருந்தான்.
மேரிஜேன் வாசித்துக்கொண்டிருந்த கடினமான உயர் பியானோ இசைக்கோவையை கேபிரியேலால் ரசிக்க இயலவில்லை.
அறையே ஆழ்ந்த அமைதியிலிருந்தது.அவனுக்கு பியானோ இசை பிடிக்கும்தான்,ஆனால் தற்போது வாசித்துக்கொண்டிருக்கும் மெட்டு அவனுக்கானதில்லை.
அறையிலிருந்த மற்றவர்கள் அவளை இசைக்க கெஞ்சியிருந்தாலும் அவர்களுக்கும் புரிந்திருக்குமா? என சந்தேகித்தான்.
உணவு மற்றும் பானங்கள் வைத்திருந்த அறையிலிருந்து இசைஒலியை கேட்டு வந்த நான்கு இளைஞர்கள் சற்று நேரத்திலேயே ஜோடிகளை சேர்த்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டனர்.அந்த இசைக்கோவையை ரசித்தது மேரிஜேன் மட்டுமாகத்தானிருக்கமுடியும்.
அவளது கை விரல்கள் பியானோ கட்டைகளின் மேல் நடனமிட்டும் இசை இடைவெளிகளில் மேலே விலகியும், மந்திரக்காரியின் பூஜையில் சைகைசெய்யும் கைவிரல்களை ஒத்து இருந்தது.பக்கத்தில் நின்றிருந்த கேட் சித்தி இசை சுவடியின் பக்கங்களை திருப்ப உதவினாள்.
தேன்மெழுகிட்டு தேய்க்கப்பட்ட தரைக்கட்டைகள் மேலே தொங்கிய ஜொலிக்கும் ஸ்படிக கண்ணாடி சரவிளக்குககளால் பளபளத்ததை கண்டு கண்எரிச்சல் பட்ட கேபிரியேல் பியானோவுக்கு மேலிருந்த சுவற்றை பார்த்தான்.அதில் ஒருபுறம் ரோமியோ ஜூலியட் நாடக  மாடி முகப்பு காட்சி ஓவியமாக தொங்கிக்கொண்டிருந்தது.
மறுபுறம் உச்சி உப்பரிகையில் கொல்லப்பட்ட இரு இளவரசர்களின் உருவங்களை படமாக , ஜூலியா சித்தி சிறு பெண்ணாக இருந்த போது சிவப்பு நீல பழுப்பு கம்பளி நூல்களை கொண்டு செய்திருந்தாள். அப்போதெல்லாம் இம்மாதிரி வரைவதற்கு பெண்கள் பள்ளியில் ஓராண்டு பயிற்சி கொடுத்திருக்கிறார்கள்.
அவனது பிறந்த நாள் பரிசாக அம்மா செம்பழுப்பு நிற இடைஅங்கியை கம்பிளியையும் பாப்ளின் இழையும் இணைத்து செய்த துணியில் தைத்தாள். அதில் குட்டி நரிகளின் தலையை நூலோட்டத்தில் வரைந்து காக்கி நிற சாட்டின் விளிம்பில் உருண்டையான மல்பெரி பொத்தான்களை வைத்திருந்தாள்.
அவளுக்கு பெரிதாக இசை அறிவு இல்லாதது ஆச்சரியமாக இருந்த போதிலும் கேட் சித்தி அவள்தான் மார்க்கென் குடும்பத்திலேயே மூளைக்காரி என்பாள்.கேட்மற்றும் ஜூலியா சித்தி இருவருக்கும் தங்களது தாய்மை குணமும் தீவிரத்தன்மையும் கூடிய அக்காவை நினைத்து பெருமை கொள்வர். அவளது புகைப்படம் இரு பெரும் ஜன்னல்களுக்கு இடையே இருந்த கண்ணாடி சட்டத்திற்குள் இருந்தது.அதில்  அவள் ஒரு புத்தகத்தை மடியில் விரித்து வைத்து, அதில் எதையோ அவளது காலடியில் மாலுமி உடை அணிந்து அமர்ந்திருந்த கான்ஸ்டன்டைனுக்கு காட்டிக்கொண்டிருந்தாள்.தனது மக்களுக்கு அவள்தான் குடும்ப பெருமைக்கு ஏற்ப பெயர்களை வைத்தவள்.அவளால்தான் கான்ஸ்டன்டைன் தற்போது பால்பிரிகென் நகரத்து தேவாலயத்தில் மூத்த கோவிலதிகாரியாக இருக்கிறார். அவளால்தான் கேபிரியல் தற்போது ராயல் சர்வகலாசாலையில் பட்டம் பெற்று முடிக்க முடிந்தது.தனது திருமணத்தை பற்றிய அவளது எதிர்ப்பை நினைத்து லேசாக முகம் சுருங்கலானான்.அவளது சுடுசொற்கள் கேபிரியேலின் நினைவில் ஆறாமலிருந்தது;
ஒரு முறை அவள் கிரேட்டாவை நாட்டுக்கட்டை என்று சொன்னது கொஞ்சமும் சரியல்ல.மான்க்ஸ்டவுன் வீட்டில் வைத்து அவளது நீண்ட நாள் வியாதியிலும் கடைசிவரை அவளை வைத்து போஷித்தது கிரேட்டா தான்.
மேரிஜேன் அவளது இசைகோர்வையின் முடிவுக்கு வருவதை மறுபடியும் சரணத்தை வாசிப்பதிலிருந்து உணர்ந்து தனது மனக்கொதிப்பிலிருந்து மெதுவாக வெளிவந்தான்.சப்த ஸ்வரங்கள் கீழ் ஸ்தாயியிலிருந்து மத்திமத்திற்கு வந்து முத்தாய்ப்பாய் முடிந்தது.சிறப்பான கைதட்டல் மேரிஜேனுக்கு வழங்கப்பட்டது.வெட்கத்தோடு இசையை முடித்துக்கொண்டவள் அறையை விட்டு தப்பியோடினாள்.பலத்த கைதட்டல் என்றால் ஆரம்பத்தில் அறையைவிட்டு வெளியேறி பான அறைக்கு சென்றுவிட்டு முடியும்போது வந்து சேர்ந்த அந்த நான்கு இளைஞர்களிடமிருந்துதான் வந்தது.

ஆட்ட ஜோடிகள் வரிசைப்படுத்தபட்டனர். கேபிரியேலுக்கு செல்வி.ஐவர்ஸோடு இணை போடப்பட்டது.அவள் வெளிப்படையாக பேசும் வாயாடி இளம்பெண்.பழுப்பு நிற கண்களும் முகத்தில் சிறு சிறு மருக்களையும் உடையவள்.முன்புறம்  தாழ வெட்டிய உடையாக இல்லாமல் உடுத்தியிருந்தாள்.மார்புக்கு மேல் புறம் குத்தியிருந்த அலங்கார தகட்டில் ஐரிஷ் குறியீடும் குறிக்கோளும் பொறிக்கப்பட்டிருந்தது.

நடனம் முடிந்து அவர்கள் அமரும்போது அவள் திடுக்கென கேட்டாள்:
 “எனக்கு உங்களிடம் ஒரு கொக்கி போடவேண்டியுள்ளது”
“என்னிடமா?” கேபிரியவல்.
ஆமென தீவிரமாக தலையாட்டினாள்.
” என்ன அது?” என அவளது ஆழ்ந்த அமைதியை கண்டு புன்னகைத்துக்கொண்டே கேபிரியேல் கேட்டார்.
“கேபிரியல் கான்ராய் யாரு?” என கேட்டபடி  அவரை நோக்கி நேராக பார்த்தாள்.
கேபிரியேல் கன்றி சிவந்து, புரியாமல் தனது புருவங்களை முடிச்சிட முனைந்த போது அவள் சடாரென சொன்னாள்:
ஓ அப்பாவி அமியே ! நீங்கள் டெய்லி எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு எழுதுவதை கண்டுபிடித்துவிட்டேன். இப்போது அதைப்பற்றி உங்களுக்கு வெட்கமாக இல்லையா?”
“நான் ஏன் வெட்கப்படவேண்டும்?”என கண்களை மூடித்திறந்து புன்னகைக்க முயன்றபடியே கேபிரியல் கேட்டார்.
” சரித்தான்,எனக்கு உங்களை பார்த்தால் வெட்ககேடாகத்தான் இருக்கிறது”என வெளிப்படையாக செல்வி ஐவர்ஸ் சொன்னாள்.
“அந்தமாதிரி ஒரு பத்திரிக்கைக்கு எழுதுவதாக சொன்னால்.நான் நீங்கள் ஒரு மேற்க்கு பிரிட்டானியன் என நினைக்கவில்லை.
கேபிரியலின் முகத்தில் குழப்ப களை தோன்றியது.அவர் புதன்கிழமை தோறும் டெய்லி எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் இலக்கிய பக்கத்தில் பத்தி எழுதுவது உண்மைதான்.அதற்காக அவர் பதினைந்து ஷில்லிங்குகள் வெகுமானமாகவும் பெறுகிறார்.ஆனால் இதனால் அவரை மேற்க்கு பிரிட்டானியன் என கூறிவிட முடியாது.இந்த குறைந்த வெகுமானத்தைவிட அவருக்கு படித்து விமர்சிக்க கொடுக்கப்படும் இலக்கிய புத்தகங்களைத்தான் மேலாக மதித்தார்.புதிதாக அச்சடித்த புத்தகங்களை புரட்டி படிக்கவும் மேலட்டைகளை ரசிக்கவும் அவருக்கு பிடிக்கும்.கல்லூரியில் அவரது ஆசிரியவேலை முடிந்ததும் , கிட்டத்தட்ட தினந்தோறும் படகுத்துறை பக்கம் உள்ள பழைய புத்தக கடைகளுக்கும், பேச்சிலர்ஸ் பாதையிலிருக்கும் ஹிக்கீஸ் கடைக்கும்,ஆஸ்டன் படகுதுறையிலிருக்கும் வெப் மற்றும் மேஸ்ஸீஸ் கடைகளுக்கும், இல்லையென்றால் முட்டுச்சந்திலிருக்கும் ஓ’க்லோஹிஸ்ஸி கடைக்கும் போவார்.
அவளது குற்றச்சாட்டை எப்படி நேர்கொள்வது என புரியவில்லை. இலக்கியம் அரசியலுக்கும் மேலே உள்ளது என கூற விரும்பினார். ஆனால் அவர்கள் இருவரும் சர்வகலாசாலை மாணவபருவத்திலிருந்து பின்பு ஆசிரியர்கள் ஆனதுவரை  பலவருட நண்பர்களாதலால் அது அகங்காரமான தொனியாக இருக்கும் என நினைத்து சொல்லாமல் கண்களை சிமிட்டியபடியே சிரிக்க முயற்சித்து கவலையாக, இலக்கிய புத்தக விமர்சனத்தில் நான் எந்தவித அரசியலை பார்க்கவில்லை என முணுமுணுத்தார்.
அவர்களது நடன முறைமையின்போது அதை கவனிக்காமல் குழப்பத்தோடு அவர் இருந்ததை கவனித்த செல்வி. ஐவர்ஸ் அவரது கைககளை கனிவோடு பற்றி நட்பான தணிந்த தொனியில் சொன்னாள்:
 “அட ஆமாம்,நான் வேடிக்கைக்குத்தான் சொன்னேன். வாருங்கள் நாம் இப்போது நடனத்துக்கு போவோம்”
நடனத்தின்போது அவ்ளோ  சர்வகலாசாலையைப்பற்றி பேசியதால் கேபிரியேல் சற்றே லகுவானார். யாரோ அவளது நண்பி இவர் பிரவுனிங்கின் கவிதைகளை விமர்சித்து எழுதியிருந்ததை காட்டியதால்தான் இந்த மர்மம் வெளிவந்தது.ஆனாலும் அவரது விமர்சனம் அவளுக்கு வெகுவாக பிடித்திருந்ததாம்.ஆடிக்கொண்டிருந்தவள் திடுக்கென கேட்டாள்:
“ஓ திரு. கான்ராய்,இந்த கோடை விடுமுறையில் ஆரன் தீவுகளுக்கு ஒரு சுற்றுலா போய் வரலாமா?நாங்கள் அங்கே போய் ஒரு மாதம் தங்கப்போகிறோம். அட்லாண்டிக் கரைப்பக்கம் மிகச்சிறப்பாக இருக்கும்.நீங்கள் கட்டாயம் வரவேண்டும்.
திரு.கிளான்சி,திரு. கில்கெல்லி,மற்றும் கேத்லீன் கீர்னி ஆகியோர் வருகிறார்கள்.கிரட்டாவும் வந்தால்  மிக சிறப்பாயிருக்கும். அவள் சொந்தவூர் கன்னாக்ட் பகுதிதானே?”
“அவளது பெற்றோரின் ஊர் அது” என சுருக்கமாக சொன்னார் கேபிரியேல்.
“அது சரி, நீங்கள் வருவீர்கள்தானே?” என மென்மையாக அவரது தோளை பற்றியபடியே ஆவலாக கேட்டாள்.
” விஷயம் என்னென்னா” என கேபிரியேல், ” நான் போக ஏற்பாடுகளை செய்திருக்கிறேன்—“
” எங்கு போக?”என்றாள் செல்வி.ஐவர்ஸ்.
” அதாவது, நான் ஒவ்வொரு வருடமும் சைக்கிள் பயணமாக ண்பர்கள் சிலருடன் போவது வழக்கம்
“அதுசரி எங்கு?என்றாள் செல்வி. ஐவர்ஸ்.
“அது வந்து,நாங்க எப்பவும் பிரான்ஸ் அல்லது பெல்ஜியம் இல்லேன்னா ஜெர்மனி போவோம்” என தடுமாற்றத்தோடு சொன்னார் கேபிரியேல்.
” உங்களது சொந்த நாட்டு மண்ணை தரிசிக்காமல் ஏன் பிரான்ஸுக்கும் பெல்ஜியத்திற்கும் போகவேண்டும்? என்றாள் செல்வி.ஐவர்ஸ்.
” நல்லதுதான்,” என்ற கேபிரியேல் ” மொழிகளோடு ஒரு பரிச்சயத்திற்காகவும் ஒரு வித்தியாசமான அனுபவத்திற்காகவும்தான்”
” உங்களது மொழியோடு பரிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டாமா- ஐரிஷ் மொழியோடு?” என கேட்டாள் செல்வி.ஐவர்ஸ்.
“ம்ம்ம் ,  அப்படி பார்த்தால் ஐரிஷ் எனது மொழியல்ல தெரியுமா?” என்றார் கேபிரியேல்.
அக்கம்பக்கத்தில் நடனமாடிக்கொண்டிருந்தவர்கள் இந்த குறுக்கு – விசாரணையை காதுகொடுக்க ஆரம்பித்தனர்.இடமும் வலமுமாக திரும்பிப்பார்த்த கேபிரியேல் இந்த சிக்கலினால் தனது நற்சுபாவம் மாறாமலிருக்க சமாளித்தார்.இதனால் அவரது நெற்றிப்பரப்பில் செம்மையேறியது.
“உங்கள் சொந்த நிலத்தை பார்க்க விரும்பவில்லையா?” என தொடர்ந்த செல்வி.ஐவர்ஸ்
” உங்களது நாட்டு மக்களை பற்றி சொந்த நாட்டை பற்றி உங்களுக்கு ஒன்றுமே தெரியவில்லையா?”
“ஓ… உன்னிடம் உண்மையை சொல்லவேண்டுமென்றால்” என திரும்ப பதிலளித்த கேபிரியேல்
” எனது நாட்டைப்பற்றி எனக்கு சலிப்பாக இருக்கிறது,சோர்வடைய வைக்கிறது”
“ஏன்?” என கேட்டாள் செல்வி.ஐவர்ஸ்.
நடனத்தில் இணைந்து நகர்ந்தபோதும் அவர் ஏதும் பதிலளிக்காததால் செல்வி. ஐவர்ஸ் பதமான குரலில் சொன்னாள்:
” ஏனென்றால்,உங்களிடம் பதில் இல்லை”
கேபிரியேல் தனது குழப்பத்தை தவிர்க்க நடனத்தில் தீவிரமானார்.அவளது எரிச்சலான பார்வையால் அவளது கண்களை தவிர்க்கலானார்.நடனத்தின் நீள சங்கிலி வரிசையின்போது தனது கைகளை அவள் அழுந்த பிடித்திருந்ததை உணர்ந்தார்.தனது புருவத்தை உயர்த்தி அவரை கேள்வியாக அவள் பார்த்த போது அவர் புன்னகைத்தார்.நடன சங்கிலி மீண்டும் தொடங்கியபோது அவள் நுனிக்காலில் உந்தி எழுந்து அவர் காதருகே வந்து கிசுகிசுத்தாள்:
” மேற்க்கு பிரித்தானியனே ! “
நடனகுழுவினரின் ஓய்வின்போது அறையின் மூலையில் அமர்ந்திருந்த பிரட்டி மாலின்ஸின் அம்மாவை நோக்கி கேபிரியேல் போனார்.அவள் கனத்த உடலுடனான வயோதிகத்தையும் நரைத்த தலைமுடியையும் கொண்டிருந்தாள். அவளது குரல் தனது மகனின் குரலைப்போலவே கம்மலாக ஒலித்தது,சற்றே அவளுக்கு பேசும்போது திக்கவும் செய்தது.அவளுக்கு பிரட்டி ஒரு பிரச்சனையுமின்றி வந்து கலந்துகொண்டான் என தெரிவிக்கப்பட்டது.கேபிரியேல் அவளிடம் கடல் பிரயாணம் தொந்தரவின்றி நல்லமுறையில் இருந்ததா என கேட்டார்.அவள் தனது மணமான மகளோடு கிளாஸ்கோ வில் வசித்து வந்தாள்.வருடத்திற்கு ஒருமுறை அங்கிருந்து டப்ளினுக்கு வருகைபுரிவாள்.சாவதானமாக அவள் கேபிரியேலிடம் கடல் பிரயாணம் அழகாக இருந்ததாகவும் தலைமை மாலுமி அவளிடம் மிக அனுசரனையாக நடந்துகொண்டதாகவும் தெரிவித்தாள். அவளது மகளின் கிளாஸ்கோ வீட்டை அழகாக பராமரிப்பதைப்பற்றியும் அங்கிருக்கும் பல நண்பர்களை பற்றியும் பேசிக்கொண்டே போனாள்.அவளது நாவாட்டத்தின் இடையே கேபிரியேல் தனக்கும் செல்வி. ஐவர்ஸுக்கும் இடையே நடந்த ரசக்குறைவான நிகழ்வை மறக்க எண்ணினார்.அவள் பெண்ணோ பெண்மணியோ எதுவாக இருந்தாலும் எல்லாவற்றிற்கும் ஒரு இடம் பொருள் இருக்க வேண்டும்.தானும் அப்படி அவளிடம் பதிலளித்திருக்கக்கூடாது.
ஆனால் வேடிக்கைக்குகூட அவள் மேற்க்கு பிரிட்டன் என பலர் முன்னிலையில் சொல்லியிருக்கக்கூடாது அதற்கு அவளுக்கு எந்த உரிமையும் கிடையாது. தனது முயல் கண்களால் முறைத்தபடியே, மற்றவர் முன் தன்னை கேலிப்பொருளாக மாற்றி கிண்டல் செய்ய முயற்சித்தாள்.
வால்ட்ஸ் நடனமிடும் ஜோடிகளினூடே புகுந்து தன்னை நோக்கி வரும் மனைவியை அவர் பார்த்தார்.அருகே வந்து அவரது காதில் சொன்னாள்:
“கேபிரியேல், வழக்கம்போல வாத்து கறியை வெட்டிக்கொடுப்பீர்கள் அல்லவா என கேட் அத்தை கேட்டார்.செல்வி. டாலி பன்றிக்கறியை துண்டு போடுவாள் நான் புட்டிங் கை கவனித்துக்கொள்வேன்”
” சரி” என்றார் கேபிரியேல்.
” இந்த வால்ட்ஸ் நடனம் முடிந்த பின்னர் இளையவர்களை அவள் அனுப்பப்போவதால் மேஜையை நாம் கவனித்து கொள்ளலாம்”
” நீ நடனமாடிக்கொண்டிருந்தாயா?”
என கேபிரியேல் கேட்டார்.
” ஆமாம்.நான் ஆடும்போது நீங்கள் பார்க்கவில்லையா? செல்வி. ஐவர்ஸோடு என்ன சர்ச்சை?”
“சர்ச்சையெல்லாம் ஒன்றுமில்லையே,ஏன்? அவள் ஏதாவது சொன்னாளா?”
“அதுப்போலத்தான்.
நான்
 திரு. டி’ஆர்சி என்ன பாடுகிறார் என ஆராய்ந்துகொண்டிருந்தேன்.
அவர் ஒரு கர்வம் பிடித்த ஆள் என நினைக்கிறேன்”
“அவளோடு சண்டையெல்லாம் ஒன்றுமில்லை” என யோசனையோடு சொன்னவர்,
“அவள் மேற்கு ஐயர்லாந்திற்கு ஒரு சுற்றுலாவிற்கு என்னை வரச்சொன்னதற்கு நான் மறுத்துவிட்டேன்”
அவரது மனைவி கைகளை தட்டியபடியே குஷியாக குதித்தாள்.
“ஓ, தாராளமாக போகலாமே கேபிரியேல்” என கூவினாள்.
” எனக்கு மறுபடியும் கேல்வே யை பாக்கனூம் போல இருக்கு”
” உனக்கு போகப்பிடிச்சா நீ போ” என்றார் கேபிரியல் மறுப்பாக.
”  இதான் அருமையான கணவனின் பாங்கு பார்த்துக்கோங்க திருமதி. மாலின்ஸ்”
என்றபடியே அறையின் மறுபக்கத்தை நோக்கி அவள் புகுந்து புறப்பட்டாள். இடையில் நிகழ்ந்த குறுக்கீட்டை ஏதும் கவனிக்காமல் திருமதி. மாலின்ஸ்,ஸ்காட்லாந்தின் அழகிய பிரதேசங்களை பற்றியும் பார்க்க வேண்டிய இடங்களை பற்றியும் விவரித்தாள். அவளது மருமகன் ஒவ்வொரு வருடமும் ஏரி பிரதேசங்களுக்கு அழைத்துப்போய் மீன் பிடிப்பாராம். அவர் ஒரு சிறந்த மீன் பிடிப்பாளராம். ஒரு நாள் அவர் ஒரு அழகான பெரிய மீனை பிடித்து வந்ததை ஹோட்டல்காரர் சமைத்துக்கொடுத்தாராம் அதை இரவுணவாக எல்லோரும் சாப்பிட்டார்களாம்.
அவள் பேசியதை கேபிரியல் கவனமின்றி கேட்டுக்கொண்டார்.
இரவு உணவுவேளை நெருங்குவதால் தனது உரையை பற்றியும் சொல்ல வேண்டிய மேற்கோள்களையும் நினைவுபடுத்திக்கொண்டார். பிரட்டி மாலின்ஸ் தனது தாயிடம் நெருங்கி வந்தவுடன் அவன் பேசுவதற்கு தோதாக நாற்காலியிலிருந்து எழுந்து அவனுக்கு இடம் கொடுத்துவிட்டு ஜன்னலருகே போய் நின்று கொண்டார்.அறை சற்றேரக்குறைய காலியாகியிருக்க பின் அறையிலிருந்து தட்டுகளில் உணவு கரண்டிகள் இடிபடும் ஒசை வந்தது. நடனமாடி களைத்தவர்கள் சிறுசிறு குழுக்களாக நின்று அமைதியாக கதைத்துக்கொண்டிருந்தனர்.
கேபிரியேலின் இளம் சூடான நடுங்கும் விரல்கள் சில்லிட்ட ஜன்னல் கண்ணாடியில் தாளமிட்டது.வெளியே எவ்வளவு குளிராயிருக்கும்! தனியே நடந்து போனால் மிகவும் அருமையாயிருக்கும்,முதலில் ஆற்றங்கரையோரமாகவும் பின்பு பூங்காவின் ஊடேயும்!  அனைத்துமரங்களின் மேலே பனி துகள்கள் தூவியிருக்கும்,   வெல்லிங்டன் நினைவகத்தின் விதானத்தில் பளிச்சிடும் தொப்பிபோல பனி படர்ந்திருக்கும். இரவுணவு மேஜையில் அமர்ந்திருப்பதை விட அங்கிருப்பது இனிமையாக இருக்கும்!
கேபிரியேல் தான் பேசப்போகும் உரையைப்பற்றி தனக்குள்ளாக ஓட்டிப்பார்த்துகொண்டார்:
ஐரிஷ் விருந்தோம்பல்,
சோக நினைவுகள்,
மூன்று கிருபைகள்,
பாரிஸ்,
பிரவுனிங்கின் கவிதையிலிருந்து மேற்கோள்.
தனது விமர்சனத்தில் உபயோகித்த வாக்கியத்தை தனக்குள்ளாக சொல்லிக்கொண்டார்:
“ஒருவர் தனக்குள்ளாக நினைவை மீட்டிக்கொள்வது- வேதனையான சங்கீதமே”
செல்வி. ஐவர்ஸ் உரை படிவத்தை பாராட்டியிருந்தாள்.அது உண்மையானதா?அவளது பரப்புரைவாதங்களுக்கு பின்னாக ஏதாவது வாழ்க்கை மிச்சமாக இருந்திருக்குமா அவளுக்கு?இந்த இரவின் நிகழ்விற்கு முன்பான அவர்களது பழக்கத்தில் எந்த மனக்குறைகளும் இருந்ததில்லை.இரவுணவு மேஜையில் அவர் பேசும்போது தனது கேள்விகேட்கும்  கண்களால் துளைக்கப்போகும் அவளை நினைத்து தளர்வாக உணர்ந்தார்.தனது உரையை தோல்வியில் முடித்தால் அதைக்குறித்து வருத்தம் படாமல்கூட அவள் இருக்கலாம்.
திடீரென ஒரு யோசனை தோன்றி அவருக்கு தைரியத்தை கொடுத்தது.அவர் இரு சித்திமார்களையும் குறிப்பிட்டு:
“அழைப்பை ஏற்று வந்த சீமாட்டிகளே சீமான்களே,தற்போதைய தலைமுறை சில குற்றங்குறைகளை தன்னகத்தே கொண்டிருந்தாலும், நான் நினைத்துப்பார்க்கும் பொழுது அதில் விருந்தோம்பல்,நகைச்சுவை,
மனிதாபிமானம்,போன்ற கருதுகோள்களை இன்னும் வைத்துள்ளது. இவையாவற்றையும் தற்போது தீவிர உயர் படிப்பாளிகளாக நம்மிடையே வந்து கொண்டிருக்கும் புதிய தலைமுறையினர் கடைபிடிப்பதில்லை”.
இது செல்வி. ஐவர்ஸுக்கு மிகச்சரியான பதிலாக இருக்கும்.
அவரது இரு சித்திகளும் வயதான பத்தாம்பசலிகளாக இருந்தால் அதைப்பற்றி அவருக்கென்ன கவலை?
அறையில் ஏற்பட்ட சலசலப்பு அவரது கவனத்தை ஈர்த்தது.கதவுப்புறத்திலிருந்து திரு.பிரவுனி கம்பீரமாக ஜுலியா சித்தியின் கையை பிடித்து அழைத்துவந்துகொண்டிருந்தார். தலையை அசைத்து சிரித்தபடியே ஜுலியா சித்தி வந்தாள்.அவள் பியானோ மேஜைக்கு போய்நிற்கும் வரை அறையிலிருந்தோர் கலவையாக கைதட்டினர்.மேரிஜேன் பியானோவின் முன்னுள்ள முக்காலியில் அமர்ந்து வாசிக்க தயாராக,ஜுலியா சித்தி புன்னகையை நிறுத்திக்கொண்டு தனது சாரீரம் துல்லியமாக ஒலிக்க ஏதுவாக அறையை நோக்கி லேசாக திரும்பி நின்றுகொண்டாள்.அறையில் மௌனம் நிலவ அவள் பாட ஆரம்பித்தாள்.அவளது ஆரம்ப பல்லவியை கேட்ட கேபிரியேலுக்கு அந்த பாடல் நினைவுக்கு வந்தது.அது ஜுலியா சித்தி எப்போதும் பாடும் பழைய பாடல்தான்—
மணப்பெண்ணிற்காக அணிவகுத்தல்.
அவளது குரல் துல்லியமாகவும் கணீர் என்றும் ஒலித்தது.வேகமாக பாடினாலும் மிகச்சிறிய கமகங்களும் பிருகாக்கலும்கூட துளி பிசகாமல் அட்சர சுத்தமாக விழுந்தது.பாடகரை பார்க்காமல் ஒலித்த பாடலோசையை வைத்தே அதன் பரவலையும் சுநாதத்தையும் ரசிக்க முடிந்தது. பாடலின் முடிவில் எல்லோரோடும் சேர்ந்து கேபிரியேல் பலமாக கைதட்டிய போது அதைவிட பலமாக மறைப்பில் இருந்த  இரவுணவு மேஜை பக்கமிருந்து கைதட்டல் ஒலித்தது. அதன் உண்மைத்தன்மையை உணர்ந்த ஜுலியா சித்திக்கு லேசாக முகம் கன்றி சிவந்தது. தனது பெயர் பொறித்த தோலட்டையிட்ட பாட்டு புத்தகத்தை அதன் மாடத்தில் வைத்துவிட்டு நிமிர்ந்தாள்.
பிரட்டி மாலின்ஸ் தன் தலையை சாய்த்து வைத்து கவனமாக இசைப்பாடலை கேட்டுக்கொண்டிருந்தவன் எல்லோரும் நிறுத்திய பிறகும்கூட பலமாக கையை தட்டியவண்ணமே இருந்தான்.மேலும் தனது தாயிடமும் சத்தமாக சிலாகிக்க அந்த அம்மாளும் மெதுவாகவும் அமைதியாகவும் பாடலை ஆமோதித்து தலையசைத்தாள்.கடைசியாக இனி கைதட்ட முடியாது எனும் நிலையில் அவன் திடுக்கென எழுந்து ஜுலியா சித்தியை நோக்கி விரைந்து அவளது கையை தன் இரு கரங்களாலும் பொத்தி இழுத்து குலுக்கினான்.
அவனுக்கு பாராட்டி பேச உடனடியாக பேச்சு வரவில்லை.
” இப்பத்தான் அம்மாகிட்ட சொல்லிகிட்டிருந்தேன்” என்றவன்
” நான் எப்போதும் நீங்கள் இப்படி பாடி கேட்டதில்லை. இல்லை, இதுமாதிரி உங்களின் குரல் இனிமையாக பாடி கேட்டதேயில்லை.இப்ப!  நீங்க நம்புவீங்களா இப்போது? அதுதான் உண்மை. எனது சொல்லையும்  எனது கௌரவத்தையும் வைத்து சொல்கிறேன் இதுதான் உண்மை.எப்போதும் இவ்வளவு தெளிவாகவும் துல்லியமாகவும் உங்கள் குரலை கேட்டதேயில்லை. இல்லைதான்”
ஜுலியா சித்தி புகழுரைகளை கேட்டு மெல்லியதாக முணுமுணுத்தபடியே சிரித்துக்கொண்டாள்.அவனது பிடியிலிருந்து தனது கைகளை விலக்கிக்கொண்டாள்.அவளை நோக்கி தனது கைகளை அகல விரித்தபடியே வந்த திரு.பிரவுனி பக்கத்திலிருந்தவர்களுக்கு அறிவிப்பாளன் தனது முதன்மையான சீடனை  பரிச்சயப்படுத்துவதைப்போல சத்தமாக கேட்கும்படியாக:
” செல்வி. ஜுலியா மார்கென்,எனது சமீபத்திய கண்டுபிடிப்பு! ” என்றார்.
” நல்லது,பிரவுனி, தீவிரமாக நீ தேடினால் மோசமான கண்டுபிடிப்பைக்கூட கண்டுவிடலாம்.நான் என்ன சொல்ல வர்றேன்னா மற்ற நாட்களில் இதில் பாதியளவுகூட சிறப்பாக பாடி கேட்டதில்லை, இதுமாதிரி எப்பவும் பாடவில்லை என்பதுதான் நேர்மையான உண்மை”
“நானும்தான் கேட்டதில்லை” என்றார் திரு.பிரவுனி
“இவரது குரல் மிகவும் மேம்பட்டுவிட்டதாக நினைக்கிறேன்”
ஜுலியா சித்தி பணிவான பெருமையில் தனது தோள்களை குலுக்கியபடியே :
” முப்பது வருடங்களுக்கு முன்பாகவும் எனது குரல் மோசமாக இருந்ததில்லை”
” நான் அவ்வப்போது சொல்வதுண்டு” என ஆணித்தரமாக முழங்கினாள் கேட் சித்தி,
“அவளை அவசியமற்று அந்த சேர்ந்திசை கோஷ்டியில்
போட்டது  வீண் என ஆனால் என் பேச்சை யார் கேட்கிறார்கள்”
என பயனற்ற குழந்தையை பற்றி இருப்போரிடம் சொல்லி ஞாயம் கேட்பதைப்போல சொல்லிப்பார்த்தாள்.அப்போது ஜுலியா சித்தி  நினைவுகளின் லேசான புகைமூட்டத்தோடுகூடிய புன்னகையை வெளியிட்டு முன்புறமாக வெறித்து பார்த்தாள்.
” இல்லை” என தொடர்ந்த கேட் சித்தி,
” யாரு சொன்னாலும் கேட்காமலும் வரச்சொன்னாலும் வராமலும் அந்த சேர்ந்திசை கோஷ்டியிலேயே கிடந்து இரவு பகலாக உழல்கிறாள்.கிருஸ்துமஸ் தினத்திலெல்லாம் ஆறுமணிக்கே சாதகத்திற்கு! இதெல்லாம் எதற்காக?”
“நல்லது,இதெல்லாம் கடவுளின் கருணைக்காகதானே கேட் அத்தை?” என்று புன்னகைத்தபடியே பியானோ முன்னிருந்த முக்காலியில் சுழன்றடியே மேரி ஜேன் கேட்டாள்.
கேட் சித்தி வேகமாக திரும்பியபடியே தனது அண்ணன் மகளை பார்த்து சொன்னாள்:
“எனக்கு கடவுளின் கருணையை பற்றியெல்லாம் நல்லாத்தெரியும் மேரிஜேன், ஆனாலும் தங்கள் வாழ்நாளெல்லாம் உழைத்து சேர்ந்திசை குழுவில் பாடும் பெண்டிரை விடுத்து அவர்களுக்கு மேலாக சிறு பொடியன்களை அமர்த்தும் போப்பின் செயல் மரியாதைக்குரியதல்ல.தேவாலயத்தின் நன்மைக்காக போப் அப்படி செய்வாராயிருக்கும். ஆனாலும் அது சரியல்ல மேரி ஜேன் சரியல்ல”
இது பற்றிய பேச்சு அவளுக்கு ஒரு கோபமூட்டக்கூடிய ஒன்றானதால் தனது சகோதரிக்காக மேலும் மூச்சை பிடித்துக்கொண்டு சூடாக பேச முற்படும்போது நடன ஜோடிகள் அனைவரும் திரும்ப வருவதை கண்ட மேரிஜேன் சமாதானமாக குறுக்கிட்டாள்:
“கேட் அத்தையே,இப்போது நீங்கள் திரு.பிரவுனியின் பக்க நியாயத்திற்கு எதிராக சர்ச்சையை கிளப்புகிறீர்களே”என்றாள்.
திரு.பிரவுனி தனது மதத்தை பற்றிய பேச்சு வந்ததைகேட்டு சிரித்தபடி நின்றுகொண்டிருந்த பக்கம் திரும்பிய கேட் சித்தி அவசரமாக சொன்னாள்:
” ஓ,நான் போப்பின் நடவடிக்கையை கேள்வி கேட்கவில்லை. நானொரு மூடக்கிழவி அப்படியெல்லாம் நிலையெடுக்கமாட்டேன்.ஆனாலும் பொதுவான மரியாதையையும் தினம்தோறும் கடைபிடிக்கவேண்டிய நன்றிவிசுவாசத்தை பற்றியும் நினைக்கவேண்டுமல்லவா.ஜுலியாவின்  இடத்தில் நானிருந்திருந்தால் பாதர். ஹீலியின் முகத்திற்கு நேராவே சொல்லியிருப்பேன். . .”
“அப்புறம், கேட் அத்தை” என்ற மேரிஜேன்
” நாமெல்லோரும் இப்போது பசியோடிருக்கிறோம்,நாமனைவரும் பசியோடிருக்கும்போது சண்டைக்காரர்களாக ஆகிவிடுகிறோம்”
” மேலும் தாகமாகயிருக்கும்போதும் கலகக்காரர்களாகிவிடுகிறோம்” என இணைத்தார் திரு.பிரவுனி
” ஆகவே நாமனைவரும் இரவுணவுக்கு போவோம்” என்றாள் மேரிஜேன்,
” நமது விவாதத்தை அதன்பின் வைத்துக்கொள்ளலாம்”
நடன வரவேற்பறைக்கு வெளிப்பக்கமாக இருந்த வராண்டாவில் கேபிரியேலின் மனைவியும் மேரிஜேனும் செல்வி.ஐவர்ஸை இரவுணவு உண்டுவிட்டு செல்லுமாறு கேட்டுக்கொண்டிருப்பதை பார்த்தார்.ஆனாலும் தனது தொப்பியை அணிந்துகொண்டு பனிமேலங்கியின் பொத்தான்களை போடத்தொடங்கிய ஐவர்ஸ் மறுத்துக்கொண்டிருந்தாள்.
பசியில்லையென்றும் இப்பொழுதே வெகுநேரமாகிவிட்டதால் வீட்டிற்கு போகவேண்டும் என சொல்லிக்கொண்டிருந்தாள்.
” என்ன ஒரு பத்து நிமிடம்தானே மோலி” என்றாள் திருமதி. கான்ராய்
” அது ஒன்றும் உன்னை தாமதப்படுத்தாது”
” இவ்வளவு நேரம் நடனமாடியதற்கு கொஞ்சமாவது ஊட்டம் இட வேண்டாமா? என்றாள் மேரிஜேன்.
“உண்மையிலேயே என்னால் முடியாது” என்றாள் செல்வி. ஐவர்ஸ்.
” எனக்கென்னவோ  நீ  நிகழ்வை நன்றாக சுகிக்கவில்லையோ
 என சம்சயமாக இருக்கிறது” என வருத்தத்தோடு சொன்னாள் மேரிஜேன்.
” அப்படியெல்லாமில்லை. நன்றாக அனுபவித்தேன் என உறுதியாக சொல்கிறேன்” என்றாள் செல்வி.ஐவர்ஸ்,
” இப்போது என்னைப்போக அனுமதிக்க வேண்டும்”
” வீட்டிற்கு எப்படி போவாய்?” என்றாள் திருமதி. கான்ராய்.
” ஓ , அதென்ன படகுத்துறையிலிருந்து ரெண்டு தப்படி தூரம்தானே “
கேபிரியேல் தயங்கியபடியே சொன்னார்:
” செல்வி. ஐவர்ஸ் , போயே ஆகவேண்டும் என்றால் , நீங்கள் அனுமதித்தால் நான் உங்களை வீட்டிற்கு அழைத்துப்போய்விடுகிறேனே”
ஆனால் செல்வி. ஐவர்ஸ் அவர்களிடமிருந்து விலகி புறப்பட்டாள்.
” அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்”என சொன்னவள் ” ” “என்னைபற்றி பொருட்படுத்தாமல் உங்களது இரவுணவிற்கு போங்கள்,என்னைபார்த்துக்கொள்ள எனக்கு தெரியும்”
” நல்லது,நீயொரு வினோதமான பெண்,மோலி” என நேராக சொன்னாள் திருமதி. கான்ராய்
” பென்னாக்ட் லிப்” என ஐரிஷ் கேலிக் மொழியில் சிரித்தபடியே  வந்தனங்களை சொன்ன செல்வி. ஐவர்ஸ் படிக்கட்டுகளில் துள்ளியோடி இறங்கிப்போனாள்.
யோசனையான முகத்தோடு அவள் செல்வதையே மேரி ஜேன் பார்த்துக்கொண்டிருக்க,
கீழ்வெளியறையின் கதவு திறக்கப்போவதை எதிர்பார்த்து மாடி கிராதி கட்டைகளில் சாய்ந்திருந்தாள் திருமதி. கான்ராய்.அவள் திடீரென வெளியேறியதற்கு தான் தான் காரணமோ என கேபிரியேல் அவரையே கேட்டுக்கொண்டார்.ஆனாலும் அவள் வருத்தமுற்றவளைப்போலில்லை:சிரித்தபடிதான் வெளியேறினாள்.அவர் படிக்கட்டுகளையே வெறுமனே வெறித்து பார்த்தார்.
அப்போது கேட் சித்தி உணவறையிலிருந்து குழப்பத்தோடு வெளியே வந்து,
” கேபிரியேல் எங்கே?” என கூக்குரலிட்டாள்.
” எங்கத்தான் போனான்,அங்கே எல்லோரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்,மேடை தயாராகிவிட்டது,வாத்துகறியை கூறுபோட ஆளில்லை!”
” இதோயிருக்கிறேன் கேட் சித்தி! ” என கூவிய கேபிரியேல் திடீரென தோன்றிய உற்சாகத்தோடு
” மந்தை வாத்துக்களானாலும் சரி கூறு போட்டுவிடுகிறேன்” என்றார்.
உணவு மேஜையின் ஒரு ஓரத்தில் கொழுத்த பொன் நிறமாக வறுத்திருந்த முழு வாத்து  இறைச்சி வைக்கப்பட்டிருந்தது,அருகில் தூவப்பட்ட கொத்தமல்லி தண்டு இலைகளோடு முழுதாக பன்றி இறைச்சி மேல்தோல் நீக்கப்பட்டு மிளகு தடவிவைக்கப்பட்டிருந்தது.பன்றியின் கணுக்கால் ஓரத்தில் காகிதத்தால் நேர்த்தியாக கட்டியிருந்தனர்.அதன் பக்கத்தில் மசாலிட்ட மாட்டுக்கறியின் பெரும்தொடை இருந்தது.இதற்கு இடைப்பட்ட பாகங்களில் மற்ற தொடுகறிகள் வைக்கப்பட்டிருந்தது: சிவப்பும் மஞ்சளுமான நிறத்தில் ஜெல்லி புட்டிகள் இரண்டு;அகலமான பாத்திரத்தில் வெண்பாகு கூழ்,சிவப்பு ஜாம்,பசும் இலை வடிவ உணவு காம்பு போன்ற கைப்பிடியோடும்,அதனருகே உலர் பழ கொட்டைகளும் தோலுரித்த பாதாமும், அதனோடு சேர்த்து சாப்பிடக்கூடிய உணவு வகையோடு வட்ட வடிவ ஸ்மைர்னா அத்தி பழங்களும்,ஜாதிக்காயை அரைத்து பொடி தூவிய கேக் வகையும்,கண்ணாடி ஜாடி நிறைய சாக்லேட் வகைககளும்,
தங்க, வெள்ளி காகிதங்களில் சுற்றி வைக்கப்பட்ட இனிப்பு வகைகளும்,நீளமான கண்ணாடி குடுவைகளில் கொத்தமல்லி போல தோற்றமளித்த செலரி தண்டுகளோடு வைக்கப்பட்டிருந்தது.மேஜையின் நடுநாயகமாக வைக்கப்பட்டிருந்த ஆஞ்சு மற்றும் அமெரிக்க ஆப்பிள் பழங்களால் ஆன பிரமீடிற்கு இரு புறமும் காவல் போல, பழமையான இரு கனத்த கிரிஸ்டல் கண்ணாடி போத்தல்களில் போர்ட் வொயினும் சிவப்பு ஷெர்ரீ வொயினும் நிறைத்து வைக்கப்பட்டிருந்தது.மூடப்பட்ட பியானோ மேஜையின் மீது மஞ்சள் நிறத்தில் மிகப்பெரிய புட்டிங் கேக் வைக்கப்பட்டிருக்க அதன் பின்புறம் மூன்று வரிசைகளில் பீர் மற்றும் விஸ்கி பாட்டில்கள் மற்றும் தாதுஉப்புகள் கலந்த குடி தண்ணீர் பாட்டில்கள் தங்களது நிறத்திற்கேற்ப கருப்பு மற்றும் சிவப்பு லேபிள்களை அணிந்து நின்றிருந்தன.நிறமற்ற சிறிய பாட்டில்கள் பச்சை லேபிளிலிருந்தது.
கேபிரியேல் மேஜையின் நடுவே ஆணித்தரமாக நின்று வெட்டுகத்தியின் கூர்மையை பதம்பார்த்துவிட்டு வாத்துகறியை கூறு போடத்தொடங்கினார்.அவர் ஒரு சிறப்பான தேர்ந்த கறி வெட்டி கூறுபோடுவராதலால் அப்போது தன்னை லகுவாக உணர்ந்தார்.நிறைந்த உணவுமேஜை முன் நின்று பரிமாறுவது அவருக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்.
” செல்வி. பர்லாங், உனக்கு என்ன கொடுக்கட்டும்? இறக்கைபாகமா,
கறித்துண்டா,அல்லது நெஞ்சுக்கறியா?” என கேட்டார்.
“நெஞ்சுக்கறியில் ஒரு துண்டு போதும்”
” செல்வி. ஹிக்கின்ஸ்,உனக்கென்ன வேண்டும்?”
“ஓ , எதுவாயிருந்தாலும் பரவாயில்லை திரு. கான்ராய்.”
கேபிரியேலும் செல்வி. டாலியும் விருந்தினர்களுக்கு  வாத்து மற்றும் பன்றி இறைச்சி மற்றும் மசாலிட்ட மாட்டுக்கறி நிறைந்த தட்டுகளை கொடுத்துக்கொண்டேயிருக்க லில்லி மாவிட்ட சூடான உருளைகிழங்குகளை வெள்ளை நாப்கின் துணிகளில் சுற்றி தட்டில்வைத்து எல்லோருக்கும் பரிமாறிக்கொண்டிருந்தாள்.  இது மேரிஜேனின் யோசனையாகும் மேலும் வாத்துக்கறிக்கு தொட்டுக்கொள்ள ஆப்பிள் சாஸை வைக்கவேண்டும் என கூறியிருந்தாள். ஆனால் சாதாரணமாக வறுத்த வாத்துக்கறியை சாஸில்லாமல் அப்படியே சாப்பிடுவதுதான் சிறப்பு என கேட் சித்தி சொல்லிவிட்டாள்.தனது இசைப்பள்ளி மாணவர்களுக்கு நல்ல கறித்துண்டுகளாக பார்த்து பார்த்து பரிமாறினாள் மேரிஜேன்.கேட் சித்தியும் ஜுலியா சித்தியும் பியானோ மேஜையிலிருந்த பீர் மற்றும் விஸ்கி பிராந்தி பாட்டில்களை எடுத்துவந்து ஆண்களுக்கும் தாதுஉப்புகள் கலந்த குடிதண்ணீர் பாட்டில்களை பெண்களுக்கும் கொடுத்தபடியிருந்தனர். அங்கு குழப்படியான சத்தமும் சிரிப்பும் மிகுந்த ஓசையும் கலந்து ஒலித்தது. இது வேண்டும் அது வேண்டும் என ஆணைகளும்,உணவுப்பொருட்களோடு மோதும் முள்கரண்டி மற்றும் சாப்பாட்டு கத்தி, பாட்டில்களை திறந்தபோது சத்தமிட்ட மரத்தக்கைகளின் ஒலி என கலவையான ஒலிகளால் நிறைந்திருந்தது. கேபிரியேல் முதல் முறை தீர்ந்தபின் இரண்டாவது முறையாக இறைச்சிகளை கூறிடத்தொடங்கினார்.தனக்கு என எதுவும் சாப்பிடாத அவரை பார்த்து மற்றவர்கள் உணவுன்ன கேட்டு சத்தமிட்டாலும் அவர் சாப்பிட ஆரம்பிக்கவில்லை.மற்றவர்களுக்காக உபசரித்துக்கொண்டிருந்தவரை எல்லோரும் நச்சரித்ததால் விஸ்கியை மட்டும் தாராளமாக ஒருமுறை அருந்திக்கொண்டார்.மேலும் கறி வெட்டுவது ஒரு முரட்டு வேலை என்பதாலும் அதை அருந்தி மகிழ்ந்தார்.மேரிஜேன் தற்போது அமைதியாக அமர்ந்து உணவு உண்ண ஆரம்பித்தாள்.ஆனால் இரு சித்திமார்களும் இன்னும் மற்றவர்களுக்கு பரிமாறியபடியே இங்கும் அங்கும் சுற்றி வந்து இடித்துக்கொண்டும் அவசியமின்றி ஒருவருக்கொருவர் சத்தமிட்டுக்கொண்டுமிருந்தனர்.திரு. பிரவுனியும் கேபிரியேலும் அவர்களை சாப்பிட உட்கார கெஞ்சி கேட்டும் இன்னும் நேரமிருக்கிறது,அப்புறம் சாப்பிட்டுக்கொள்ளலாம் என சொல்ல, கடைசியில் பிரட்டி மாலின்ஸ் குதித்தெழுந்து,கேட் சித்தியை பிடித்து தூக்கி ஒரு இருக்கையில் அமர்த்த எல்லோரும் கொல்லென சிரித்தனர்.
எல்லோருக்கும் நல்லமுறையில் திருப்தியாக பரிமாறியபின் கேபிரியேல் சிரித்தபடியே:
“இப்ப, ஏதும் வேணும் என கேட்பவர்களை அநாகரீகமான ஆட்கள் திணிப்பது என சொன்னாலும் பரவாயில்லை,கேளுங்கள்”
கோஷ்டியான குரல்களில் அவர்கள் கேபிரியேலின் இரவுணவை  சாப்பிடச்சொன்னார்கள் லில்லி அவருக்கென ஒதுக்கி வைத்திருந்த மூன்று உருளைக்கிழங்குகளோடு வந்தாள்.
” சரிதான்” என நட்போடு பதிலளித்தவர் பானத்தை மேலும் ஒரு மடக்கு குடித்துக்கொண்டார்,
” நண்பர்களே கொஞ்சம் நேரத்திற்கு என்னைப்பற்றி யோசிக்கவேண்டாம்”
லில்லி சாப்பிட்டவர்களின் தட்டுகளை எடுத்துக்கொண்டிருந்தபோது சுற்றி நடந்த உரையாடல்கள் எதிலும் கலந்துகொள்ளாமல் அவர் தனது இரவுணவில் கவனம் செலுத்தினார்.
ராயல் அரங்கில் நடந்துவரும் ஒப்பரா இசைக்குழுவைப்பற்றி மேசையில் பேச்சு ஓடியது.கனத்த குரலில் பாடக்கூடிய,கன்றி சிவந்த முகமும் அழகான மீசையும் வைத்திருந்த திரு.பார்ட்டெல் டி’ ஆர்சி அந்த ஒப்பராவில் மிகச்சன்னமான கீழ் ஸ்தாயில் பாடக்கூடிய பாடகியை மிகவும் பாராட்டி பேசினார்.
ஆனால் செல்வி. பர்லாங் அவள் கொச்சையான முறையில் பாடி வெளிக்கொணர்வதாக தன் கருத்தை வைத்தாள்.
பிரட்டி மாலின்ஸ்,கெயிட்டி தனிநபர் கூத்து பட்டறையில் இடைவேளைக்கு பிறகு பாடும் கருப்பின பாடகனின் உயர் ஸ்தாயிக்குரல் அவன் கேட்டதிலேயே அருமையான ஒன்று என்றான்.
” அந்தாள் பாடி நீங்கள் கேட்டுள்ளீர்களா?” எனஅவன் எதிர் புறம் அமர்ந்திருந்த  பார்ட்டெல் டி’ ஆர்சி யை பார்த்துக்கேட்டான்.
” இல்லை”  என அக்கரையின்றி பதிலளித்தார் திரு. பார்ட்டெல் டி’ ஆர்சி.
” ஏனென்றால்” என பிரட்டி மாலின்ஸ் விளக்கினான்,
” அவரைப்பற்றிய உங்களின் எண்ணத்தை அறிய எனக்கு ஆவலாகயிருந்தது,என் நினைப்பில் அவரது குரல் மிக சிறந்தது என சொல்வேன்”
” நல்ல விஷயங்களை பற்றியெல்லாம்  தெரிந்துக்கொள்வதற்கு டெட்டிக்கு ஆர்வம் அதிகம்” என திரு. பிரவுனி அமர்ந்திருந்தவர்களிடம் சகஜமாக சொன்னார்.
” அவனுக்கு ஏன் நல்ல குரல்வளமும் இருக்கக்கூடாது?” என பிரட்டி மாலின்ஸ் உரக்கக்கேட்டான்.
” அவன் ஒரு கருப்பன்தானே என்பதாலா?”
இதற்கு யாருமே பதில் அளிக்கவில்லை.மேரிஜேன் தனது இசைப்பால் சம்பிரதாயமான ஒப்பேரா சங்கீதத்துக்கு எல்லோரையும் கொண்டுவந்தாள்.அவளது மாணவர்களில் ஒருவன் மிக்னான் பாடலை இசைக்க சொல்லி சீட்டை கொடுத்ததற்கு அவள் அது நல்ல மெட்டுத்தான் ஆனால் அதைப்பற்றி நினைக்கும்போது பாவமான ஜார்ஜியானா பர்ன்ஸின் நினைவுகள் சூழ்கிறதே என்றாள்.திரு. பிரவுனி இன்னும் பழைய தொகுப்புகளைப்பற்றிசொல்லி நினைவுகூர்ந்தார்,டப்ளினுக்கு வந்துபோன பழைய இத்தாலிய இசைச்குழுக்களான— டியேட்ஜென்ஸ், இல்மா டி மர்ஸ்க்கா,கேம்ப்பாநிநி,பெருமைமிகு ட்ரெபிலி,க்யூக்லினி,ராவேலி,அராம்புரோ. டப்ளினில் இசைப்பது என்றால்,அது ஒரு காலம் என அவர் பெருமூச்செறிந்தார்.பழைய ராயல் அரங்கம் ஒவ்வொரு இரவும் அரங்கு நிறைந்த கூட்டமாக குழுமியது என்றும் அன்று ஓர் இரவு நிகழ்ந்த நிகழ்ச்சியில் ஒரு இத்தாலிய பாடகன் ‘போர்வீரனைப்போல் நான் வீழ்வேன்’ என்ற பாடலை, உச்ச ஸ்தாயியில் எப்படி ஐந்து முறை திரும்பத்திரும்ப பாடி மகிழ்வித்தான் என்பதையும்,சில சிறந்த பாடகிகளின் கின்னர சங்கீதத்தில் மயங்கிய பின்வரிசை ரசிகர்கள் அவர்களது கோச்சில் பூட்டிய குதிரைகளை கழற்றிவிட்டு பாடகிகளை கோச்சில் அமரவைத்து தங்கள் கைகளால் கோச்சை இழுத்து சென்று தங்குமிடத்தில் விட்டு வந்ததையும் சிலாகித்து சொன்னார்.
ஏன் மிகச்சிறந்த பழைய ஒப்பேரா பாடல்களான டயனோரா,
லுக்கிரெசியா போர்கியா போன்றவற்றை தற்போது பாடுவதில்லை? என கேட்டுவிட்டு அவரே அதற்கு பதிலும் சொன்னார். அம்மாதிரி செம்மையான பாடல்களை பாடுவதற்கு தகுந்து குரல்கள் தற்போது இல்லை. அதனால்தான் என்றார்.
” ஓ , இருங்கள்” என்ற
பார்ட்டெல் டி’ ஆர்சி,
“அன்றுபோல் பாடக்கூடிய பாடகர்கள் இப்போதும் இருப்பதாகத்தான் நான் சொல்வேன்” என்றார்.
” அவர்கள் எங்கிருக்கிறார்கள்?” என மூர்க்கமாக கேட்டார் திரு. பிரவுனி.
” லண்டனில்,பாரிசில்,மிலானில் உள்ளனர்” என மிதமாக சொன்ன பார்ட்டெல் டி’ ஆர்சி
“எனது கருத்தில்  உதாரணமாக காரூஸோ மிகச்சிறந்த பாடகர் என்பேன். நீங்கள் சொன்னவர்களை விடவும் என்றே சொல்வேன்”
” இருக்கலாம்” என பதிலிருத்த திரு. பிரவுனி
“ஆனால் எனக்கென்னவோ அது சந்தேகமாகத்தான் உள்ளது” என்றார்.
” ஓ ,காரூஸோவின் பாடல்களை கேட்க நான் எதையும் தரத்தயாராயிருக்கிறேன்” என்றாள் மேரிஜேன்.
இறைச்சி எலும்பை ருசித்துக்கொண்டிருந்த கேட் சித்தி, ” எனக்கு ஒரே ஒரு உச்ச ஸ்தாயி பாடகரின் குரல்தான் லயிக்க வைத்தது,அவரை நீங்கள் யாரும் கேட்டிருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன் ” என்றார்.
“அவர் யார் செல்வி. மோர்க்கென்?” என மரியாதையாக திரு. பார்ட்டெல் டி’ ஆர்சி கேட்டார்.
” அவர் பெயர் பார்க்கின்ஸன் அவரது குரல் வளத்தின் உச்சத்தில் இருந்தபோது அவரது பாட்டுகளை நான் கேட்டுள்ளேன்.ஒரு மனிதனின் தொண்டையில் அமைந்த மிகத்துல்லிமான சுத்தமான ஸ்வரசுத்தம் அவரிடம்தான் இருந்தது என நினைக்கிறேன்.
” ஆச்சரியம்” என்ற பார்ட்டெல் டி’ ஆர்சி ” நான் அவரை பற்றி கேள்விப்பட்டதேயில்லை”
” ஆமா ஆமா செல்வி. மோர்க்கென் சொல்வது சரிதான் ” என்ற திரு.பிரவுனி
” கிழட்டு பார்க்கின்ஸனைப்பற்றி லேசாக கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் அவர் எனக்கெல்லாம் மிகவும் முந்தியவர்”
” ஒரு அழகான சுத்தமான இனிமையான கனிந்த ஆங்கில குரல் ” என உற்சாகமாக சொன்னாள் கேட் சித்தி.
        ***
-தமிழில் : விஜயராகவன்
(பகுதி 2  அடுத்த இதழில்)
Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *