‘எனது விமர்சனப் பார்வை என்பது ஒரு படைப்பாளியின் கோட்பாட்டுத் தளத்தின் மீதான அங்கிகாரம், மறுப்பு எனும் இரட்டை எதிர் நிலைகளிலிருந்து
உருவாவதில்லை. படைப்பாளி மீதான ஏற்றுக் கொள்ளவோ நிராகரிப்போ அவரது  பிரதிகள் மீதான ஆழமான வாசிப்பிலிருந்து மேற் கொள்ளப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.’

‘எனது இந்த விமர்சன கட்டுரைகள் ஒரு படைப்பாளி மீதான முன் தீர்மானங்கள் அல்லது தனிப்பட்ட கோட்பாட்டு விருப்பு வெறுப்பு மன நிலையிலிருந்து எழுதப்பட்டவை அல்ல. அவரது படைப்புக்கள் மீதான நேர்மையான ஓர் ஆழ்ந்த வாசிப்பின் பின்னர் எனக்குள் உருவான கருத்துக்களே அவை. இதனால் இந்த விமர்சனக் கட்டுரைகள் படைப்பாளியைப் பற்றி கவனத்திற் கொள்ளாது படைப்புகள் மீதே கவனம் கொள்கின்றன’.

மேற் குறிப்பிட்ட ஜிஃபரியுடைய இரு கூற்றுக்களிலிருந்தும் இக் குறிப்பினை வரையறுப்பது பெரு வசதியாகிறது. அது அலைச்சல், தாவல், சிதறல் போன்ற நோவினைகளிலிருந்து தப்பித்து ஒரு வழித்தட இயங்குதலூடாக இவ்வெழுத்தை முன்னிறுத்த உதவியாகிறது.

அனேகமாக, விமர்சனங்களின் மீது விர்சனம் செய்யும் இந்த முறைமை, புது வகையான தொடக்கங்களில் ஒன்றாக இருக்கக் கூடும்.

விமர்சனம் பற்றி தொன்றுதொட்டு பல்வேறு கதையாடல்களும் கதைப் பிறழ்வுகளும் நிகழ்ந்தபடிதான் இருக்கிறது. அடங்க மாட்டாத ஜல்லிக் கட்டுக் காளை திமிறுவதுபோல விமர்சனங்கள் என்பதை வரையறுக்கும் வரைவிலக்கணப் பெருக்கம் அகலித்துக் கிடக்கிறது.

இருந்தும் ‘தன் கருத்தை நியாயப்படுத்தலுக்கான நேர்_எதிர் கருத்தாக்கங்களை நிறுவுதலுக்கான போராட்ட குணமே விமர்சனம்’ என நான் கருதுகிறேன்.

அந்தப் புள்ளியை மனத்தில் இருத்திக் கொண்டு நகரும்போதே படைப்பு வரையறை இயக்கம் சாத்தியப்படுவதோடு பிதுங்கி வெளிச் செல்லல் கட்டுப்படுத்தப்படுகிறது.

எனது இந்த பிரதியாக்கம் இரண்டு வகையாகச் செயல் படப் போகின்றது.
முதலாவது, ஜிப்ரியுடைய விமர்சனவாக்கங்களில் அவர் அடையாளப்படுத்திய பிரதான கூறுகளை காட்சிப்படுத்தல். இது சற்று நீளமான பகுதி கூட.

இரண்டாவது, ஜிப்ரியுடைய ஆக்கங்கள் முழுவற்றையும் ஒரு திரட்சியாக்கி கொண்டு அதில் எதிரும் புதிருமாய் இடையூறுகளை விளைவித்தல். இது சற்று சுருக்கமானதாக இருக்கும்.

(1)

ஜிப்ரியின் இந்த நூல் பதினான்கு விமர்சனக் கருத்தாக்கங்களை 147 பக்கங்களில் பேச விளைகிறது.

ஜீவா.ரஞ்ச குமார்,நந்தினி சேவியர்,சட்ட நாதன்,உமா வரதராஜன்,சேரன்,நீர்வை பொன்னையன்,ஷோபா சக்தி,நோயல் நடேசன்,சயந்தன்,சாத்திரி,லறினா,தில்லை,அரபாத் ஆகியவர்களின் படைப்புமீதான குவிவும் அசைவும் அவரால் இத் தொகுப்புள் நிகழ்ந்திருக்கின்றன.

‘ஈழ இலக்கியத்தில் டொமினிக் ஜீவாவின் இடம்: கதைகளின் வழியே ஒரு விவாதம்’ எனும் கட்டுரை மார்க்ஸிய பின்புலம், அதன் அதிகாரம்
இலக்கியத்தை வழி நடாத்திக் கொண்டிருந்த கால வெளியுள் நிகழ்ந்த சங்கதிகளை பேச்சாக தொடங்கி வளர்கிறது. இக் கட்டுரை அதிலிருந்து வெடிப்புற்று 1950 களின் கூறுகளில் புனைவுலகை வேறு தள அசைவியக்கம் செய்தவர்களில் மிகப் பிரதானியான டொமினிக் ஜீவா பற்றி பேசத் தொடங்குகிறது. சமுக  அடுக்குகளில் பள்ள வழி வாழ்வுற்ற சமுகத்தை சார்ந்தவராக அறிவிக்கப்படும் அவர் முடி திருத்தும் தொழில் செய்தவர். தன் சமுகத்தின் குரலாகி ஒலித்தவர்.அவரது கதைத் தொனி சமான்யர்களின் குரலாகவும் புறக்கணிக்கப்பட்டவர்களின் அவமானப்படுததப்பட்டவர்களின் கூட்டுத் துயரத்தையும்  பேசின என்றும் அவ் அடித்தட்டு மக்கள் சார்ந்து நேர்மை, அறம், ஒழுக்கம்,மரபியல் அனுக்கம், சமுகவியல், உயிரியல், உளவியல் சார்ந்து தான் எழுதியவற்றின் மீதான மீள் பரிசோதனையை அவர் செய்து பார்க்காமலே ஒதுங்கி நின்றார் எனச் சுட்டும் ஜிப்ரி ஒற்றைத் தளத் தெரிவினுடாக பயணப்படும் அவர் ஒரு முட்டைச் சுழற்சியூடாக தன்னை குறுக்கிக் கொண்டார் என ஜீவாவை வரையறுக்கிறார். அவரது குறைந்த கற்கை வழி வந்த அனுபவ விஸ்த்தாரமின்மையால் ஏற்பட்ட படைப்பு மனத்தின் முதிர்ச்சியின்மை இத்தகு நிலைக்கு காரணமாகலாம் என ஐயுறும் ஜிப்ரி இதனால் அவரது ஆரம்ப கால கதைகள் சிறுவர் இலக்கியத்துக்கான குணங்குறிகளை கொண்டிருந்தன என்கிறார்.

‘பொதுவாக தலித் படைப்பாளிகள் தங்களுக்கான ஒரு நியமத்தை வலிந்து திணித்துக் கொள்வது அன்று தொட்டு இன்று வரைக்குமான இயல்பாகி நிற்கிறது. மேல் தட்டு மக்களை சமதையாக எதிர் கொள்ளும் மனத் தைரியத்தை இலக்கிய மாந்தர்களுள் ஏற்றி வைத்து அவர்களை செயற்கையான வெளியில் துருத்தி பிதுங்கி விடுபவர்களாக மாற்றி அவர்களுள் அறச்சீற்றத்த வலிந்து திணித்து கதையாடல் செய்து காட்சிபடுத்த முனைவதன் ஊடாக தங்கள் ஆன்ம வெளியுள், திருப்தியை உலவ விடுவதனூடாக வெற்றி மன நிலையை உலவ விடல் இத் தகைய படைப்பாளிகளின் இயல்பு. கிடைக்கும் களத்தை தம் இன விடுவிப்பு வழிப்பட்ட ஆக்ரோஷ மன நிலையாக உருமாற்றம் செய்யும் வழியாக கைக் கொள்ளும் இந்த வகை யுக்தி அவர்களது படைப்பின் கிளை உணர்வுகளை நொடித்துவிடுகிறது. இது அவர்களால் வலிந்து திட்டமிட்டு செய்யப்படும் யுக்திதான். அதை அவர்கள் தங்கள் சமுதாயத்துக்கான ஆதாயமாக கருதுகிறார்கள். பா.ரஞ்சித் போன்ற திரைஞர்களும் இப் புள்ளியிலிருந்தே விரிகின்றனர்.’ என்பது ஜிப்ரியுடைய கருத்து தாண்டிய எனது கருத்து.

ஈழ அரசியலில் கொதி நிலைக்காலம் என அறியப்பட்ட 80 களில் புளங்கியவர் ரஞ்ச குமார் என ரஞ்ச குமாரை தொட்டுப் பேச தலைப்படும் ஜிப்ரி. சொற்பமான கதையூடாக கவனம் பெற்றவர் அவர் ஈழ வெளியில் நிலவிய _நிலவும் போட்டி வல்லாதிக்க மனோபாவத்தில் அவர் நிலைத்திருக்க அவரது மோக வாசல்தான் துணையாகிற்று என்பதையும் சொல்லிக் காட்டுகிறார். ‘சிறுகதை  வடிவத்துக்கு பொருந்தக்கூடிய கச்சிதமான பாத்திர வார்ப்புகள்,மொழியமைதி,விவரண நுட்பம், சொல் தேர்வு, காட்சி தரிசனங்கள் இவைதான் அவரை ஒரு குறிப்பிடத் தக்க எழுத்தாளனாக ஒரு கால கட்ட ஈழச் சிறுகதையின் முதன்மை அடையாளமாக மாற்றுகின்றது’ என்று ரஞ்ச குமாரை விதந்து பேசும் ஜிப்ரி, ரஞ்ச குமாரின் கதைகள் ஒவ்வொன்றும் நாவல்களாக விரித்தெடுக்கக் கூடிய கதையம்சத்தை கொண்டிருக்கின்றன.நாவலுக்கான விரிவையே சுருக்கி செப்பனாக்குகிறார். கதை மய்யப்புள்ளி அற்று துள்ளி துள்ளி குதிக்கிறது என்கிறார். இதற்கு ஆதாரமாக கோசலை முதலிய அவரது சிறுகதை சிலவற்றை சான்றுகளாக்கி கடக்கிறார். அவரது கதைகளில் பின் நவின சாகசங்கள் நிகழ்வுறவில்லை எல்லாமுமே நவீனத்துவ யதார்வாதங்களின் வார்ப்புத்தான் என்கிறார். இறுதியில் கதைகள் அனைத்தையும் படித்து முடிக்கையில் ரஞ்ச குமாரின் கதைகள் ஜிப்ரிக்கு எந்த வெளிச்சமும் விடுதலையுமற்ற போரின் இருளில் கரைந்த மானுட வாழ்வும் மரணமும் கலந்து உருவான வெளியாகவே தோன்றுகிறது.

அயல் கிராமத்தை சேர்ந்தவர்கள், நெல்லிமரப் பள்ளிக் கூடம் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளை தந்து பெரிதும் சிறு கதையூடாக தன்னை நிலைப்படுத்திக் கொண்டு ஈழத்தின் முன்னோடிச் சிறுகதையாளராக இருந்தும், தான் பெரிதும் கண்டு கொள்ள மறுக்கப்பட்ட நியாயமான ஆதங்கத்தோடு இறுதி நாட்களில் பெரு மூச்சை கலக்கவிட்டு வாழ்ந்து முடிந்த நந்தினி சேவியரை ‘நந்தினி சேவியர் கதைகள் மானுடத்தின் கலை எனும் தலைப்பில் எழுதுனர் சொல்லத் தொடங்குகிறார். 1967 இல் பாரம் சிறுகதையூடாக தன் எழுத்து வாழ்வைதொடங்கிய சேவியர் இலக்கியத்தை தன் அங்கிகாரத்துக்கான தளமாக எடுத்துக் கொள்ளாது தனது வாழ்க்கைச் சூழலில் கிடைத்த அனுபவங்களை, சமுக இயங்கியலை கால வெளியுள் அச் சொட்டாக படைப்பினூடு வாசக கடத்தலுக்குட்படுத்துவதையே நோக்காக வரித்திருந்தார் எனும் ஜிப்ரி சமுகத்தில் ஏதோ ஒரு வகையில் விளிம்புக்குள்ளாக்கப்பட்டவரின் வாழ்வும் துயரமுந்தான்திரும்ப திரும்ப அவரது படைப்புகளில் மய்யக் குரல் எடுக்கிறது என்கிறார். தொடர்ந்தும் சேவியரின்படைப்புகளில் பார்வை கொள்ளும் கட்டுரையாளர் இயலாமை, பலவீனம் தொற்றிக் கொண்ட சமுக ஒதுக்கமுறாமல் தன்னை நிலைத்துகின்ற பிரயத்தனத்தை காட்சிபடுத்தும் விதமான பல கதைகள் சேவியரிடமிருநது கிடைப்பதாகச் சொல்லி இன்னும் அவரது கதைகளில் வருகின்ற மனிதர்கள், உணர்ச்சி வயப்பட்ட சமுகத்தின் நிஜ பிம்பங்களின் கட்டமைப்பே என்கிறார்.

தேசிய இனப்பிரச்சினையின் பதட்டங்கள் தொற்றத் தொடங்கிய முற்போக்கு சித்தாந்தங்கள் பிரபல்யப்பட்டுக் கிடந்த அக்காலை அச் சிந்தாந்தத்துள் தன்னை முழுவதும் மூழ்க விடாமல் தப்பித்துக் கொண்டவர் சட்ட நாதன் என்று சொல்லியபடி கட்டுரைக்குள் ஆழப் புதையும் கட்டுரையாளர் சட்ட நாதனின் கதைகள் மொத்தமும் மனித உறவுகளை உன்னித்து கடக்கிறது என்கிறார். ஆண் வயப்பட்டு இழுபடும் பெண்வாழ்வை தாண்டிய அவர்களது சிக்கல்கள் சட்ட நாதனால் பேசப்படாதது கட்டுரையாளருக்கு அருட்டைக் கொடுக்கிறது. ஜிப்ரி, சட்ட நாதன் கட்டுரையை வளர்த்துச் செல்லும்போது சட்ட நாதனின் அநேக கதைகளின் முற் பகுதி மனித உறவுகள், ஊடாட்டங்கள் பற்றியதாக தொடங்கி பின் யுத்தத்தில் முடிவுறுவதாகச் சொல்கின்றார். நகரமயமாதல் அதன் விகாரமும் மனித உறவுகளில் ஏற்படுத்திய மாற்றங்களின் வழி இயங்கும் அவருடைய பாத்திரங்கள் முதலாளி வர்க்கத்தால் சுரண்டப்படுவதாய் அவருடைய ஒரு தொகை கதைகள் சொல்கிறது எனகிறார் ஜிப்ரி.  நகர_கிராம வாழ்வு முரண்’ என்ற ஒரு வரியால் அதனைபிரபல்யப்படுத்தலாம்.  இவரது கதைகளின் வழி ஊன்றும் ஜிப்ரி இவரது எல்லாக் கதைகளுக்குள்ளும் அரசியல் இருக்கிறது என்கிறார்.

வாழ்வியல் அனுபவப் புனைவுகளை எழுத்தாக வரித்துக் கொண்டு சுதந்திரமாக படைப்பு வெளிகளில் சஞ்சரித்தபடி.70களில் எழுத்துலகில் நுழைந்தவர் உமா வரதராஜன் எனும் ஜிப்ரி. முற்போக்கு எழுத்தாளர்களிலிருந்து தன்னை வேறுபடுத்தி துணிச்சலாய் அதனிலிருந்து விடுபட்டு ‘அதுதான்கலைத்தரம்’ போன்ற குரல்களை அலட்சியம் செய்து ஒரு வித கலகத்தன்மையுடன் பயணப்பட்டவர் உமா என்கிறார். அவரது சில கதைகள் மட்டும் அரசியலை நேராக பேச பல கதைகளில் அது உப அம்சமாக செயல்படுகிறது என்கிறார் எழுத்தாளர். முற் போக்குச் சட்டத்துள் மனித வாழ்வை நிறுத்தாது வாழ்வின் எல்லாப் பரிமாணங்களையும் வாசகன் முன் கொண்டு வர முயற்சித்தார் உமா எனச்சொல்லும் ஜிப்ரி சூழலோடு போராடிப் பெற்ற வாழ்க்கை அனுபவங்களை கொண்ட பல்வேறு மனிதர்களின் கதைகள் உமாவினுடையது என்றும் மனித மனங்களின் ஆழத்தை, மத்திய தர வர்க்கங்களின்வாழ்க்கையின் ஆழங்களை கச்சிதமாகச் சொல்லும் கதைகள் அவருடையது என்றும் சொல்கிறார். உமாவின்பெரும்பாலான கதைகள் ஒரு நகர்ப்புற மத்திய தர மக்களின் வாழ்க்கைக் கோலங்களையே சித்தரிக்கிறது எனும் ஜிப்ரி இதனால் அவரிடமிருந்து கிராமிய மொழி, மண்வாசனைக் கூறு காணக்கிடைக்கவில்லை என்கிறார்.வாழ்வு பற்றிய அச்சங்களுடன் அதிக கேள்விகளுடன் வாழும் மனிதர்களைத்தான் அவர் கதைகள் நெடுகிலும் சந்திக்க முடிவதாய் ஜிப்ரி சொல்கிறார்.தொடர்ந்து கட்டுரைக்குள் இயங்கும் ஜிப்ரி உமா வரதராஜனின் கதை மாந்தர்கள் எவரும் நமது அன்றாட அனுபவத்தை மீறிய ஒரு புதிய அனுபவத்தை திறக்காமலே முடித்து விடுகின்றனர். என்ற சங்கதியை நிறுவுகிறார்.

வாழ்வற்ற வாழ்வைப் பாடுதல்: சேரனின் கவிதை வெளி எனும் தலைப்பில் தொடங்கும் கட்டுரை சேரன் உட்பட வடக்கில் நிலைபேறாய் பேசப்பட்ட ஒரு   தொகுதிக் கவிஞர்களின் பொதுப் பண்பையும் அது சேரனோடு இயங்கிப் போகும் வகைமையும் பேசுகிறது. ‘அரசியல் களம் எனும் புள்ளியில் இணைந்திருக்கும் இவர்கள் காமம், காதல் போன்றவற்றை தொட்டிருந்தாலும் அதற்குள்ளும் மெல்லிழையாய் பாவும் அரசியலில் இருந்து தப்ப முடியாதிருக்கின்றனர் என்கிறார் ஜிப்ரி. இவர்கள் வாழ்வு அதன் வழி அனுபவம்  ஒரு நிலத்திலிருந்து ஒரு அரசியலிலிருந்து ஒரே கனவிலிருந்து பிறந்ததால் இந்தப் பொதுமை நிகழ்ந்திருக்கலாம் என்பது கட்டுரையாசிரியரின் அனுமானம்.இதன் வழி ஒட்டி ஆசிரியர் இவர்களை தனி மனித அசைவாக கொள்வதிலிருந்து வேறுபட்டு ஈழத்து கவிதை இயக்கம் என்ற பதவாக்கம் செய்யலாமா? எனத் துணிகிறார். ஈழம்_அதன் வழிக் கனவு  புலக்காட்சி உணர்வு வெளிப்பாடு ஒன்றித்திருத்தமை இச் சொல்லாக்கத்துக்கு பெரிதும் ஒத்திசைவாக காணப்படுதலுக்கு சாதகமாக ஜிப்ரிக்கு அமைகிறது. தவிரவும் 80களில் ஈழத்தில் அறிமுகமான பலஸ்தினக் கவிதைகளின் உருப் பெயர்ப்பும் அவற்றிலிருந்து இரவலாக எடுத்துக் கொண்ட உணர்வும் மொழியும் தங்கள் சூழலோடு பொருந்திப் போனமையும் அதற்கு காரணமாகியது எனக் காண்கிறார் ஜிப்ரி. இந்த வழியில் ஈழக் கவிஞர்கள் போரின் பொதுவான துயரங்களை  சமுகத்தின் கூட்டுத் துயரமாக பாட முனைந்ததாக எழுத்தாளர் காண்கிறார்.இதைத் தாண்டி சேரனின் கவிதைகளில் சமுகக் கூட்டுப் பிரக்ஞைத் தாண்டி.தனி மனித அக உணர்வுகள் ஓரளவ பேசப்பட்டாலும் அதற்குள்ளும் ஒரு வித இழப்பும் சமுக கூட்டுப் பிரக்ஞையும்தான் உள்ளோடி இருந்தது என்கிறார். கவிஞன் என்பவன் யார்?என்று அடுக்கடுக்காய் கேள்வி கேட்கும் ஜிப்ரி தங்கள் காலத்து அரசியலை முன் வைப்பதனூடாக அவர்கள் ஏன் சுருங்கினார்கள் வாழ்க்கை உருவாக்கிய கவிஞர்களாக தங்களை தங்கள் படைப்புகளூடாக ஏன் முன் வைக்கத் தவறினர். என்று கேட்கிறார். தொடர்ந்து சேரன் பற்றி சொல்லும் ஜிப்ரி, சேரன் தன் சார்ந்து இரு பரிமாணங்களாக தெரிபவர். அவரை காலமும் வாழ்க்கையுமாக சேர்ந்து உருவாக்கியிருக்கிறது என்றும் தமிழின் மரபான கவிதைப் பாங்கும் நவினத் தன்மையும் கலந்த ஓசை நயத்துடன் கூடிய கவிதைகள் பல அவரால் எழுதப்பட்டுள்ளன. அவரது கவிதைகளின் மய்யம் போராட்ட கால மக்களின் வாழ்வாய் இருந்தாலும் அதனை தாண்டிய வேறு சில மய்யமற்ற பக்கங்களும் பேசப்படுவதாக கூறுகிறார்.

60களில் இடது சாரி சிததாந்தத்தோடும் இடது சாரி அரசியலில் ஒன்றித்ததாயும் எனது அரசியலை, இலக்கியத்தை அரசியலே வழி நடாத்துகின்றது என்றும் சொல்லிக் கொண்டு எழுத்துலகுக்குள் வந்த நீர்வை பொன்னையன் பற்றி ஜிப்ரி அடுத்தாக பேசுகிறார். தீவிர முற்போக்குச் சிந்தனையுள்ள பொன்னையன் சமுக அசமத்துவத்துக்கெதிரான  கொந்தளிப்பு மன நிலையியுடனேயே இருந்திருக்கிறார். இது அவரது கதை மாந்தர் வழி அறிக்கை _அதுவே அவரது நிலைத்த தன்மையுமாகிற்று என்று பொன்னையன் பற்றிய பதிவை உண்டாக்கியபடி ஜிப்ரி கட்டுரையை விரிக்கிறார். மனித வாழ்க்கையின் முழுச் சாரமும் முதலாளி_தொழிலாளி வர்க்க முரண்களிலேயே நகர்ந்தது. இந்த தொடர்ச்சியே நீர்வையும் வைத்திருந்தார் என்பது ஜிப்ரியின் ஆதங்கம். நீர்வையின் கதைகளில் உலாவும் எளியமாந்தர்கள் கனவுகள் சூழ் உலகில் வாழ்பவர்கள் தனால் பல இடங்களில் அவர்கள் இயல்பாக தெரியவில்லை என்று ஜிப்ரி விரல் நீட்டுகிறார்.தவிரவும் அவரை நோக்கி அவர் விரல் இன்னும் நீள்கிறது மனித வாழ்வுகள் குறித்த கூர்மையான நோக்குகள் அக விசாரணைகள் ஆழமான தத்துவார்த்த முன் வைப்புகள் என எதுவுமற்ற தட்டையான மேலோட்டமான  விவரணங்களால் ஒரு கால கட்ட மனித வாழ்க்கையை அவர் பேசுகின்றார் என்ற ஜிப்ரி, மேலும் கட்டுரையின் இடமொன்றில் முற்போக்கு எழுத்தாளர்களின் பலவீனம் குறித்த ஒரு சம்பவப் புள்ளியை வைத்து கதை நகர்த்தாமல் அகல கால் வைத்து சறுக்குதல் நிகழ்வதுதான் என்று குற்றம் சாட்டுகிறார். நீர்வையிடமிருந்து பெயர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய எந்தவொரு மகத்தான படைப்பும் வரவில்லை என கவலைப்படும் ஜிப்ரி இருந்த போதும் ஈழ முற்போக்கு படைப்பாளிகள் என்ற பட்டாளத்திலிருந்து அவரை தெளிவாக வேறுபடுத்தக் கூடியதாக  அவரது புனைவு மொழியை குறிப்பிடலாம் என்கிறார்.

இனப் பிரச்சினை.அதன் கூர்ப்பாய் முகிழ்ந்த  ஒரு போரும் அதன் வடுவும் வாழ்வியல் அலைவுகளும் அதன் எச்ச வழி அசைவுகளும் தந்த அனுபவங்களையும் பாடங்களையும் அதன் வழிப் பிறந்த கருத்தாக்கங்களையும் ஒரு சாரார்  ஒரு தலைப்பட்சமாக தங்கள் படைப்பாக்கங்களாக்கி கொண்டிருந்த வேளை ஈழப் போர் சூழல் குறித்து பொதுவாக தமிழ் சூழலில் நிலவிய மாயைகளை தகர்த்தவராக ஷோபாவை கட்டுரையாளர் காண்கிறார். ஈழத்து அரசியல் நாவல் வெளியில் எதிர்க் குரலை அழுத்தமாகவும் தொடர்ச்சியாகவும் பதிவு செய்தவர் ஷோபாதான் என்பது ஜிப்ரியின் உறுதிப்பாடு. இச்சா என்ற நாவலை மையப்புள்ளியாக்கி அசையும் ஜிப்ரியுடைய கட்டுரை அதன் உள்ளீடுகளை ஆய்கின்றது அதன்படி இலங்கை அரசின் இனவாத நடவடிக்கைகள் மற்றும் ஈழத் தமிழர்  புரட்சியின் விளைவாலும் சிதைந்த தமி்ழ் மானிடத் துயரை நாவலின் பேசு பொருளாகிறது என்றபடி தொடர்ந்து கட்டுரையை நகர்த்தும் ஜிப்ரி ‘இச்சா ஒரு வரலாற்று பண்பாட்டு ரீதியான விழிப்புணர்வை ஒரு உபரி மதிப்பாக வாசகனுக்கு கொடுக்கிறது’ என்கிறார். ஷோபாவின் நாவல்களில் இருக்கும் வரலாற்றுத் தன்மை நாகரிகமானது. அது எல்லார் உணர்வுகளையும் கருத்துரிமைகளுக்கும் வடிவம் செய்கிறது என்பது கட்டுரையாளரின் வாதம். தவிரவும் போரின் நிழலில் ஈழத் தமிழ் கிறிஸ்த்தவ வாழ்க்கையும் பதிவு செய்யும் நேர் வழிப்பட்ட ஆர்வம் அவருள் புதையுண்டிருந்ததை.ஜிப்ரிசொல்லிச் செல்கின்றார்.ஷோபாவின் கதைகளில் ஆங்காங்கே தலை நீட்டும் பலவீனங்களை சுட்டும் ஜிப்ரி அது படைப்பின் யதார்த்தத்தை குலைத்து மெய் வாழ்பனுபவத்தை சாகசப் புனைவாக மாற்றப் பார்க்கிறது என்கிறார். வாழ்க்கையை உயிரோட்டமான புனைவுச் சம்பவங்களாக்குவதில் ஷோபா கூறுவதாக கூறும் கட்டுரையாளர்  வாழ்க்கையை கலைப்படைப்பாக்கும் பிரயத்தனத்தில் ஷோபா நுட்பமாக சித்தியடைகிறார் என்கிறார்.

நோயல் நடேசனின் படைப்பு அறத்தை முன்னிறுத்துவன. அரசியல் மதம் போன்ற பேர திகாரங்களால் புறமொதுக்கப்பட்ட சமானியர்களை பேசுவன என நோயல் நடசன் பற்றி பேசத் தொடங்குகின்ற கட்டுரைஞர் நடேசன் பற்றி பின்வருமாறு தொடர்கிறார். ‘அவருடையது வெறும் பர பரப்புக்கான குரலல்ல.அது மனித வாழ்வின் அக புற பக்கங்களை இயல்பாகவும் வெளிப்படையாகவும் பேசுகின்றன என விரியும் அவர் பேச்சு நடேசனை, ஈழப் போராட்டம் குறித்து தேசிய பார்வையை முன் வைத்து அதன் உட் பரிமாணங்களை திறந்த நிலையில் விவாதக்குட்படுத்தியவர் என்கிறது. நோயலின் அந்தரங்கம் தொகுதியை உட்குடைச்சல் செய்தபடி நகரும் ஜிப்ரி அதன் பிரதான பேசு பொருள் ஈழப் போராட்டமும் அதன் மனிதர்களும்தான் என்கிறார்.ஒரு பக்கம் கோடாமல் ஈழப் போராட்டத்தையும் அதன் உள்ளடக்கங்களையும் நேர்மையாக பேசுவதுதான் அவரது எழுத்தின்அறமாக தொழிற்படுகிறது எனும் தொனி வெளிப்பட கூறும் ஜிப்ரி கதைக்குள் பேசும்  பொருள் சார்ந்து எல்லாவற்றையும் சொல்லிவிடும் பிடிவாத குணம் அவரது கதைகளை கதைத் தனமையிலிருந்து விவரணமாக மாற்றும் ஆபத்தை உண்டு பண்ணும் சாத்தியத்தை அதிகரிக்கலாம் என்று முடிக்கிறார்.

பத்தாவது கட்டுரை சயந்தனின் ஆதிரையை முன் வைத்து பேசுகிறது. ஜிப்ரியின் கூற்று ‘வட புலத்து தமிழ்ச் சனங்கள் ஈழப் போரால் சிதைவுற்றஅவலத்தை புனைவு மொழியில் கூறும் இந் நூலில் மலையக மக்களின் ஒரு குறிப்பிட்ட கால கட்ட அவலம் நாவலுள் இணைந்ததாய் ஓடுகிறது’ என்கிறது. ஜிப்ரியின் கட்டுரை வளர்ந்து செல்லும் ஓர் இடத்தில் ஆதிரை ஈழப் போராட்ட கால வரலாற்று நாவல் என்ற வகையில்பாதிக்கப்பட்ட எல்லா தரப்பாருக்கும் முகமும் குரலும் வழங்கப்பட்டது கொண்டு முன்னிலைப்படுகிறது. என்ற தகவல் வருகிறது. ஒரு மக்கள் திரளான மலையக மக்களின் அவலங்கள் மலையகத்துக்கு வெளியே உள்ள எழுத்தாளர்களால் கண்டு கொள்ளப்பட்ட பிரதான சந்தர்ப்பம் ஆதிரையில் நிகழ்ந்திருப்பதாக ஜிப்ரி மெச்சுகிறார். ஆதிரையின் பிரதான நம்பகத் தன்மையின் வெற்றி கதை மொழியில் பிராந்திய மொழித் தொன்மமும் மண் வாசனையும் செழுமையாக இருப்பதுதான் இங்கு யாழ்ப்பாணத் தமிழும் மலையகத் தமிழும் நாவலில விரிந்து செல்கின்றன.எனகிறார். இறுதிப்பகுதியில் ஜிப்ரி நாவல் சில இடங்களில் சில கதாபாத்திரங்கள் தேவையற்ற விதத்தில் குறுக்கீடு செய்யும் இடங்களில் கதையில் ஒரு செயற்கைத் தனம் தொற்றுவதை சுட்டுகிறார். இருந்தும் ஈழப் போராட்ட கால மக்களின் வாழ்வைப் பேசும் நாவல்களில் மிக சிறந்த ஒன்றாக எனக்கு இந் நாவல் தோன்றுகிறது என முடிக்கிறார்.

ஈழத்தின் புதிய தலைமுறை எழுத்தாளரான சாத்திரியின் அனுபவ அடுக்கு வழியிலான   உணர்வுகளின் கோர்வையை அவன் என்ற படர்க்கை குறியீட்டினூடாக பேசும் ஆயுத எழுத்து நாவல் பற்றி ஜிப்ரி தனது அடுத்த கட்டுரையில் பேசுகிறார். ‘போராட்டம் சார்ந்த ஒரு வித மாய வாழ்வு சார்ந்த அனுபவ வழிப் பதிவே இந் நாவலாகும் எனக் காணும் கட்டுரையாளர் இதனை அரசியல் வரலாற்றுக் கதையாகவும் ஒத்துக் கொள்கிறார்.போராட்ட இயக்கங்கள் இளமைக்குரிய கனவுகளை எவ்வாறு நசுக்கின எனபதே இக் கதையின் மையச் சரடு என்பது ஜிப்ரியின் கணிப்பு.தேச உருவாக்கத்துக்கான செயற்பாடுகள் அற ரீதியான போக்கிலிருந்து திசை மாறிப் போவதை நுண்மையான அங்கதத்துடன் இந் நாவல் பேசுவதாக காணும் கட்டுரையாளர் இன்னுமாக சாத்திரியின் இந் நாவலில் அதிக பக்கங்கள் தேச உருவாக்கம் எனும் பெருங் கனவால் உருவாக்கப்பட்ட சமான்யர்களின் உணர்வு, வலி, கனவுகளால் தகவமைக்கப்பட்டுள்ளதாக சொல்லிச்செல்கிறார். நாவலின் பரிமாணம் தாண்டி உப பரிமாணமாக புலிகள் இயக்கத்தின் மீதான நுண்மையான விமர்சன நோக்கு நாவலில் படர்ந்துள்ளதாக ஜிப்ரி காண்கிறார். ஒரு தனித வரலாற்றுக்கும் புரிதலுக்கும் ஊடாக ஒரு போராட்டத்தை நோக்கும் ஒரு நசுங்கிய வரலாற்றுப் பார்வை இந் நாவலில்தென்படுவதாக ஜிப்ரி சொல்கிறார். புனைவு தாண்டிய அபுனைவுக்கான எல்லாச் சாத்தியங்களும் இந் நூலில் விரவுவதாக ஆசிரியருக்குப் படுகிறது.

பெண்களின் அகவுணர்வும் அதன் வழி தூணடப்படும் கனவு வெளியில் வாழ்வினாலும் கட்டமைக்கப்பட்ட மானிடர்கள் உலாவும் சிறுகதைகளை உற்பத்தி செய்பவர் லறினா என லறினாவைபேசத் தொடங்கும் ஜிப்ரி. லறினா பெண் உடல் அரசியலை பேசாது மனமும் அது வினையாற்றும் அக_புற சிக்கல்களையும்  பேசுவதாக கொள்கிறார். இந் நூல் பெண் பிரச்சினையை சிறு பொறியாயும் அதை தாண்டி இலக்கியம் கலை சார்ந்த பெண்களின் கனவுகளையும் தன்னுணர்வுகளையும்  விரி பொறியாயும் ஆக்கியுள்ளது என்பது ஜிப்ரி வாதம். ‘லறினாவின் அநேக கதைகள் மனைவியின் அகவுலகத்துக்குள்ளும் கனவுலகத்துக்குள்ளும் நுழைய முடியாத கணவனின் இறுகிய மன நிலையை பேசுகின்றன’ இது லறினாவின் கதைக் பற்றிய ஜிப்ரியின் இன்னொரு கண்டு பிடிப்பு. லறினாவுடையது மிகப் பிரச்சாரத் தன்மை வாய்ந்த கதைகள்.பெண் வாழ்வு பற்றியும் அதன் உட் சிடுக்குகள் வெளிக் காயங்கள்தான் கதையின் மைச் சரடு.  நிறுவன மயப்பட்ட பேரதிகாரங்களிலிருந்து அவர் தன்னை தற்காத்துக் கொள்ள முயல்கிறார் என்பது லறினாவின் கதைகள் மீதான ஜிப்ரியின் மறைமுக கவலை.மலையக படைப்பாளியான அவரின் ஆக்க வழி அம் மண்ணின் ஈரம் தொற்றிக் கொள்ளவில்லை என்ற கவலையும் அவருள் படிகிறது.

தில்லை கவிதைகள் விடாய்த்தெழும் சொற்கள் என்பது இந் நூலில் ஜிப்ரியுடைய பதின் மூன்றாவது கட்டுரை தில்லையின்சொற்கள் மூர்க்கத்துடன் ஆவேஷமாக
ஆணுலகத்துடன் மோதுகிறது என்ற அதிர்த்தலோடு தொடங்குகிறது. நிறு பூத்த நெருப்பு போல் தில்லையின்   சொற்களில் உள்ளே ஒரு கொதிப்பை வாசகன் எப்போதும் உணர்ந்து கொண்டே இருக்கிறான். என்று தொடர்ந்த கட்டுரையாளர் தில்லையின் கவிதைகளுக்குள்ளிருக்கும் குமுறல் துயரம் எதிர்ப்பு என்பது ஒடுக்குதலுக்குள்ளானவர்களின் குரலே என்கிறார். ஜிப்ரி தில்லையின் கவிதைகளை பெரும்பாலான உள்ளீடுகளை சார்ந்து இரண்டாக்குகிறார்
1)பெண்களுக்கெதிரான ஆண் வன்மமும் எதிர்ப்பும்
2)போர்க்கால அழிவுகளும் அவலமும்
தொடர்ந்தும அவரது கவிதை வழி ஊரும் ஜிப்ரி தன்னால் வெல்ல முடியாத எதிரியின் முன்னால் அவள் பலத்தின் முன்னால் தனது இயலாமையை தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாத வெப்பிசாரத்தின் மொழியை தில்லையின் கவிதைகள் பலவற்றிலும் காண முடியும் என்கிறார். இறுதியில் தில்லையின் குரல் வழிப் பதிவு ஆணுலகத்தின் போலியான பகட்டையும் வெளிப்படையான அத்து மீறல்களையும் பெண்ணுடலின் மென்மையான பதட்டங்களையும் அச்சங்களையும் யதார்த்தமான புறக்கணிக்க முடியாத குரலில் தில்லை பதிவு செய்திருக்கிறார் என கட்டுரையை பூர்த்திக்கிறார்

இறுதிப் பதிவு உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவிகள் எனும் அரபாத்தின் சிறுகதைகள் பற்றியது இக் கதைகளின் களம் யுத்தத்துள் அகப்பட்டுக் கொண்ட இலங்கை முஸ்லிம்களின்  போர் மற்றும் சமய வாழ்வின் பல்வேறு தருணங்களை பேச விளைகிறது என்பது எழுத்தாளரின் கண்டு பிடிப்பு. கட்டுரையில் அலைவுறும் ஜிப்ரி  அறபாத்தின் கதைகளை முஸ்லிம்களின் வாழ்வை வெளிப்படையாக பாடுவதாகச் சொல்லி இவரது எழுத்துக்கும் மக்கள் வாழ்வுக்குமிடையே மறைவேதுமில்லாத அனுபவ வழி அசைவாக இருக்கிறது இதனால் ஆழமான மறுவாசிப்புக்கான உந்துதலை இழிவாக்குகிறது என்கிறார்.
அரபாத்தின் கதைகளை ஜிப்ரி மூன்றாக துண்டம் செய்கிறார்
1)யுத்தத்துக்குள் அகப்பட்டுக் கொண்ட ஓர் மக்கள் திரளின் துயரம்
2)சமூக அரசியல் போராட்டம் குறித்த மறு விசாரணை
3)உள்ளக கலாசார பன்மைத்துவத்தை எதிர்த்தல்
இந்த அடைப்புக்கள் நிர்ப்ந்தமல்ல இதனைத் தாண்டி அரபாத்தின் கதைகளை எந்த சட்டகத்திலும் அடைக்க முடியாது என்பதும் அவரது கருத்தாக தலை நீட்டுகிறது. ஒருபடைப்பாளி குறித்தவொரு பண்பாட்டு அரசியலின் பக்கம் சாய்வு கொள்ளும் போது அவன் படைப்புகளுள் நிகழும் அபத்தங்கள் வாசகனால் இலகுவில் கடக்க முடியாதவை இந்தப் பலவீனங்கள் அறபாத்தின் கதைகளுள் உண்டு என நிறுவும் கட்டுரையாளர்  புதிய உலகங்களை உருவாக்குவதில் ஆக்குனர்கள் அக்கறைப்பட வேண்டும் என்று முடிக்கிறார்.

(2)
ஜிப்ரி இத் தொகுதியில் 14 நூல்கள் வழி தன் விமர்சனப் பார்வையை விரித்திருப்தென்பது விழி விரித்துப் பார்க்கும் சாதனைதான். இதற்காக அவர் கடும்  பிரயத்தனப்பட்டிருக்க வேண்டும். சில நூறுகள் கடந்த சில ஆயிரம் பக்கங்களை வாசித்து அதனை மனதில் கோர்வை செய்து கோர்வையை இழையாக கோர்த்து ஒழுங்காக்கியிருக்க வேண்டும் இதற்கு அவர் எடுத்துக் கொண்ட காலத்தை கணிப்பிட முடியவில்லை ஏனெனில் எந்த கட்டுரையின் கீழும் காலக் குறி இல்லை.
ஜிப்ரியின் இக் கட்டுரைகளை எனது வசதிக்காக மூன்றாக்குகிறேன். ஈழத்தில் எழுதி அதிர்த்தி ஒயந்தவர்களுடைய எழுத்து அதிர்த்திப் பின் சாந்த ரூபியாக மாறிக் கொண்டிருப்பவர்களுடைய எழுத்து, புதிது காணும் வேட்கையில் உழலும் அல்லது தங்களை தகவமைக்கப் பிரயத்தனப்படுபவர்களுடைய எழுத்து. இம் மூவகை எழுத்துக்களிலும் ஜிப்ரி தனக்கான எல்லை வழி பார்வை விரிசல்களை உண்டாக்கியிருக்கிறார்.

இந் நூலின் அநேக கட்டுரைகள் சூழல் பின்புலத்தை விபரித்து  சூழல்_எழுத்தாளர் படைப்பாக்க மன இணைவு வழி அவர்களுடைய எழுத்தின் தீவிரத்தை நிர்ணயித்த வகைமையைச் சொல்கிறது. இது ஆரோக்கியமான ஒரு எழுத்து முறைமையாக எனக்கு படுகிறது. இது எழுத்தின் அறமும் அறனின்மைகளையும் அடையாளம் செய்வதோடு வரலாற்றுக் காட்சி ஓட்டத்தில் எழுத்தின் கனதியையும் கட்டொழுங்கையும் ஸ்திரம்_ஸ்த்திர ஈனங்கயைும் கண்டறிய ஏதுவாகிறது.

ஒற்றை நூல்கள் பற்றி பேசும் கட்டுரைகளில் அதன் பகுதிகளிலும் ஒற்றை படைப்பாளரகளை பற்றி பேசும் பதிவுகளில் அவர்களின் ஒரு தொகை  தலைப்புகளையும் எடுத்துக் கொண்டு அவற்றின் உட் கூறுகளை அடியாளம் வரை சென்று ‘மைக்ரோ’ பரிசோதனை செய்கின்றது.

இத்தொகுதியிலுள்ள எல்லா ஆக்கங்களிலும் மக்கள்_அரசியல்_வாழ்க்கை_வரலாறு_வழக்காறு என்னும் கண்ணிகளை பொருத்தியே ஆசிரியர் நோக்குகிறார்.நிலக் காட்சிகளையும் மக்களின் உணர்வுகளையும் அவர்களின் புற இயக்கங்களையும் நேர்மையோடு பதிவு செய்யும் தர்மமே ஆசிரியர் இத்தொகுதிவழியாக எதிர் பார்க்கும் பிரதான விடயம்.

இப பிரதி உள் தேக்கிய ஆக்கங்களில் பின்வருமாறு கவனம்கொள்கிறது
1)மொழி, வடிவம், சொல்லாட்சி, சொற்களின் வைப்பு என்பவற்றின் ஒப்புமையும் மீறலும்.
2)அக மனவோடடங்களையும் புறச் செயற்பாடுகளையும் பதிஞர்கள வைக்கும் நேர்மையும் நேர்மை இழிதலும்
3)பதிவு வழி பேணப்படும் நடுவு நிலமையும் அவற்றை வலிந்து தவறவிடலும்
4) நிலக் காட்சிகளையும்மனிதர்களையும் படைப்பாளர்கள் தங்கள் கேட்பாட்டின் வழிபொருத்தலும் அதிலிருந்து நேர்மைவழி மீறலும்
என்ற விடயங்களில் கட்டுரையாளர் அக்கறைப்படுகிறார்.

இத் தொகுதியின் இன்னொரு சிறப்பு ஜிப்ரி பயன்படுத்தும் வைப்பு மொழி. ஜிப்ரி தனது அபிப்பிராய ஒழுங்குகளை மிக கவனக் குலைப்பு செய்து விடாத மொழியைப்பயன்படுத்துகிறார். கட்டுரையில் தனது ஆதரவையும் ஆரவு மறுப்பையும் நாகரிகமான நொய்மையான நுணுக்கமான சிதைவுறுத்தாதவகையில் பேசுகிறார். கட்டுரையின் அகமும் புறமும் பாசாங்கு வராது தலையாட்டி ஒத்துக்கொள்ள வைக்கிற நியாயத்தை உண்டாக்குவதில் அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார். கட்டுயைாளர்களை அதி உத்தமர், உத்தமர், சதாரணமானவர் என்று பார்க்காது தன் நியாயங்களை அடுக்குகிறார்.

பெண் உணர்வு, அகவலி,வலி மீறல், சமத்துவமும் இருப்பும் மத கடடிறுக்கமும் வலிந்துகாணாமலாதலும் எனும் ஒவ்வாமைகளை படைப்பாளர்கள் துணிச்சலாக செய்யவேண்டும் என்பது இத் தொகுதி வழி அவர் எதிர்பார்க்கை.

இனம்; அவற்றின் பல் பரிமாணங்கள் படைப்புகளினூடு நேர்மையாக  கட்டமைப்பதில் போதாமை கொண்ட வெறிச் சோடிய மனநிலையை பார்த்து கட்டுரையாளர் ஆதங்கப்படுவது அனேக ஈழ வெளிப் போராட்ட அரசியல் புலத்தில் இயங்கும் நூல் சார்ந்த கட்டுரைகளில் நிலவுகிறது

இந்தத் தொகுதியின் இன்னொரு சிறப்பு ஒத்திசைவான இலக்கியங்களை பொருத்தி விடுவதுதான். கட்டுரையின் மீதும் அதன் உள்ளடக்கங்களின் மீதும் விமர்சகர் கவனம் கொள்ளும்போது அதற்கு சமமான எழுத்துக்களையும் இலக்கியகாரர்களையும் வெளியில் இருந்து எடுத்து வந்து பொருத்திவிடுகிறார். இது அகலிப்பான வாசிப்புனூடு நேர்ந்து விடுகிற கருமம்.

இத் தொகுப்பில் தொய்வான மொழியில் இருந்து காப்பாற்றி புதுமை செய்தபடி நகர்கிறார் ஜிப்ரி. புத்தகத்தை கீழே வைத்து விடாதபடிக்கு வரட்சியகன்ற சொல்லாடல்கள் விரவிக்கிடப்பது  இந் நூலின் விஷேச குணம்.

பொத்தம் பொதுவாய் பார்க்கும்போது ஜிஃப்ரியின் கட்டுரைகளில் கொப்புளங்களாய் ஆங்காங்கே சில பலவீனங்களும் தோற்றம் காட்டுகின்றன. அது தோற்றமா தோற்ற மயக்கமா? எனபது வாசக வழி நிர்ப்நதம்

ஜிப்ரியுடைய தேர்வு செய்த நூல்கள் மூன்று வகை மாக்சிய முற்போக்கு கோட்பாட்டு வழி இலக்கியம், ஈழப் போராட்டமும் அதன் தொடரான அனுபவமும் அசைவியக்கமும், பெண் அக புற வெளி உணர்வுகளும் செயற்பாடுகளும் என்பதுவே அவை. இம் மூன்று புள்ளிகளிலிருந்து கோலம் போடும் இலக்கியங்களே ஈழத்தில் அதிகம் புளக்கத்திலிருப்பது அதற்கு காரணமாகலாம். ஆக இந்த நிர்ப்பந்த செயலூக்கம் அவரது கட்டுரை அசைவுள் சிறு சலனத்தினை உண்டு பண்ணுகிறது. அது கட்டுரைகளை கூறியது கூறல் என்னும் கூண்டுச் சுழற்சியுள்  வைத்திருக்கப் பார்க்கின்றன

ஆரம்ப கட்டுரைகளில் இருந்த அலங்கார ஒழுங்கு பின்னால் வருகின்ற சில கட்டுரைகளில் காணாமல் போயுள்ளன. பின்னாலான கட்டுரைகள் ‘திடும்’ என தட்டையாக தொடங்கிவிடுகின்றன. அவசரமாக முடித்தால் என்ன? எனும் பரபரப்பு குணம் தொற்றியது போல் படுகிறது.

அநேக  கட்டுரைகளில் பிரதியாளர்களின் மீதான ஆதரவுக் குரலின்  வீச்சத்தை விட எதிர்கதையாடல்களின் காரம் தூக்கலாகவே தெரிகிறது. ஒருபடைப் பாளியின் ஊன்றல், நிலைத்தல் எல்லை தீர்மானிக்கப்படாததால் இது நிகழ்ந்ததா? அல்லது வலிந்தே தங்களுக்குள் வரித்துக் கொண்ட கோட்பாடுகளையும் இயங்கியல்களையும் தகர்ப்பதனால் வந்த நிலைப்பாடா? என்பது புரிபடாமல் இருக்கிறது.

சில எழுத்தாளர்களோடு ஜிஃப்ரி சமரசம் செய்து கொள்ளப் பார்க்கிறாரா?எனும் சந்தேகம் மெல்லிய கோடாய் தோன்றப் பார்க்கிறது. அந்த சந்தேகத்துக்கான சூழல் அவரது சில படைப்புகளில் நுழையப் பார்க்கிறது.

பெண்_பெண் அரசியல்_அதனை நிறுவனப் படுத்த முயல்கின்றமையின் தீர்க்கம் என்பன கட்டமைக்கப்பட்ட மரபு வழியையும் மத ஒழுங்குகளையும் தகர்த்துக் கொண்டு படைப்பு வழி பரவ வேண்டும் என்பது ஜிப்ரியின் அவா. இது பெண் உருவாக்கம்_அறிமுகமாதல்_ஊன்றல்_நிர்வாகம் பெறல் என்பவற்றில் உள்ள பெண் மனச் சிக்கல்களை உணராத ஒரு ஆணின் குரலாய் எனக்குப் படுகிறது.

ஜிப்ரியின் சில கட்டுரைகளை பார்க்கும்போது ஒரு பாற் கோடல் எனும் மாயப் புகை அவருள் எழுகின்றதா எனும் அருட்டை உண்டு பண்ணுகிறது. அது எனது பிராந்தியாக இருந்தால் நலம். அப்படி இல்லாது போனால் அவர் புத்தக முகப்பில் சொன்ன ‘கோட்பாட்டிலும் கருத்திலுமே எனக்கு அக்கறை படைப்பாளர்களில்லை’ என்ற சித்தாந்தத்தில் அது இருளாய் கவியும்.

மொத்தத்தில், தாயதி வெளியீடா வந்திருக்கும் இந் நூல் விமர்சனத்தின் மீது ஆர்வமுள்ளவருக்கு ‘நற் பண்டம்’என நான் சிபாரிசு செய்வேன்.

***

-ஏ.எம். குர்ஷித்

(2023 ஜனவரியில் வனம் குழுமம் ஒழுங்கமைத்த புத்தக வெளியீட்டு நிகழ்வில் ஆற்றிய உரையின் எழுத்து மூலமான பிரதி)

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *