தொலைபேசி அடித்ததும், டாக்டர் மேக்ஸ் க்ரெய்ட்ஸர் எழுந்தார். படுக்கையின் அருகிலிருந்த மேசையில் இருந்த கடிகாரம் எட்டு மணியாக பதினைந்து நிமிடங்கள் இருப்பதாகக் காட்டியது. “இந்த அதிகாலையிலேயே அழைப்பது யாராக இருக்கும்?” அவர் முணுமுணுத்தார். தொலைபேசியை எடுத்தார், ஒரு பெண்மணியின் குரல், “டாக்டர் க்ரெய்ட்ஸர், இந்த நேரத்தில் அழைப்பதற்காக என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். ஒருகாலத்தில் உங்களுக்கு நெருக்கமாக இருந்த ஒரு பெண் இறந்துவிட்டார். லிஸா நெஸ்ட்லிங்.”
“ஐயோ, கடவுளே!”
“இறுதிச் சடங்கு இன்று பதினோரு மணிக்கு நடக்கிறது. நீங்கள் தெரிந்துகொள்ள விரும்புவீர்கள் என்று நினைத்தேன்.”
“நீங்கள் சொல்வது சரிதான். நன்றி. நன்றி. லிஸா நெஸ்ட்லிங் என் வாழ்க்கையில் ஒரு மிக முக்கியமான பங்கு வகித்தார். நான் யாருடன் பேசிக்கொண்டிருக்கிறேன் என்று தெரிந்துகொள்ளலாமா?”
“அது முக்கியமில்லை. நீங்கள் இருவரும் பிரிந்த பிறகு லிஸாவும் நானும் நண்பர்களானோம். இறுதிச் சடங்கு கட்ஜெஸ்டால்ட் இறுதிச்சடங்கு அரங்கில் நடைபெறும். உங்களுக்கு அந்த முகவரி தெரியுமா?”
“ஆம். நன்றி.”
அந்த பெண்மணி தொலைபேசியை வைத்தார்.
டாக்டர்.க்ரெய்ட்ஸர் சிறிது நேரம் அசையாது படுத்துக் கிடந்தார். அப்படியென்றால், லிஸா போய்விட்டாள். அவர்கள் பிரிந்து பன்னிரண்டு வருடங்கள் கடந்து விட்டன. அவள் அவரது உயிர்க்காதலியாக இருந்தாள். அவர்களது உறவு கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் நீடித்தது, இல்லை, பதினைந்து இல்லை, பதிமூன்று. கடைசி இரண்டு வருடங்களும் வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவிற்கு பல தவறான புரிதல்களும் சிக்கல்களும் நிறைய பைத்தியக்காரத்தனமும் நிறைந்ததாய் இருந்தன. இந்த காதலை உருவாக்கிய அதே சக்திதான் அதை முற்றிலும் அழிக்கவும் செய்தது. டாக்டர்.க்ரெய்ட்ஸர் மற்றும் லிஸா நெஸ்ட்லிங் இருவரும் மீண்டும் சந்திக்கவேயில்லை. ஒருபோதும் ஒருவருக்கொருவர் கடிதம் எழுதிக்கொள்ளவுமில்லை. நாடக இயக்குனராக ஆகவிருக்கும் ஒருவருடன் அவள் உறவில் இருப்பதை அவளது நண்பர் ஒருவரிடமிருந்து அவர் தெரிந்து கொண்டார், ஆனால், அவளைப் பற்றி அவருக்குத் தெரிய வந்த ஒரே விசயம் அதுதான். லிஸா அப்போதும் நியூயார்க்கில் தான் இருந்தாள் என்பது கூட அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
இந்த கெட்ட செய்தியால் டாக்டர்.க்ரெய்ட்ஸர் மிகவும் வேதனைக்குள்ளாகியிருந்ததால், அன்று காலை எப்படி உடை மாற்றினார், எப்படி இறுதிச் சடங்கு அரங்கிற்கு வந்து சேர்ந்தார் என்று எதுவும் அவருக்கு நினைவில்லை. அவர் வந்து சேர்ந்தபோது, தெருவிலிருந்த கடிகாரம் ஒன்பது மணியாக இருபந்தைந்து நிமிடங்கள் இருப்பதாகக் காட்டியது. அவர் கதவைத் திறந்தார், அங்கிருந்த வரவேற்பாளர் அவர் மிக முன்னதாக வந்துவிட்டதாக கூறினார். பதினோரு மணிக்கு முன்பாக இறுதிச் சடங்கு தொடங்காது.
“அவரை நான் இப்போது பார்க்க சாத்தியமிருக்கிறதா?” மேக்ஸ் க்ரெய்ட்ஸர் கேட்டார். “நான் அவருடைய மிக நெருக்கமான ஒரு நண்பன், மேலும்…”
“அவர் தயாராகிவிட்டாரா என கேட்டுவிட்டு வருகிறேன்.” என்று சொல்லிவிட்டு ஒரு கதவின் பின்னால் மறைந்து போனாள் அந்த பெண்.
அந்த பெண் என்ன கூறினாள் என்பதை டாக்டர்.க்ரெய்ட்ஸர் புரிந்துகொண்டார். இறந்தவர்களை அவர்களது குடும்பத்தினருக்கும் இறுதிச்சடங்கிற்கு வந்திருப்பவர்களுக்கும் காட்டுவதற்கு முன்பாக வெகு விமரிசையாக அலங்கரிப்பார்கள்.
சற்று நேரத்தில் அந்த பெண் திரும்பி வந்து, “பரவாயில்லை, நான்காவது தளம், அறை மூன்று.” என்றாள்.
கருப்பு நிற ஆடையிலிருந்த ஒரு நபர் அவரை மின் தூக்கியில் மேலே அழைத்துச் சென்று அறை எண் மூன்றிற்கான கதவைத் திறந்து விட்டார்.
தனது தோள்பட்டை வரை திறக்கப்பட்டிருந்த ஒரு சவப்பெட்டியில் கிடந்தாள் லிஸா, அவளது முகம் தெரியும்படியாக ஒரு மெல்லிய துணியால் மூடப்பட்டிருந்தது. அது அவள் என்பது தெரிந்திருந்ததால் மட்டுமே அவரால் அவளை அடையாளம் காண முடிந்தது. அவளது கரிய கூந்தல் சாயத்தினால் மங்கிப்போயிருந்தது. அவளது கன்னங்களில் செவ்வண்ணச் சாயம் பூசப்பட்டிருந்தது, அவளது மூடப்பட்ட கண்களைச் சுற்றியிருந்த சுருக்கங்கள் ஒப்பனையினால் மறைக்கப்பட்டிருந்தன. சிவப்பாக்கப்பட்ட அவளது உதடுகளில் ஒரு மெல்லிய புன்னகையின் சாயல் தெரிந்தது. இவர்கள் எப்படித்தான் ஒரு புன்னகையை உருவாக்குகிறார்களோ என்று வியந்தார் மேக்ஸ் க்ரெய்ட்ஸர். ஓர் இயந்திரத்தனமான ஆளாக, எந்த உணர்ச்சியுமற்ற ஓர் இயந்திர மனிதனாக அவர் இருப்பதாக லிஸா ஒருமுறை குற்றம் சாட்டியிருந்தாள். அப்போது அந்த குற்றச்சாட்டு தவறானதாக இருந்தது, ஆனால் இப்போது, விசித்திரமாக, அது உண்மை போலத் தோன்றியது. அவர் தளர்ந்துபோனதாகவோ பயந்துபோனதாகவோ தெரியவில்லை.
அறைக்கதவு திறந்தது, வினோதமாக லிஸாவைப் போலவேயிருந்த ஒரு பெண் உள்ளே வந்தாள். “இது அவளது தங்கை, பெல்லா.” மேக்ஸ் க்ரெய்ட்ஸர் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். கலிஃபோர்னியாவில் வசித்த தனது தங்கையைப் பற்றி லிஸா அடிக்கடி சொல்லியிருந்தாள், ஆனால் அவர் அவளை சந்தித்ததேயில்லை. அந்த பெண் சவப்பெட்டியின் அருகே வந்தபோது அவர் ஒரு பக்கமாக விலகி நின்றார். அவள் கதறி அழுதால், ஆறுதல் சொல்வதற்கு பக்கத்திலேயே அவர் இருப்பார். அவள் எந்தவொரு தனிப்பட்ட உணர்ச்சியையும் காட்டவில்லை, அவளை அவளது அக்காவோடு விட்டுவிட்டு செல்லலாம் என அவர் முடிவு செய்தார், ஆனால் சொந்த அக்காவினுடையதாக இருந்தாலும் கூட, ஒரு பிணத்தோடு தனியாக இருக்க அவள் பயப்படக்கூடும் என்று அவருக்குத் தோன்றியது.
சில கணங்களுக்குப் பிறகு அவள் திரும்பி, “ஆம், இது அவள்தான்.” என்றாள்.
எதோ சொல்லவேண்டும் என்பதற்காக மேக்ஸ் க்ரெய்ட்ஸர் கேட்டார், “நீங்கள் கலிஃபோர்னியாவிலிருந்து வந்திருக்கிறீர்கள், சரியா?”
“கலிஃபோர்னியாவிலிருந்தா?”
“உங்கள் அக்கா ஒரு காலத்தில் எனக்கு நெருக்கமாக இருந்தாள். அவள் அடிக்கடி உங்களைப் பற்றி பேசுவார். என் பெயர் மேக்ஸ் க்ரெய்ட்ஸர்.”
அந்த பெண் அமைதியாக நின்றாள், அவரது வார்த்தைகளை ஆழ்ந்து யோசிப்பதைப் போல தோன்றியது. பின், அவள் கூறினாள், “நீங்கள் தப்பாக நினைத்திருக்கிறீர்கள்.”
“தப்பாகவா? நீங்கள் அவளது தங்கை பெல்லா இல்லையா?”
“மேக்ஸ் க்ரெய்ட்ஸர் இறந்துவிட்டார் என்று உங்களுக்குத் தெரியாதா? செய்தித்தாள்களில் இரங்கல் செய்தி வந்திருந்ததே!”
மேக்ஸ் க்ரெய்ட்ஸர் புன்னகைக்க முயன்றார். “ஒருவேளை, வேறொரு மேக்ஸ் க்ரெய்ட்ஸராக இருக்கலாம்.” அந்த வார்த்தைகளை உச்சரித்த தருணத்தில் அவர் உண்மையைப் புரிந்துகொண்டார். அவர், லிஸா இருவருமே இறந்து விட்டனர், அவருடன் பேசிய பெண் பெல்லா இல்லை, லிஸாவேதான். அப்போது அவருக்குப் புரிந்தது, அவர் இன்னும் உயிரோடு இருந்திருந்தாரென்றால் வேதனையால் கலக்கமடைந்திருப்பார் என்று. தான் ஒருகாலத்தில் நேசித்த ஒருவரின் மரணத்தை வாழ்வின் மறுபக்கத்தில் இருக்கும் ஒருவனால் மட்டும்தான் அத்தகைய அலட்சியத்தோடு ஏற்றுக் கொள்ள முடியும். தான் அனுபவித்துக்கொண்டிருந்தது ஆன்மாவின் அமரத்துவமா என்று அவர் வியந்தார். அவரால் முடிந்தால் அப்போது சிரித்திருப்பார், ஆனால், உடலென்னும் மாயை மறைந்துவிட்டது; அவருக்கும் லிஸாவிற்கும் உலகியல் சார்ந்த ஒரு வடிவம் இனி மேல் இல்லை. இருந்தாலும், அவர்கள் இருவரும் அங்கே இருந்தார்கள். அவர் சத்தமின்றி கேட்டார், “இது சாத்தியமா, என்ன?”
தனது மிடுக்கான பாணியில் லிஸா பதிலளிப்பது அவருக்கு கேட்டது, “அப்படித்தானே இருக்கிறது, சாத்தியமாகத்தான் இருக்கும்.” அவள் தொடர்ந்து சொன்னாள், “உங்கள் தகவலுக்காக சொல்கிறேன், உங்கள் உடலும் இங்கே தான் கிடக்கிறது.”
“அதெப்படி நிகழ்ந்தது? நான் நேற்றிரவு ஓர் ஆரோக்கியமான மனிதனாகத்தான் உறங்கப் போனேன்.”
“அதொன்றும் நேற்றிரவு இல்லை, கூடவே, நீங்கள் ஆரோக்கியமாகவும் இல்லை. இந்த நடைமுறையில் ஓரளவு அம்னீசியாவும் சேர்ந்து கொள்வதாகத் தோன்றுகிறது. எனக்கது ஒரு நாள் முன்னதாக நடந்தது, அதனால்………..”
“எனக்கு மாரடைப்பு வந்துவிட்டதா என்ன?”
“இருக்கலாம்.”
“உனக்கு என்ன ஆயிற்று?” அவர் கேட்டார்.
“என்னைப் பொருத்தவரையில், எல்லாமே நீண்ட காலம் பிடிக்கும். அது இருக்கட்டும், என்னைப் பற்றி நீங்கள் எப்படி தெரிந்துகொண்டீர்கள்?” என்று கேட்டாள் அவள்.
“நான் கட்டிலில் படுத்துக்கொண்டிருந்ததாக நினைத்தேன். எட்டு மணியாக பதினைந்து நிமிடங்கள் இருந்தபோது, தொலைபேசி அடித்தது, ஒரு பெண்மணி உன்னைப் பற்றி என்னிடம் கூறினாள். அவள் தன் பெயரைக் கூற மறுத்துவிட்டாள்.”
“எட்டு மணியாக பதினைந்து நிமிடங்கள், அதற்கு முன்னமே உங்கள் உடல் இங்கே இருந்தது. நீங்கள் போய் உங்களை பார்க்க விரும்புகிறீர்களா? நான் உங்களை பார்த்துவிட்டேன். நீங்கள் எண் 5-இல் இருக்கிறீர்கள். அவர்கள் உங்களை ஓர் ஆணழகனாக(க்ராஸவெட்ஸ்) மாற்றிவிட்டார்கள்.”
பல வருடங்களாக யாரும் க்ராஸவெட்ஸ் என்று சொல்லி அவர் கேட்டிருக்கவில்லை. அதன் பொருள் அழகான ஆண் என்பது. லிஸா ரஷ்யாவில் பிறந்தவள், அவள் அடிக்கடி அந்த வார்த்தையை பயன்படுத்தினாள்.
“இல்லை, எனக்கு ஆர்வமில்லை.”
தேவாலயம் அமைதியாக இருந்தது. சுருள் முடியும், பளிச்சென்ற கழுத்துப் பட்டையுமுடைய முழு சவரம் செய்திருந்த ஒரு ரப்பி(யூத மதகுரு) லிஸாவைப் பற்றி ஓர் உரை நிகழ்த்தினார். “ஒரு வார்த்தையில் சரியாக சொல்வதென்றால் அவர் ஓர் அறிவார்ந்த பெண்மணி.” என்றார். “அவர் அமெரிக்காவிற்கு வந்தபோது பகல் முழுதும் ஒரு கடையில் வேலை செய்தார், இரவில் கல்லூரிக்குச் சென்றார், முதன்மையான தரத்தில் பட்டம் பெற்றார். அவருக்கு துரதிருஷ்டம் வந்துவிட்டது, அவருடைய வாழ்வில் பல விஷயங்கள் மோசமாக நடந்துவிட்டன, இருந்தாலும் அவர் மிக நாணயமான ஒரு பெண்மணியாகவே இருந்தார்.”
“நான் அந்த ஆளை சந்தித்ததேயில்லை. அவருக்கு என்னைப் பற்றி எப்படித் தெரியும்?” லிஸா கேட்டாள்.
“உனது உறவினர்கள் அவரை ஏற்பாடு செய்து தகவல்களை கொடுத்தார்கள்.” என்றார் க்ரெய்ட்ஸர்.
“இந்த மாதிரி கூலிகொடுத்து கிடைக்கும் பாராட்டுகளை நான் வெறுக்கிறேன்.”
“முதல் நீள் இருக்கையில் இருக்கும் சாம்பல் நிற மீசையுடைய அந்த நபர் யார்?” மேக்ஸ் க்ரெய்ட்ஸர் கேட்டார்.
லிஸா சிரிப்பதைப் போல ஏதோ உச்சரித்தாள். “என் கணவராக இருந்தவர்.”
“உனக்கு திருமணம் ஆகிவிட்டதா? உனக்கொரு காதலன் இருந்ததாகத்தானே நான் கேள்விப்பட்டேன்.”
“நான் எல்லாவற்றையும் முயன்று பார்த்தேன், என்ன செய்தாலும் வெற்றியேதும் கிடைக்கவில்லை.”
“நீ எங்கே போக விரும்புகிறாய்?” மேக்ஸ் க்ரெய்ட்ஸர் கேட்டார்.
“ஒருவேளை உங்களுடைய சடங்கிற்கு போகலாம்.”
“வேண்டவே வேண்டாம்.”
“என்ன மாதிரியான இருப்புநிலை இது?” லிஸா கேட்டாள். “நான் எல்லாவற்றையும் பார்க்கிறேன். எல்லோரையும் அடையாளம் தெரிகிறது. அதோ என் ரெய்சல் அத்தை இருக்கிறார். அவருக்கு நேர் பின்புறம் என் அத்தை மகள் பெக்கி. நான் உங்களை ஒருமுறை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தேன்.”
“ஆம், உண்மைதான்.”
“தேவாலயம் பாதி காலியாக இருக்கிறது. இதைப் போன்ற சூழ்நிலைகளில் மற்றவர்களிடம் நான் நடந்து கொண்டதை வைத்துப் பார்த்தால், எனக்கு இப்படி நடப்பது சரிதான். உங்களுக்கு தேவாலயம் நிரம்பியிருக்கும் என்பது எனக்கு உறுதியாக தெரியும். நீங்கள் காத்திருந்து பார்க்க விரும்புகிறீர்களா?”
“அதை அறிந்துகொள்வதில் எனக்கு சிறிதளவு ஆசை கூட இல்லை.”
அந்த ரப்பி தன் புகழ்ச்சியுரையை முடித்திருந்தார், ஒரு மத பாடகர் “கருணை நிறைந்த கடவுள்” ஜெபத்தை ஓதினார். அவர் பாடியது கிட்டத்தட்ட அழுவதைப் போலிருந்தது, லிஸா சொன்னாள், “என் சொந்த அப்பா கூட இந்த மாதிரி அழுது புலம்பியிருக்க மாட்டார்.”
“சம்பளம் கொடுக்கப்பட்ட கண்ணீர்.”
“தேவைக்கு அதிகமாகவே எனக்கு கிடைத்துவிட்டது.” என்றாள் லிஸா. “நாம் போகலாம்.”
அவர்கள் அந்த இறுதிச்சடங்கு அரங்கிலிருந்து தெருவிற்கு மிதந்து சென்றார்கள். அங்கே, பிணத்தை எடுத்துச் செல்லும் வண்டியின் பின் ஆறு லிமோசின்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. ஓட்டுனர்களில் ஒருவன் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.
“இவர்கள் மரணம் என்றழைப்பது இது தானா?” லிஸா கேட்டாள். “அதே நகரம், அதே தெருக்கள், அதே கடைகள். நானும் கூட அதே மாதிரிதான் இருக்கிறேன்.”
“ஆம், ஆனால், உடல் இல்லாமல்.”
“அப்படியானால், நான் என்ன? ஒரு ஆன்மாவா?”
“சத்தியமாக உன்னிடம் என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை.” என்றார் மேக்ஸ் க்ரெய்ட்ஸர். “உன்னால் பசியை உணர முடிகிறதா?”
“பசியா? இல்லை.”
“தாகம்?”
“இல்லை. இல்லை. இதெற்கெல்லாம் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?”
“நம்பமுடியாத, அபத்தமான, மிகவும் மோசமான மூட நம்பிக்கைகள் எல்லாம் உண்மையென நிரூபணம் ஆகின்றன.” என்றார் மேக்ஸ் க்ரெய்ட்ஸர்.
“ஒருவேளை சொர்க்கமும் நரகமும் இருக்கிறதா என்று கூட நாம் கண்டுபிடிப்போம் போல!”
“இந்த நிலையில் எதுவும் சாத்தியம் தான்.”
“ஒருவேளை அடக்கம் முடிந்ததும் நாம் மேலிருக்கும் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டு, நம் செயல்களுக்கெல்லாம் விளக்கம் கொடுக்குமாறு கேட்கப்படுவோமோ?”
“அதுவும் கூட நடக்கலாம்.”
“நாம் சேர்ந்திருக்கிறோமே, அதெப்படி நடக்கிறது?”
“தயவுசெய்து இதற்கு மேலும் கேள்விகள் கேட்காதே. உன்னளவிற்கு தான் எனக்கும் தெரியும்.”
“நீங்கள் வாசித்த, எழுதிய அத்தனை தத்துவ படைப்புகளும் ஒரு பெரிய பொய் என்றுதான் இதற்கு அர்த்தமா?”
“இன்னும் மோசம் – அவை சுத்த முட்டாள்தனம் தான்.”
அந்த கணத்தில், சவப்பெட்டி தூக்குபவர்கள் நால்வர் லிஸாவின் உடலைத் தாங்கிய சவப்பெட்டியை வெளியே தூக்கிக்கொண்டு வந்தார்கள். அதன் மேல் தங்கநிற எழுத்துகளிலான ஒரு வாக்கியத்துடன் கூடிய ஒரு மலர்வளையம் கிடந்தது: “மறக்கமுடியாத லிஸாவிற்கு அன்பான நினைவுகளோடு.”
“அது யாருடைய மலர்வளையம்?” என்று கேட்ட லிஸா, தனக்குத்தானே பதிலளித்தாள், “இதில் அவர் கஞ்சத்தனமாக இல்லை.”
“நீ அவர்களுடன் இடுகாட்டிற்கு செல்ல விரும்புகிறாயா?” என்று கேட்டார் மேக்ஸ் க்ரெய்ட்ஸர்.
“இல்லை, எதற்காக? ஒருவேளை அந்த போலி பாடகர் என்னைப் பற்றி ஒரு சிணுங்கலான ஜெபம்(Kaddish) ஓதுவார்.”
“நீ என்ன செய்ய விரும்புகிறாய்?”
லிஸா தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள். அவளுக்கு எதுவும் விருப்பமில்லை. என்ன ஒரு விசித்திரமான நிலை, ஒற்றை ஆசை கூட இல்லாதிருக்கும்படி! அவளால் நினைத்துப் பார்க்கமுடிந்த அத்தனை வருடங்களிலும், அவளுடைய விருப்பங்கள், அவளுடைய ஏக்கங்கள், அவளுடைய பயங்கள் விடாது அவளை தொந்தரவு செய்தன. அவளுடைய கனவுகள் விரக்தியும், பரவசமும், கட்டுக்கடங்கா வேட்கையும் நிறைந்தனவாக இருந்தன. வேறெந்த பேரழிவையும் விட அதிகமாக, அதுவரையிருந்த அத்தனையும் அழிக்கப்பட்டு கல்லறையின் இருள் துவங்கும் இறுதிநாளை நினைத்து அஞ்சினாள் அவள். ஆனால், இங்கே அவள் கடந்த காலத்தை நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள், மேலும் மேக்ஸ் க்ரெய்ட்ஸர் மறுபடியும் அவளுடனேயே இருந்தார். அவள் அவரிடம் கூறினாள், “முடிவு இன்னும் அதிக தத்ரூபமாக இருக்குமென நான் கற்பனை செய்தேன்.”
“இது முடிவென்று நான் நம்பவில்லை.” என்றார் அவர். “ஒருவேளை இரண்டு விதமான இருப்புநிலைகளுக்கு இடைப்பட்ட மாறும் நிலையாக இருக்கலாம்.”
“அப்படியானால், இது எவ்வளவு காலம் நீடிக்கும்?”
“காலத்திற்கு முடிவென்பது இல்லாததால் ஒரு குறிப்பிட்ட கால வரையறை என்பதற்கு எந்த பொருளுமில்லை.”
“பார்த்தீர்களா, உங்களுடைய புதிர்களுடனும் முரண்பாடுகளுடனும் நீங்கள் இன்னும் அப்படியே தான் இருக்கிறீர்கள். வாருங்கள், உங்களுக்காக துக்கப்படுபவர்களைப் பார்ப்பதை நீங்கள் தவிர்க்க வேண்டுமென்றால், நாம் இங்கேயே இருந்துகொண்டிருக்கக் கூடாது.” என்றாள் லிஸா. “நாம் எங்கே செல்ல வேண்டும்?”
“நீயே கூட்டிச் செல்.”
மேக்ஸ் க்ரெய்ட்ஸர் அவளது சூட்சுமமான கையைப் பிடித்தார், எந்த குறிக்கோளும் இல்லாமல், போய்ச் சேருமிடமும் இல்லாமல் அவர்கள் மேலெழ ஆரம்பித்தனர். ஒரு விமானத்திலிருந்து செய்வதைப் போல, அவர்கள் கீழே பூமியைப் பார்த்தார்கள், நகரங்களை, ஆறுகளை, வயல்வெளிகளை, ஏரிகளை என எல்லாவற்றையும் பார்த்தார்கள், மனிதர்களைத் தவிர.
“நீங்கள் ஏதும் சொன்னீர்களா?” என்று கேட்டாள் லிஸா.
மேக்ஸ் க்ரெய்ட்ஸர் பதிலளித்தார், “எனது எல்லா ஏமாற்றங்களிலும், அமரத்துவம் தான் மிகப்பெரியது.”

-எழுத்தாளர் சுஷில் குமார்

 

 

 

Please follow and like us:

2 thoughts on “மறு சந்திப்பு

  1. புனைவுடன் கூடிய அழகிய ஆனால் சுருக்கிட்ட கதை,மிகவும் சிறப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *