​​​​​

1.

“மயிறு வேய், மத்தவ வீட்டுக்குள்ள ஏறிட்டானான்னு மட்டும் பாத்து சொல்லும். ஒம்மர ஒன்னும் கூட்டுச் சேக்கல”  என்றவாரே தூக்கிக் கட்டியிருந்த லுங்கியை நான்காவது முறையாக உயர்த்தி முன்னால் இருந்த திருகு கள்ளி வேலியின் மேல் மூத்திரம் பெய்யத் தொடங்கினான் இளங்கோ.

இடது காதிற்கும் தோள் பட்டைக்கும் இடையில் நசுங்கிக் கொண்டிருந்த செல்போனில் மின் விசிறியின் டக டக என்ற சத்தமும், கிரீச் என்று கதவு திறக்கும் சத்தமும் கேட்டுக் கொண்டிருக்கவே, இரண்டு மணி நேர தேய் நிலவின் ஒளிக்கு பழக்கப்பட்டிருந்த கண்களால் நனைந்து கொண்டிருந்த திருகு கள்ளியினை உற்றுப் பார்த்தான் .

கள்ளியின் நடுத் தண்டின் மேலே அவன் வயிற்றை நோக்கியிருந்த கிளையின் நுனியில் சிறு கொத்துகளாக கருஞ்சிவப்பு மொட்டுகளும், வெண்ணிற நட்சத்திர துணுக்குகளாக அங்கொன்றும் இங்கொன்றுமாக கள்ளிப் பூக்களும்  தெரிந்தன. கிளையின் மைய பாகத்தில் சாம்பல் பழுப்பு நிறத்தில் ஓணான் குட்டியொன்று கால்களை தொங்கவிட்டபடி தூங்கிக் கொண்டிருந்தது. அதன் மீது பாயவிருந்த மூத்திரத் திசையை சட்டென்று மாற்றி ஆசுவாசப் பட்டுக்கொள்ளவே எதிர்புறத்தில் போன் ரிஸீவர் அசையும் இரைச்சல் கேட்டது.

 

“குமாரி வீட்டுக்க வெளில தாம்ல அவன் புல்லட்டு நிக்குவு” சன்னமான குரலில் சொன்னான்.

“நாய்க்குப் பெறந்தேனுக்க கடைசி ராவுல்லா, ஆச தீர பண்ணட்டும்” என்று மனதிற்குள் கறுவிக் கொண்டு அழைப்பினைத் துண்டித்தான். நிலவின் சிறு வெளிச்சம் இளங்கோவின் கண்களுக்குள் பள பளத்தது.

“என் நெஞ்சு நீருகது ஒனக்குத் தெரியலியா.. அவனை முடிச்சுத்தா சாமி. செங்கிடா ஒன்ன கொடையன்னுத் தாரேன். நாதியத்து இருக்கேன்.. தொணையா நிக்கணும்  என் தெய்வமே”

ஒடுக்கத்து வெள்ளிதோறும் ஊர் எல்லையில் நிற்கும் வெள்ளைக்காரசாமியின் முன் நின்று கண் மூடும் போதெல்லாம் இந்த ஒரு வேண்டுதல் தான் கன காலமாக அடிமனதில் ஓலமிட்டுக் கொண்டிருந்தது.

“செய்யுற காரியத்தில தொந்நூறு ஸாமானம் செய்றவனுக்க வெசர்ப்பு இருக்கியனும்ல மொக்கா, அப்ப தான் மேல இருக்கத் தாயிலி போனாப் போதுன்னு பாக்கி பத்தயும் தருவினும்..”  என்று கண்ணன் அண்ணன் அடிக்கடி சொல்வதை நெஞ்சில் ஓட்டிக் கொண்டு, விறு விறுவென்று நடந்து புளிய மரத்தடியில் நிற்கும் டக்கரில் ஏறி அமர்ந்தான்.

எப்போது வேண்டுமானாலும் சப்ளி வந்து விடுவான். இதயம் காதுகளில் துடிக்கத் தொடங்கியது. மிக மெதுவாகக் கடந்து கொண்டிருந்த கணங்கள் தலைக்குள் கஞ்சா லகரியாக பெரு பெருத்தது.  

சப்ளிக்காக  வாங்கியிருந்த மார்ப்பியஸ் பிராந்தி புட்டி, பரோட்டா, கொத்துக் கோழி, செவனப் போத்தல், தண்ணி பாக்கெட், மட்ட ஊறுகாய் இருந்த பையினை கைகள் அனிச்சையாக  தடிவியபடி இருந்தன.

கால் ரோமங்களில் துளிர்விட்ட வியர்வைத் துளிகள் பாதங்களை நோக்கி உருண்டு கொண்டிருக்க, உள்ளங்கால்களின் காய்ப்பையும் தாண்டி பிசு பிசுத்த ஈரத்தில் செருப்பு வழுக்கிச் செரப் படுத்தவே கழட்டி டக்கருக்குள் போட்டுக் கொண்டு தரையில் இறங்கி நின்றான்.

தேரி மணலின் குளுமை உடலில் ஏறி உதறல் எடுக்க, டேஷ் போர்டில் கிடந்த சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தான்.

நெஞ்சுக்கூட்டுக்குள் இறங்கிய உஷ்ண மூச்சு உள்ளில் “இதெல்லாம் வேணுமா.. விட்டுரலாம்” என்று மன்றாடிக் கொண்டிருந்த ஈனக் குரலை மவுனமாக்கி, மறக்க முடியாத அந்த இரவை நினைவூட்டியது. காதுகளில் கண்ணீர் நிறைத்த ராத்திரியை.

இளங்கோவின் முன் தலை வகிட்டில் கலைந்திருந்த முடிக்கற்றையை சரிசெய்தபடி சந்திரன் பேசிய வார்த்தைகளை, கூட இருந்த அவன் சிங்கிடியின் நளிச் சிரிப்பை,

“ஹீரோ மாதிரி தாம்டே இருக்க”

“குமாரிய லவ்  பண்ணுறியோ, பிளே?”

“உன்னத் தான் கட்டுவாலாம”

“நீயும் அவளத்தான் கட்டணும் கேட்டியா பிளே..”

“அவளுக்க மொலையும், குண்டியும்..ஹ்..ஹ்..ஹாங்..சும்மாச் சொல்லக் கூடாது, நாலு ஷிப்ட்டு கண்டினூஸா..” என்று கண்ணடித்தான்.

தொண்டைக் குழியில் நின்ற புகையினை வேகமாக ஊதித் தள்ளி, காரி உமிழ்ந்தான். ஒரு கணம் கண் மூடி  ‘எல்லாம் நல்ல படியா நீ தான் நடத்தித் தரணும்’ வெள்ளைக்காரச் சாமியை நினைத்த படி  தன் நடு நெஞ்சைத் தொட்டு முத்தினான்.

2

சந்திரனுடன் சேர்ந்த வெகு விரைவிலேயே துடியான சிங்கிடிகளில் ஒருவனாக முன்னேறி நாகர்கோயில் சப்ஜெயிலுக்கு முதன் முறையாக சென்று திரும்பிய சப்ளி, இளங்கோவைக் கூட்டிக் கொண்டு பொத்தையடியில் இருக்கும் சந்திரனின் தோப்பிற்குள் நடந்தான்.

கோழி வறுவல், ஆட்டுக் குடல் துவரன், தலைக் கறி கூட்டு, அயில மீன் மிளகு குழம்பில் ஊறிய மர்ச்சீனி கிழங்குக் குவியல் என படையல் இடப் பட்டிருந்த வாழை இலைகளைச் சுற்றி அமர்ந்திருந்த சிங்கிடிகளின் கையில் கள் கலயங்கள் இருந்தன.  எக்காளமும் சிரிப்பொலியுமாக ஒரே கும்மாளம்.

அவர்களினூடே அமர்ந்திருந்த சந்திரன் கடும் பச்சையில் வெள்ளிக் கோடிழைத்த கைலி அணிந்திருந்தான். சட்டை அணியாத வெற்று உடம்பில் தங்கச் சங்கிலி ஆட சிரித்துக் கொண்டிருந்தவன், சப்ளியைக் கண்டதும் “வா பிளே”  என்று  எழுந்து வந்து கட்டிக் கொண்டான்.

காது தொட நிற்கும் தோள்கள், வைரத் துண்டென வெளித் திமிறி நிற்கும் புஜங்கள், குதிரைக் குழம்பையொத்த பின்கை, திரட்சியான முன்கை, பூசினார் போன்ற வயிற்றின் நடுவே ஒற்றை வரப்பென உயர்ந்து, உடம்பில் இருந்து இரண்டு இஞ்ச் வெளித்தள்ளி நிற்கும் நெஞ்சை நிறைந்திருக்கும் ரோமக் கால்கள் என ஆறடி உயரத்தில் குன்றென வளர்ந்து நிற்கும் சந்திரனைக் கண்டு மலைத்து எச்சில் விழுங்கினான்  இளங்கோ.

“கண்ணண்ணன் டக்கர் தானப் பிளே நீ ஓட்டுகது”

“ஆமாண்ணே”

“ஓட்டம் உண்டுமா..?”

“பரவாயில்ல.. போட் சீஸன்னால கொள்ளாம். ஹார்பருக்கு பதிவு ஓட்டம் கிடைச்சிடும்”

“சீஸன் முடிஞ்சா..நம்ம ப்போர் நாட் செவென ஓட்ட வந்துற வேண்டியது தான டே.. இரண்டுலயும் வட்டு தானப் புடிக்கணும்” என்று சிரித்தான் ஒரு வயதானச் சிங்கிடி.

இளங்கோ பதிலளிக்காமல் நெளியவே, கூட இருந்த சிங்கிடிகள் சிரித்தனர்.  

சிறுது நேரத்தில் சப்ளிக்காக தனியே ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுர கள்ளானது, இளங்கோவிற்கும் சேர்த்து பரிமாறப்பட்டது.

இரண்டு மூன்று கலயங்கள் உள்ளிறங்கியதும், வழக்கமில்லாத வெடிச்சிரிப்புடன் கத்திக் கத்தி பேசத் தொடங்கியிருந்தான் சப்ளி.

ஒன்றாம் வகுப்பில் இருந்தே சப்ளியை இளங்கோவிற்குத் தெரியும். அதிகமாக யாரிடமும் பேசமாட்டான். எல்லாக் கேள்விகளுக்கும் ‘ஹி.. ஹி.’ என்ற இளிப்பு தான் பதிலாக இருக்கும். சப்ளி கொஞ்சம் சகஜமாக இருப்பது வீட்டில் மேரியுடனும், வெளியில் இளங்கோவிடமும் மட்டும் தான்.  

அவனுக்கு சத்தமாகவும் பேச வரும் என்பதே அன்றுதான் அறிந்தான். கள்ளின் வெறி உச்சியில் உறைக்க இருவரின் தலைகளும் தடாகத் தாமரை மொட்டைப் போன்று சன்னமாக ஆடின.

பேச்சின் நடுவே, சிங்கிடிகளில் ஒருவன் சப்ளி அணிந்திருக்கும் பனியனை கழற்றச் சொன்னான். முதுகு, விலாக்களில் வரிப்புலி கணக்காக ஒழுங்கற்ற ரத்தக் கன்றல்கள். “தேவிடியாப் பயக்க” என்று காரி உமிழ்ந்தான் சந்திரன்.

“வாக்கா ஒருத்தன் கிடைச்சாப் போதும், உருக்குலைச்சுட்டு தான் மறுவேல தாயிலியோளுக்கு..உமியும் உப்புமா வறுத்து துணில கட்டி அடிபட்ட இடத்துல ஒத்தடம் வையி. ரத்தக் கட்டு அப்பிடியே வத்திரும்..” என்றான் ஒருவன்.  

“உள் ரத்தக் கட்டுக்கு பெஸ்ட் மருந்து  மூத்திரமாக்கும்..அப்படித்தான மக்கா ” என்று சந்திரனைப் பார்த்து கெக்கலித்தான் கூட்டத்தில் நரை மீசையுடன் இருந்த சீனியர் சிங்கிடி.

“மூத்திரமா..” என்று அருவருத்தான் கூட்டத்தில் ஒருவன்.  

“மூத்திரத்த லேசா நெனைச்சுக்கிட்டியோ.. அய்யர் மார்வ எல்லாம் தெனம் மாட்டு மூத்திரம் குடிப்பாவத் தெரியுமால”

“மாடும் மனுசனும் ஒன்னா வேய்..”

“இவனுக்கு அஞ்சாறு மயிறத் தெரியும்…டெல்லில சர்க்காரு மந்திரி ஒருத்தரு சாவுற வர முழிச்ச கண்ணுக்கு மோண்டு  குடிச்சிட்டு இருந்த கதத் தெரியுமா “

“எண்ணோவ், சந்திரண்ணன் கதயச் சொல்லுங்க”

“ஒருக்கா டேசன்ல என்னையும் சந்திரனையும் வச்சு நிமுத்துட்டானுக. மூலையில சுருண்டு கிடந்த நான் லேசா கண்ணு முழிச்சுப் பாக்கேன், சந்திரன் மோண்டுக் குடிச்சுட்டு, அங்கணக்குள்ளையே நூறு தண்டால் சும்மா சக்கு சக்குன்னு எடுத்துக்கிட்டு கையையும் காலையும் கரக்கிட்டு நிக்கான். அதுக்கப் பெறவு தான சூத்திரம் பிடி கிட்டிச்சு, அது நம்ம கட்ட வைத்தியரோட ரோசனைன்னு…”  

“சரியாப் போச்சு… அந்த கட்டத் தாயிலி சொன்னாம்ன்னு ஒருநா கறவ ஆட்டுப் பால்ல இம்பிட்டு காந்தாரி மொளவ அரைச்சு விட்டுக் குடிச்சேன்… மறுநா வெளிக்கிருக்கேல தீப்பத்தியெரிஞ்சது தான் மிச்சம்” என்று சிங்கிடிகளில் ஒருவன் சொல்ல, சப்ளி வயிற்றைப் பிடித்துக் கொண்டு சத்தமாக சிரித்துப் புரண்டான்.

“சார்லஸு.. பாறசாலக்காரி அம்மிணிக்கு ஓந் தேட்டமாவே இருக்குவாம்” என்று சப்ளியை நோக்கி ஒரு சிங்கிடி கண்ணடிக்க இளங்கோ துணுக்குற்றான்.

“சந்திரண்ணே இதக் கேட்கணும், கொறய தேரமாச்சேன்னு போய் படில கால் குத்தலை.. உள்ளேயிருந்து ஒரே நெலவிளி.. பிறகில்லா சங்கதி பிடி கிட்டுனது.. சேட்டனுக்க கொக்கிப் புடுக்கு கத” என்று அவன் கண்ணடிக்க கூடியிருந்தவர்கள் ஆர்ப்பரித்தனர்.

கூடச் சிரித்துக் கொண்டிருந்த இளங்கோ “சார்லஸ் மாதிரி கோம்பயனுக பெண்ணு கெட்டுகது கஷ்டம் தான் பாத்தியா” என்று அவனுக்காக பரிதாபப்பட்ட குமாரியை நினைத்துக் கொண்டான்.

3

சந்திரன் ஆளுங்கட்சியின் வட்டச் செயலாளர். அரசியல்வாதி ஆனதில் இருந்து அடி தடி, கட்டப் பஞ்சாயத்து, திருட்டு மணல் அள்ளுதல், ஸ்பிரிட் கடத்தல் போன்ற பிரதான தொழில்களில் தனக்கிருந்த அடையாளங்களை மாய்த்து பஞ்சலிங்கபுரம் தாலியறுத்தான் காய்கறிச் சந்தையின் குத்தகை எடுப்பதிலும், பிளேடு தொழிலிலும் வன் கையாக மாறிப்போனான்.

ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த கண்ணன் அண்ணன் பழையதானார்.  கன்னியாகுமரி பஜாரில் கை வியாபாரி தொடங்கி லாட்ஜ் முதலாளிகள் வரை அவனிடம் வட்டிக்கு வாங்காதவர்கள் என்று யாரும் இல்லை. சன் செட் பாய்ன்டில் இருக்கும் மாலை நேரக் கடைகளில் ஏழு அவனுடையதே.

பீடி, சிகரெட், குடி, சூது என்று எந்தப் பழக்கமும் கிடையாது. பெட்டைக் கிறுக்கு மட்டும் தான், ஆனால் அதுவும் சந்திரனைப் பொருத்தவரையில் கெட்டப் பழக்கமில்லை.

உள்ளபடியே சொல்வதானால், கொத்த வேலையில் இருந்து நின்று கொண்ட சப்ளி சந்திரனிடம் சேர்வதற்கு ஒருவகையில் காரணமாக இருந்தது இளங்கோ தான்.

இளங்கோவின் சிபாரிசின் பெயரில், சன் செட் பாய்ன்டில் இயங்கும் பரோட்டா ஸ்டால் ஒன்றில் சேர்வதற்கு சென்ற சப்ளியை “போன வருஷப் பொறப்புல கீழத் தெருக்காரனோட மண்டைய ஒடைச்சவன் தான பிளே நீ?” என்று சந்திரன் கேட்க.

“ஹி..ஹி.” என்று தலை குனிந்து நின்றான் சப்ளி.

“தூக்கி அடிச்ச செங்கக் கட்டி பயலுக்கக் கைல இருந்து செம்மண்ணால்லா சிந்திச்சு,” என்று கண்கள் விரிய நினைவு கூர்ந்தான் அருகில் பார்சலோடு நின்று கொண்டிருந்த சிங்கிடி ஒருவன்.

கவிழ்த்து வைக்கப்பட்ட தோசைக் கல் போன்று குவிந்திருந்த சப்ளியின் இரண்டு நெஞ்சிலும் செல்லமாகக் குத்தி, ” பார்  விளையாடுவியோ பிளே?” என்று சந்திரன் பாராட்டிய ஸ்நேகிதம் பிடித்துப் போக சிங்கிடிகளின் கூட்டத்தில் மெதுவாகச் சேர்ந்து கொண்டான்.

4

“தின்ன சோறுக்கு நன்னி மறந்த பெய, இனி வெளிக்கிருக்க குண்டிய தூக்கும் போதெல்லாம் நம்ம ஓர்மை வரணும்லாண்ணே,” என்ற சிங்கிடிகளின் கெக்கலிப்பும், “தேயிலிக்க சிலுவை தொங்குற காத அறுல,” என்ற சந்திரனின் கத்தலும்  பச்சைப் புண்ணாக உள்ளுள் நீறிக்கொண்டிருந்தது சப்ளிக்கு. அழுகையும் பற்கடிப்புமாய் நரகத்தில் கிடந்தான்.

மொத்தம் நூத்தியெட்டு தையல்கள். அவற்றுள் பக்கத்திற்கு நான்கு வீதம் இரண்டு புட்டமும் அடக்கம். அறிந்து எடுக்கப்பட்ட காது சோணை நீங்கலாக உடல் முழுவதும் ஒரு இஞ்ச் ஆழத்தில் நொங்கு சீவும் குறுவாளால் கொத்தப்பட்டு தூக்கியெறியப்பட்டவன் கோட்டார் பெரிய ஆஸ்பத்திரியில் கண் விழித்த போது இளங்கோவும் கண்ணன் அண்ணனும் நின்று கொண்டிருந்தனர்.

‘தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரில போட்ட அன்னு தொட்டு இன்னுவரை மொவராசன் கண்ணந்தாம் செலவுக்குத் தருயது. நல்லா இருக்கணும்’ என்று பார்க்க வந்தவர்களிடம் எல்லாம் சொல்லி மேரி கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். முழுதாக மூன்று மாதங்கள் ஆஸ்பத்திரிக்கும் வீட்டிற்குமாக அலைந்து பத்தியச் சாப்பாடு ஆக்கிப் போட்டு கண்ணும் கருத்துமாக மீட்டெடுத்தாள்.

சப்ளியின் தந்தை ஏசுவடியான் ஊர் சர்ச்சில் மணியடிக்கும் மெலிஞ்சியாக இருக்கிறார். தொடர்ந்து ஐந்து வருடங்கள்  உவரி அந்தோணியார் கோவில் தேர்த் தடத்தில் அங்கப் பிரதட்சனம் செய்து கிடைத்த குழந்தைக்கு ‘சார்லஸ்’ என்கிற தன் தகப்பனாரின் பெயரையே ஞானஸ்நானத்தன்று ஆசையாசையாகச் சூட்டினாள் மேரி.

ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிக்குச் சென்றவன் ஒரு நாள் பள்ளிப் படிப்பை தொடரப் போவதில்லை என்று பிடிவாதமாக மறுத்து விட்டான். மூன்றாம் வகுப்பையும் நான்காம் வகுப்பையும் இரண்டு வருடங்கள் படிக்க நேர்ந்ததும், பள்ளி இன்ஸ்பெக்ஷனில் கடைசி பெஞ்சுக்கு துரத்தப்பட்டதும், மற்றவர்களை விட கூடுதலாக தனக்கு பிரம்படி விழுந்ததும், சோட்டுப் பிள்ளைகளின் கேலியும் தான் சார்லஸின் அந்த முடிவுக்குக் காரணம்.

பேச்சு வழக்கில் உள்ள சிறு சிறு தர்க்கங்களோ, எளிய பெட்டிக்கடைக் கணிதமோ அவனுக்கு மெதுவாகவே பிடிபடும். கடைத் தெருவிற்குப் போவதாய் இருந்தால் ஒன்றில் வாங்க வேண்டிய பொருளுக்கான சரியான பணத்தை தெரிந்தவர்கள் மூலம் எண்ணி கையில் வைத்திருப்பான் அல்லது “எனக்கு அவ்ளவா எண்ண வராது, மீதியை தாள்ல எழுதித் தாங்க” என்று பின்னந்தலையைச் சொறிந்து நிற்பான். தெரியாத கடைக்காரர் என்றால் தருவதை வாங்கி சோப்பில் வைத்து விட்டு இடத்தைக் காலிசெய்து விடுவான். ஊர்காரர்களுக்கு அசட்டுக் கோம்பப் பயல்.

இப்படியே போனால் கஷ்டப்பட்டுப் போவான் என்று மேஸ்திரி ஆதிலிங்கத்திடம் கொத்தக் கையாளாகச் சேர்த்து விட்டார் ஏசுவடியான்.

5

ஒரு நாள் புலர்ச்சியில், உடுத்தியிருந்த ஈரப் பாவாடைக்குள் தெறிக்கும் நனைந்த முலைகளுடன் அம்மிணி நெருங்கவே அள்ளிப் புணர்ந்து உதட்டில் முத்தமிட எத்தனித்தபோது அது மேரியினுடைய முகமாக மாற பதறி எழுந்தவன் ஈரக் கைலியுடன் குளத்தில் போய்ச் சாடினான். அன்று தொட்டு மேரியுடனான பேச்சு குறைந்து வீட்டுத் திண்ணையில் தான் உறக்கம்.

சந்திரனுடன் சேர்ந்து தலை திரிந்து நடக்கிறான் என்று வருத்தமுற்ற ஏசுவடியான், தான் மணியடிக்கும் தேவாலயத்தின் அருட்தந்தையைக் கூப்பிட்டு உபதேசித்தும் பலனில்லை என்று தெரிந்ததும் மகனிடம் பேசுவதையே சுத்தமாக நிறுத்திவிட்டார்.

ஆறேழு மாதங்கள் கழித்து வெளியே கிளம்பிக் கொண்டிருந்தவனிடம்,

“யேய்யா, சொன்னாக் கேளு மக்ளு.. இந்தக் கருக்கல்லுல போண்டாம் மோனே. இப்போ தான் தேகம் கெதியடைஞ்சுட்டு வருவு. உள்ளதத் தின்னுக்கிட்டு இங்கனக்குளே படு மக்ளே.”  என்று தன்னைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்த மேரி வாசல் கதவை அடைத்து நிற்கவே, அவளின் இரண்டு கைகளையும் பற்றி நெஞ்சில் வைத்துக் கொண்டு “எங்கையும் போலட்டி, இப்ப வந்துருவேன்” என்றபடி கதவைத் திறந்தான்.

“சீக்கரம் வா மோனே,” என்று செபமாலையை அவன் கழுத்தில் போட்டுவிட்டு வியாகுலத்தோடு சிலுவையிட்டுக்கொண்டாள் மேரி.

6

சிகரெட்டை இழுத்து உறிந்ததில், கங்கு பஞ்சைத் தொட்டு கையைச் சுட்டது. தூக்கியெறிந்து வெறுங்காலால் நசுக்கினான்.

“லேய் ஒன்னுல செய்யுறதுக்குள்ள தண்டேடம் இருக்கணும். இல்லன்னா, தண்டேடம் உள்ளவனுக்க மர்மத்திக் கேறிப் பிடிச்சு செய்ய வைக்கணும் புரியுவா”  என்கிற கண்ணன் அண்ணனின் அறிவுரையை மனதில் அசைப் போட்டுக் கொண்டு வெறித்த படியிருந்த இருளிலிருந்து நகர்ந்து வரும்  நிழலுருவத்தின் நடையில் சப்ளியை அடையாளம் கண்டு கொண்டு சிரித்தான். தன் நடு நெஞ்சைத் தொட்டு முத்திக் கொண்டான்.

சூடு பரோட்டாவில் வெந்த வாழையிலையின் மணத்தை அனுபவித்தபடியே பிய்த்துப் போட்டத் துண்டுகளை சால்னாவில் தோய்த்து வாயில் வைத்தான் சப்ளி. பத்தியச் சாப்பாட்டில் செத்துப் போயிருந்த நாக்கு, தொண்டையெல்லாம் உயிர்பெற்று எரியத் தொடங்கியது. கண்களை துடைத்துக் கொண்டு கப்பில் ஊற்றியிருந்த பிராந்தியை ஒரு மிடர் உள்ளிறக்கினான். மருந்து உள்ளே போனதும் உற்சாகம் தொற்றிக் கொண்டது.

பள்ளிக்காலம் தொட்டு வாழ்வில் சம்பவதித்த தமாஷான நிகழ்வுகளை நினைவு கூர்ந்து சொல்லிச்  சிரித்தபடி இருந்தான்.

அப்போது இளங்கோவின் சட்டைப் பையில் இருந்த செல்போன் சிணுங்கவே, “கண்ணண்ணன்,” என்றபடி காதில் வைத்தான்..

“ஆமாண்ணே.. அதே இடம் தான்,” என்று துண்டித்தான்.

“உன்ன அடிச்சிட்டானுவோனு சன் செட் பாயிண்ட் கடைகள்ள அலம்பல் ஆன அன்னு, என்ன எறக்கி விட்டுட்டு எங்க மக்காப் போன?”

“நான் ..நான்.. கண்ணண்ணன்  அவசரமா கூப்டாங்கன்னு போனேன் மக்கா” என்று திணறினான்.

“ஹி..ஹி..காரியம் ஆவணும்னா யாரையும் வெலி போட்டுருவாம்ல ஒனக்க கண்ணன்”

இளங்கோவிற்கு உள்ளில் நடுங்கியது

“எனக்குத் தெரியும் மக்கா .. எங்கப்பா ஏசும்போதெல்லாம் சொல்லுவாரு “தல திரிஞ்சவனுக்கெல்லாம் சாக்காலம்  இடையில பாதியாத் தான் இருக்கும்னு”

“சார்லசு மக்கா…”

“இடையில பாதியாக் கூடப் போயிரலாம்.. கெடைல மாத்திரம் கிடந்துப் போவக்கூடாது கேட்டியா.. ஹி..ஹி.. சந்திரன் அண்ணனுக்கும் அந்த நெலமை வராதே”

“பொற மண்டையில தட்டி திரிஞ்ச ஊர்க்காரனுவ, சொக்காரமாருவ கண்ணில இருக்கிய பயமோ மருவாதையோ குறையதுக்குள்ள போயிரனும் என்ன மக்கா”

இளங்கோவிற்கு கண்கள் நிறைந்தன. “இதெல்லாம் வேண்டாம் மக்கா, வா வீட்டுக்குப் போயிருவோம்.”  

“ஒன்னக் கொண்டு ஒக்காத பணிக்குக் கொண்டு எதுக்குல தல வைக்கப் போற.. அந்தச் சரக்கு குமாரிக்குச் சுட்டியா?” என்று சிரித்தான்.

இளங்கோ எதுவும் சொல்ல முடியாமல் ஸ்டியரிங் வளையத்தை சுரண்டிக் கொண்டிருந்தான். நெஞ்சில் யாரோ ஏறி நிற்பது போல இருந்தது.

“நான் பாத்துக்கேன், நீ நிக்காண்டாம் இங்க” என்று இளங்கோவை விரட்டினான். போனைப் பிடுங்கி வைத்துக் கொண்டான்.

ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு இளங்கோ வண்டியைக் கிளப்ப “ஒரு நிமிசம் நில்லுல,” என்று அருகில் வந்தவன் அவன் வாயில் இருந்த சிகரெட்டைப் பிடுங்கி ஆழமாக ஒரு இழுப்பு இழுத்தான்.. “அப்பப்போ எங்கம்மைய ஒரு கண்ணு போய்ப் பாத்துக்க மக்கா, பாவம் என்னையத் தேடுவா” என்று விட்டு திரும்பிப் பார்க்காமல் இருட்டுக்குள் போய் மறைந்தான்.

கோவில் முன் நிறுத்திய வண்டியில் இருந்த இளங்கோ “சார்லசு பத்திரமா திரும்பி வரணும் சாமி” என்று ஒரு கணம் மனதிற்குள் வேண்டி நடுநெஞ்சை தொட்டு முத்தியதை சர விளக்கொளியில் பார்த்துக் கொண்டிருந்த வெள்ளைக்காரச் சாமி நிர்ச்சலனமாக சிரித்தபடி நின்றார்.

7

மறுநாள் டீக்கடை,  முடிவெட்டும் கடையென திரும்பும் இடமெல்லாம் சந்திரனின் கொலை பற்றிய ஓரே பேச்சு.

“விடிய விடிய கள்ளக் கோழி பிடிச்சுக்கிட்டு வந்தவன, வண்டியோட சரிச்சு கூட்டமா சேர்ந்து வெட்டிருக்கானுவோ..”

“மெயின் ஆளே யேசுவடியானுக்க மொவன் தானாமே..”

“சந்திரனுக்க ஒரு அடிக்கு தான இவன் உண்டு! பெறகு, எப்படியாக்கும்?”

“அவுந்த கைலிய  அள்ளிப்பிடிச்சிண்டு ஒத்தக் கையால செறுத்தா அருவா நிக்குமா.. தீத்துப் போட்டானுவோ..”

அச்சம்பவத்திற்குப் பின் தலை மறைவான சப்ளியை, காவல் கிணறு போகும் வழியில் இருக்கும் ஒரு காட்டுப் பகுதியில் அழுகிய நிலையில் பிணமாக அடையாளம் காட்டிவிட்டு வந்தார் ஏசுவடியான்.

அடுத்து வந்த கோவில் கொடை நாளில் ஒரு செங்கிடாவை வெள்ளைக்காரச் சாமிக்கு பலியிட்டு இளங்கோவும், குமாரியும் தம்பதிகளாக வணங்கி நின்று நேர்த்திக் கடன் செலுத்திச் சென்றனர்.  

14-10-2022

                                                    ——————————-

 

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *