வதைபட்டதொரு தீக்கோழி
தீக்கோழியொன்றை வளர்ப்பதில்
என்ன வேடிக்கையிருக்கிறது.
ஒரு விலங்குக் காட்சியகத்தில்
சில யார்டுகள் சேற்றில்.
கால்கள் நீளமானதில்லையா?
கழுத்து, அதுவும் நீண்டதல்லவா?
பனி பொழியும் நாட்டில்
அதன் சிறகுகளும் வதைக்கப்பட்டனவா?
வயிறு வெறுமையானதால்
அது கடினமான பாண் றாத்தல்களைச்
சாப்பிடுகிறதென நினைக்கிறேன்.
இன்னும் தீக்கோழிகள்
தூரத்தையே பார்த்தபடியிருக்கின்றன.
இல்லையா?
அவை தீவிரமாக எரிகின்றனவா?
அவை நீலக்காற்றின் வருகைக்காக
காத்தபடியிருக்கின்றனவா?
முடிவின்மையின் கனவுகளைப்பற்றி
அதன் எளிய சிறிய தலையி்ல்
ஒரு எழுச்சியிருக்கிறதா?
இனிமேலும் இதுவொரு
தீக்கோழியே இல்லை அல்லவா.
மக்களே இதை நிறுத்துங்கள்.
~டகமுரா கொடாரோ
( நீலக் காற்று என்பது இயற்கையால் வழிநடத்தப்படும் ஆன்மீக விழிப்புணர்வு )
வசந்தகால நதி
ஏராளமாய் நிரம்பியிருக்கும்
வசந்தகால நதி பாய்கிறதா?
அல்லது பாயவில்லையா?
மிதக்கும் ஒரு வைக்கோல் நகர்கிறது.
இப்படித்தானே நதி பாய்வதை அறிகிறீர்கள்.
அதே போலத்தான்
வசந்தகாலத்தில் கிராமங்களில்
பெரும் நதி ஓடுவதைப் பார்க்கிற களிப்பும்.
மகிழ்ச்சி அமைதியாய்
ஆனந்தமாய்
சோர்வின் எந்த அடையாளங்களுமற்று
மேகத்தைப் போல் பாய்வதை
நான் களிப்புற்றுப் பார்க்கிறேன்.
அதே போலத்தான்
சிறு நதிகளுடன்
ஏராளமாய் முழுமையிருப்பதும்.
வசந்தகாலம் நிரம்பித் ததும்புகிறது.
வசந்தகாலம் நிரம்பித் ததும்புகிறது.
~யமமுரா பொச்சோ
தமிழில்:- சப்னாஸ் ஹாசிம்