தமிழில்- இல. சுபத்ரா

 

ஓர் நாள் காலை நான் என் அண்டைவீட்டினளை எதிர்கொண்டேன். ஒருவருக்கொருவர் முகமன் கூறிக்கொண்டோம். ஒரு கணம் நிதானித்த அவள், ”என்னவொரு அழகான இலையுதிர்காலம்!” என்றபடி வானை நோக்கித் தலையுயர்த்தினாள். நானும் அதையே செய்தேன். உண்மைதான்அக்டோபரில் இப்படியான ஒரு காலை! அது மிகத்தெளிவானதாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் இருந்தது. எதையோ நினைத்துக் கொண்டநான் கையைச் சற்றே அசைத்தபடி, “என்ன அழகானதொரு இலையுதிர்காலம்!” எனக்கூவினேன்.

எனது அண்டைவீட்டினள் ஆமோதித்துத் தலையசைத்தாள்.

 அவளை ஒரு நொடி அவதானித்தேன்அவளது தலை மேலும் கீழும் அசைந்தது. கருணையும் ஆரோக்கியமுமான அவளது முகம் மிகக் கண்ணியமாகவும் பளீரென்றும் காணப்பட்டது. அவளது உதடுகளைச் சுற்றியும் நெற்றியிலும் மட்டுமே சற்று நிழல்படிந்த சுருக்கங்களைக் காண முடிந்தது.

அவை எதனால் ஏற்பட்டிருக்கக்கூடும்?

பிறகு திடீரென நான், “உங்களது மகள்கள் எப்படி இருக்கிறார்கள்?’ என வினவினேன்.

உடனடியாக சுருக்கங்கள் நீங்கி முழுமையாக ஒளிர்ந்த அவளது முகம் மீண்டும் அவசரமாக முன்பைவிட அடர்த்தியாக அவற்றை அணிந்துகொண்டது.

 

தெய்வத்தின் ஆசியில் அவர்கள் நலமாக இருக்கிறார்கள், ஆனால்…“என்றபடி அவள் முன்னோக்கி நடக்க ஆரம்பிக்க ஒரு கனவானுக்குத் தக்கபடி நானும் அவளது இடதுபுறம் இணைந்து நடக்க ஆரம்பித்தேன்.

 

உங்களுக்குத் தெரியுமா, இப்போது என் குழந்தைகள் நாள் முழுக்கக் கேள்விகள் கேட்கும் பருவத்தில் இருக்கிறார்கள். நாள் முழுக்க, இரவிலும் கூட, என்ன என்கிறவார்த்தையையே உச்சரித்தபடி இருக்கிறார்கள் அவர்கள்.”

 

ஆமாம்,” என முனகிய நான், “அப்படி ஒரு பருவமும் வரத்தான்…”எனும் முன்பு,

எனது இடையீட்டைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்த அவள்,

ஆனால், ’அந்தக் குதிரை வண்டி எங்கே செல்கிறது?’’வானில் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளன?’’பத்தாயிரம் என்பது மிகப் பெரியதா?’போன்றவை அல்ல அவை. என் மகள்கள் வேறுமாதிரியான கேள்விகளைக் கேட்கிறார்கள். ’நமது தெய்வத்தால் சீன மொழியிலும் பேச முடியுமா?’’ கடவுள் பார்க்க எப்படி இருப்பார்?’போன்றவை அவை. எப்போதும் கடவுளைப் பற்றியே கேட்கிறார்கள். ஆனால் நீங்களோ நானோ அறிந்திருக்கக்கூடிய விஷயங்கள் அல்ல அவை.”

 

ம், நீங்கள் சொல்வது சரிதான்,” என ஒப்புக்கொண்ட நான், “நம்மால் அதனை சற்றேறக்குறைய ஊகிக்க முடியும் என்றாலும்…”

 

அல்லது அவர்கள் கடவுளின் கைகளைப் பற்றிக் கேட்கிறார்கள். இதற்கெல்லாம் ஒருவர் எப்படி எதிர்வினையாற்றஇதைப் பற்றி ஒருவர் என்ன அறிந்திருக்க முடியும் என எதிர்பார்க்க…”  

 

நான் எனது அண்டைவீட்டினளின் கண்களுக்குள் பார்த்தேன்.

நான் வேண்டுமானால்…?” எனப் பணிவாகக் கேட்டேன். ”நீங்கள் இப்போது கடவுளின் கைகளைப் பற்றிக் குறிப்பிட்டீர்கள். இல்லையா?”

 

எனது அண்டைவீட்டினள் தலையசைத்தாள். அவள் சற்று ஆச்சர்யமுற்றிருப்பதாகத்தோன்றியது.

 

ஆமாம், அதாவது,” என அவசரமாகத் தொடர்ந்தேன் நான். “எனக்கு அந்தக் கரங்களைப்பற்றி ஓரிரு விஷயங்கள் தெரியும்.” அண்டைவீட்டினளின் கண்கள் பெரிதாகிக்கொண்டே செல்வதைக் கண்ட நான், “ஆமாம், சந்தர்ப்பவசமாக எனக்கு அந்தக் கரங்கள் குறித்து ஓரிரு விஷயங்கள் தெரியும்.” என்றேன். ”விதிவசப்படி, எனக்குத் தெரிந்ததை நான் உங்களுக்குச் சொல்லவும் விரும்புகிறேன். உங்களுக்குச் சற்று நேரம் இருக்குமாயின் நான் உங்கள் வீடுவரை உடன் வருகிறேன். அந்த நேரம் எனக்குப் போதுமானதாக இருக்கும்.”  என மிக உறுதியாகக் கூறினேன்.

 

பேசுவதற்கான வாய்ப்புக் கிடைத்ததும், ”மிக்க மகிழ்ச்சி, அவசியம் சொல்லுங்கள்,” எனக்கூறிய அவள் இன்னமும் ஆச்சரியத்தில் இருப்பதாகத்தான் தோன்றியது. “ஆனால் அதை நீங்கள் குழந்தைகளிடமே சொன்னால் சரியாக இருக்காதா?” என வினவினாள்.

 

நானே குழந்தைகளிடம் சொல்வதா? அது என்னால் முடியாது இனியவரே. என்னால் அதைச் செய்யவே முடியாது. குழந்தைகளுக்கு முன்னால் சென்றாலே, உடனடியாக நான்மிகுந்த பதற்றம் அடைந்துவிடுகிறேன். அடிப்படையில் அது அப்படி ஒன்றும் தவறான விஷயம் இல்லைதான். ஆனால் குழந்தைகள் எனது பதற்றத்தைத் தவறாகப்புரிந்துகொள்ளக்கூடும். நான் அவர்களிடம் பொய்யுரைப்பதாக அவர்கள் எண்ணுகிறார்கள் என எனக்குத் தோன்றிவிடும். என் கதையின் உண்மைத்தன்மைதான் வேறெதையும்விட எனக்கு முக்கியம் என்பதால், என்னிடம் கேட்டபிறகு எனக்குப் பதிலாக நீங்கள் ஏன் அவர்களுக்கு அதைத் சொல்லக்கூடாது? அதுமட்டுமின்றி, நிச்சயமாக நீங்கள்அவர்களுக்கு அதை என்னைவிடச் சிறப்பாகச் சொல்லுவீர்கள். அவற்றைத் தொகுக்கவும் தேவைப்படுகிற இடங்களில் அலங்கரிக்கவும் உங்களுக்குத் தெரியுமாய் இருக்கும். ஆனால் நானோ அதை வெறும் தகவல்களாக, சுருக்கமான வடிவில்தான் கூறுவேன். சரியா?”

 

நல்லது, நிச்சயம்எனக் குழப்பத்துடன் பதிலளித்தாள் அண்டைவீட்டினள்.

 

கதைக்கான தருணம் துவங்கிவிட்டது என எண்ணிய நான், ”ஆரம்பத்தில்…” எனத் துவங்கிப் பின் உடனடியாக நிறுத்தினேன்.

உங்களுக்கு ஏற்கனவே சில விஷயங்கள் தெரியும் என நான் ஊகித்துக் கொள்கிறேன் இனிய அண்டைவீட்டினளே. குழந்தைகளுக்கென்றால் நான் அவற்றை முதலில் விளக்கவேண்டியிருக்கும். டைப்பின் போது, ஆரம்பத்தில்…”

 

அங்கே ஒரு குறிப்பிடத்தக்க அமைதி நிலவியது.

 

பிறகு தன்னை மீட்டுக்கொண்ட அந்த இனியவள், “ஆமாம். அடுத்ததாக, ஏழாவது நாளில்…”என ஆரம்பித்தாள். அவளது குரல் சப்தமாகவும் கணீரென்றும் ஒலித்தது.

 

நிறுத்துங்கள்!” என அவளை இடைமறித்தேன். “அதற்கு முன்புவந்த அத்தனை தினங்கள் குறித்தும் நாம் மறந்துவிடக்கூடாதுஏனென்றால் நமது கதையானது குறிப்பாக அந்த தினங்கள் குறித்ததுதான். நாம் எல்லோரும் அறிந்தபடி, அப்போதுதான் நமது இனியதெய்வம் தன் படைப்புத் தொழிலில் இறங்கினார்: புவியைப் படைப்பது, நீரிலிருந்து அதைப் பிரிப்பது, பிரகாசிக்கும்படி ஒளிக்கு ஆணையிடுவது. அதன்பிறகு, பிரமிக்கத்தக்கவேகத்துடன் அவர் பிற விஷயங்களை உருவாக்கினார்அதாவது பூமியில் உள்ள பருப்பொருட்களைப் பற்றிக் குறிப்பிடுகிறேன்எடுத்துக்காட்டாக சிகரங்கள், மலைகள், பிற்பாடு எல்லா மரங்களுக்கும் மாதிரியாக அமைந்த அந்த முதல் தனிமரம்.”

 

அச்சமயத்தில், சற்று நேரமாகவே, எங்களுக்குப் பின்புறத்தில் நான் காலடி ஓசைகளைக்கேட்டேன்அவை எங்களைக் கடந்துசெல்லவும் இல்லை, நின்றுவிடவும் இல்லை. அவற்றால் தொந்தரவடைந்த நான், படைப்பு பற்றிய எனது கதையில் முழுவதுமாக மூழ்கி பின்வருமாறு தொடர்ந்தேன்: ”நீண்ட, ஆழமான சிந்தனைகளுக்குப் பிறகு இந்த எல்லாமும் முதலில் அவரது மனதில் படைத்து முடிக்கப்பட்டிருந்தன என்பதாக உருவகித்துக்கொண்டால்தான், அதன்பிறகு அவ்வளவு விரைவாக வெற்றிகரமாக அச்செயல் நிகழ்த்தப்பட்டதனை நம்மால் உண்மையில் புரிந்துகொள்ள முடியும். அவர் அதைச்செய்யும் முன்பாக…”

 

இதற்குள்ளாக அந்தக்காலடிகள் எங்களை வந்து சேர்ந்திருக்க, அப்படியொன்றும் இனிதானதல்லாத ஒரு குரல் தன்னை எங்களுடன் இணைத்துக் கொண்டது.

 

, நீங்கள் திரு. ஸ்க்மிடிட் குறித்துப் பேசிக்கொண்டிருக்கக்கூடும். என்னை மன்னிப்பீர்களாயின்…”

 

நான் எரிச்சலுடன் அவரைக் கவனிக்க, எனது அண்டைவீட்டினள் மிகுந்த சங்கடமாய் உணர்ந்தாள்.

 

ஹ்ம்என இருமிய அவள், “இல்லை. அதாவது, நான் என்ன சொல்கிறேனென்றால், ஆமாம். நாங்கள் உண்மையில்பேசியதென்னவென்றால், இப்போதுதான் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம்…”

 

எதுவுமே நிகழாததுபோல, “என்னவொரு அழகான இலையுதிர்காலம்எனத் திடீரெனவியந்தாள் அந்தப் புதிய பெண். அவளது சிவந்த சிறிய முகம் முழுவதும் தகதகத்துக்கொண்டிருந்தது.

 

ஆமாம்,” எனப் பதிலளித்தாள் என் அண்டைவீட்டினள். “நீங்கள் சொல்வது சரிதான் திருமதி.ஹூப்ஃபர். அட்டகாசமான ஒரு இலையுதிர்க் காலத்தில்தான் நாம் இருக்கிறோம்.”

 

பிறகு அவ்விருபெண்களும் விடைபெற்றுக் கொண்டார்கள்.

 

திருமதி. ஹூப்ஃபர் இன்னமும் மென்மையாகப் புன்னகைத்துக் கொண்டிருந்தாள். “உங்களது சிறிய மகள்களுக்கு என் அன்பைத் தெரிவியுங்கள்என்றாள்.

ஆனால் என் இனிய அண்டைவீட்டினளுக்கு அதில் எதுவும் கவனம் இருக்கவில்லை. எனது கதையின் மீதத்தைக் கேட்பதில் அவள் மிகுந்த ஆர்வமுடன் இருந்தாள்.

 

என்றாலும், ”நாம் எங்கே நிறுத்தினோம் என்பது எனக்குக் கிஞ்சித்தும் நினைவில்லையேஎன நான் சொல்லொனாத் தீவிரத்துடன் அவளிடம் கோரினேன்.

 

நீங்கள் அவரது தலையைக் குறித்துக் கூறத் துவங்கினீர்கள். அதாவது…” என்ற எனது அண்டைவீட்டினளின் முகம் கருஞ்சிவப்பு நிறத்திற்குச் சென்றது. இது உண்மையிலேயே என்னை வருந்தச் செய்ததால், நான் எனது கதைக்கு அவசரமாகத் திரும்பினேன்.

 

ஆமாம், பூமியில் மட்டுமே உயிர்கள் இருந்த காலம் வரையில் நமது நற்தேவன் அதனைத்தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருக்க வேண்டிய தேவை இருந்திருக்கவில்லை. அங்கே அப்படி ஒன்றும் பெரிதாக நிகழ வாய்ப்பிருக்கவில்லை. அச்சமயத்தில் காற்று மட்டுமே மலைகளின் குறுக்காகப் பயணிக்கத் தொடங்கியிருந்ததுஅதற்கு முன்பே காற்று அறிந்திருந்த மேகங்களையே அது பெரும்பாலும் ஒத்திருந்தது. என்றாலும் அது மரங்களின் உச்சியைத் தவிர்த்தே வந்ததுஅவற்றின் பால் அதற்கு நம்பிக்கை இருந்திருக்கவில்லை.”

 

இதில் கடவுளுக்கு மறுப்பேதும் இருந்திருக்கவில்லை. கடவுள் தன் தொழிலை உறக்கத்தில் நிகழ்த்தினார் என்றே சொல்லலாம். விலங்குகளைப் படைக்கத்துவங்கும்வரை அத்தொழில் அவருக்குப் பெரிதாய் ஆர்வமூட்டியிருக்கவில்லை. குனிந்து தன் படைப்புத் தொழிலில் கவனமானவர், அரிதாகவே புருவங்களை உயர்த்தி பூமியின் மேல் பார்வையைச் செலுத்த வேண்டியிருந்தது. உண்மையில், மனிதனைப் படைக்கத்துவங்கியபிறகு அவர் ஒட்டுமொத்த பூமியைக் குறித்தும் மறந்திருந்தார்.

 

திடீரென இறக்கைகளின் சப்தம் அவரை நெருங்கிவந்த போது அவர் மனித உடலின் எந்தச் சிக்கலான பாகத்தைப் படைத்துக்கொண்டிருந்தார் என்பது குறித்து எனக்கு உறுதியாகத்தெரியவில்லை. அவரை நோக்கி விரைந்து வந்த தேவதை ஒன்று, “அனைத்தையும் காணுகிற தாங்கள்…” எனப் பாடியது. நமது இனிய தேவன் எச்சரிக்கை அடைந்தார். அந்த தேவதையை பாவமிழைக்கச் செய்துவிட்டார் தேவன். ஏனென்றால் அப்போது அது பாடியது பொய்யாகும்.”

 

உடனடியாக, பிதாவாகிய கடவுள் பூமியைக் குனிந்து பார்த்தார்சரிசெய்ய முடியாத ஏதோ ஒன்று நடந்துவிட்டதுதான் போல! ஒரு சிறிய பறவை, எதனாலோ பயந்துவிட்டாற்போல் பூமியின் மேல் முன்னும் பின்னுமாகப் பறந்து கொண்டிருந்தது. அது வீட்டிற்கான வழியைக் கண்டறிய நம் இனிய தேவனால் உதவ முடியவில்லை. பரிதாபத்திற்குரிய அவ்வுயிர் எந்த வனத்திலிருந்து வந்தது என்பதை அவர் கவனித்திருக்கவில்லை.”

 

மிகுந்த ஆத்திரமடைந்த கடவுள், ’பறவைகளை நான் எங்கே இருத்துகிறேனோ அங்கேயே அவை அசைவின்றி இருக்க வேண்டும்என்றார். ஆனால், பூமியிலும் தங்களைப்போன்ற ஜீவன்கள் இருக்க வேண்டும் என தேவதைகள் வேண்டிக்கொண்டதற்கிணங்கத் தான் பறவைகளுக்கு இறக்கைகளை வழங்கியது அவருக்கு அதன் பின்புதான் நினைவிற்கு வந்தது. இந்த உண்மை அவரை மேலும் சினத்திற்குள்ளாக்கியது.

 

இது போன்றதொரு மனநிலையிலிருந்து மீள உழைப்பு ஒன்றைத்தவிர வேறெந்த வழியும் இல்லை என்கிற நிலை ஏற்பட்டிருந்தது. மனித இனத்தைப் படைப்பதில் ஈடுபட்டதும் தன் ஆன்மா பலமடைவதை தேவன் உணர்ந்தார். தன் மடியில் மிக மெதுவாகவும் கவனமாகவும்தேவதையின் கண்களைக் கண்ணாடிபோல் பாவித்து தன் உருவ அமைப்பைப் பிரதிசெய்தவர்முதல் மனித முகத்தை ஒரு உருண்டைப் பந்தில் உருவாக்கியிருந்தார். நெற்றி மிக அழகாக வடிவம் பெற்றிருக்க, இரண்டு நாசிகளையும் சமச்சீராகப் படைப்பது மிகச் சிரமமான காரியமாய் இருந்தது. மேலும் குனிந்து கவனமாகத் தன் பணியைத் தொடர்ந்தவரின் தலைக்கு மேல், மீண்டும் ஒருமுறை இறக்கைகளின் ஓசை ஒலித்தது. கடவுள் நிமிர்ந்து பார்த்தார். அதே தேவதை முன்பு போலவே அவருக்கு மேலாகப் பறந்து கொண்டிருந்தது.  ஆனால் இம்முறை அதனிடமிருந்து பாடல் எதுவும் ஒலிக்கவில்லைபொய்யுரைத்ததற்குத் தண்டனையாக அதன் குரல் அமர்த்தப்பட்டிருந்தது. ஆனால் அதன் உதடுகள்எல்லாவற்றையும் காணுகிற தாங்கள்…” எனும் விதமாக அசைவதை இறைவனால் காணமுடிந்தது.

 

சரியாக அந்த நேரத்தில், இறைவனின் அதீத மதிப்பிற்குரியவரான புனிதர் நிகோலஸ் அங்கே தோன்றினார். தனது தாடிக்குள்ளிருந்து பேசிய அவர், ”மிக கர்வமிக்க உயிரினமாக இருந்த போதிலும் உங்களது சிங்கங்கள் வெகு அமைதியாக அமர்ந்திருக்கின்றன. ஆனால் ஒரு சிறிய நாய் பூமியின் விளிம்பில் விளையாடிக் கொண்டிருக்கிறது. ஒருடெர்ரியர்*. உங்களால் பார்க்க முடிகிறதா? அவன் விளிம்பிலிருந்து கீழே விழப்போகிறான்!” என்றார். சொல்லப்போனால், அது உண்மைதான். நமது புவி அபாயகரமான உருண்டைவடிவில் இருக்கிற ஸ்காண்டினேவியப் பகுதிக்கு அருகில் வெண்மையான ஒரு ஒளி முன்னும் பின்னும் நடனமாடுவதைக்  கடவுளால் காணமுடிந்தது. அதனால் மிகுந்த ஆத்திரமடைந்த கடவுள், தனது படைப்பான சிங்கங்கள் குறித்துத் திருப்தி இல்லையென்றால் அவரே அவர் விரும்பும்படியான ஒன்றைப் படைத்துக் கொள்ளவேண்டும் எனப் புனிதர் நிகோலஸைக் கடிந்துகொண்டார். இதனால் கதவினைப் பலமாகச் சாத்திவிட்டு சொர்க்கத்திலிருந்து புனிதர் நிகோலஸ் வெளியேறியபோது அங்கிருந்து உதிர்ந்த ஒரு நட்சத்திரம் டெர்ரியரின் தலையில் தாக்கியது.

 

எல்லாக் குழப்பங்களும் முடிந்திருக்க, நடந்துவிட்ட நிகழ்வுகள் அனைத்திற்கும் தற்போதைய சூழலுக்கும் தான் மட்டுமே பொறுப்பு என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியநிலை கடவுளுக்கு ஏற்பட்டிருந்தது. இனி ஒருபோதும் பூமியைத் தன் பார்வையிலிருந்து நீங்க அனுமதிக்கக்கூடாதென அவர் முடிவுசெய்து கொண்டார். அப்படியே செய்தார்.

 

தன்னளவிலேயே ஞானம் உடையவையாய் இருந்த தன் கரங்களிடம் தன் வேலைகளை  முடிக்க பணித்தார் கடவுள். மனித உருவம் எப்படி அமையப் பெறும் என்பது குறித்துமிகுந்த ஆர்வம் கொண்டிருந்தபோதும், தன் பார்வையைப் பூமியை விட்டுத்திருப்பாமலேயே வைத்திருந்தார். ஆனால் அவரைக் கடுமையாக மறுப்பது போலவோ என்னவோ பூமியில் ஒரு சிறிய இலை கூட அசையவில்லை. அவ்வளவு சிரமங்களுக்குப்பிறகு ஒரே ஒரு சிறிய மகிழ்ச்சியையேனும் அனுபவிக்க விரும்பிய கடவுள், மனிதனுக்கு உயிர் கொடுக்கும் முன்பு அவனைத் தனக்குக் காட்டுமாறு தன் கரங்களுக்கு ஆணையிட்டார். கண்ணாமூச்சி ஆடும் போது குழந்தைகள் கேட்பது போல தயாரா? தயாரா? எனத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அதற்கு பதிலாக அவருக்குக் கேட்டதெல்லாம், களிமண் பிசைகிற கரங்களின் ஓசை மட்டுமே. எனவே அவர் காத்திருந்தார். ஆனால் அது மிக நீண்ட காத்திருப்பாகத் தோன்றியது அவருக்கு. அதற்குப்பிறகு, திடீரென, பழுப்பான ஒருபொருள் அண்டவெளியில் விழுவதை அவர் கவனித்தார். அப்பொருள் அவருக்கு வெகு அருகில் இருந்து விழுந்தது போன்றும் தோன்றியது. ஏதோ தீய சகுனம் என மனதில் உணர்ந்தவர் தன் கைகளை அழைத்தார். கோபமும் நடுக்கமுமாக அவை அவர்முன் தோன்றின. அவை தம் பரிசுத்தத்தை இழந்திருந்தன, களிமண்ணால் முழுவதுமாகக் கறைபட்டிருந்தன. ”மனிதன் எங்கே?” என அவற்றிடம் இடியாகமுழங்கினார் கடவுள். உடனடியாக இடது கையைத் தாக்கிய வலது கை, ”நீதான் அவனைப்போக விட்டாய்என்றது. ”தயவுசெய்து நிறுத்து, ’எல்லாவற்றையும் நானே பார்த்துக்கொள்கிறேன்என நீதான் இருந்தாய். இவ்விஷயத்தில் எனது எந்தக் கருத்திற்கும் நீ மதிப்பளிக்கவில்லைஎன விரக்தியாகப் பதில் அளித்தது இடதுகை. ”ஆனால் அவனைக் கெட்டியாகப் பிடித்து வைத்திருக்க வேண்டியது உனது பொறுப்பாகத்தான் இருந்ததுஎன்றபடி அடிக்க ஓங்கிய வலது கை, அதைவிடச் சிறந்த ஓர் எண்ணம் தோன்ற, நிதானித்தது. இரண்டு கைகளும் தான் தான் முதலில் பேச வேண்டும் என்னும் அவசரத்துடன், ”மனிதனுக்குப் பொறுமையே இல்லை. வாழ்வதற்காக அவன் மிகவும் அவசரப்பட்டான். இதில் எங்களது தவறு எதுவும் இல்லை, எங்களில் யாரையுமே நீங்கள்குறை கூற முடியாதுஎன்றன.

நமது இனிய தேவன் மிகுந்த கோபம் கொண்டார். பூமியை நோக்கிய அவரது பார்வையை மறைத்துக் கொண்டிருந்த அந்த இரண்டு கரங்களையும் தள்ளிவிட்டபடி, ”உங்கள் இருவரையும் எனக்கு வெறுத்து விட்டது. உங்களுக்கு என்ன விருப்பமோ அதைச்செய்யுங்கள்என்றார். அதற்குத்தான் நீண்ட காலமாக அவை இரண்டும் முயற்சித்துக்கொண்டிருந்தன. என்றாலும் எப்போதுமே அவற்றால் விஷயங்களை தொடங்க மட்டுமே முடிந்தது. ஏனென்றால் இறைவனின்றி எதுவும் முழுமையாவதில்லை. இதனால் காலம் செல்லச் செல்ல அந்தக் கரங்கள் மிகுந்த சோர்வடைந்து, இப்போது நாள் முழுவதும் முழங்கால் இட்டு வருந்தியடி இருக்கின்றன. அதாவது, மக்கள் அவற்றைப் பற்றிக் கூறுகிற கதைகள் அவ்வாறுதான் இருக்கின்றன. அதனால்தான் எப்போதுமே ஏழாம் நாளில் கடவுள் ஓய்வெடுப்பது போல் நமக்குத் தோன்றுகிறது. ஏனென்றால் தன் கரங்கள் மேல் அவர்மிகுந்த ஆத்திரம் அடைந்திருந்தார்.”

 

இதன்பிறகு நான் ஒரு நொடி அமைதியாக இருந்தேன்.

 

இந்தஅமைதியை மிக விவேகமாகப் பயன்படுத்திக் கொண்ட அண்டை வீட்டினள், “கடவுளும் அவரது கரங்களும் ஒருபோதும் சமாதானமாக மாட்டார்கள் என நீங்கள் நம்புகிறீர்களா?” என்றாள்.

இல்லையில்லை, சமாதானம் ஆவார்கள். குறைந்தபட்சம் நான் அப்படித்தான் நம்புகிறேன்.” என்றேன்.

அது எப்போது நடக்கும்?”

அவரது விருப்பத்திற்கு மாறாக, அவரது கைகள் விடுவித்த மனிதன் எப்படி இருக்கிறான் என்பதை அவர் கண்ட பிறகுதான் அது நிகழமுடியும்.”

 

சற்று நேரம் இது குறித்துச் சிந்தித்த என் இனிய அண்டை வீட்டினள் சட்டெனச் சிரித்தாள்.

ஆனால் சற்றுக் கீழே குனிந்திருந்தாலே அவரால் அவனைப் பார்த்திருக்க முடியுமே?”

மன்னியுங்கள் இனியவரேஎன்றேன் நான் பணிவாக.”நீங்கள் மிகுந்த கவனம் உடையவர் என்பதை உங்கள் ஐயும் தெளிவுபடுத்துகிறது என்றாலும் என் கதை இன்னும்முடியவில்லை. கடவுள் பூமியைக் காணும்படி அவரது கைகள் சற்றே ஒதுங்கி வழிவிடுவதற்குள்ளாகவே இன்னொரு நிமிடம் கடந்திருந்ததுஅதாவது அது ஓராயிரம் ஆண்டுகளுக்குச் சமம் என்பதை நாம் அறிவோம். ஒரே ஒரு மனிதனைக் காண்பதற்குப்பதிலாக அங்கே கோடிக்கணக்கான மனிதர்கள் தோன்றியிருந்தனர். அவர்கள் முழுவதுமாக ஆடை அணிந்திருந்தனர். அனைவருமே. அக்காலத்தின் வாழ்க்கை முறையானது செயற்கையானதாக இருந்தது, அவர்களது அடையாளத்தையே அதுமாற்றியிருந்தது. எனவே கடவுள் மனிதனின் தவறானமிக மோசமான என்றேசொல்லலாம்பிம்பத்தையே கண்டார்.”

 

ஹ்ம்என எதையோ சொல்ல வாய் எடுத்தாள் என் அண்டை வீட்டினள்.

 

அதற்குக் கவனம் அளிக்காத நான்,”எனவே மனிதன் உண்மையில் என்ன மாதிரியானவன் என்பதைக் கடவுள் அறிய வேண்டியது மிக அவசியமானதாகும். அதை அவருக்குச்சொல்லக் கூடியவர்களும் இருக்கிறார்கள் என்பது குறித்து நாம் மகிழ்ச்சி அடையவேண்டும்.” என மிகுந்த உறுதியுடன் எனது கதையை முடித்தேன்.

 

ஆனால் என் அண்டை வீட்டினள் இன்னும் மகிழ்ந்திருக்கவில்லை.

நீங்கள் யாரைக் குறித்துச் சொல்கிறீர்கள் என நான் அறிந்து கொள்ளலாமா என்றாள்?”

குழந்தைகள். அதுமட்டுமின்றி, அவ்வப்போது, ஓவியர்களும் கவிஞர்களும் கட்டிடக்கலைஞர்களும் கூட…”

எதைக் கட்டுபவர்கள், தேவாலயங்களையா?”

ஆம், தேவாலயங்கள். அல்லது எதை வேண்டுமானாலும்…”

 

எனது அண்டை வீட்டினள் தலையை மெதுவாக அசைத்தாள். என் கதையின் ஏதோ சிலபரிமாணங்கள் அவளைக் குழப்பியிருக்க வேண்டும்.

இதற்குள்ளாகவே நாங்கள் ஏற்கனவே அவளது வீட்டைக் கடந்து சென்றிருந்தோம். எனவே மீண்டும் மெதுவாகத் திரும்பி நடந்தோம்.

திடீரென உற்சாகமடைந்த எனது அண்டை வீட்டினள் சத்தமாகச் சிரித்தாள்.

 

ஆனால் இதெல்லாம் சுத்த அறிவு கெட்டத்தனம். கடவுள் எல்லாமும் அறிந்தவர். எடுத்துக்காட்டாக, அந்தச் சிறிய பறவை எங்கிருந்து வந்தது என்பதை அவர் நிச்சயமாகஅறிந்திருப்பார்.” என்றுகூறியபடி வெற்றியின் சாயையுடன் என்னைப் பார்த்தாள்.

 

நான் சற்றுப் பதற்றம் அடைந்தேன் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். என்றாலும், மீண்டும் நிதானத்திற்கு திரும்பிய நான், தீவிரமான பாவத்தை அணிந்து கொண்டேன். ”இனியவரேஎனத் துவங்கிய நான் அவளுக்குப் பின்வருமாறு அறிவுறுத்தினேன். ”நீங்கள்இப்போது கூறியது முற்றிலும் வேறு ஒரு கதை. நான் எதுவும் சாக்குப் போக்குச்சொல்கிறேன் என நீங்கள் நினைக்க வேண்டாம்என்றதும் அவள் சட்டென அதை உறுதியாக மறுத்தாள். ”நான் உங்களுக்கு ஒரு சிறிய விளக்கத்தைத் தர விரும்புகின்றேன். கடவுளிடம் எல்லாத் திறமையும் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அவை அனைத்தையும் இந்த உலகின் மீது அவர் பிரயோகிக்கும் முன்பாக அவை ஓர் ஒற்றைச்சக்தியாகத் திரண்டிருந்தன. நான் சரியாகச் சொல்கிறேனா எனத் தெரியவில்லை, அவர் பூமியின் உயிர்களைப் படைத்தபோது அவரது ஆற்றல்கள் வெவ்வேறு வகையினதாய் இருந்தனஒருகட்டத்தில் கடமையாகக்கூட அவை ஆகியிருந்தன. தன்னிடம் இருந்த மாறுபட்டதிறன்கள் அனைத்தையும் மிகுந்த வலியுடன் அவர் நினைவுகூர முயன்றார். என்றாலும் வாழ்வில் குழப்பங்கள் இருக்கத்தான் செய்கின்றன. (மற்றொரு விஷயம்: இவைஅனைத்தும் நமக்குள் இருக்கட்டும். தயவுசெய்து குழந்தைகளிடம் நீங்கள் இவற்றைக்கூறவேண்டாம்.)”

 

அதை நான் நினைத்துக்கூடப் பார்க்கமாட்டேன்.” என மறுத்தார் அவர்.

 

ஆனால் பாருங்கள்! ஒருவேளை, ’எல்லாம் அறிந்த தாங்கள்எனப் பாடியபடி ஒரு தேவதை பறந்திருந்தால், எல்லாமே மிகச் சரியாக நிகழ்ந்திருக்கும்…”

 

இப்படி ஒரு கதையே தேவையில்லாமல் போயிருக்கும். அப்படித்தானே?”

 

அதேதான்!” என ஒப்புக்கொண்ட நான் அவளிடமிருந்து விடைபெற முனைந்தேன்.

 

ஆனால் நீங்கள் என்னிடம் சொன்னதெல்லாம் உறுதியாகவே உண்மைதானா?”

 

ஆமாம். உறுதியாகக் கூறுகிறேன்.” என்றேன் நான் அமைதியாக.

 

நல்லது, அப்படியானால் இன்று குழந்தைகளுக்குச் சொல்ல எனக்கு ஒரு கதை கிடைத்துவிட்டது போல் தெரிகிறது!”

 

அதைக் கேட்க நானும் அங்கிருக்கக் கூடாதா! சரி, விடைபெறுகிறேன்.”

 

விடைபெறுகிறேன்என்றாள் அவள்.

 

கிளம்புவதற்கு முன்பாக என்னை நோக்கித் திரும்பியவள்,

ஆனால் அந்தக் குறிப்பிட்ட தேவதை மட்டும் ஏன்…” என ஆரம்பித்தாள்.

 

அவளை இடைமறித்த நான், “என் இனிய அண்டைவீட்டினளே, உங்களது அன்பு மகள்கள் அதிகமாகக் கேள்வி கேட்பது அவர்கள் குழந்தைகளாய் இருப்பதால் மட்டுமல்ல என்பது இப்போது எனக்குத் தெரிகிறதுஎன்றேன்.

 

வேறு எதனால்?” என மிக ஆர்வமாக வினவினாள் அவள்.

 

ம், குழந்தைகள் தங்களது பெற்றோர்களிடமிருந்தும் சில குணநலன்களைப் பெறுகிறார்கள் என மருத்துவர்கள்…”

 

உடனடியாக அவள் என்னை நோக்கி விரலை உயர்த்தியபோதும் நாங்கள் நண்பர்களாகவே பிரிந்தோம்.

 

நீண்டகாலத்திற்குப் பிறகே நான் என் அண்டைவீட்டினளை அடுத்ததாகச் சந்தித்தேன் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். அப்போது அவள் தனியாக இல்லை என்பதால் அவள் எனது கதைகளைத் தன் குழந்தைகளுக்குக் கூறினாளா, அதனை அவர்கள் ரசித்தார்களா என்பதை என்னால் வினவ முடியவில்லை.

 

அதையடுத்து, வெகுவிரைவிலேயே எனக்கு வந்த ஒரு கடிதம் எனது ஐயங்களைத் தீர்க்கஉதவியது.

அதை அனுப்பியவரது அனுமதியைப் பெறவில்லையாதலால் என்னால் அதில் எழுதியிருந்தது குறித்து இங்கே பொதுவில் கூறமுடியாது. ஆனால் அது எப்படி முடிக்கப்பட்டிருந்தது என்பதைக் கூறினால் அதை எழுதியது யார் என்பதை உங்களால் உணர்ந்துகொள்ள முடியும். அது பின்வருமாறு முடிந்தது:

நானும் ஐந்து குழந்தைகளும்ஆமாம், நானும் பட்டியலில் இருக்கிறேன்.”

 

உடனடியாக நான் அதற்குப் பதில் அனுப்பினேன்

 

அன்பினிய குழந்தைகளே,

நமது கடவுளின் கரங்கள் குறித்த கதையைக் கேட்டு நீங்கள் மகிழ்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன். எனக்கும் அது மிகப்பிடித்த கதை. என்றாலும்கூட என்னால் உங்களைக்காண வரமுடியாது. தயவுசெய்து கோபம் கொள்ளாதீர்கள். உங்களுக்கு என்னைப்பிடிக்குமோ என்னவோ, யாருக்குத் தெரியும்? என் மூக்கு அழகானதில்லை, ஒருவேளைஅதன் நுனியில் எனக்கு ஒரு சிவப்புப் பருவும் இருந்துவிட்டால்அது அவ்வப்போதுவரத்தான் செய்கிறதுநீங்கள் எல்லோரும் அதையே கவனிக்க ஆரம்பித்து அதற்குச் சற்றுக்கீழே நான் கூறுகிற கதையைக் கேட்க முடியாமல் போய்விடும். அதன்பிறகு உங்களுக்கு அந்தப் பருவைக்குறித்துக் கனவுகளும் வரக்கூடும். இது எனக்கு உவப்பானதாக இல்லை.

எனவே நாம் இதற்கு வேறு ஒரு தீர்வினைக் காணவேண்டும்.

அச்சிறுமிகளின் அன்னையைத் தவிர, பெரியவர்களாகிய வேறு பல நண்பர்களும் சொந்தங்களும்கூட நமக்கிடையே உண்டு. நான் யாரைப் பற்றிச் சொல்கிறேன் என்பதை நீங்கள் சீக்கிரமே அறிந்துகொள்வீர்கள். அந்த நபர்களிடம் நான் அவ்வப்போது கதைகள் கூறுவேன், அதன்பிறகு அவர்கள் உங்களுக்கு அந்தக் கதைகளை என்னைவிட மிகச்சரளமாகக் கூறுவார்கள். ஏனென்றால், நான் குறிப்பிடுகிற நண்பர்களில் மிகப்பெரிய கவிஞர்கள் சிலரும் அடங்குவர். எனது கதைகள் எதைப்பற்றியதாய் இருக்கும் என்பதை நான் உங்களுக்குச் சொல்லப்போவதில்லை, ஆனால் வேறெதையும்விட கடவுள் பற்றிய கதைகளே உங்களுக்கு விருப்பமானதாகவும் உங்கள் இதயத்திற்கு நெருக்கமானதாகவும் இருப்பதை அறிவேன் என்பதால் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அவரைப் பற்றி நான் அறிந்தவற்றை என் கதைகளில் குறிப்பிடத் தவற மாட்டேன்.

அப்படி நான் சொல்வதில் ஏதேனும் தவறிருக்கும் பட்சத்தில், தயவாய் எனக்கு இன்னொருஇனிய கடிதத்தை எழுதுங்கள். அல்லது அந்தச் சிறுமிகளின் அன்னையின் மூலம்உங்களது திருத்தங்களைத் தெரிவியுங்கள். எப்படியாயினும் நான் ஆங்காங்கே சிறிய தவறுகள் செய்ய வாய்ப்பிருக்கிறதுதான், ஏனென்றால் நான் மிகச்சிறந்த கதைகளைக்கேட்டே நெடுங்காலமாகிவிட்டது, அதுமட்டுமின்றி அதற்குப் பதிலாக நான் மிகச்சுமாரான கதைகளை நினைவில் வைத்திருக்க வேண்டியும் நேர்ந்தது. ஆனால், ஐயோ! வாழ்க்கை அப்படிப்பட்டதுதான். அதேநேரத்தில் நிச்சயமாக வாழ்க்கை சற்றுப் பெருமிதம் நிறைந்ததும்தான்எனது கதைகள் அதைக் குறித்ததாகவும்தான்இருக்கப்போகின்றன.

தங்கள் உண்மையுள்ள,

நான்ஒரே ஒருவரைச் சேர்த்துக்கொள்ளுங்கள்,

ஏனென்றால் நானும் உங்களில் ஒருவன்தான்.

***

 

(தமிழில்-இல. சுபத்ரா)

 

*ஸ்க்மிடிட்கொல்லன்

*டெர்ரியர்ஒருவகைநாய்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *